பாடம் : 16 (கண்ணைக் கவரும்) வேலைப்பாடு மிக்க ஆடை அணிந்து தொழுவது வெறுக்கப் பட்டதாகும் .
963. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். (தொழுது முடித்ததும்,) இதன் வேலைப்பாடுகள் எனது கவனத்தை ஈர்த்துவிட்டன. எனவே, இந்த ஆடையை (எனக்கு அன்பளித்த) அபூ ஜஹ்மிடம் சேர்த்துவிட்டு (அவரிடமிருந்து மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் முன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
964. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு நின்று தொழுதார்கள். அதன் வேலைப்பாட்டை உற்று நோக்கினார்கள். தொழுது முடித்ததும், "இந்த ஆடையை (எனக்கு அன்பளித்த) அபூ ஜஹ்ம் பின் ஹுதைஃபாவிடம் (இதைக்) கொண்டுசெல்லுங்கள். (அவரிடமிருந்து மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டுவாருங்கள். ஏனெனில், சற்று முன்பு இது தொழுகையிலிருந்து எனது கவனத்தைத் திருப்பிவிட்டது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 5
965. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்று இருந்தது. அது தொழுகையில் அவர்களது கவனத்தை ஈர்த்துவந்தது. எனவே, அதை (தமக்கு அன்பளித்த) அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து மற்றொரு சாதாரண ஆடையை வாங்கிக்கொண்டார்கள்.
அத்தியாயம் : 5
பாடம் : 17 உடனே உண்ண விரும்பும் உணவு அங்கு காத்திருக்கத் தொழுவது வெறுக்கப் பட்டதாகும்; சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டு தொழுவதும் வெறுக்கப் பட்டதாகும்.
966. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவு நேர உணவு முன்னே காத்திருக்கத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்படுமானால் நீங்கள் முதலில் உணவை உண்ணுங்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் மஃக்ரிப் தொழுகை தொழுவதற்கு முன்னால் (உங்கள் முன்) இரவு நேர உணவு வைக்கப்படுமானால் முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழுகையை நிறைவேற்றுங்கள்.) உங்களது இரவு உணவை விடுத்து (தொழுகைக்காக) நீங்கள் அவசரப்பட வேண்டாம்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 5
967. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
968. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்கு முன்னால் இரவு நேர உணவு வைக்கப்பட்டுவிட, தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் முதலில் உணவை உண்ணுங்கள். அதை உண்டு முடிக்கும்வரை (தொழுகைக்காக) அவசரப்பட வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
969. இப்னு அபீஅத்தீக் (அப்துல்லாஹ் பின் முஹம்மத் அபீஅத்தீக் பின் அப்திர் ரஹ்மான் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவரான காசிம் பின் முஹம்மத் பின் அப்திர் ரஹ்மானும் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒரு விஷயம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். காசிம் (எதையும்) பிழையாகப் பேசுபவராக இருந்தார். அவரிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், "உனக்கு என்ன நேர்ந்தது? நீ ஏன் இந்த என் சகோதரர் புதல்வரைப் போன்று (பிழையின்றி) பேசுவதில்லை? இந்தப் பழக்கம் உனக்கு எங்கிருந்து வந்தது என்று நான் அறிந்துகொண்டேன். இவரை இவருடைய தாய் வளர்த்தார். உன்னை உன்னுடைய தாய் வளர்த்தார்" என்று கூறினார்கள். இதைக் கேட்ட காசிம் கோபம் கொண்டு, ஆயிஷா (ரலி) அவர்கள்மீது எரிச்சலடைந்தார். ஆயிஷா (ரலி) அவர்களுக்கு முன் உணவுத் தட்டு கொண்டுவரப்பட்டபோது காசிம் எழுந்துவிட்டார். ஆயிஷா (ரலி) அவர்கள், "எங்கே (போகிறாய்)?" என்று கேட்க, காசிம் "நான் தொழப்போகிறேன்" என்றார். ஆயிஷா (ரலி) அவர்கள், "உட்கார்!" என்றார்கள். காசிம் "நான் தொழப்போகிறேன்" என்று (மீண்டும்) கூறினார். ஆயிஷா (ரலி) அவர்கள் "அவசரக்காரனே! உட்கார்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக்கூடாது" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. ஆனால், அவற்றில் காசிம் பின் முஹம்மதைப் பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 5
பாடம் : 18 )சமைக்கப்படாத) வெள்ளைப் பூண்டு, வெங்காயம், சீமைப் பூண்டு போன்ற துர்வாடையுள்ளவற்றைச் சாப்பிட்டவர் அதன் வாடை போவதற்கு முன் பள்ளிவாசலுக்குச் செல்லலாகாது. அவரைப் பள்ளிவாசலில் இருந்து வெளியேற்றலாம்.
970. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, "இந்தச் செடியிலிருந்து விளைகின்றதை (அதாவது வெள்ளைப் பூண்டை) சாப்பிட்டவர் பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டாம்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஒரு போரின்போது" என்று காணப்படுகிறது. "கைபர் போரின்போது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 5
971. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்தச் செடியிலிருந்து விளைவதை (அதாவது வெள்ளைப் பூண்டை) சாப்பிட்டவர் அதன் வாடை விலகாதவரை நம்முடைய பள்ளிவாசல்களை நெருங்க வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
972. அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்களிடம் வெள்ளைப் பூண்டு குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இந்தச் செடியிலிருந்து (விளையும் பூண்டைச்) சாப்பிட்டவர் நம்மை நெருங்கவோ நம்முடன் தொழவோ வேண்டாம்" எனச் சொன்னார்கள்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 5
973. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்தச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்கவோ, பூண்டின் (துர்)வாடையால் நமக்குத் தொல்லை தரவோ வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
974. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெங்காயம், சீமைப் பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று தடைசெய்தார்கள். எங்களுக்குத் தேவை மிகைத்துவிடவே அவற்றிலிருந்து நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். அப்போது அவர்கள், "துர்வாடையுள்ள இந்தச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்களுக்குத் தொல்லை தருகின்றவை வானவர்களுக்கும் தொல்லை தருகின்றன" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 5
975. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் "நம்மிடமிருந்து" அல்லது "நமது பள்ளிவாசலிலிருந்து" விலகியிருக்கட்டும்; அவர் (கூட்டுத் தொழுகைக்கு வராமல்) தம் இல்லத்திலேயே அமர்ந்துகொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
)ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் காய்கறிகளும் கீரைகளும் இருந்தன. அவற்றில் (துர்)வாடை வீசுவதை நபியவர்கள் உணர்ந்தார்கள். (அவற்றைப் பற்றி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதிலுள்ள கீரைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தம் தோழர்களில் ஒருவருக்குக் கொடுத்துவிடுமாறு கூறினார்கள். அத்தோழரும் அதை உண்ண விரும்பாமலிருந்ததைக் கண்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், நீங்கள் உரையாடாத (வான)வர்களுடன் நான் உரையாட வேண்டியதுள்ளது"என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
976. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "இந்தச் செடியிலிருந்து விளைகின்ற வெள்ளைப் பூண்டைச் சாப்பிட்டவர் -மற்றோர் தடவை "வெங்காயம், வெள்ளைப் பூண்டு, சீமைப் பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட்டவர்"- நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்கள் எதனால் தொல்லை அடைகிறார்களோ அதனால் வானவர்களும் தொல்லை அடைகின்றனர்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 5
977. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "இந்தச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலில் நம்மைச் சூழ்ந்திருக்க வேண்டாம்" என நபி (ஸல்) அவர்கள் வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்டு கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது. ஆனால், வெங்காயம், சீமைப் பூண்டு ஆகியவற்றைப் பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 5
978. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் வெற்றி கொள்ளப்பட்டு (அதன் கோட்டையைக்கூட) நாங்கள் கடந்திருக்க வில்லை. (அதற்குள் வழியிலுள்ள) அந்த வெள்ளைப் பூண்டு பயிரி(டப்பட்டிருந்த வயலி)ல் நபித்தோழர்களான நாங்கள் புகுந்தோம். அப்போது மக்கள் பசியுடன் இருந்தனர்.
எனவே, நாங்கள் வெள்ளைப் பூண்டை நன்கு சாப்பிட்டோம். பிறகு நாங்கள் தொழும் இடத்துக்குச் சென்றபோது (எங்களிடமிருந்து வெள்ளைப் பூண்டின்) நெடி வீசுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். அப்போது, "இந்த துர்வாடை வீசும் செடியிலிருந்து எதையேனும் சாப்பிட்டவர் தொழுமிடத்தில் நம்மருகே நெருங்க வேண்டாம்" என்று கூறினார்கள். மக்கள் "வெள்ளைப் பூண்டு தடை செய்யப்பட்டுவிட்டது. வெள்ளைப் பூண்டு தடை செய்யப்பட்டுவிட்டது" என்று கூறினர். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, "மக்களே! அல்லாஹ் எனக்கு அனுமதித்த ஒன்றைத் தடை செய்யும் உரிமை எனக்கு இல்லை. இருப்பினும், அந்தச் செடியின் துர்வாடையை நான் வெறுக்கிறேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 5
979. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் வெங்காயம் பயிரிடப்பட்டிருந்த ஒரு வயலைக் கடந்துசென்றார்கள். அப்போது மக்களில் சிலர் அதில் இறங்கி வெங்காயங்களை (பறித்து)ச் சாப்பிட்டனர். வேறு சிலர் சாப்பிட வில்லை. பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது வெங்காயம் சாப்பிடாதவர்களை (தம்மருகே) அழைத்தார்கள். மற்றவர்களை, அதன் வாடை விலகும்வரை (நெருங்கவிடாமல்) தள்ளி இருக்கச்செய்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
980. மஅதான் பின் அபீதல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
)கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு வெள்ளிக் கிழமை (ஜுமுஆ) தினத்தன்று உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (தமது உரையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் நினைவுகூர்ந்தார்கள். மேலும், அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நான் (இன்று) ஒரு கோழி என்னை மூன்று முறை கொத்துவதைப் போன்று (கனவு) கண்டேன். இதற்கு என் ஆயுட்காலம் முடிந்துவிட்டது என்றே நான் (விளக்கம்) கண்டேன். மக்களில் சிலர் நான் (எனக்குப் பின்னால்) என் (ஆட்சிக்குப்) பிரதிநிதி (கலீஃபா) ஒருவரை அறிவிக்குமாறு கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் தனது மார்க்கத்தையோ, தன் (அடியார்களின்) ஆட்சித் தலைமையையோ, நபி (ஸல்) அவர்களை எதனுடன் அனுப்பிவைத்தானோ அதையோ பாழாக்கிவிடமாட்டான். எனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவரைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்களோ அத்தகைய இந்த ஆறுபேர் ஆட்சித் தலைமை குறித்துத் தம்மிடையே கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள்.
சிலர் இந்த விஷயத்தில் என்னைக் குறை கூறிவருவது எனக்குத் தெரியும். நான் (சில நேரங்களில்) அவர்களை இஸ்லாத்திற்காக எனது இந்தக் கையால் அடித்திருக்கிறேன். அவர்கள் இவ்வாறு செய்(வதை மார்க்க அங்கீகாரமுடைய ஒரு செயலாக நினைத்)தால் அத்தகையோர்தாம் இறைவனின் விரோதிகளும் வழிகெட்ட இறைமறுப்பாளர்களும் ஆவர்.
நான் எனக்குப் பின்னால் "கலாலா"வைவிட ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுச் செல்லவில்லை. நான், இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவாதித்ததைப் போன்று வேறு எதற்காகவும் விவாதித்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இது தொடர்பாக என்னிடம் கடிந்துகொண்டதைப் போன்று வேறு எதற்காகவும் என்னிடம் கடிந்துகொண்டதில்லை. எந்த அளவிற்கு (அவர்கள் என்னைக் கடிந்துகொண்டார்கள்) எனில், அவர்கள் தமது விரலால் என் நெஞ்சில் குத்தினார்கள். "உமரே! அந்நிஸா அத்தியாயத்தின் கடைசியிலுள்ள (4:176ஆவது) வசனம் உமக்குப் போதுமானதாக இல்லையா?" என்று கேட்டார்கள்.
நான் இன்னும் (சிறிது காலம்) வாழ்ந்தால் இந்த "கலாலா" தொடர்பாகக் குர்ஆனைக் கற்றோரும் கல்லாதோரும் தீர்ப்பளிக்கும் விதத்தில் தெளிவான ஒரு தீர்ப்பை வழங்குவேன்.
பின்னர் (தொடர்ந்து) கூறினார்கள்:
"இறைவா! நகரங்களின் ஆளுநர்களுக்கு உன்னையே சாட்சியாக்குகிறேன். நான் அவர்களை அந்த மக்களிடையே நேர்மையாக நடந்துகொள்வதற்காகவும் அவர்களுடைய மார்க்கத்தையும் அவர்களுடைய நபி (ஸல்) அவர்களது வழிமுறையையும் கற்றுத் தருவதற்காகவுமே அனுப்பிவைத்தேன். மேலும், அவர்களுக்குப் போரிடாமல் கிடைத்த ("ஃபய்உ" எனும்) செல்வத்தை அவர்கள் தம்மிடையே (முறையோடு) பங்கிட வேண்டும்; அவர்களுடைய விவகாரங்களில் சிக்கல் எழும்போது அதை என் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் (என்றும் கூறி அனுப்பினேன்(.
மக்களே! நீங்கள் இரு செடிகளிலிருந்து விளைகின்றவற்றைச் சாப்பிடுகிறீர்கள். அவ்விரண்டையும் நான் அருவருப்பானவையாகக் கருதுகிறேன். இந்த வெங்காயமும் வெள்ளைப் பூண்டுமே (அவை இரண்டுமாகும்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது ஒருவரிடமிருந்து அவற்றின் துர்வாடை வருவதைக் கண்டால், அவரை "அல்பகீஉ" பொது மையவாடிக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு வருமாறு கூறுவார்கள். எனவே, யார் அதைச் சாப்பிட விரும்புகிறாரோ அவர் அதைச் சமைத்து அதன் வாடையை நீக்கிக்கொள்ளட்டும்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 19 காணாமற்போன பொருட்களைப் பள்ளிவாசலுக்குள் தேடுவதற்கு வந்துள்ள தடையும் அவ்வாறு தேடிக்கொண்டிருப்பவரின் குரலைக் கேட்பவர் கூற வேண்டியதும்.
981. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காணாமற்போன ஒரு பொருளைப் பள்ளிவாசலுக்குள் தேடிக்கொண்டிருப்பவரின் குரலைச் செவியுறுபவர் "அல்லாஹ் அதை உனக்குத் திரும்பக் கிடைக்காமல் செய்வானாக!" என்று கூறட்டும். ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
982. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
காணாமற்போன (தமது ஒட்டகத்)தைப் பற்றிப் பள்ளிவாசலுக்குள் விசாரித்த ஒரு
மனிதர், "(எனது) சிவப்பு ஒட்டகத்தி(னைக் கண்டுபிடித்து அதனி)டம் (என்னை) அழைத்துச் செல்பவர் யார்?" என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "(உனது ஒட்டகம்) உனக்குக் கிடைக்காமற்போகட்டும். பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்பட்டனவோ அதற்கு மட்டுமே உரியனவாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 5