2630. அப்துர் ரஹ்மான் பின் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்களிடம் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (முஹாஜிர் மக்காவில் தங்குவதைப் பற்றிக்) கேட்டார்கள். அதற்கு சாயிப் (ரலி) அவர்கள், "முஹாஜிர் (மினாவிலிருந்து) திரும்பிய பிறகு மூன்று இரவுகள் மக்காவில் தங்கியிருக்கலாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அலாஉ பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2631. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஹாஜிர், (ஹஜ்) கிரியைகளை நிறை வேற்றிய பிறகு மக்காவில் மூன்று இரவுகள் தங்கியிருக்கலாம்.
இதை அலாஉ பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 82 மக்காவும், அதன் வேட்டைப் பிராணிகளும், புற்பூண்டுகளும், மரங்களும், அங்கு கண்டெடுக்கப்படும் பொருளும் -அதை அறிவிப்புச் செய்பவருக்குத் தவிர- என்றென்றும் புனிதமானவை ஆகும்.
2632. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நிகழ்ந்த நாளில், "இனி ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) என்பது கிடையாது. ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும்தான் உள்ளது. நீங்கள் போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் போருக்குச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். மேலும் (அதே) மக்காவெற்றி நாளில், "(மக்களே!) அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய் இந்த நகரத்தை அவன் புனிதமாக்கியுள்ளான். அல்லாஹ் புனிதமாக்கிய காரணத்தால் இது மறுமை நாள் வரை புனிதமானதாகவே இருக்கும். மேலும், எனக்கு முன்னர் (வாழ்ந்த) யாருக்கும் இங்கு போர் புரிய அனுமதி தரப்படவில்லை. எனக்கும் கூட (இந்த மக்காவெற்றி நாளில்) பகலில் சிறிது நேரம் மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதி வழங்கப்பட்டது. அல்லாஹ் இந்த நகரத்தை புனிதமாக்கியுள்ள காரணத்தால் இது மறுமை நாள்வரை புனிதமானதாகவே திகழும். இங்கு அதன் முட்கள் வெட்டப்படக் கூடாது. அதன் வேட்டைப் பிராணி விரட்டப்படக்கூடாது. இங்கே கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்(து உரியவரிடம் சேர்ப்)பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைப் பறிக்கக் கூடாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உடனே (என் தந்தை) அப்பாஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! "இத்கிர்" புல்லைத் தவிரவா? ஏனெனில், அது அவர்களுடைய உலோகத் தொழிலாளர்களுக்கு (உலை மூட்டவு)ம், அவர்களுடைய வீடுக(ளின் மேல்கூரை)களுக்கும் பயன்படுகிறதே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஆம்) "இத்கிரை"த் தவிர" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. "போர் புரிய" என்பதற்குப் பகரமாக "உயிர்ச் சேதம் விளைவிக்க" என்று காணப்படுகிறது. ("இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது" என்பதைக் குறிக்க) "லா யல்தகிது லுக்தத்தஹு இல்லா மன் அர்ரஃபஹா" எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2633. சயீத் பின் அபீசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(யஸீதின் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் பின் சயீத், (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக) மக்காவை நோக்கிப் படைப் பிரிவுகளை அனுப்பியபோது, அவரிடம் அபூ ஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: தலைவரே! எனக்கு அனுமதி தாருங்கள்! மக்கா வெற்றிக்கு மறுநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன். என் காதுகள் அதைக் கேட்டிருக்கின்றன. எனது உள்ளம் அதை நினைவில் வைத்துள்ளது. அதை அவர்கள் கூறியபோது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அவ்வுரையின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "அல்லாஹ்வே மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கினான். அதற்குப் புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்கள் அல்லர். எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் இங்கு (சண்டையிட்டு) இரத்தத்தைச் சிந்துவதற்கோ, இங்குள்ள மரம் செடிகொடிகளை வெட்டுவதற்கோ அனுமதி இல்லை. அல்லாஹ்வின் தூதர் (மக்கா வெற்றி நாளில் ஒரு பகற்பொழுது மட்டும்) இங்கு போரிட்டதால் (அதைக் காரணமாகக் காட்டி) இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், "அல்லாஹ் தன் தூதருக்கு மட்டும்தான் அனுமதியளித்தான். உங்களுக்கு அவன் அனுமதி வழங்கவில்லை" என்று சொல்லிவிடுங்கள். எனக்குக்கூட (நேற்றைய) பகலில் சிறிது நேரம் மட்டுமே இங்கு (போர் புரிய) அல்லாஹ் அனுமதியளித்தான். இன்று அதன் முந்தைய புனிதத் தன்மைக்கு அது மீண்டு வந்துவிட்டது. (நான் சொன்ன விஷயங்கள் யாவற்றையும் இங்கு) வந்திருப்பவர்கள் வராதவர்களுக்குச் சொல்லிவிடுங்கள்"என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அதற்கு அம்ர் பின் சயீத் என்ன பதிலளித்தார்?" என்று அபூஷுரைஹ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு "அபூஷுரைஹே! உம்மைவிட இதைப் பற்றி நான் நன்கறிவேன். நிச்சயமாக (புனித நகரமான) மக்கா, குற்றவாளிக்கும் மரண தண்டனைக்குப் பயந்து (மக்காவிற்குள்) ஓடிவந்த (கொலைக் குற்றம் புரிந்த)வனுக்கும், திருட்டுக் குற்றம் புரிந்துவிட்டு ஓடிவந்தவனுக்கும் பாதுகாப்பளிக்காது என்று அம்ர் கூறினார்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2634. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு மக்கா நகர வெற்றியை அளித்தபோது, அவர்கள் மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "அல்லாஹ் மக்காவை (துவம்சம் செய்வதை)விட்டும் யானைப் படையைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) ஓரிறை நம்பிக்கையாளர்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பு எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும்கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் சிறிது நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் ஒருபோதும் அனுமதிக்கப்படாது. ஆகவே, இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் வெட்டப்படக் கூடாது. இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருள், அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவர்,கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை பெற்றிருக்கிறாரோ அவர் இரண்டு முடிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஒன்று, (சட்டப்படி) இழப்பீட்டுத் தொகை பெற்றுக்கொள்ளலாம்; அல்லது பழிவாங்கிக்கொள்ளலாம்"என்று கூறினார்கள்.
அப்பாஸ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! (செடிகொடிகள் பிடுங்கப்படாது என்பதில்) "இத்கிர்" புல்லைத் தவிரவா?ஏனெனில், அதை நாங்கள் எங்கள் சவக்குழிகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோமே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இத்கிர் புல்லைத் தவிர" என்று விடையளித்தார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக்கொடுங்கள்" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அபூஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்" என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) வலீத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அவ்ஸாயீ (ரஹ்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள் எனும் அபூஷாஹ் (ரலி) அவர்களது சொல் எதைக் குறிக்கிறது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அவர் கேட்ட இந்த உரையை (எழுதிக் கொடுக்கச் சொன்னதை)யே குறிக்கிறது" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2635. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றி ஆண்டில் "குஸாஆ" குலத்தார், "பனூ லைஸ்" குலத்தாரில் ஒருவரைக் கொலை செய்துவிட்டனர். (அறியாமைக் காலத்தில்) தங்களில் ஒருவரை "பனூ லைஸ்" குலத்தார் கொலை செய்ததற்குப் பதிலாகவே "குஸாஆ" குலத்தார் இதைச் செய்தனர். இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் தமது வாகனத்தின் மீதேறி உரையாற்றினார்கள்:
"வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் இந்த(ப் புனித) மக்கா நகரைவிட்டும் யானைப் படையைத் தடுத்து நிறுத்தினான். மக்காவின் மீது தன் தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் அல்லாஹ் ஆதிக்கம் அளித்தான். எச்சரிக்கை! மக்காவினுள் போர் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை. எனக்குப் பின்னரும் எவருக்கும் ஒருபோதும் அனுமதிக்கப்படப்போவதில்லை. கவனத்தில் கொள்க! எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் போரிடவே அனுமதிக்கப்பட்டது. எச்சரிக்கை! (இங்கு) போர் செய்வது இந்த நிமிடத்திலிருந்து (முற்றாகத்) தடை செய்யப்பட்டுவிட்டது. இங்குள்ள முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதன் மரங்கள் வெட்டப்படக் கூடாது. இங்கே கீழே விழுந்து கிடக்கும் பொருட்களை (அவற்றைப் பற்றி) மக்களுக்கு அறிவிப்புச் செய்பவரைத் தவிர வேறு யாரும் எடுக்கக் கூடாது. ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டால், அவருடைய உறவினர்கள் இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய இரண்டு முடிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
அப்போது யமன்வாசிகளில் அபூஷாஹ் எனப்படும் ஒருவர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (இந்த உரையை) எனக்கு எழுதித் தரச் சொல்லுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அபூஷாஹிற்கு (என் உரையை) எழுதிக் கொடுங்கள்" என்று சொன்னார்கள்.
அப்போது குறைஷியரில் ஒருவர் (மக்காவின் செடிகொடிகளை வெட்டக்கூடாது என்பதிலிருந்து) "இத்கிர்" புல்லிற்கு விலக்கு அளியுங்கள். ஏனெனில், நாங்கள் அதை எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் சவக் குழிகளிலும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இத்கிர் புல்லைத் தவிர" என்றார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 83 அவசியமின்றி (புனித) மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்கு வந்துள்ள தடை.
2636. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்காவிற்குள் ஆயுதம் எடுத்துச் செல்வதற்கு உங்களில் எவருக்கும் அனுமதி இல்லை.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 84 "இஹ்ராம்" கட்டாமல் மக்காவிற்குள் நுழையலாம்.
2637. யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் தலையில் இரும்புத் தொப்பியுடன் (இஹ்ராம் கட்டாத நிலையில்) மக்காவினுள் நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒரு மனிதர் வந்து, "இப்னு கத்தல் (அபயம் வேண்டி) கஅபாவின் திரைகளைப் பிடித்துக்கொண்டிருக்கிறான்" என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "அவனைக் கொன்றுவிடுங்கள்" என உத்தரவிட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் தங்களுக்கு அறிவித்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு மாலிக் (ரஹ்) அவர்கள் "ஆம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2638. ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டாமல் தலையில் கறுப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் மக்காவிற்குள் நுழைந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் குதைபா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "மக்கா வெற்றி நாளில் நுழைந்தார்கள்" என்று இடம் பெற்றுள்ளது.
- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தலையில் கறுப்புத் தலைப்பாகை அணிந்து கொண்டு (மக்காவினுள்) நுழைந்தார்கள்.
அத்தியாயம் : 15
2639. அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில்) தலையில் கறுப்புத் தலைப்பாகை கட்டிய நிலையில் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2640. அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில்) தலையில் கறுப்புத் தலைப்பாகை கட்டி, அதன் இரு ஓரங்களையும் தம் தோள்களுக்குமிடையே தொங்கவிட்டவர்களாகச் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "சொற்பொழிவு மேடை மீதிருந்ததை" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
பாடம் : 85 மதீனா நகரின் சிறப்பும், அந்நகரத்திற்காக வளம் வேண்டி நபி (ஸல்) அவர் கள் பிரார்த்தித்ததும், மதீனாவும் அதன் வேட்டைப் பிராணிகளும் மரங்களும் புனிதமானவை என்பதும், அதன் புனித எல்லைகளின் அளவு பற்றிய விவரமும்.
2641. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்து, மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறி வித்ததைப் போன்று நான் மதீனாவைப் புனித நகரமாக அறிவிக்கிறேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்ததைப் போன்று நான் மதீனாவின் (அளவைகளான) "ஸாஉ"மற்றும் "முத்"து ஆகியவற்றில் இரு மடங்கு (வளம் ஏற்படப்) பிரார்த்திக்கிறேன்.
இதை அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2642. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உஹைப் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே "இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்ததைப் போன்று இரு மடங்கு (வளம் வேண்டி) நான் பிரார்த்திக்கிறேன்" என்று இடம்பெற்றுள்ளது. - சுலைமான் பின் பிலால் (ரஹ்) மற்றும் அப்துல் அஸீஸ் பின் அல்முக்தார் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்ததைப் போன்றே" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2643. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்தார்கள். நான், இதன் (அதாவது மதீனாவின்) இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கிறேன்.
இதை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2644. நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மர்வான் பின் அல்ஹகம் மக்களிடையே உரையாற்றியபோது மக்காவைப் பற்றியும், மக்காவாசிகள் மற்றும் மக்காவின் புனிதம் பற்றியும் குறிப்பிட்டார். மதீனாவைப் பற்றியோ மதீனாவாசிகள் மற்றும் மதீனாவின் புனிதம் பற்றியோ குறிப்பிடவில்லை. அப்போது ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் மர்வானை அழைத்து, "நீர் மக்காவைப் பற்றியும் மக்காவாசிகள் மற்றும் மக்காவின் புனிதம் பற்றியும் கூறினீர். மதீனாவைப் பற்றியோ மதீனாவாசிகளைப் பற்றியோ மதீனாவின் சிறப்பு பற்றியோ கூறவில்லையே ஏன்? மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புனிதமானதாக அறிவித்துள்ளார்கள். இந்த விஷயம் எங்களிடமுள்ள ஒரு "கவ்லானீ" (குலத்தாரின் மெல்லிய) தோல் ஏட்டில் பதியப்பெற்றுள்ளது. நீர் விரும்பினால் அதை உமக்கு நான் வாசித்துக்காட்டுவேன்" என்று கூறினார்கள். மர்வான் (சிறிது நேரம்) அமைதியாக இருந்தார். பிறகு, "அதில் சிலவற்றை நானும் செவியுற்றுள்ளேன்" என்றார்.
அத்தியாயம் : 15
2645. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்தார்கள். நான் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கிறேன். அதன் முள்மரங்கள் வெட்டப்படக் கூடாது; அதன் வேட்டைப் பிராணிகள் வேட்டையாடப்படக் கூடாது.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2646. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியின் மரங்களை வெட்டுவது, அதன் வேட்டைப் பிராணிகளைக் கொல்வது ஆகியவற்றுக்கு நான் தடை விதிக்கிறேன். மக்கள் அறிந்துகொள்பவர்களாயிருந்தால் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும். எவரும் அதை வெறுத்து அதை விட்டுச் சென்றால், அவரை விடச் சிறந்தவரை அதில் அல்லாஹ் குடியமர்த்தாமல் இருப்பதில்லை. அங்கு ஏற்படும் பசி பட்டினியையும் கடினமான வாழ்க்கையையும் சகித்துக்கொண்டு அங்கு நிலைத்திருப்பவருக்கு மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவனாக அல்லது சாட்சியம் அளிப்பவனாக இருப்பேன்.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2647. மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "மதீனாவாசிகளுக்குத் தீங்கிழைக்க எவரேனும் விரும்பினால் "நெருப்பில் ஈயம் கரைவதைப் போன்று" அல்லது "தண்ணீரில் உப்பு கரைவதைப் போன்று" அவரை அல்லாஹ் கரைத்துவிடுவான்" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2648. ஆமிர் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் (மதீனாவிற்கு அருகில்) "அகீக்" எனுமிடத்திலிருந்த தமது பெரிய வீட்டிற்கு வாகனத்தில் புறப்பட்டார்கள். (வழியில்) அடிமையொருவர் "ஒரு மரத்தை வெட்டிக்கொண்டிருப்பதை" அல்லது "இலைகளைப் பறித்துக்கொண்டிருப்பதை"க் கண்டார்கள். உடனே (அவரைப் பிடித்து) அவரது மேலாடையைக் கழற்றிக்கொண்டார்கள். சஅத் (ரலி) அவர்கள் திரும்பிவந்தபோது அவர்களிடம் அந்த அடிமையின் வீட்டார் வந்து தங்கள் அடிமையிடமிருந்து கைப்பற்றியதை "அந்த அடிமையிடம்" அல்லது "தங்களிடம்" திரும்பித் தருமாறு கேட்டார்கள். அப்போது சஅத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு வெகுமதியாக வழங்கிய எதையும் திருப்பித் தருவதிலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்" எனக் கூறி, அவர்களிடம் அதைத் தர மறுத்துவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2649. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், "உங்கள் சிறுவர்களில் ஒரு சிறுவனை எனக்குப் பணிவிடை செய்வதற்காகத் தேடி (அழைத்து)வாருங்கள். (நான் கைபருக்குப் புறப்பட வேண்டும்)" என்று கூறினார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னை வாகனத்தில் தமக்குப் பின்னால் அமரவைத்துக்கொண்டு (கைபரை நோக்கிப்) புறப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வழியில்) தங்கும்போதெல்லாம் அவர்களுக்கு நான் பணிவிடைகள் செய்து வந்தேன்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனா நோக்கி) வந்துகொண்டிருந்தபோது, "உஹுத் மலை" அவர்களுக்குத் தென்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இந்த மலை நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கிறோம்"என்று சொன்னார்கள். பிறகு பார்வையில் மதீனா பட்டபோது, "இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்ததைப் போன்று, இந்த இரு மலைகளுக்கிடையே உள்ள பகுதியைப் புனித (நகர)மாக நான் அறிவிக்கிறேன். இறைவா! மதீனாவாசிகளின் (அளவைகளான) "முத்"து மற்றும் "ஸாஉ" ஆகியவற்றில் நீ வளத்தை ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அவற்றில் ("இந்த இரு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை" என்பதற்குப் பதிலாக) "இந்த இரு கருங்கல் மலைகளுக்கிடையே உள்ள பகுதியை" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15