4509. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு முதலாவது அடியில் கொன்ற வரைவிடக் குறைவாக இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு; மூன்றாவது அடியில் கொன்றவருக்கு இரண்டாவது அடியில் கொன்றவரைவிடக் குறைவாக நன்மை உண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4510. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அனைவரது அறிவிப்பிலும் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளது. ஆனால், ஜரீர் பின் ஹாஸிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டும் பின்வருமாறு காணப்படுகிறது:
முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படுகின்றன. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான நன்மையும், மூன்றாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான நன்மையும் எழுதப்படும்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "முதலாவது அடியில் கொன்றவருக்கு எழுபது நன்மைகள் (எழுதப்படும்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 39 எறும்புகளைக் கொல்வதற்கு வந்துள்ள தடை.
4511. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அந்த எறும்புப் புற்றையே எரித்துவிடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், "ஓர் எறும்பு உம்மைக் கடித்துவிட்ட காரணத்தால் (எனது) தூய்மையைப் போற்றும் சமுதாயங்களில் ஒரு சமுதாயத்தையே எரித்துவிட்டீரே!" என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4512. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்திற்குக் கீழே தங்கினார். அப்போது அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அவர் மரத்திற்குக் கீழேயிருந்து தமது மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார். அவ்வாறே அப்புறப்படுத்தப்பட்டதும் அந்த எறும்புப் புற்றை எரித்துவிடும்படி கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ் "(அந்த) ஒரே ஓர் எறும்பை நீர் தண்டித்திருக்கக் கூடாதா?"என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4513. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதிஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்திற்குக் கீழே தங்கினார். அப்போது அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அவர் மரத்திற்குக் கீழேயிருந்த தமது மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார். அவ்வாறே செய்யப்பட்டது. பிறகு அந்த எறும்புப் புற்றையே நெருப்பால் எரித்துவிடுமாறு கட்டளையிட்டார். அவ்வாறே செய்யப்பட்டது. அப்போது அல்லாஹ், "(அந்த) ஒரே ஓர் எறும்பை நீர் தண்டித்திருக்கக் கூடாதா?" என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான்.
அத்தியாயம் : 39
பாடம் : 40 பூனையைக் கொல்வதற்கு வந்துள்ள தடை.
4514. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பூனையை, அது சாகும்வரை சிறைவைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்துவைத்தபோது, அவள் அதற்கு உண்பதற்கும் கொடுக்கவில்லை; பருகுவதற்கும் கொடுக்கவில்லை;பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதனால் அவள் நரகத்தில் நுழைந்தாள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாகவும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4515. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பூனைக்கு உண்ணவும் கொடுக்காமல், பருகவும் கொடுக்காமல், பூமியின் புழு பூச்சிகளைத் தின்னவும் விடாமல் (சாகும்வரை அதைத் துன்புறுத்திக்கொண்டு) இருந்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அவள் அதைக் கட்டிவைத்திருந்தாள்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், (புழு பூச்சிகள் என்பதைக் குறிக்க "கஷாஷ்" என்பதற்குப் பதிலாக) "ஹஷராத்" எனும் சொல் ஆளப்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஓர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 41 வாயில்லாப் பிராணிகளுக்கு நீர் புகட்டுவது, உணவளிப்பது ஆகியவற்றின் சிறப்பு.
4516. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு மனிதர் ஒரு பாதை வழியே நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) கிணறு ஒன்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
அந்த மனிதர் (தமது மனதுக்குள்) "எனக்கு ஏற்பட்டதைப் போன்ற அதே (கடுமையான) தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்!" என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு, அதைத் தமது வாயால் கவ்விய படி மேலேறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவருடைய பாவங்களை) மன்னித்தான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இதைச் செவியுற்ற) மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த மிருகங்கள் விஷயத்திலும் (அவற்றுக்கு உதவுவதால்) எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(ஆம்;) உயிர் பிராணிகள் ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 39
4517. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபசாரியான ஒரு பெண், கடும் வெப்பம் நிறைந்த ஒரு நாளில் நாயொன்று ஒரு கிணற்றைச் சுற்றி வந்துகொண்டிருப்பதைக் கண்டாள். அது தாகத்தால் தனது நாக்கை வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருந்தது. உடனே அப்பெண் தனது காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை நிரப்பி வந்து அதற்குப் புகட்டி)னாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4518. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன்னொரு காலத்தில்) ஒரு நாய் கிணறு ஒன்றைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தது. அது தாகத்தால் செத்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபசாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே அவள் தனது காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39

பாடம் : 1 காலத்தை ஏசுவதற்கு வந்துள்ள தடை.
4519. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில்தான் இரவும் பகலும் உள்ளன.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 40
4520. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான்;காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). நானே இரவு பகலை மாறி மாறி வரச்செய்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 40
4521. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான்; "காலத்தின் கைசேதமே!" என்று அவன் கூறுகிறான். ஆகவே, உங்களில் ஒருவர் "காலத்தின் கைசேதமே!" என்று கூற வேண்டாம். ஏனெனில், நானே காலம் (படைத்தவன்). அதில் இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச்செய்கிறேன். நான் நாடினால் அவ்விரண்டையும் (மாறாமல்) பிடித்து (நிறுத்தி) விடுவேன். (பூமியைச் சுழலவிடாமல் நிறுத்திவிடுவேன்.)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 40
4522. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் "காலத்தின் கைசேதமே!" என்று கூற வேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்தவன்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 40
4523. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காலத்தை ஏசாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்து இயக்குபவன்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 40
பாடம் : 2 திராட்சையை ("கண்ணியமானது" எனும் பொருள் கொண்ட) "கர்ம்" என்று பெயரிட்டழைப்பது விரும்பத்தக்கதன்று.
4524. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் காலத்தை ஏச வேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்து இயக்குபவன்). உங்களில் யாரும் திராட்சையை ("கண்ணியம்" எனும் பொருள் கொண்ட) "அல்கர்ம்" என்று பெயரிட்டு அழைக்க வேண்டாம். உண்மையில் கண்ணியம் (எனும் பெயருக்குத் தகுதியானவர்) முஸ்லிமான மனிதரே ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 40
4525. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திராட்சையை "கர்ம்" (கண்ணியமானது) என்று கூறாதீர்கள். ஏனெனில், கண்ணியத்திற்குரியது (எனும் பெயருக்குத் தகுதியானது) இறைநம்பிக்கையாளரின் இதயமே ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 40
4526. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திராட்சையை ("கண்ணியம்" எனும் பொருள் கொண்ட) "அல்கர்ம்" என்று பெயரிட்டழைக்காதீர்கள். உண்மையில் கண்ணியம் (எனும் பெயருக்குத் தகுதியானவர்) முஸ்லிமான மனிதரே ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 40
4527. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (திராட்சையை) "அல்கர்ம்" (கண்ணியம்) என்று கூற வேண்டாம். உண்மையில் கண்ணியம் (எனும் பெயருக்குத் தகுதியானது) இறைநம்பிக்கையாளரின் இதயமே ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 40
4528. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் திராட்சையை "அல்கர்ம்" (கண்ணியமானது) என்று கூறாதீர்கள். உண்மையில் கண்ணியம் (எனும் பெயருக்குத் தகுதியானவர்) முஸ்லிமான மனிதரே ஆவார்.
அத்தியாயம் : 40