2610. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒரு பெண், அவளுடைய தந்தை, அல்லது மகன், அல்லது கணவன்,அல்லது சகோதரன், அல்லது (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்களோ, அதற்கு மேலாகவோ பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி இல்லை.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2611. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்கவேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும்போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்" என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்யப் புறப்பட்டுவிட்டாள். இன்னின்ன போரில் என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்நிலையில் நான் என்ன செய்வது?)" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "நீர் சென்று உம்முடைய மனைவியுடன் ஹஜ் செய்வீராக!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர" எனும் (ஆரம்பக்) குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
பாடம் : 75 ஹஜ் முதலான பயணத்திற்காக வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய பிரார்த்தனை.
2612. அலீ பின் அப்தில்லாஹ் அல்அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (பின்வரும் பிரார்த்தனையை)க் கற்றுத் தந்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேனும் பயணம் புறப்பட்டால், தமது ஒட்டகத்தில் ஏறி அமர்ந்தவுடன் மூன்று முறை தக்பீர் ("அல்லாஹு அக்பர்") கூறுவார்கள். பிறகு "சுப்ஹானல்லதீ சக்கர லனா ஹாதா, வ மா குன்னா லஹு முக்ரினீன, வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன். அல்லாஹும்ம, இன்னா நஸ்அலுக ஃபீ சஃபரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா, வ மினல் அமலி மா தர்ளா. அல்லாஹும்ம, ஹவ்வின் அலைனா சஃபரனா ஹாதா. வத்வி அன்னா புஅதஹ். அல்லா ஹும்ம அன்த்தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி, வல்ஃகலீஃபத்து ஃபில்அஹ்ல். அல்லாஹும்ம, இன்னீ அஊது பிக்க மின் வஉஸாயிஸ் ஸஃபரி, வ கஆபத்தில் மன்ழரி, வ சூயில் முன்கலபி ஃபில்மாலி வல்அஹ்ல்" என்று கூறுவார்கள்.
(பொருள்: நாங்கள் இ(ந்த வாகனத்)தைக் கையாளும் திறன் பெற்றிராத நிலையில், எங்களுக்கு இதைப் பணியவைத்த (இறை)வன் தூயவன். நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாய் உள்ளோம். இறைவா, இப்பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ திருப்தியடையக்கூடிய (நற்)செயல்களையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா,இப்பயணத்தை எங்களுக்கு எளிதாக்குவாயாக! இப்பயணத்தின் தூரத்தைச் சுருக்குவாயாக! இறைவா, நீயே என் பயணத் தோழனாகவும் என் குடும்பத்தின் பிரதிநிதியாகவும் இருப்பாயாக! இறைவா, பயணத்தின் சிரமங்களிலிருந்தும், நிலைகுலையச் செய்யும் துயரக் காட்சியிலிருந்தும், செல்வத்திலும் குடும்பத்திலும் நிகழ்ந்துவிடும் தீய மாற்றங்களிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
திரும்பி வரும்போதும் இவ்வாறே பிரார்த்திப்பார்கள். ஆனால், அவற்றுடன் பின்வரும் வரிகளையும் கூடுதலாக ஓதுவார்கள்: "ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன லி ரப்பினா ஹாமிதூன்" (பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும் அவனையே போற்றிப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம்).
அத்தியாயம் : 15
2613. அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் புறப்படும்போது பயணத்தின் சிரமங்களிலிருந்தும், துயரத்தோடு திரும்பி வருவதிலிருந்தும், வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்தும், அநீதிக்குள்ளானவனின் (சாபப்) பிரார்த்தனைக்கு உள்ளாவதிலிருந்தும், குடும்பத்திலும் செல்வத்திலும் தீய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதிலிருந்தும் இறைவனிடம் பாதுகாப்புக் கோருவார்கள். (அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் வஉஸாயிஸ் ஸஃபரி, வ கஆபத்தில் முன்கலபி, வல்ஹவ்ரி பஅதல் கவ்னி, வ தஅவத்தில் மழ்லூமி, வ சூயில் மன்ழரி ஃபில்அஹ்லி வல்மால்" என்று கூறுவார்கள்.)
அத்தியாயம் : 15
2614. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துல் வாஹித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "செல்வத்திலும் குடும்பத்திலும் (ஃபில்மாலி வல்அஹ்ல்)..." என்று இடம்பெற்றுள்ளது.
முஹம்மத் பின் காஸிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பயணத்திலிருந்து திரும்பிவரும் போது "குடும்பத்தில்" (ஃபில் அஹ்லி) எனும் சொற்றொடரை முதலில் கூறுவார்கள் என இடம்பெற்றுள்ளது.
மேற்கண்ட இவ்விருவரின் அறிவிப்பிலும் "அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் வஉஸாயிஸ் ஸஃபர்" (இறைவா,பயணத்தின் சிரமங்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்) எனும் வாசகம் இடம்பெற் றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 76 ஹஜ் முதலான பயணங்களிலிருந்து திரும்பும்போது ஓத வேண்டியவை.
2615. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர், அல்லது படை, அல்லது ஹஜ், அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது குன்றுகள் அல்லது மேடுகள்மீது ஏறினால், மூன்று முறை தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறுவார்கள். பிறகு "லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு. லஹுல் முல்க்கு. வ லஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ஆயிபூன,தாயிபூன, ஆபிதூன, சாஜிதூன, லி ரப்பினா ஹாமிதூன. ஸதகல்லாஹு வஅதஹு; வ நஸர அப்தஹு; வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்" என்று கூறுவார்கள். (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும், சிரம்பணிந்தவர்களாகவும் அவனையே போற்றிப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்யாக்கிவிட்டான்; தன் அடியாருக்கு வெற்றியளித்தான்; கூட்டுப் படைகளைத் தன்னந்தனியாக அவனே தோற்கடித்தான்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அய்யூப் பின் அபீதமீமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இரண்டு முறை தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறுவார்கள்"என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2616. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஓர் அறப்போரிலிருந்து) திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது (நபி (ஸல்) அவர்களுடன்) நானும் அபூதல்ஹா (ரலி) அவர்களும் இருந்தோம். (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் நபியவர்களுக்குப் பின்னால் அவர்களது ஒட்டகத்தில் இருந்தார்கள். மதீனாவின் மேற்புறத்தில் நாங்கள் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள், "ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன லி ரப்பினா ஹாமிதூன" (பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும், அவனையே போற்றிப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம்) என மதீனாவிற்குள் வரும் வரை சொல்லிக்கொண்டேயிருந்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 77 ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் இறங்கித் தங்குவதும் அங்கு தொழுவதும்.
2617. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து திரும்பும்போது) "துல்ஹுலைஃபா" விலுள்ள "அல்பத்ஹா" எனும் விசாலமான பள்ளத்தாக்கில் தமது ஒட்டகத்தை மண்டியிடவைத்து, அங்கு தொழுதார்கள். நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே செய்வார்கள்.
அத்தியாயம் : 15
2618. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தை மண்டியிடவைத்துத் தொழுது வந்த, "துல்ஹுலைஃபா"விலுள்ள "அல்பத்ஹா" பள்ளத்தாக்கில் இப்னு உமர் (ரலி) அவர்களும் தமது ஒட்டகத்தை மண்டியிடவைப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2619. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது, "துல்ஹுலைஃபா"வில் "அல்பத்ஹா" பள்ளத்தாக்கில் தமது ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்குதான் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்வார்கள்.
அத்தியாயம் : 15
2620. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "துல்ஹுலைஃபா"வில் இரவின் இறுதி நேரத்தில் ஓய்வெடுக்கும் இடத்தில் (உறங்கிக் கொண்டு) இருந்தபோது "வளமிக்க பள்ளத்தாக்கில் நீங்கள் இருக்கிறீர்கள்" என (கனவில்) கூறப்பட்டது.
அத்தியாயம் : 15
2621. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "துல்ஹுலைஃபா"வில் (அல்அகீக்) பள்ளத்தாக்கின் நடுவில் இரவின் இறுதி நேரத்தில் ஓய்வெடுக்கும் இடத்தில் (உறங்கிக்கொண்டு) இருந்தபோது, "வளமிக்க பள்ளத்தாக்கில் நீங்கள் இருக்கிறீர்கள்" என (கனவில்) கூறப்பட்டது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓய்வெடுக்கும் இடத்தைத் தேடியவராக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது ஒட்டகத்தை மண்டியிடவைத்து, ஓய்வெடுக்கும் பள்ளிவாசலுக்கருகில் உள்ள இடத்தில், சாலிம் (ரஹ்) அவர்களும் எங்கள் ஒட்டகங்களை மண்டியிடவைத்தார்கள். அந்த இடம் பள்ளத்தாக்கின் நடுவில் உள்ள பள்ளி வாசலுக்குக் கீழே இருந்தது. பள்ளிவாசலுக்கும் கிப்லாவுக்குமிடையே நடுவில் (நபி (ஸல்) அவர்கள் ஓய்வெடுத்த) அந்த இடம் இருந்தது.
அத்தியாயம் : 15
பாடம் : 78 இணைவைப்பவர் எவரும் இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்யக்கூடாது; நிர்வாணமாக எவரும் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரக்கூடாது என்பதும், "பெரிய ஹஜ் நாள்" பற்றிய விவரமும்.
2622. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"விடைபெறும்" ஹஜ்ஜுக்கு முந்தைய ஹஜ்ஜின்போது, அபூபக்ர் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணக் குழுவிற்குத்) தலைவராக ஆக்கியிருந்தார்கள். அப்போது துல்ஹஜ் பத்தாவது நாளில் (மினாவில் வைத்து) "இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது; இந்த ஆலயத்தை நிர்வாணமாக எவரும் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது" என்று பொது அறிவிப்புச் செய்யும் குழுவினரில் ஒருவனாக என்னையும் அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.220
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அபூஹுரைரா (ரலி) அவர்களின் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள், "துல் ஹஜ் பத்தாவது நாளே பெரிய ஹஜ் நாளாகும்" எனக் கூறிவந்தார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 79 ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு.
2623. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். "இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?" என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2624. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் உம்ராச் செய்வது, மறு உம்ராவரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (பாவச்செயல் கலவாத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்குச் சொர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் எட்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2625. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தீய பேச்சுகள் மற்றும் பாவச்செயல்களில் ஈடுபடாமல் இந்த(க் கஅபா) ஆலயத்திற்கு வந்(து ஹஜ் செய்)தவர், அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "தீய பேச்சுகள் மற்றும் பாவச்செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் ஹஜ் செய்தால்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 80 ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும்.
2626. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் மக்காவில் தங்கள் (பெரிய தந்தையின்) வீட்டில் தங்குவீர்களா?" என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(என் பெரிய தந்தையின் புதல்வர்) அகீல், குடியிருப்புகள் அல்லது வீடுகளில் எதையேனும் நமக்காக விட்டுவைத்துள்ளாரா, என்ன?" என்று கேட்டார்கள்.
(நபியவர்களின் பெரிய தந்தையான) அபூதாலிபின் சொத்துக்களுக்கு அகீலும் தாலிபும் வாரிசானார்கள். (அபூதாலிபின் மற்ற இரு புதல்வர்களான) ஜஅஃபர் (ரலி) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் முஸ்லிம்களாக இருந்ததால் (தம் தந்தையின் சொத்துக்களில்) எதற்கும் வாரிசாக (முடிய)வில்லை. (அப்போது) அகீலும் தாலிபும் இறைமறுப்பாளர்களாக இருந்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2627. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜின் போது, நாங்கள் மக்காவை நெருங்கிய வேளையில் நான் (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் நாளை எங்கு தங்குவீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(அபூதாலிபின் மகன்) அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டு வைத்துள்ளாரா?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! இன்ஷா அல்லாஹ் நாளைய தினம் தாங்கள் எங்கு தங்குவீர்கள்?"என்று கேட்டேன். -இது மக்கா வெற்றியின்போது நடந்ததாகும்.- அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டுவைத்துள்ளாரா?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 81 மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்தவர், ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிய பின் மூன்று நாட்களுக்கு மிகாமல் மக்காவில் தங்கியிருக்கலாம்.
2628. அப்துர் ரஹ்மான் பின் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்களிடம் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், (முஹாஜிர் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு, மினாவிலிருந்து திரும்பிய பிறகு) மக்காவில் தங்குவது பற்றி (ஹதீஸ்) எதையேனும் செவியுற்றுள்ளீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு சாயிப் (ரலி) அவர்கள், "முஹாஜிர் (மினாவிலிருந்து) திரும்பிய பிறகு மூன்று இரவுகள் மக்காவில் தங்க அனுமதி உண்டு" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அலாஉ பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். "அதைவிட அதிகமாக்கக் கூடாது" என்று சொன்னதைப் போன்று இருந்தது.
அத்தியாயம் : 15
2629. அப்துர் ரஹ்மான் பின் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் தம் அவையோரிடம், "(முஹாஜிர், ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு) மக்காவில் தங்குவது பற்றி நீங்கள் என்ன செவியுற்றுள்ளீர்கள்?" என்று கேட்டார்கள். அப்போது (அங்கிருந்த) சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள், "முஹாஜிர் தமது (ஹஜ்) கிரியைகளை நிறைவேற்றிவிட்டு மக்காவில் மூன்று இரவுகள் தங்கலாம்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அலாஉ பின் அல் ஹள்ரமீ (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அத்தியாயம் : 15