532. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஃபரக் கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் குளிப்பார்கள். நானும் அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், சுஃப்யான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் எடுத்து) குளிப்போம் என்றும் ஒரு ஃபரக் என்பது மூன்று ஸாஉ கொள்ளளவாகும் என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
533. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் ஆயிஷா (ரலி) அவர்களுடைய பால்குடிச் சகோதரர் ஒருவரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம்.அப்போது அவர்களுடைய சகோதரர், நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளித்த முறை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு ஸாஉ அளவுள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி குளித்துக் காட்டினார்கள். அப்போது எங்களுக்கும் அவர்களுக்குமிடையே திரை ஒன்றிருந்தது. தமது தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றினார்கள்.(அது மட்டும் எங்களுக்குத் தெரிந்தது.)
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர், காதின் சோனைவரை இருக்கும் அளவிற்குத் தம் தலை முடியிலிருந்து சிறிதளவை(க் கத்தரித்து) எடுத்துவிடுவார்கள்.
அத்தியாயம் : 3
534. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிக்கும்போது முதலில் தம் (உடலின்) வலப் பக்கத்தில் தண்ணீர் ஊற்றிக் கழுவுவார்கள். பிறகு தம்மீதுள்ள அசுசிமீது தமது வலக் கரத்தால் தண்ணீர் ஊற்றி இடக் கரத்தால் அதை(த் தேய்த்து)க் கழுவுவார்கள். இவற்றைச் செய்து முடித்துவிட்டுத்தான் தலைக்குத் தண்ணீர் உற்றுவார்கள். நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது ஒரே பாத்திரத்தில் குளிப்போம்.
இதை அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 3
535. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் நபி (ஸல்) அவர்களும் மூன்று முத்து அல்லது அதற்கு நெருக்கமான அளவு கொண்ட பாத்திரத்தில் குளிப்போம்.
இதை ஹஃப்ஸா பின்த் அப்திர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 3
536. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பெருந்துடக்கிற்காக (சேர்ந்து) ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். அப்போது எங்கள் இருவருடைய கைகளும் அந்தப் பாத்திரத்தினுள் மாறிமாறிச் செல்லும்.
இதைக் காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 3
537. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பெருந்துடக்குடையவர்களாய் இருக்கும் போது ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் அள்ளிக்) குளிப்போம். அது எனக்கும் அவர்களுக்கும் இடையே இருக்கும். அப்போது அவர்கள் என்னை முந்திக்கொண்டு தண்ணீர் அள்ளுவார்கள். அப்போது நான் எனக்கும் விட்டுவையுங்கள்; எனக்கும் விட்டு வையுங்கள் என்று கூறுவேன்.
அத்தியாயம் : 3
538. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
539. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியாரும் என் சிறிய தாயாருமான) மைமூனா (ரலி) அவர்கள் மிச்சம் வைத்த தண்ணீரில் குளிப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
540. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பெருந்துடக்கிற்காக ஒரே பாத்திரத்தில் குளிப்போம்.
இதை ஸைனப் பின்த் உம்மி சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 3
541. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஐந்து முத்து அளவுத் தண்ணீரில் குளிப்பார்கள்; ஒரு முத்து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
542. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு முத்து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்வார்கள். ஒரு ஸாஉ அளவு முதல் ஐந்து முத்து வரைத் தண்ணீரில் குளிப்பார்கள்.
அத்தியாயம் : 3
543. (நபித்தோழர் அபூஅப்திர் ரஹ்மான்) சஃபீனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஸாஉத் தண்ணீரில் பெருந்துடக்கிற்காகக் குளித்து விடுவார்கள்; ஒரு முத்துத் தண்ணீரில் உளூச் செய்துவிடுவார்கள்.
இதை அபூரைஹானா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
544. நபித்தோழர் சஃபீனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஸாஉ அளவுத் தண்ணீரில் குளிப்பார்கள்; ஒரு முத் அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அலீ பின் ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ஒரு முத்து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்துவிடுவார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
இதன் அறிவிப்பாளரான அபூரைஹானா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
சஃபீனா (ரலி) அவர்கள் (நினைவாற்றல் குறைந்த) முதுமைப் பருவத்தை அடைந்திருந்தார்கள். எனவே, அன்னாரது அறிவிப்பின் மீது எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.
அத்தியாயம் : 3
பாடம் : 11 (குளியலின்போது) தலை உள்ளிட்ட உறுப்புகள்மீது மூன்று முறை தண்ணீர் ஊற்றுவது விரும்பத் தக்கதாகும்.
545. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் (குளியல் முறை தொடர்பாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் விவாதித்துக் கொண்டனர். அப்போது மக்களில் ஒருவர், நானோ என் தலையை இப்படி இப்படிக் கழுவுகிறேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நானோ என் தலையில் மூன்று முறை இரு கைகள் நிரம்பத் தண்ணீரை ஊற்றுகிறேன் என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
546. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிப் பேசப்பட்டது. அப்போது அவர்கள், நானோ என் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுகிறேன் என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 3
547. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஸகீஃப் குலத்தாரின் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம், எங்கள் நாடு குளிர் பிரதேசமாகும்; (நாங்கள்) எப்படிக் குளிப்பது? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நானோ என் தலையின் மீது மூன்று முறை தண்ணீர் ஊற்றுகிறேன் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இஸ்மாயீல் பின் சாலிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ஸகீஃப் குலத்தாரின் தூதுக் குழுவினர், அல்லாஹ்வின் தூதரே! என்று (அழைத்து மேற்கண்டவாறு) வினவினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
548. முஹம்மத் பின் அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது இரு கைகள் நிரம்பத் தண்ணீர் அள்ளித் தமது தலையில் மூன்று முறை ஊற்றுவார்கள் என்று ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஹசன் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள், எனக்குத் தலைமுடி அதிகமாக இருக்கிறதே? (மூன்று முறை ஊற்றினால் போதாதே!) என்று கேட்டார்கள். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், என் சகோதரர் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடி உமது முடியைவிட அதிகமாகவும் சிறந்ததாகவும் இருந்தது (அவர்களே மூன்று முறைதான் தலைக்குத் தண்ணீர் ஊற்றினார்கள்) என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 12 குளிக்கும் பெண்களின் பின்னல்முடி பற்றிய சட்டம்.
549. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், அல்லாஹ்வின் தூதரே! நான் தலைமுடியை இறுக்கமாகப் பின்னிக்கொள்ளும் பெண் ஆவேன். பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது பின்னலை நான் அவிழ்த்துவிட வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை; நீ இரு கையளவுத் தண்ணீரை உன் தலைமீது மூன்று முறை ஊற்றினால் போதும். பிறகு உன் (உடல்)மீது தண்ணீர் ஊற்றிக்கொள்; துப்பரவாகி விடுவாய் என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், மாதவிடாய் மற்றும் பெருந்துடக்கிற்காக (குளிக்கும்போது) பின்னலை அவிழ்த்துவிட வேண்டுமா? என்று உம்மு சலமா (ரலி) அவர்கள் வினவியதாகவும், அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இல்லை என்று கூறியதாகவும், பிறகு மேற்கண்ட ஹதீஸின் கருத்துப்படி கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் போது அந்தப் பின்னலை நான் அவிழ்த்துக் கழுவ வேண்டுமா? என்று உம்மு சலமா (ரலி) அவர்கள் வினவியதாக இடம்பெற்றுள்ளது. மாதவிடாய் பற்றியக் குறிப்பு அதில் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 3
550. உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் பெண்கள் குளிக்கும்போது தம் பின்னலை அவிழ்த்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், இந்த இப்னு அம்ரைப் பார்த்து நான் வியப்படைகிறேன். பெண்கள் குளிக்கும்போது தம் பின்னலை அவிழ்த்துவிடுமாறு பணிக்கிறாரே! ஏன் தலையை மழித்துக்கொள்ளுமாறு பெண்களுக்கு அவர் கட்டளையிட வேண்டியதுதானே! நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். என் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுவதைவிடக் கூடுதாலாக வேறொன்றும் நான் செய்யவில்லை என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
பாடம் : 13 பெண்கள் மாதவிடாய்க் குளியலின் போது கஸ்தூரி தோய்த்த (நறுமணப்) பஞ்சைக் குருதி வந்த இடத்தில் உபயோகிப்பது விரும்பத் தக்கதாகும்.
551. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி மாதவிடாயிலிருந்து (நீங்கிக்கொள்ள) தாம் எவ்வாறு குளிக்க வேண்டும் என்று கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் குளிக்கும் முறையை விளக்கினார்கள். பிறகு கஸ்தூரி (நறுமணம்) தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து அதனால் தூய்மைப்படுத்திக்கொள் என்று சென்னார்கள்.
அந்தப் பெண்மணி, அதை வைத்து நான் எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், (வெட்கப்பட்டவாறு) அல்லாஹ் தூயவன்; அதனால் தூய்மைப்படுத்திக்கொள் என்று (மறுபடியும்) சொன்னார்கள். -அப்போது நபி (ஸல்) அவர்கள் (தமது முகத்தை) மூடிக்கொண்டார்கள் என்பதை அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் தமது முகத்தின் மீது கையை வைத்து (மூடி) சைகை செய்து காட்டினார்கள்.
தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை நான் புரிந்துகொண்டு, அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்தேன். இரத்தம் படிந்த இடத்தை அந்த (நறுமணப் பொருள் தடவப்பட்ட) பஞ்சினால் துடைப்பாயாக! என்று கூறினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இரத்தம் படிந்த இடங்களை என்று (பன்மையில்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, (மாதவிடாயிலிருந்து) துப்புரவு செய்துகொள்ளும் போது நான் எவ்வாறு குளிக்க வேண்டும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து அதன் மூலம் துப்புரவு செய்து கொள்வாயாக! என்று சொன்னார்கள். மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 3