பாடம் : 54 நபி (ஸல்) அவர்கள் அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் பற்றிய விளக்கம்.
1515. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான குறைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி(
ஆகியோர் என்னிடம் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று "எங்கள் அனைவரின் சலாமையும் கூறுவீராக! அஸ்ருக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுவது பற்றி அம்மையாரிடம் கேட்பீராக! "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க, அத்தொழுகையைத் தாங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோமே!" என்று கேட்பீராக!" என்று கூறினர். (மேலும்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தாமும் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் (இவ்வாறு அஸ்ருக்குப் பின் தொழுபவர்களை) அடிப்பவர்களாக இருந்ததையும் தெரிவிக்கச் சொன்னார்கள்.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அம்மூவரும் என்னை அனுப்பிவைத்த நோக்கத்தைச் சொன்னேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "நீர் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் கேளும்!" என்று கூறினார்கள். நான் அம்மூவரிடம் திரும்பிச் சென்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதைச் சொன்னேன். உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்ட அதே கேள்வியைக் கேட்குமாறு என்னை (மீண்டும்) அம்மூவரும் அனுப்பினார்கள். (நான் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைக் கூறியபோது) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அஸ்ருக்குப் பின்) இவ்விரு ரக்அத்களைத் (தொழுவதைத்) தடை செய்ததை நான் கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அவ்விரு ரக்அத்கள் தொழுததை நான் பார்த்தேன். (ஒரு நாள்) அவர்கள் அஸ்ர் தொழுதுவிட்டு எனது வீட்டுக்கு வந்து, அவ்விரு ரக்அத்களைத் தொழுதார்கள். அப்போது என்னுடன் அன்சாரிகளில் பனூ ஹராம் குலத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களில் ஓர் அடிமைப் பெண்ணை, தொழுதுகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி "நீ அவர்களுக்கு அருகில் சென்று "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டாம் எனத் தடுத்ததை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே" என நான் கேட்டதாக நீ கூறு. அவர்கள் தமது கையால் சைகை செய்தால் நீ பின்வாங்கி (வந்து)விடு!" எனக் கூறினேன். அப்பெண்ணும் (சொன்னபடி) செய்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்தபோது அப்பெண்மணி திரும்பி வந்துவிட்டார். தொழுகையை முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அபூஉமைய்யாவின் மகளே! அஸ்ருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்களைப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் குலத்தாரில் சிலர் தம் குலத்தார் இஸ்லாத்தை ஏற்றுள்ள செய்தியுடன் என்னிடம் வந்திருந்தனர். அதனால் லுஹ்ருக்குப் பின்னால் உள்ள இரண்டு ரக்அத்கள் தொழ முடியவில்லை. அத்தொழுகையே இந்த இரண்டு ரக்அத்களாகும்" என்றார்கள் என உம்மு சலமா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 6
1516. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ருக்குப் பின்னால் தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ருக்கு முன்னால் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ஏதேனும் அலுவல் காரணத்தால் தொழ முடியாமற்போகும் போது, அல்லது மறந்துவிடும்போது அவ்விரு ரக்அத்களையும் அஸ்ருக்குப் பின்னால் தொழுவார்கள். பின்னர் அவ்விரு ரக்அத்களையும் நிலையாகத் தொழலானார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதால் நிலையாகத் தொழுதுவருவார்கள்" என்று விடையளித்தார்கள். -இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1517. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்த நாட்களில் ஒருபோதும் அஸ்ருக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவதை விட்டதேயில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1518. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டில் இருக்கும்போது இரண்டு தொழுகைகளை இரகசியமாகவோ பகிரங்கமாகவோ ஒருபோதும் விட்டதில்லை. (அவை:) ஃபஜ்ர் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள்; அஸ்ர் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1519. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் தங்கியிருக்கும் நாளில் என் வீட்டில் இரு ரக்அத்கள் -அஸ்ருக்குப் பின் இரண்டு ரக்அத்கள்- தொழாமல் இருந்ததில்லை.
இதை அஸ்வத் (ரஹ்) மற்றும் மஸ்ரூக் (ரஹ்) ஆகியோர் அறுதியிட்டு அறிவிக்கின்றனர்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 55 மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத்தக்கதாகும்.
1520. முக்தார் பின் ஃபுல்ஃபுல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் அஸ்ருக்குப் பின் கூடுதலான தொழுகை தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் "அஸ்ருக்குப் பின் (கூடுதலான) தொழுகை தொழுததற்காக உமர் (ரலி) அவர்கள் காலத்தில் (தொழுபவரின்) கையில் அவர்கள் அடிப்பார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் சூரியன் மறைந்த பின் மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுதுவந்தோம்" என்று கூறினார்கள். நான் "அவ்விரு ரக்அத்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்களா?" எனக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் "நாங்கள் அவ்விரு ரக்அத்களையும் தொழுவதைப் பார்ப்பார்கள். எங்களைத் தொழச் சொல்லவுமில்லை; தொழ வேண்டாம் எனத் தடுக்கவுமில்லை" என விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1521. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மதீனாவில் இருந்தபோது தொழுகை அறிவிப்பாளர் மஃக்ரிப் தொழுகைக்காக அறிவிப்புச் செய்துவிட்டால் மக்கள் (நபித் தோழர்கள்) தூண்களை நோக்கிச் சென்று (அதன் அருகில் நின்று) தலா இரண்டிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். வெளியூரிலிருந்து யாரேனும் பள்ளிவாசலுக்கு வந்தால் மிகுதியான பேர் அவ்விரு ரக்அத்கள் தொழுவதைக் கண்டு (மஃக்ரிப்) தொழுகை முடிந்துவிட்டது என எண்ணிவிடுவர்.
அத்தியாயம் : 6
பாடம் : 56 ஒவ்வொரு பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையே ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு.
1522. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல்முஸனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு" என (இரண்டு முறை) கூறிவிட்டு, மூன்றாம் முறை "விரும்பியவருக்கு (அதைத் தொழ உரிமை உண்டு)" என்றார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
-மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், நபி (ஸல்) அவர்கள் (மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று மூன்று முறை கூறிவிட்டு) நான்காம் முறை "விரும்பியவருக்கு" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 57 அச்ச நேரத் தொழுகை.
1523. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு போர் முனையில் எங்களுக்கு) அச்ச நேரத் தொழுகை தொழுவித்தார்கள். (எங்களில்) இரு அணிகளில் ஓரணியினருக்கு (முதலில்) ஒரு ரக்அத் தொழுவித்தார்கள். (அப்போது) மற்றோர் அணியினர் எதிரிகளுக்கு முன்னால் (நின்று கொண்டு) இருந்தனர். பிறகு முதல் அணியினர் திரும்பிச் சென்று தம் தோழர்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் எதிரிகளுக்கு முன்னால் நின்றுகொண்டனர். பிறகு இரண்டாம் அணியினர் (தொழுகைக்கு) வந்தனர். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத் தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்தார்கள். பின்னர் இந்த அணியினர் (எழுந்து மீதியிருந்த) ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர். பிறகு முதல் அணியினரும் (வந்து மீதியிருந்த தம்முடைய) ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர்.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அச்ச நேரத் தொழுகை பற்றிய இப்னு உமர் (ரலி) அவர்களது மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அச்ச நேரத் தொழுகை தொழுதிருக்கிறேன்" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 6
1524. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
)போர் நடந்த) ஒரு நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களுக்கு) அச்ச நேரத் தொழுகையைத் தொழுவித்தார்கள். (எங்களில்) ஓர் அணியினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) நின்றனர். மற்றோர் அணியினர் எதிரிகளுக்கு எதிரே (அணிவகுத்து) நின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடனிருந்த அணியினருக்கு ஒரு ரக்அத் தொழுவித்தார்கள். பிறகு அவர்கள் (எதிரிகளை நோக்கிச்) சென்றுவிட்டனர்.
பிறகு இரண்டாம் அணியினர் வந்தபோது அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத் தொழுவித்தார்கள். பிறகு அவர்களில் ஒவ்வொரு அணியினரும் (தனித் தனியே) ஒவ்வொரு ரக்அத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.
இதைவிடக் கூடுதல் அச்சம் நிலவினால் வாகனத்தில் அமர்ந்துகொண்டோ நின்று கொண்டோ சைகை செய்து தொழுது கொள்ளலாம்.
அத்தியாயம் : 6
1525. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அச்ச நேரத் தொழுகையில் நான் பங்கேற்றுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைத் தமக்குப் பின்னால் இரு வரிசைகளில் நிறுத்தினார்கள். அப்போது எதிரிகள் எங்களுக்கும் தொழும் திசை(யான கிப்லாவு)க்குமிடையே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறி (தொழுகையைத் துவக்கி)னார்கள். (இரு வரிசைகளில் நின்றிருந்த) நாங்கள் அனைவரும் தக்பீர் கூறினோம். பின்னர் ருகூஉச் செய்தார்கள். நாங்கள் அனைவரும் ருகூஉச் செய்தோம். பின்னர் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினார்கள். நாங்கள் அனைவரும் (தலையை) உயர்த்தினோம். பிறகு நபி (ஸல்) அவர்களும் அவர்களுக்கு அருகில் (முதல் வரிசையில்) நின்றவர்களும் குனிந்து சஜ்தாச் செய்தனர். அப்போது இரண்டாவது வரிசையிலிருந்தவர்கள் (அப்படியே) எதிரிகளுக்கு நேராக (அவர்களைக் கண்காணித்தவாறு) நின்றுகொண்டேயிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் சஜ்தாவை நிறைவேற்றி, முதல் வரிசையிலிருந்தவர்கள் (சஜ்தாச் செய்து) எழுந்து நின்றதும் இரண்டாவது வரிசையிலிருந்தவர்கள் குனிந்து சஜ்தாச் செய்தனர். பிறகு எழுந்தனர்.
பிறகு இரண்டாவது வரிசையிலிருந்தவர்கள் முன்னே (முதல் வரிசைக்கு) வந்தனர். முன் வரிசையிலிருந்தவர்கள் பின்னால் (இரண்டாம் வரிசைக்கு) வந்துவிட்டனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்தபோது (இரு வரிசைகளில் நின்றிருந்த) நாங்கள் அனைவரும் ருகூஉச் செய்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியபோது (இரு வரிசைகளிலிருந்த) நாங்கள் அனைவரும் தலையை உயர்த்தினோம்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் குனிந்து சஜ்தாச் செய்தார்கள். முதல் ரக்அத் நடைபெற்றபோது பின் வரிசையிலிருந்தவர்களும் இப்போது நபியவர்களுக்கு அருகில் இருப்பவர்களுமான (முதல்) அணியினர் சஜ்தாச் செய்தார்கள். பின்வரிசையிலிருந்தவர்கள் (சஜ்தாச் செய்யாமல்) எதிரிகளுக்கு நேராக (அவர்களைக் கண்காணித்தவாறு) நின்று கொண்டனர். நபி (ஸல்) அவர்களும் முதல் வரிசையிலிருந்தவர்களும் சஜ்தாச் செய்து முடித்ததும் பின்வரிசையில் நின்றுகொண்டி ருந்தவர்களும் குனிந்து சஜ்தாச் செய்தனர்.
நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தபோது நாங்கள் அனைவரும் சலாம் கொடுத்தோம். (இன்றைக்கு எவ்வாறு) உங்கள் படைவீரர்கள் தங்கள் தலைவர்களுடன் சேர்ந்து (போர்க் களங்களில்) தொழுகின்றனரோ அதைப் போன்றுதான் (நாங்களும் செய்தோம்).
அத்தியாயம் : 6
1526. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஒரு கூட்டத்தாருடன் போரிடப் புறப்பட்டோம். அவர்கள் எங்களிடம் கடுமையாகப் போரிட்டனர். நாங்கள் லுஹ்ர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது (எங்களை நோட்டமிட்ட) இணைவைப்பாளர்கள் "(முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடும்போது) அவர்கள்மீது நாம் அதிரடித் தாக்குதல் தொடுத்தால் அவர்களை நாம் பூண்டோடு ஒழித்துவிடலாம்" என்று பேசிக் கொண்டனர். இந்த விவரத்தை (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள். மேலும், "அவர்கள் ஒரு தொழுகையை எதிர்நோக்கியுள்ளனர். அது அவர்களுக்கு (தங்கள்) குழந்தை குட்டிகளைவிட மிக விருப்பமானதாகும்" என்று இணைவைப்பாளர்கள் கூறுகின்றனர் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அஸ்ர் தொழுகையின் நேரம் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை இரு வரிசைகளில் அணிவகுக்கச் செய்தார்கள். இணைவைப்பாளர்கள் எங்களுக்கும் தொழும் திசை(யான கிப்லாவு)க்குமிடையே இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் தக்பீர் கூறி (தொழுகையைத் துவக்கி)னார்கள். நாங்களும் தக்பீர் கூறினோம். அவர்கள் ருகூஉச் செய்தார்கள். நாங்களும் ருகூஉச் செய்தோம். பிறகு அவர்கள் சஜ்தாச் செய்தபோது முதல் வரிசையிலிருந்தவர்கள் சஜ்தாச் செய்தனர். முதல் வரிசையிலிருந்தவர்கள் (சஜ்தாவிலிருந்து) எழுந்து நின்றதும் இரண்டாவது வரிசையிலிருந்தவர்கள் சஜ்தாச் செய்தனர்.
பிறகு முதல் வரிசையிலிருந்தவர்கள் பின்வரிசைக்குச் சென்றுவிட, இரண்டாம் வரிசையிலிருந்தவர்கள் முன் வரிசைக்கு வந்து அவர்களது இடத்தில் நின்றனர். (இரண்டாவது ரக்அத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தக்பீர் கூற நாங்கள் (அனைவரும்) தக்பீர் கூறினோம். அவர்கள் ருகூஉச் செய்தபோது நாங்களும் ருகூஉச் செய்தோம். பிறகு அவர்கள் சஜ்தாச் செய்தபோது முதல் வரிசையிலிருந்தவர்களும் சஜ்தாச் செய்தனர். அப்போது இரண்டாவது வரிசையினர் நின்றுகொண்டனர். பின்னர் அவர்களும் சஜ்தாச் செய்த பின்னர் அனைவரும் அமர்ந்தோம். பின்னர் அனைவருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு ஜாபிர் (ரலி) அவர்கள் "இன்றைய தலைவர்கள் உங்களுக்குத் தொழுவிப்பதைப் போன்றே (அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள்)" என்று குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
அத்தியாயம் : 6
1527. சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு அச்ச நேரத் தொழுகையைத் தொழுவித்தபோது அவர்களை இரு வரிசைகளில் தமக்குப் பின்னால் அணிவகுக்கச் செய்தார்கள்; தம்மை அடுத்து (முதல் வரிசையில்) இருந்தவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுவித்தார்கள். பிறகு எழுந்து நின்று கொண்டார்கள். பின்வரிசையில் நின்றவர்கள் ஒரு ரக்அத் தொழும்வரை அவ்வாறே நின்று கொண்டிருந்தார்கள். பிறகு பின்வரிசையில் இருந்தவர்கள் முன்வரிசைக்கு வந்தனர். முன்வரிசையிலிருந்தவர்கள் பின்வரிசைக்குச் சென்றுவிட்டனர். அப்போது முன்வரிசைக்காரர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத் தொழுவித்தார்கள். பிறகு பின்வரிசைக்குச் சென்றவர்கள் ஒரு ரக்அத் தொழும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரண்டாவது ரக்அத்தின் சஜ்தாவை முடித்த பின்) இருப்பில் அமர்ந்திருந்தார்கள். பிறகு சலாம் கொடுத்(துத் தொழுகையை முடித்)தார்கள்.
இதை சாலிஹ் பின் கவ்வாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1528. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "தாத்துர் ரிகாஉ" போரின்போது அச்ச நேரத் தொழுகை தொழுத (நபித்தோழர்களில்) ஒருவர் கூறியதாவது:
)அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்போரின்போது அச்ச நேரத் தொழுகையைத் தொழுவித்தார்கள். எங்களில்) ஓர் அணியினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுகையில் அணி வகுத்தனர். மற்றோர் அணியினர் எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுவித்துவிட்டு அப்படியே நின்றுகொண்டார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு ரக்அத் தொழுத) அந்த அணியினர் தங்களுக்கு (மீதியிருந்த இன்னொரு ரக்அத்தைத் தனியாகப்) பூர்த்தி செய்துகொண்டு திரும்பிச் சென்று எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்து நின்றுகொண்டார்கள். பிறகு (அதுவரை எதிரிகளுக்கு எதிரே நின்று கொண்டிருந்த) மற்றோர் அணியினர் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்முடைய தொழுகையில்) மீதியிருந்த ஒரு ரக்அத்தை இவர்களுக்குத் தொழுவித்துவிட்டு (அப்படியே) அமர்ந்துகொண்டிருந்தார்கள். (இரண்டாவது அணியினர்) தங்களுக்கு (மீதியிருந்த ஒரு ரக்அத்தைத் தனியாகப்) பூர்த்தி செய்துகொண்டனர். பிறகு அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தார்கள்.
இதை சாலிஹ் பின் கவ்வாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1529. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். "தாத்துர் ரிகாஉ" என்னுமிடத்தில் (போரை முடித்து) நாங்கள் இருந்தபோது நிழல் நிறைந்த ஒரு மரத்தினருகே வந்தோம்.
நாங்கள் அந்த மரத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய மதிய ஓய்வு)க்காக விட்டுவிட்டோம். அப்போது இணைவைப்பாளர்களில் ஒருவர் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாள் அந்த மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது. உடனே அவர் அந்த வாளை எடுத்து (உறையிலிருந்து) உருவிப் பிடித்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "எனக்கு நீர் அஞ்சுகிறீரா?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறிதும் அஞ்சாமல்) "இல்லை" என்று பதிலளித்தார்கள். அவர் "இப்போது என்னிடமிருந்து உம்மைக் காப்பவர் யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ் உன்னிடமிருந்து என்னைக் காப்பான்" என்று பதிலளித்தார்கள். அப்போது நபித்தோழர்கள் அவரைக் கண்டித்தார்கள். உடனே அவர் வாளை உறையிலிட்டு (பழையபடி மரத்தில்) தொங்கவிட்டுவிட்டார்.
பிறகு தொழுகைக்கு அழைப்புவிடப்பட்டது. அப்போது (தம் தோழர்களில்) ஓர் அணியினருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் (அச்ச நேரத் தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு இவ்வணியினர் பின்னால் விலகிக்கொள்ளவே, (எதிரிகளைக் கண்காணித்துக்கொண்டிருந்த) மற்றோர் அணியினருக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நான்கு ரக்அத்களும், மக்களுக்கு இரண்டு ரக்அத்களும் ஆயின.
அத்தியாயம் : 6
1530. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அச்ச நேரத் தொழுகையைத் தொழுதிருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்முடனிருந்த தோழர்களில்) ஓர் அணியினருக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பிறகு மற்றோர் அணியினருக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான்கு ரக்அத்கள் தொழுதார்கள்; (தம்முடனிருந்த) ஒவ்வோர் அணியினருக்கும் (தலா) இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள்.
அத்தியாயம் : 5
1531. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஜுமுஆவிற்கு (வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைக்கு)ச் செல்ல விரும்பினால் குளித்துக்கொள்ளட்டும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1532. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவுமேடை (மிம்பர்)மீது நின்றபடி "உங்களில் யார் ஜுமுஆவு(டைய தொழுகை)க்கு வருகிறாரோ அவர் குளித்துக் கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1533. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை (பள்ளிவாசலில்) மக்களுக்கு உரையாற்றிக்கொண்டிருந்தபோது, நபித் தோழர்களில் ஒருவர் வந்தார். அவரை உமர் (ரலி) அவர்கள் அழைத்து "இது எந்த நேரம்? (ஏன் தாமதம்?)" என்று கேட்டார்கள். அதற்கு அவர் "நான் அலுவலில் மூழ்கிவிட்டேன். தொழுகை அறிவிப்பைக் கேட்ட பிறகுதான் நான் வீட்டிற்கே திரும்பினேன். உடனே அங்கத் தூய்மை (உளூ) மட்டும் செய்துவிட்டு நான் (விரைந்து) வருகிறேன்" என்று கூறினார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் "வெறும் உளூ மட்டும்தானா? (குளிக்கவில்லையா?) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜுமுஆவிற்காக) குளிக்குமாறு கட்டளையிட்டுவந்ததை நீங்கள் நன்கு அறிவீர்களே!" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 7
1534. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தில் மக்களுக்கு உரையாற்றிக்கொண்டிருந்தபோது,உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் (பள்ளிக்குத் தாமதமாக) வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் "சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்யப்பட்ட பின் தாமதமாக வருகின்றனர்!" என உஸ்மான் (ரலி) அவர்களைக் குறிப்பிட்டுச் சாடையாகக் கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! தொழுகை அறிவிப்பைக் கேட்டவுடன் அங்கத்தூய்மை ("உளூ") மட்டும் செய்துவிட்டுப் புறப்பட்டுவிட்டேன்" என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "வெறும் "உளூ" மட்டும்தானா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களில் ஒருவர் ஜுமுஆவுக்குச் செல்லும்போது குளித்துக்கொள்ளட்டும்" எனக் கூறியதை நீங்கள் செவியுறவில்லையா?" என்று கேட்டார்கள்
அத்தியாயம் : 7