3884. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் (உண்மையை மறுக்கும்) மக்களை மிகைத்தவர்களாகவே இருந்துகொண்டிருப்பார்கள். இறுதியில் அவர்கள் மிகைத்தவர்களாக இருக்கும்போதே அவர்களிடம் இறைக்கட்டளை (மறுமைக்கு நெருக்கமான நிலை) வந்துவிடும்.
இதை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3885. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த மார்க்கத்திற்காக முஸ்லிம்களில் ஒரு குழுவினர் போராடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே மறுமை நிகழும். அதுவரை இந்த மார்க்கம் நிலைத்திருக்கும்.
இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3886. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் இறுதி நாள்வரை உண்மைக்கு ஆதரவாகப் போராடிக்கொண்டே இருப்பார்கள்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3887. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் இறைக்கட்டளையை நிலைநாட்டிய வண்ணமே இருப்பார்கள். அவர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களோ அவர்களை எதிர்ப்பவர்களோ அவர்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்க முடியாது. அவர்கள் (உண்மையை மறுக்கும்) மக்களை மிகைத்தவர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களிடம் இறைக் கட்டளை வரும். -இதை முஆவியா (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 33
3888. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகின்றானோ அவரை மார்க்க (விளக்கமுடைய) அறிஞராக்குகிறான். முஸ்லிம்களில் ஒரு குழுவினர் உண்மைக்கு ஆதரவாகப் போராடிய வண்ணம் தம் எதிரிகளைவிட மேலோங்கியவர்களாகவே யுகமுடிவு நாள்வரை நீடித்திருப்பார்கள்.
இதை முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளரான யஸீத் பின் அல்அஸம்மு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
முஆவியா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்த இந்த ஒரு ஹதீஸை (மட்டுமே) நான் செவியுற்றேன். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இந்த ஹதீஸைத் தவிர வேறெதையும் முஆவியா (ரலி) அவர்கள் மிம்பர் மீதிருந்தபடி குறிப்பிட்டதை நான் கேட்டதில்லை.
அத்தியாயம் : 33
3889. அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா அல்மஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மஸ்லமா பின் முகல்லத் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அங்கு மஸ்லமா (ரலி) அவர்களுக்கு அருகில் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், "படைப்பினங்களிலேயே மிகவும் தீயவர்கள் மீதே யுகமுடிவு நாள் சம்பவிக்கும். அவர்கள் அறியாமைக் கால மக்களைவிட தீயவர்களாக இருப்பர். அவர்கள் அல்லாஹ்விடம் எதை வேண்டினாலும் இறைவன் அதை நிராகரித்துவிடுவான்" என்று சொன்னார்கள்.
இவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள். அப்போது மஸ்லமா (ரலி) அவர்கள், "உக்பா (ரலி) அவர்களே! அப்துல்லாஹ் சொல்வதைக் கேளுங்கள்" என்றார்கள். அதற்கு உக்பா (ரலி) அவர்கள், "அவரே நன்கறிந்தவர். நானோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதைக் கேட்டுள்ளேன் என்றார்கள்:
என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப போராடியவண்ணம் தம் எதிரிகளை அடக்கிவைத்தபடியே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்குத் தீங்கு செய்யமுடியாது. அவர்கள் இவ்வாறு இருந்துகொண்டிருக்கும் நிலையிலேயே யுகமுடிவு நாள் ஏற்படும்.
அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், "ஆம் (நீங்கள் சொன்னதும் சரியே!) பிறகு கஸ்தூரி போன்ற மணமுடைய ஒரு காற்றை அல்லாஹ் அனுப்புவான். அது பட்டு போல மேனியை வருடும். பிறகு எந்த உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை உள்ளதோ அத்தகைய எந்த உயிரையும் அது கைப்பற்றாமல் விடாது. பிறகு மக்களிலேயே மிகவும் தீயவர்களே எஞ்சியிருப்பர். அவர்கள்மீதே யுக முடிவு நாள் ஏற்படும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 33
3890. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மேற்குவாசிகள் (சிரியாவாசிகள்) யுகமுடிவு நாள்வரை உண்மைக்கு ஆதரவாகவே இருந்துகொண்டிருப்பார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் சாலையி(ன் நடுவி)ல் இரவில் இறங்கி ஓய்வெடுப்பதற்கு வந்துள்ள தடையும்.
3891. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால், (பசுமையான) பூமியில் ஒட்டகங்களுக்குரிய பங்கை (மேய்ச்சலை)க் கொடுத்துவிடுங்கள். வறட்சியான காலத்தில் பயணம் செய்தால், ஒட்டகங்களைத் துரிதமாகச் செலுத்துங்கள். நீங்கள் இரவில் இறங்கி ஓய்வெடுத்தால், (போக்குவரத்துச்) சாலையைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், அது இரவில் விஷஜந்துகள் உலவும் இடமாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால், (பசுமையான) பூமியில் ஒட்டகங்களுக்குரிய பங்கை (மேய்ச்சலை)க் கொடுத்துவிடுங்கள். வறட்சியான காலத்தில் பயணம் மேற்கொண்டால், ஒட்டகங்களின் உடலில் எலும்பு மஜ்ஜை (பலம்) இருக்கவே விரைவாகச் சென்றுவிடுங்கள். (பயணத்தில்) நீங்கள் இரவில் இறங்கி ஓய்வெடுத்தால், போக்குவரத்துச் சாலைகளைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில், அவை கால்நடைகளின் பாதைகளும் இரவில் விஷஜந்துகள் உலவும் இடமும் ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 55 பயணம் வேதனையின் ஒரு துண்டாகும். பயணி தம் பணிகளை முடித்த பின் விரைவாகத் தம் வீட்டாரிடம் திரும்பிவிடுவது நல்லதாகும்.
3892. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பயணம் வேதனையின் ஒரு துண்டாகும். உங்கள் தூக்கத்தையும் உணவையும் பானத்தையும் அது தடுத்துவிடுகிறது. ஆகவே, உங்களில் ஒருவர், தாம் நாடிச்சென்ற பயண நோக்கத்தை முடித்துவிட்டால், உடனே அவர் தம் வீட்டாரை நோக்கி விரைந்து செல்லட்டும்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், "இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அபூசாலிஹ் (ரஹ்) அவர்களும், அவரிடமிருந்து சுமய்யு (ரஹ்) அவர்களும் உங்களுக்கு அறிவித்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 56 (நீண்ட) பயணத்திலிருந்து திரும்புகின்றவர் இரவில் (எந்த முன்னறிவிப்புமின்றி) திடீரெனத் தமது வீட்டினுள் நுழைவது (துரூக்) வெறுக்கத்தக்கதாகும்.
3893. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தை முடித்து) இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்லமாட்டார்கள். அவர்களிடம் காலையிலோ அல்லது மாலையிலோ தான் செல்வர்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நுழையமாட்டார்கள்" என்றே இடம்பெற்றுள்ளது. ("திடீரென" எனும் குறிப்பு இல்லை.)
அத்தியாயம் : 33
3894. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு போரில் (தபூக்கில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். பிறகு நாங்கள் மதீனா வந்து (ஊருக்குள்) நுழையப்போனபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இரவாகும்வரை பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக் கொள்ளட்டும்.(கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப் படுத்தி)க்கொள்ளட்டும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3895. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (வெளியூரிலிருந்து) இரவு நேரத்தில் வந்தால் (எந்த முன்னறிவிப்புமின்றி) திடீரென அவர் தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம். (கணவனைப்) பிரிந்திருந்த பெண் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தம்மை ஆயத்தப் படுத்தி)க்கொள்ளும் வரையிலும், தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக் கொள்ளும்வரையிலும் (அவர் தாமதிக்கட்டும்!)
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3896. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது
நீண்டநாட்கள் கழித்து ஊர் திரும்புகின்ற ஒருவர் (எந்த முன்னறிவிப்புமின்றி) இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3897. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(வெளியூரிலிருந்து திரும்புகின்ற) ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும் (அவ்வாறு செல்வது முறையாகாது).
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள், "வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்" எனும் இந்த வாசகம் ஹதீஸில் உள்ளதா, அல்லது இல்லையா (அறிவிப்பாளர் முஹாரிப் அவர்களின் வாசகமா) என எனக்குத் தெரியவில்லை" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3898. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஒருவர் (பயணத்திலிருந்து திரும்பி) இரவில் திடீரென வீட்டாரிடம் செல்வதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்து வந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
"வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33

பாடம் : 1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல்.
3899. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நான் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்...) சொல்லி அனுப்புகிறேன். அவை எனக்காக (வேட்டையாடி)க் கவ்விப் பிடிக்கின்றன (அவற்றை நான் உண்ணலாமா?)" என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் பயிற்சி அளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்பியிருந்தால் (அது வேட்டையாடிக் கொண்டு வருவதை) நீங்கள் உண்ணுங்கள்" என்று பதிலளித்தார்கள்.
நான், "(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலுமா?" என்று கேட்டேன். "(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலும் சரியே (அதை நீங்கள் உண்ணுங்கள்); நீங்கள் அனுப்பாத மற்றொரு நாய் அவற்றுடன் கூட்டுச் சேராதவரை (உண்ணலாம்)" என்றார்கள்.
நான், "இறகு இல்லாத அம்பை ("மிஅராள்") வேட்டைப் பிராணியின் மீது நான் எய்கிறேன். அது வேட்டைப் பிராணியைத் தாக்கிவிடுகிறது (அதை நான் உண்ணலாமா)?" என்று கேட்டேன். "நீங்கள் இறகு இல்லாத அம்பை எய்ய,அது (தனது கூர்முனையால்) குத்தி (வீழ்த்தி)யதை உண்ணுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்குண்டதை உண்ணாதீர்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 34
3900. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நாங்கள் இந்த (வேட்டை) நாய்களின் மூலம் வேட்டையாடும் ஒரு சமுதாயத்தார் ஆவோம்" என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி (அதன் சட்டம் என்னவென்று) வினவினேன்.
அதற்கு அவர்கள், "பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் (வேட்டை) நாய்களை, அல்லாஹ்வின் பெயர் சொல்லி (வேட்டையாட) நீங்கள் அனுப்பியிருந்தால், உங்களுக்காக அவை கவ்விப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம்;அவற்றை அவை கொன்றுவிட்டாலும் சரியே! (ஆனால்,) அந்த நாயே தின்றுவிட்டதை மட்டும் உண்ணாதீர்கள்! ஏனென்றால், அது தனக்காகவே கவ்வி வைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் உங்கள் நாய்களுடன் கூட்டுச்சேர்ந்திருந்தாலும் (அவை வேட்டையாடியவற்றை) உண்ணாதீர்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 34
3901. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இறகு இல்லாத அம்பைக் குறித்து (அதன் மூலம் வேட்டையாடப்பட்ட பிராணியை உண்ணலாமா என)க் கேட்டேன். அதற்கு அவர்கள், "அம்பின் முனைப் பகுதி பிராணியைத் தாக்கியிருந்தால் அதை உண்ணுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதி தாக்கிச் செத்திருந்தால், அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது (போல்) தான். எனவே, அதை உண்ணாதீர்கள்" என்று சொன்னார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், (பயிற்சியளிக்கப்பட்ட) நாய் (மூலம் வேட்டையாடப்பட்ட பிராணியைக்) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அந்த நாயை அனுப்பியிருந்தால் (அது வேட்டையாடிக் கொண்டுவருவதை) நீங்கள் உண்ணலாம். அந்தப் பிராணியிலிருந்து சிறிதளவை அந்த நாய் தின்றுவிட்டிருந்தால், அதை உண்ணாதீர்கள். ஏனென்றால், அது தனக்காகவே கவ்விப் பிடித்திருக்கிறது" என்று பதிலளித்தார்கள்.
"நான் அனுப்பிய நாயுடன் மற்றொரு நாயைக் கண்டேன். அவற்றில் எது அந்தப் பிராணியைக் கவ்விப் பிடித்தது என்று எனக்குத் தெரியவில்லை (அப்போது நான் என்ன செய்வது?)" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால் அதை உண்ணாதீர்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் நாயை மட்டுமே அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்பினீர்கள். மற்றொரு நாயை அல்லாஹ்வின் பெயர் சொல்லி நீங்கள் அனுப்பவில்லை" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இறகு இல்லாத அம்பு (மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி) குறித்துக் கேட்டேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இறகு இல்லாத அம்பு (மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி) குறித்துக் கேட்டேன்" என்றே ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 34
3902. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இறகு இல்லாத அம்பின் மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்துக் கேட்டேன். அவர்கள், "பிராணி அம்பின் கூர்முனையால் தாக்கப்பட்டிருந்தால் அதை உண்ணுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்குண்டு செத்திருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, அதை உண்ணாதீர்கள்)" என்று பதிலளித்தார்கள்.
(பயிற்சியளிக்கப்பட்ட) நாய்கள் மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்தும் அவர்களிடம் நான் கேட்டேன். அவர்கள், "உங்களுக்காக அவை கவ்விப் பிடித்துவைத்து, அதிலிருந்து எதையும் தின்னாமல் இருந்தால் நீங்கள் உண்ணுங்கள். ஏனெனில், (பழக்கப்படுத்தப்பட்ட) நாய் கவ்விப் பிடிப்பதே, (முறைப்படி) அறுப்பதாகிவிடும்.
உங்களது நாயுடன் வேறொரு நாயை நீங்கள் கண்டு, அந்த வேறொரு நாய் உங்கள் நாயுடன் அந்தப் பிராணியைப் பிடித்துக் கொன்றிருக்குமோ என்று நீங்கள் அஞ்சினால், அதை உண்ணாதீர்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் நாயை மட்டுமே அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்பினீர்கள். வேறொரு நாயை அவ்வாறு கூறி நீங்கள் அனுப்பவில்லை" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3903. ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(இராக்கில் உள்ள) "நஹ்ரைன்" எனும் இடத்தில் எங்கள் அண்டை வீட்டாராகவும், உற்ற நண்பராகவும், (வழிபாடுகளில்) மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் இருந்த அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம், "நான் எனது (வேட்டை) நாயை (அல்லாஹ்வின் பெயர் சொல்லி) அனுப்புகிறேன். எனது நாயுடன் வேறொரு நாயை, (வேட்டைப் பிராணியைப்) பிடித்த நிலையில் நான் காண்கிறேன். அவற்றில் எது வேட்டைப் பிராணியைப் பிடித்தது என்பது எனக்குத் தெரியவில்லை (இந்த நிலையில் நான் என்ன செய்வது)?" என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதை உண்ணாதீர்கள். ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்பியது உங்கள் நாயைத்தான். வேறொரு நாயை நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்பவில்லை" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஷஅபீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34