பாடம் : 36 தொழுநோயாளிகள் போன்றோரிடமிருந்து விலகியிருப்பது.
4489. ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஸகீஃப் தூதுக்குழுவில் தொழுநோயாளி ஒருவர் இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "நாம் உம்மிடம் உறுதிமொழி பெற்றுவிட்டோம். நீர் திரும்பிச் செல்லலாம்" என்று கூறியனுப்பினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 37 பாம்பு உள்ளிட்டவற்றைக் கொல்வது.
4490. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள ("துத் துஃப்யத்தைன்" எனும்) பாம்பைக் கொல்லுங்கள். ஏனெனில், அது (கண்) பார்வையைப் பறித்துவிடும்; கர்ப்பத்தைக் கலைத்துவிடும்" என்று உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "குட்டை வால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும், முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் கொல்லும் படி உத்தரவிட்டார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4491. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "பாம்புகளை(க் கொல்லுங்கள். குறிப்பாக) முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவை இரண்டும் கர்ப்பத்தைக் கலைத்துவிடும்; பார்வையைப் பறித்துவிடும்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(என் தந்தை) இப்னு உமர் (ரலி) அவர்கள் கண்ணில்படும் ஒவ்வொரு பாம்பையும் கொன்றுவந்தார்கள். (ஒரு நாள்) அவர்கள் பாம்பொன்றைக் விரட்டிக்கொண்டிருப்பதைக் கண்ட அபூலுபாபா பின் அப்தில் முன்திர் (ரலி), அல்லது ஸைத் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "வீடுகளில் வசிக்கும் பாம்புகளைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 39
4492. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாய்களைக் கொல்லும்படி உத்தரவிடுவதை நான் கேட்டுள்ளேன். அவர்கள், "பாம்புகளையும் நாய்களையும் கொல்லுங்கள்; (குறிப்பாக) முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவை இரண்டும் (கண்) பார்வையைப் பறித்துவிடும்; கர்ப்பத்தைக் கலைத்துவிடும்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவை இரண்டின் விஷத்தன்மை காரணமாகவே அவற்றைக் கொல்லும்படி உத்தரவிட்டுள்ளார்கள் என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் என் கண்ணில் படும் எந்தப் பாம்பையும் கொன்றுவந்தேன். இந்நிலையில் ஒரு நாள் வீட்டில் வசிக்கும் பாம்பொன்றை நான் விரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது என்னை ஸைத் பின் அல்கத்தாப் (ரலி), அல்லது அபூ லுபாபா (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள். நான் அந்தப் பாம்பைத் தேடிக்கொண்டிருந்தேன்.
அப்போது அவர்கள், "அப்துல்லாஹ்வே, நிறுத்துங்கள் (அதைக் கொல்லாதீர்கள்)" என்று கூறினார்கள். நான் "அவற்றைக் கொல்லும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தர விட்டுள்ளார்கள்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் வசிக்கும் பாம்புகளைக் கொல்ல வேண்டாம் எனத் தடை செய்துள்ளார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 39
4493. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இந்நிலையில் என்னைக் கண்ட அபூலுபாபா பின் அப்தில் முன்திர் (ரலி), ஸைத் பின் அல்கத்தாப் (ரலி) ஆகிய இருவரும், "வீடுகளில் வசிக்கும் பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள் என்று கூறினர்" என இடம்பெற்றுள்ளது.
யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "பாம்புகளைக் கொல்லுங்கள்" என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. "முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் கொல்லுங்கள்" என்பது இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 39
4494. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூலுபாபா (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களது வீட்டில் பள்ளிவாசலுக்குச் சமீபமாகச் செல்லும் வகையில் ஒரு வாசல் அமைப்பது குறித்து இப்னு உமர் (ரலி) அவர்களிடம் பேசினார்கள். (வாசலமைக்கும் பணி நடைபெற்றபோது) பணியாளர்கள் பாம்பின் சட்டையொன்றைக் கண்டனர். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், "பாம்பைத் தேடிப் பிடித்துக் கொல்லுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அபூலுபாபா (ரலி) அவர்கள், "அதைக் கொல்லாதீர்கள்; ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிலுள்ள (மெல்லிய வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4495. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் எல்லாப் பாம்புகளையும் கொன்றுவந்தார்கள். அபூ லுபாபா பின் அப்தில் முன்திர் அல்பத்ரீ (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளிலுள்ள பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள்" என்று கூறியதும் (அவற்றைக் கொல்வதை) நிறுத்திவிட்டார்கள்.
அத்தியாயம் : 39
4496. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூலுபாபா (ரலி) அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் வசிக்கும் (மெல்லிய வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள்" என்று கூறியதை நான் கேட்டேன்.
அத்தியாயம் : 39
4497. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூலுபாபா (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் வசிக்கும் (மெல்லிய வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4498. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூலுபாபா பின் அப்தில் முன்திர் அல்அன்சாரீ (ரலி) அவர்களது இல்லம் "குபா"வில் இருந்தது. பின்னர் அவர்கள் மதீனாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். (ஒரு நாள்) அவர்களுடன் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த போது, இப்னு உமர் (ரலி) அவர்கள் (தமது வீட்டில்) வாசல் ஒன்றை அமைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது வீட்டில் வசிக்கும் பாம்பு ஒன்று வெளிப்பட்டது.
அங்கிருந்தவர்கள் அதைக் கொல்ல முற்பட்டனர். அப்போது அபூலுபாபா (ரலி) அவர்கள் அவற்றை (அதாவது வீடுகளில் வசிக்கும் பாம்புகளை)க் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது. குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் கொல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அவையிரண்டும் பார்வையைப் பறித்துவிடும்; பெண்களின் (வயிற்றிலுள்ள) சிசுக்களைக் கலைத்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது"என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 39
4499. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ஒரு நாள் தமது கட்டட இடிபாடுகளுக்கு அருகிலிருந்த போது (மெல்லிய வெண்ணிறப்) பாம்பு ஒன்று மின்னுவதைக் கண்டார்கள். உடனே "இந்தப் பாம்பை விரட்டிப் பிடித்துக் கொல்லுங்கள்"என்று கூறினார்கள். (அங்கிருந்த) அபூலுபாபா அல்அன்சாரீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிலிருக்கும் (மெல்லிய வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள்; குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் தவிர. ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையைப் பறித்துவிடும்; பெண்களின் வயிற்றிலுள்ளதைக் கலைத்துவிடும் என்று கூறினார்கள்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "இப்னு உமர் (ரலி) அவர்கள் (தம் தந்தை) உமர் (ரலி) அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள கோட்டையொன்றின் அருகில் பாம்பொன்றைத் தேடிக்கொண்டிருந்தபோது, அவர்களைக் கடந்து அபூலுபாபா (ரலி) அவர்கள் சென்றார்கள்..."என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 39
4500. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள் மினாவிலுள்ள) ஒரு குகையில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்களுக்கு "வல்முர்சலாத்தி உர்ஃபன்" (ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!) என்று தொடங்கும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியுற்றுக்கொண்டிருந்தோம்.
அப்போது பாம்பு ஒன்று (புற்றிலிருந்து) வெளியேறி எங்களிடையே வந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "அதைக் கொல்லுங்கள்" என்றார்கள். உடனே அதைக் கொல்ல போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக்கொண்டு (தனது புற்றுக்குள் நுழைந்து)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்களை அதன் தீங்கிலிருந்து அல்லாஹ் காப்பாற்றியதைப் போன்று, அதையும் உங்கள் தீங்கிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4501. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்த ஒருவருக்கு "மினா"வில் பாம்பு ஒன்றைக் கொல்ல உத்தரவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் (ஒரு நாள் மினாவிலுள்ள) ஒரு குகையில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது..."என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 39
4502. ஹிஷாம் பின் ஸுஹ்ரா (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமை அபுஸ்ஸாயிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அப்போது அவர்கள் தொழுதுகொண்டிருப்பதைக் கண்டேன். ஆகவே, அவர்கள் தொழுகையை முடிக்கும்வரை அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அப்போது வீட்டின் மூலையிலிருந்த பேரீச்சமர காய்ந்த குச்சிகளுக்கு இடையிலிருந்து ஏதோ அசையும் சப்தத்தை நான் கேட்டேன். உடனே நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒரு பாம்பு இருந்தது. அதைக் கொல்வதற்காக நான் துள்ளிக் குதித்து எழுந்தேன்.
உடனே அபூசயீத் (ரலி) அவர்கள் அமருமாறு எனக்குச் சைகை செய்தார்கள். ஆகவே, நான் அமர்ந்துகொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபின் அவ்வீட்டிலிருந்த ஓர் அறையை எனக்குச் சுட்டிக்காட்டி, "இந்த அறையை நீர் காண்கிறீரா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
இந்த அறையில் புதிதாகத் திருமணமான எங்கள் இளைஞர் ஒருவர் இருந்தார். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அகழ்ப்போருக்குப் புறப்பட்டுச் சென்றபோது, அந்த இளைஞர் நண்பகல் நேரங்களில் தம் வீட்டாரிடம் திரும்பிச் செல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருந்தார்.
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். (அவர் திரும்பிச் செல்லப்போனபோது) அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது ஆயுதத்தை உம்முடனேயே வைத்துக்கொள். ஏனெனில், பனூ குறைழா யூதர்களை உம்முடைய விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்" என்று சொன்னார்கள். அவ்வாறே அந்த மனிதர் (தம்முடன்) ஆயுதத்தை எடுத்துக்கொண்டார்.
பிறகு அவர் திரும்பி வந்தபோது அவரது (புது) மனைவி வீட்டு வாசலில் இரு நிலைக் கால்களுக்கிடையே நின்றுகொண்டிருந்தாள். உடனே அவர் அவள்மீது எறிவதற்காக ஈட்டியை நோக்கித் தமது கையைக் கொண்டு சென்றார். உடனே அவருடைய மனைவிக்கு ரோஷம் ஏற்பட்டு, "ஈட்டி எறிவதை நிறுத்துங்கள். (முதலில்) வீட்டுக்குள் நுழைந்து,நான் வெளியே வந்து நின்றதற்கு என்ன காரணம் என்பதைப் பாருங்கள்" என்று கூறினாள். அவ்வாறே அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்த போது, அங்கு மிகப் பெரிய பாம்பு ஒன்று படுக்கை விரிப்பின் மீது சுருண்டு கிடந்தது.
உடனே அவர் அதன் அருகில் ஈட்டியைக் கொண்டுசென்று (அதன் மீது ஈட்டியைச் செலுத்தி) அதன் உடலுக்குள் ஈட்டியைச் செருகினார். பிறகு அறையிலிருந்து வெளியே வந்து வீட்டி(ன் வளாகத்தி)ல் அந்த ஈட்டியை நட்டு வைத்தார். அந்த ஈட்டியில் கிடந்து பாம்பு துடித்தது. பிறகு அவ்விருவரில் யார் முதலில் இறந்தார்கள். அந்த பாம்பா? அல்லது அந்த இளைஞரா என்பது தெரியவில்லை. (பாம்பும் இளைஞரும் இருவருமே இறந்துவிட்டனர்.)
உடனே நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தகவல் தெரிவித்தோம்; "அவரை (மீண்டும்) உயிர்ப்பிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் நண்பருக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்" என்று சொன்னார்கள்.
பிறகு "மதீனாவில் ஜின்கள் சில இஸ்லாத்தைத் தழுவியுள்ளன. அவற்றில் எதையேனும் நீங்கள் (பாம்பு வடிவத்தில்) கண்டால், அதற்கு நீங்கள் (வெளியேறுமாறு) மூன்று நாட்கள் அறிவிப்புச் செய்யுங்கள். அதற்குப் பின்னரும் அது உங்களுக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அது ஷைத்தான்தான்" என்றார்கள்.
அத்தியாயம் : 39
4503. மேற்கண்ட ஹதீஸ் அபுஸ்ஸாயிப் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றோம். நாங்கள் அமர்ந்திருந்தபோது அவர்களது கட்டிலுக்குக் கீழே ஏதோ அசையும் சப்தத்தைக் கேட்டோம். நாங்கள் உற்றுப் பார்த்தபோது அங்கு பாம்பு ஒன்று இருந்தது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற நிகழ்வுகள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும் அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இந்த வீடுகளில் வசிப்பவை சில உள்ளன. அவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் அவற்றுக்கு மூன்று நாட்கள் நெருக்கடி கொடுங்கள். (மூன்று நாட்களுக்குள்) சென்றுவிட்டால் சரி. இல்லாவிட்டால் அதைக் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்" என்றும்,மக்களிடம் "நீங்கள் சென்று உங்கள் நண்பரை அடக்கம் செய்யுங்கள்" என்றும் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4504. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவில் இஸ்லாத்தைத் தழுவிய ஜின்கள் சில உள்ளன. உங்களில் ஒருவர், அவற்றில் எதையேனும் இந்தக் குடியிருப்புகளில் (பாம்பின் உருவில்) கண்டால் மூன்று நாட்கள் அவற்றுக்கு அவர் அறிவிப்புச் செய்யட்டும். அதற்குப் பின்னரும் அது அவருக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடட்டும்! ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 38 பல்லியைக் கொல்வது நல்லது.
4505. உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பல்லிகளை (அடித்து)க் கொல்லுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4506. உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் பல்லிகளைக் கொல்வதற்கு அனுமதி கேட்டேன். நபியவர்கள் அவற்றைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தைச் சேர்ந்த பெண்மணி ஆவார்கள்.
அத்தியாயம் : 39
4507. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். அதற்கு "தீங்கிழைக்கக்கூடிய பிராணி" (ஃபுவைசிக்) எனப் பெயரிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4508. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லிக்கு "ஃபுவைசிக்" ("தீங்கிழைக்கக்கூடியது") என்று (பெயர்) குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹர்மலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கொல்லும்படி உத்தரவிட்டதை நான் கேட்டதில்லை" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39