3844. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இரண்டு பேர், ஒருவர் மற்றொருவருக்கு இடையூறு செய்யும் வகையில் நரகத்தில் ஒருபோதும் ஒன்றுசேரமாட்டார்கள்" என்று கூறினார்கள். "அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஓர் இறை நம்பிக்கையாளர் இறைமறுப்பாளனை (அறப்போரில்) கொன்றுவிடுகிறார். பின்னர் அவர் (வழி பிறழ்ந்துவிடாமல் மார்க்கத்தில்) உறுதியோடு நிலைத்திருக்கிறார். (இவரும் இவரால் கொல்லப்பட்ட இறைமறுப்பாளனும் நரகத்தில் ஒருபோதும் இணையமாட்டார்கள்)" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும்.
3845. அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் கடிவாளமிடப்பட்ட ஒட்டகமொன்றைக் கொண்டுவந்து, "இது அல்லாஹ்வின் பாதையில் (தர்மமாகும்)" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமக்கு மறுமை நாளில் இதற்குப் பகரமாக எழுநூறு ஒட்டகங்கள் கிடைக்கும். அவற்றில் ஒவ்வொன்றும் கடிவாளமிடப்பட்டதாக இருக்கும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 38 அல்லாஹ்வின் பாதையில் புறப்படும் அறப்போர் வீரருக்கு வாகனம் உள்ளிட்ட உதவிகள் அளிப்பதன் சிறப்பும் அவர் சென்ற பின் அவரது குடும்பத்தை நல்ல விதமாகக் கவனித்துக்கொள்வதும்.
3846. அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "என் வாகனப்பிராணி மடிந்துவிட்டது. எனவே, நான் ஏறிச்செல்வதற்கு எனக்கு வாகனப்பிராணி தாருங்கள்" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "என்னிடம் (வாகனப்பிராணி) இல்லை" என்று கூறினார்கள். அப்போது மற்றொரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இவரை வாகனத்தில் ஏற்றியனுப்பும் ஒருவரை நான் இவருக்கு அறிவித்துக் கொடுக்கிறேன்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3847. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அஸ்லம்" குலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், "அல்லாஹ்வின் தூதரே! நான் போருக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால், என்னிடம் பயணத்துக்குத் தேவையான எந்த வசதியும் இல்லை" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ இன்ன மனிதரிடம் செல். ஏனெனில், அவர் போருக்குச் செல்வதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு விட்டார்" என்று கூறினார்கள்.
அவ்வாறே அவரிடம் அந்த இளைஞர் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) சொல்கிறார்கள். மேலும், நீங்கள் உங்கள் பயணத்துக்காக ஏற்பாடு செய்திருந்தவற்றை என்னிடம் கொடுக்கும்படி கூறினார்கள்" என்றார். அந்த மனிதர், (தம் வீட்டிலிருந்த பெண்ணிடம்) "இன்ன பெண்ணே! என் பயணத்திற்காக நான் ஏற்பாடு செய்திருந்தவற்றை இவருக்குக் கொடுத்துவிடு. அவற்றில் எதையும் தர மறுக்காதே. அல்லாஹ்வின் மீதாணையாக! அவற்றில் எதையேனும் நீ தர மறுத்தால் அதில் உனக்கு அருள்வளம் (பரக்கத்) அளிக்கப்படாது" என்று கூறினார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3848. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வின் பாதையில் போர்புரியும் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார். யார் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய வீட்டாரின் நலன் காக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார்.
இதை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3849. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அறப்போர் வீரர் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார். யார் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய குடும்பத்தாரைக் கவனித்துக் கொள்கிறாரோ, அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார்.
இதை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3850. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹுதைல்" குலத்தாரில் பனூ லஹ்யான் குடும்பத் தாரை நோக்கிப் படைப் பிரிவொன்றை அனுப்பினார்கள். அப்போது, "உங்களில் ஒவ்வோர் இரண்டு பேரில் ஒருவர் (ஒவ்வொரு குலத்தாரிலும் பாதிப்பேர் படைப்பிரிவுக்காகப்) புறப்படட்டும். அவர்கள் இருவருக்கும் (சமமான) நற்பலன் கிடைக்கும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படைப்பிரிவொன்றை அனுப்பினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸின் கருத்துப்படியே வந்துள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3851. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பனூ லஹ்யான்" குலத்தாரை நோக்கிப் படைப் பிரிவொன்றை அனுப்பியபோது, "உங்களில் ஒவ்வோர் இரண்டு பேரிலும் ஒருவர் புறப்படட்டும்" என்று கூறினார்கள். பிறகு, (படைப்பிரிவில் செல்லாமல் ஊரில்) தங்கியவரிடம் "உங்களில் யார் படை வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய குடும்பத்தார் விஷயத்திலும் அவரது செல்வம் விஷயத்திலும் நலம் பேணி நடந்துகொள்கிறாரோ அவருக்கும் புறப்பட்டுச் சென்ற படைவீரருக்குக் கிடைக்கும் நற்பலனில் பாதியளவைப் போன்றது கிடைக்கும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 39 அறப்போர் வீரர்களின் துணைவியருக்குள்ள மதிப்பும் அத்துணைவியர் விஷயத்தில் வீரர்களுக்குத் துரோகமிழைப்பவர் அடையும் தண்டனையும்.
3852. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போருக்குச் செல்லாமல் (ஊரில்) இருப்போர், போருக்குச் சென்ற வீரர்களின் துணைவியரைத் தம் தாயை மதிப்பதைப் போன்று மதிக்க வேண்டும். அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய குடும்பத்தாரின் நலம் காக்கும் ஒருவர், துணைவியர் விஷயத்தில் அவருக்குத் துரோகமிழைத்தால் அவ்வீரருக்காக அவர் மறுமை நாளில் நிறுத்தப்பட்டே தீருவார். அப்போது அவருடைய நற்செயல்(களின் நன்மை)களில் தாம் நாடிய அளவுக்கு எடுத்துக்கொள்வார். (அப்போது அவருடைய நன்மைகள் அனைத்தையுமே அவர் எடுத்துக் கொள்வதைப் பற்றி) நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் புரைதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3853. மேற்கண்ட ஹதீஸ் புரைதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவ்வீரரிடம், "இவருடைய நற்செயல்களிலிருந்து நீங்கள் விரும்பிய அளவுக்கு எடுத்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லப்படும் என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் திரும்பி, "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" எனக் கேட்டார்கள்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 33
பாடம் : 40 (உடல் ஊனம் போன்ற) தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்ளும் கடமை கிடையாது.
3854. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இறைநம்பிக்கையாளர்களில் (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரும் அல்லாஹ்வின் பாதையில் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாக மாட்டார்" (4:95) எனும் இந்த இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டுவரச் சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் எலும்பைக் கொண்டுவந்து அந்த வசனத்தை எழுதிக் கொண்டார்கள்.
அப்போது (அங்கிருந்த கண் பார்வையற்ற) அப்துல்லாஹ் பின் உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள், தமது (கண் பார்வையற்ற) குறை குறித்து முறையிட்டார்கள். அப்போது, "இறை நம்பிக்கையாளர்களில் தக்க காரணமின்றி (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கி விடுவோரும்..." என்ற (விதிவிலக்குடன் கூடிய) முழு வசனம் அருளப்பெற்றது.
இந்த (4:95ஆவது) வசனம் தொடர்பாக ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களும் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றே அறிவித்துள்ளார்கள்.
இந்த ஹதீஸ் பராஉ (ரலி) மற்றும் ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோர் வழியாக மொத்தம் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3855. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இறைநம்பிக்கையாளர்களில் (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரும் அல்லாஹ்வின் பாதையில் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாக மாட்டார்" (4:95) எனும் வசனம் அருளப்பெற்றபோது, அப்துல்லாஹ் பின் உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அது குறித்துப்) பேசினார்கள். அப்போது "தக்க காரணமின்றி" என்பது அருளப்பெற்றது.
அத்தியாயம் : 33
பாடம் : 41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம்.
3856. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), "நான் கொல்லப்பட்டால் எங்கே இருப்பேன், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "சொர்க்கத்தில்" என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர் தமது கையிலிருந்த பேரீச்சங்கனிகளை உடனே தூக்கி எறிந்துவிட்டு (களத்தில் குதித்து), தாம் கொல்லப்படும்வரை போரிட்டார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் சுவைத் பின் சஈத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உஹுதுப் போரின்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (மேற்கண்டவாறு) கேட்டார்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3857. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் "பனுந் நபீத்" எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவீர்கள் என நான் உறுதிமொழிகிறேன்" என்று கூறிவிட்டு, (களத்தில்) முன்னேறிச் சென்று கொல்லப்படும்வரை போரிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவர் குறைவாக நற்செயல் புரிந்தார்; நிறைவாக நற்பலன் வழங்கப்பெற்றார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீ ஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பனுந் நபீத் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 33
3858. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிரியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற) அபூ சுஃப்யானின் வணிகக் குழு என்ன ஆயிற்று எனக் கண்டறிய புசைசா பின் அம்ர் அல்அன்சாரீ (ரலி) அவர்களை உளவாளியாக அனுப்பிவைத்தார்கள். அவர் சென்றுவிட்டு (திரும்பி) வந்தபோது, என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் தவிர வேறெவரும் வீட்டில் இருக்கவில்லை. ("அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலரையும் தவிர" என்று கூறினார்களா என எனக்குத் தெரியவில்லை என்று ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் உள்ளது.) அவர் வந்து (அபூசுஃப்யானின் வணிகக் குழு மக்காவை நோக்கிப் புறப்பட்டுவிட்டது" என்ற) தகவலைச் சொன்னார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து (எங்களிடம்) பேசினார்கள். "நமக்கு ஒரு முக்கிய அலுவல் உண்டு. யாரிடம் வாகனம் (ஒட்டகம்) உள்ளதோ அவர் நம்முடன் பயணமாகட்டும்" என்று சொன்னார்கள். உடனே சிலர் மதீனாவின் மேட்டுப் பகுதி கிராமத்துக்குச் சென்று தம் ஒட்டகங்களுடன் வர அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரலாயினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை, (இங்கு) யாரிடம் ஒட்டகம் தயாராக உள்ளதோ அவரைத் தவிர (வேறெவரும் புறப்பட வேண்டாம்)" என்று கூறிவிட்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (சில) நபித்தோழர்களும் புறப்பட்டனர். அவர்கள் இணைவைப்பாளர்களை முந்திக்கொண்டு "பத்ர்" வந்துசேர்ந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நான் முன்னிலை வகிக்காமல் (என்னிடம் கேட்காமல்) உங்களில் யாரும் எதற்காகவும் முந்த வேண்டாம்" என்று கூறினார்கள்.
இணைவைப்பாளர்கள் நெருங்கிவந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கு எழு(ந்து தயாராகு)ங்கள்" என்று கூறினார்கள். உடனே உமைர் பின் அல்ஹுமாம் அல்அன்சாரீ (ரலி) அவர்கள், "வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கமா?" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று பதிலுரைக்க, "ஆஹா, ஆஹா" என்று உமைர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆஹா, ஆஹா என்று நீர் கூறக் காரணமென்ன?" என்று கேட்டார்கள். உமைர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! வேறொன்றுமில்லை, அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகளில் நானும் ஒருவனாக இருக்கவேண்டும் என்ற ஆசைதான் (அவ்வாறு நான் சொல்லக் காரணம்)" என்றார்.
அதற்கு "சொர்க்கவாசிகளில் நீரும் ஒருவர்தாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உமைர் (ரலி) அவர்கள் தமது அம்புக் கூட்டிலிருந்து பேரீச்சம் பழங்களை எடுத்து, அவற்றில் சிலவற்றை உண்ணத் தொடங்கினார்கள். பிறகு, "இந்தப் பேரீச்சம் பழங்களை உண்டு முடிக்கும்வரை நான் உயிர் வாழ்ந்தால் அது ஒரு நீண்ட நெடிய வாழ்க்கையாகிவிடுமே!" என்று கூறியபடி தம்மிடமிருந்த அந்தப் பேரீச்சம் பழங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, எதிரி(களை நோக்கிச் சென்று அவர்)களுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3859. அபூபக்ர் பின் அப்தில்லாஹ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (அபூமூசா அல்அஷ்அரீ - ரலி) அவர்கள் (ஒரு போரில்) எதிரிகளின் முன்னிலையில் இருந்தார்கள். அப்போது "சொர்க்கத்தின் வாசல்கள் வாட்களின் நிழலுக்குக் கீழே உள்ளன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
உடனே நலிந்த தோற்றத்தில் இருந்த ஒரு மனிதர் எழுந்து, "அபூமூசா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நீர் கேட்டீரா?" என்று வினவினார். அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள் "ஆம்" என்றார்கள். உடனே அந்த மனிதர் தம் தோழர்களிடம் திரும்பிச் சென்று, "உங்களுக்கு நான் என் (இறுதி) சலாமைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார். பிறகு தமது வாள் உறையைக் கிழித்துப் போட்டுவிட்டு, எதிரிகளை நோக்கி நடந்தார். அந்த வாளால் போரிட்டு வீரமணமும் அடைந்தார்.
அத்தியாயம் : 33
3860. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்களில் சிலர் (ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ லஹ்யான் ஆகிய கூட்டத்தார்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "எங்களுக்குக் குர்ஆனையும் "சுன்னா"வையும் கற்பிப்பதற்காக எங்களுடன் சிலரை அனுப்பிவையுங்கள்" என்று கேட்டுக்கொண்டனர். அதற்கிணங்க அன்சாரிகளில் எழுபது பேரை அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். அவர்கள் குர்ஆன் அறிஞர்கள் (அல்குர்ராஉ) எனப்படுவர். அவர்களில் என் தாய்மாமா ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்களும் ஒருவர் ஆவார்.
அவர்கள் (எழுபது பேரும்) இரவில் குர்ஆனை ஓதுவார்கள்; ஒருவருக்கொருவர் கற்றுக் கொடுக்கவும் கற்றுக்கொள்ளவும் செய்வார்கள். பகல் நேரங்களில் (அருந்துவோருக்காகவும், அங்கத்தூய்மை செய்வோருக்காகவும்) தண்ணீர் கொண்டுவந்து (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைப்பார்கள். விறகு சேகரித்து வந்து அதை விற்றுக் காசாக்கி அதன் மூலம் திண்ணைவாசிகளுக்கும் ஏழைகளுக்கும் உணவு வாங்கிக் கொடுப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இவர்களை அனுப்பியபோது, அவர்கள் (குறிப்பிட்ட) அந்த இடத்திற்குப் போய்ச் சேர்வதற்கு முன்பே அவர்களை இடைமறித்து, ("பிஃரு மஊனா" எனும் இடத்தில்) அனைவரையும் அக்கூட்டத்தார் கொன்றுவிட்டனர்.
(இறக்கும் தருவாயில்) அவர்கள், "இறைவா! நாங்கள் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டோம். உன்னை நாங்கள் உவந்துகொண்டோம்; எங்களை நீயும் உவந்துகொண்டாய் என்று எங்களைப் பற்றி எங்கள் நபியிடம் தெரிவித்துவிடுவாயாக!" என்று கூறினர்.
என் தாய்மாமா ஹராம் (ரலி) அவர்களுக்குப் பின்னால் ஒரு மனிதன் வந்து ஈட்டியால் குத்திவிட்டான். அது அவர்களை ஊடுருவிச் சென்றது. அப்போது ஹராம் (ரலி) அவர்கள், "கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்" என்று கூறினார்கள்.
(இறையறிவிப்பின் மூலம் இது குறித்து அறிந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்களிடம், "உங்கள் சகோதரர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் (இறக்கும் தருவாயில்) "இறைவா! நாங்கள் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டோம். உன்னை நாங்கள் உவந்து கொண்டோம்; எங்களை நீயும் உவந்துகொண்டாய்" என எங்கள் நபியிடம் தெரிவித்துவிடுவாயாக என்று கூறினர்" எனத் தெரிவித்தார்கள்.
அத்தியாயம் : 33
3861. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு யாருடைய பெயர் சூட்டப்பெற்றுள்ளதோ அந்த என் தந்தையின் சகோதரர் (அனஸ் பின் அந்நள்ர் -ரலி) அவர்கள் பத்ருப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கலந்துகொள்ளவில்லை. அது அவர்களுக்கு மனவேதனையை அளித்தது.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட முதல் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டேனே! இனிவரும் காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் களம் காணும் ஒரு வாய்ப்பை அல்லாஹ் எனக்குத் தந்தால் நான் செய்யப்போவதை (என் வீரத்தையும் தியாகத்தையும்) அல்லாஹ் பார்த்துக்கொள்வான்" என்று கூறினார். (இதைத் தவிர விளக்கமாக வேறெதையும் அவர் கூறவில்லை.) இதைத் தவிர வேறெதையும் சொல்ல அவர் அஞ்சினார். (சொல்லிவிட்டுச் செய்ய முடியாமற் போய்விட்டால் என்னாவது என்ற பயமே அதற்குக் காரணம்.)
பின்னர் அவர் உஹுதுப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கலந்து கொண்டார். (போர்க்களத்தை நோக்கி அவர் சென்றபோது) எதிரில் சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் (பின்வாங்கி) வர(க் கண்டு), "அபூஅம்ரே! எங்கே (செல்கிறீர்)?" என்று கேட்டுவிட்டு, "இதோ! சொர்க்கத்தின் நறுமணத்தை உஹுத் மலையிலிருந்து நான் பெறுகிறேன்" என்று கூறினார்.
பிறகு எதிரிகளுடன் போரிட்டு அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள் வீரமரணமடைந்தார்கள். அவரது உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப் பட்டும் எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் காணப்பட்டன. அவர்களுடைய சகோதரியும் என்னுடைய அத்தையுமான ருபய்யிஉ பின்த் அந்நள்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய சகோதரரை, நான் அவருடைய விரல் (நுனி)களை வைத்தே என்னால் அடையாளம் காண முடிந்தது. (அந்த அளவுக்கு அவரது உடல் எதிரிகளால் சிதைக்கப்பட்டிருந்தது.)
"அல்லாஹ்விடம் எதைப் பற்றி உறுதிமொழி எடுத்தார்களோ அதை உண்மைப்படுத்தியோரும் இறைநம்பிக்கை கொண்டோரில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறந்து "வீரமரணம்" எனும்) தமது இலட்சியத்தை அடைந்துவிட்டனர். (அதை) எதிர்பார்த்துக் கொண்டிருப்போரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் சிறிதளவும் (வாக்கை) மாற்றிக்கொள்ளவில்லை" (33:23) எனும் இந்த வசனம் அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள் விஷயத்திலும் அவர்களுடைய தோழர்களின் விஷயத்திலுமே அருளப்பெற்றது என்றே மக்கள் கருதிவந்தனர்.
அத்தியாயம் : 33
பாடம் : 42 அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிட்டவரே அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் ஆவார்.
3862. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் போரில் கிடைக்கும் செல்வங்களுக்காகப் போரிடுகிறார். மற்றொரு மனிதர் புகழப்படுவதற்காகப் போரிடுகிறார். இன்னொரு மனிதர் தமது தகுதியைப் பிறர் பார்க்கட்டும் என்பதற்காகப் போரிடுகிறார் -இவர்களில் யார் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிட்டவரே அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் ஆவார்" என விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3863. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "ஒரு மனிதர் வீரத்தை வெளிக்காட்டப் போரிடுகிறார். மற்றொருவர் இனமாச்சரியத்திற்காகப் போரிடுகிறார். இன்னொருவர் பிறருக்குக் காட்டிக் கொள்வதற்காகப் போரிடுகிறார். -இவர்களில் இறைவழியில் போரிடுகின்றவர் யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிட்டவரே அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல் அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் வீரத்தை வெளிக்காட்டப் போரிடுகிறார்" என்று கேட்டோம் என ஹதீஸ் துவங்குகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 33