5623. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜால் இடக்கண் குருடானவனும் தலைமுடி நிறைந்தவனும் ஆவான். அவனுடன் சொர்க்கமொன்றும் நரகமொன்றும் இருக்கும். அவனிடம் உள்ள நரகம் சொர்க்கமாகும். அவனிடம் உள்ள சொர்க்கம் நரகமாகும்.
இதை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5624. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜாலுடன் என்ன இருக்கும் என்பதை அவனைவிட நான் நன்கறிவேன். ஓடுகின்ற இரு நதிகள் அவனிடம் இருக்கும். அவற்றில் ஒன்று வெளிப்பார்வைக்கு வெண்மையான நீராகக் காட்சி தரும். மற்றொன்று வெளிப்பார்வைக்கு கொழுந்துவிட்டெரியும் நெருப்பாகக் காட்சி தரும்.
அந்த இடத்தை அடைபவர் நெருப்பாகக் காட்சியளிக்கும் நதிக்குச் சென்று, கண்ணை மூடிக் கொண்டு, தலையைத் தாழ்த்தி அதிலிருந்து சிறிது அருந்தட்டும். ஏனெனில், அது குளிர்ந்த நீராகும். தஜ்ஜால் ஒரு கண் தடவப்பட்டவன் ஆவான். அவ(னது கண்ணி)ன் மீது கெட்டியான தோல் ஒன்று (மூடி) இருக்கும். அவனுடைய இரு கண்களுக்கிடையில் "காஃபிர்" (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும். எழுத்தறிவுள்ள, எழுத்தறிவற்ற ஒவ்வோர் இறை நம்பிக்கையாளரும் அதை வாசிப்பார்.
இதை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5625. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜால் தொடர்பாகக் கூறுகையில், "அவனுடன் நீரும் நெருப்பும் இருக்கும். அவனிடம் உள்ள நெருப்பானது (உண்மையில்) குளிர்ந்த நீராகும். அவனிடமுள்ள நீர் (உண்மையில்) நெருப்பாகும். ஆகவே, (அவனிடமுள்ள தண்ணீரை நம்பி) அழிந்து விடாதீர்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இந்த ஹதீஸை நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளேன் என அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5626. ரிப்ஈ பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்களுடன் ஹுதைஃபா பின் அல் யமான் (ரலி) அவர்களிடம் சென்றேன். உக்பா (ரலி) அவர்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், "நீங்கள் தஜ்ஜால் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸை எனக்கு அறிவியுங்கள்" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "தஜ்ஜால் (யுக முடிவு நாளுக்குமுன்) புறப்பட்டு வருவான். அவனுடன் நீரும் நெருப்பும் இருக்கும். மக்களுக்கு நீராகக் காட்சி தருவது (உண்மையில்) கரிக்கும் நெருப்பாகும். மக்களுக்கு நெருப்பாகக் காட்சி தருவது (உண்மையில்) குளிரான சுவை நீராகும். உங்களில் யார் அந்த இடத்தை அடைகிறாரோ அவர் நெருப்பாகக் காட்சியளிப்பதில் விழட்டும்! ஏனெனில், அது நல்ல சுவை நீராகும்" என்று கூறினார்கள்.
அப்போது உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள், ஹுதைஃபா (ரலி) அவர்களின் அறிவிப்பை உண்மைப்படுத்தும் விதமாக, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நானும் (இவ்வாறே) செவியுற்றேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 52
5627. ரிப்ஈ பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹுதைஃபா (ரலி) அவர்களும் அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்களும் (ஓரிடத்தில்) சந்தித்துக்கொண்டனர். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், "நான் தஜ்ஜாலுடன் என்ன இருக்கும் என்பதை தஜ்ஜாலைவிட நன்கறிவேன். அவனுடன் நீராலான நதியொன்றும் நெருப்பாலான நதியொன்றும் இருக்கும். நெருப்பாகக் காட்சியளிப்பதே (உண்மையில்) நீராகும். நீராகக் காட்சியளிப்பதே (உண்மையில்) நெருப்பாகும். உங்களில் அந்த இடத்தை அடைபவர் நீரருந்த விரும்பினால், நெருப்பைப் போன்று காட்சியளிப்பதிலிருந்து அருந்தட்டும். ஏனெனில், அதையே அவர் நீராகக் காண்பார்" என்று சொன்னார்கள்.
(இதைக் கேட்ட) அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள், "இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதை நானும் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5628. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லட்டுமா? வேறெந்த இறைத்தூதரும் அதைப் பற்றி தம் சமுதாயத்தாருக்குச் சொன்னதில்லை. அது (என்னவெனில்), அவன் ஒற்றைக்கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் மற்றும் நரகம் போன்றதைக் கொண்டுவருவான். அவன் எதைச் சொர்க்கம் என்று கூறுகிறானோ, அதுதான் (உண்மையில்) நரகமாக இருக்கும். (இறைத்தூதர்) நூஹ் (அலை) அவர்கள் அவனைக் குறித்துத் தம் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று, நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5629. நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவன் தொடர்பாக(ப் பேசியபோது) அவர்கள் (சில சமயம் குரலைத்) தாழ்த்தவும், (சில சமயம்) உயர்த்தவும் செய்தார்கள். இறுதியில் அவன், (அருகிலுள்ள) பேரீச்ச மரத்தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினார்கள்.
பின்னர் நாங்கள் (மறுபடியும்) மாலைப் பொழுதில் நபியவர்களிடம் வந்தோம். அப்போது தஜ்ஜாலைக் குறித்த அச்சம் எங்கள் முகங்களில் இருப்பதை அவர்கள் அறிந்துகொண்டு, "உங்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் (இன்று) காலையில் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். (அப்போது) அவனைப் பற்றி(க் குரலை)த் தாழ்த்தியும் உயர்த்தியும் பேசினீர்கள். இறுதியில் அவன், (அருகிலுள்ள) பேரீச்ச மரத்தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினீர்கள் (அதுதான் எங்கள் அச்சத்திற்குக் காரணம்)" என்று கூறினோம்.
அப்போது நபியவர்கள், "நான் உங்கள் விஷயத்தில் பெரிதும் அஞ்சுவது தஜ்ஜாலைக் குறித்து அல்ல; நான் உங்களிடையே (உயிருடன்) இருக்கும்போது அவன் தோன்றினால் அவனிடமிருந்து உங்களைக் காக்க நானே வாதாடுவேன். நான் உங்களிடையே இல்லாத போது அவன் வெளிப்பட்டால், அப்போது ஒவ்வொரு (முஸ்லிமான) மனிதரும் தமக்காக வாதாடிக்கொள்ள வேண்டும்; அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் எனது சார்பில் பொறுப்பாளனாக இருப்பான்.
தஜ்ஜால் சுருள்முடி கொண்ட ஓர் இளைஞன் ஆவான்; அவனது கண் ஒரே குலையில் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருக்கும். உருவத்தில் அவன் அப்துல் உஸ்ஸா பின் கத்தன் என்பவனை ஒத்திருப்பான்.
உங்களில் யார் அவனை அடைகிறாரோ அவர் அவனுக்கெதிராக "அல்கஹ்ஃப்" அத்தியாயத்தின் (18) ஆரம்ப வசனங்களை ஓதிக்கொள்ளட்டும். அவன் சிரியாவுக்கும் இராக்குக்கும் இடையே உள்ள ஒரு பகுதியிலிருந்து புறப்பட்டு வந்து, வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் அக்கிரமங்களைக் கட்டவிழ்த்துவிடுவான்; அல்லாஹ்வின் அடியார்களே! அப்போது நீங்கள் உறுதியோடு இருங்கள்" என்றார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவன் பூமியில் எத்தனை நாட்கள் தங்கியிருப்பான்?" என்று கேட்டோம். அதற்கு, "நாற்பது நாட்கள்" என்று பதிலளித்த நபியவர்கள், "அன்றைய ஒரு நாள் ஓர் ஆண்டைப் போன்றும், மறுநாள் ஒரு மாதத்தைப் போன்றும், அதற்கு அடுத்த நாள் ஒரு வாரத்தைப் போன்றும், மற்ற நாட்கள் உங்களின் (சாதாரண) நாட்களைப் போன்றும் இருக்கும்" என்று குறிப்பிட்டார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஓர் ஆண்டிற்குச் சமமாக இருக்கும் அந்த ஒரு நாளில், வழக்கமாகத் தொழும் (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதால் போதுமா?" என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள், "இல்லை (போதாது);அந்த (நீண்ட) நாளை, அதற்கேற்ப மதிப்பிட்டு(த் தொழுது)கொள்ளுங்கள்" என்று பதிலளித்தார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! பூமியில் அவன் (சுற்றித் திரியும்) வேகம் எப்படி இருக்கும்?" என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள், "பின்னாலிருந்து காற்று விரட்டிச் செல்லும் மேகம் போன்று (அவன் வேகமாக பூமியைச் சுற்றிவருவான்)" என்றார்கள். மேலும், நபியவர்கள் கூறினார்கள்:
அவன் ஒரு சமுதாயத்தாரிடம் வந்து (தன்னை இறைவன் என்று ஏற்றுக்கொள்ளுமாறு) அவர்களுக்கு அழைப்புவிடுப்பான். அவர்களும் அவன்மீது நம்பிக்கை கொண்டு அவனது அழைப்புக்குப் பதிலளிப்பார்கள். உடனே வானத்திற்கு (மழை பொழியுமாறு) அவன் கட்டளையிட, மழை பொழியும். பூமிக்கு(த்தாவரங்களை முளைக்கச் செய்யுமாறு) கட்டளையிட, அது முளையவைக்கும். (அவற்றை மேய்ந்து) அவர்களின் கால்நடைகள் ஏற்கெனவே இருந்ததைவிட நீண்ட திமில்களைக் கொண்டவையாகவும் மடி கனத்தவையாகவும் வயிறு நிரம்பியவையாகவும் மாலையில் (வீடு) திரும்பும்.
பின்னர், அவன் மற்றொரு சமுதாயத்தாரிடம் வந்து, (தன்னை இறைவன் என்று ஏற்றுக்கொள்ளுமாறு) அவர்களுக்கும் அழைப்பு விடுப்பான். ஆனால், அவனது அழைப்பை அவர்கள் நிராகரித்து விடுவார்கள். அவர்களிடமிருந்து அவன் திரும்பிச் சென்றுவிடுவான். அதனால், அவர்கள் பஞ்சத்தாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட்டவர்களாகக் காலைப்பொழுதை அடைவார்கள். அவர்களின் கைகளில் அவர்களின் செல்வம் ஏதும் (எஞ்சி) இராது.
அவன் பாழடைந்த இடமொன்றைக் கடந்து செல்வான். அதைப் பார்த்து, "உன்னிடம் இருக்கின்ற புதையல்களை வெளிப்படுத்து" என்று கூறுவான். அப்போது (வெளிப்படும்) அந்தப் புதையல்கள், இராணித் தேனீக்களை (பின்பற்றிச் செல்லும் தேனீக்களை)ப் போன்று அவனைப் பின்தொடர்ந்து செல்லும்.
பின்னர், அவன் வாட்டசாட்டமான இளைஞர் ஒருவரை அழைத்து, அவரை வாளால் வெட்டி இரு துண்டுகளாக்கி,அம்பெய்யும் தூரத்திற்கு இடைவெளிவிட்டு (அவ்விரண்டையும்) போடுவான். பின்னர் அந்தச் சடலத்தை அழைப்பான். உடனே அந்த இளைஞர் முகம் ஒளிர சிரித்துக்கொண்டே எழுந்து வருவார்.
இதற்கிடையே, மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களை அல்லாஹ் (பூமிக்கு) அனுப்பி வைப்பான். அவர் (சிரியாவின் தலைநகர்) "திமஷ்க்" (டமாஸ்கஸ்) நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளைக் கோபுரத்திற்கு அருகில் இரு வானவர்களின் இறக்கைகள்மீது தம் கைகளை வைத்தவாறு இறங்குவார்.
அப்போது அவர் குங்குமப்பூ நிறத்தில் இரு ஆடைகளை அணிந்திருப்பார். அவர் தமது தலையைத் தாழ்த்தினால் நீர்த்துளி சொட்டும்; தலையை உயர்த்தினாலோ வெண்முத்தைப் போன்று நீர்த்துளி வழியும். அவரது மூச்சுக் காற்றைச் சுவாசிக்கும் (அதாவது அவரை நெருங்கும்) எந்தவோர் இறைமறுப்பாளனும் சாகாமல் இருக்கமாட்டான். அவர் விடும் மூச்சானது அவரது பார்வை எட்டும் தூரம்வரை செல்லும்.
பின்னர் ஈசா (அலை) அவர்கள் தஜ்ஜாலைத் தேடிச் செல்வார்கள். இறுதியில், (பாலஸ் தீனத்திலுள்ள) "லுத்து" எனும் நகரத்தின் தலைவாயிலருகே அவனைக் கண்டு, அவனைக் கொன்றொழிப்பார்கள். பின்னர் தஜ்ஜாலிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய ஒரு சமுதாயத்தார் மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களிடம் வருவார்கள். அவர்களின் முகங்களை(ப்பரிவோடு) அவர் தடவிக் கொடுத்துச் சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் படித்தரங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பார்.
இதற்கிடையே, ஈசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ், "நான் என் அடியார்கள் சிலரை வெளி வரச் செய்துள்ளேன். அவர்களுடன் போரிட யாருக்கும் ஆற்றல் கிடையாது. எனவே, (முஸ்லிமான) என் அடியார்களை (சினாயிலுள்ள) "தூர்" மலைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வையுங்கள்" என்று (வஹீ) அறிவிப்பான்.
பின்னர், அல்லாஹ் "யஃஜூஜ்" "மஃஜூஜ்" கூட்டத்தாரை அனுப்புவான். அவர்கள் ஒவ்வோர் உயரமான பகுதியிலிருந்தும் வேகமாக(க் கீழே இறங்கி) வருவார்கள். அவர்களில் முதல் அணியினர் (ஜோர்தானில் உள்ள) "தபரிய்யா" ஏரியைக் கடந்து செல்லும்போது, அதிலுள்ள மொத்த நீரையும் குடித்துவிடுவார்கள். அவர்களின் இறுதி அணியினர் அதைக் கடந்து செல்லும்போது. "முன்னொரு காலத்தில் இந்த ஏரியில் தண்ணீர் இருந்திருக்கும்" என்று பேசிக்கொள்வார்கள்.
பின்னர் இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் ("தூர்" மலையில்) முற்றுகையிடப்படுவார்கள். அப்போது (ஏற்படும் பட்டினியால்) அவர்களில் ஒருவருக்குக் காளை மாட்டின் தலை கிடைப்பது, இன்று உங்களில் ஒருவருக்கு நூறு பொற்காசுகள் கிடைப்பதைவிடச் சிறந்ததாக இருக்கும்.
பின்னர் இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (அல்லாஹ்விடம் உதவி கேட்டுப்) பணிந்து வேண்டுவார்கள். அப்போது யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் பிடரிகளில் புழுக்களை அல்லாஹ் அனுப்புவான். அதனால் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பலியாவார்கள். பின்னர் இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (மலையிலிருந்து) தரைக்கு இறங்கி வருவார்கள்.
அப்போது பூமியின் எந்தவொரு சாண் அளவு இடமும், யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் (சடலங்களிலிருந்து வெளிவரும்) கொழுப்பாலும் துர்நாற்றத்தாலும் நிரம்பியிருப்பதையே காண்பார்கள். உடனே இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் அல்லாஹ்விடம் (அவற்றை அகற்றக்கோரிப்) பணிந்து வேண்டுவார்கள். அப்போது அல்லாஹ் ஒட்டகங்களின் கழுத்துகளைப் போன்று (பெரியதாக உள்ள) பறவைகளை அனுப்புவான். அவை அந்தப் பிணங்களைத் தூக்கிச் சென்று அல்லாஹ் நாடிய இடத்தில் வீசியெறியும்.
பின்னர் அல்லாஹ் மழை பொழியச் செய்வான். அந்த மழை எந்த மண் வீட்டிலும், எந்த முடிவீட்டிலும் படாமல் இருக்காது. இறுதியில், பூமியைக் கழுவி, கண்ணாடி போன்று (சுத்தமாக) ஆக்கிவிடும். பின்னர் பூமிக்கு, "நீ உன் கனி வர்க்கங்களை முளைக்கச் செய்வாயாக; உன்னிடமுள்ள வளங்களை மறுபடியும் தருவாயாக" என்று உத்தரவு பிறப்பிக்கப்படும்.
அன்றைய நாளில் (எந்த அளவுக்கு வளம் கொழிக்குமெனில்), ஒரு குழுவினர் சேர்ந்து ஒரேயொரு மாதுளம் பழத்தை உண்பர். அதன் தொலி அவர்கள் அனைவருக்கும் நிழல் அளிக்கும். அவர்களுக்குப் பால் வளமும் கிட்டும். எந்த அளவுக்கென்றால், பால் தரும் ஓர் ஒட்டகம் ஒரு பெரும் கூட்டத்துக்கே போதுமானதாயிருக்கும். பால் தரும் பசுவொன்று ஒரு குலத்தாருக்கே போதுமானதாயிருக்கும். பால் தரும் ஆடொன்று உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கே போதுமானதாயிருக்கும்.
இந்நிலையில், அல்லாஹ் தூய காற்று ஒன்றை அனுப்புவான். அது அவர்களின் அக்குள்களுக்குக் கீழே நுழைந்து அவர்களைப் பிடித்துக்கொள்ளும். இறைநம்பிக்கை கொண்ட ஒவ்வொரு முஸ்லிமின் உயிரையும் அது கைப்பற்றும். அதையடுத்து மக்களில் தீயவர்கள் (மட்டுமே பூமியில்) எஞ்சியிருப்பார்கள். அவர்கள் கழுதைகளைப் போன்று (வெட்ட வெளியில் வைத்துப் பகிரங்கமாக) உடலுறவு கொள்வார்கள். அவர்கள்மீதுதான் உலக முடிவு நாள் ஏற்படும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5630. மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "முன்பொரு காலத்தில் இங்கு நீர் இருந்திருக்கிறது" என்பதற்குப் பிறகு, "பின்னர் அவர்கள் பைத்துல் மக்திஸிலுள்ள மலையான "ஜபலுல் கமர்"வரை பயணம் மேற்கொள்வார்கள். அப்போது அவர்கள், "பூமியிலுள்ளவர்கள் அனைவரையும் நாம் கொன்று விட்டோம். வாருங்கள்: வானத்திலுள்ளோரை நாம் கொல்வோம்" என்று கூறியபடி தங்களுடைய அம்புகளை வானை நோக்கி எய்வார்கள். அப்போது அல்லாஹ் அவர்களுடைய அம்புகளை இரத்தம் தோய்த்து திருப்பியனுப்புவான்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அலீ பின் ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் என் அடியார்கள் சிலரை (மலைகளிலிருந்து) இறக்கிவிட்டுள்ளேன். அவர்களுடன் போரிட யாருக்கும் ஆற்றல் கிடையாது என்று (அல்லாஹ் ஈசா (அலை) அவர்களிடம் அறிவிப்பான்" என) இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 21 தஜ்ஜாலின் தன்மையும், மதீனா நகருக்குள் நுழைய முடியாமல் அவனுக்குத் தடை விதிக்கப்படுவதும், அவன் இறைநம்பிக்கையாளர் ஒருவரைக் கொன்றுவிட்டு உயிர்ப்பிப்பதும்.
5631. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் தஜ்ஜாலைக் குறித்து நீண்ட ஹதீஸ் ஒன்றை அறிவித்தார்கள். (அவனைப் பற்றி) எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தவற்றில் பின்வரும் தகவலும் அடங்கும்:
மதீனாவின் பாதைகளில் நுழைவது தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் தஜ்ஜால் வருவான். மதீனாவையடுத்து (சிரியா நாட்டுத்திசையில்) உள்ள உவர் நிலம் ஒன்றில் அவன் தங்குவான். அந்நாளில் "மக்களிலேயே சிறந்தவரான ஒரு மனிதர்" அல்லது "மக்களிலேயே சிறந்தவர்களில் ஒரு மனிதர்" அவனை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, "எவனது செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு முன்னறிவிப்புச் செய்தார்களோ அந்த தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதி கூறுகிறேன்" என்று கூறுவார்.
அப்போது தஜ்ஜால், "நான் இவனைக் கொன்றுவிட்டுப் பிறகு உயிராக்கிவிட்டால் அப்போதுமா (நான் இறைவன் எனும்) என் விஷயத்தில் சந்தேகம் கொள்வீர்கள்?" என்று (மக்களிடம்) கேட்பான். மக்கள், "இல்லை" என்று பதிலளிப்பார்கள். உடனே அவன் அம்மனிதரைக் கொன்றுவிட்டு உயிர்ப்பித்துக் காட்டுவான். அந்த மனிதர் உயிர் பெற்றெழுந்ததும், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று உன்னை அறிந்து கொண்டதைவிட வேறெப்போதும் நன்றாக அறிந்துகொண்டதில்லை" என்று சொல்வார். உடனே தஜ்ஜால் அந்த மனிதரைக் கொன்றுவிட விரும்புவான். ஆனால்,அவருக்கெதிராக அவனுக்கு அதிகாரம் வழங்கப்படாது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அபூஇஸ்ஹாக் இப்ராஹீம் பின் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அந்த மனிதர் "களிர்" (அலை) அவர்கள்தான் என்று சொல்லப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5632. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜால் புறப்பட்டு வரும்போது இறைநம்பிக்கையாளர்களில் ஒருவர் அவனை நோக்கிச் செல்வார். அப்போது அவரை ஆயுதமேந்திய தஜ்ஜாலின் பாதுகாப்புப் படையினர் எதிர்கொண்டு, "எங்கே செல்கிறாய்?" என்று கேட்பார்கள். அந்த மனிதர், "(இப்போது) புறப்பட்டிருக்கும் இந்த மனிதனை நோக்கிச் செல்கிறேன்" என்று பதிலளிப்பார். அதற்கு அவர்கள், "நம் இறைவனை (தஜ்ஜாலை) நீ நம்பவில்லையா?" என்று கேட்பார்கள். அந்த மனிதர், "நம் இறைவன் யார் என்பது தெரியாதது அல்ல" என்று கூறுவார். அதற்கு அவர்கள், "இவனைக் கொல்லுங்கள்" என்று கூறுவார்கள்.
அப்போது அவர்களில் சிலர் சிலரிடம், "உங்கள் இறைவன் (தஜ்ஜால்), யாரையும் தானின்றி கொல்லக்கூடாதென உங்களுக்குத் தடை விதிக்கவில்லையா?" என்று கூறுவார்கள். ஆகவே, அவர்கள் அந்த மனிதரை தஜ்ஜாலிடம் கொண்டுசெல்வார்கள். அந்த இறை நம்பிக்கையாளர் தஜ்ஜாலைக் காணும் போது, "மக்களே! இவன்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட தஜ்ஜால் ஆவான்" என்று சொல்வார்.
உடனே தஜ்ஜாலின் உத்தரவின்பேரில், அவர் பிடித்துக் கொண்டுவரப்பட்டு (தூண்களுக்கிடையே) நிறுத்தப்படுவார். "இவனைப் பிடித்து இவனது தலையைப் பிளந்துவிடுங்கள்" என்று அவன் கட்டளையிடுவான். அப்போது அவர்,முதுகும் வயிறும் வீங்கும் அளவுக்கு அடிக்கப்படுவார்.
பிறகு தஜ்ஜால், "என்மீது நீ நம்பிக்கை கொள்ளவில்லையா?" என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், "நீ பெரும் பொய்யன் "மசீஹ்" ஆவாய்" என்று கூறுவார். பிறகு அவரது உச்சந்தலையில் ரம்பத்தை வைத்து அறுத்து அவருடைய இரு கால்கள்வரை தனித்தனியே பிளக்கும்படி கட்டளையிடப்படும். அவ்வாறே செய்து (அவரது உடலை இரு துண்டுகளாக்கியதும்) அவ்விரு துண்டுகளுக்கிடையில் தஜ்ஜால் நடந்து வருவான்.
பிறகு அந்த உடலைப் பார்த்து, "எழு" என்பான். உடனே அந்த மனிதர் (உயிர்பெற்று) நேராக எழுந்து நிற்பார். பிறகு அவரிடம், "என்மீது நம்பிக்கை கொள்கிறாயா?" என்று தஜ்ஜால் கேட்பான். அதற்கு அந்த மனிதர், "உன்னைப் பற்றி இன்னும் கூடுதலாகவே நான் அறிந்து கொண்டேன்" என்று சொல்வார். பிறகு அந்த மனிதர், "மக்களே! (இவன் இவ்வாறெல்லாம் செய்வதால் இவனை இறைவன் என நம்பிவிடாதீர்கள்.) இவன் எனக்குப் பிறகு மக்களில் வேறெவரையும் எதுவும் செய்யமுடியாது" என்று கூறுவார்.
உடனே தஜ்ஜால் அவரை அறுப்பதற்காகப் பிடிப்பான். ஆனால், அப்போது அவரது பிடரியிலிருந்து காறை எலும்புவரையுள்ள பகுதி செம்பாக மாறிவிடும். ஆகவே, அவனால் அவரை ஒன்றும் செய்யமுடியாது. பிறகு தஜ்ஜால் அந்த மனிதரின் கைகளையும் கால்களையும் பிடித்துத் தூக்கியெறிவான். அந்த மனிதரை தஜ்ஜால் நெருப்பில் தூக்கியெறிந்துவிட்டான் என மக்கள் எண்ணிக் கொள்வார்கள். ஆனால், அவர் சொர்க்கத்தில்தான் வீசப்பட்டிருப்பார்.
"இந்த மனிதர்தான் அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்விடம் மக்களிலேயே மகத்தான உயிர்த்தியாகம் செய்தவர் ஆவார்" என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
பாடம்: 22 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்கு தஜ்ஜால் மிகவும் சாதாரணமானவனே!
5633. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைப் பற்றி நான் கேட்(டுத் தெரிந்துகொண்)டதைவிட அதிகமாக வேறெவரும் கேட்(டுத் தெரிந்து கொண்)டதில்லை. நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அவனைக் குறித்து உமக்கென்ன சிரமம்? அவனால் உமக்கெந்தத் தீங்கும் இல்லை" என்றார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! (அவனைக் குறித்து அச்சம்தான். ஏனெனில்,) தஜ்ஜாலுடன் (மலையளவு) உணவும் நதிகளும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்" என்றேன். "(இது என்ன பிரமாதம்? அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்டவிருக்கிறானோ) அவற்றைவிட இவை அல்லாஹ்வுக்கு மிகவும் சாதாரணமானவையே!" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52
5634. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதைவிட அதிகமாக வேறெவரும் வினவியதில்லை. நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), "உமது கேள்வி என்ன?" என்று கேட்டார்கள். நான், "தஜ்ஜாலுடன் மலையளவு ரொட்டியும் இறைச்சியும் நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்" என்றேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(இது என்ன பிரமாதம்? அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்டவிருக்கிறானோ) அவற்றைவிட இவை அல்லாஹ்வுக்கு மிகவும் சாதாரணமானவையே" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யஸீத் பின் ஹாரூன் (ரஹ்), அவர்களது அறிவிப்பில், என்னிடம் நபி (ஸல்) அவர்கள் "அன்பு மகனே!" என்று கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 23 தஜ்ஜால் வெளிப்படுவதும், அவன் பூமியில் தங்கியிருப்பதும், ஈசா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கிவந்து அவனைக் கொன்றொழிப்பதும், நன்மையும் இறைநம்பிக்கையும் உள்ளவர்கள் (மரித்துப்)போவதும், மக்களிலேயே தீயவர்கள் எஞ்சியிருந்து சிலைகளை வழிபடுவதும், எக்காளம் (ஸூர்) ஊதப்பட்டு மண்ணறைகளில் உள்ளோர் எழுப்பப்படுவதும்.
5635. யஅகூப் பின் ஆஸிம் பின் உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் வந்து, "யுக முடிவு நாளில் இன்னின்னது நிகழும் எனத் தாங்கள் கூறிவரும் ஹதீஸ் என்ன?" என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் "சுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ் தூயவன்), அல்லது "லாயிலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை), அல்லது இவற்றைப் போன்ற ஒரு (துதிச்) சொல்லைக் கூறிவிட்டு, "நான் யாருக்கும் எந்த ஹதீஸையும் ஒருபோதும் அறிவிக்கக்கூடாது என எண்ணியிருந்தேன். நீங்கள் வெகுவிரைவில் ஒரு மகத்தான நிகழ்ச்சியைக் காண்பீர்கள். இறையில்லம் கஅபா எரிக்கப்படும். மேலும் இவ்வாறு, இவ்வாறு நடக்கும் என்றே நான் சொன்னேன் எனக் கூறிவிட்டு, பின்வருமாறு கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜால் என் சமுதாயத்தாரிடையே புறப்பட்டுவந்து, நாற்பதுவரை தங்கியிருப்பான். (நாற்பது நாட்களா, அல்லது நாற்பது மாதங்களா, அல்லது நாற்பது ஆண்டுகளா என்பது எனக்குத் தெரியவில்லை.) அப்போது அல்லாஹ், மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்களை அனுப்புவான். அவர்கள் (சாயலில்) உர்வா பின் மஸ்ஊத் அவர்களைப் போன்றிருப்பார்கள். அவர்கள் தஜ்ஜாலைத் தேடி வந்து அழிப்பார்கள். பிறகு மக்கள் ஏழாண்டுகள் தங்கியிருப்பார்கள். அன்று எந்த இருவருக்குமிடையேயும் பகையுணர்வு இருக்காது.
பிறகு அல்லாஹ் ஷாம் (சிரியா) நாட்டின் திசையிலிருந்து குளிர்ந்த காற்று ஒன்றை அனுப்புவான். அப்போது பூமியின் மீது தமது உள்ளத்தில் கடுகு மணியளவு நன்மை, அல்லது இறைநம்பிக்கை (ஈமான்) உள்ள எவரது உயிரையும் அது கைப்பற்றாமல் விட்டுவைக்காது. எந்த அளவுக்கென்றால், உங்களில் ஒருவர் மலைக்கு நடுவே நுழைந்து விட்டாலும் அங்கும் அது நுழைந்து அவரது உயிரைக் கைப்பற்றும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு (தீமைகளை நோக்கி) விரைந்து செல்வதில் பறவைகளையும், குணத்தில் மிருகங்களையும் ஒத்த தீய மனிதர்களே எஞ்சியிருப்பார்கள். அவர்கள் எந்த நன்மையையும் அறியவுமாட்டார்கள். எந்தத் தீமையையும் மறுக்கவுமாட்டார்கள். அப்போது அவர்களிடையே ஷைத்தான் காட்சியளித்து, "நீங்கள் (எனக்குப்) பதிலளிக்க மாட்டீர்களா?" என்று கேட்பான். அந்த மக்கள், "நீ என்ன உத்தரவிடுகிறாய்?" என்று கேட்பார்கள். அப்போது ஷைத்தான், சிலைகளை வழிபடுமாறு உத்தரவிடுவான்.
இவ்வாறு அவர்கள் (சிலைவழிபாடு செய்துகொண்டு) இருக்கும்போது அவர்களின் வாழ்வாதாரம் தாராளமானதாய் இருக்கும். அவர்களின் வாழ்க்கை செழிப்பானதாக இருக்கும். பிறகு எக்காளம் (ஸூர்) ஊதப்படும். அதைக் கேட்கும் ஒவ்வொருவரின் கழுத்தும் ஒரு பக்கம் சாயும்; மறுபக்கம் உயரும். (அதாவது சுயநினைவிழந்து மூர்ச்சையாகிவிடுவார்கள்.) தமது ஒட்டகத்தின் தண்ணீர் தொட்டியைச் செப்பனிட்டுக்கொண்டிருக்கும் மனிதர் ஒருவரே அந்தச் சப்தத்தை முதலில் கேட்பார். உடனே அவர் மூர்ச்சையாகி (விழுந்து)விடுவார். (இதையடுத்து) மக்கள் அனைவரும் மூர்ச்சையாகிவிடுவர்.
பிறகு அல்லாஹ் மழையொன்றை அனுப்புவான்; அல்லது இறக்குவான். அது "பனித்துளி" அல்லது "நிழலைப்" போன்றிருக்கும். (அறிவிப்பாளர் நுஅமான் அவர்களே ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்.)
உடனே அதன் மூலம் மனிதர்களின் உடல்கள் மீண்டும் முளைக்கும். பிறகு மறுபடியும் ஒரு முறை எக்காளம் (ஸூர்) ஊதப்படும். அப்போது அவர்கள் அனைவரும் எழுந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். பிறகு (மனிதர்களிடம்) "மக்களே! உங்கள் இறைவனிடம் வாருங்கள்" என்றும், (வானவர்களிடம்) "அவர்களைப் பிடித்து நிறுத்துங்கள்;அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்" என்றும் கூறப்படும்.
பிறகு "நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களைவிட்டுத்) தனியாகப் பிரித்திடுங்கள்" என்று கூறப்படும். அப்போது "எத்தனை பேரிலிருந்து (எத்தனை பேரை)?" என்று கேட்கப்படும். அதற்கு "(நரகத்திற்குச் செல்லவிருக்கும்) ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை" என்று பதிலளிக்கப்படும். (பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) பாலகன்கூட நரைத்து (மூப்படைந்து)விடுகின்ற நாள் அதுதான்; கணைக்கால் திறக்கப்படும் நாளும் அது தான்.
அத்தியாயம் : 52
5636. மேற்கண்ட ஹதீஸ் யஅகூப் பின் ஆஸிம் பின் உர்வா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம், "யுக முடிவு நாளின்போது இன்னின்னது நடக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "உங்களுக்கு எதையும் அறிவிக்கக்கூடாது என்றே நான் எண்ணியிருந்தேன். இதை மட்டும் கூறுகிறேன்: நீங்கள் சிறிது காலத்திற்குப்பின் மாபெரும் நிகழ்வொன்றைக் காண்பீர்கள். அதில் இறையில்லம் கஅபா தீக்கிரையாகும்" என்றோ,அல்லது இது போன்றோ கூறினார்கள்" என ஷுஅபா (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.
மேலும் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "என் சமுதாயத்தாரிடையே தஜ்ஜால் புறப்பட்டுவருவான்..." என்று கூறி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பில், "(ஷாம் திசையிலிருந்து வீசும் அந்தக் குளிர்ந்த காற்று) தம், உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ள எந்த மனித(ரின் உயி)ரையும் கைப்பற்றாமல் விடாது" என்று இடம்பெற்றுள்ளது. (அதில் தமது உள்ளத்தில் கடுகளவு "நன்மை" அல்லது "இறைநம்பிக்கை" என்ற ஐயப்பாடு இடம்பெறவில்லை.)
அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை எனக்கு ஷுஅபா (ரஹ்) அவர்கள் பலமுறை அறிவித்தார்கள். நானும் இதை அவர்களிடம் (பலமுறை) சொல்லிக் காட்டியுள்ளேன்.
அத்தியாயம் : 52
5637. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை மனனமிட்டேன். இதுவரை அதை நான் மறக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டேன்:
(மறுமை நாளின் அடையாளங்களில்) முதலாவதாக வெளிப்படும் அடையாளம், சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதும், (பூமியிலிருந்து) ஒரு (அதிசயப்) பிராணி முற்பகல் நேரத்தில் வெளிப்படுவதும் ஆகும். இவ்விரண்டில் எது முதலில் வெளிப்பட்டாலும் மற்றொன்றும் அதைத் தொடர்ந்து வெகுவிரைவில் வெளிப்பட்டுவிடும்.
- அபூஸுர்ஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மதீனாவில் மர்வான் பின் அல்ஹகமுடன் முஸ்லிம்களில் மூன்றுபேர் அமர்ந்து, (மறுமை நாளின்) அடையாளங்கள் குறித்து மர்வான் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தனர். மர்வான், "(மறுமை நாளின் அடையாளங்களில்) முதலாவது அடையாளம் தஜ்ஜால் வெளிப்படுவதாகும்" என்று கூறினார்.
அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "(தஜ்ஜாலைப் பற்றி) எதையும் மர்வான் (எனக்குக்) கூறவில்லை. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தே (அதைப் பற்றிய) ஹதீஸை மனனமிட்டேன். இதுவரை அதை நான் மறக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று கூறியபடி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே அறிவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஸுர்ஆ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "மக்கள் மர்வான் பின் அல்ஹகம் அருகில் யுக முடிவு நாளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று அறிவித்தார்கள். அதில் "முற்பகல் நேரத்தில் (அந்தப் பிராணி வெளிப்படும்)" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 52
பாடம் : 24 (தஜ்ஜாலின் உளவாளி) "ஜஸ்ஸாஸா" பற்றிய செய்தி.
5638. ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ளஹ்ஹாக் பின் கைஸ் (ரலி) அவர்களின் சகோதரியும், முந்திய முஹாஜிர்களில் ஒருவருமான ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் ஒன்றை எனக்கு அறிவியுங்கள். அது (நேரடியாக) நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து கேட்டதாக இருக்க வேண்டும். பிறர் மூலம் கேட்டதாக இருக்க வேண்டாம்" என்று கேட்டேன்.
அப்போது ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள், "நீங்கள் விரும்பினால் நிச்சயமாக அவ்வாறே செய்கிறேன்" என்றார்கள். நான் "ஆம் (அவ்வாறுதான் நான் விரும்புகிறேன்); எனக்கு ஹதீஸ் அறிவியுங்கள்" என்றேன். ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் அன்றைய குறைஷி இளைஞர்களில் சிறந்தவர்களில் ஒருவரான முஃகீராவின் புதல்வருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தேன். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த முதல் போரில் காயப்படுத்தப்பட்ட(வர் ஆவா)ர்.
(அவர் என்னை மணவிலக்குச் செய்து) நான் விதவையாயிருந்தபோது, என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒரு குழுவினர் பெண் கேட்டார்கள். அவர்களில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களும் ஒருவராவார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தம்மால் விடுதலை செய்யப்பட்ட அடிமையின் புதல்வரான உசாமா பின் ஸைத் அவர்களுக்காக என்னைப் பெண் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னை நேசிப்பவர்,உசாமாவையும் நேசிக்கட்டும்" என்று கூறிய செய்தியை நான் அறிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் பேசியபோது, "என் காரியம் உங்கள் கையில் உள்ளது. நீங்கள் நாடியவருக்கு என்னை மணமுடித்து வையுங்கள்" என்று கூறினேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ உம்மு ஷரீக்கின் இல்லத்துக்குச் சென்று தங்கி இரு" என்று சொன்னார்கள் - உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் அன்சாரிகளில் வசதி படைத்த பெண்மணியாகவும் அல்லாஹ்வின் பாதையில் பெருமளவில் செலவு செய்யக் கூடியவராகவும் இருந்தார். அவரது இல்லத்தில் விருந்தாளிகள் தங்குவார்கள்.- "அவ்வாறே செய்கிறேன்" என்று நான் கூறினேன்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(வேண்டாம்;) அப்படிச் செய்யாதே! உம்மு ஷரீக் ஏராளமான விருந்தாளிகளை உபசரிக்கும் ஒரு பெண்மணி ஆவார். உன் முகத்திரையோ உன் கணைக்காலிலிருந்து ஆடையோ விலகியிருக்க, நீ விரும்பாத சிலவற்றை மக்கள் பார்க்கும் நிலை ஏற்படுவதை நான் வெறுக்கிறேன். எனவே, நீ உன் தந்தையின் சகோதரரான (அம்ர் - உம்மு மக்தூம் தம்பதியரின் புதல்வரான) அப்துல்லாஹ் பின் அம்ர் பின் உம்மி மக்தூம் அவர்களின் இல்லத்துக்குச் சென்று தங்கியிரு" என்று கூறினார்கள்.
(அப்துல்லாஹ் பின் அம்ர் பின் உம்மி மக்தூம் குறைஷிக் குலத்திலுள்ள பனூ ஃபிஹ்ர் கிளையைச் சேர்ந்தவர் ஆவார். அந்தக் குடும்பத்தில் ஒருவராக ஃபாத்திமா பின்த் கைஸ் இருந்தார்.) அவ்வாறே நான் அவரது இல்லத்திற்குச் சென்று தங்கினேன். என் காத்திருப்புக் காலம் ("இத்தா") முடிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொது அறிவிப்பாளர்களில் ஒருவர், "கூட்டுத் தொழுகைக்கு வாருங்கள்" என்று அறிவிப்புச் செய்வதை நான் செவியுற்றேன். ஆகவே, நான் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுகையை நிறைவேற்றினேன்.
அப்போது நான் ஆண்களின் தொழுகை வரிசைக்குப் பின்னால் உள்ள பெண்களின் தொழுகை வரிசையில் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துச் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது சிரித்தபடியே அமர்ந்தார்கள். "ஒவ்வொருவரும் தாம் தொழுத இடத்தில் அப்படியே இருங்கள்" என்று கூறினார்கள். பிறகு, "நான் உங்களை ஏன் ஒன்று கூட்டினேன் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு ஆர்வமூட்டுவதற்கோ அச்சுறுத்துவதற்கோ நான் உங்களை ஒன்றுகூட்டவில்லை. மாறாக, (மற்றொரு தகவலைச் சொல்வதற்காகவே) உங்களை ஒன்றுகூட்டினேன். கிறித்தவ மதத்தைச் சேர்ந்த தமீமுத் தாரீ எனும் ஒரு மனிதர் (என்னிடம்) வந்து வாக்குறுதிப் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
அவர் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார். அது(பெருங்குழப்பவாதியான) மசீஹுத் தஜ்ஜால் குறித்து நான் உங்களிடம் தெரிவித்திருந்த செய்திக்கு ஒத்திருந்தது. அவர் என்னிடம் கூறினார்:
நான் "லக்ம்" , "ஜுதாம்" ஆகிய குலங்களைச் சேர்ந்த முப்பது பேருடன் ஒரு கப்பலில் கடல் பயணம் மேற்கொண்டேன். அப்போது கடல் அலை ஒரு மாதகாலம் எங்களைக் கடலில் அலைக் கழித்துவிட்டது. பிறகு நாங்கள் கடலில் சூரியன் அஸ்தமிக்கும் (மேற்குத்) திசையில் ஒரு தீவில் ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து அங்கிருந்த தீவுக்குள் சென்றோம்.
அங்கு (உடல் முழுவதும் அடர்ந்த) முடிகள் நிறைந்த ஒரு பிராணி எங்களைச் சந்தித்தது. அதன் முன்பகுதி எது,பின்பகுதி எது என்றே எங்களால் அறிய முடியவில்லை. (உடல் முழுவதும்) முடிகள் நிறைந்திருந்ததே அதற்குக் காரணம்.
அப்போது நாங்கள், "உனக்குக் கேடுதான். நீ யார்?" என்று கேட்டோம். அதற்கு அந்தப் பிராணி "நான்தான் ஜஸ்ஸாஸா"என்று சொன்னது. "ஜஸ்ஸாஸா என்றால் என்ன?" என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அந்தப் பிராணி, "கூட்டத்தாரே! இந்த மண்டபத்திற்கு உள்ளே இருக்கும் மனிதரை நோக்கிச் செல்லுங்கள். அவர் உங்களைப் பற்றிய செய்தி அறிய ஆவலாக உள்ளார்" என்று சொன்னது.
அந்தப் பிராணி ஒரு மனிதனைப் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்டு அது ஷைத்தானாக இருக்குமோ என்று நாங்கள் பயந்துவிட்டோம். உடனே நாங்கள் அந்த மனிதனை நோக்கி விரைந்து நடந்தோம். நாங்கள் அந்த மண்டபத்தைச் சென்றடைந்தோம். அங்கு மாபெரும் உருவமுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை. அவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தான். அவனுடைய கைகள் அவனது தோளோடு சேர்த்து வைத்து இறுகக்கட்டப்பட்டிருந்தன. அவனுடைய முழங்கால்கள் கணுக்கால்களோடு சேர்த்துச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன. அவனிடம் நாங்கள், "உனக்குக் கேடுதான். நீ யார்?" என்று கேட்டோம்.
"என்னைப் பற்றிய தகவலை நிச்சயம் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். (முதலில்) நீங்கள் யார் என்று கூறுங்கள்?" என்று கேட்டான். "நாங்கள் அரபு மக்கள். நாங்கள் கப்பலொன்றில் கடல் பயணம் மேற்கொண்டோம். கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ஒரு மாதகாலமாகக் கடல் அலை எங்களை அலைக்கழித்துவிட்டது. பிறகு நீயிருக்கும் இந்தத் தீவில் நாங்கள் கரை ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து இந்தத் தீவுக்குள் நுழைந்தோம்.
அப்போது உடல் முழுவதும் அடர்ந்த முடிகள் கொண்ட பிராணி ஒன்று எங்களைச் சந்தித்தது. உடல் முழுவதும் முடிகள் நிறைந்திருந்த காரணத்தால் அதன் முன்பகுதி எது, பின்பகுதி எது என்று அறிய முடியவில்லை. நாங்கள் "உனக்குக் கேடுதான். நீ யார்?" என்று கேட்டோம். அது "நான்தான் ஜஸ்ஸாஸா" என்று சொன்னது. "ஜஸ்ஸாஸா என்றால் என்ன?" என்று கேட்டோம். அதற்கு அது, "இந்த மண்டபத்திலுள்ள இந்த மனிதரை நோக்கிச் செல்லுங்கள். அவர் உங்களைப் பற்றிய செய்தியை அறிய பெரும் ஆவலுடன் இருக்கிறார்" என்று கூறியது. ஆகவேதான், நாங்கள் உன்னை நோக்கி விரைந்து வந்தோம். அது ஷைத்தானாக இருக்கலாம் என்பதால் எங்களால் அச்சம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை" என்று சொன்னோம்.
அப்போது அவன், "பைசான் பேரீச்சந்தோட்டத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்றான். "அந்தத் தோட்டத்தில் நீ எதைப் பற்றிக் கேட்கிறாய்?" என்று கேட்டோம்.
அதற்கு அவன், "அந்தப் பேரீச்சந்தோட்டத்தின் மரங்கள் கனிகள் தருகின்றனவா என்பதைப் பற்றியே நான் கேட்கிறேன்" என்றான். நாங்கள் "ஆம்" என்று பதிலளித்தோம். அவன், "அறிந்துகொள்ளுங்கள். அது கனியே தராத காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது" என்று கூறினான்.
பிறகு "தபரிய்யா நீர்நிலை பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான். "அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்?"என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவன், "அதில் தண்ணீர் இருக்கிறதா?" என்று கேட்டான். நாங்கள், "அதில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது" என்று பதிலளித்தோம். அவன், "அறிந்துகொள்ளுங்கள்: அதிலுள்ள நீர் வற்றும் காலம் நெருங்கிவிட்டது" என்று சொன்னான்.
பிறகு, "(ஷாம் நாட்டிலுள்ள) ஸுஃகர் நீரூற்றைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான். நாங்கள், "அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்?" என்றோம். அதற்கு அவன், "அந்த ஊற்றில் தண்ணீர் உள்ளதா? அந்த ஊற்றுத் தண்ணீரால் மக்கள் பயிர் செய்கிறார்களா?" என்று கேட்டான். நாங்கள் "ஆம், அதில் தண்ணீர் அதிகமாக உள்ளது. அங்குள்ளவர்கள் அந்தத் தண்ணீரால் விவசாயம் செய்கிறார்கள்" என்று சொன்னோம்.
பிறகு அவன், "எழுத்தறிவற்ற மக்களின் இறைத்தூதர் பற்றி எனக்குச் சொல்லுங்கள். அவர் (இப்போது) என்ன செய்கிறார்?" என்று கேட்டான். நாங்கள், "அவர் மக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்று யஸ்ரிபில் (மதீனாவில்) தங்கியிருக்கிறார்" என்று பதிலளித்தோம்.
அவன், "அவருக்கும் அரபியருக்குமிடையே போர் நடந்ததா?" என்று கேட்டான். நாங்கள், "ஆம்" என்றோம். அவன், "அவர்களை அவர் என்ன செய்தார்?" என்று கேட்டான். நாங்கள், "அவர், தம் அருகிலுள்ள அரபியரை வெற்றி கொண்டுவிட்டார். அரபியர் அவருக்குக் கட்டுப்பட்டு விட்டனர்" என்று சொன்னோம். அதற்கு அவன், "அப்படித்தான் நடந்ததா?" என்று கேட்டான். நாங்கள் "ஆம்" என்றோம்.
அவன், "அறிந்துகொள்ளுங்கள். அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதே அவர்களுக்கு நல்லதாகும். (இனி) நான் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன்: நான்தான் மசீஹ் (அத்தஜ்ஜால்) ஆவேன். நான் (இங்கிருந்து) புறப்பட அனுமதிக்கப்படும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நான் புறப்பட்டு வந்து, நாற்பது நாட்களில் பூமியில் எந்த ஓர் ஊரையும் விட்டுவைக்காமல் பூமியெங்கும் பயணம் செய்வேன்; மக்காவையும் தைபாவையும் தவிர! அவ்விரண்டிற் குள்ளேயும் நுழைவது எனக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்விரு நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நுழைய நான் நாடும்போதெல்லாம் என்னை நோக்கி வானவர் ஒருவர் வருவார். அவரது கையில் உருவியவாள் இருக்கும். (அதை வைத்து) அதற்குள் நுழைய விடாமல் அவர் என்னைத் தடுத்துவிடுவார். அதன் ஒவ்வொரு நுழைவாயிலிலும் வானவர் ஒருவர் இருந்து, அதைக் காவல் காத்துக்கொண்டிருப்பார்" என்று கூறினான்.
இதைக் கூறியபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம்மிடமிருந்த கைத்தடியால் சொற்பொழிவு மேடைமீது குத்தியவாறு இது -அதாவது மதீனா நகரம்-தான் தைபா; இதுதான் தைபா; இதுதான் தைபா" என்று கூறிவிட்டு, "இதைப்பற்றி நான் உங்களுக்கு (முன்பே) அறிவித்துள்ளேன் அல்லவா?" என்று கேட்டார்கள். மக்கள், "ஆம் (அறிவித்தீர்கள்)" என்று பதிலளித்தனர். "தமீமுத் தாரீ சொன்ன இந்தச் செய்தி, தஜ்ஜாலைப் பற்றியும் மதீனா மற்றும் மக்கா பற்றியும் நான் ஏற்கெனவே உங்களிடம் நான் கூறியிருந்ததற்கு ஒப்பவே அமைந்திருக்கிறது" என்று கூறினார்கள்.
பிறகு அறிந்துகொள்ளுங்கள்: அ(ந்தத் தீவான)து, ஷாம் நாட்டுக் கடலில், அல்லது யமன் நாட்டுக் கடலில் உள்ளது. இல்லை; அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது. அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது. அது கிழக்குப் பகுதி கடலில் உள்ளது" என்று (அறுதியிட்டுச்) சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறும்போது கிழக்குத் திசையை நோக்கி தமது கரத்தால் சைகை செய்தார்கள். ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தே மனனமிட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5639. ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றோம். அவர்கள் எங்களுக்கு "ருதப் இப்னு தாப்" எனப்படும் பேரீச்சம் பழங்களை அன்பளிப்பாக வழங்கினார்கள். தொலி இல்லாத கோதுமை மாவால் செய்யப்பட்ட ஒரு வகை பானத்தையும் அருந்தக் கொடுத்தார்கள்.
அப்போது அவர்களிடம் நான், "மூன்று "தலாக்"கும் சொல்லப்பட்டு (தலாக்கை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு)விட்ட பெண் எங்கே "இத்தா" இருப்பாள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: என் கணவர் என்னை மூன்று "தலாக்" சொல்லி (முற்றிலுமாக விடுவித்து)விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை என் குடும்பத்தாரிடம் தங்கி "இத்தா" மேற்கொள்ள அனுமதியளித்தார்கள்.
அப்போது மக்களிடையே, "கூட்டுத் தொழுகை நடைபெறப்போகிறது" என்று அறிவிப்புச் செய்யப்பட்டது. அப்போது (பள்ளி வாசலை நோக்கி) நடந்துசென்றவர்களுடன் நானும் சென்று பெண்களின் வரிசையில் முதல் வரிசையில் இருந்தேன். அது ஆண்களின் வரிசையில் இறுதி வரிசைக்கு அடுத்திருந்தது.
அப்போது நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதிருந்தபடி, "தமீமுத் தாரியின் தந்தையின் சகோதரர் குலத்தைச் சேர்ந்த சிலர் கடல் பயணம் மேற்கொண்டனர்..." என்று தொடங்கி மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி அறிவித்தார்கள்.
இந்த அறிவிப்பில், "அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த கைத்தடியைப் பூமியை நோக்கிச் சாய்த்தவாறு, "இதுதான் தைபா - அதாவது மதீனா" என்று கூறியதை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
5640. மேற்கண்ட ஹதீஸ் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "தமீமுத் தாரீ அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, தாம் கடல் பயணம் மேற்கொண்டபோது (கடல் கொந்தளித்து அவர்களது) கப்பல் திசைமாறி ஒரு தீவில் ஒதுங்கியதாகவும், அப்போது (குடி)தண்ணீரைத் தேடியபடி அவர்கள் அந்தத் தீவுக்குள் போனதாகவும், அப்போது தமது முடியை இழுத்துக்கொண்டு வந்த ஒரு மனிதனைச் சந்தித்ததாகவும் கூறினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
"அந்த மனிதன், கவனியுங்கள்: எனக்குப் புறப்படுவதற்கு அனுமதியளிக்கப்படும்போது எல்லா ஊர்களிலும் என் பாதத்தைப் பதிப்பேன்; தைபா (எனும் மதீனா) தவிர" என்று கூறினான் என்றும், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமீமுத் தாரீ தம்மிடம் கூறியதை மக்களிடையே தெரிவித்துவிட்டு, இதுதான் தைபா; அவன்தான் தஜ்ஜால்" என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
5641. மேற்கண்ட ஹதீஸ் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதமர்ந்து, மக்களே! தமீமுத் தாரீ என்னிடம், தம் சமுதாயத்தாரில் சிலர் தமக்குரிய கப்பலொன்றில் கடல் பயணம் மேற்கொண்டதாகவும், அப்போது கப்பல் உடைந்துவிட்டதாகவும், உடனே அவர்களில் சிலர் கப்பலில் இருந்த பலகைகளில் ஒன்றில் ஏறி கடலிலிருந்து ஒரு தீவுக்குச் சென்றதாகவும் தெரிவித்தார்" என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகிறது.
அத்தியாயம் : 52
5642. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
மக்காவையும் மதீனாவையும் தவிர தஜ்ஜாலின் கால்படாத எந்த ஊரும் இராது. மதீனாவின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் வானவர்கள் அணிவகுத்து நின்று மதீனாவைப் பாதுகாப்பார்கள். ஆகவே, தஜ்ஜால் (மதீனாவுக்கு வெளியிலுள்ள) உவர் நிலத்தில் இறங்கித் தங்குவான். அப்போது மதீனா மூன்று முறை குலுங்கும். உடனே மதீனாவிலிருந்து ஒவ்வொரு இறைமறுப்பாளனும் நயவஞ்சகனும் அவனை நோக்கிப் புறப்பட்டுவருவார்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஆகவே, தஜ்ஜால் "அல்ஜுருஃப்" எனும் இடத்திலுள்ள உவர் நிலத்திற்குச் சென்று, தனது கூடாரத்தை அமைப்பான். அப்போது ஒவ்வொரு நயவஞ்சகனும் நயவஞ்சகியும் அவனை நோக்கி (மதீனாவிற்குள்ளிருந்து) புறப்பட்டுவருவார்கள்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52