3864. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதைப் பற்றிக் கேட்டார். ஒருவர் (தனிப்பட்ட) கோபதாபத்திற்காகப் போரிடுகிறார். மற்றொருவர் இனமாச்சர்யத்துடன் போரிடுகிறார் (இவற்றில் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் போர் எது?)" என்று கேட்டார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் தமது தலையை உயர்த்தினார்கள் -அவர் நின்றுகொண்டிருந்ததால்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தினார்கள்-. பிறகு, "அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகின்றவரே அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் ஆவார்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 43 பிறருக்குக் காட்டிக்கொள்வதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் நரகத்திற்கே உரியவர் ஆவார்.
3865. சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எங்களுக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், "ஆம் (தெரிவிக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்:
மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?" என்று இறைவன் கேட்பான். அவர், "(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்" என்று பதிலளிப்பார்.
இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, "மாவீரன்" என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)" என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?" என்று இறைவன் கேட்பான். அவர், "(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்" என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.)"அறிஞர்" என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; "குர்ஆன் அறிஞர்" என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறி விட்டது)" என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?" என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், "நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்" என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய் "இவர் ஒரு புரவலர்" என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)" என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மக்கள் கலைந்து சென்றபோது சிரியா நாட்டைச் சேர்ந்த "நாத்தில் பின் கைஸ்" என்பவர் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்டார்..." என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 33
பாடம் : 44 அறப்போரில் கலந்துகொண்டு போர்ச்செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் அடைந்துகொள்ளும் (மறுமை) நன்மைகளின் அளவு பற்றிய விளக்கம்.
3866. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் போர்புரியச் சென்று, போர்ச்செல்வங்களை அடைந்து கொண்டோர் மறுமையின் நன்மைகளில் மூன்றில் இரண்டு பாகங்களை முன்கூட்டியே (இவ்வுலகிலேயே) பெற்றுக்கொண்டுவிட்டனர். (மீதியுள்ள) மூன்றில் ஒரு பாகமே (மறுமையில்) அவர்களுக்கு எஞ்சியிருக்கும். (அறப்போரில் கலந்துகொண்டு) போர்ச் செல்வம் எதையும் அடைந்துகொள்ளாதோர் முழு நன்மையையும் (மறுமையில்) பெற்றுக் கொள்வர்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3867. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அல்லாஹ்வின் பாதையில்) அறப்போரில் அல்லது படைப்பிரிவில் பங்கேற்றுப் போர் செய்து, போர்ச்செல்வங்களுடனும் உடல் நலத்துடனும் திரும்புவோர், தங்களுடைய மறுமை நன்மைகளில் மூன்றில் இரண்டு பாகத்தை முன்கூட்டியே (இவ்வுலகிலேயே) அடைந்து கொண்டுவிட்டனர். அறப்போரில் அல்லது படைப்பிரிவில் கலந்து, போர் செய்து, போர்ச் செல்வமும் பெறாமல் உடலும் பாதிக்கப்பட்ட நிலையில் திரும்புவோர், (மறுமையில்) முழுமையான நன்மைகளை அடைந்துகொள்வர்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 45 "எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன" எனும் நபிமொழியும், அதில் அறப்போர் உள்ளிட்ட அனைத்து நல்லறங்களும் அடங்கும் என்பதும்.
3868. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே, எவரது ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். எவரது ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும்.
இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் எட்டு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சுஃப்யான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தவாறு இவ்வாறு கூறியதை நான் கேட்டேன்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடையும் வாய்ப்பை வழங்குமாறு வேண்டுவது விரும்பத்தக்கதாகும்.
3869. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்துகொள்வார்; அவரை வீரமரணம் தழுவாவிட்டாலும் சரியே!
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3870. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் உண்மையான மனதுடன் இறைவனிடம் வீரமரணத்தை வேண்டுவாரோ, அவரை உயிர்த் தியாகிகளின் தகுதிகளுக்கு அல்லாஹ் உயர்த்துவான்; அவர் தமது படுக்கையில் (இயற்கை) மரணமடைந்தாலும் சரியே!
இதை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபுத்தாஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உண்மையான மனதுடன்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33
பாடம் : 47 அறப்போரில் கலந்துகொள்ளாமலும் அது குறித்து மனதில் எந்த விதமான ஆசையும் இல்லாமலும் இறந்துபோனவர் குறித்து வந்துள்ள பழிப்புரை.
3871. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறப்போரில் கலந்துகொள்ளாமலும் அது குறித்து மனதில் எந்த விதமான ஆசையும் இல்லாமல் இறந்துபோனவர் நயவஞ்சகத்தின் ஓர் அம்சத்திலேயே இறந்து போகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த நிலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் இருந்தது என்றே நாம் கருதுகிறோம்.
அத்தியாயம் : 33
பாடம் : 48 நோய் அல்லது வேறு தகுந்த காரணத்தால் போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை கிடைக்கும்.
3872. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஓர் அறப்போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், "மதீனாவில் (நம் தோழர்கள்) சிலர் இருக்கின்றனர். நீங்கள் ஒரு பாதையில் நடக்கும்போதும் ஒரு பள்ளத்தாக்கைக் கடக்கும்போதும் உங்களுடனேயே அவர்களும் இருக்கின்றனர். நோய்தான் அவர்களை (போருக்கு வரவிடாமல்) தடுத்து விட்டது" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நன்மையில் உங்களுடன் அவர்களும் இணைந்துகொள்ளாமல் இருப்பதில்லை" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 49 கடல்வழிப் போரின் சிறப்பு
3873. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள "குபா"வுக்குச் சென்றால், தம் பால்குடி அன்னையான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்வதும் அவர்களுக்கு அவர் உணவளிப்பதும் வழக்கம் -அவர் (பிற்காலத்தில்) உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார்- அவ்வாறே ஒரு நாள் (பகலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்ற போது, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உணவளித்தார். பின்னர் அவர்களுக்கு அவர் பேன் பார்த்துக்கொண்டு உட்கார்ந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.
தொடர்ந்து உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அப்போது நான், "ஏன் சிரிக்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இந்தக் கடல் மேல் பயணம் செய்யும் அறப்போர் வீரர்களாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் "மன்னர்களாக" அல்லது "மன்னர்களைப் போன்று" இருந்தார்கள்" என்று கூறினார்கள். (இவ்விரு வார்த்தைகளில் எந்த வார்த்தையை அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என அறிவிப்பாளர் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் சந்தேகத்துடன் அறிவிக்கிறார்.) உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று சொன்னேன். அப்போது எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
பிறகு (மீண்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையைக் கீழே வைத்து உறங்கிவிட்டுப் பிறகு சிரித்தபடி விழித்தெழுந்தார்கள். அப்போதும் நான், "ஏன் சிரிக்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள்" என்று முன்பு போலவே பதிலளித்தார்கள்.
அதைக் கேட்டு நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னையையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் (கடல்வழி அறப்போருக்குச் செல்லும்) முதலாவது குழுவில் ஒருவராக இருப்பீர்கள்" என்று கூறினார்கள்.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தபடியே) உம்மு ஹராம் (ரலி) அவர்கள் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களது காலத்தில் கடற்பயணம் மேற்கொண்டார்கள். பின்பு அவர்கள் கடலிலிருந்து புறப்பட்டு (கரைக்கு) வந்தபோது, தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்துபோனார்கள்.
அத்தியாயம் : 33
3874. அனஸ் (ரலி) அவர்களின் சிற்றன்னை உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, எங்கள் வீட்டில் மதிய ஓய்வு மேற்கொண்டார்கள். பிறகு உறக்கத்திலிருந்து சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள். அப்போது நான், "என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம்! ஏன் சிரிக்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் கடல் முதுகில் பயணிப்பவர்களாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் மன்னர்களைப் போன்று இருந்தார்கள்" என்று கூறினார்கள். உடனே நான், "என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று சொன்னேன்.
அதற்கு, "நீங்களும் அவர்களில் ஒருவராக இருப்பீர்கள்" என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) உறங்கிவிட்டு மறுபடியும் சிரித்தபடியே விழித்தொழுந்தார்கள். அப்போது நான் (அதற்கான காரணத்தை) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் முன்பு கூறியதைப் போன்றே கூறினார்கள்.
அப்போதும் நான், "என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் (கடல்வழிப்போரில் செல்லும்) முதலாவது குழுவினரில் ஒருவராக இருப்பீர்கள்" என்று கூறினார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
பின்னர் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டபோது, உபாதா (ரலி) அவர்கள் கடலில் பயணம் செய்து அறப்போருக்குச் சென்றார்கள். அப்போது தம்முடன் (தம் துணைவி) உம்மு ஹராம் (ரலி) அவர்களையும் (கப்பலில்) அழைத்துச் சென்றார்கள். (போர் முடிந்து) வந்தபோது, உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கு அருகில் கோவேறு கழுதையொன்று கொண்டுவரப்பட்டது. அதில் அவர்கள் ஏறியபோது, அது கீழே தள்ளிவிட்டது. அதனால் அவர்களது கழுத்து முறிந்துவிட்டது. (அவர்கள் இறந்துவிட்டார்கள்.)
அத்தியாயம் : 33
3875. மேற்கண்ட ஹதீஸ் உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒரு நாள் (பகலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் வீட்டிற்கு வந்து) எனக்கு அருகில் உறங்கினார்கள். பிறகு புன்னகைத்தவர்களாக விழித்தெழுந்தார்கள். நான், "ஏன் சிரிக்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு, "என் சமுதாயத்தாரில் சிலர் இந்தப் பசுமைக் கடல் மேல் பயணிப்பவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள்..." என்று கூறினார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெறுகின்றன.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் சிற்றன்னை மில்ஹானின் புதல்வி (உம்மு ஹராம் - ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்து, அவர் அருகில் தமது தலையைக் கீழே வைத்து உறங்கினார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 33
பாடம் : 50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு.
3876. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு பகல் ஓர் இரவு (நாட்டின்) எல்லையைக் காக்கும் பணியில் ஈடுபடுவதானது, ஒரு மாதம் (பகலெல்லாம்) நோன்பு நோற்று (இரவெல்லாம்) நின்று வழிபடுவதைவிடச் சிறந்ததாகும். அ(வ்வாறு காவல் காப்ப)வர் இறந்துவிட்டாலும் அவர் செய்துவந்த நற்செயல் (களுக்குரிய நன்மை)கள் (அவரது கணக்கில்) அவருக்குப் போய்க்கொண்டிருக்கும். (இறைவனிடம்) அவர் உணவளிக்கவும்படுகிறார். மேலும், (சவக்குழியில்) வேதனை செய்பவரிடமிருந்து பாதுகாப்பும் பெறுவார்.
இதை சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சல்மானுல் கைர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 51 (பல வகை) உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம்.
3877. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் முட்கிளை ஒன்றைக் கண்டு அதை அப்புறப்படுத்தினார். (அவரது இந்த நற்செயலை) அல்லாஹ் பெருமனதுடன் ஏற்று, அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான். உயிர்த் தியாகிகள் ஐவர் ஆவர்:
1. கொள்ளை நோயால் இறந்தவர் 2. வயிற்றுப்போக்கால் இறந்தவர் 3. வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர் 4.இடிபாடுகளில் சிக்கி இறந்தவர் 5. அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) உயிர்த் தியாகம் செய்தவர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3878. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), "உங்களில் உயிர்த்தியாகி (ஷஹீத்) குறித்து உங்கள் கருத்து என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டவர் உயிர்த்தியாகி ஆவார்" என்று பதிலளித்தனர்.
"அப்படியானால், என் சமுதாயத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்கள் (எண்ணிக்கையில்) குறைந்துவிடுவார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "அவ்வாறாயின், உயிர்த்தியாகிகள் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டவர் உயிர்த்தியாகி ஆவார். அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர் உயிர்த் தியாகி ஆவார். கொள்ளை நோயால் இறந்தவரும் உயிர்த்தியாகி ஆவார். வயிற்றோட்டத்தால் இறந்தவரும் உயிர்த்தியாகி ஆவார்" என்று விடையளித்தார்கள்.
(இந்த ஹதீஸ் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள சுஹைல் பின் அபீசாலிஹ் (ரஹ்) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் வரிசையிலும் வந்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள) உபைதுல்லாஹ் பின் மிக்சம் (ரஹ்) அவர்கள் (தமக்கு இதை அறிவித்த) சுஹைல் (ரஹ்) அவர்களிடம், "இந்த ஹதீஸின் தொடரில் "வெள்ளத்தில் மூழ்கி இறந்தவரும் உயிர்த்தியாகி ஆவார்" என உங்கள் தந்தை (அபூ சாலிஹ் -ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் என நான் உறுதிமொழிகிறேன்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: சுஹைல் பின் அபீசாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (என்னிடம்) உபைதுல்லாஹ் பின் மிக்சம் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீஸின் தொடரில் உங்கள் தந்தை (அபூசாலிஹ் -ரஹ்) அவர்கள் "வெள்ளத்தில் மூழ்கி இறந்தவரும் உயிர்த்தியாகி ஆவார்" என்று அறிவித்தார் என நான் உறுதிமொழிகிறேன்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் அபூசாலிஹ் (ரஹ்) அவர்கள் "வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர் உயிர்த் தியாகி ஆவார்" என்று கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3879. ஹஃப்ஸா பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் என்னிடம், "(உங்கள் சகோதரர்) யஹ்யா பின் அபீஅம்ரா எதனால் இறந்தார்?" என்று கேட்டார்கள். நான், "கொள்ளை நோயால் இறந்தார்" என்று பதிலளித்தேன். அவர்கள், "கொள்ளை நோய் (மரணம்), ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வீரமரணமாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 52 அம்பெய்வதன் சிறப்பும் அதற்காக ஆர்வமூட்டுவதும் அதைப்பயின்று மறந்து விட்டவர் குறித்து வந்துள்ள பழிப்புரையும்.
3880. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி "நீங்கள் அவர்களுக்கெதிராக உங்களால் இயன்ற அளவுக்குப் பலத்தைத் தயார்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்" (8:60) எனும் இறைவசனத்தை ஓதிவிட்டு, "அறிந்து கொள்க: பலம் என்பது அம்பெய்வதாகும். அறிக! பலம் என்பது அம்பெய்வதாகும். அறிக! பலம் என்பது அம்பெய்வதாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 33
3881. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விரைவில் பல நாடுகள் உங்களால் வெற்றிகொள்ளப்படும். அதற்கு இறைவனே உங்களுக்குப் போதுமானவன். எனவே, உங்களில் ஒருவர் தம் அம்புகளால் விளையாட இயலாமல் போய்விட வேண்டாம்.
இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3882. அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஃபுகைம் அல்லக்மீ என்பவர் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடம் "(முதியவரான) தாங்கள் (அம்பெய்வதற்காக) இவ்விரு இலக்குகளுக்கிடையே உங்களைச் சிரமப்படுத்திக் கொள்கிறீர்களே!" என்று கேட்டார். அதற்கு உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியை நான் செவியுற்றிராவிட்டால் இதற்காக நான் சிரமம் எடுத்துக்கொள்ளமாட்டேன்" என்று பதிலளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான ஹாரிஸ் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா (ரஹ்) அவர்களிடம், "அது என்ன (செய்தி)?" என்று கேட்டேன். அதற்கு அப்துர் ரஹ்மான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யார் அம்பெய்வதைப் பயின்ற பின் அதைக் கைவிட்டுவிடுகிறாரோ அவர் "நம்மைச் சேர்ந்தவர் அல்லர்" அல்லது "(நமக்கு) மாறுசெய்துவிட்டார்" என்று கூறினார்கள்" என விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 53 "என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது" என நபி (ஸல்) அவர்கள் கூறியது.
3883. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் உண்மைக்கு ஆதரவாளர்களாக இருந்துகொண்டே இருப்பார்கள். அவர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களால் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. இறுதியில் அவர்கள் இதே நிலையில் இருக்கும்போதே இறைக்கட்டளை (மறுமைக்கு நெருக்கமான நிலை) வந்துவிடும்.
இதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் இதே நிலையில் இருக்கும்போதே" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33