பாடம் : 28 ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் திரும்பிச் செல்வது.
1760. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இப்னுத் தஹ்தாஹ் (ரலி) அவர்களது நல்லடக்கத்தை முடித்தபோது அவர்களிடம் சேணம் பூட்டப்படாத வெற்றுடலான குதிரையொன்று கொண்டுவரப்பட்டது. அதிலேறி அவர்கள் திரும்பினார்கள். நாங்கள் அவர்களைச் சுற்றி நடந்துவந்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்னுத் தஹ்தாஹ் (ரலி) அவர்களுக்கு ஜனாஸாத் தொழுகை தொழுவித்தபிறகு அவர்களிடம் சேணம் பூட்டப்படாத வெற்றுடலான குதிரையொன்று கொண்டுவரப்பட்டது. அதை ஒரு மனிதர் பிடித்துக்கொள்ள அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏறிக்கொண்டார்கள். அது சீராக ஓடலாயிற்று. நாங்கள் அதைப் பின் தொடர்ந்து விரைந்து நடக்கலானோம். அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவர், "இப்னுத் தஹ்தாஹ் அல்லது அபுத்தஹ்தாஹ் (அறிவிப்பாளர் ஷுஅபாவிடமிருந்து அறிவிப்பவரின் ஐயம்) அவர்களுக்காக சொர்க்கத்தில் எத்தனையோ பேரீச்சங்குலைகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்றார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 29 உட்குழியும் பிரேதத்தின் மீது செங்கற்களை அடுக்குவதும்.
1761. ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயில் இருந்தபோது, "(நான் இறந்ததும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகச் செய்யப்பட்டதைப் போன்று, (குழியினுள்) எனக்காக உட்குழியொன்றை வெட்டுங்கள்; என்மீது நன்கு செங்கற்களை அடுக்கிவையுங்கள்!" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 11
பாடம் : 30 கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (பிரேதத்தை) வைப்பது.
1762. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கப்றுக்குள் சிவப்புப் போர்வை ஒன்று விரிக்கப் பட்டது.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான் கூறுகின்றேன்:) இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள அபூஜம்ரா என்பவரின் பெயர் நஸ்ர் பின் இம்ரான் என்பதாகும். (இங்கு இடம்பெறாத மற்றொருவரான) அபுத்தய்யாஹ் என்பாரின் பெயர் யஸீத் பின் ஹுமைத் ஆகும். இவர்கள் இருவரும் (குராசான் நாட்டிலுள்ள) "சர்கஸ்" எனும் நகரத்தில் இறந்தனர்.
அத்தியாயம் : 11
பாடம் : 31 மண்ணறை(யின் மேற்பகுதி)யைத் தரைக்குச் சமமாக்குதல்.
1763. ஸுமாமா பின் ஷுஃபை (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள "ரோடிஸ்" தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், அவரது கப்றைத் தரைமட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். பின்னர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்றைத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1764. அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!"என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "எந்த உருவப் படங்களையும் நீ அழிக்காமல் விடாதீர்!" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 32 கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது.
1765. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கப்றுகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1766. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கப்றுகள் காரையால் பூசப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 33 கப்றுமீது அமர்வதோ அதன் மீது தொழுவதோ கூடாது.
1767. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து அவரது சருமம்வரை சென்றடைவதானது, ஓர் அடக்கத்தலத்தின் (கப்று)மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1768. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடக்கத்தலங்கள் (கப்று)மீது உட்காராதீர்கள்; அவற்றை நோக்கித் தொழாதீர்கள்.
இதை அபூமர்ஸத் கன்னாஸ் பின் அல் ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
1769. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடக்கத்தலங்களை (கப்று) நோக்கித் தொழாதீர்கள்; அவற்றின் மீது உட்காராதீர்கள்.
இதை அபூமர்ஸத் அல்ஃகனவீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
பாடம் : 34 பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது.
1770. அப்பாத் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் பிரேதத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டுசென்று தொழுகை நடத்துமாறு கூறினார்கள். மக்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் எவ்வளவு விரைவாக மக்கள் மறந்துவிடுகின்றனர்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சுஹைல் பின் அல்பைளா (ரலி) அவர்களுக்குப் பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தினார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1771. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இறந்தபோது அவரது பிரேதத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டுவருமாறும், தாங்கள் அவருக்கு (இறுதித் தொழுகை) தொழப் போவதாகவும் நபி (ஸல்) அவர்களின் துணைவியர் சொல்லி அனுப்பினார்கள். அவ்வாறே மக்களும் செய்தனர். அப்போது அவரது பிரேதம் நபி (ஸல்) அவர்களின் துணைவியரின் அறைகளுக்கு அருகில் கொண்டுவந்து,அவர்கள் தொழுதுகொள்வதற்காக வைக்கப்பட்டது. பிறகு "மகாஇத்" எனும் இடம் நோக்கி இருந்த "பாபுல் ஜனாயிஸ்" தலைவாயில் வழியாகப் பிரேதம் வெளியே கொண்டுசெல்லப்பட்டது. இது குறித்து மக்கள் குறை கூறுவதாகவும் "பிரேதங்களைப் பள்ளிவாசலுக்குள் கொண்டுசெல்லப்படாது" என்று அவர்கள் பேசிக் கொள்வதாகவும் நபி (ஸல்) அவர்களுடைய துணைவியருக்குச் செய்தி எட்டியது. அப்போது நான் "மக்கள் தங்களுக்குத் தெரியாத விஷயத்தில் ஏன் அவசரப்பட்டுக் குறை கூறுகின்றனர்? பள்ளிவாசலுக்குள் ஒரு பிரேதத்தைக் கொண்டு சென்றதற்காக எங்களை அவர்கள் குறைசொல்கின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுஹைல் பின் அல்பைளா (ரலி) அவர்களுக்குப் பள்ளிவாசலின் நடுப்பகுதியில்தான் தொழுகை நடத்தினார்கள்" என்று கூறினேன்.
இதை அப்பாத் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
1772. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இறந்தபோது "அவரது பிரேதத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டுசெல்லுங்கள்; அவருக்காக நான் தொழப்போகிறேன்" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஆட்சேபம் தெரிவிக்கப் பட்டபோது, "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பைளா எனும் பெண்மணியின் இரு புதல்வர்களான சுஹைலுக்கும் அவருடைய சகோதரருக்கும் பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தினார்கள்" என்று கூறினார்கள்.
(முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் கூறுகின்றேன்:) சுஹைல் பின் தஅத் என்பதே அவரது பெயராகும். பைளா என்பது அவருடைய தாயாரின் (புனை) பெயராகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 35 அடக்கத்தலங்களில் நுழையும்போது கூற வேண்டியதும் அடக்கம் செய்யப் பட்டிருப்பவர்களுக்காகப் பிரார்த்திப்பதும்.
1773. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதிநாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும்(மதீனாவிலுள்ள) "பகீஉல் ஃகர்கத்" பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு) கூறுவார்கள்:
அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ அத்தாக்கும் மா தூஅதூன ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மஃக்ஃபிர் லி அஹ்லி பகீஇல் ஃகர்கத்.
(பொருள்: இந்த அடக்கத்தலத்தில் உள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது சாந்தி பொழியட்டும்! நீங்கள் நாளை சந்திக்கப்போவதாக வாக்களிக்கப்பட்ட ஒன்று, தவணை அளிக்கப்பட்ட பின்னர் உங்களிடம் வந்துவிட்டது. நாங்கள் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். இறைவா! பகீஉல் ஃகர்கதில் உள்ளோருக்கு நீ மன்னிப்பளிப்பாயாக!)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உங்களிடம் வந்துவிட்டது" (அ(த்)தாக்கும்) எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 11
1774. அப்துல்லாஹ் பின் கஸீர் அல்முத்தலிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) ஆயிஷா (ரலி) அவர்கள் "நான் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா?" என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் "ஆம் (அறிவியுங்கள்)" என்று கூறினோம் என முஹம்மத் பின் கைஸ் பின் மக்ரமா (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பில் (பின்வருமாறு) காணப்படுகிறது:
ஒரு நாள் முஹம்மத் பின் கைஸ் பின் மக்ரமா பின் அல்முத்தலிப் (ரஹ்) அவர்கள், "நான் என்னைப் பற்றியும் என் அன்னையைப் பற்றியும் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா?" என்று கேட்டார்கள். அவர்கள் தம்மை ஈன்றெடுத்த அன்னையைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார்கள் என்று நாங்கள் எண்ணினோம். பிறகு அவர்கள் கூறினார்கள்:
(ஒரு நாள் அன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள் "நான் என்னைப் பற்றியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றியும் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா?" என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம் (அறிவியுங்கள்)" என்று கூறினோம். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் என்னுடன் தங்க வேண்டிய இரவில் (என்னிடம்) வந்தார்கள். தமது மேலாடையை (எடுத்துக் கீழே) வைத்தார்கள்; தம் காலணிகளைக் கழற்றித் தமது கால்மாட்டில் வைத்துவிட்டுத் தமது கீழாடையின் ஓரத்தைப் படுக்கையில் விரித்து அதில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். நான் உறங்கிவிட்டேன் என்று அவர்கள் எண்ணும் அளவு பொறுத்திருந்தார்கள். (நான் உறங்கிவிட்டதாக எண்ணியதும்) மெதுவாகத் தமது மேலாடையை எடுத்து (அணிந்து)கொண்டார்கள்; மெதுவாகக் காலணிகளை அணிந்தார்கள்; கதவைத் திறந்து வெளியே சென்று மெதுவாகக் கதவை மூடினார்கள்.
உடனே நான் எனது தலைத் துணியை எடுத்து, தலையில் வைத்து மறைத்துக் கொண்டேன்; கீழாடையை அணிந்துகொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தேன். அவர்கள் "அல்பகீஉ" பொது மையவாடிக்குச் சென்று நின்றார்கள்; அங்கு நீண்ட நேரம் நின்றிருந்தார்கள். பிறகு மூன்று முறை கைகளை உயர்த்தினார்கள். பிறகு (வீடு நோக்கித்) திரும்பினார்கள்; நானும் திரும்பினேன். அவர்கள் விரைவாக நடந்தபோது நானும் விரைவாக நடந்தேன். அவர்கள் ஓடிவந்தார்கள்; நானும் (அவ்வாறே) ஓடிவந்தேன்;அவர்களுக்கு முன்னால் (வீட்டுக்கு) வந்து படுத்துக்கொண்டேன். நான் படுத்த சிறிது நேரத்தில் அவர்கள் (வீட்டுக்குள்) வந்து "ஆயிஷ்! உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு ஏன் மூச்சு வாங்குகிறது?" என்று கேட்டார்கள். நான் "ஒன்றுமில்லை" என்றேன். அதற்கு அவர்கள் "ஒன்று, நீயாகச் சொல்லிவிடு! இல்லாவிட்டால் நுண்ணறிவாளனும் மென்மையானவனுமான அல்லாஹ் எனக்கு அறிவித்துவிடுவான்" என்று கூறினார்கள். நான் "அல்லாஹ்வின் தூதரே, என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!" என்று கூறிவிட்டு, நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் "ஓ நீதான் எனக்கு முன்னால் நான் கண்ட அந்த உருவமா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். உடனே அவர்கள் என் நெஞ்சில் கையை வைத்துத் தள்ளினார்கள். எனக்கு வலித்தது. பிறகு "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (உனக்கு) அநீதியிழைத்துவிடுவார்கள் என நீ எண்ணிக்கொண்டாயோ?" என்று கேட்டார்கள். நான் "ஆம்! மனிதர்கள் என்னதான் மறைத்தாலும் அல்லாஹ் அதை அறிந்துவிடுவானே!" என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ என்னைக் கண்டபோது (வானவர்) ஜிப்ரீல் என்னிடம் வந்து மறைவாக ஓரிடத்தில் நின்றுகொண்டு என்னை அழைத்தார். நானும் அவரது அழைப்பை ஏற்று உனக்குத் தெரியாமல் மறைவாக அவரிடம் சென்றேன். -(பொதுவாக) நீ உனது ஆடையை கழற்றிவைத்துவிட்ட நேரங்களில் அவர் நீ இருக்கும் இடத்திற்கு வரமாட்டார்- (எனவே தான், மறைவாக நின்று அவர் என்னை அழைத்தார்.) நான் நீ உறங்கிவிட்டதாக நினைத்தேன். உன்னை எழுப்பிவிடவும் நான் விரும்பவில்லை. நீ தனிமையில் இருப்பதை நினைத்து பயந்துவிடுவாய் என்று நான் அஞ்சினேன். (எனவே, உன்னை உறக்கத்திலிருந்து எழுப்பவில்லை.) அப்போது ஜிப்ரீல் "உம் இறைவன் உம்மை "பகீஉ"வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிடுகின்றான்" என்று கூறினார்" என்றார்கள்.
தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் "அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத்தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்" என்று சொல்" என்றார்கள்.
(பொருள்: அடக்கத்தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)
அத்தியாயம் : 11
1775. புரைதா பின் அல்ஹஸீப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு, அவர்கள் அடக்கத்தலங்களுக்குச் செல்லும்போது கூற வேண்டியதைக் கற்றுக்கொடுத்துவந்தார்கள். அ(வ்வாறு கற்றுக் கொண்ட)வர்களில் ஒருவர் "அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல்முஸ்லிமீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு ல லாஹிகூன். அஸ்அலுல்லாஹ லனா வ ல(க்)குமுல் ஆஃபிய்யா" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்ததாகக்) கூறினார்.
(பொருள்: அடக்கத்தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நாம் அல்லாஹ் நாடினால் (உங்களிடம்) வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். நான் எங்களுக்காகவும் உங்களுக்காகவும் விமோசனத்தை வேண்டுகிறேன்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட வாசக அமைப்பு இடம்பெற்றுள்ளது.
ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி" என்று தொடங்குகிறது.
அத்தியாயம் : 11
பாடம் : 36 நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்திக்க இறைவனிடம் அனுமதி கோரியது.
1776. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். அவன் அனுமதி வழங்கவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திக்க அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1777. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், "நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1778. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களை அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாமென்று தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றைச் சந்தியுங்கள். குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்துவைக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் விரும்பும் நாட்கள்வரை சேமித்துவையுங்கள். பழச்சாறு மதுபானங்கள் ஊற்றிவைக்கப் பயன்படும் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்று உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகலாம். ஆனால், போதையூட்டுகின்றவற்றை அருந்தாதீர்கள்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் புரைதா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 37 தற்கொலை செய்தவனுக்கு (இறுதி)த் தொழுகையைக் கைவிட்டது.
1779. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழவைக்கவில்லை.
அத்தியாயம் : 11