4939. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த) அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ஹஜ் பயணிகளின் பொருட்களைக் களவாடிய அஸ்லம், ஃகிஃபார், முஸைனா ஆகிய குலங்கள்தான் தங்களிடம் (வந்து இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பதாக) வாக்குறுதி அளித்துள்ளனர்" என்று கூறினார்கள். (ஜுஹைனா குலத்தையும் குறிப்பிட்டார்கள் என்றே நான் கருதுகிறேன் என அறிவிப்பாளர் முஹம்மத் (ரஹ்) அவர்களே ஐயத்துடன் அறிவிக்கிறார்).
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அஸ்லம், ஃகிஃபார், முஸைனா (ஜுஹைனாவையும் குறிப்பிட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்) ஆகிய குலத்தார், பனூ தமீம், பனூ ஆமிர், அசத், ஃகதஃபான் ஆகிய குலத்தாரைவிடச் சிறந்தவர்களாக இருந்தாலுமா அவர்கள் நஷ்டமடைந்து இழப்புக்குள்ளாகிவிட்டனர், சொல்லுங்கள்" என்று கேட்டார்கள்.
அதற்கு அக்ரஉ (ரலி) அவர்கள் "ஆம்" (இழப்புக்குள்ளாகிவிட்டார்கள்) என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏகயிறை)வன் மீதாணையாக! அவர்கள் இவர்களைவிட மிகவும் சிறந்தவர்களே" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஜுஹைனா குலத்தாரும்" என்று உறுதிபடவே இடம்பெற்றுள்ளது. "ஜுஹைனா குலத்தாரையும் குறிப்பிட்டார்கள் என்று நான் கருதுகிறேன்" என்று (ஐயத்துடன்) இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 44
4940. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஸ்லம், ஃகிஃபார், முஸைனா, ஜுஹைனா ஆகிய குலத்தார் பனூ தமீம், பனூ ஆமிர் மற்றும் நட்புறவுக் குலங்களான பனூ அசத், ஃகதஃபான் ஆகியவற்றைவிடச் சிறந்தவர்களாவர்.
இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4941. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஜுஹைனா, அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலங்கள், பனூ தமீம், பனூ அப்தில்லாஹ் பின் ஃகதஃபான், ஆமிர் பின் ஸஅஸஆ ஆகிய குலங்களைவிடச் சிறந்தவையாக இருந்தாலுமா, கூறுங்கள்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரத்த குரலில் கேட்டார்கள்.
அதற்கு மக்கள், "அப்போது (பனூ தமீம் உள்ளிட்ட) அவர்கள் நஷ்டமடைந்துவிட்டார்கள்; இழப்புக்குள்ளாகிவிட்டார்கள்,அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "(ஆம்;) அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களே" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூகுரைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (குலங்கள் வரிசையில் சற்று முன்பின்னாக) "ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலத்தார்..." என்று ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 44
4942. அதீ பின் ஹாத்திம் அத்தாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தையும் அவர்களுடைய தோழர்களின் முகங்களையும் (மகிழ்ச்சியால்) வெண்மையாக்கிய முதலாவது தர்மப் பொருட்கள், தய்யீ குலத்தார் அளித்ததாகும். அதை நீங்கள் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தீர்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
4943. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
துஃபைல் பின் அம்ர் அத்தவ்ஸீ (ரலி) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (எங்கள்) தவ்ஸ் குலத்தார் (இஸ்லாத்தை ஏற்க) மறுத்து நிராகரித்துவிட்டார்கள். அவர்களுக்கெதிராகப் பிரார்த்தியுங்கள்" என்று கேட்டுக்கொண்டனர்.
அப்போது "தவ்ஸ் குலத்தார் அழிந்தனர்" என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "இறைவா! தவ்ஸ் குலத்தாரை நல்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (எம்மிடம்) கொண்டுவந்து சேர்ப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 44
4944. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தார் பற்றிக் கூறிய மூன்று விஷயங்களைக் கேட்டதிலிருந்து நான் அ(க் குலத்த)வர்களை எப்போதும் நேசிக்கலானேன்.
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் (பனூ தமீம் குலத்தார்) என் சமுதாயத்தாரிலேயே மிகக் கடுமையாக தஜ்ஜாலை எதிர்ப்பார்கள்" என்று சொன்னார்கள்.
(ஒரு முறை) பனூ தமீம் குலத்தாரின் தர்மப் பொருள்கள் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவை எங்கள் இனத்தாரின் தர்மப் பொருட்கள்" என்று கூறினார்கள்.
(ஒரு முறை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் பனூ தமீம் குலத்தாரின் பெண் போர்க் கைதி ஒருவர் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நீ இப்பெண்ணை விடுதலை செய்துவிடு. ஏனெனில், இவள் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகளில் ஒருத்தி" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் பற்றிக் கூறிய மூன்று விஷயங்களைக் கேட்டதிலிருந்து நான் எப்போதும் அவர்களை நேசிக்கலானேன்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தாரின் மூன்று பண்புகளைக் கூறக் கேட்டதன் பின்னர் அவர்களை எப்போதும் நான் நேசித்துக் கொண்டிருக்கிறேன்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், அதில் "மக்களிலேயே போர்க்களங்களில் அறப்போர் புரிவதில் அவர்கள் மிகவும் கடுமையானவர்கள்" என்று (பொதுவாகவே) இடம்பெற்றுள்ளது. தஜ்ஜாலைப் பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 44
பாடம் : 48 மக்களிலேயே சிறந்தவர்கள்.
4945. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களை நீங்கள் மூலகங்களாகக் காண்பீர்கள். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர்கள்தான்; அவர்கள் மார்க்க விளக்கத்தைப் பெற்றுக்கொண்டால்! (இஸ்லாம் எனும்) இந்த விஷயத்தில் நுழைவதற்குமுன் அதைக் கடுமையாக வெறுத்தவர்களே. பின்னர் அதில் மக்களிலேயே சிறந்தவர்களாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். மனிதர்களிலேயே மிகவும் மோசமானவனாகவே இரட்டை முகத்தானைக் காண்பீர்கள். அவன் இவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும் போது இன்னொரு முகத்துடனும் செல்வான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "மக்களை நீங்கள் மூலகங்களாகக் காண்பீர்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அபூஸுர்ஆ மற்றும் அஃரஜ் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில், "இந்த தலைமைப் பதவி விஷயத்தில் தாமாக விழும்வரை அதில் கடுமையான வெறுப்புக் காட்டக்கூடியவர்களையே நீங்கள் மக்களில் சிறந்தவர்களாகக் காண்பீர்கள்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 44
பாடம் : 49 குறைஷிப் பெண்களின் சிறப்புகள்.
4946. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒட்டகத்தில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள் "குறைஷிப் பெண்கள் ஆவர்" அல்லது "நல்ல குறைஷிப் பெண்கள் ஆவர்". அவர்கள் அநாதைக் குழந்தைகள்மீது அதிகமான பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை நன்கு பேணிக்காப்பவர்கள் ஆவர்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவ்விரு அறிவிப்புகளிலும் நபி (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு கூறியதாக இடம் பெற்றுள்ளது. ஆயினும், தாவூஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் குழந்தைகள் மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்" என்று (பொதுவாகவே) இடம்பெற்றுள்ளது. "அநாதைக் குழந்தைகள்" என்ற குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 44
4947. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குறைஷிப் பெண்கள்தான் ஒட்டகத்தில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள். (தம்) குழந்தைகள்மீது அதிகப் பரிவுடையவர்கள். தம் கணவனின் செல்வத்தை நன்கு பேணிப் பாதுகாக்கக்கூடியவர்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் மேற்கண்டவாறு அறிவித்து விட்டுத் தொடர்ந்து, "இம்ரானின் புதல்வி மர்யம் (அலை) அவர்கள் ஒட்டகம் எதிலும் பயணம் செய்ததேயில்லை" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நபி (ஸல்) அவர்கள் "உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி)" அவர்களைத் தமக்காகப் பெண் கேட்டார்கள். அதற்கு உம்மு ஹானீ அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வயதாகி விட்டது; எனக்குக் குழந்தை குட்டிகளும் உள்ளனர்" என்று கூறி (மறுத்து) விட்டார்கள். அப்போது தான் நபி (ஸல்) அவர்கள், (மேற்கண்டவாறு) "ஒட்டகத்தில் பயணம் செய்த பெண்களிலேயே சிறந்தவர்கள்..." என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
ஆயினும் இவற்றில் "(தம்) குழந்தைகள் மீது அதிகப் பாசமுடையவர்கள்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4948. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒட்டகத்தில் பயணம் செய்த பெண்களிலேயே சிறந்தவர்கள் நல்ல குறைஷிப் பெண்களேயாவர். அவர்கள் (தம்) குழந்தைகள்மீது அதிகப் பாசமுடையவர்கள். தம் கணவனின் செல்வத்தை நன்கு பேணிக்காப்பவர்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அப்படியே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 50 நபி (ஸல்) அவர்கள் தம் (முஹாஜிர் - அன்சாரித்) தோழர்களிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தியது.
4949. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஹாஜிரான) அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களுக்கும் (அன்சாரியான) அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.
அத்தியாயம் : 44
4950. ஆஸிம் பின் சுலைமான் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "இஸ்லாத்தில் (மனிதர்களாக ஏற்படுத்திக் கொள்கிற ஒருவருக்கொருவர் வாரிசாகிக் கொள்ளும் ஒப்பந்த) நட்புறவு முறை இல்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனத் தங்களுக்குச் செய்தி கிடைத்ததா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டில் வைத்து குறைஷி (முஹாஜிர்)களுக்கும் (மதீனா) அன்சாரிகளுக்கும் இடையே நட்புறவு முறையை ஏற்படுத்தியிருந்தார்களே!"என்றார்கள்.
அத்தியாயம் : 44
4951. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்த எனது வீட்டில் வைத்து குறைஷி (முஹாஜிர்)களுக்கும் (மதீனா) அன்சாரிகளுக்கும் இடையே நட்புறவு முறையை ஏற்படுத்தினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4952. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாத்தில் (மனிதர்களாக ஏற்படுத்திக்கொள்கிற ஒப்பந்த) நட்புறவு முறை இல்லை. அறியாமைக் காலத்தில் நடைபெற்ற ஒப்பந்த நட்புறவுகள் இஸ்லாத்திற்குப் பிறகு இன்னும் பலத்தை அதிகரிக்கவே செய்யும். (காலாவதியாகிவிடாது.)
இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 51 நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தது அவர்களுடைய தோழர்களுக்குப் பாதுகாப்பாகவும் நபித்தோழர்கள் உயிருடன் இருந்தது (ஒட்டுமொத்த) சமுதாயத்திற்குப் பாதுகாப்பாகவும் அமைந்தது பற்றிய விளக்கம்.
4953. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதோம். பிறகு நாங்கள், "நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுகை தொழும்வரை (இங்கேயே) அமர்ந்திருந்தால் நன்றாயிருக்கும்" என்று கூறிக் கொண்டு (அங்கேயே) அமர்ந்திருந்தோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, "ஏன் இங்கேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தங்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதுவிட்டுப் பிறகு "தங்களுடன் இஷாத் தொழுகையையும் தொழும்வரை அமர்ந்திருப்போம்" என்று கூறினோம்" என்றோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் செய்தது "நன்று" அல்லது "சரி" என்று சொல்லி விட்டு, வானத்தை நோக்கித் தமது தலையை உயர்த்தினார்கள். -(பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமாக வானத்தை நோக்கித் தமது தலையை உயர்த்தக்கூடியவராக இருந்தார்கள்.-
பிறகு, "நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பு ஆவேன். நான் போய்விட்டால் என் தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். என் தோழர்கள் என் சமுதாயத்தாருக்குப் பாதுகாப்பு ஆவார்கள். என் தோழர்கள் போய்விட்டால் என் சமுதாயத்தாருக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 52 நபித்தோழர்கள், பிறகு அவர்களை அடுத்து வந்தவர்கள் (தாபிஈன்), பிறகு அவர்களை அடுத்து வந்தவர்கள் (தபஉத் தாபிஈன்) ஆகியோரின் சிறப்பு.
4954. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களில் ஒரு குழுவினர் அறப்போர் புரியச் செல்கின்ற ஒரு காலம் வரும். அப்போது அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தவர்கள் (நபித்தோழர்கள்) எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?" என்று கேட்கப்படும். அதற்கு அக்குழுவினர், "ஆம் (இருக்கிறார்கள்)" என்று பதிலளிப்பார்கள். ஆகவே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.
பிறகு (அடுத்த தலைமுறை) மக்களில் மற்றொரு குழுவினர் அறப்போர் புரியச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்களைப் பார்த்தவர்கள் (தாபிஉகள்) எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?" என்று கேட்கப்படும். அப்போது அக்குழுவினர் "ஆம் (இருக்கிறார்கள்)" என்று பதிலளிப்பார்கள். ஆகவே, அவர்களுக்கும் வெற்றியளிக்கப்படும்.
பிறகு (அதற்கடுத்த தலைமுறை) மக்களில் வேறொரு குழுவினர் அறப்போருக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தோழமை கொண்டிருந்தவர்களுடன் தோழமைகொண்டிருந்தவர்கள் (தபஉத் தாபிஈன்) எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?" என்று கேட்கப்படும். அதற்கு அக்குழுவினர் "ஆம் (இருக்கிறார்கள்)" என்று பதிலளிப்பார்கள். ஆகவே, அவர்களுக்கும் வெற்றியளிக்கப்படும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4955. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களிடம் ஒரு காலம் வரும். அப்போது அவர்களிலிருந்து ஒரு படைப்பிரிவு அனுப்பப்படும். அப்போது "நபித்தோழர்களில் எவரையேனும் உங்களில் காண்கிறீர்களா என்று பாருங்கள்" என்று கூறுவர். அப்போது ஒரு மனிதர் காணப்படுவார். ஆகவே, அவருக்காக அப்படைக்கு வெற்றியளிக்கப்படும்.
பிறகு (அடுத்த தலைமுறையில்) இரண்டாவது படைப்பிரிவு ஒன்று அனுப்பப்படும். அப்போது "நபித்தோழர்களைப் பார்த்தவர்கள் (தாபிஉ) எவரேனும் அவர்களிடையே இருக்கிறார்களா?" என்று கேட்பார்கள். (அப்போது ஒரு மனிதர் காணப்படுவார்.) ஆகவே, அவருக்காக அப்படைக்கு வெற்றியளிக்கப்படும்.
பிறகு (அதற்கடுத்த தலைமுறையில்) மூன்றாவது படைப்பிரிவு அனுப்பப்படும். அப்போது "நபித்தோழர்களைப் பார்த்தவர்களைப் பார்த்தவர்கள் (தபஉத் தாபிஉ) எவரையேனும் அவர்களிடையே நீங்கள் காண்கிறீர்களா?" என்று கேட்கப்படும்.
பிறகு (அதற்கடுத்த தலைமுறையில்) நான்காவது படைப்பிரிவு அனுப்பப்படும். அப்போது நபித்தோழர்களைப் பார்த்த ஒருவரை (தாபிஉ) பார்த்தவரை (தபஉத் தாபிஉ) பார்த்த எவரேனும் அவர்களிடையே நீங்கள் காண்கிறீர்களா,பாருங்கள்" என்று சொல்லப்படும். அத்தகைய ஒருவர் காணப்படுவார். ஆகவே, அவருக்காக அப்படைக்கு வெற்றியளிக்கப் படும்.
அத்தியாயம் : 44
4956. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் சிறந்தவர்கள் என்னை ஒட்டியுள்ள தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களது சாட்சியம் அவர்களது சத்தியத்தையும், அவர்களது சத்தியம் அவர்களது சாட்சியத்தையும் முந்திக்கொள்ளும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹன்னாத் பின் அஸ்ஸரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "தலைமுறையினர்" எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை. குதைபா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பிறகு "சமுதாயங்கள் பல வரும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4957. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "மக்களில் சிறந்தோர் யார்?" என்று கேட்கப் பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(மக்களில் சிறந்தோர்) என் தலை முறையினர், பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களது சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களது சத்தியம் அவர்களது சாட்சியத்தையும் முந்திக்கொள்ளும்" என்று விடையளித்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் சிறுவர்களாயிருந்தபோது எங்களை "அஷ்ஹது பில்லாஹ்" (அல்லாஹ்வின் பெயரால் நான் சாட்சியம் அளிக்கிறேன்) என்றோ, "அலய்ய அஹ்துல்லாஹ்" (அல்லாஹ்வுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி) என்றோ கூறுவதை அவர்கள் (நபித்தோழர்கள்) தடுத்து வந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இருவரின் அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 44
4958. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று கூறிவிட்டு, மூன்றாவது தடவையில் அல்லது நான்காவது தடவையில் "அவர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள். அவர்களது சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களது சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக்கொள்ளும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44