பாடம் : 6 பெருந்துடக்கு உடையவர் (குளிக்காமலேயே) உறங்கலாம்; அவர் உண்ணவோ பருகவோ உறங்கவோ (மீண்டும்) புணரவோ விரும்பினால் தமது பிறவி உறுப்பைக் கழுவிக்கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்வது விரும்பத்தக்கதாகும்.
512. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) இருக்கும் நிலையில் உறங்க விரும்பினால் உறங்கப் போவதற்கு முன் தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
513. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு எற்பட்டு (குளியல் கடமையாகி) இருக்கும்போது உண்ணவோ உறங்கவோ விரும்பினால் (முன்னதாக) தொழுகைக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது
அத்தியாயம் : 3
514. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் பெருந்துடக்கு உடையவராய் இருக்க, (குளிக்காமலேயே) அவர் உறங்கலாமா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்,அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்ட பின் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
515. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், எங்களில் ஒருவர் பெருந்துடக்கு உடையவராய் இருக்க,அவர் (குளிக்காமல்) உறங்கலாமா? என்று விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்; அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டுப் பின்னர் உறங்கட்டும். விரும்பும்போது குளித்துக்கொள்ளட்டும் என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 3
516. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரவு நேரத்தில் தமக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டுவிடுவது பற்றிக் கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அங்கத் தூய்மை (உளூ) செய்து கொள்ளுங்கள்; பிறவி உறுப்பைக் கழுவிக் கொள்ளுங்கள். பிறகு உறங்குங்கள் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 3
517. முஆவியா பின் சாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அபீகைஸ் (ரஹ்) அவர்கள் நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வித்ர் தொழுகை பற்றிக் கேட்டேன் என்று கூறி விட்டு அது தொடர்பான ஹதீஸை அறிவித்தார்கள். (மேலும் அவர்கள் கூறினார்கள்:)
நான் (ஆயிஷா (ரலி) அவர்களிடம்), பெருந்துடக்கு விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் எப்படி நடந்துகொண்டர்கள்? உறங்குவதற்கு முன் குளிப்பார்களா? அல்லது குளித்துவிட்டு உறங்குவார்களா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், இரண்டு முறைகளையும் கையாண்டுவந்தார்கள். சில நேரங்களில் குளித்துவிட்டுப் பின்னர் உறங்கினார்கள். சில நேரங்களில் (குளிக்காமல்) அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு உறங்கினார்கள் என்று பதிலளித்தார்கள். நான், (மார்க்க) விஷயங்களில் தாராளத்தை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறினேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
518. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் இல்லாளிடம் பாலுறவு கொண்டுவிட்டுப் பின்னர் மீண்டும் (உறவுகொள்ள) விரும்பினால் அவர் (இடையில்) அங்கத் தூய்மை (உளூ) செய்து கொள்ளட்டும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், சிறு வாசக மாற்றத்துடன் அவ்விரண்டுக்குமிடையே அவர் ஒரு முறை உளூச் செய்துகொள்ளட்டும் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
519. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் (தாம்பத்தியஉறவு கொள்ளச்) சென்றுவிட்டு வந்து ஒரேயொரு தடவை குளிப்பார்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 7 பெண்ணுக்கு (மதன) நீர் வெளிப்படுவதன் மூலம், அவள்மீது குளியல் கடமையாகும்.
520. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஆண்கள் உறக்கத்தில் (கனவில்) காண்பதைப் போன்று பெண்ணும் கண்டு, ஆண்கள் தம்மிடம் காண்பதைப் போன்றே பெண்ணும் தம்மிடம் (நீரைக்) கண்டாள். (இந்நிலையில் அவள்மீது குளியல் கடமையாகுமா?) என்று கேட்டார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களும் அங்கு இருந்தார்கள். அவர்கள், உம்மு சுலைம்! (இவ்வாறு வெட்கமின்றி கேட்டதன் மூலம்) பெண்ணினத்தையே கேவலப்படுத்திவிட்டாயே! உன் வலக் கை மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், இல்லை; நீதான் (பெண்ணினத்தைக் கேவலப் படுத்திவிட்டாய்!) உனது வலக் கை மண்ணைக் கவ்வட்டும்! என்று கூறிவிட்டு, ஆம்; அவ்வாறு அவள் கண்டால் அவள் குளித்துக்கொள்ள வேண்டும் என்று (உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம்) கூறினார்கள்.
இதை இஸ்ஹாக் பின் அப்தில்லாஹ் பின் அபீதல்ஹா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அன்னாருடைய பாட்டிதான் உம்முசுலைம் (ரலி) அவர்கள்.
அத்தியாயம் : 3
521. உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஓர் ஆண்மகன் தூக்கத்தில் காண்பதைப் போன்று தனது தூக்கத்தில் காணும் பெண்ணைப் பற்றி (அவள்மீது குளியல் கடமையாகுமா? என்று) கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்வாறு ஒரு பெண் கண்டால் அவள் குளித்துக் கொள்ளவேண்டும் என்று கூறினார்கள். (இவ்வாறு நான் கேட்டுவிட்டு) அதற்காக நானே வெட்கப்பட்டேன். மேலும், இவ்வாறு (பெண்ணுக்கும் தூக்கத்தில் ஸ்தலிதம்) ஏற்படுமா? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; பிறகு எப்படி (தாயின்) சாயல் (சேயில்) ஏற்படுகிறது? ஆணின் நீர் (விந்து) வெள்ளை நிறத்தில் கெட்டியானதாய் இருக்கும்; பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறத்தில் இளகலானதாய் இருக்கும். இவ்விரு(வரின்) நீரில் எது மேலோங்கிவிடுகிறதோ அல்லது முந்திக்கொண்டுவிடுகிறதோ அந்தச் சாயலில்தான் குழந்தை பிறக்கிறது என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 3
522. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஆண் உறக்கத்தில் காண்பதைப் பெண் கண்டால் (அவள் என்ன செய்ய வேண்டும்)? என்று கேட்டார். அதற்கு அவர்கள், ஆணுக்கு ஏற்படுவதைப் போன்றே பெண்ணுக்கும் (ஸ்கலிதம்) ஏற்பட்டால் அவள் குளிக்க வேண்டும் என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 3
523. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் எற்பட்டால் அவள்மீது குளியல் கடமையாகுமா?என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; (விழித்தெழும்போது தன்மீது) அவள் (மதன) நீரைக் கண்டால் (குளியல் அவள்மீது கடமைதான்) என்று பதிலளித்தார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதரே! பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் எற்படுமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், உனது கை மண்ணைக் கவ்வட்டும்! பிறகு எப்படி அவளது சாயலில் குழந்தை பிறக்கிறது? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (இந்தக் கேள்வியைக் கேட்டதன் மூலம்) பெண்ணினத்தையே நீ கேவலப்படுத்திவிட்டாய் என்று உம்மு சலமா (ரலி) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் கூறினார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளளது.
- மேற்கண்ட ஹதீஸ் நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், ஆயிஷா (ரலி) அவர்கள், சீ! பெண்ணும் அதைக் காண்பாளா? என்று உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் கேட்டதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
524. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டுத் தம்மீது அவள் (மதன)நீரைக் கண்டால் அவள்மீது குளியல் கடமையாகுமா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.
அப்போது நான் அந்தப் பெண்ணிடம், உன் கைகள் மண்ணைக் கவ்வட்டும்; காயமடையட்டும் என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரை விட்டுவிடு! (தாயுக்கும் சேயுக்குமிடையே) இதை முன்னிட்டுத் தானே உருவ ஒற்றுமையே (சாயல்) ஏற்படுகிறது! பெண்ணுடைய நீர் (கருமுட்டை) ஆணுடைய நீரை (விந்தணுவை) விட மேலோங்கி (முந்தி) விட்டால் குழந்தை தன் தாயின் சகோதரர்களது (மாமன்) சாயலில் பிறக்கிறது. ஆணுடைய நீர் பெண்ணுடைய நீரைவிட மேலோங்கிவிட்டால் அது தன் தந்தையின் சகோதரர்களது (பெரியப்பன், சிற்றப்பன்) சாயலில் பிறக்கிறது என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
பாடம் : 8 ஆண் மற்றும் பெண்ணுடைய விந்தின் தன்மையும், இருவருடைய நீர்மத்திலிருந்தே குழந்தை படைக்கப்படுகிறது என்ற விவரமும்.
525. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது யூத அறிஞர் ஒருவர் வந்து, முஹம்மதே! அஸ்ஸலாமு அலைக்க! என்று (முகமன்) கூறினார். உடனே நான் அவரைப் பிடித்து ஒரு தள்ளு தள்ளினேன். அவர் நிலை தடுமாறி விழப்போனார். அவர், ஏன் என்னைத் தள்ளுகிறாய்? என்று கேட்டார். நான்,அல்லாஹ்வின் தூதரே! என்று நீர் சொல்லக்கூடாதா (முஹம்மத் என்று பெயர் கூறி அழைக்கிறீரே)? என்று கேட்டேன். அதற்கு அந்த யூதர், அவருடைய குடும்பத்தார் அவருக்கு இட்ட பெயரால்தான் அவரை நாம் அழைக்கின்றோம் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனது பெயர் முஹம்மத் தான். இதுவே என் குடும்பத்தார் எனக்கு இட்ட பெயர் என்று சொன்னார்கள். அந்த யூதர், உங்களிடம் நான் (சில விஷயங்கள் குறித்து) கேட்பதற்காகவே வந்தேன் என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் கூறப்போகும் எந்த விஷயமும் உமக்குப் பயனளிக்குமா? என்று கேட்டார்கள். அவர், நான் காது கொடுத்துக் கேட்பேன் என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் கீறியவாறு (ஆழ்ந்த சிந்தனையுடன்), கேளுங்கள்! என்றார்கள்.
அந்த யூதர், இந்த பூமியும் வானங்களும் இப்போதுள்ள அமைப்பல்லாத வேறோர் அமைப்பிற்கு மாற்றப்படும் (விசாரணை) நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அஸ்ஸிராத் எனும்) பாலத்திற்கு அருகே இருளில் அவர்கள் இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள். அவர்,மக்களிலேயே முதன்முதலில் (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்கள் யார்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஏழை முஹாஜிர்கள் என்று பதிலளித்தார்கள். அந்த யூதர், அவர்கள் சொர்க்கத்துக்குள் நுழையும்போது அவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதி என்ன? என்று கேட்டார். அதற்கு மீனின் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித்துண்டு என்று பதிலளித்தார்கள். அதற்கடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவு என்ன? என்று அவர் கேட்க,சொர்க்கத்தின் ஓரங்களில் மேய்ந்துகொண்டிருக்கும் காளைமாடு அவர்களுக்காக அறு(க்கப்பட்டு விருந்தளி)க்கப்படும் என்று பதிலளித்தார்கள். அதற்குப் பின் அவர்கள் எதை அருந்துவார்கள்? என்று அவர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அங்குள்ள ஸல்ஸபீல் என்றழைக்கப்படும் நீரூற்றிலிருந்து (அருந்துவார்கள்) என்று பதிலளிக்க, அவர் நீர் கூறியது உண்மையே என்று கூறினார்.
பிறகு பூமியில் வசிப்பவர்களில் ஓர் இறைத்தூதர் அல்லது ஓரிரண்டு மனிதர்கள் தவிர வேறெவரும் அறிந்திராத ஒரு (குறிப்பிட்ட) விஷயத்தைப் பற்றிக் கேட்கவே நான் உம்மிடம் வந்தேன் என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் கூறப்போகும் விஷயம் உமக்குப் பயன் தருமா? என்று கேட்டார்கள். அவர் நான் காது கொடுத்துக் கேட்பேன் என்றார். பிறகு அவர், குழந்தை(யின் பிறப்பு) குறித்துக் கேட்பதற்காக நான் உம்மிடம் வந்தேன் என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆணின் நீர் (விந்து) வெண்ணிறமுடையதும் பெண்ணின் (மதன)நீர் மஞ்சள் நிறமுடையதுமாகும். அவையிரண்டும் சேரும்போது ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (சினை முட்டையை) மிகைத்துவிட்டால், அல்லாஹ்வின் நியதிப்படி ஆண் குழந்தை பிறக்கும். (இதற்கு மாறாக) பெண்ணின் நீர் (சினை முட்டை), ஆணின் நீரை (விந்து உயிரணுவை) மிகைத்துவிட்டால் அல்லாஹ்வின் நியதிப்படி பெண் குழந்தை பிறக்கும் என்று பதிலளித்தார்கள்.
அந்த யூதர், நீர் சொன்னது உண்மைதான். நிச்சயமாக நீர் ஓர் இறைத்தூதர் (நபி)தாம் என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் எவற்றைக் குறித்து என்னிடம் கேட்டாரோ அவற்றைக் குறித்து நான் ஏதும் அறியாதவனாகத்தான் இருந்தேன். அல்லாஹ்தான் அவற்றை எனக்கு அறிவித்துத்தந்தான் என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தேன் என்று ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. மேலும், (மீனில் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித்துண்டு என்பதைக் குறிக்க ஸியாதத் எனும் சொல்லுக்கு பதிலாக) ஸாயிதத் எனும் சொல்லும், (ஆண் குழந்தை பிறக்கும்; பெண் குழந்தை பிறக்கும் என்பதைச் சுட்ட) அத்கரா மற்றும் ஆனஸா எனும் இருமை வாசகத்திற்கு பதிலாக, அத்கர மற்றும் ஆனஸ எனும் ஒருமை வாசகமும் இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 3
பாடம் : 9 பெருந்துடக்கிற்கான குளியல் முறை.
526. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது முதலில் தம் கைகளை (மணிக்கட்டுவரை) கழுவுவார்கள். பிறகு வலக் கையால் (தண்ணீர் அள்ளி) இடக் கையின் மீது ஊற்றிப் பிறவி உறுப்பைக் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள். அதன் பின்னர் தண்ணீரை அள்ளி மயிர்க்கால்களுக்கு இடையே விரல்களை நுழை(த்துத் தலையைத் தேய்)ப்பார்கள். தலைமுடி முழுவதும் நனைந்துவிட்டதாகத் தெரிந்ததும் இரு கைகளிலும் மூன்று தடவை தண்ணீர் அள்ளி தலையில் ஊற்றுவார்கள். பிறகு மேனி முழுவதிலும் தண்ணீர் ஊற்றுவார்கள். பின்னர் கால்களைக் கழுவுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், கால்களைக் கழுவியது பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 3
527. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது முதலில் இரு கைகளையும் (மணிக்கட்டு வரை) மூன்று முறை கழுவுவார்கள்.
மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பிலும் கால்களைக் கழுவியது பற்றியக் குறிப்பு இடம் பெறவில்லை.
- ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது பாத்திரத்திற்குள் கையை நுழைப்பதற்கு முன்பாக தம் கைகளை (மணிக்கட்டுவரை) கழுவுவார்கள். பிறகு தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள்.
அத்தியாயம் : 3
528. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்குக் குளிப்பதற்காக தண்ணீர் கொண்டுவந்து வைத்தேன். அவர்கள் (முதலில்) தம்மிரு கைகளையும் (மணிக்கட்டுவரை) இரண்டு அல்லது மூன்று தடவை கழுவினார்கள். பிறகு பாத்திரத்திற்குள் கையை நுழைத்து (தண்ணீரை அள்ளி) பிறவி உறுப்பின் மீது ஊற்றி, தமது இடக் கையால் கழுவினார்கள். பிறகு தமது இடக் கையை பூமியில் வைத்து நன்கு தேய்த்துக் கழுவினார்கள்.
பின்னர் தொழுகைக்கு அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு தம் கைகள் நிரம்ப மூன்று முறை தண்ணீர் அள்ளித் தமது தலையில் ஊற்றினார்கள். பின்னர் மேனி முழுவதையும் கழுவினார்கள். பிறகு அங்கிருந்து சற்று நகர்ந்து (நின்று) தம் கால்களைக் கழுவினார்கள். பின்னர் நான் அவர்களுக்காகத் துவாலையைக் கொண்டு வந்தேன்.ஆனால், அவர்கள் அதை வாங்கி(த் துடைத்து)க்கொள்ள மறுத்துவிட்டார்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஏழு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், மூன்று முறை கை நிரம்ப தலைக்குத் தண்ணீர் ஊற்றியது பற்றிய வாசகம் இடம்பெறவில்லை.
வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அங்கத் தூய்மை செய்த முறை முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. வாய் கொப்புளித்தது, மூக்கிற்கு நீர் செலுத்தியது பற்றியக் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் துவாலை (கொண்டுவந்தது) பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 3
529. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் துவாலை கொண்டு வரப்பட்டது. ஆனால், அவர்கள் அதைத் தொடவில்லை. தண்ணீரைத் தமது கரத்தால் இவ்வாறு உதறிவிடலானார்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 3
530. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிப்பார்களானால் பால் கறக்கும் குவளை போன்ற ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி, ஒரு கையால் தண்ணீர் அள்ளி முதலில் தமது தலையின் வலப் பக்கத்திலும் பிறகு இடப் பக்கத்திலும் ஊற்றுவார்கள். பின்னர் இரு கைகளால் தண்ணீரை அள்ளித் தமது தலையின் மீது ஊற்றுவார்கள்.
இதை காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 10 பெருந்துடக்கிற்காகக் குளிப்பவர் பயன்படுத்த வேண்டிய தண்ணீரின் விரும்பத் தக்க அளவு, ஒரே நேரத்தில் ஒரே பாத்திரத்திலிருந்து ஆணும் பெண்ணும் நீராடுவது, இரு பாலரில் ஒருவர் மிச்சம் வைத்த தண்ணீரில் மற்றொருவர் குளிப்பது ஆகியவை பற்றி.
531. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக ஒரு ஃபரக் கொள்ளளவு பாத்திரத்தில் குளிப்பார்கள்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 3