4044. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, மண் சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்றும்,பழுக்காத பச்சை நிறமுள்ள பேரீச்சம் பழங்களை நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களுடன் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்க வேண்டாம் என்றும் தடை செய்தார்கள்.
அத்தியாயம் : 36
4045. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, பேரீச்சமரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம் எனத் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4046. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சுட்ட களிமண் பாத்திரத்தில் பானங்களை ஊற்றி வைக்கவேண்டாம் எனத் தடை செய்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4047. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, மண் சாடி, பேரீச்சமரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடைசெய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள், (மேற்கண்ட பாத்திரங்களில் பானங்களை) ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4048. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மண் சாடி, சுரைக்காய் குடுவை மற்றும் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் (பானங்களை) அருந்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
அத்தியாயம் : 36
4049. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, மண் சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடைசெய்தார்கள் என நான் சாட்சியம் அளிக்கிறேன்" என்று இப்னு உமர் (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாக நான் சாட்சியம் அளிக்கிறேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4050. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், சுட்ட களிமண் பாத்திரத்தில் ஊறவைக்கப்பட்ட பானங்கள் பற்றிக் கேட்டேன். இப்னு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரத்தில் ஊறவைக்கப்பட்ட பானத்திற்குத் தடை விதித்தார்கள்" என்று பதிலளித்தார்கள்.
பின்னர் நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, "இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவதைத் தாங்கள் செவியுறவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இப்னு உமர் என்ன கூறுகிறார்?" என்று கேட்டார்கள். நான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரத்தில் ஊறவைக்கப்பட்ட பானத்திற்குத் தடை விதித்தார்கள் என்று கூறினார்கள்" என்றேன்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இப்னு உமர் சொன்னது உண்மையே. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நபீதுல் ஜர்ரு"க்குத் தடைவிதித்தார்கள்" என்று கூறினார்கள். உடனே நான், "நபீதுல் ஜர் என்பது என்ன?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "சுட்ட களிமண்ணில் தயாரிக்கப்படும் (பாத்திரங்கள்) ஒவ்வொன்றுமே (நபீதுல் ஜர்) ஆகும்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 36
4051. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் கலந்துகொண்ட போர் ஒன்றில் மக்களிடையே உரையாற்றினார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த பகுதியை நோக்கிச் சென்றேன். நான் அங்கு சென்றடைவதற்குள் (அவர்கள் உரையை முடித்துத்) திரும்பிவிட்டார்கள்.
எனவே நான் (மக்களிடம்), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். மக்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் (பானங்களை) ஊற்றிவைக்க வேண்டாம் எனத் தடை விதித்தார்கள்" என்று பதிலளித்தனர்.
அத்தியாயம் : 36
4052. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பத்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மாலிக் பின் அனஸ் (ரஹ்) மற்றும் உசாமா பின் ஸைத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பைத் தவிர மற்ற அறிவிப்புகளில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போர்களில் ஒன்றில்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 36
4053. ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரத்தில் ஊறவைக்கப்பட்ட பானங்களைத் தடை செய்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "அவ்வாறே மக்கள் கூறுகிறார்கள்" என்று பதிலளித்தார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குத் தடை விதித்தார்களா?" என்று (மீண்டும்) கேட்டேன். இப்னு உமர் (ரலி) அவர்கள் "அவ்வாறே மக்கள் கூறுகிறார்கள்" என்று பதிலளித்தார்கள்.
- தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரத்தில் பானங்களை ஊற்றி வைக்க வேண்டாமெனத் தடைசெய்தார்களா?" என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான சுலைமான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு தாவூஸ் (ரஹ்) அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறே நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 36
4054. தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரம்,சுரைக்காய் குடுவை ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்களா?" என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 36
4055. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரம், சுரைக்காய் குடுவை ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
அத்தியாயம் : 36
4056. தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரம், சுரைக்காய் குடுவை மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடைசெய்தார்களா?" என்று கேட்டார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 36
4057. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மண் சாடி, சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
அறிவிப்பாளர் முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதை நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து (ஓரிரு முறை அல்ல) பலமுறை செவியுற்றுள்ளேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், இப்னு உமர் (ரலி) அவர்கள் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரத்தையும் குறிப்பிட்டார்கள் என்றே நான் கருதுகிறேன் என முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அத்தியாயம் : 36
4058. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரம், சுரைக்காய் குடுவை மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள். (மாறாக) "தோல் பைகளில் பானங்களை ஊற்றிவைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.-இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4059. ஜபலா பின் சஹீம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹன்த்தமா"வைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்" என்று கூறினார்கள். நான் "ஹன்த்தமா என்பது என்ன?" என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், "சுட்ட களிமண் பாத்திரம்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 36
4060. ஸாதான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் "நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ள குடிபானங்களைப் பற்றி உங்களது (வட்டார) மொழியில் கூறி, அதற்கு எங்களது (வட்டார) மொழியில் எனக்கு விளக்கமளியுங்கள். ஏனெனில், எங்களது மொழி வழக்கு அல்லாத வேறொரு மொழி வழக்கு உங்களுக்கு உள்ளது" என்று கூறினேன்.
அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹன்த்தமை"ப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள். அது சுட்ட களிமண் பாத்திரமாகும். மேலும், அவர்கள் "துப்பா"வையும் தடை செய்தார்கள். அது சுரைக்காய் குடுவையாகும். "முஸஃப்பத்"தையும் தடை செய்தார்கள். அதுவே தார் பூசப்பட்ட பாத்திரமாகும்."நக்கீரை"யும் தடை செய்தார்கள். அது பேரீச்ச மரத்தின் மேற்பட்டை உரிக்கப்பட்டு பின்னர் நன்கு குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரமாகும்" என்று கூறிவிட்டு, "(இவற்றை விடுத்து) தோல் பைகளில் பானங்களை ஊற்றிவைக்குமாறு உத்தரவிட்டார்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4061. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இந்தச் சொற்பொழிவு மேடை -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மிம்பரை நோக்கி சைகை செய்கிறார்- அருகில், "அப்துல் கைஸ் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து குடிபானங்கள் பற்றிக் கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை,பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் மற்றும் மண் சாடி ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென அவர்களுக்குத் தடை விதித்தார்கள்" என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல் காலிக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடம், "அபூமுஹம்மதே! தார் பூசப்பட்ட பாத்திரத்தையுமா (பயன்படுத்தவேண்டாம் எனத் தடை செய்தார்கள்)?" என்று கேட்டேன். அதை அவர்கள் மறந்துவிட்டார்கள் என்று நாங்கள் கருதினோம். (அதனால்தான் அவ்வாறு கேட்டோம்).
அதற்கு சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள், "அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அன்று அவ்வாறு கூறியதை நான் கேட்கவில்லை. (எனினும்,) அவர்கள் (தார் பூசப்பட்ட பாத்திரத்தை) வெறுத்துவந்தார்கள்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 36
4062. ஜாபிர் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சமரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் சுரைக்காய் குடுவை ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4063. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரம், சுரைக்காய் குடுவை மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்ததை நான் செவியுற்றுள்ளேன்.
- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பானங்கள் ஊற்றிவைப்பதற்கு (பாத்திரம்) எதுவும் கிடைக்காவிட்டால், கல் தொட்டியில் அவர்களுக்காகப் பானங்கள் ஊற்றிவைக்கப்பட்டு வந்தது.
அத்தியாயம் : 36