2650. ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைப் புனித நகரமாக அறிவித்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; இங்கிருந்து இதுவரை (மதீனா புனிதமானது என்று நபியவர்கள் அறிவித்தார்கள். மேலும் சொன்னார்கள்:) அதில் யார் (மார்க்கத்தில் இல்லாத செயல்) ஒன்றைப் புதிதாக உருவாக்குகின்றானோ அவன்மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். (இது ஒரு கடுமையான எச்சரிக்கை) அவன் செய்த கடமையான வழிபாடு மற்றும் கூடுதலான வழிபாடு எதையுமே அல்லாஹ் ஏற்கமாட்டான்" என்று கூறினார்கள் என விடையளித்தார்கள்.
அப்போது மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் "("ஒன்றைப் புதிதாக உருவாக்குகின்றவன்") அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்குப் புகலிடம் அளிக்கின்றவன்" என்று (சேர்த்துக் கொள்ளுமாறு) கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2651. ஆஸிம் பின் சுலைமான் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைப் புனித (நகர)மாக அறிவித்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அது புனித (நகர)மாகும். அதன் மரங்கள் வெட்டப்படக் கூடாது. யார் அவ்வாறு செய்கிறாரோ அவர்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2652. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! மதீனாவாசிகளின் முகத்தலளவையில் நீ வளத்தை ஏற்படுத்துவாயாக! (குறிப்பாக) அவர்களது (அளவைகளான) "ஸாஉ" மற்றும் "முத்"து ஆகியவற்றில் நீ வளத்தை ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 15
2653. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய வளத்தைப் போன்று இரு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக!" எனப் பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2654. யஸீத் பின் ஷரீக் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் தமது வாளின் உறையில் ஏடு ஒன்றைத் தொங்கவிட்டவர்களாக எங்களிடையே உரையாற்றினார்கள். அவர்கள் (தமது உரையில்) "நம்மிடம் அல்லாஹ்வின் வேதத்தையும் (நபியவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற) இந்த ஏட்டையும் தவிர நாம் ஓதுகின்ற நூலேதும் உள்ளதெனக் கூறுகின்றவர் பொய்யுரைத்து விட்டார்" என்று கூறி (விட்டு, அதை விரித்துக் காட்டலா)னார்கள். அதில், (உயிரீட்டிற்காகவும் ஸகாத்தாகவும் வழங்கப்படும்) ஒட்டகங்களின் வயது விவரங்களும் காயங்களுக்கான தண்டனை குறித்தும் எழுதப்பெற்றிருந்தன. மேலும், அதில் பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் எழுதப்பட்டிருந்தது: மதீனா நகரமானது, (அங்குள்ள) "அய்ர்" மலையிலிருந்து "ஸவ்ர்" (எனும் சிறிய) மலைவரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்துகின்றானோ, அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்கு அடைக்கலம் அளிக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் செய்த கடமையான வழிபாட்டையும் கூடுதலான வழிபாட்டையும் மறுமை நாளில் அவனிடமிருந்து அல்லாஹ் ஏற்கமாட்டான். முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது ஒன்றேயாகும். (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்.) அவர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள்கூட அடைக்கலம் அளிக்க முன்வரலாம். தன் தந்தை அல்லாத ஒருவரைத் தன் தந்தை என வாதிடுபவனுக்கு, அல்லது தன்னை விடுதலை செய்த உரிமையாளர் அல்லாத ஒருவரைத் தன் உரிமையாளர் எனக் கூறுபவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வழிபாடு மற்றும் கூடுதலான வழிபாடு எதையுமே மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) மற்றும் ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "அவர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள்கூட அடைக்கலம் அளிக்க முன்வரலாம்" என்பதோடு ஹதீஸ் முடிகிறது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம் பெறவில்லை. இவ்விருவரின் அறிவிப்பில் "அந்த ஏடு அலீ (ரலி) அவர்களது வாளில் தொங்கவிடப்பட்டிருந்தது" எனும் குறிப்பும் காணப்படவில்லை.
அத்தியாயம் : 15
2655. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் மேற்கண்ட அறிவிப்பில் உள்ள விவரங்களுடன்,
"ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவன் முறிக்கிறானோ அவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் செய்த கடமையான வழிபாடு மற்றும் கூடுதலான வழிபாடு எதுவுமே ஏற்கப்படாது" என்பதும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
இவற்றில் "தன் தந்தை அல்லாத ஒருவரை" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "மறுமை நாளில்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "தன்னை விடுதலை செய்த உரிமையாளர் அல்லாதவரைத் தன் காப்பாளராக ஆக்கிக்கொள்பவருக்கு..." எனும் சொற்றொடரும், சாபம் பற்றிய குறிப்பும் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
2656. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனா புனித நகரமாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றைப் புகுத்துகின்றானோ, அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்கு அடைக்கலம் அளிக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கூடுதலான வழிபாடு மற்றும் கடமையான வழிபாடு எதையும் மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2657. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "மறுமை நாளில்" எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
மேலும், "முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது ஒன்றேயாகும். (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்.) அவர்களில் சாமானிய மக்கள்கூட அடைக்கலம் அளிக்க முன்வரலாம். ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவன் முறிக்கிறானோ அவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கூடுதலான வழிபாடு மற்றும் கடமையான வழிபாடு எதையுமே மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான்" என்பதும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2658. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவில் மான்கள் மேய்ந்துகொண்டிருப்பதை நான் கண்டால் அவற்றை (விரட்டவோ பிடிக்கவோ முயன்று) பீதிக்குள்ளாக்கமாட்டேன். (ஏனெனில்) "மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி புனிதமானதாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அத்தியாயம் : 15
2659. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவித்தார்கள். ஆகவே, நான் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மான்களைக் கண்டால்,அவற்றைப் பீதிக்குள்ளாக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைச் சுற்றி பன்னிரண்டு மைல் தொலைதூரத்தைப் பாதுகாக்கப்பட்ட (புனித) எல்லையாக அறிவித்தார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2660. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் (பேரீச்சங்கன்றுகளை நட்டு அதில்) முதலாவதாகப் பழுக்கும் கனியைக் காணும்போது, அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவருவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு, "இறைவா! எங்கள் கனிகளில் எங்களுக்கு வளம் அருள்வாயாக! எங்கள் நகரத்தில் வளம் கொழிக்கச் செய்வாயாக! எங்கள் (அளவைகளான) "ஸாஉ" மற்றும் "முத்"து ஆகியவற்றில் வளத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் அடியாரும் உன் உற்ற நண்பரும் உன் தூதரும் ஆவார்கள். நான் உன் அடிமையும் தூதரும் ஆவேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா நகருக்காக உன்னிடம் பிரார்த்தித்ததைப் போன்று நான் மதீனாவிற்காக உன்னிடம் பிரார்த்திக்கிறேன். அவர்கள் மக்காவிற்காகப் பிரார்த்தித்த அளவிற்கு,அல்லது அதனுடன் மற்றொரு மடங்கும் (வளம் வேண்டி) நான் பிரார்த்திக்கிறேன்" என்பார்கள். பிறகு அ(ங்கு கனியைக் கொண்டு வந்த)வரின் சிறு குழந்தையை அழைத்து அதனிடம் அந்தக் கனியைக் கொடுப்பார்கள்.
அத்தியாயம் : 15
2661. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதலாவதாகப் பழுக்கும் கனி கொண்டுவரப் பட்டால், "இறைவா! எங்கள் நகரத்தில் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! எங்கள் கனிகளிலும் எங்கள் (அளவைகளான) "முத்"து மற்றும் "ஸாஉ" ஆகியவற்றிலும் (தற்போதுள்ள) வளத்துடன் மற்றொரு மடங்கு வளத்தை வழங்குவாயாக" என்று பிரார்த்தித்துவிட்டு, அங்கு வந்திருக்கும் குழந்தைகளில் மிகச் சிறிய குழந்தைக்கு அந்தக் கனியைக் கொடுப்பார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 86 மதீனாவில் குடியிருக்குமாறும் அங்கு ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக் கொள்ளுமாறும் வந்துள்ள ஆர்வமூட்டல்.
2662. மஹ்ரீயின் முன்னாள் அடிமையான அபூசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) மதீனாவில் மக்களுக்குப் பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டன. அப்போது நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று "நான் குழந்தை குட்டிகள் அதிகம் உடையவன்; எங்களுக்குக் கடுமை(யான நெருக்கடி) ஏற்பட்டுள்ளது. எனவே, நான் என் குடும்பத்தாருடன் (மதீனாவைவிட்டு) ஏதேனும் ஒரு செழிப்பான ஊருக்கு இடம்பெயர விரும்புகிறேன்" என்று கூறினேன். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், "அவ்வாறு செய்யாதே! மதீனாவையே (உங்கள் இருப்பிடமாக) வைத்துக்கொள்! ஏனெனில், நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டு "உஸ்ஃபான்" எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு பல இரவுகள் தங்கினோம். அப்போது மக்களில் சிலர், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாம் எந்த (நிம்மதியான) நிலையிலும் இல்லை. நம் குடும்பத்தார் தனிமையில் உள்ளனர். அவர்களைக் குறித்து அச்சமற்ற நிலையில் நாம் இல்லை" என்று கூறினர்.
இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, "நீங்கள் சொன்னதாக எனக்கு எட்டியுள்ள இத்தகவல் என்ன? "நான் எவன்மீது சத்தியம் செய்வேனோ" அல்லது "என் உயிர் எவன் கையிலுள்ளதோ" அவன்மீது சத்தியமாக! "நீங்கள் விரும்பினால்" எனது ஒட்டகத்தில் சேணத்தைப் பூட்டுமாறு கட்டளையிட்டு, அதன் முடிச்சுகள் எதையும் அவிழ்க்காமல் (விரைந்து) நான் மதீனாவிற்குச் செல்ல வேண்டும்; அல்லது (அவ்வாறு செல்ல) "நான் எண்ணுகிறேன்" என்று கூறிவிட்டு, "இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக ஆக்கினார்கள். நான் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக ஆக்கினேன். மதீனாவிற்குள் இரத்தம் சிந்தப்படக் கூடாது. அங்கு போருக்காக ஆயுதம் ஏந்தப்படக்கூடாது. அங்கு தீனிக்காகத் தவிர எந்தத் தாவரமும் வெட்டப்படக் கூடாது. இறைவா! எங்கள் நகரில் எங்களுக்கு வளம் சேர்ப்பாயாக! இறைவா! எங்கள் (பெரிய அளவையான) "ஸாஉ"வில் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! எங்கள் (சிறிய அளவையான) "முத்"துவிலும் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! எங்கள் "ஸாஉ"விலும், எங்கள் "முத்"துவிலும், எங்கள் நகரத்திலும் எங்களுக்கு வளம் சேர்ப்பாயாக! இறைவா! இப்போதுள்ள வளத்துடன் இரு(மடங்கு) வளத்தை ஏற்படுத்துவாயாக!" (என்று பிரார்த்தித்தார்கள். பிறகு) "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! மதீனாவின் அனைத்து கணவாய்களிலும் சாலை முனைகளிலும் இரு வானவர்கள் இருந்து அதைக் காவல் புரிந்து கொண்டேயிருக்கின்றனர்; நீங்கள் மதீனா சென்றடையும் வரை (அவ்வாறு காவல் புரிந்து கொண்டிருக்கின்றனர்)" என்று கூறினார்கள்.
பிறகு மக்களிடம், "புறப்படுங்கள்" என்றார்கள். அவ்வாறே நாங்கள் மதீனா நோக்கிப் புறப்பட்டோம். "நாங்கள் எவன்மீது சத்தியம் செய்வோமோ" அல்லது "எவன்மீது சத்தியம் செய்யப்படுமோ" அவன்மீது ஆணையாக! (இங்கு அறிவிப்பாளர் ஹம்மாம் பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களே ஐயத்துடன் அறிவிக்கிறார்கள்.) நாங்கள் மதீனாவிற்குள் நுழைந்து எங்கள் ஒட்டகங்களிலிருந்து சேணங்களை நாங்கள் இறக்கி வைத்திருக்கவில்லை. அதற்குள் எங்கள்மீது அப்துல்லாஹ் பின் ஃகத்ஃபானின் மக்கள் தாக்குதல் தொடுத்தனர். அதற்கு முன் (தாக்குதல் தொடுக்க) எந்தத் தூண்டுகோலும் அவர்களுக்கு இருக்கவில்லை.
அத்தியாயம் : 15
2663. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைவா! எங்கள் (அளவைகளான) "ஸாஉ" மற்றும் "முத்"து ஆகியவற்றில் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! இப்போதுள்ள வளத்துடன் இன்னும் இரு (மடங்கு) வளத்தைத் தருவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2664. மஹ்ரீயின் முன்னாள் அடிமையான அபூசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் "அல்ஹர்ரா" (போர் நடந்த) நாட்களில் சென்று, நான் மதீனாவிலிருந்து இடம்பெயர்ந்து செல்வது தொடர்பாக ஆலோசனை கேட்டேன். மேலும், அவர்களிடம் (மதீனாவின்) விலைவாசி (உயர்ந்துள்ளது) பற்றியும், எனது பெரிய குடும்பம் பற்றியும் அவர்களிடம் முறையிட்டேன். மதீனாவின் நெருக்கடியையும் பசி பட்டினியையும் சகித்துக்கொண்டு என்னால் இருக்க முடியாது என்றும் தெரிவித்தேன். அப்போது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், "உமக்குக் கேடுதான். அ(வ்வாறு மதீனாவைவிட்டுச் செல்வ)தற்கு உம்மை நான் அனுமதிக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மதீனாவின் இடர்பாடுகளைச் சகித்துக்கொண்டு இறந்துபோகும் எந்த மனிதருக்கும் மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவனாக, அல்லது சான்றுரைப்பவனாக இருப்பேன்; அவர் முஸ்லிமாக இருந்தால்!" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2665. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்ததைப் போன்று நான் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கிறேன்.
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதை அறிவிப்பவரான) அப்துர் ரஹ்மான் பின் அபீசயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு (என் தந்தை) அபூசயீத் (ரலி) அவர்கள் எவரது கையிலாவது (மதீனாவின்) பறவை இருக்கக் கண்டால், உடனே அவரது கரத்திலிருந்து அதை விடுவித்துப் பறக்க விட்டுவிடுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2666. சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் மதீனாவைச் சுட்டிக்காட்டி, "இது பாதுகாப்பான புனித நகரம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2667. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மதீனாவிற்கு (நாடு துறந்து) வந்த போது, மதீனாவில் பெருநோய் ஏற்பட்டிருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் நோய்வாய்ப்பட்டனர். தம் தோழர்கள் நோய்வாய்ப்படுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டபோது, "இறைவா! நீ மக்காவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கியதைப் போன்று, அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! மேலும், இந்நகரை ஆரோக்கியமானதாகவும் ஆக்குவாயாக! இதன் (அளவைகளான) "ஸாஉ"மற்றும் "முத்"து ஆகியவற்றில் எங்களுக்கு நீ வளத்தை வழங்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை "ஜுஹ்ஃபா" எனுமிடத்திற்கு இடம்பெயரச் செய்வாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2668. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவின் இடர்பாடுகளைச் சகித்துக்கொண்டவருக்காக மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவனாக, அல்லது சான்றுரைப்பவனாக இருப்பேன்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2669. ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான யுஹன்னஸ் பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களை ஹஜ்ஜாஜின் ராணுவம் முற்றுகையிட்ட) குழப்பமான காலகட்டத்தில் நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் அவர்களுடைய அடிமைப் பெண்களில் ஒருவர் வந்து சலாம் சொல்லிவிட்டு, "அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! நெருக்கடியான ஒரு காலகட்டம் நமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே,நான் (மதீனாவிலிருந்து) வெளியேற விரும்புகிறேன்" என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "பேதைப் பெண்ணே! உட்கார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மதீனாவின் இடர்பாடுகளையும் கஷ்ட நஷ்டங்களையும் சகித்துக்கொள்ளும் எவருக்கும் மறுமைநாளில் நான் சான்றுரைப்பவனாக, அல்லது பரிந்துரைப்பவனாக இருப்பேன்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 15