4259. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஒரேயொரு காலணியில் நடக்கவேண்டாம். ஒன்று, இரு காலணிகளையும் ஒருசேர அவர் அணிந்துகொள்ளட்டும். அல்லது இரண்டையும் ஒருசேர கழற்றிவிடட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
4260. அபூரஸீன் மஸ்ஊத் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்து, தமது கையால் தமது நெற்றியில் அடித்துவிட்டு, "அறிந்துகொள்ளுங்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது (அவர்கள் சொல்லாததைச் சொன்னதாகப்) பொய்யுரைக்கிறேன் என நீங்கள் பேசிக் கொள்கிறீர்கள். நீங்கள் நேர்வழியில் செல்ல, நான் (மட்டும்) வழிகெட்டுவிட வேண்டுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவரின் செருப்பு வார் அறுந்துவிட்டால், அதைச் சீராக்காத வரை மற்றொரு செருப்பில் நடந்து செல்லவேண்டாம்" என்று கூறினார்கள் என நான் உறுதியளிக்கிறேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 20 ஒரேயொரு துணியை உடலில் சுற்றிக் கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்த நிலையில் விட்டுவிடுவதும் (இஷ்தி மாலுஸ் ஸம்மாஉ), ஒரே துணியைப் போர்த்திக்கொண்டு குத்துக்காலிட்டு அமர்வதும் (இஹ்திபா) தடை செய்யப்பட்டவை ஆகும்.
4261. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர் தமது இடக் கையால் உணவு உண்பது, அல்லது ஒரேயொரு காலணியில் நடப்பது, ஒரேயொரு துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடுவது (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக் கொண்டு மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு (குத்துக்காலிட்டு) அமர்வது (இஹ்திபா) ஆகியவற்றுக்குத் தடை விதித்தார்கள்.
அத்தியாயம் : 37
4262. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவரது செருப்பு வார் அறுந்துவிட்டால்" அல்லது "தமது செருப்பு வார் அறுந்து விட்ட ஒருவர்" அதைச் சீராக்காத வரை ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒரேயொரு காலுறை அணிந்தும் நடக்க வேண்டாம். இடக் கையால் சாப்பிட வேண்டாம்.
ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு (மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு குத்துக்காலிட்டு) அமர வேண்டாம். ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிட வேண்டாம்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 21 மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு கால்மீது மற்றொரு காலைப் போட்டுக் கொள்வதற்கு வந்துள்ள தடை.
4263. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிட வேண்டாம் என்றும், ஒரே துணியைப் போர்த்திக்கொண்டு (மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு குத்துக்காலிட்டு) அமர வேண்டாம் என்றும், ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருக்கும்போது கால்மீது கால் போட்டுக்கொள்ள வேண்டாம் என்றும் தடை செய்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4264. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), "ஒரேயொரு காலணியில் நடக்காதே. ஒரே கீழாடையால் (உன் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு குத்துக்காலிட்டு அமராதே. இடக் கையால் சாப்பிடாதே. ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்தவாறு விட்டுவிடாதே. நீ மல்லாந்து படுத்திருக்கும்போது ஒரு காலை மற்றொரு கால்மீது போடாதே" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4265. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு காலை மற்றொரு கால்மீது போட்டுக்கொள்ள வேண்டாம்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 22 மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு காலை மற்றொரு கால்மீது போட்டுக் கொள்வதற்கு வந்துள்ள அனுமதி.
4266. அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு காலின் மீது மற்றொரு காலைப் போட்டுக்கொண்டு பள்ளிவாசலில் மல்லாந்து படுத்திருப்பதை நான் கண்டேன்.
அத்தியாயம் : 37
4267. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வது தடை செய்யப் பட்டதாகும்.
4268. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதைத் தடை செய்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அதாவது ஆண்களுக்குத் தடை செய்தார்கள்" என (விளக்கத்துடன்) இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்கள் குங்குமப்பூச் சாயமிட்டுக் கொள்ளக்கூடாது எனத் தடை விதித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 24 நரைமுடியில் மஞ்சள் நிறத்திலோ, சிவப்பு நிறத்திலோ சாயமிடுவது விரும்பத் தக்கதாகும். கறுப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும்.
4269. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா அவர்கள் மக்கா "வெற்றி ஆண்டில்" அல்லது "வெற்றி நாளில்" (நபி (ஸல்) அவர்களிடம்) "வந்தார்கள்". அல்லது "கொண்டுவரப் பட்டார்கள்". அவர்களது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று (தூய வெள்ளை நிறத்தில்) இருந்தன. அவருடைய துணைவியரிடம் நபி (ஸல்) அவர்கள், "இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள்" என்று உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 37
4270. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றி நாளில் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா, (நபி (ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டார். அவரது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வதில் யூதர்களுக்கு மாறுசெய்தல்.
4271. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களும் கிறித்தவர்களும் (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் (உங்கள் நரைமுடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறுசெய்யுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 26 உயிரினங்களின் உருவப்படங்களை வரைவதும், விரிப்புகள் போன்ற மதிப்பில்லாப் பொருட்கள் தவிர, உருவப்படமுள்ள இதரப் பொருட்களை வைத்துக் கொள்வதும் தடை செய்யப்பட்டவை ஆகும். உருவப்படமோ நாயோ உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள்.
4272. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு (குறிப்பிட்ட) நேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நேரம் வந்தும் ஜிப்ரீல் வரவில்லை.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் குச்சியொன்று இருந்தது. அதை அவர்கள் தூக்கியெறிந்துவிட்டு, "அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறுசெய்யமாட்டான். அவனுடைய தூதர்களும் வாக்குறுதிக்கு மாறுசெய்யமாட்டார்கள்" என்று கூறினார்கள். பின்னர் திரும்பிப் பார்த்தபோது, தமது கட்டிலுக்குக் கீழே நாய்க்குட்டியொன்று இருப்பதைக் கண்டார்கள்.
உடனே "ஆயிஷா! இந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தெரியவில்லை" என்றேன். உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்ட பின் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள். உங்களுக்காக நான் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தேன். ஆனால், நீங்கள் வரவில்லையே (ஏன்)?" என்று கேட்டார்கள்.
அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "உங்கள் வீட்டினுள்ளிருந்த நாயே என(து வருகை)க்குத் தடையாக அமைந்துவிட்டது. (வானவர்களாகிய) நாங்கள், நாயும் உருவப்படமும் உள்ள வீட்டிற்குள் நுழையமாட்டோம்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வருவதாக வாக்களித்திருந்தார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி (சுருக்கமாக முடிகி)றது. மேற்கண்ட அறிவிப்பில் உள்ளதைப் போன்று விரிவாக இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 37
4273. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வழக்கத்திற்கு மாறாகக்) கவலையோடு அமைதியாக இருந்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் தங்களது தோற்றத்தில் ஏதோ மாற்றத்தை நான் காண்கிறேனே (ஏன்)?" என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(வானவர்) ஜிப்ரீல் இன்றிரவில் என்னை வந்து சந்திப்பதாக வாக்களித்திருந்தார். ஆனால், அவர் வரவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் என்னிடம் வாக்கு மாறி நடந்ததில்லை" என்று சொன்னார்கள். அந்நாள் முழுவதும் அதே நிலையிலேயே அவர்கள் காணப்பட்டார்கள்.
பிறகு அவர்களது மனதில், எங்கள் வீட்டிலிருந்த கூடாரமொன்றுக்குக் கீழே நாய்க்குட்டி இருக்கும் நினைவு வந்தது. உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்டவுடன் தமது கையில் தண்ணீர் அள்ளி அந்த இடத்தில் தெளித்து விட்டார்கள்.
அன்று மாலை நேரமானதும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது "நீங்கள் நேற்றிரவு என்னிடம் வருவதாக வாக்களித்திருந்தீர்களே?" என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் "ஆம். ஆயினும், (வானவர்களாகிய) நாங்கள் நாயும் உருவப்படமும் உள்ள வீட்டில் நுழையமாட்டோம்" என்று கூறினார்கள்.அன்றைய பொழுது புலர்ந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாய்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். சிறிய தோட்டங்களில் உள்ள நாய்களைக் கொல்லுமாறும் கட்டளையிட்டார்கள். பெரிய தோட்டங்களில் உள்ள நாய்களை விட்டுவிட்டார்கள். (அவற்றைக் கொல்லுமாறு உத்தரவிடவில்லை.)
அத்தியாயம் : 37
4274. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாயும் (உயிரினங்களின்) உருவப்படமும் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள்.-இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4275. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாயும் (உயிரினங்களின்) உருவப்படமும் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.
இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதல்ஹா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4276. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உருவப்படம் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் பின்னர் நோய்வாய்ப்பட்டபோது, அவர்களை உடல்நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம். அப்போது அவர்களது வீட்டுக் கதவில் உருவப்படம் உள்ள திரைச் சீலையொன்று தொங்கிக்கொண்டிருந்தது.
நான் (இந்த ஹதீஸை ஸைத் (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தபோது என்னுடனிருந்த) நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களின் மடியில் வளர்ந்த உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களிடம், "உருவப்படங்களைப் பற்றி முன்பொரு நாள் ஸைத் (ரலி) அவர்கள் நமக்கு (ஒரு ஹதீஸ்) அறிவிக்கவில்லையா?"என்று கேட்டேன்.
அதற்கு உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள், "துணியில் வரையப்பட்ட (உயிரற்றவையின் உருவத்)தைத் தவிர என்று அவர்கள் சொன்னதை நீர் கேட்கவில்லையா?" என்று கேட்டார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4277. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உயிரினங்களின்) உருவப்படம் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள்.
இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் நோய் வாய்ப்பட்டபோது, நாங்கள் அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றோம். அங்கு அவர்களது வீட்டி(ன் வாசலி)ல் உருவப்படங்கள் உள்ள திரையை நாங்கள் கண்டோம். நான் (என்னுடனிருந்த) உபைதுல்லாஹ் அல் கவ்லானீ (ரஹ்) அவர்களிடம் "உருவப் படங்களைப் பற்றி (முன்பு ஒரு நாள்) ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் நமக்கு (ஒரு) ஹதீஸ் அறிவிக்கவில்லையா?" என்று கேட்டேன்.
அதற்கு உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள், "துணியில் வரையப்பட்ட (உயிரற்றவையின் படத்)தைத் தவிர என்று அவர்கள் சொன்னதை நீர் செவியேற்கவில்லையா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். அதற்கு உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள், "ஆம், அவ்வாறு சொல்லத்தான் செய்தார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 37
4278. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நாயும் உருவச் சிலைகளும் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள்" என்று கூறியதை நான் கேட்டேன் என அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "இவர் (ஸைத் பின் காலித்), "நாயும் உருவச்சிலைகளும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என என்னிடம் தெரிவிக்கிறாரே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், கூறினார்கள்: இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த ஒரு செயல் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கிறேன்.
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போருக்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். பிறகு நான் திரைச் சீலையொன்றை எடுத்து அதை (எனது வீட்டு) வாசலில் தொங்கவிட்டேன். அவர்கள் (போரை முடித்துத் திரும்பி) வந்தபோது அந்தத் திரைச் சீலையைப் பார்த்தார்கள். அவர்களது முகத்தில் அதிருப்தியை நான் அறிந்துகொண்டேன். அவர்கள் வேகமாக அதைப் பிடித்து இழுத்துக் கிழித்துவிட்டார்கள்.
மேலும், "அல்லாஹ், கல்லுக்கும் களி மண்ணுக்கும் ஆடையணிவிக்குமாறு நமக்குக் கட்டளையிடவில்லை" என்று கூறினார்கள். ஆகவே, அந்தத் திரையை நாங்கள் துண்டாக்கி, அவற்றில் பேரீச்ச நார்களை நிரப்பி, இரு தலையணைகள் செய்துகொண்டோம். அதை அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.
அத்தியாயம் : 37