பாடம் : 13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் அவனை வீழ்த்தியவருக்கே உரியவை ஆகும்.
3604. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுனைன் போர் நடந்த ஆண்டில் (அப்போருக்காக) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். (எதிரிகளைப் போர்க்களத்தில்) நாங்கள் சந்தித்தபோது, (ஆரம்பத்தில்) முஸ்லிம்களுக்குத் தோல்வி பயம் ஏற்பட்டது.
அப்போது இணைவைப்பாளர்களில் ஒருவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, அவரைக் கொல்ல முயல்வதை நான் கண்டேன். நான் அவனிடம் சுற்றிவந்து, அவனுக்குப் பின்பக்கம் சென்று, அவனது பிடரி நரம்பில் வெட்டிவிட்டேன்.
உடனே அவன் (அந்த முஸ்லிமை விட்டுவிட்டு) என்னைத் தாவியணைத்து ஓர் இறுக்கு இறுக்கினான். பிராண வாயு பிரியும் நிலைக்கு நான் உள்ளானேன். பின்னர் மரணம் அவனைப் பிடித்துக்கொள்ளவே அவன் என்னை விட்டுவிட்டான்.
பின்னர் நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களைச் சென்றடைந்தேன். அப்போது அவர்கள் "மக்களுக்கு என்ன நேர்ந்தது? (ஏன் சிதறி ஓடுகிறார்கள்?)" என்று கேட்டார்கள். அதற்கு நான், "(எல்லாம்) அல்லாஹ்வின் ஏற்பாடு" என்று பதிலளித்தேன். பிறகு (பின்வாங்கி ஓடிய) மக்கள் (போர்க்களத்திற்கு) திரும்பி வந்தார்கள். (தீரத்துடன் போராடி வென்றார்கள்.)
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டு, "போரில் எதிரி ஒருவனைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் (உடலில் கிடந்த ஆடை, ஆயுதம் போன்ற) உடைமைகள் உரியவை" என்று கூறினார்கள்.
அப்போது நான் எழுந்து நின்று, "(நான் எதிரி ஒருவனை வீழ்த்தியதற்கு) எனக்குச் சாட்சியம் கூறுபவர் யார்?" என்று கேட்டு விட்டு உட்கார்ந்துகொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீண்டும் ("போரில் எதிரி ஒருவனைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடைமைகள் உரியவை" என்று) கூறினார்கள்.
உடனே நான் (மறுபடியும்) எழுந்து "(நான் எதிரி ஒருவனை வீழ்த்தியதற்கு) எனக்குச் சாட்சியம் கூறுபவர் யார்?" என்று கேட்டேன்; பிறகு உட்கார்ந்துகொண்டேன். பிறகு, மூன்றாவது தடவையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்பு கூறியதைப் போன்றே கூறினார்கள்.
உடனே நான் எழுந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னைப் பார்த்து), "உங்களுக்கு என்ன வேண்டும், அபூகத்தாதா?" என்று கேட்டார்கள். நடந்ததை அவர்களிடம் நான் எடுத்துரைத்தேன்.
அப்போது மக்களில் ஒருவர், "இவர் சொல்வது உண்மைதான், அல்லாஹ்வின் தூதரே! (இவரால்) கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் என்னிடம் உள்ளன. அவர் தமது உரிமையை (எனக்கு) விட்டுக்கொடுக்கச் சொல்லுங்கள்" என்று கூறினார்.
அப்போது அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் போரிட்டு (எதிரி ஒருவனை வீழ்த்திவிட்டு) வர, அவரால் கொல்லப்பட்ட எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருளை உனக்குக் கொடுக்கும் முடிவுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செல்லமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உண்மைதான். (எதிரியை வீழ்த்திய) இவரிடமே அந்தப் பொருட்களைக் கொடுத்துவிடு" என்று சொன்னார்கள்.
அவ்வாறே அவர் அதை என்னிடம் கொடுத்தார். (அந்த வகையில் எனக்குக் கவச உடையொன்று கிடைத்தது.) அந்தக் கவச உடையை விற்றுவிட்டு பனூ சலமா குலத்தார் வாழும் பகுதியில் ஒரு பேரீச்சந்தோட்டத்தை வாங்கினேன். அதுதான் இஸ்லாத்தைத் தழுவிய பின் நான் சேகரித்த முதல் சொத்தாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் லைஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அபூபக்ர் (ரலி) அவர்கள் "இல்லை, அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கத்தை விட்டுவிட்டு, குறைஷியரில் உள்ள குழிமுயல் குட்டிக்கு அதைக் கொடுக்க மாட்டார்கள்" என்று கூறினார்கள்" என இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3605. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ருப் போரின்போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப் பக்கமும் இடப்பக்கமும் பார்த்தேன். என்னருகே (இருபக்கங்களிலும்) இளம் வயது அன்சாரிச் சிறுவர்கள் இருவர் நின்றுகொண்டிருந்தனர்."(இவர்களுக்கிடையே வந்து நிற்கிறோமே!) இவர்களைவிட வலுவானவர்களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா!"என்று நான் எண்ணினேன்.
அப்போது அவர்களில் ஒருவர் என்னைத் தொட்டுணர்த்தி "என் தந்தையின் சகோதரரே! (என மரியாதை நிமித்தம் அழைத்து) நீங்கள் அபூஜஹ்லை அறிவீர்களா?" என்று கேட்டார்.
நான், "ஆம் (அறிவேன்). உமக்கு அவனிடம் என்ன வேலை, என் சகோதரர் மகனே!" என்று கேட்டேன்.
அதற்கு அந்த இளவல், "அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஏசுகிறான் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் அவனைப் பார்த்தால், எங்களில் ஒருவர் இறக்கும்வரை அவனது உடலைவிட்டு எனது உடல் பிரியாது (ஒன்று நான், அல்லது அவன் மரணிக்கும்வரை அவனுடன் போரிட்டுக்கொண்டேயிருப்பேன்)" என்று கூறினார்.
இதைக் கேட்டு நான் வியந்துபோனேன். அப்போது மற்றோர் இளவலும் என்னைத் தொட்டுணர்த்தி முதலாமவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம்தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூஜஹ்ல் மக்களிடையே (பம்பரமாகச்) சுற்றி வருவதைக் கண்டு, "அதோ தெரிகிறானே? அவன்தான் நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி" என்று கூறினேன். உடனே அவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அவனை நோக்கிச் சென்று தம்மிடமிருந்த வாட்களால் அவனை வெட்டிக் கொன்றார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூஜஹ்லைக் கொன்று விட்ட செய்தியைத் தெரிவித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் யார் அவனைக் கொன்றார்?" என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் "நான்தான் கொன்றேன்" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் வாட்க(ளில் படிந்த இரத்தக் கறைக)ளைத் துடைத்துவிட்டீர்களா?" என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும் "இல்லை" என்று பதிலுரைத்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விரு வாட்களையும் கூர்ந்து பார்த்துவிட்டு, "நீங்கள் இருவருமே அவனை வெட்டிக்கொண்டிருக்கிறீர்கள்" என்று கூறினார்கள்.
(முதலில் வெட்டியவர் என்ற அடிப்படையில்) "முஆத் பின் அம்ர் பின் அல்ஜமூஹுக்கே அபூஜஹ்லின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் (சலப்) உரியவை" என்று தீர்ப்பளித்தார்கள். முஆத் பின் அம்ர் பின் அல்ஜமூஹ் (ரலி) மற்றும் முஆத் பின் அஃப்ரா (ரலி) ஆகிய இருவருமே அந்த இளவல்கள் ஆவர்.
அத்தியாயம் : 32
3606. அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மூத்தா போரின்போது யமன் பழங்குடி இனத்தாரான) "ஹிம்யர்" குலத்தாரில் ஒருவர் (ரோம பைஸாந்திய) எதிரிகளில் ஒருவரைக் கொன்றுவிட்டு, தம்மால் கொல்லப்பட்டவரின் உடைமைகளை எடுத்துக்கொள்ள விரும்பினார்.
ஆனால், காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் (அவற்றை முழுமையாகத்) தர மறுத்து விட்டார்கள். அப்போது காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களே அவர்களுக்குத் தளபதியாக இருந்தார்கள்.
எனவே, நான் (மதீனா திரும்பியதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் காலிதிடம் "அவர், தாம் கொன்ற எதிரியின் உடைமைகளை எடுத்துக்கொள்ளவிடாமல் நீர் தடுக்கக் காரணமென்ன?" என்று வினவினார்கள். அதற்கு "அவை அதிகமாக இருப்பதாக நான் கருதினேன், அல்லாஹ்வின் தூதரே! (ஒரே ஆளுக்கு அவ்வளவையும் கொடுப்பது பொருத்தமாக இராது)" என்று காலித் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவற்றை அவரிடமே கொடுத்துவிடுங்கள்" என்று கூறினார்கள்.
பிறகு காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் (அங்கு அமர்ந்திருந்த) என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் காலித் (ரலி) அவர்களது மேல்துண்டைப் பிடித்து இழுத்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உம்மைப் பற்றிக் கூறுவேன் என்று நான் கூறியபடி செய்துவிட்டேன் அல்லவா!" என்று கூறினேன்.
இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். "காலிதே! அவருக்குக் கொடுக்காதீர். காலிதே! அவருக்குக் கொடுக்காதீர். என்னால் நியமிக்கப்பெற்ற தளபதிகளை எனக்காக விட்டுவைக்கமாட்டீர்களா? உங்களது நிலையும் (உங்களுக்குத் தளபதிகளாக நியமிக்கப்பட்ட) அவர்களது நிலையும் ஒட்டகங்களையோ ஆடுகளையோ மேய்க்குமாறு நியமிக்கப்பட்ட (இடையன்) ஒருவனின் நிலையைப் போன்றதாகும். அவன் அவற்றை (ஓட்டிச் சென்று) மேய்த்தான். பிறகு தண்ணீர் புகட்டும் நேரம் வரும்வரை காத்திருந்து, நீர்நிலை ஒன்றுக்கு அவற்றை ஓட்டிச் சென்றான்.
அவை அதில் தண்ணீர் குடிக்கத் துவங்கின. அப்போது (நீர்நிலையின் மேற்பகுதியில் உள்ள) தெளிந்த நீரை அவை குடித்துவிட்டு, கலங்கலான நீரை விட்டுவைத்தன. (அவ்வாறுதான்) தெளிந்த நீர் உங்களுக்கும் கலங்கலான நீர் உங்கள் தளபதிகளுக்கும் உரியவையா?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 32
3607. மேற்கண்ட ஹதீஸ் அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "மூத்தா போரின்போது ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றவர்களில் நானும் இருந்தேன். படையினருக்கு உதவி செய்ய யமனிலிருந்து ஒருவர் என்னுடன் வந்திருந்தார்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
ஆயினும், அதில் "அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் "காலித் (ரலி) அவர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரியைக் கொன்றவருக்கே அவரால் கொல்லப்பட்டவரின் உடைமைகள் உரியவை எனத் தீர்ப்பளித்துள்ளதை நீங்கள் அறியவில்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு காலித் (ரலி) அவர்கள் "ஆம்; ஆயினும், நான் அதை அதிகமாகக் கருதுகிறேன்" என்று விடையளித்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3608. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "ஹவாஸின்" குலத்தாருடன் போரிடப் புறப்பட்டோம். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் காலை உணவு உண்டு கொண்டு இருந்தபோது, சிவப்பு ஒட்டகம் ஒன்றில் (உளவு பார்ப்பதற்காக எதிரிகளில்) ஒரு மனிதர் வந்து, ஒட்டகத்தை மண்டியிட வைத்தார். பிறகு ஒட்டகத்திலிருந்த பையிலிருந்து கயிறு ஒன்றை எடுத்து ஒட்டகத்தைக் கட்டிப்போட்டார்.
பிறகு மக்களுடன் சேர்ந்து காலை உணவு உட்கொள்ள வந்தார்; எங்களை நோட்டமிட ஆரம்பித்தார். எங்களிடையே பலவீனமும் வாகனப் பற்றாக்குறையும் இருந்தன. எங்களில் சிலர் நடைப்பயணிகளாக இருந்தனர். பிறகு அவர் (அங்கிருந்து) வேகமாகப் புறப்பட்டு தமது ஒட்டகத்திடம் சென்று, அதன் கயிற்றை அவிழ்த்துவிட்டு, அதை மண்டியிடச் செய்து அதிலேறி அமர்ந்தார்.
பிறகு ஒட்டகத்தைக் கிளப்பி அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டார். (அவர் உளவு பார்க்க வந்தவர் என்பதை அறிந்த முஸ்லிம்களில்) ஒருவர் சாம்பல் நிற ஒட்டகத்தில் ஏறி அவரைப் பின்தொடர்ந்தார்.
நானும் வேகமாகப் புறப்பட்டுச் சென்று, (பின்னால் சென்ற அம்மனிதரின்) ஒட்டகத்திற்கு அருகில் சென்றேன். பிறகு முன்னேறிச் சென்று, அந்தச் சிவப்பு ஒட்டகத்திற்கு அருகில் இருந்தேன். பிறகு இன்னும் சற்று முன்னேறிச் சென்று,அந்தச் சிவப்பு ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்து, அதை மண்டியிடச் செய்தேன்.
அவ்வொட்டகம் முழங்காலை மடித்து பூமியில் அமர்ந்ததும் எனது உறையிலிருந்த வாளை உருவி அந்த மனிதரின் தலையில் செலுத்தினேன். அந்த மனிதர் சரிந்து விழுந்தார். பிறகு அந்த ஒட்டகத்தை அதன் சிவிகையுடனும் மற்ற ஆயுதங்களுடனும் ஓட்டிக்கொண்டு வந்தேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடனிருந்த மக்களும் என்னை எதிர்கொண்டார்கள். "அவனைக் கொன்றவர் யார்?" என்று நபியவர்கள் கேட்டார்கள். மக்கள் "(சலமா) இப்னுல் அக்வஉதாம் (அவனைக் கொன்றார்)" என்று பதிலளித்தனர். "இவருக்கே அவனுடைய உடைமைகள் அனைத்தும் உரியவை" என்று நபியவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 14 போர்ச் செல்வங்களில் சிலருக்குக் கூடுதலாக வழங்குவதும், போர்க் கைதிகளை ஒப்படைத்துவிட்டு முஸ்லிம்களை (எதிரிகளிடமிருந்து) விடுவிப்பதும்.
3609. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் "(பனூ) ஃபஸாரா" குலத்தார்மீது போரிடப் புறப்பட்டோம். எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக இருந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எங்களுக்குத் தளபதியாக நியமித்தார்கள்.
எங்களுக்கும் (ஃபஸாரா குலத்தாரின்) நீர் நிலைக்குமிடையே ஒரு மணி நேரப்பயணத் தொலைவு இருந்தபோது,இரவின் இறுதி நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களை ஓய்வெடுக்கச் சொன்னார்கள்.
பின்னர் (காலைத் தொழுகைக்குப் பின்) பல்வேறு திசைகளிலிருந்து அதிரடித் தாக்குதல் தொடுத்தோம். அப்போது (ஹவாஸின் குலத்தாரின்) நீர்நிலைக்கு வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அங்கு சிலரை வெட்டி வீழ்த்தினார்கள்;வேறுசிலரைச் சிறைப்பிடித்தார்கள்.
அப்போது நான் (எதிரிகளில்) ஒரு கூட்டத்தைப் பார்த்தேன். அவர்களில் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் என்னை முந்திக்கொண்டு (என்னிடமிருந்து தப்பி) மலைக்குச் சென்றுவிடுவார்களோ என்று நான் அஞ்சினேன். உடனே அவர்களுக்கும் அந்த மலைக்குமிடையே ஓர் அம்பைப் பாய்ச்சினேன். அந்த அம்பைப் பார்த்ததும் அவர்கள் நின்றுவிட்டனர்.
உடனே அவர்களைப் பிடித்துக் கொண்டுவந்தேன். அவர்களிடையே பனூ ஃபஸாரா குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியும் இருந்தாள். அவளது உடலில் தோலினாலான "கஷ்உ" ஒன்று இருந்தது. ("கஷ்உ" என்பதற்கு "விரிப்பு" என்று பொருள்.) அவளுடன் அவளுடைய மகளும் இருந்தாள். அவள் அரபியரிலேயே அழகிய பெண் ஆவாள். அவர்களைப் பிடித்துக்கொண்டு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் அவளுடைய மகளை எனக்குக் கூடுதல் பங்காக வழங்கினார்கள்.
இந்நிலையில் நாங்கள் (மதீனாவுக்கு) வந்தோம். நான் அவளுக்காக ஆடையைக்கூடக் களைந்திருக்கவில்லை. (தாம்பத்திய உறவு கொள்ளவில்லை. மதீனாவின்) கடைத் தெருவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தபோது, "சலமா! அப்பெண்ணை என்னிடம் கொடுத்துவிடு" என்று கூறினார்கள். நான் "அல்லாஹ்வின் தூதரே! அவள் என்னைக் கவர்ந்துவிட்டாள். நான் அவளுக்காக ஆடையைக்கூட களைந்திருக்க வில்லை" என்று கூறிவிட்டேன்.
பிறகு மறுநாள் கடைத் தெருவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்த போதும் "சலமா! அப்பெண்ணை என்னிடம் ஒப்படைத்துவிடுவாயாக! உன் தந்தை (உன்னைப் போன்ற மகனைப் பெற்றெடுத்ததற்காக) அல்லாஹ்வுக்கே (நன்றி)" என்று கூறினார்கள்.
நான் "அல்லாஹ்வின் தூதரே! அவள் உங்களுக்கே உரியவள் (அவளை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்). அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவளுக்காக ஆடையைக்கூட களைந்திருக்கவில்லை" என்று கூறினேன்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளை மக்காவாசிகளிடம் அனுப்பிவைத்து, மக்காவில் கைதிகளாகப்பிடித்துவைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களில் சிலரை விடுவித்தார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 15 போரிடாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம்.
3610. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் ஊருக்கு நீங்கள் சென்று, அங்கு நீங்கள் தங்கி (போரிடாமல் அவர்களின் செல்வங்களைக் கைப்பற்றி)னால், அதிலுள்ள உங்களின் பங்கு (நன்கொடையாக உங்களுக்கே) வந்துசேரும்.
ஓர் ஊரார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தால் (அவர்கள்மீது தாக்குதல் தொடுத்து அவர்களின் செல்வங்களைக் கைப்பற்றினால்), அதில் ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் சேரும். பின்னர் அ(வற்றில் மிஞ்சுவ)து உங்களுக்கு உரியதாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3611. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ நளீர் (யூதக்) குலத்தாரின் செல்வங்கள், அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவை ஆகும். அதற்காக முஸ்லிம்கள் குதிரைகளையோ ஒட்டகங்களையோ ஓட்டிச் செல்லவில்லை (போர் செய்திருக்கவில்லை). அவை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியவையாக இருந்தன. அதிலிருந்துதான் நபியவர்கள் தம் வீட்டாருக்கு ஆண்டுச் செலவுக்குக் கொடுத்துவந்தார்கள். பிறகு மீதியை அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்கான ஆயத்தப் பொருட்கள் வாங்க,ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டுவந்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3612. மாலிக் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் (கலீஃபா) உமர் பின் அல்கத் தாப் (ரலி) அவர்கள் ஆளனுப்பினார்கள். நண்பகல் நேரத்தில் நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் தமது இல்லத்தில் ஒரு கட்டிலில் விரிப்பு ஏதுமின்றி ஈச்சம் பாயில் ஒரு தோல் தலையணையின் மீது சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள்.
அப்போது அவர்கள் என்னிடம் (என் பெயரைச் சுருக்கி) "மால்! உங்கள் குலத்தாரிலுள்ள சில குடும்பத்தார் (என்னிடம்) விரைந்து வந்தனர். அவர்களுக்குச் சிறிதளவு நன்கொடைகளை வழங்குமாறு உத்தரவிட்டேன். அதை நீங்கள் பெற்றுச் சென்று, அவர்களிடையே பங்கிட்டுக் கொடுங்கள்" என்று கூறினார்கள்.
நான், "இந்தப் பொறுப்பை வேறெவரிடமாவது நீங்கள் ஒப்படைத்தால் நன்றாயிருக்குமே!" என்று சொன்னேன். அதற்கு "மாலே! நீங்களே அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
அப்போது (உமர் (ரலி) அவர்களின் மெய்க்காவலர்) யர்ஃபஉ என்பார் வந்து, "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் (தங்களைச் சந்திக்க வந்துள்ளனர். தாங்கள் அவர்களைச்) சந்திக்க அனுமதியளிக்கிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் "ஆம்" என அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். அவர்கள் அனைவரும் உள்ளே வந்(து, அமர்ந்)தனர்.
பிறகு (சற்று நேரம் கழித்து) யர்ஃபஉ வந்து, "அப்பாஸ் (ரலி) அவர்களும் அலீ (ரலி) அவர் களும் (தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். அவர்களைச்) சந்திக்க அனுமதிக்கிறீர்களா?" என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள் "ஆம்"என்று கூறி அவ்விருவருக்கும் அனுமதி அளித்தார்கள்.
அப்பாஸ் (ரலி) அவர்கள், "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் பொய்யரும் பாவியும் நாணயமற்றவரும் மோசடிக்காரருமான (என் சகோதரர் மகனான) இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்" என்று சொன்னார்கள்.
அப்போது (உஸ்மான் (ரலி) அவர்களும் உடன்வந்திருந்த அவர்களுடைய நண்பர்களும் அடங்கிய) அக்குழுவினர், "ஆம்;இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (இந்த) இருவருக்கு மிடையே தீர்ப்பளித்து ஒருவரது பிடியிலிருந்து மற்றவரை விடுவித்துவிடுங்கள்" என்று கூறினார்கள். (இதற்காகத்தான் இவ்விருவரும் அக்குழுவினரை முன்கூட்டியே அனுப்பி வைத்திருந்தனர் என்று எனக்குத் தோன்றியது.)
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "இருவரும் பொறுமையாக இருங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நபிமார்களான எங்களுக்கு) யாரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே" என்று சொன்னதை நீங்கள் அறிவீர்களா?" என்று (அக்குழுவினரிடம்) கேட்டார்கள். அக்குழுவினர் "ஆம் (அவ்வாறு சொன்னதை நாங்கள் அறிவோம்)" என்று பதிலளித்தனர்.
பிறகு உமர் (ரலி) அவர்கள் (வாதியும் - பிரதிவாதியுமான) அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, "எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(நபிமார்களான எங்களுக்கு) யாரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே" என்று சொன்னதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்கள்.
அவ்விருவரும் "ஆம் (அவ்வாறு அவர்கள் சொன்னதை நாங்கள் அறிவோம்)" என்று விடையளித்தனர். உமர் (ரலி) அவர்கள், "(போரிடாமல் கைப்பற்றப்பட்ட) இந்த "ஃபைஉ"ச் செல்வத்தை தன் தூதருக்கு மட்டுமே உரியதாக அல்லாஹ் ஆக்கியிருந்தான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதைச் சொந்தமாக்கவில்லை" (என்று கூறிவிட்டு,) "(பல்வேறு) ஊராரிடமிருந்து எதைத் தன் தூதர் கைப்பற்றுமாறு அல்லாஹ் செய்தானோ அது அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும்... உரியது" (59:7) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். (இதற்கு முந்தைய வசனத்தையும் அப்போது ஓதினார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.)
தொடர்ந்து "எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ நளீர் குலத்தாரின் செல்வங்களை (அவர்கள் நாடு கடத்தப்பட்டபின்) உங்களிடையே பங்கிட்டுக் கொடுத்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களைவிட தம்மைப் பெரிதாகக் கருதவுமில்லை; உங்களை விட்டுவிட்டுத் தமக்காக அதை எடுத்துக்கொள்ளவுமில்லை. இறுதியாக (இறைத்தூதருக்கு மட்டுமே இறைவன் ஒதுக்கிய அந்நிதியிலிருந்து) இந்த (ஃபதக்) செல்வம் மட்டுமே எஞ்சியது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவை எடுத்து(ச் செலவிட்டு)வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதியுள்ளதைப் பொதுச் சொத்தாக ஆக்கினார்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அந்த அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை நான் கேட்கிறேன்: இதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அக்குழுவினர் "ஆம் (அறிவோம்)" என்று பதிலளித்தனர். பிறகு அல்லாஹ்வைப் பொருட்டாக்கி அக்குழுவினரிடம் கேட்டதைப் போன்றே அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் அலீ (ரலி) அவர்களிடமும் "அதை நீங்கள் இருவரும் அறிவீர்களா?" என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும் "ஆம் (அறிவோம்)" என்று பதிலளித்தனர்.
தொடர்ந்து உமர் (ரலி) அவர்கள், "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது (ஆட்சித் தலைவராக வந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்" என்று கூறினார்கள். (அச்செல் வத்தை தமது பொறுப்பில் வைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள்.) அப்போதும் நீங்கள் இருவரும் (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) சென்றீர்கள். (அப்பாஸே!) நீங்கள் உம்முடைய சகோதரரின் புதல்வரிடமிருந்து (நபியிடமிருந்து) உங்களுக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டீர்கள். இதோ இவரும் (அலீயும்) தம் மனைவிக்கு அவருடைய தந்தை (ஆகிய நபி)யிடமிருந்து சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டார்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நபிமார்களான) எங்களுக்கு யாரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே! என்று கூறினார்கள்" என்று பதிலளித்து (அதைத்தர மறுத்து)விட்டார்கள். அப்போது நீங்கள் இருவரும் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பொய்யராகவும் பாவியாகவும் நாணயமற்ற மோசடிக்காரராகவுமே பார்த்தீர்கள். ஆனால், அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த விஷயத்தில் உண்மையே உரைத்தார்கள்; நல்லவிதமாகவே நடந்துகொண்டார்கள்; நேர்வழி நின்று வாய்மையையே பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.
பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் இறந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் நான் பிரதிநிதியானேன்; அந்தச் செல்வத்துக்குப் பொறுப்பேற்றேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் செயல்பட்டதைப் போன்றே நானும் செயல்பட்டேன்.) அப்போது என்னையும் நீங்கள் இருவரும் பொய்யனாகவும் பாவியாகவும் நாணயமற்ற மோசடிக்காரனாகவுமே பார்த்தீர்கள்.
ஆனால், இந்த விஷயத்தில் நான் உண்மையே உரைத்தேன்; நல்ல விதமாகவே நடந்து கொண்டேன்; நேர்வழி நின்று,வாய்மையையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான்.
பிறகு நீங்களும் (இதோ) இவரும் சேர்ந்து வந்தீர்கள். நீங்கள் இருவரும் ஒரே நிலைப் பாட்டில்தான் இருந்தீர்கள். நீங்கள் இருவருமே, அதை எங்கள் இருவரிடமும் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறினீர்கள். அப்போது உங்கள் இருவரிடமும் நான் "நீங்கள் இருவரும் விரும்பினால் இச்செல்வத்தை ஒப்படைக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அவ்வாறே நீங்கள் இருவரும் செயல்பட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு வாக்குறுதியளிக்க வேண்டும்" என்று நான் கூறினேன்.
நீங்கள் இருவரும் அதன் பேரில் (என் நிபந்தனையை ஏற்று) அச்செல்வத்தைப் பெற்றுச் சென்றீர்கள். அவ்வாறுதானே?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும் "ஆம்" என்று பதிலளித்தனர். தொடர்ந்து உமர் (ரலி) அவர்கள், "பின்னர் நீங்கள் இருவரும் உங்களிருவர் இடையே தீர்ப்பளிக்கும்படி கோரி என்னிடம் வந்துள்ளீர்கள். இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் மறுமை நாள் நிகழும்வரை அளிக்கமாட்டேன். உங்கள் இருவராலும் இதைப் பராமரிக்க முடியாவிட்டால், என்னிடமே அதைத் திரும்ப ஒப்படைத்துவிடுங்கள் (அதை நானே பராமரித்துக் கொள்கிறேன்)" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 32
3613. மேற்கண்ட ஹதீஸ், மாலிக் பின் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது:
அவற்றில், "உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் ஆளனுப்பினார்கள். (நான் சென்றேன்.) அப்போது அவர்கள் உங்கள் குலத்தாரில் சில குடும்பத்தார் (என்னிடம்) வந்தார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மேலும் அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (ஃபைஉ)ச் செல்வத்திலிருந்தே தம் வீட்டாருக்கு ஓராண்டிற்குச் செலவிட்டுவந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அச்செல்வத்திலிருந்து தம் வீட்டாருக்கு ஓராண்டிற்கு வேண்டிய உணவை சேமித்து வைப்பார்கள். பிறகு மீதியை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் (நல நிதியாக வைத்துச்) செலவிட்டு வந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 16 "(இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மம் ஆகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
3614. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது, அவர்களின் துணைவியர் உஸ்மான் (ரலி) அவர்களை (என் தந்தை கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்து, (அல்லாஹ்வின் தூதரிடமிருந்து) தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்க விரும்பினர்.
அப்போது நான் அவர்களைப் பார்த்து, "(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மமே" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கவில்லையா?" என்று கேட்டேன்.
அத்தியாயம் : 32
3615. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் (அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த பிறகு), (கலீஃபா) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா(விலிருந்த பனூ நளீர் குலத்தாரின்) சொத்து, "ஃபதக்" (ஃபைஉச்) சொத்து, கைபர் சொத்தில் ஐந்தில் ஒரு பகுதியில் எஞ்சியிருப்பது ஆகியவற்றில் தமக்குச் சேர வேண்டிய வாரிசுரிமையைக் கேட்டார்கள்.
அதற்கு (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மம் ஆகும். இந்தச் செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தார் சாப்பிடுவார்கள்" என்று சொல்லியிருக்கிறார்கள். (எனவே,)அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மமாக விட்டுச்சென்ற இந்தச் சொத்தில் நான் சிறிதும் மாற்றம் செய்யமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் எந்நிலையில் இந்தச் சொத்துகள் இருந்துவந்தனவோ, அதே நிலையில் அவை நீடிக்கும். இ(ந்தச் சொத்துகளைப் பங்கிடும் விஷயத்)தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்ட படியே நானும் செயல்படுவேன்" என்று கூறி, ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் (அவற்றில்) எதையும் ஒப்படைக்க மறுத்துவிட்டார்கள்.
இதனால் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கோபித்துக்கொண்டு, இறக்கும்வரை அவர்களுடன் ஃபாத்திமா (ரலி) அவர்கள் பேசவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த பின் ஆறு மாதகாலம்தான் ஃபாத்திமா (ரலி) அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள்.
ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறந்தபோது, அவர்களின் கணவர் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் (இறப்பதற்கு முன் ஃபாத்திமா அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க) இரவிலேயே அவர்களை அடக்கம் செய்துவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களுக்குக்கூட இது குறித்துத் தெரிவிக்கவில்லை.
அலீ (ரலி) அவர்களே ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு இறுதி (ஜனாஸா)த் தொழுகை தொழுவித்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் வாழ்ந்தவரையில், அலீ (ரலி) அவர்கள்மீது மக்களுக்கு ஒரு தனிக்கவனம் இருந்து வந்தது.
ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறந்துவிட்ட பின் மக்களின் முகங்களில் (மரியாதையில்) மாற்றத்தை அலீ (ரலி) அவர்கள் கண்டார்கள்.
எனவே, (கலீஃபா) அபூபக்ரிடம் சமரசம் பேசவும் வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்துகொள்ளவும் விரும்பினார்கள். அந்த (ஆறு) மாதங்களில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அலீ (ரலி) அவர்கள் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்திருக்கவில்லை.
ஆகவே, "(கலீஃபா அவர்களே!) நீங்கள் மட்டும் எங்களிடம் வாருங்கள். தங்களுடன் வேறெவரும் வர வேண்டாம்"என்று கூறி அலீ (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். (அபூபக்ர் (ரலி) அவர்களுடன் உமர் (ரலி) அவர்கள் வருவதை அலீ (ரலி) அவர்கள் விரும்பாததால்தான் அலீ (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.)
(இச்செய்தி அறிந்த) உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மட்டும் தனியாக அவர்களிடம் செல்லாதீர்கள். (உங்களுக்குரிய கண்ணியத்தை அவர்கள் கொடுக்காமல் இருந்துவிடலாம்)"என்று கூறினார்கள்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "என் விஷயத்தில் அவர்கள் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் சென்றே தீருவேன்" என்று கூறிவிட்டு, அவ்வாறே அவர்களிடம் சென்றார்கள்.
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனை வாழ்த்தினார்கள். பிறகு, (அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி) "உங்கள் சிறப்பையும் உங்களுக்கு அல்லாஹ் வழங்கிய (பாக்கியத்)தையும் நாங்கள் அறிவோம். அல்லாஹ் உங்களிடம் ஒப்படைத்துள்ள இந்த (ஆட்சித்தலைமை எனும்) நன்மையைக் குறித்து நாங்கள் பொறாமைப்படவில்லை. ஆயினும், இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் (எங்களிடம் ஆலோசனை கலக்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டுவிட்டீர்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எங்களுக்குள்ள உறவு முறையின் காரணத்தால் (ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில்) எங்களுக்கு ஓர் உரிமை உண்டு என நாங்கள் கருதிவந்தோம்" என்று கூறினார்கள்.
அலீ (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் பேசிக்கொண்டிருக்க, அபூபக்ர் (ரலி) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசத் துவங்கியபோது, "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! என்னுடைய உறவினர்களின் உறவைப் பேணுவதைவிட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு மிகவும் உவப்பானவர்கள். இந்தச் செல்வங்கள் தொடர்பாக எனக்கும் உங்களுக்குமிடையே ஏற்பட்ட (கருத்து வேறுபாட்டின்) விவகாரத்தில் நான் நியாயமாக நடந்துகொள்வதில் சிறிதும் குறைவைக்கவில்லை. இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யக் கண்ட எதையும் செய்யாமல் நான் விட்டுவிடவுமில்லை" என்று கூறினார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள் "தங்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுப்பதற்காக நான் நண்பகலுக்குப் பின் (கட்டாயம்) வருவேன்" என்று கூறினார்கள்.
(அன்று) அபூபக்ர் (ரலி) அவர்கள் லுஹ்ர் தொழுகையை முடித்ததும் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி, ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனை வாழ்த்திய பிறகு அலீ (ரலி) அவர்கள் குறித்தும், அவர் தமக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுக்கத் தாமதமானது குறித்தும், அதற்கு அலீ (ரலி) அவர்கள் தம்மிடம் கூறிய காரணம் குறித்தும் எடுத்துரைத்தார்கள். பின்னர் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரினார்கள்.
பிறகு அலீ (ரலி) அவர்கள் (எழுந்து), ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை வாழ்த்திய பின் அபூபக்ர் (ரலி) அவர்களின் தகுதியைக் கண்ணியப்படுத்திப் பேசினார்கள். "தாம் இவ்வாறு (ஆறு மாதம்) நடந்துகொள்ளக் காரணம்,அபூபக்ர் (ரலி) அவர்கள்மீது கொண்ட பொறாமையோ அல்லது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பை நிராகரித்ததோ அல்ல. மாறாக, (ஆட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும்) இந்த விஷயத்தில் எங்களுக்குப் பங்கு உண்டு என (நபியின் குடும்பத்தாராகிய) நாங்கள் கருதிவந்ததேயாகும். ஆனால், (எங்களிடம் ஆலோசிக்காமல்) தன்னிச்சையாகச் செயல்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால் எங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டது" என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்து (அலீ (ரலி) அவர்களைப் பார்த்து) "நீங்கள் சரியாகவே நடந்துகொண்டீர்கள்" என்று கூறினர். இயல்பு நிலைக்கு அலீ (ரலி) அவர்கள் திரும்பியபோது, முஸ்லிம்கள் அலீ (ரலி) அவர்களிடம் நெருக்கமானவர்களாக ஆகிவிட்டனர்.
அத்தியாயம் : 32
3616. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஃபாத்திமா (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தங்களுக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டனர்.
அப்போது அவர்களிருவரும் "ஃபதக்" பகுதியிலிருந்த நபியவர்களின் நிலத்தையும் கைபரில் அவர்களுக்குக் கிடைத்த பங்கையுமே அவ்வாறு கோரினர். அப்போது அவர்கள் இருவரிடமும் (மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி) அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்த அறிவிப்புகளில் பின்வருமாறு காணப்படுகிறது: பிறகு அலீ (ரலி) அவர்கள் எழுந்து அபூபக்ர் (ரலி) அவர்களின் தகுதிகளில் சிலவற்றைக் கண்ணியப்படுத்திப் பேசினார்கள்; அவர்களின் சிறப்பையும் முதலிடத்தையும் பற்றிக் கூறினார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கிச் சென்று அவர்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்தார்கள்.
அப்போது மக்கள் அலீ (ரலி) அவர்களை நோக்கி வந்து "நீங்கள் சரியாகவே நடந்து கொண்டீர்கள்; நன்முறையில் நடந்து கொண்டீர்கள்" என்று கூறினர். அலீ (ரலி) அவர்கள் நிலைமையை இயல்புக்குக் கொண்டு வந்தபோது முஸ்லிம்கள் அலீ (ரலி) அவர்களுக்கு நெருக்கமானவர்களாக ஆகிவிட்டனர்.
அத்தியாயம் : 32
3617. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்ட பிறகு, அவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள், அல்லாஹ் தன் தூதருக்கு ஒதுக்கித்தந்திருந்த ("ஃபைஉ"ச்) செல்வத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுச்சென்றதிலிருந்து தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தருமாறு (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள்.
அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(இறைத்தூதர்களான எங்களுக்கு) யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவை எல்லாம் தர்மம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள்" எனக் கூறி (அதிலிருந்து பங்கு தர மறுத்து)விட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஆறு மாதங்களே உயிர் வாழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தனி நிதியாக) விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்துகளிலிருந்தும் மதீனாவில் அவர்கள் தர்மமாக விட்டுச்சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் ஃபாத்திமாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்துவந்த எந்த ஒன்றையும் நான் செய்யாமல் விடமாட்டேன். அதை நான் செய்தே தீருவேன். அவர்களுடைய செயல்களில் எதையேனும் நான் விட்டுவிட்டால் நான் வழி தவறிவிடுவேனோ என அஞ்சுகிறேன்" என்று சொன்னார்கள்.
(அபூபக்ர் (ரலி) அவர்களின் மறைவுக்குப் பின்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் தர்மமாக விட்டுச் சென்ற சொத்தை (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடமும் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் ஒப்படைத்தார்கள். அந்தச் சொத்தி(ன் பராமரிப்பி)ல் அப்பாஸ் (ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்கள் மிகைத்து (ஓரங்கட்டி) விட்டார்கள்.
கைபர் மற்றும் ஃபதக்கில் இருந்த சொத்துகளை (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் (யாரிடமும் ஒப்படைக்காமல்) தமது பொறுப்பிலேயே வைத்துக்கொண்டார்கள். மேலும், "இவ்விரண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மமாக விட்டுச்சென்றவை. அவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கடமைகளையும் அவசரத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக (ஒதுக்கப்பட்டு) இருந்தன. அவ்விரண்டின் அதிகாரமும் ஆட்சிக்குப் பொறுப்பேற்பவரிடம் இருக்க வேண்டும்" என்று சொன்னார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்தபோது), "அந்த இரு சொத்துகளும் இன்றுவரை அவ்வாறே (ஆட்சியாளரின் பொறுப்பிலேயே) இருந்து வருகின்றன" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3618. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் வாரிசுகள் ஒரு தீனாரைக்கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் மனைவிமார்களுக்குச் சேர வேண்டிய வாழ்க்கைச் செலவும் என் உதவியாளரின் ஊதியமும் போக நான் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மம் ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3619. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 17 போரில் கலந்துகொண்டவர்களிடையே போர்ச்செல்வத்தை பங்கிடும் முறை.
3620. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், போரில் கிடைத்த செல்வத்தைப் பங்கிட்டார்கள். (போரில் கலந்துகொண்ட ஒரு மனிதருடன் குதிரையிருந்தால் அவருக்கு ஒரு பாகமும்) குதிரைக்காக இரு பாகங்களும் காலாட்படை வீரருக்கு ஒரு பாகமும் கொடுத்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "போரில் கிடைத்த செல்வத்தை" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 32
பாடம் : 18 பத்ருப் போரில் வானவர்கள் மூலம் (இறைவன்) உதவி செய்ததும் போர்ச் செல்வங்கள் அனுமதிக்கப்பட்டதும்.
3621. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்ருப் போர் நாளில் (எதிரிகளான) இணை வைப்பாளர்கள் (எண்ணிக்கை) ஆயிரம் பேராக இருப்பதையும், (முஸ்லிம்களான) தம் தோழர்கள் முன்னூற்றுப் பத்தொன்பது பேராக இருப்பதையும் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையின் திசையான) "கிப்லா"வை முன்னோக்கித் தம் கரங்களை நீட்டித் தம் இறைவனை உரத்த குரலில் (அழைத்துப்) பிராத்தித்தார்கள்.
"இறைவா! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக. இறைவா! இஸ்லாமியரில் இக்குழுவினரை நீ அழித்துவிட்டால், இந்தப் பூமியில் உன்னை (மட்டுமே) வழிபட (இனி) யாரும் இருக்க மாட்டார்கள்" என்று தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக்கொண்டேயிருந்தார்கள். எந்த அளவுக்கென்றால், (கைகளை உயர்த்தியதால்) அவர்களுடைய தோள்களிலிருந்து அவர்களின் மேல்துண்டு நழுவி கீழே விழுந்துவிட்டது.
அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்கள்மீது போட்டுவிட்டு,பின்னாலிருந்து அவர்களைக் கட்டியணைத்துக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான்" என்று கூறினார்கள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "நீங்கள் உங்கள் இறைவனிடம் பாதுகாப்புக் கோரியபோது "உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு நான் உதவி செய்வேன்" என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்" (8:9) எனும் வசனத்தை அருளினான்.
அவ்வாறே நபி (ஸல்) அவர்களுக்கு வானவர்களைக் கொண்டு அல்லாஹ் உதவியளித்தான்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஸுமைல் சிமாக் பின் அல்வலீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்றைய தினத்தில் முஸ்லிம்களில் ஒருவர் தமக்கு முன் சென்றுகொண்டிருந்த இணைவைப்பாளர்களில் ஒருவரை விரட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது தமக்கு மேலே சாட்டையைச் சுழற்றி அடிக்கும் சப்தத்தையும், ஒரு குதிரை வீரர் "ஹைஸூம்! முன்னேறிச் செல்" என்று கூறியதையும் செவியுற்றார்.
உடனே தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த இணைவைப்பாளர் மல்லாந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். அந்த இணைவைப்பாளரின் (அருகில் சென்று) அவர் பார்த்த போது, அவனது மூக்கில் காயமேற்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிபட்டது போல் அவனது முகம் கிழிந்து முகமெல்லாம் பச்சையாகக் கன்றிப் போயிருப்பதையும் கண்டார்.
உடனே அந்த அன்சாரீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அதைப் பற்றித் தெரிவித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீர் சொன்னது உண்மையே. இது மூன்றாவது வானிலிருந்து இறங்கிய (வானவர்களின்) உதவியாகும்" என்று கூறினார்கள்.(முஸ்லிம்கள்) அன்றைய தினத்தில் (இணைவைப்பாளர்களில்) எழுபது பேரைக் கொன்றனர்; எழுபது பேரைச் சிறைப்பிடித்தனர்.
முஸ்லிம்கள் எதிரிகளைச் சிறைப்பிடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் உமர் (ரலி) அவர்களிடமும் "இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் (இவர்களை என்ன செய்யலாம்)?" என்று (ஆலோசனை) கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளாயினும்) அவர்கள் (நம்) தந்தையின் சகோதரர் புதல்வர்களே; நம் குலத்தாரே. அவர்களிடமிருந்து ஏதேனும் பிணைத் தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள்; அது இறைமறுப்பாளர்களுக்கெதிரான பலமாக நமக்கு அமையும். அவர்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்திற்கு வழிகாட்டக்கூடும். இவ்வாறே நான் கருதுகிறேன்" என்றார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் என்ன கருதுகிறீர்கள், கத்தாபின் புதல்வரே?" என்று கேட்டார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வாறு செய்யாதீர்கள்), அல்லாஹ்வின் தூதரே! எனது கருத்து அபூபக்ர் அவர்களின் கருத்தைப் போன்ற தன்று. மாறாக, அவர்களை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர்களின் கழுத்துகளை நாங்கள் துண்டித்துவிடுகிறோம். அக்கீலை அலீ அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்; அவரது கழுத்தை அலீ துண்டிக்கட்டும்! (உமர் (ரலி) அவர்கள் தம் குலத்தாரில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு) இன்ன மனிதரை என்னிடம் ஒப்படையுங்கள். நான் அவரது கழுத்தைத் துண்டித்துவிடுகிறேன். ஏனெனில், இவர்கள் இறைமறுப்பின் தலைவர்கள்; அதன் முன்னோடிகள். (எனவே, பிணைத் தொகை பெற்று இவர்களை விடுவிக்க வேண்டாம்)" என்று (ஆலோசனை) கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்களின் கருத்தையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனது கருத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை. மறுநாள் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.
நான் "அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்கள் நண்பரும் ஏன் அழுகிறீர்கள்? உங்கள் அழுகைக்கான காரணத்தை அறிந்தால் நானும் அழுவேன். அழுகை வராவிட்டாலும் உங்கள் இருவரது அழுகையைக் கண்டு அழுவது போன்றாவது இருப்பேனே!" என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கைதிகளிடமிருந்து பிணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்துவிடலாம் என உங்களுடைய நண்பர்கள் எனக்குக் கூறிய ஆலோசனைக்காகவே நான் அழுகிறேன். ஆனால், (இதோ) இந்த மரத்திற்கு அருகில் அந்த எதிரிகள் வேதனை செய்யப்படுவது எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது என்று (தமக்கு அருகிலிருந்த ஓர் மரத்தைக் காட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், "பூமியில் எதிரிகளை வேரறுக்கும்வரை சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும் தகாது" என்று தொடங்கி, "நீங்கள் அடைந்த போர்ச் செல்வங்களை அனுமதிக்கப்பட்ட தூய்மையானவையாகவே (கருதி) உண்ணுங்கள்" (8:67-69) என்பது வரை (மூன்று வசனங்களை) அருளினான். அப்போதுதான் போர்ச் செல்வங்களை அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்தான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 19 கைதியைக் கட்டிவைப்பது, அடைத்து வைப்பது, அல்லது பெருந்தன்மையுடன் விட்டுவிடுவது செல்லும்.
3622. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஜ்த்" பகுதிக்குக் குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் யமாமாவாசிகளின் தலைவரும் "பனூ ஹனீஃபா" குலத்தைச் சேர்ந்தவருமான ஸுமாமா பின் உஸால் எனப்படும் மனிதரை (கைது செய்து) கொண்டுவந்தார்கள்; (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப்போட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, "(உம்முடைய விஷயத்தில் நான் சொல்லப்போகும் தீர்ப்பைப் பற்றி) நீர் என்ன கருதுகிறீர், ஸுமாமா?" என்று கேட்டார்கள். அவர், "நல்லதே கருதுகிறேன், முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப் பழிவாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். நீங்கள் (என்னை மன்னித்து) உபகாரம் செய்தால், நன்றி பாராட்டக்கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் கேளுங்கள். நீங்கள் விரும்புவது கொடுக்கப்படும்" என்றார்.
அன்றைய தினம் அவரை (அந்நிலையிலேயே) விட்டுவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். மறுநாள் வந்தபோது அவரிடம், "ஸுமாமா, (உம்முடைய விஷயத்தில் நான் சொல்லப்போகும் தீர்ப்பைப் பற்றி) நீர் என்ன கருதுகிறீர்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "உங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியதுதான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றி பாராட்டக்கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் (என்னைக்) கொன்றால் இரத்தப் பழிவாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் கேளுங்கள்; நீங்கள் விரும்புவது கொடுக்கப்படும்" என்றார்.
அன்றும் அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள். மூன்றாவது நாள் வந்தபோது, "ஸுமாமா! என்ன கருதுகிறீர்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், "நான் (ஏற்கெனவே) உங்களிடம் சொன்னதைத்தான் கருதுகிறேன். நீங்கள் உபகாரம் செய்தால் நன்றி பாராட்டும் ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப் பழிவாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் கேளுங்கள். அதில் நீங்கள் விரும்புவது கொடுக்கப்படும்" என்று சொன்னார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்" என்று கூறிவிட்டார்கள். உடனே, ஸுமாமா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந்தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டுப் பள்ளிவாசலுக்கு வந்தார். "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதிமொழிகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்" என்று கூறி (முஸ்லிம் ஆ)னார்.
பிறகு "முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட எனக்கு மிகவும் வெறுப்புக்குரிய முகம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் மற்றெல்லா முகங்களையும்விட எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய மார்க்கம் மற்றெல்லா மார்க்கங்களையும்விட எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்கள் ஊரே மற்றெல்லா ஊர்களையும் விட எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. உங்கள் குதிரைப்படையினர் என்னைப் பிடித்து(வந்து)விட்டனர். நான் "உம்ரா"ச் செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி, "உம்ரா"ச் செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது அவரிடம் ஒருவர், "நீர் மதமாறிவிட்டீரா?" என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை) அல்லாஹ்வின் தூதருடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளிக்காத வரை (எனது பகுதியான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 32
3623. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஜ்த்" பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் யமாமாவாசிகளின் தலைவரான ஸுமாமா பின் உஸால் அல்ஹனஃபீ எனப்படும் ஒருவரை (கைது செய்து) கொண்டு வந்தார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. எனினும், அதில் "என்னை நீங்கள் கொன்றால், இரத்தப் பழிவாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32