4959. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் சிறந்தவர்கள், நான் யாரிடையே அனுப்பப்பட்டுள்ளேனோ அந்தத் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று கூறிவிட்டு, -மூன்றாவது முறையும் அவ்வாறு கூறினார்களா, இல்லையா என்பதை அல்லாஹ்வே அறிவான்- "பிறகு அவர்களுக்குப்பின் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் உண்டு கொழுப்பதை விரும்புவார்கள். சாட்சியமளிக்கும்படி கோரப்படுவதற்கு முன்பே (தாமாக முன்வந்து) சாட்சியம் அளிப்பார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று) இரண்டு முறை கூறினார்களா அல்லது மூன்று முறை கூறினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4960. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை (உங்களை) அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தலைமுறையினருக்குப் பிறகு ("அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று) இரண்டு தடவை கூறினார்களா, அல்லது மூன்று முறை கூறினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.
பிறகு "அவர்களுக்குப்பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் சாட்சியமளிக்கும்படி கோரப்படாமலேயே (தாமாக) சாட்சியம் அளிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள்; அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படமாட்டாது. அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால், அதை நிறைவேற்றமாட்டார்கள். அவர்களிடையே உண்டு கொழுக்கும் (தொந்தி பெருக்கும்) நிலை தோன்றும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தலைமுறையினர் பற்றிக் குறிப்பிட்ட பிறகு இரண்டு தலைமுறையினரைக் கூறினார்களா, அல்லது மூன்று தலைமுறையினரைக் கூறினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை" என்று இடம்பெற்றுள்ளது.
ஷபாபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஸஹ்தம் பின் முளர்ரிப் (ரஹ்) அவர்கள் ஒரு தேவைக்காகக் குதிரையில் என்னிடம் வந்திருந்தபோது, இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாக (மேற்கண்ட ஹதீஸை) அறிவித்தார்கள்" என்று காணப்படுகிறது.
யஹ்யா பின் சயீத், ஷபாபா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் ("நிறைவேற்றமாட்டார்கள்" என்பதைக் குறிக்க "வலா யூஃபூன" என்பதற்குப் பதிலாக) "வலா யஃபூன" என்று இடம் பெற்றுள்ளது.
பஹ்ஸ் பின் அசத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "யூஃபூன" என்றே (முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலுள்ளதைப் போன்றே) காணப்படுகிறது.
அத்தியாயம் : 44
4961. மேற்கண்ட ஹதீஸ் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், "இந்தச் சமுதாயத்தில் சிறந்தவர்கள், நான் யாரிடையே அனுப்பப்பெற்றுள்ளேனோ அந்தத் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று இடம் பெற்றுள்ளது.
அபூஅவானா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூன்றாவது தடவையில் ("பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று) கூறினார்களா, இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
கத்தாதா (ரஹ்) அவர்களிடமிருந்து ஹிஷாம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், "சத்தியம் செய்யும்படி கேட்கப்படாமலேயே சத்தியப் பிரமாணம் செய்ய அவர்கள் தாமாகவே முன்வருவார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4962. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "மக்களில் சிறந்தவர் யார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(மக்களில் சிறந்தவர்கள்) நான் யாரிடையே இருக்கிறேனோ அந்தத் தலைமுறையினர். பிறகு இரண்டாவது தலைமுறையினர். பிறகு மூன்றாவது தலைமுறையினர்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 53 "இன்று பூமியில் இருப்பவர்களில் எவரும் ஒரு நூற்றாண்டுக்குப்பின் உயிருடன் இருக்கமாட்டார்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
4963. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இறுதிக் காலத்தில் ஓர் இரவில் எங்களுக்கு இஷாத் தொழுகை தொழுவித்து, சலாம் கொடுத்து முடித்தபோது எழுந்து, "இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? (இன்றிலிருந்து) நூறாம் ஆண்டின் துவக்கத்தில், இன்று பூமியில் இருக்கும் எவரும் எஞ்சியிருக்கமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ்களில் நூறாண்டைப் பற்றிய இந்த ஹதீஸைத் தவறாகப் புரிந்து(கொண்டு, நூறு ஆண்டுகளுக்குப் பின் உலகம் அழிந்து விடும்போலும் என்று புரிந்து)கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது, இன்று பூமியில் இருப்பவர்களில் எவரும் நூறு ஆண்டுகளுக்குப் பின் இருக்கமாட்டார்கள் என்ற பொருளில்தான்.
இதன் மூலம், அன்று இருந்த தலைமுறையினர் நூறு ஆண்டுகளுக்குள் முடிந்து போவர் என்பதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருதினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4964. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், "என்னிடம் மறுமை நாளைப் பற்றிக் கேட்கிறீர்களா?அதைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் அல்லாஹ்வின்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்: (இன்றிலிருந்து) ஒரு நூறாண்டுக்குள் இன்று பூமியில் இருப்பவர்களில் எவரும் இருக்கமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், "இன்று உயிருடன் இருப்பவர்களில் எவரும் ஒரு நூறாண்டுகளுக்குள் உயிருடன் இருக்கமாட்டார்கள் என்று தாம் இறப்பதற்கு ஒரு மாதத்திற்குமுன் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இடம்பெற்றுள்ளது.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களது மற்றோர் அறிவிப்பில், அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் இதற்கு "இன்று உயிருடன் இருப்பவர்களின் ஆயுள் குறைவானதாகும்" என்று விளக்கம் அளித்ததாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4965. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "தபூக்" போரிலிருந்து திரும்பியபோது அவர்களிடம் மக்கள் மறுமை நாளைப் பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(அது அல்லாஹ்வுக்கே தெரியும். ஆனால்,) இன்று உயிர் வாழ்வோரில் யாரும் ஒரு நூற்றாண்டுக்குள் இருக்கமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4966. சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் (ரலி) அவர்கள், "இன்று உயிர் வாழ்வோரில் யாரும் ஒரு நூற்றாண்டை எட்டமாட்டார்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்கள். உடனே இது குறித்து நாங்கள் அவர்களிடம் விவாதித்தோம். அப்போது "அன்றைய நாளில் படைக்கப்பட்டு (உயிருடனு)ள்ள ஒவ்வொருவரையுமே இது குறிக்கும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 54 நபித்தோழர்களை ஏசுவது தடை செய்யப்பட்டதாகும்.
4967. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் தோழர்களை ஏசாதீர்கள். என் தோழர்களை ஏசாதீர்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹுத் மலையளவுக்குத் தங்கத்தை (தானமாகச்) செலவிட்டாலும், என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கையளவு, அல்லது அதில் பாதியளவைக் கூட எட்ட முடியாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4968. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபித்தோழர்களான) காலித் பின் அல் வலீத் (ரலி) அவர்களுக்கும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கும் இடையே ஏதோ (பிரச்சினை) இருந்தது. காலித் (ரலி) அவர்கள் (அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களை) ஏசினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் தோழர்களில் யாரையும் ஏசாதீர்கள். உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தை (தர்மமாகச்) செலவிட்டாலும் என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கையளவு, அல்லது அதில் பாதியளவைக்கூட எட்ட முடியாது" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஷுஅபா மற்றும் வகீஉ (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), காலித் பின் அல்வலீத் (ரலி) ஆகியோரைப் பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 44
பாடம் : 55 உவைஸ் அல்கரனீ (ரஹ்) அவர்களின் சிறப்புகள்.
4969. உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) கூஃபாவாசிகளின் தூதுக்குழு ஒன்று (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் வந்தது. அவர்களிடையே உவைஸ் அவர்களைப் பழித்துப் பேசிவந்த மனிதர் ஒருவரும் இருந்தார்.
உமர் (ரலி) அவர்கள், "இங்கு (உங்களில்) "கரன்" குலத்தைச் சேர்ந்தவர்களில் யாரேனும் இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அப்போது அந்த மனிதர் வந்தார்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களிடம் யமன் நாட்டிலிருந்து ஒரு மனிதர் வருவார். அவர் "உவைஸ்" எனப்படுவார். அவர் யமன் நாட்டில் தம் தாயார் ஒருவரை மட்டுமே விட்டுவருவார். அந்த மனிதருடைய மேனியில் வெண்குஷ்டம் ஏற்பட்டிருந்தது. ஆகவே, அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார். அதையடுத்து ஒரு தீனார் அல்லது ஒரு திர்ஹம் அளவு இடத்தைத் தவிர (மற்ற இடங்களிலிருந்து) அதை அல்லாஹ் குணப்படுத்தினான்.
ஆகவே, உங்களில் யாரேனும் அவரைச் சந்தித்தால் அவர் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரட்டும் (அவரிடம் உங்கள் பாவமன்னிப்புக்காகப் பிரார்த்திக்கச் சொல்லவும்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
4970. மேற்கண்ட ஹதீஸ் உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தாபிஉகளில் (உங்களைத் தொடர்ந்து வருவோரில்) சிறந்தவர் உவைஸ் எனப்படும் ஒரு மனிதர் ஆவார். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார்; அந்த மனிதருக்கு வெண்குஷ்டம் இருக்கும். (அவரைக் கண்டால்) உங்களுக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள்" என்று கூறினார்கள்" என உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4971. உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் யமன்வாசிகளின் உதவிப் படைகள் வந்தால், அவர்களிடம் "உங்களிடையே உவைஸ் பின் ஆமிர் (எனப்படும் மனிதர் ஒருவர்) இருக்கிறாரா?" என்று கேட்பார்கள்.
இந்நிலையில் (ஒரு முறை) உவைஸ் (ரஹ்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் வந்து, "நீர்தான் உவைஸ் பின் ஆமிரா?" என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்" என்றார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "முராத் (மூலக்) கோத்திரத்தையும் பிறகு "கரன்" (கிளைக்) குலத்தையும் சேர்ந்தவரா (நீங்கள்)?" என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்" என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "உங்களுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, அதில் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றது (உமது பிரார்த்தனை மூலம்) குணமாகிவிட்டதா?" என்று கேட்டார்கள்.
அதற்கும் உவைஸ் அவர்கள் "ஆம்" என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "உமக்குத் தாயார் ஒருவர் இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யமன்வாசிகளின் உதவிப் படையினருடன் "முராத்" (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் "கரன்" (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, பின்னர் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றவை குணமாயிருக்கும். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்க வாய்ப்புக் கிட்டினால் அவரைப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள்" என்று கூறினார்கள். ஆகவே, எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்தியுங்கள்.
அவ்வாறே உவைஸ் (ரஹ்) அவர்களும் உமருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், "கூஃபாவிற்கு" என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "கூஃபாவின் ஆளுநரிடம் உமக்காகப் (பரிந்துரைத்து) கடிதம் எழுதட்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், "சாதாரண மக்களில் ஒருவனாக நான் இருப்பதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும்" என்று கூறிவிட்டார்கள்.
அடுத்த ஆண்டில் "கரன்" குலத்தைச் சேர்ந்த பிரமுகர்களில் ஒருவர் ஹஜ்ஜுக்காகச் சென்றிருந்த போது உமர் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தார்.
அப்போது அவரிடம் உமர் (ரலி) அவர்கள் உவைஸ் (ரஹ்) அவர்களைப் பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர், "மிக எளிய குடிலில் (நெருக்கடியான வாழ்விலும்) மிகக் குறைவான வாழ்க்கைச் சாதனங்களிலுமே அவரை விட்டுவந்துள்ளேன்" என்று கூறினார்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யமன்வாசிகளின் உதவிப் படையினருடன் "முராத்" (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் "கரன்" (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு (மேனியில்) வெண்குஷ்டம் ஏற்பட்டுப் பின்னர் ஒரு திர்ஹம் அளவு இடத்தைத் தவிர மற்றவை குணமாகியிருக்கும்.
அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்தால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவ மன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்கும் வாய்ப்புக் கிட்டினால் அவரிடம் பிரார்த்திக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள்" என்றார்கள்.
ஆகவே, அப்பிரமுகர் உவைஸ் (ரஹ்) அவர்களிடம் சென்று, "எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார். அப்போது உவைஸ் அவர்கள், "நீர்தான் இப்போது புனிதப் பயணம் ஒன்றை முடித்து வந்துள்ளீர். ஆகவே, நீர்தான் எனக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டும்" என்றார்கள்.
"நீர் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தீரா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" என்றார். பிறகு அவருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அப்போதுதான் மக்களும் உவைஸ் அவர்களை அறிந்துகொண்டனர். பிறகு உவைஸ் அவர்கள் தமது திசையில் நடக்கலானார்கள்.
தொடர்ந்து (உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) நான் உவைஸ் அவர்களுக்கு (நல்ல) போர்வையொன்றை அணியக் கொடுத்தேன். அவரை யாரேனும் ஒருவர் காணும்போதெல்லாம் "உவைஸ் அவர்களுக்கு இந்தப் போர்வை எப்படிக் கிடைத்தது?" என்று கேட்பார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 56 எகிப்துவாசிகளின் நலனைக் காக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறிய அறிவுரை.
4972. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "நீங்கள் விரைவில் ஒரு நாட்டை வெற்றி கொள்வீர்கள். அங்கு "கீராத்" எனும் சொல்லே ஆளப்படும். அந்நாட்டவரின் நலன் காக்குமாறு நான் கூறும் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், அவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர்களுடன் நமக்கு உறவு (முறையு)ம் உண்டு. அவர்களில் இருவர் ஒரு செங்கல் அளவு நிலத்துக்காகச் சண்டையிட்டுக்கொள்வதைக் கண்டால் அங்கிருந்து நீங்கள் வெளியேறிவிடுங்கள்" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் ஷுமாஸா அல்மஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு அபூதர் (ரலி) அவர்கள், ஷுரஹ்பீல் பின் ஹசனாவின் புதல்வர்களான ரபீஆவும் அப்திர் ரஹ்மானும் ஒரு செங்கல் அளவு நிலத்துக்காகச் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டபோது அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4973. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "நீங்கள் விரைவில் எகிப்தை வெற்றி கொள்வீர்கள். அது "கீராத்" எனும் சொல் புழங்கப்படும் பூமியாகும். எகிப்தை நீங்கள் வெற்றி கொண்டால் அந்நாட்டவருடன் நன்முறையில் நடந்துகொள்ளுங்கள். ஏனெனில், அவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர்களுடன் நமக்கு உறவு (முறையு)ம் உண்டு. அல்லது அவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். (பெண் எடுத்த வகையில்) அவர்களுடன் நமக்குப் பந்தமும் உண்டு.
(அபூதர்ரே!) அங்கு ஒரு செங்கல் அளவு நிலத்துக்காக அவர்களில் இருவர் சண்டையிட்டுக் கொள்வதை நீங்கள் கண்டால் அங்கிருந்து வெளியேறிவிடுங்கள்" என்று கூறினார்கள்.
அவ்வாறே (அந்நாட்டை வெற்றி கொண்ட பின்னர்) அப்துர் ரஹ்மான் பின் ஷுரஹ்பீல் பின் ஹசனாவும் அவருடைய சகோதரர் ரபீஆவும் ஒரு செங்கல் அளவு நிலத்துக்காகச் சண்டையிட்டுக்கொள்வதை நான் கண்டேன். ஆகவே அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 57 ஓமன் (உமான்)வாசிகளின் சிறப்பு.
4974. அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை அரபுக் குலங்களில் ஒரு குலத்தாரிடம் அனுப்பிவைத்தார்கள். அவர்கள் அந்த மனிதரை ஏசியும் அடித்தும் விட்டனர். பிறகு அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (நடந்ததைத்) தெரிவித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் ஓமன்வாசிகளிடம் சென்றிருந்தால் அவர்கள் உம்மை ஏசியிருக்கவுமாட்டார்கள்; அடித்திருக்கவுமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 58 ஸகீஃப் குலத்தின் பெரும் பொய்யன் மற்றும் நாசகாரன் ஆகியோரைப் பற்றிய குறிப்பு.
4975. அபூநவ்ஃபல் முஸ்லிம் பின் அபீஅக்ரப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபின் படையால் கொல்லப்பட்டு, பேரீச்ச மரத்தில் சிலுவையிலேற்றித் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்த) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது உடலை நான் மதீனா(விலிருந்து மக்கா வரும் வழியிலுள்ள) "அகபா" பள்ளத்தாக்கில் கண்டேன்.
அப்போது குறைஷியரும் மற்ற மக்களும் அவரது உடலை(ப் பார்த்துவிட்டு)க் கடந்து செல்லலானார்கள். இறுதியில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வந்து அவர்களுக்கு அருகில் நின்று, "அபூகுபைபே! உம்மீது சாந்தி உண்டாகட்டும்; அபூகுபைபே! உம்மீது சாந்தி உண்டாகட்டும்; அபூகுபைபே! உம்மீது சாந்தி உண்டாகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் (ஆட்சியாளருக்கெதிரான போராட்டத்தில்) ஈடுபட வேண்டாமென உம்மை நான் தடுத்துவந்தேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் ஈடுபட வேண்டாமென உம்மை நான் தடுத்து வந்தேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் ஈடுபட வேண்டாமென உம்மை நான் தடுத்துவந்தேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிந்தவரை நீர் அதிகமாக நோன்பு நோற்பவராகவும் அதிகமாக நின்று வழிபடக்கூடியவராகவும் உறவுகளை அரவணைக்கக்கூடியவராகவும் இருந்தீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! சமுதாயத்தில் நீர் மிகவும் தீயவர் என்றால், (இன்றைய) மக்களில் வேறு யார் நல்லவர்கள்?" என்று கூறிவிட்டுப் பிறகு அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (இப்னுஸ் ஸுபைருக்கு அருகில்) நின்றதைப் பற்றியும் அவர்கள் பேசியதைப் பற்றியும் ஹஜ்ஜாஜுக்குச் செய்தி எட்டியபோது, உடனே அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரின் உடலை நோக்கி ஆளனுப்பினார்.
அவரது உடல் மரத்திலிருந்து இறக்கப்பட்டு, யூதர்களின் மையவாடியில் போடப்பட்டது. பிறகு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களின் தாயார் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களைத் தம்மிடம் வரும்படி ஹஜ்ஜாஜ் ஆளனுப்பினார். ஆனால், ஹஜ்ஜாஜிடம் வர அஸ்மா (ரலி) அவர்கள் மறுத்துவிட்டார்கள். மீண்டும் தம் தூதரை அனுப்பி, "ஒன்று நீயாக வருகிறாயா, அல்லது உமது சடையைப் பிடித்து இழுத்துவரக்கூடியவரை உன்னிடம் நான் அனுப்பட்டுமா?" என்று ஹஜ்ஜாஜ் கேட்டார்.
அப்போதும் அஸ்மா (ரலி) அவர்கள் வர மறுத்ததோடல்லாமல், "அல்லாஹ்வின் மீதாணையாக! எனது சடையைப் பிடித்து என்னை இழுத்துக் கொண்டுவரக்கூடியவரை நீர் அனுப்பாத வரையில் நான் உம்மிடம் வரப்போவதில்லை" என்று கூறிவிட்டார்கள்.
உடனே ஹஜ்ஜாஜ், "என் செருப்புகள் எங்கே?" என்று கூறி அதைப் பெற்று (அணிந்து) கொண்டு, பிறகு (இறுமாப்போடு) விரைவாக நடந்து அஸ்மா (ரலி) அவர்களிடம் வந்தார். பிறகு "அல்லாஹ்வின் விரோதியை (உமது மகனை) என்ன செய்தேன் பார்த்தாயா?" என்று கேட்டார்.
அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீ (என் மகன்) அப்துல்லாஹ்வின் இம்மையைச் சீரழித்துவிட்டாய்; அவரோ உன் மறுமையைச் சீரழித்துவிட்டார் என்றே நான் கருதுகிறேன். நீ அவரை "இரு கச்சுடையாளின் புதல்வரே!"என (நகைப்போடு) அழைப்பாய் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. (ஆம்) அல்லாஹ்வின் மீதாணையாக! இரு கச்சுடையாள் நான்தான். (மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உணவையும், (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் உணவையும் அவ்விரு கச்சுகளில் ஒன்றால் கட்டி எடுத்துச்சென்றேன். மற்றொன்று ஒரு பெண்ணிடம் அவசியம் இருக்க வேண்டிய கச்சாகும்.
நினைவிற்கொள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "ஸகீஃப் குலத்தாரில் மகா பொய்யன் ஒருவனும் நாசகாரன் ஒருவனும் இருப்பார்கள்" என்று கூறினார்கள். மகா பொய்யனை (முக்தார் பின் அபீஉபைத்) நாங்கள் பார்த்துவிட்டோம். அந்த நாசகாரன் நீதான் என்றே நான் கருதுகிறேன்" என்று கூறினார். உடனே ஹஜ்ஜாஜ் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்; அஸ்மா (ரலி) அவர்களுக்குப் பதிலேதும் சொல்லவில்லை.
அத்தியாயம் : 44
பாடம் : 59 பாரசீகர்களின் சிறப்பு.
4976. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மார்க்க (ஞான)ம் "கிருத்திகா" நட்சத்திரக் குழுமத்தின் (ஸுரய்யா) அருகில் இருந்தாலும், அதைப் "பாரசீகர்களில்" அல்லது "பாரசீக மக்களில்" ஒருவர் எடுத்துக்கொண்டுவந்து விடுவார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4977. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு "அல்ஜுமுஆ"எனும் (62ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. நபி (ஸல்) அவர்கள் அ(ந்த அத்தியாயத்)தை ஓதிக்கொண்டு வந்து, "இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இத்தூதரை அவன் அனுப்பியுள்ளான்)" (62:3) எனும் வசனம் வந்தபோது, மக்களில் ஒருவர், "அந்த (ஏனைய) மக்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். ஒரு தடவை, அல்லது இரண்டு தடவை, அல்லது மூன்று தடவை அவர் கேட்கும்வரை அவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை.
அப்போது எங்களிடையே சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சல்மான் (ரலி) அவர்கள்மீது தமது கையை வைத்துவிட்டுப் பிறகு, "கிருத்திகா (ஸுரய்யா) நட்சத்திரக் குழுமத்தின் அருகில் இறைநம்பிக்கை (ஈமான்) இருந்தாலும், இவர்களில் சிலர் அதை அடைந்தே தீருவர்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 60 "மனிதர்கள் நூறு ஒட்டகங்களைப் போன்றவர்கள். அவற்றில் பயணத்திற்குப் பயன்படும் ஒட்டகத்தை (மிக அரிதாகவே தவிர) நீங்கள் காணமாட்டீர்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
4978. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களை நீங்கள் நூறு ஒட்டகங்களைப் போன்று காண்பீர்கள். அவற்றில் பயணத்திற்குப் பயன்படும் ஒட்டகத்தை ஒருவர் (மிக அரிதாகவே தவிர) காணமாட்டார்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44