5103. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَفْلَحَ، أَخَا أَبِي الْقُعَيْسِ جَاءَ يَسْتَأْذِنُ عَلَيْهَا ـ وَهْوَ عَمُّهَا مِنَ الرَّضَاعَةِ ـ بَعْدَ أَنْ نَزَلَ الْحِجَابُ، فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ، فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَخْبَرْتُهُ بِالَّذِي صَنَعْتُ، فَأَمَرَنِي أَنْ آذَنَ لَهُ.
பாடம்: 23 ஆணின் பால்குடி உறவு38
5103. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபுல்குஐஸின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) அவர்கள் வந்து என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். அவர் என் பால்குடித் தந்தையின் சகோதரர் ஆவார். ‘ஹிஜாப்’ (பர்தா) சட்டம் அருளப்பட்டபின் இந்தச் சம்பவம் நடைபெற்றது. அப்போது நான் அவருக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்ததும் நான் செய்தது குறித்து அவர்களிடம் தெரிவித்தேன்.

நான் அவருக்கு அனுமதியளிக்க வேண்டும் என அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.39

அத்தியாயம் : 67
5104. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ حَدَّثَنِي عُبَيْدُ بْنُ أَبِي مَرْيَمَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، قَالَ وَقَدْ سَمِعْتُهُ مِنْ، عُقْبَةَ لَكِنِّي لِحَدِيثِ عُبَيْدٍ أَحْفَظُ قَالَ تَزَوَّجْتُ امْرَأَةً، فَجَاءَتْنَا امْرَأَةٌ سَوْدَاءُ فَقَالَتْ أَرْضَعْتُكُمَا. فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ تَزَوَّجْتُ فُلاَنَةَ بِنْتَ فُلاَنٍ فَجَاءَتْنَا امْرَأَةٌ سَوْدَاءُ فَقَالَتْ لِي إِنِّي قَدْ أَرْضَعْتُكُمَا. وَهْىَ كَاذِبَةٌ فَأَعْرَضَ، فَأَتَيْتُهُ مِنْ قِبَلِ وَجْهِهِ، قُلْتُ إِنَّهَا كَاذِبَةٌ. قَالَ "" كَيْفَ بِهَا وَقَدْ زَعَمَتْ أَنَّهَا قَدْ أَرْضَعَتْكُمَا، دَعْهَا عَنْكَ "" وَأَشَارَ إِسْمَاعِيلُ بِإِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى يَحْكِي أَيُّوبَ.
பாடம்: 24 பாலூட்டிய செவிலித் தாயின் சாட்சியம்
5104. உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (உம்மு யஹ்யா பின்த் அபீ இஹாப் எனும்) ஒரு பெண்ணை மணந்து கொண்டேன். பின்னர் ஒரு கறுப்பு நிற (அடிமைப்) பெண் எங்களிடம் வந்து நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும் உன் மனைவிக்கும் உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டினேன். (இந்த வகையில் நீங்கள் இருவரும் சகோதரத்துவ உறவுடையவர்கள்)” என்று கூறினாள்.

ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து மதீனாவிற்கு) நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘நான், இன்னவர் மகள் இன்னவளை மணந்து கொண்டேன். அப்பால் ஒரு கறுப்பு நிறப் பெண் எங்களிடம் வந்து என்னை நோக்கி ‘நான் உங்கள் இருவருக்கும் பாலூட்டியிருக்கிறேன்’ என்று பொய் சொல்கிறாள்” என்று சொன்னேன்.

(அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் (முகம் திருப்பிக்கொண்டு) என்னைப் புறக்கணித்தார்கள். மீண்டும் நான் நபியவர்களின் முகத்துக்கு நேராக வந்து ‘‘அவள் பொய்தான் சொல்கிறாள்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் உங்கள் இருவருக்கும் பாலூட்டியதாக சொல்லிவிட்ட நிலையில் அந்தப் பெண்ணுடன் நீ எப்படி (இல்லறம் நடத்த முடியும்)? அவளை உன்னிடமிருந்து பிரித்து விட்டுவிடு!” என்று (யோசனை) சொன்னார்கள்.40

அறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(எனக்கு இதை அறிவித்த) இஸ்மாயீல் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் (நபி (ஸல்) அவர்கள் ‘விட்டுவிடு’ என்று கூறி சைகை செய்ததை) அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள் எடுத்துரைத்தபடி தமது சுட்டுவிரல் மற்றும் நடுவிரலால் சைகை செய்து காட்டினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் அப்துல்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த அறிவிப்பை நான் (சம்பவத்தில் நேரடித் தொடர்புடைய) உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடமிருந்தே செவியுற்றுவிட்டேன். ஆயினும், நான் உபைத் பின் அபீமர்யம் (ரஹ்) அவர்களின் அறிவிப்பையே நன்கு நினைவில் நிறுத்தியுள்ளேன்.

அத்தியாயம் : 67
5105. وَقَالَ لَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي حَبِيبٌ، عَنْ سَعِيدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، حَرُمَ مِنَ النَّسَبِ سَبْعٌ، وَمِنَ الصِّهْرِ سَبْعٌ. ثُمَّ قَرَأَ {حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ} الآيَةَ. وَجَمَعَ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ بَيْنَ ابْنَةِ عَلِيٍّ وَامْرَأَةِ عَلِيٍّ. وَقَالَ ابْنُ سِيرِينَ لاَ بَأْسَ بِهِ. وَكَرِهَهُ الْحَسَنُ مَرَّةً ثُمَّ قَالَ لاَ بَأْسَ بِهِ. وَجَمَعَ الْحَسَنُ بْنُ الْحَسَنِ بْنِ عَلِيٍّ بَيْنَ ابْنَتَىْ عَمٍّ فِي لَيْلَةٍ، وَكَرِهَهُ جَابِرُ بْنُ زَيْدٍ لِلْقَطِيعَةِ، وَلَيْسَ فِيهِ تَحْرِيمٌ لِقَوْلِهِ تَعَالَى {وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ} وَقَالَ عِكْرِمَةُ عَنِ ابْنِ عَبَّاسٍ إِذَا زَنَى بِأُخْتِ امْرَأَتِهِ لَمْ تَحْرُمْ عَلَيْهِ امْرَأَتُهُ. وَيُرْوَى عَنْ يَحْيَى الْكِنْدِيِّ عَنِ الشَّعْبِيِّ وَأَبِي جَعْفَرٍ، فِيمَنْ يَلْعَبُ بِالصَّبِيِّ إِنْ أَدْخَلَهُ فِيهِ، فَلاَ يَتَزَوَّجَنَّ أُمَّهُ، وَيَحْيَى هَذَا غَيْرُ مَعْرُوفٍ، لَمْ يُتَابَعْ عَلَيْهِ. وَقَالَ عِكْرِمَةُ عَنِ ابْنِ عَبَّاسٍ إِذَا زَنَى بِهَا لَمْ تَحْرُمْ عَلَيْهِ امْرَأَتُهُ. وَيُذْكَرُ عَنْ أَبِي نَصْرٍ أَنَّ ابْنَ عَبَّاسٍ حَرَّمَهُ. وَأَبُو نَصْرٍ هَذَا لَمْ يُعْرَفْ بِسَمَاعِهِ مِنِ ابْنِ عَبَّاسٍ. وَيُرْوَى عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَجَابِرِ بْنِ زَيْدٍ وَالْحَسَنِ وَبَعْضِ أَهْلِ الْعِرَاقِ تَحْرُمُ عَلَيْهِ. وَقَالَ أَبُو هُرَيْرَةَ لاَ تَحْرُمُ حَتَّى يُلْزِقَ بِالأَرْضِ يَعْنِي يُجَامِعَ. وَجَوَّزَهُ ابْنُ الْمُسَيَّبِ وَعُرْوَةُ وَالزُّهْرِيُّ. وَقَالَ الزُّهْرِيُّ قَالَ عَلِيٌّ لاَ تَحْرُمُ. وَهَذَا مُرْسَلٌ.
பாடம்: 25 (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்ட பெண்களும் அனுமதிக்கப்படாத வர்களும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (பின்வரும் பெண்களை மணம் புரிவது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது: உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், மற்றும் உங்கள் தந்தையின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள்; மேலும் சகோதரனின் புதல்வியர்; சகோதரியின் புதல்வியர்... (4:23) அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (4:24ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வல்முஹ்ஸனாத்து மினந் நிசா’ என்பதன் கருத்தாவது: (ஏற்கெனவே திருமணமாகி) கணவன்மார்கள் இருக்கும் (அடிமை யல்லாத) சுதந்திரமான பெண்களை மணமுடிப்பது விலக்கப்பட்டதாகும். ‘இல்லா மா மலக்கத் அய்மானுக்கும்’ (உங்கள் கைவசம் வந்துவிட்ட அடிமைப் பெண்களைத் தவிர) என்பதன் கருத்தாவது: ஒருவர் தம் அடிமைப் பெண்ணை (அவளுடைய கணவரான) தம் அடிமை யின் மணபந்தத்திலிருந்து விலக்கி விடுவது குற்றமன்று. மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இறைவனுக்கு இணைகற்பிக்கும் பெண்களை அவர்கள் ஈமான் (ஏகத்துவ நம்பிக்கை) கொள்ளும்வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். (2:221) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் தாய், தம் புதல்வி, மற்றும் தம் சகோதரியை மணமுடிப்பது விலக்கப்பட்டிருப்பதைப் போன்றே, நான்கைவிட அதிகமான பெண்களை மணமுடிப்பதும் விலக்கப்பட்டதாகும்.
5105. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘இரத்த உறவால் ஏழு பேரும், திருமண உறவால் ஏழு பேரும் மணமுடிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டுள்ளனர்”41 என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, ‘‘(பின்வரும் பெண்களை மணம் புரிவது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது: உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள்...” எனும் (4:23ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

பிறகு ‘‘அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களுடைய புதல்வியையும், அலீ (ரலி) (அவர்களுக்குப் பின்) அவர்களுடைய மனைவியையும் ஒரே நேரத்தில் மணந்துகொண்டார்கள்” என்றும் கூறினார்கள்.42

‘‘ஒருவர், ஒரு பெண்ணையும் அவளுடைய கணவரின் (இன்னொரு மனைவிக்குப் பிறந்த) மகளையும் ஒரே நேரத்தில் மணமுடிப்பது குற்றமன்று” என இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இது வெறுக்கப்பட்ட செயலாகும் என முதலில் கூறிவந்த ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள், பின்னர் (தமது கருத்தை மாற்றிக்கொண்டு) இதனால் குற்றமில்லை என்று கூறினார்கள்.

(அலீ (ரலி) அவர்களுடைய பேரரான) ஹசன் பின் ஹசன் பின் அலீ (ரஹ்) அவர்கள் தம் தந்தையின் இரு சகோதரர் களின் புதல்வியரை ஒரே இரவில் மணந்துகொண்டார்கள்.43

இதனால் (சக்களத்தி சண்டை ஏற்பட்டு) உறவு முறிய வாய்ப்பு உண்டு என்பதால் இத்திருமணத்தை ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் வெறுத்தார்கள். ஆனால், (இத்திருமணம்) தடை செய்யப்பட்டதன்று. ஏனெனில், அல்லாஹ் (மணமுடிக்கத் தகாத பெண்களின் பட்டியலைச் சொல்லிவிட்டு) ‘‘இவர்களைத் தவிர மற்றப் பெண்களை (மஹ்ர் கொடுத்து) அடைந்துகொள்வது உங்களுக்கு அனு மதிக்கப்பட்டுள்ளது” (4:24) என்று கூறுகின்றான்.

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘ஒருவன் தன் மனைவியின் சகோதரியை விபசாரம் செய்வதால், அவனுடைய மனைவி அவனுக்கு விலக்கப்பட்டவளாக (ஹராமாக) ஆகிவிடமாட்டாள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.44

ஒருவன் ஒரு சிறுவனுடன் ஓரினச் சேர்க்கை செய்துவிட்டால், அச்சிறுவனுடைய தாயை மணமுடிப்பது செல்லாது என ‘அபீ (ரஹ்) அவர்களும், அபூஜஅஃபர் (ரஹ்) அவர்களும் கூறியதாக யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இந்த யஹ்யா நேர்மையானவரா என்பது அறியப்படவில்லை. இந்த அறிவிப்புக்கு பக்கபலமாக அமையும் மற்ற அறிவிப்புகளும் கிடையாது.

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘ஒருவன் தன் மனைவியின் தாயுடன் விபசாரம் புரிந்துவிட்டால், மனைவி அவனுக்கு விலக்கப்பட்டவளாக ஆகமாட்டாள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ஆனால், ‘விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அபூநஸ்ர் (ரஹ்) வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபூநஸ்ர், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றாரா என்பது அறியப்படவில்லை.

‘விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள்’ என்பதே இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), ஜாபிர் பின் ஸைத் (ரஹ்), ஹசன் அல்பளி (ரஹ்) மற்றும் இராக் அறிஞர் களில் சிலர் ஆகியோரது கருத்தாகும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறி னார்கள்: ஒரு பெண்ணை உடலுறவு கொண்டால் மட்டுமே அவளுடைய மகள் இவனுக்கு விலக்கப்பட்டவள் ஆவாள். (வெறுமனே தொடுவதற்கும், கட்டி அணைப்பதற்கும் இச்சட்டம் பொருந்தாது.) ‘‘(இந்நிலையில் அப்பெண்ணின்) மகளை மணமுடிப்பது செல்லும்” என இப்னுல் முஸய்யப், உர்வா, ஸுஹ்ரீ (ரஹ்) ஆகியோர் கூறினர்.

‘அவளை மணமுடிப்பது விலக்கப்படவில்லை’ என அலீ (ரலி) அவர்கள் சொன்னதாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இது, இடையே அறிவிப்பாளர் விடுபட்ட ‘முன்கத்திஉ’ வகை தகவல் ஆகும்.

அத்தியாயம் : 67
5106. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَلْ لَكَ فِي بِنْتِ أَبِي سُفْيَانَ قَالَ "" فَأَفْعَلُ مَاذَا "". قُلْتُ تَنْكِحُ. قَالَ "" أَتُحِبِّينَ "". قُلْتُ لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ، وَأَحَبُّ مَنْ شَرِكَنِي فِيكَ أُخْتِي. قَالَ "" إِنَّهَا لاَ تَحِلُّ لِي "". قُلْتُ بَلَغَنِي أَنَّكَ تَخْطُبُ. قَالَ "" ابْنَةَ أُمِّ سَلَمَةَ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" لَوْ لَمْ تَكُنْ رَبِيبَتِي مَا حَلَّتْ لِي، أَرْضَعَتْنِي وَأَبَاهَا ثُوَيْبَةُ، فَلاَ تَعْرِضْنَ عَلَىَّ بَنَاتِكُنَّ وَلاَ أَخَوَاتِكُنَّ "". وَقَالَ اللَّيْثُ حَدَّثَنَا هِشَامٌ دُرَّةُ بِنْتُ أَبِي سَلَمَةَ.
பாடம்: 26 நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியர் (தம் முதல் கணவர் மூலம்) பெற்றெடுத்து, உங்களது வளர்ப்பில் உள்ள புதல்வியர் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளனர் (எனும் 4:23ஆவது வசனத்தொடர்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள ‘தகல்த்தும்’ எனும் சொல்லின் வேர்ச் சொல்லான) ‘துகூல்’ எனும் சொல்லுக்கும் ‘மஸீஸ்’ எனும் சொல்லுக்கும், ‘லிமாஸ்’ எனும் சொல்லுக்கும் ‘உடலுறவு கொள்ளுதல்’ என்று பொருள்” எனக் கூறினார்கள். ‘‘மனைவிக்கு (மற்றொரு கணவன் மூலம்) பிறந்த பிள்ளையின் புதல்வியரும் (பேத்திகளும்) அவளுடைய புதல்விகளைப் போன்றே கணவனுக்கு விலக்கப்பட்ட வர்கள் ஆவர்” என்று கூறுவோர் பின்வரும் நபிமொழியை ஆதாரம் காட்டுகின்றனர்: ‘‘உங்களுடைய பெண் மக்களையோ, சகோதரிகளையோ (மணமுடித்துக்கொள்ளுமாறு) என்னிடம் பரிந்துரைக்க வேண்டாம்” என நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியாரான) உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.45 (பேத்திகளும் பெண்மக்களைப் போன்றவர்களே!.) (ஒருவருக்கு) மகன் வழிப் பேரர்களின் மனைவிமார்களும் புதல்வர்களுடைய மனைவியரை (மருமகள்களை)ப் போன்றே மணமுடிக்க விலக்கப்பட்டுள்ளனர். (ஒருவருடைய மனைவிக்கு முந்தைய கணவர் மூலம் பிறந்த மகள்) அவரது பொறுப்பில் வளராவிட்டாலும் அவளை ‘வளர்ப்பு மகள்’ (ரபீபத்) என்று குறிப்பிடலாமா? (என்பதில் கருத்து வேறுபாடு உண்டு.)46 நபி (ஸல்) அவர்கள், தம்முடைய வளர்ப்பு மகளைக் காப்பாளர் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள்.47 நபி (ஸல்) அவர்கள் தம்முடைய புதல்வியின் மகனை (பேரனை) ‘மகன்’ என்று குறிப்பிட்டார்கள்.48
5106. (நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒருமுறை) ‘‘அல்லாஹ்வின் தூதரே! (என் சகோதரியான) அபூ சுஃப்யானின் மகள் விஷயத்தில் தங்களுக்கு விருப்பம் உண்டா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். நான், ‘‘(அவளை) நீங்கள் மணந்துகொள்ள வேண்டும்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நீயே விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள். நான், ‘‘(ஆம்!) மனைவியென்று உங்களுக்கு நான் ஒருத்தி மட்டுமில்லையே! தங்களை அடைந்துகொள்ளும் பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்று சொன்னேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் எனக்கு (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவள் இல்லையே!” என்று கூறினார்கள். நான், ‘‘தாங்கள் பெண் கேட்டதாக எனக்குச் செய்தி எட்டியதே!” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(என் துணைவியார்) உம்மு சலமாவின் மகளையா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்று சொன்னேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் என் மடியில் வளர்ந்த வளர்ப்பு மகளாக (இருக்கிறாள். அப்படி) இல்லாவிட்டாலும்கூட, அவள் எனக்கு (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவள் அல்லள். (ஏனெனில்,) எனக்கும் அவளுடைய தந்தை (‘அபூசலமாவு’)க்கும் ஸுவைபா அவர்களே பாலூட்டினார்கள். ஆகவே, உங்களுடைய பெண்மக்களையோ சகோதரிகளையோ (மணமுடித்துக் கொள்ளுமாறு) என்னிடம் பரிந்துரைக்காதீர் கள்” என்றார்கள்.49

லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(அறிவிப்பாளர்) ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள், உம்மு சலமா (ரலி) அவர்களுடைய மகளின் பெயர் ‘துர்ரா பின்த் அபீசலமா’ என்றே எமக்கு அறிவித் தார்கள்.

அத்தியாயம் : 67
5107. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، أَخْبَرَهُ أَنَّ زَيْنَبَ ابْنَةَ أَبِي سَلَمَةَ أَخْبَرَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ انْكِحْ أُخْتِي بِنْتَ أَبِي سُفْيَانَ. قَالَ "" وَتُحِبِّينَ "". قُلْتُ نَعَمْ، لَسْتُ بِمُخْلِيَةٍ، وَأَحَبُّ مَنْ شَارَكَنِي فِي خَيْرٍ أُخْتِي. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ ذَلِكَ لاَ يَحِلُّ لِي "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَوَاللَّهِ إِنَّا لَنَتَحَدَّثُ أَنَّكَ تُرِيدُ أَنْ تَنْكِحَ دُرَّةَ بِنْتَ أَبِي سَلَمَةَ. قَالَ "" بِنْتَ أُمِّ سَلَمَةَ "". فَقُلْتُ نَعَمْ. قَالَ "" فَوَاللَّهِ لَوْ لَمْ تَكُنْ فِي حَجْرِي مَا حَلَّتْ لِي إِنَّهَا لاَبْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ، أَرْضَعَتْنِي وَأَبَا سَلَمَةَ ثُوَيْبَةُ فَلاَ تَعْرِضْنَ عَلَىَّ بَنَاتِكُنَّ وَلاَ أَخَوَاتِكُنَّ "".
பாடம்: 27 இரு சகோதரிகளை ஒருசேர நீங்கள் மனைவியராக்குவதும் உங்களுக்குத் தடை செய்யப்பட் டுள்ளது; ஏற்கெனவே (அறியாமைக் காலத்தில்) நடந்துவிட்டதைத் தவிர (எனும் 4:23ஆவது வசனத்தொடர்)50
5107. உம்மு ஹபீபா பின்த் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (என் கணவர் நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரியான அபூசுஃப்யானின் மகளைத் தாங்கள் மணந்துகொள்ளுங்கள்!” என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘‘இதை நீயே விரும்புகிறாயா?” என்று (வியப்புடன்) கேட்டார்கள். நான், ‘‘ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு அ(வளை மணப்ப)து அனுமதிக்கப்பட்ட தன்று” என்று சொன்னார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே, அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அபூசலமாவின் மகள் துர்ராவை மணக்க விரும்புவதாக எங்களிடையே பேச்சு நடைபெறுகிறதே!” என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘(என் துணைவி யார்) உம்மு சலமாவிற்கு (மூத்த கணவன் மூலம்) பிறந்த மகளையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘‘ஆம்” என்று பதிலளித்தேன். நபியவர்கள், ‘‘அவள் எனது மடியில் (வளர்ப்பு மகளாக இருந்துவருகிறாள். அப்படி) இல்லா விட்டாலும்கூட, எனக்கு அவள் (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவள் அல்லள். (ஏனெனில்) அவள் பால்குடி உறவு முறையில் என் சகோதரரின் மகளாவாள். எனக்கும் (அவளின் தந்தை) அபூசலமாவுக்கும் ஸுவைபா அவர்களே பாலூட்டினார்கள்.

ஆகவே, என்னிடம் உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணமுடித்துக்கொள்ளுமாறு) பரிந்துரைக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.51

அத்தியாயம் : 67
5108. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمٌ، عَنِ الشَّعْبِيِّ، سَمِعَ جَابِرًا، رضى الله عنه قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تُنْكَحَ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا أَوْ خَالَتِهَا. وَقَالَ دَاوُدُ وَابْنُ عَوْنٍ عَنِ الشَّعْبِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ.
பாடம்: 28 (ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் (அத்தையையும்) சேர்த்து மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.
5108. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது தாயின் சகோதரியையும் (சேர்த்து) மணமுடிப்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.52

இதே ஹதீஸ் அபூஹ’ரைரா (ரலி) அவர்களிடமிருந்து இரு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 67
5109. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يُجْمَعُ بَيْنَ الْمَرْأَةِ وَعَمَّتِهَا، وَلاَ بَيْنَ الْمَرْأَةِ وَخَالَتِهَا "".
பாடம்: 28 (ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் (அத்தையையும்) சேர்த்து மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.
5109. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளு டைய தந்தையின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. (இதைப் போன்றே) ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ள லாகாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 67
5110. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي قَبِيصَةُ بْنُ ذُؤَيْبٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُنْكَحَ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا وَالْمَرْأَةُ وَخَالَتُهَا. فَنُرَى خَالَةَ أَبِيهَا بِتِلْكَ الْمَنْزِلَةِ.
பாடம்: 28 (ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் (அத்தையையும்) சேர்த்து மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.
5110. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் (ஒருசேர) மணமுடிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

(அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:) இதை வைத்து, ஒரு பெண்ணுடைய தாயின் சகோதரியைப் போன்றே, அவளுடைய தந்தையின் தாயுடைய சகோதரியையும் நாங்கள் கருதுகிறோம்.


அத்தியாயம் : 67
5111. لأَنَّ عُرْوَةَ حَدَّثَنِي عَنْ عَائِشَةَ، قَالَتْ حَرِّمُوا مِنَ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ.
பாடம்: 28 (ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் (அத்தையையும்) சேர்த்து மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.
5111. ஏனெனில், ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘இரத்த பந்த உறவால் யாரை மணப்பது கூடாதோ அவர்களை மணப்பதைப் பால்குடி உறவாலும் தடை செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

இதை உர்வா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.53

அத்தியாயம் : 67
5112. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الشِّغَارِ، وَالشِّغَارُ أَنْ يُزَوِّجَ الرَّجُلُ ابْنَتَهُ عَلَى أَنْ يُزَوِّجَهُ الآخَرُ ابْنَتَهُ، لَيْسَ بَيْنَهُمَا صَدَاقٌ.
பாடம் : 29 மணக்கொடையின்றி பெண் கொடுத்து பெண் எடுத்தல்54
5112. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘ஷிஃகார்’ முறைத் திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

ஒருவர் மற்றொருவரிடம் ‘‘நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தர வேண்டும்” என்று (முன் நிபந்தனை) விதித்து மணமுடித்து வைப்பதற்கே ‘ஷிஃகார்’ எனப்படும். இதில் இரு பெண்களுக்கும் ‘மஹ்ர்’ (மணக்கொடை) இராது.

அத்தியாயம் : 67
5113. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَتْ خَوْلَةُ بِنْتُ حَكِيمٍ مِنَ اللاَّئِي وَهَبْنَ أَنْفُسَهُنَّ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ عَائِشَةُ أَمَا تَسْتَحِي الْمَرْأَةُ أَنْ تَهَبَ نَفْسَهَا لِلرَّجُلِ فَلَمَّا نَزَلَتْ {تُرْجِئُ مَنْ تَشَاءُ مِنْهُنَّ} قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا أَرَى رَبَّكَ إِلاَّ يُسَارِعُ فِي هَوَاكَ. رَوَاهُ أَبُو سَعِيدٍ الْمُؤَدِّبُ وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ وَعَبْدَةُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ يَزِيدُ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ.
பாடம்: 30 ஒரு பெண், தன்னை ஒருவருக்கு அன்பளிப்பது (அதாவது மஹ்ரின்றி அவரை மணக்க முன்வருவதோ, ‘தன்னை அன்பளித்தேன்’ என்று கூறி திருமணம் செய்துகொள்வதோ) செல்லுமா?
5113. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன்வந்த பெண் களில் கவ்லா பின்த் ஹகீம் (ரலி) அவர்களும் ஒருவராவார். (இது குறித்து) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

ஒரு பெண் தம்மைத்தாமே ஓர் ஆணுக்கு கொடையாக வழங்க வெட்கப்படமாட்டாளா? பின்னர் ‘‘(நபியே! உங்கள் துணைவியராகிய) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம்” எனும் (33:51ஆவது) வசனம் இறங்கியபோது, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களது விருப்பத்தைத் தங்களுடைய இறைவன் விரைவாக பூர்த்திசெய்வதையே நான் காண்கிறேன்” என்று (நபியவர்களிடம்) கூறினேன்.55

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் சற்று கூடுதல் குறைவுடன் வந்துள்ளது.

அத்தியாயம் : 67
5114. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، أَخْبَرَنَا عَمْرٌو، حَدَّثَنَا جَابِرُ بْنُ زَيْدٍ، قَالَ أَنْبَأَنَا ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ تَزَوَّجَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهْوَ مُحْرِمٌ.
பாடம்: 31 (ஹஜ் அல்லது உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்துகொள்வது
5114. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :

இஹ்ராம் கட்டியிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் (மைமூனா (ரலி) அவர் களை) மணமுடித்துக்கொண்டார்கள்.56

அத்தியாயம் : 67
5115. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، أَنَّهُ سَمِعَ الزُّهْرِيَّ، يَقُولُ أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، وَأَخُوهُ عَبْدُ اللَّهِ، عَنْ أَبِيهِمَا، أَنَّ عَلِيًّا ـ رضى الله عنه ـ قَالَ لاِبْنِ عَبَّاسٍ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُتْعَةِ وَعَنْ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ زَمَنَ خَيْبَرَ.
பாடம் : 32 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவணைமுறைத் திருமணத்தை (நிகாஹுல் முத்ஆ) இறுதியாகத் தடை செய்தது57
5115. முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்களும் அப்துல்லாஹ் பின் அலீ (ரஹ்) அவர்களும் கூறியதாவது:

(எம் தந்தை) அலீ (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம்,” ‘அல்முத்ஆ’ (தவணைமுறைத்) திருமணத் திற்கும், நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக் கும் கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று சொன்னார்கள்.58


அத்தியாயம் : 67
5116. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، سُئِلَ عَنْ مُتْعَةِ النِّسَاءِ، فَرَخَّصَ فَقَالَ لَهُ مَوْلًى لَهُ إِنَّمَا ذَلِكَ فِي الْحَالِ الشَّدِيدِ وَفِي النِّسَاءِ قِلَّةٌ أَوْ نَحْوَهُ. فَقَالَ ابْنُ عَبَّاسٍ نَعَمْ.
பாடம் : 32 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவணைமுறைத் திருமணத்தை (நிகாஹுல் முத்ஆ) இறுதியாகத் தடை செய்தது57
5116. அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘அல்முத்ஆ’ (தவணைமுறைத்) திருமணம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அவர்கள், ‘அதற்கு அனுமதி உண்டு’ என்றார்கள். அப்போது அவர்களுடைய முன்னாள் அடிமை ஒருவர் ‘‘(பயணத்தில் மனைவி இல்லாத) நெருக்கடியான சூழ்நிலை, பெண்கள் குறைவாக இருத்தல் போன்ற சமயங்களில்தான் இத்திருமணத்திற்கு அனுமதியுண்டாமே?” என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘ஆம்!” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 67
5117. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو عَنِ الْحَسَنِ بْنِ مُحَمَّدٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، وَسَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالاَ كُنَّا فِي جَيْشٍ فَأَتَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " إِنَّهُ قَدْ أُذِنَ لَكُمْ أَنْ تَسْتَمْتِعُوا فَاسْتَمْتِعُوا ".
பாடம் : 32 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவணைமுறைத் திருமணத்தை (நிகாஹுல் முத்ஆ) இறுதியாகத் தடை செய்தது57
5117. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களும் சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களும் கூறியதாவது:

நாங்கள் ஒரு போர் படையில் இருந்தோம்.59 அப்போது எங்களிடம் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தூதுவர் ஒருவர் வந்து, ‘அல்முத்ஆ’ (தவணை முறைத்) திருமணம் உங்களுக்கு (தாற்காலிமாக) அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ‘அல்முத்ஆ’ திருமணம் செய்து கொள்ளலாம்” என்று அறிவிப்புச் செய்தார்.


அத்தியாயம் : 67
5119. وَقَالَ ابْنُ أَبِي ذِئْبٍ حَدَّثَنِي إِيَاسُ بْنُ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم "" أَيُّمَا رَجُلٍ وَامْرَأَةٍ تَوَافَقَا فَعِشْرَةُ مَا بَيْنَهُمَا ثَلاَثُ لَيَالٍ فَإِنْ أَحَبَّا أَنْ يَتَزَايَدَا أَوْ يَتَتَارَكَا تَتَارَكَا "". فَمَا أَدْرِي أَشَىْءٌ كَانَ لَنَا خَاصَّةً أَمْ لِلنَّاسِ عَامَّةً. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَبَيَّنَهُ عَلِيٌّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ مَنْسُوخٌ.
பாடம் : 32 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவணைமுறைத் திருமணத்தை (நிகாஹுல் முத்ஆ) இறுதியாகத் தடை செய்தது57
5119. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணைமுறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்தபட்சம்) மூன்று நாட்களாவது இல்லறம் நடத்திட வேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள்ள அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக்கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்து விடலாம்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த(த் தவணைமுறை)த் திருமணம் (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டும் (நெருக்கடி நிலையில்) அனுமதிக்கப்பட்டதா? அல்லது மக்கள் அனைவருக்கும் உள்ள பொது அனுமதியா என்பது எனக்குத் தெரியவில்லை.60

அபூஅப்தில்லாஹ் புகாரீ கூறுகிறேன்:

இத்திருமணத்திற்கான அனுமதி விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ (ரலி) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அத்தியாயம் : 67
5120. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَرْحُومٌ، قَالَ سَمِعْتُ ثَابِتًا الْبُنَانِيَّ، قَالَ كُنْتُ عِنْدَ أَنَسٍ وَعِنْدَهُ ابْنَةٌ لَهُ، قَالَ أَنَسٌ جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَعْرِضُ عَلَيْهِ نَفْسَهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَلَكَ بِي حَاجَةٌ، فَقَالَتْ بِنْتُ أَنَسٍ مَا أَقَلَّ حَيَاءَهَا وَاسَوْأَتَاهْ وَاسَوْأَتَاهْ. قَالَ هِيَ خَيْرٌ مِنْكِ رَغِبَتْ فِي النَّبِيِّ صلى الله عليه وسلم فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا.
பாடம்: 33 ஒரு பெண் தன்னை மணந்துகொள்ளுமாறு ஒரு நல்ல மனிதரிடம் கோருதல்
5120. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்கள் அருகில் இருந்தேன். அன்னாருடன் அவர்களுடைய புதல்வியார் ஒருவரும் இருந்தார். (அப்போது) அனஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தன்னை மணந்துகொள்ளுமாறு கோரியபடி ஒரு பெண் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (மணமுடித்துக்கொள்ள) நான் தங்களுக்கு அவசியமா?” எனக் கேட்டார் என்று கூறினார்கள்.

அப்போது அனஸ் (ரலி) அவர்களு டைய புதல்வி, ‘‘என்ன வெட்கங்கெட்டத் தனம்! என்ன அநாகரிகம்! என்ன அநாகரிகம்!!” என்று சொன்னார். அனஸ் (ரலி) அவர்கள், ‘‘அந்தப் பெண்மணி உன்னைவிடச் சிறந்தவர்; அந்தப் பெண் நபியவர்களை (மணந்துகொள்ள) ஆசைப் பட்டார். ஆகவே, தன்னை மணந்து கொள்ளுமாறு கோரினார்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 67
5121. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ، أَنَّ امْرَأَةً، عَرَضَتْ نَفْسَهَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ زَوِّجْنِيهَا. فَقَالَ "" مَا عِنْدَكَ "". قَالَ مَا عِنْدِي شَىْءٌ. قَالَ "" اذْهَبْ فَالْتَمِسْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ "". فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ لاَ وَاللَّهِ مَا وَجَدْتُ شَيْئًا، وَلاَ خَاتَمًا مِنْ حَدِيدٍ، وَلَكِنْ هَذَا إِزَارِي وَلَهَا نِصْفُهُ ـ قَالَ سَهْلٌ وَمَا لَهُ رِدَاءٌ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" وَمَا تَصْنَعُ بِإِزَارِكَ إِنْ لَبِسْتَهُ لَمْ يَكُنْ عَلَيْهَا مِنْهُ شَىْءٌ، وَإِنْ لَبِسَتْهُ لَمْ يَكُنْ عَلَيْكَ مِنْهُ شَىْءٌ "". فَجَلَسَ الرَّجُلُ حَتَّى إِذَا طَالَ مَجْلَسُهُ قَامَ فَرَآهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَدَعَاهُ أَوْ دُعِي لَهُ فَقَالَ "" مَاذَا مَعَكَ مِنَ الْقُرْآنِ "". فَقَالَ مَعِي سُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا لِسُوَرٍ يُعَدِّدُهَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَمْلَكْنَاكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ "".
பாடம்: 33 ஒரு பெண் தன்னை மணந்துகொள்ளுமாறு ஒரு நல்ல மனிதரிடம் கோருதல்
5121. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களி டம் தன்னை மணந்துகொள்ளுமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், ‘‘இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(இவருக்கு மஹ்ர் கொடுக்க) உம்மிடம் என்ன உள்ளது?” என்று கேட்டார்கள். அவர், ‘‘என்னிடம் ஒன்றுமில்லை” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் சென்று, இரும்பினாலான ஒரு மோதிரத்தையாவது தேடு!” என்று சொன்னார்கள்.

அவர் போய் (தேடிப்பார்த்து)விட்டுத் திரும்பி வந்து, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை; இரும்பாலான மோதிரம்கூட கிடைக்க வில்லை. ஆனால், இதோ எனது இந்த கீழங்கி உண்டு. இதில் பாதி அவளுக்கு (மஹ்ர்)” என்றார். - அவரிடம் ஒரு மேல்துண்டுகூட இல்லை. (அதனால்தான், கீழங்கியில் பாதியைத் தருவதாகச் சொன்னார்.)

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உமது கீழங்கியை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்? அதை நீர் உடுத்திக் கொண்டால் அவள்மீது (அதில்) ஏதும் இருக்காது; அதை அவள் உடுத்திக் கொண்டால் அதில் உம்மீது ஏதும் இருக்காது. (உமது கீழங்கியைக் கொடுத்து விட்டு என்ன செய்யப்போகிறாய்?)” என்று சொன்னார்கள். பிறகு அவர் நெடுநேரம் (அங்கேயே) அமர்ந்திருந்துவிட்டு எழுந்தார்.

அவர் செல்வதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘அவரை அழைத்தார்கள்’. அல்லது ‘அவர் அழைக்கப்பட்டார்’. (அவர் வந்தவுடன்) அவரிடம், ‘‘உம்முடன் குர்ஆனில் என்ன உள்ளது?” என்று நபியவர்கள் கேட்டார்கள்.

அதற்கு அவர் நபியவர்களிடம், ‘‘(குர்ஆனில்) இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னுடன் (மனப்பாடமாக) உள்ளது” என்று சில அத்தியாயங்களை எண்ணி எண்ணிச் சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உமக்கு மனப்பாடமாகத் தெரிந்துள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக அவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன்” என்று சொன்னார்கள்.61

அத்தியாயம் : 67
5122. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يُحَدِّثُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ حِينَ تَأَيَّمَتْ حَفْصَةُ بِنْتُ عُمَرَ مِنْ خُنَيْسِ بْنِ حُذَافَةَ السَّهْمِيِّ ـ وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَتُوُفِّيَ بِالْمَدِينَةِ ـ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أَتَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ فَعَرَضْتُ عَلَيْهِ حَفْصَةَ فَقَالَ سَأَنْظُرُ فِي أَمْرِي. فَلَبِثْتُ لَيَالِيَ ثُمَّ لَقِيَنِي فَقَالَ قَدْ بَدَا لِي أَنْ لاَ أَتَزَوَّجَ يَوْمِي هَذَا. قَالَ عُمَرُ فَلَقِيتُ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ فَقُلْتُ إِنْ شِئْتَ زَوَّجْتُكَ حَفْصَةَ بِنْتَ عُمَرَ. فَصَمَتَ أَبُو بَكْرٍ فَلَمْ يَرْجِعْ إِلَىَّ شَيْئًا، وَكُنْتُ أَوْجَدَ عَلَيْهِ مِنِّي عَلَى عُثْمَانَ، فَلَبِثْتُ لَيَالِيَ ثُمَّ خَطَبَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَنْكَحْتُهَا إِيَّاهُ، فَلَقِيَنِي أَبُو بَكْرٍ فَقَالَ لَعَلَّكَ وَجَدْتَ عَلَىَّ حِينَ عَرَضْتَ عَلَىَّ حَفْصَةَ فَلَمْ أَرْجِعْ إِلَيْكَ شَيْئًا. قَالَ عُمَرُ قُلْتُ نَعَمْ. قَالَ أَبُو بَكْرٍ فَإِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أَرْجِعَ إِلَيْكَ فِيمَا عَرَضْتَ عَلَىَّ إِلاَّ أَنِّي كُنْتُ عَلِمْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ ذَكَرَهَا، فَلَمْ أَكُنْ لأُفْشِيَ سِرَّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَوْ تَرَكَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَبِلْتُهَا.
பாடம்: 34 ஒருவர் தம் மகளையோ சகோதரியையோ மணமுடித்துக் கொள்ளு மாறு நல்லோரிடம் கோருவது
5122. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (தம் மருமகன்) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவரை வேறொருவருக்கு மணமுடித்துவைக்க எண்ணினார்கள்.)

-குனைஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒருவராவார். மேலும், அவர் மதீனாவில் இறந்தார்.-

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

எனவே, நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் சென்று, (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறினேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், ‘‘(தங்கள் மகளை நான் மணமுடித்துக்கொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டி யுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)” என்று சொன்னார்கள்.

சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ‘‘இப்போது திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்றே எனக்குத் தோன்றியது” என்று கூறினார்கள்.

ஆகவே, நான் அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) ‘‘நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்” என்று கூறினேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்தப் பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான் (ரலி) அவர்களைவிட அபூபக்ர் (ரலி) அவர்கள்மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன்.

சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்துவைத்தேன்.

பிறகு (ஒருநாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ‘‘நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்குப் பதிலேதும் கூறாததால், உங்களுக்கு என்மீது மனவருத்தம் இருக்கக்கூடும்” என்று கூறினார்கள். நான், ‘‘ஆம்” என்று சொன்னேன்.

(அதற்கு) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘நீங்கள் கூறியபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணம் புரிந்துகொள்வது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்குப் பதிலேதும் கூறவில்லை). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக்கொண்டிருப்பேன்” என்று கூறினார்கள்.62


அத்தியாயம் : 67