1740. மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
இம்மூன்று அறிவிப்புகளிலும் "நான்கு தக்பீர்கள் கூறினார்கள்" என்ற குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 11
1741. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மண்ணறை (கப்று) அருகில் (அதற்கான இறுதித் தொழுகை) தொழுதார்கள்.
அத்தியாயம் : 11
1742. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த "பெண்" அல்லது "இளைஞர்" ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். "அவர் இறந்துவிட்டார்" என மக்கள் தெரிவித்தனர். "நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (இறந்த) விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதி விட்டனர் போலும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள்" என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள். பிறகு "இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள் மண்டிக்காணப்படுகின்றன. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான்" என்று கூறினார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1743. அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், எங்களில் இறந்தவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிக்கும்போது, (பெரும்பாலும்) நான்கு தக்பீர்கள் கூறுவார்கள். (ஆனால்) ஒரு ஜனாஸாத் தொழுகையின் போது ஐந்து தக்பீர்கள் கூறினார்கள். இதுபற்றி நான் அவர்களிடம் கேட்டதற்கு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சில வேளைகளில்) ஐந்து தக்பீர்கள் கூறுபவர்களாய் இருந்தார்கள்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 24 ஜனாஸாவைக் கண்டு எழுந்து நிற்றல்.
1744. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரேதத்தைக் கண்டால் அது "உங்களைக் கடந்து செல்லும்வரை" அல்லது "(கீழே) வைக்கப் படும்வரை" அதற்காக எழுந்து நில்லுங்கள்.
இதை ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1745. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் பிரேதத்தைக் கண்டும் அதனுடன் (நடந்து) செல்லப்போவதில்லை என்றால், அது அவரைக் கடந்துசெல்லும் வரை, அல்லது அது அவரைக் கடந்துசெல்வதற்கு முன்னால் (கீழே) வைக்கப்படும்வரை அவர் எழுந்து நிற்கட்டும்!
இதை ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1746. மேற்கண்ட ஹதீஸ் ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உங்களில் ஒருவர் பிரேதத்தைக் கண்டால் அதைப் பின்தொடரும் எண்ணம் இல்லாதபோது, அது கடந்து செல்லும்வரை அவர் எழுந்து நிற்கட்டும்" என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
1747. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிரேதத்தைப் பின்தொடர்ந்து சென்றால், அது (கீழே) வைக்கப்படும்வரை உட்கார வேண்டாம்!
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
1748. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள். அதைப் பின்தொடர்ந்து செல்பவர், அது (கீழே) வைக்கப்படும்வரை உட்கார வேண்டாம்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1749. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பிரேதம் (ஜனாஸா) எங்களைக் கடந்து சென்றபோது உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். அவர்களுடன் நாங்களும் எழுந்து நின்றோம். நாங்கள் "அல்லாஹ்வின் தூதரே, இது யூதப் பெண்ணின் பிரேதம்" என்றோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மரணம் என்பது திடுக்கிடச் செய்யும் ஒரு விஷயமாகும். எனவே, பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1750. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரேதம் தம்மைக் கடந்து சென்றபோது எழுந்து, அது (தமது கண்ணை விட்டு) மறையும்வரை நின்றார்கள்.
அத்தியாயம் : 11
1751. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு யூதரின் பிரேதத்திற்காக நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் எழுந்து, அது (கண்ணைவிட்டு) மறையும்வரை நின்றனர்.
அத்தியாயம் : 11
1752. அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கைஸ் பின் சஅத் (ரலி), சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) ஆகியோர் (இராக் நாட்டிலுள்ள) "காதிசிய்யா" எனும் இடத்தில் இருந்தபோது, ஒரு பிரேத (ஊர்வல)ம் அவர்களைக் கடந்து சென்றது. உடனே அவர்கள் இருவரும் எழுந்து நின்றனர். அப்போது அவர்களிடம், "இது இந்த நாட்டு (முஸ்லிமல்லாத) பிரஜையின் பிரேதமாயிற்றே?" என்று கூறப்பட்டது. அதற்கு அவ்விருவரும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடம், "இது யூதரின் பிரேதம்" எனக் கூறப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இது ஓர் (மனித) உயிரில்லையா?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்" என்றனர்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் கைஸ் பின் சஅத் (ரலி), சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) ஆகியோர் வழியாக மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
அதில் "அதற்கு அவர்கள் இருவரும் "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஒரு பிரேத (ஊர்வல)ம் எங்களைக் கடந்து சென்றது" என்று கூறியதாக ஹதீஸ் தொடர்கிறது.
அத்தியாயம் : 11
பாடம் : 25 ஜனாஸாவைக் கண்டு எழுந்து நிற்கும் விதி மாற்றப்பட்டுவிட்டது.
1753. வாகித் பின் அம்ர் பின் சஅத் பின் முஆத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு நல்லடக்க நிகழ்ச்சியில் இருந்தபோது நான் நின்றுகொண்டேயிருந்ததை நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கண்டார்கள். ஆனால், அவர்கள் பிரேதம் வைக்கப்படுவதை எதிர்பார்த்து உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் "ஏன் நிற்கிறீர்கள்?" என்று என்னிடம் கேட்டார்கள். நான் "பிரேதம் வைக்கப்படுவதை எதிர்பார்த்து நிற்கிறேன். அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸே இதற்குக் காரணம்" என்றேன். அதற்கு அவர்கள் மஸ்ஊத் பின் அல்ஹகம் (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வரும்) ஹதீஸை அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிரேதத்தைக் கண்டால் ஆரம்பக்காலத்தில்) எழுந்து நின்றார்கள். பின்னர் உட்கார்ந்து விட்டார்கள்" என அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1754. மஸ்ஊத் பின் அல்ஹகம் அல்அன் சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் பிரேதங்களுக்காக எழுந்து நிற்பது தொடர்பாக "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பக்காலத்தில்) எழுந்து நின்றார்கள்; பின்னர் உட்கார்ந்துவிட்டார்கள்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் யஹ்யா பின சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
வாகித் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் பிரேதம் வைக்கப்படும்வரை நின்றுகொண்டிருப்பதைக் கண்டபோதுதான் நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1755. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பக்காலத்தில்) பிரேதத்தைக் கண்டு எழுந்து நிற்பதைப் பார்த்தபோது நாங்களும் நின்றோம்; (பிற்காலத்தில்) அவர்கள் உட்கார்ந்தபோது நாங்களும் உட்கார்ந்துவிட்டோம்.
இதை மஸ்ஊத் பின் அல்ஹகம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 26 இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை.
1756. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பிரேதத்திற்காகத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ஓதிய பிரார்த்தனையை நான் மனனமிட்டுள்ளேன். அவர்கள், "அல்லா ஹும் மஃக்பிர் லஹு, வர்ஹம்ஹு, வ ஆஃபிஹி, வஉஃபு அன்ஹு, வ அக்ரிம் நுஸுலஹு, வ வஸ்ஸிஃ முத்கலஹு, வஃக்சில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத், வ நக்கிஹி மினல் கத்தாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸி, வ அப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹி, வ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி, வ ஸவ்ஜன் கைரம் மின் ஸவ்ஜிஹி, வ அத்கில்ஹுல் ஜன்னத்த, வ அஇத்ஹு மின் அதாபில் கப்ரி / மின் அதாபிந் நார்" என்று பிரார்த்தித்தார்கள்.
(பொருள்: இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; (மறுமையின் சோதனைகளிலிருந்து) இவரைக் காப்பாயாக; பாவங்களை மாய்ப்பாயாக; இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்லதாக்குவாயாக! இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங்குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் (கழுவி),அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தூய்மைப்படுத்துவாயாக; மேலும், இங்குள்ள வீட்டைவிடச் சிறந்த வீட்டை அவருக்கு வழங்குவாயாக; இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தை வழங்குவாயாக;இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையை இவருக்கு வழங்குவாயாக; இவரைச் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக;இவரை மண்ணறையின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக / நரகத்தின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக!)
அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தப் பிரேதம் நானாக இருந்திருக்கக் கூடாதா என நான் ஆசைப்பட்டேன்.
இந்த ஹதீஸ் அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1757. அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகையில் "அல்லாஹும் மஃக்ஃபிர் லஹு, வர்ஹம்ஹு, வஉஃபு அன்ஹு, வ ஆஃபிஹி, வ அக்ரிம் நுஸுலஹு, வ வஸ்ஸிஃ முத்கலஹு, வஃக்சில்ஹு பி மாயின் வ ஸல்ஜின் வ பரதின், வ நக்கிஹி மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், வ அப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹி, வ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி, வ ஸவ்ஜன் கைரம் மின் ஸவ்ஜிஹி, வ கிஹி ஃபித்னத்தல் கப்றி வ அதாபந் நார்" என்று ஓதுவதை நான் செவியுற்றேன்.
(பொருள்: இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; இவருடைய பாவங்களை மாய்த்து இவரைக் காப்பாயாக! இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்ல தாக்குவாயாக! இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங்குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் கழுவி, அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுத்தப்படுவதைப் போன்று தூய்மையாக்குவாயாக; மேலும், இங்குள்ள வீட்டைவிடச் சிறந்த வீட்டையும் இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தையும் இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக;மண்ணறையின் வேதனையிலிருந்தும் நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் இவரைக் காத்தருள்வாயாக.)
அந்தப் பிரேதத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்ததைப் பார்த்துவிட்டு, அது நானாக இருந்திருந்தால் நன்றாகயிருந்திருக்குமே என்று நான் ஆசைப்பட்டேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 27 ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்?
1758. சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு கஅப் (ரலி) எனும் பெண்மணி பிரசவ இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில் இறந்துவிட்டார். அவருக்காக நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்தார்கள். அப்போது அவர்களைப் பின்பற்றி நானும் தொழுதேன். அத்தொழுகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரேதத்தின் மையப்பகுதிக்கு நேராக நின்று தொழுவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "உம்மு கஅப்" எனும் பெயர் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 11
1759. சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சிறுவனாக இருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (பல தகவல்களை) மனனமிட்டுவந்தேன். இங்கு என்னைவிட வயதில் பெரியவர்கள் இருப்பதே என்னை அவற்றைச் சொல்லவிடாமல் தடுக்கிறது. நான் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று, பிரசவ இரத்தப்போக்கில் இறந்துபோன பெண்ணிற்காக ஜனாஸாத் தொழுகை தொழுதிருக்கிறேன். அத்தொழுகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரேதத்தின் மையப்பகுதிக்கு நேராக நின்று தொழுவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்கள்,அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிற்காக தொழுவித்தபோது, சடலத்தின் மையப்பகுதிக்கு நேராக நின்றார்கள்" என்று (சமுரா (ரலி) கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11