பாடம் : 19 ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்த நீண்ட ஹதீஸும், அபுல்யசர் (ரலி) அவர்களின் நிகழ்ச்சியும்.
5736. உபாதா பின் அல்வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் என் தந்தை (வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித்-ரஹ்) அவர்களும் அன்சாரிகளில் குறிப்பிட்ட ஒரு கிளையாரிடம், அவர்கள் இறப்பதற்குமுன் (அவர்களிடமுள்ள நபிமொழிக்) கல்வியைக் கற்றுக்கொள்வதற்காகப் புறப்பட்டோம். நாங்கள் முதன் முதலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபுல்யசர் (ரலி) அவர்களையே சந்தித்தோம்.
அவர்களுடன் அவர்களுடைய அடிமை ஒருவரும் இருந்தார். அவரிடம் பதிவேடுகளில் ஒரு தொகுப்பும் இருந்தது. அபுல்யசர் (ரலி) அவர்களின் உடலில் போர்வை ஒன்றும் "மஆஃபிர்"எனும் ஊரின் ஆடையொன்றும் இருந்தது. (அதைப் போன்றே) அவர்களுடைய அடிமையின் மீதும் போர்வையொன்றும் "மஆஃபிரீ" ஆடையொன்றும் இருந்தது.
அபுல்யசர் (ரலி) அவர்களிடம் என் தந்தை, "என் தந்தையின் சகோதரரே! நான் தங்களது முகத்தில் கோபத்தின் அறிகுறியைக் காண்கிறேனே?" என்று கேட்டார்கள். அதற்கு அபுல்யசர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆம்; "பனூ ஹராம்" குலத்தைச் சேர்ந்த இன்னாரின் புதல்வர் இன்னார் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. (அதை வசூலிப்பதற்காக) நான் சென்று, அவருடைய வீட்டாருக்கு முகமன் (சலாம்) கூறினேன். பிறகு "அவர் இருக்கிறாரா?"என்று கேட்டேன்.வீட்டார், "இல்லை" என்று விடையளித்தனர். அப்போது பருவவயதை நெருங்கி விட்டிருந்த அவருடைய புதல்வர் ஒருவர் வெளியே வந்தார்.
அவரிடம் நான், "உன் தந்தை எங்கே?" என்று கேட்டேன். அதற்கு அவர், "உங்களின் குரலைக் கேட்டதும் அவர் என் தாயாரின் கட்டிலுக்கடியில் நுழைந்துகொண்டார்" என்று பதிலளித்தார்.
உடனே நான், "நீர் எங்கே இருக்கிறீர் என்பதை நான் அறிந்துகொண்டேன். வெளியே வாரும்" என்றேன். அவர் வெளியே வந்தார்.
நான், "என்னிடமிருந்து ஒளிந்துகொள்ள என்ன காரணம்?" என்று கேட்டேன். அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (உண்மையைச்) சொல்லிவிடுகிறேன். உங்களிடம் பொய் சொல்லமாட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களிடம் பேசும்போது பொய் சொல்லிவிடுவேனோ, அல்லது உங்களுக்கு வாக்களித்துவிட்டு மாறுசெய்துவிடுவேனோ என்றுதான் அஞ்சினேன். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் ஆவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நெருக்கடியில் இருக்கிறேன்" என்று கூறினார்.
நான், "அல்லாஹ்வின் மீதாணையாகவா" என்று கேட்டேன். அவர் "அல்லாஹ்வின் மீதாணையாகத்தான்" என்றார். நான் (மீண்டும்) "அல்லாஹ்வின் மீதாணையாகவா?" என்று கேட்டேன். அவர் "அல்லாஹ்வின் மீதாணையாகத்தான்" என்றார். நான் (மறுபடியும்) "அல்லாஹ்வின் மீதாணையாகவா?" என்று கேட்டேன். அவர் "அல்லாஹ்வின் மீதாணையாகத் தான்" என்று (மூன்றாவது முறையும்) பதிலளித்தார்.
பிறகு அவர் தமது (கடன்) பத்திரத்தைக் கொண்டுவந்தார். அதை நான் எனது கையால் அழித்துவிட்டேன். பிறகு "கடனைச் செலுத்துவதற்கு ஏதேனும் கிடைத்தால் எனக்குரிய கடனைச் செலுத்தி விடுங்கள். இல்லாவிட்டால், (கடனைச் செலுத்தாமலிருக்க) உங்களுக்கு அனுமதி உண்டு" என்று கூறிவிட்டேன்.
பிறகு அபுல்யசர் (ரலி) அவர்கள் தம் கண்கள்மீது இரு விரல்களை வைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: இந்த என்னிரு கண்களும் பார்த்தன; இவ்விரு காதுகளும் கேட்டன; (தமது இதயப் பகுதியில் கையை வைத்து) இந்த உள்ளம் மனனமிட்டது. பின்வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சிரமத்திலிருப்பவருக்கு (அவர் தர வேண்டிய கடனுக்கு) அவகாசம் அளிக்கிறாரோ, அல்லது (கடனைத்) தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருகின்றான்.
அப்போது நான், "என் தந்தையின் சகோதரரே! நீங்கள் உங்கள் அடிமை அணிந்திருக்கும் போர்வையைப் பெற்றுக்கொண்டு உங்களது "மஆஃபிரீ" ஆடையை அவருக்கு அளித்து விட்டாலோ, அல்லது அவரது "மஆஃபிரீ"ஆடையைப் பெற்றுக்கொண்டு உங்களது போர்வையை அவருக்கு அளித்துவிட்டாலோ உங்களுக்கு ஒரு ஜோடி ஆடையும் அவருக்கு ஒரு ஜோடி ஆடையும் கிடைத்து விடுமே!" என்று கேட்டேன்.
அப்போது அபுல்யசர் (ரலி) அவர்கள் (அன்புடன்) என் தலையைத் தடவிவிட்டு, "இறைவா! இ(ச்சிறு)வருக்கு வளம் புரிவாயாக! என் சகோதரரின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உங்கள் அடிமைகளான) அவர்களுக்கு நீங்கள் உண்பதிலிருந்து உணவளியுங்கள். நீங்கள் உடுத்துவதிலிருந்தே அவர்களுக்கும் உடை கொடுங்கள்" என்று கூறினார்கள்" என்றார்கள்.
அதை அவர்கள் கூறியபோது, "என் இவ்விரு கண்களும் பார்த்தன; இவ்விரு காதுகளும் கேட்டன; (தமது இதயப்பகுதியில் கையை வைத்து) இதோ இந்த உள்ளம் அதை மனனமிட்டுக் கொண்டது. இவர் மறுமை நாளில் என் நன்மைகளை எடுத்துக் கொள்வதைவிட இவ்வுலகில் பொருட்களை அவருக்கு நான் கொடுப்பது எனக்குச் சுலபமானதே"என்று சொன்னார்கள்.
-பிறகு நாங்கள் (இருவரும்) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் தமது பள்ளிவாசலில் ஒரே ஓர் ஆடையை போர்த்திக்கொண்டு தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது நான் மக்களைக் கடந்துசென்று அவர்களுக்கும் "கிப்லா"த் திசைக்குமிடையே அமர்ந்துகொண்டேன்.
அப்போது நான், "அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்! தங்களது மேலாடை தங்களுக்கு அருகில் இருக்கவே,ஒரே ஆடையில் தொழுகிறீர்களே?" என்று கேட்டேன். அப்போது அவர்கள் தம் விரல்களை விரித்து, பின்னர் வில் போன்று வளைத்து, இவ்வாறு என் நெஞ்சில் வைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: உம்மைப் போன்ற விவரமில்லாதவர் என்னிடம் வந்து, நான் எப்படிச் செய்கிறேன் என்று பார்த்துவிட்டு, அதைப் போன்றே அவரும் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். (ஒரு முறை) இந்தப் பள்ளிவாசலில் நாங்கள் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள்.
அப்போது அவர்களது கையில் "இப்னு தாப்" வகை பேரீச்சமரத்தின் பாளை ஒன்று இருந்தது. அப்போது பள்ளிவாசலின் "கிப்லா"த் திசை சுவரில் காறி உமிழப்பட்டிருந்த சளியைக் கண்டார்கள். உடனே அதை அந்தப் பாளையால் சுரண்டிவிட்டார்கள்.
பிறகு எங்களை முன்னோக்கி, "உங்களில் யார் தம்மை இறைவன் புறக்கணிக்க வேண்டும் என விரும்புவார்?" என்று கேட்டார்கள். அதைக் கேட்டு நாங்கள் அஞ்சினோம். பிறகு "உங்களில் யார் தம்மை இறைவன் புறக் கணிக்க வேண்டும் என விரும்புவார்?" என்று (மீண்டும்) கேட்டார்கள். நாங்கள் (மறுபடியும்) அஞ்சினோம்.
பிறகு, "உங்களில் யார் தம்மை இறைவன் புறக்கணிக்க வேண்டுமென விரும்புவார்?" என (மூன்றாவது முறையாகக்) கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! இல்லை; எங்களில் எவரும் (அதை விரும்பமாட்டார்)" என்று பதிலளித்தோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் தொழுவதற்காக நின்றால், வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் அவரது முகத்துக்கெதிராக இருக்கின்றான். ஆகவே, அவர் தமது முகத்துக்கெதிரே உமிழ வேண்டாம். வலப் பக்கத்திலும் உமிழ வேண்டாம். (மாறாக) தமக்கு இடப்பக்கத்தில் இடக் காலுக்குக் கீழே உமிழ்ந்து (மண்ணால் மூடிக்)கொள்ளட்டும். (தம்மையும் அறியாமல்) சளி முந்திவிட்டால் தமது ஆடையில் இவ்வாறு உமிழ்ந்துகொள்ளட்டும்" என்று கூறி, ஆடையின் ஒரு பகுதியை மற்றொரு பகுதியோடு சேர்த்துக் கசக்கினார்கள்.
"பிறகு நறுமணக் கலவை ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். உடனே இன்ன குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் எழுந்து, தமது வீட்டாரை நோக்கி விரைந்தார். பிறகு தமது கையில் சிறிது நறுமணக் கலவையுடன் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைப் பெற்று அந்தப் பேரீச்சம் பாளையின் நுனியில் வைத்து, பிறகு சளியின் அடையாளம் தெரிந்த அந்த இடத்தில் அதைத் தோய்த்தார்கள். இதை முன்னிட்டே நீங்கள் உங்கள் பள்ளிவாசல்களில் நறுமணங்களை வைக்கும் வழக்கம் தொடங்கியது.
- (தொடர்ந்து ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:)
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ("ஜுஹைனா" குலத்தாரை நோக்கி) "பத்னு புவாத்" போருக்குச் சென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மஜ்தீ பின் அம்ர் அல்ஜுஹனீ என்பவரைத் தேடினார்கள். அப்(பயணத்தின்)போது ஓர் ஒட்டகத்தில் ஐந்து அல்லது ஆறு அல்லது ஏழு பேர் என முறைவைத்து, ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தோம். (அந்த அளவுக்கு வாகனப் பற்றாக்குறை இருந்தது.)
இந்த நிலையில் அன்சாரிகளில் ஒருவருடைய முறை வந்தபோது, அவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அதில் ஏறினார். பிறகு அதைக் கிளப்பினார். ஆனால், அது சிறிது (சண்டித்தனம் செய்து) நின்றுவிட்டது. அப்போது அவர் "ஷஃ" என அதை விரட்டிவிட்டு, "உனக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!" என்று சபித்தார். இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தமது ஒட்டகத்தைச் சபித்த இந்த மனிதர் யார்?" என்று கேட்டார்கள். "நான்தான், அல்லாஹ்வின் தூதரே!" என்று அந்த அன்சாரி பதிலளித்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதிலிருந்து இறங்கிவிடு! சபிக்கப்பட்ட ஒரு பொருளோடு எங்களுடன் நீர் வரவேண்டாம். நீங்கள் உங்களுக்கெதிராகவோ உங்கள் குழந்தைகளுக்கெதிராகவோ உங்கள் செல்வங்களுக்கெதிராகவோ பிரார்த்திக்காதீர்கள். அல்லாஹ்விடம் கேட்டது கொடுக்கப்படும் நேரமாக அது தற்செயலாக அமைந்துவிட்டால், உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக்கொள்வான் (அது உங்களுக்குப் பாதகமாக அமைந்துவிடும்)" என்று சொன்னார்கள்.
- (தொடர்ந்து ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:)
நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். ஒரு நாள் மாலை நேரமானபோது நாங்கள் அரபியரின் நீர்நிலையொன்றை நெருங்கினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நமக்கு முன்பே சென்று அங்குள்ள நீர் தொட்டியைச் செப்பனிட்டு, தாமும் நீரருந்தி, நமக்கும் நீர் புகட்டுபவர் யார்?" என்று கேட்டார்கள்.
உடனே நான் எழுந்து, "இந்த மனிதன் (தயாராக இருக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜாபிருடன் செல்பவர் யார்?" என்று கேட்டார்கள். உடனே ஜப்பார் பின் ஸக்ர் (ரலி) அவர்கள் எழுந்தார்கள். நாங்கள் அந்தக் கிணற்றை நோக்கி நடந்தோம். கிணற்றில் நீரிறைத்து அந்தத் தொட்டிக்குள் ஒரு வாளி,அல்லது இரு வாளித் தண்ணீரை ஊற்றினோம். பிறகு மண்ணைப் பூசி அந்தத் தொட்டியைச் செப்பனிட்டோம். பிறகு கிணற்றிலிருந்து நீரிறைத்து அந்தத் தொட்டியை நிரப்பினோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எங்களிடம் முதலில் வந்தார்கள். எங்களிடம், "நீங்கள் எனக்கு (இதிலுள்ள நீரைப் பயன்படுத்திக்கொள்ள) அனுமதியளிக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்;அல்லாஹ்வின் தூதரே!" என்றோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தின் தலையைத் தொட்டிக்குள் சரித்தார்கள். அது நீரருந்தியது. அதன் கடிவாளத்தை இறுக்கிப் பிடித்தபோது காலை அகற்றிவைத்து அது சிறுநீர் கழித்தது. பிறகு ஒட்டகத்துடன் திரும்பிச் சென்று அதை மண்டியிட்டுப் படுக்கவைத்தார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் தண்ணீர் தொட்டிக்கு வந்து, அதிலிருந்து அங்கத்தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு நான் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத்தூய்மை செய்த இடத்தில் அங்கத்தூய்மை செய்தேன். அப்போது (என்னுடனிருந்த) ஜப்பார் பின் ஸக்ர் (ரலி) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். என்மீது போர்வையொன்று இருந்தது. அதன் இரு ஓரங்களையும் பிடித்து தோள்கள்மீது மாற்றிப் போடப்பார்த்தேன். ஆனால், (சிறிதாக இருந்ததால்) அதற்கு வசதிப்படவில்லை. ஆனால், அந்தப் போர்வையில் பல குஞ்சங்கள் இருந்தன. அவற்றை நான் திருப்பிப் போட்டுவிட்டு அதன் இரு ஓரங்களையும் நான் மாற்றிப் போட்டுக்கொண்டேன். பிறகு அந்தப் போர்வையை என் கழுத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டேன்.
பிறகு வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப்பக்கத்தில் நின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்து அப்படியே சுற்றிவரச் செய்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள்.
பிறகு ஜப்பார் பின் ஸக்ர் (ரலி) அவர்கள் வந்து அங்கத்தூய்மை செய்துவிட்டுப் பிறகு வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப்பக்கத்தில் நின்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரின் கைகளைப் பிடித்து எங்களை (பின் வரிசைக்கு) தள்ளினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் அறிந்துகொள்ளாத விதத்தில் என்னை உற்று நோக்கினார்கள். நான் சுதாரித்துக்கொண்டேன். அப்போது "உன் கீழாடையின் நடுப் பகுதியை முடிந்துகொள்" என்று கூறும் விதமாக தமது கையால் சைகை செய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், "ஜாபிரே!" என்று அழைத்தார்கள். நான், "சொல்லுங்கள்; அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். "(உனது) ஆடை விசாலமானதாயிருந்தால் அதன் இரு ஓரங்களை வலம் இடமாக மாற்றிப் போட்டுக் கொள். அது சிறியதாக இருந்தால் அதை இடுப்பில் (கீழாடையாக) அணிந்துகொள் (தோள்மீது போட வேண்டியதில்லை)" என்றார்கள்.
- (தொடர்ந்து ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:)
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றோம். அப்போது எங்களில் ஒவ்வொருவருடைய உணவும் நாளொன்றுக்கு ஒரு பேரீச்சம் பழமாகவே இருந்தது. அதை அவர் வாயிலிட்டுச் சுவைத்துவிட்டு, பிறகு அதைத் தமது ஆடையில் முடிந்து வைத்துக்கொள்வார். (அந்தப் பயணத்தில்) நாங்கள் எங்கள் வில்லால் மரங்களிலிருந்து இலைகளை உதிர்த்து அதைச் சாப்பிட்டோம். எந்த அளவுக்கென்றால், (ஒவ்வாமையால்) எங்கள் வாயெல்லாம் புண்ணாகிவிட்டது.
நான் அறுதியிட்டுச் சொல்கிறேன்: ஒரு நாள் ஒரு மனிதருக்கு அவரது பங்கு கிடைக்காமல் விடுபட்டுவிட்டது. (பங்கிட்டுத்தருபவர் கொடுத்துவிட்டதாக எண்ணிக்கொண்டார். (பசியால் சுருண்டு கிடந்த) அவரைத் தூக்கி நிறுத்தி, "அவருக்குப் பேரீச்சம்பழம் கொடுக்கப் படவில்லை" என நாங்கள் சாட்சியம் கூறிய பிறகே அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் எழுந்து அதைப் பெற்றுக்கொண்டார்.
-நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்று ஒரு விசாலமான பள்ளத்தாக்கில் இறங்கினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகச் சென்றார்கள். நான் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மறைந்து இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்கேற்ப (மறைவிடம்) ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தார்கள். அப்படி ஒன்றையும் காணவில்லை.
அப்போது பள்ளத்தாக்கின் ஓரத்தில் இரு மரங்கள் தென்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றில் ஒரு மரத்திற்கு அருகில் சென்று அதன் கிளைகளில் ஒன்றைப் பிடித்து, "அல்லாஹ்வின் ஆணையின்பேரில் எனக்குக் கட்டுப்படு" என்று சொன்னார்கள். ஒட்டகவோட்டியின் கட்டளைக்கு மூக்கணாங்கயிறு இடப்பட்ட ஒட்டகம் கட்டுப்படுவதைப் போன்று, அந்தக் கிளை அவர்களுக்குக் கட்டுப்பட்(டு வளைந்து)விட்டது.
பிறகு இன்னொரு மரத்திற்கு அருகில் சென்று, அதன் கிளைகளில் ஒன்றைப் பிடித்து "அல்லாஹ்வின் ஆணையின்பேரில் எனக்குக் கட்டுப்படு" என்று சொன்னார்கள். முதல் மரத்தைப் போன்றே அதுவும் கட்டுப்பட்டது. அவ்விரண்டுக்கும் மத்தியில் போய் நின்று கொண்டு இரண்டு கிளைகளையும் சேர்த்தார்கள். அப்போது, "அல்லாஹ்வின் ஆணையின்பேரில் எனக்காக ஒன்றிணையுங்கள்" என்று சொன்னார்கள். உடனே அவ்விரண்டும் இணைந்து கொண்டன.
அப்போது நான் அருகிலிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிந்து (இன்னும்) தொலைதூரத்திற்குச் சென்று (சிரமப்பட்டு)விடுவார்களோ என்று அஞ்சினேன். ஆகவே, நான் அங்கிருந்து விரைவாக (திரும்பி) வந்துவிட்டேன். நான் மனதிற்குள் (ஏதோ) பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் ஓரக்கண்ணால் நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னோக்கி வந்துகொண்டிருந்தார்கள். (இணைந்திருந்த) அவ்விரு மரங்களும் பிரிந்து ஒவ்வொன்றும் (தனித்தனியே) நிமிர்ந்து நின்றன.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிது நேரம் நின்று, (இரு பக்கங்களிலும் இருந்த மண்ணறைகளை நோக்கி) தமது தலையால் இவ்வாறு சைகை செய்தார்கள். (அறிவிப்பாளர் அபூஇஸ்மாயீல் (ரஹ்) அவர்கள் தமது தலையை வலம் இடமாக அசைத்து சைகை செய்து காட்டினார்கள்.)
பிறகு முன்னோக்கி வந்தார்கள். என்னிடம் வந்து சேர்ந்ததும், "ஜாபிரே! நான் நின்ற இடத்தை நீ பார்த்தாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்; அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின்,நீ அவ்விரு மரங்களை நோக்கிச் சென்று, அவ்விரு மரங்களிலிருந்தும் தலா ஒரு கிளையை உடைத்துக்கொண்டு வா! நான் நிற்கும் இந்த இடத்திற்கு நீ வந்துசேர்ந்ததும், ஒரு கிளையை உனக்கு வலப் பக்கத்திலும் மற்றொரு கிளையை இடப் பக்கத்திலும் வீசிவிடு" என்று சொன்னார்கள்.
ஆகவே, நான் எழுந்து சென்று கல் ஒன்றை எடுத்து, அதை உடைத்து, அதன் மழுங்கிய பகுதியைத் தீட்டினேன். அது கூர்மையானது. பிறகு அந்த மரங்களை நோக்கிச் சென்று அவ்விரு மரங்களிலிருந்தும் தலா ஒரு கிளையை உடைத்தேன்.
பிறகு அவ்விரு கிளைகளையும் இழுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்து நின்று, ஒரு கிளையை எனக்கு வலப்பக்கத்திலும் மற்றொரு கிளையை எனக்கு இடப்பக்கத்திலும் வீசினேன்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அடைந்து, "அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் சொன்னபடியே) செய்துவிட்டேன். எதற்காக (அப்படிச் செய்யச் சொன்னீர்கள்)?" என்று கேட்டேன். அதற்கு "நான் இரு மண்ணறைகளை (கப்றுகளை)க் கடந்துவந்தேன். அவற்றிலுள்ள இருவர் வேதனை செய்யப்பட்டுக்கொண்டிருந்தனர். ஆகவே, அவ்விரு கிளைகளும் உலராமல் இருக்கும்வரை அவ்விருவருக்கும் எனது பரிந்துரையின் பேரில் வேதனை இலேசாக்கப்பட வேண்டுமென நான் விரும்பினேன்" என்று கூறினார்கள்.
-பிறகு நாங்கள் படையினரிடம் வந்துசேர்ந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜாபிரே! அங்கத்தூய்மை செய்ய யாரிடமாவது தண்ணீர் இருக்கிறதா என்று கேள்" என்று சொன்னார்கள். உடனே நான், "அங்கத்தூய்மை செய்ய தண்ணீர் உண்டா? அங்கத் தூய்மை செய்ய தண்ணீர் உண்டா? அங்கத்தூய்மை செய்ய தண்ணீர் உண்டா?" என்று கேட்டேன்.
பிறகு நான், "அல்லாஹ்வின் தூதரே! பயணிகளிடம் ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட நான் காணவில்லை" என்றேன். அன்சாரிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தம் தோல் பைகளில் தண்ணீர் ஊற்றிவைத்து,அதைக் குளுமையாக்கி, பேரீச்ச மட்டை ஒன்றில் அதைத் தொங்கவிட்டிருப்பார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "நீ இன்ன அன்சாரியின் புதல்வர் இன்ன மனிதரிடம் சென்று,அவருடைய தோல் பைகளில் (தண்ணீர்) ஏதேனும் இருக்கிறதா என்று பார்" என்றார்கள். அவ்வாறே நான் சென்று பார்த்தபோது, அவற்றில் ஒரு பையின் வாய்ப் பகுதியில் இருந்த சிறிது தண்ணீரைத் தவிர வேறெதிலும் தண்ணீரை நான் காணவில்லை. அதை நான் சரித்திருந்தால், அதன் காய்ந்த பகுதிகளே அதை உறிஞ்சிவிட்டிருக்கும்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவற்றில் ஒரே ஒரு பையின் வாய்ப் பகுதியில் உள்ள சிறிதளவு தண்ணீரைத் தவிர வேறெதிலும் தண்ணீரை நான் காணவில்லை. அதிலுள்ள தண்ணீரை நான் சரித்தால் அதன் உலர்ந்த பகுதிகளே அதை உறிஞ்சிவிட்டிருக்கும்" என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ சென்று அதை என்னிடம் கொண்டுவா" என்று சொன்னார்கள். அவ்வாறே அதை நான் கொண்டுவந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையில் வாங்கி, ஏதோ கூறலானார்கள். அது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. பிறகு அந்தப் பையைத் தம் கரங்களால் அழுத்திப் பிழிந்தார்கள்.
பிறகு என்னிடம் அதைக் கொடுத்து, "ஜாபிரே! பெரிய பாத்திரம் ஒன்றைக் கொண்டு வருமாறு அறிவிப்புச் செய்" என்றார்கள். உடனே "பயணிகளிடம் உள்ள ஒரு பெரிய பாத்திரத்தை (யாரேனும்) கொண்டுவாருங்கள்" என்று அறிவிப்புச்செய்தேன். பாத்திரம் எடுத்துக்கொண்டு வரப்பட்டபோது, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வைத்தேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பாத்திரத்தினுள் இவ்வாறு கையைப் பரப்பி, தம் விரல்களை விரித்தார்கள். பிறகு அந்தப் பாத்திரத்தின் அடிப்பகுதியில் கையை வைத்தார்கள். "ஜாபிரே! இதைப் பிடித்துக்கொண்டு,அந்தத் தண்ணீரை என் (கை)மீது ஊற்று! அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறு" என்று சொன்னார்கள்.
அவ்வாறே நான் ஊற்றி, "பிஸ்மில்லாஹ்" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விரல்களினூடே தண்ணீர் பொங்கிவருவதை நான் கண்டேன். பிறகு பாத்திரத்தில் தண்ணீர் பீறிட்டுச் சுழன்றது. இறுதியில் அது நிரம்பியும்விட்டது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜாபிரே! தண்ணீர் தேவையுள்ளோரை அழையுங்கள்" என்று கூறினார்கள். (அவ்வாறே நான் அழைத்தேன்.) மக்கள் வந்து தாகம் தீர நீரருந்தினர். பிறகு நான், "தேவையுள்ளோர் யாரேனும் எஞ்சியுள்ளார்களா?" என்று கேட்டேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நிரம்பியிருந்த அந்தப் பாத்திரத்திலிருந்து தமது கையை எடுத்துவிட்டார்கள்.
-மக்கள் ("சீஃபுல் பஹ்ர்" படையினர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தங்களுக்குப் பசி ஏற்பட்டுள்ளதாக முறையிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உங்களுக்கு உணவளிக்கக்கூடும்" என்றார்கள். பிறகு நாங்கள் கடலோரத்திற்குச் சென்றோம். அப்போது கடல் அலை எழுந்து (பெரிய கடல்வாழ்) உயிரினம் (திமிங்கலம்) ஒன்றை (கரையில்) போட்டது.
உடனே நாங்கள் அதனருகில் நெருப்பு மூட்டி சமைத்தோம்; பொறித்தோம். வயிறு நிரம்ப உண்டோம். பிறகு நானும் இன்ன மனிதரும் இன்ன மனிதரும் -ஐந்து பேரை எண்ணிக் குறிப்பிட்டு -அந்த மீனின் கண்ணெலும்புக்குள் நுழைந்தோம். எங்களை யாரும் பார்க்கவில்லை. பிறகு நாங்கள் வெளியே வந்தோம். (அந்த அளவுக்கு அதன் கண்ணெலும்பு பெரியதாக இருந்தது)
பிறகு அதன் விலாஎலும்புகளில் ஒன்றை எடுத்து, அதை வில் போல வளைத்து வைத்தோம். பயணிகளிடையே இருந்த மிகப் பெரிய மனிதர் ஒருவரையும், பயணிகளிடையேயிருந்த பெரிய ஒட்டகம் ஒன்றையும், பயணிகளிடையே இருந்த திமிலைப் போர்த்தி மூடும் துணியொன்றையும் கொண்டுவரச்செய்தோம். (அதை அந்த ஒட்டகத்தின் மீது போர்த்தி அந்தப் பெரிய மனிதரை அதிலேற்றிவிட்டோம்.) அவர் அந்த விலா எலும்புக்குக் கீழே தமது தலையைத் தாழ்த்தாமல் நுழைந்து சென்றார் (அந்த அளவுக்கு அதன் எலும்பு பெரியதாக இருந்தது).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 20 நபி (ஸல்) அவர்கள் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்ற செய்தி; இதற்கு "ஒட்டகச் சேணம் பற்றிய செய்தி" ("ஹதீஸுர் ரஹ்ல்") என்றும் கூறப்படுவதுண்டு.
5737. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள், என் தந்தை (ஆஸிப் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடம்) அவர்களது வீட்டிற்கு வந்து,அவர்களிடமிருந்து ஓர் ஒட்டகச்சேணத்தை விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவர்கள் (என் தந்தை) ஆஸிப் (ரலி) அவர்களிடம், "இதை என் வீடுவரை சுமந்துவர உங்கள் புதல்வரை என்னுடன் அனுப்புங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள்.
என் தந்தை என்னிடம், "இதைச் சுமந்து வா" என்று சொன்னார்கள். அவ்வாறே அதை நான் சுமந்து சென்றேன். அபூபக்ர் (ரலி) அவர்களுடன் அதன் விலையைப் பெற்றுக்கொள்வதற்காக என் தந்தையும் புறப்பட்டுவந்தார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களிடம் என் தந்தை, "அபூபக்ரே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவைத் துறந்து ஹிஜ்ரத்) சென்றபோது, இருவரும் எப்படி (எதிரிகளின் கண்களில் படாமல் சமாளித்துச்) செயல்பட்டீர்கள் என்பதை எனக்கு அறிவியுங்கள்?" என்று கேட்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஆம் (அறிவிக்கிறேன்): நாங்கள் (மூன்று நாட்கள் "ஸவ்ர்" குகையில் தங்கியிருந்துவிட்டு அங்கிருந்து வெளியேறி) அந்த இரவு முழுவதும் பயணம் செய்து, (அடுத்த நாளின்) நண்பகல் நேரமும் வந்துவிட்டது. பாதையில் (வெப்பம் அதிகரித்து) எவரும் நடமாட முடியாதபடி வெறிச்சோடிக் கிடந்தது. அப்போது இதுவரை சூரிய வெளிச்சம் படாத, நிழல் படர்ந்த நீண்ட பாறை ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. நாங்கள் அங்கு இறங்கினோம்.
நான் அந்தப்பாறையை நோக்கிச் சென்று என் கையால் ஓரிடத்தை, அதன் நிழலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்குவதற்காகச் சமப்படுத்தினேன். பிறகு அந்த இடத்தில் ஒரு தோல் விரிப்பை விரித்தேன். பிறகு, "அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களைச் சுற்றிலுமுள்ள சூழலை உங்களுக்காகக் கண்காணித்துக்கொள்கிறேன்;நீங்கள் (நிம்மதியாக) உறங்குங்கள்" என்று கூறினேன். அவ்வாறே அவர்கள் உறங்கினார்கள்.
அவர்களைச் சுற்றிலுமுள்ள சூழலைக் கண்காணித்தபடி நான் புறப்பட்டேன். அப்போது ஆட்டிடையன் ஒருவன் தன் ஆடுகளுடன் அந்தப் பாறையை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கவனித்தேன். நாங்கள் வந்த நோக்கத்துடனேயே அவனும் வந்தான்.
அப்போது அவனை நான் எதிர்கொண்டு, "நீ யாருடைய பணியாள், இளைஞரே?" என்று கேட்டேன். அவன், "இந்த (மக்கா) நகரவாசிகளில் (இன்ன பெயருடைய) ஒரு மனிதரின் பணியாள்" என்று பதிலளித்தான். நான் "உன் ஆடுகளிடம் பால் இருக்கிறதா?" என்று கேட்டேன். அவன் "ஆம் (இருக்கிறது)" என்று பதிலளித்தான்.
"அவ்வாறாயின், எனக்காகப் பால் கற(ந்து கொடு)ப்பாயா?" என்று கேட்டேன். அவன் "ஆம் (கொடுப்பேன்)" என்று சொல்லிவிட்டு, ஆடு ஒன்றைப் பிடித்தான். நான், "மண், முடி, தூசு ஆகிய வற்றிலிருந்து (ஆட்டின்) மடியை உதறி (சுத்தப்படுத்தி)க்கொள்" என்று சொன்னேன்.
-("பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் இதைக் கூறும்போது தம் இரு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது அடித்து உதறிக்காட்டுவதை நான் கண்டேன்" என அறிவிப்பாளர் அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.)
பிறகு அந்த இடையன் தன்னிடமிருந்த ஒரு மரப்பாத்திரத்தில் சிறிதளவு பாலைக் கறந்தான். என்னுடன் ஒரு தோல் பாத்திரம் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நீர் புகட்டவும், அவர்கள் நீர் அருந்தி, அங்கத் தூய்மை செய்யவும் (அது பயன்பட்டது). (அதை நான் என்னுடன் கொண்டுவந்திருந்தேன்.)
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த போது) சென்றேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நான் விரும்பவில்லை. (எனினும்,) அவர்களிடம் நான் சென்ற நேரமும் அவர்கள் (தூக்கத்திலிருந்து) எழுந்த நேரமும் ஒன்றாக அமைந்துவிட்டது.
நான் (தோல் பாத்திரத்தில் இருந்த) தண்ணீரை (மரப்பாத்திரத்திலிருந்த) பாலில் அதன் அடிப்பகுதி குளிரும்வரை (அதன் அடர்த்தி நீங்கும்வரை) ஊற்றினேன். பிறகு நான், "அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பாலைப் பருகுங்கள்" என்று சொன்னேன். நான் திருப்தியடையும்வரை அவர்கள் பருகினார்கள். பிறகு, "(நாம்) புறப்படுவதற்கான நேரம் வரவில்லையா?" என்று கேட்டார்கள். நான், "ஆம் (வந்துவிட்டது)" என்று சொன்னேன்.
சூரியன் உச்சி சாய்ந்த பிறகு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். எங்களை (மக்கா இணை வைப்பாளர்களில் ஒருவராயிருந்த) சுராக்கா பின் மாலிக் பின்தொடர்ந்து வந்தார்.
நாங்கள் பூமியின் ஓர் இறுகிய பகுதியில் இருந்தோம். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளால்) நாம் பின்தொடரப்படுகிறோம்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கவலைப்படாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்" என்று சொன்னார்கள். பிறகு சுராக்காவுக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். உடனே சுராக்காவுடன் அவரது குதிரை தனது வயிறுவரை பூமியில் புதைந்துவிட்டது.
உடனே சுராக்கா, "நீங்கள் இருவரும் எனக்கெதிராகப் பிரார்த்தித்துவிட்டீர்கள் என்று நான் அறிந்துகொண்டேன். ஆகவே,எனக்காக (இந்தத் தண்டனையிலிருந்து என்னை விடுவிக்கும்படி) நீங்கள் இருவரும் பிரார்த்தியுங்கள்; உங்களைத் தேடி வருபவர்களை நான் திருப்பி அனுப்பி விடுவேன் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சி" என்று சொன்னார்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுராக்காவுக்காகப் பிரார்த்தித்தார்கள். உடனே அவர் (அந்தத் தண்டனையிலிருந்து) தப்பினார். அப்போதிருந்து அவர் தம்மைச் சந்திப்பவர் எவராயினும் அவரிடம், "உங்களுக்கு நானே போதுமானவன். நீங்கள் தேடி வந்தவர் இங்கில்லை" என்று கூறாமல் விடவில்லை. மேலும், (எங்களைத் தேடிவந்ததாகச் சொல்லும்) எவரைச் சந்தித்தாலும் திருப்பி அனுப்பாமல் அவர் இருக்கவில்லை. அவர் எங்களுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அபூபக்ர் (ரலி) அவர்கள் என் தந்தை (ஆஸிப் பின் அல்ஹாரிஸ்-ரலி) அவர்களிடமிருந்து பதிமூன்று திர்ஹங்களுக்கு ஒட்டகச் சேணமொன்றை விலைக்கு வாங்கினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், அவற்றில் உஸ்மான் பின் உமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வரும் தகவலும் இடம்பெற்றுள்ளது:
சுராக்கா (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை) நெருங்கியபோது, அவருக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். உடனே அவரது குதிரை வயிறுவரை பூமிக்குள் புதைந்துவிட்டது. சுராக்கா குதிரையிலிருந்து குதித்து, "முஹம்மதே! இது உங்களுடைய வேலைதான் என்று நான் அறிந்துகொண்டேன். (நான் சிக்கிக் கொண்டிருக்கும்) இந்த நிலையிலிருந்து என்னை விடுவிக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.
எனக்குப் பின்னால் (உங்களைத் தேடிவர) இருப்போரிடமிருந்து உங்களை (காட்டிக் கொடுக்காமல்) நான் மறைத்துவிடுவதற்கு உங்களுக்கு நான் வாக்குறுதி அளிக்கிறேன். இதோ எனது அம்புக் கூடு. இதிலிருந்து நீங்கள் (என் வாக்குறுதிக்கு அடையாளமாக) அம்பை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எனது ஒட்டகத்தையும் என் அடிமைகளையும் இன்னின்ன இடத்தில் கடந்து செல்வீர்கள். அப்போது உங்களுக்குத் தேவையானதை அதிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனது ஒட்டகத்திலிருந்து எனக்கு எதுவும் தேவை யில்லை" என்று கூறிவிட்டார்கள். - பிறகு நாங்கள் இரவு நேரத்தில் மதீனாவுக்கு வந்தோம். அப்போது மதீனாவாசிகள் அவர்களில் யாரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்குவது என்ற விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(என் பாட்டனார்) அப்துல் முத்தலிப் அவர்களின் தாய்மாமன்களான "பனுந் நஜ்ஜார்" குலத்தாரிடம் நான் தங்கிக்கொள்கிறேன். இதன் மூலம் அவர்களைக் கௌரவப்படுத்துகிறேன்" என்று கூறினார்கள்.அப்போது ஆண்களும் பெண்களும் (தம் வீடுகளுக்கு மேலே ஏறி(ப்பார்த்துக் கொண்டிருந்த)னர். சிறுவர்களும் பணியாட்களும் (மதீனாவின்) தெருக்களில் "முஹம்மதே! அல்லாஹ்வின் தூதரே! முஹம்மதே! அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறிக்கொண்டு (மகிழ்ச்சியுடன்) கலைந்து சென்றனர்..
அத்தியாயம் : 53

5738. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்ரவேலர்களிடம், "ஹித்தத்துன் (எங்களை மன்னிப்பாயாக!) என்று கூறிக் கொண்டே அதன் வாசலில் பணிவாக நுழையுங்கள். உங்களுடைய குற்றங்கள் மன்னிக்கப்படும்" என்று கூறப்பட்டது.
ஆனால், (அவர்கள் தமக்குக் கூறப்பட்ட வார்த்தையை) மாற்றி(க்கூறி)யதோடு தம் புட்டங்களால் தவழ்ந்தபடி வாசலில் நுழைந்தார்கள். மேலும், (உள்ளே நுழையும்போது) "ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின்" (ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானிய வித்து) என்று (பரிகாசமாகச்) சொன்னார்கள்.
அத்தியாயம் : 54
5739. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்பு வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து வேத அறிவிப்பு ("வஹீ") அருளினான். அவர்கள் இறந்த நாட்களில் அருளப்பெற்ற வேதஅறிவிப்பு (மற்ற காலங்களில் அருளப்பெற்றதைவிட) அதிகமாக இருந்தது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 54
5740. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓதுகிறீர்கள். அந்த வசனம் மட்டும் எங்களிடையே அருளப்பெற்றிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கியிருப்போம்" என்று கூறினர்.
உமர் (ரலி) அவர்கள், "அ(ந்த வசனமான)து, எந்த இடத்தில் அருளப்பெற்றது? எந்த நாளில் அருளப்பெற்றது? அது அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன். அது "அரஃபா" நாளில் அருளப்பெற்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபா பெருவெளியில் நின்று கொண்டிருந்தார்கள்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையை உங்கள்மீது நிறைவாக்கிவிட்டேன்" (5:3) எனும் இறைவசனம் அருளப்பெற்ற நாள் (சிலரது அறிவிப்பிலுள்ளதைப் போன்று) வெள்ளிக்கிழமையாக இருந்ததா, அல்லது இல்லையா என நான் (தீர்மானிக்க முடியாமல்) சந்தேகப்படுகிறேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 54
5741. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம், "இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையை உங்கள்மீது நிறைவாக்கிவிட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாக நான் பொருந்திக்கொண்டுவிட்டேன்" (5:3) எனும் இறைவசனம் யூதர் சமுதாயமான எங்களுக்கு அருளப்பெற்றிருந்து, அது அருளப்பெற்ற தினத்தை நாங்கள் அறிந்திருந்தால், அந்நாளைப் பண்டிகை நாளாக நாங்கள் ஆக்கிக் கொண்டாடியிருப்போம்" என்று கூறினர்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அது அருளப்பெற்ற நாளையும் நேரத்தையும் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிந்துள்ளேன். அது "ஜம்உ" உடைய (முஸ்தலிஃபா) இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "அரஃபாத்" பெருவெளியில் இருந்தபோது அருளப்பெற்றது" என்று கூறினார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 54
5742. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் வந்து, "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக்கொண்டிருக்கும் ஒரு வசனம் யூத சமுதாயமாகிய எங்களுக்கு அருளப்பெற்றிருந்தால், அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கியிருப்போம்" என்று கூறினார்.
உமர் (ரலி) அவர்கள், "அது எந்த வசனம்?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், "இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையை உங்கள்மீது நிறைவாக்கிவிட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டுவிட்டேன்" (5:3) எனும் இறைவசனம்தான் (அது) என்று கூறினார்.
உமர் (ரலி) அவர்கள், "அந்த வசனம் எந்த நாளில் அருளப்பெற்றது; எந்த இடத்தில் அருளப்பெற்றது என்பதையெல்லாம் நான் அறிவேன். அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அரஃபாத்" பெருவெளியில் இருந்தபோது, ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் அருளப்பெற்றது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 54
5743. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அநாதை(ப்பெண்களிடம் நேர்மையாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாகவோ மும்மூன்றாகவோ நான்கு நான்காகவோ மணந்துகொள்ளுங்கள்" (4:3) எனும் இறைவசனத்தைப் பற்றிக்கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்:
என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் மடியில் (பொறுப்பில்) வளர்கின்ற அநாதைப் பெண் ஆவாள். அவரது செல்வத்தில் அவளும் பங்காளியாக இருந்துவருவாள். இந்நிலையில் அவளது செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் (மணக்கொடை) விஷயத்தில் நியாயமான முறையில் நடக்காமல், மற்றவர்கள் அவளுக்கு அளிப்பதைப் போன்ற மணக்கொடையை (மஹ்ரை) அளிக்காமல் அவளை மண முடித்துக்கொள்ள விரும்புவார்.
இவ்விதம் காப்பாளர்கள் (தம் பொறுப்பிலிருக்கும்) அநாதைப் பெண்களுக்கு நீதி செலுத்தாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மணக்கொடையில் மிக உயர்ந்த மணக்கொடை எதுவோ அதை அவர்களுக்கு அளிக்காமல், அவர்களை மணமுடித்துக் கொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக)த் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களை விடுத்து, மற்றப் பெண்களில் தமக்கு விருப்பமான பெண்களை (நான்கு பேர்வரை) மணமுடித்துக்கொள்ளுமாறு கட்டளையிடப்பட்டது.
இந்த இறைவசனம் அருளப்பெற்ற பின்பும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்கேட்டு வரலாயினர். ஆகவே அல்லாஹ், "(நபியே!) பெண்கள் தொடர்பாக அவர்கள் உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். நீர் கூறுவீராக: அவர்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றான். மேலும், அநாதைப் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதை அவர்களுக்கு நீங்கள் வழங்காமலேயே அவர்களை நீங்கள் மணந்து கொள்ள விரும்புவது பற்றியும், பலவீனமான சிறுவர்கள் பற்றியும் (இவ்)வேதத்தில் உங்களுக்கு ஓதிக்காட்டப் படுகின்ற வசனமும் (உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றது)" (4:127) எனும் இறைவசனத்தை அருளினான்.
"இவ்வேதத்தில் (ஏற்கெனவே) உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது" என்பது, (இந்த அத்தியாயத்தில்) இறைவன் குறிப்பிட்ட "அநாதை(ப் பெண்களிடம் நேர்மையாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ மணந்துகொள்ளுங்கள்" (4:3) எனும் இறை வசனத்தையே குறிக்கிறது.
"அவர்களை நீங்கள் மணந்துகொள்ள விரும்புவது பற்றியும்" (4:127) எனும் பிந்திய இறை வசனத்தொடர், உங்களில் (காப்பாளராயிருக்கும்) ஒருவர் தமது (பராமரிப்பில் இருந்துவரும் அநாதைப் பெண்ணை, அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும்போது, அவளை (மணந்துகொள்ள) விரும்பாமலிருப்பதைக் குறிக்கும்.
அப்பெண்களை மணந்துகொள்ள காப்பாளர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்துக்கும் அழகுக்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் நேர்மையான முறையிலேயே அல்லாமல் வேறு எந்த வகையிலும் மணமுடித்துக் கொள்ளலாகாது என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அநாதை(ப் பெண்களிடம் நேர்மையாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால்..." (4:3) எனும் இறை வசனத்தைப் பற்றிக் கேட்டேன்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விளக்கங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
ஹதீஸின் இறுதியில், ("அப்பெண்களை மணந்துகொள்ள காப்பாளர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால்” என்பதற்கு முன்னால், "அப்பெண்கள் செல்வத்திலும் அழகிலும் குறைந்தவர்களாக இருக்கும்போது, அவர்களை (மணந்துகொள்ள காப்பாளர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால்)" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 54
5744. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அநாதை(ப் பெண்களிடம் நேர்மையாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால்..." (4:3) எனும் வசனம் தொடர்பாக ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:
இந்த வசனம், தம்மிடமுள்ள செல்வமுடைய அநாதைப் பெண்ணுக்குத் தாமே காப்பாளராகவும் வாரிசாகவும் இருந்துவரும் மனிதர் தொடர்பாக அருளப்பெற்றது. அவளுக்காக வாதாட அவளைத் தவிர வேறெவரும் இல்லை எனும் நிலையில் அவள் இருப்பாள்.அவளது செல்வத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவளை அவர் மணமுடித்துக் கொடுக்காமலிருப்பார். இதன் மூலம் அவளுக்கு அவர் இன்னல் ஏற்படுத்தி, உறவையும் கெடுத்துவைத்திருப்பார்.
ஆகவேதான், அநாதைப் பெண்(களை மணந்துகொண்டு அவர்)கள் விஷயத்தில் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த (அதாவது உங்களுக்கு நான் அனுமதித்துள்ள) பெண்களை மணந்துகொள்ளுங்கள். நீங்கள் இன்னல் விளைவிக்கும் இந்த அநாதைப் பெண்களை விட்டுவிடுங்கள் என்று அல்லாஹ் கூறினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 54
5745. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அநாதைப் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதை அவர்களுக்கு நீங்கள் வழங்காமலேயே அவர்களை நீங்கள் மணந்துகொள்ள விரும்புவது பற்றியும், பலவீனமான சிறுவர்கள் பற்றியும் (இவ்)வேதத்தில் உங்களுக்கு ஓதிக்காட்டப்படுகின்ற வசனமும் (உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றது)" (4:127) எனும் இறைவசனம் ஓர் அநாதைப் பெண் தொடர்பாக அருளப்பெற்றது.
அவள் ஒரு மனிதரின் பொறுப்பில், அவரது சொத்தில் பங்காளியாக இருந்துவருவாள். அவளை(த் தாமே மணந்துகொள்ள விரும்பினாலும், அவர் முறையாக இல்லறம் நடத்தமாட்டார். அல்லது) தாமும் மணந்துகொள்ள விரும்பமாட்டார். பிறருக்கு அவளை மணமுடித்துக் கொடுத்து தமது சொத்தில் பிறர் பங்காளியாவதையும் விரும்பமாட்டார். எனவே, அவளை(தாமும் மணக்காமலும் யாருக்கும் மணமுடித்துக் கொடுக்காமலும்) முடக்கிவைத்திருப்பார். (இத்தகைய நிலையை இறைவன் தடை செய்தான்.)
அத்தியாயம் : 54
5746. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், "(நபியே!) பெண்கள் தொடர்பாக அவர்கள் உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர்..." (4:127)எனும் இறைவசனத்துக்கு விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறினார்கள்:
இந்த வசனம் ஓர் அநாதைப் பெண்ணைப் பற்றியதாகும். அவள் ஒரு மனிதரின் பொறுப்பில் இருந்துவருவாள். அவள் அவருடைய பேரீச்சமரங்கள் உள்ளிட்ட செல்வங்களில் பங்காளியாகக் கூட இருக்கக்கூடும். இந்நிலையில் அவளை அவரே மணமுடித்துக்கொள்ள விரும்புவார்.- மேலும், அவளை வேறோர் ஆணுக்கு மணமுடித்துக் கொடுத்து அவ(ளுக்குக் கணவனாக வருகின்றவ)னும் தமது சொத்தில் பங்காளியாக மாறுவதை அவர் வெறுப்பார். எனவே, (எவரையும் மணக்க விடாமல்) அவளை அக்காப்பாளர் முடக்கி வைத்துவந்தார். (அப்போது தான் மேற்கண்ட வசனம் அருளப்பெற்றது.)
அத்தியாயம் : 54
5747. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், "ஏழையாக இருப்பவர் நியாயமாக உண்ணட்டும்" (4:6) எனும் இறை வசனத்துக்குப் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:
இந்த வசனம் அநாதைகளை நிர்வகித்து, அவர்களின் செல்வத்தைப் பராமரிக்கும் காப்பாளர்கள் தொடர்பாக அருளப்பெற்றது. அவர் ஏழையாக இருந்தால், (தமது உழைப்புக்கான கூலியாக நியாயமான முறையில்) அநாதைகளின் பொருளை அனுபவிக்கலாம்.
அத்தியாயம் : 54
5748. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், "(அநாதைகளைப் பராமரிப்பவர்களில்) செல்வராக இருப்பவர், (அவர்களின் செல்வத்தைத் தொடாமல்) நாணயமாக நடந்துகொள்ளட்டும்; ஏழையாக இருப்பவர் நியாயமாக உண்ணட்டும்" (4:6) எனும் இறைவசனத்திற்குப் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:
இந்த வசனம் அநாதைகளின் காப்பாளர் தொடர்பாக அருளப்பெற்றது. அவர் தேவையுடையவராக இருந்தால்,அநாதையின் செல்வத்திலிருந்து அந்த அநாதையின் செல்வத்தின் அளவுக்கேற்ப நியாயமான முறையில் (ஊதியமாக) எடுத்துக்கொள்ளும்படி (அனுமதியளித்து) அருளப்பெற்றது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 54
5749. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(பகைவர்கள்) உங்களு(டைய கணவாய்)க்கு மேற்புறமிருந்தும், உங்களு(டைய கணவாய்)க்குக் கீழ்ப்புறமிருந்தும் உங்களிடம் வந்தபோது, பார்வைகள் நிலைகுத்தி, இதயங்கள் தொண்டைக் குழிகளை அடைத்தபோது..." (33:10) எனும் இறைவசனம் குறிப்பிடும் சம்பவம், அகழ்ப்போர் தினத்தில் நடந்தது.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 54
5750. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு பெண் தன் கணவனிடமிருந்து ஏற்படும் பிணக்கை, அல்லது புறக்கணிப்பைப் பற்றி அஞ்சினால்..." (4:128) எனும் இறைவசனம், ஒரு பெண் விஷயத்தில் அருளப்பெற்றது. அவள் ஒரு கணவனின் உறவில் நீண்ட காலம் இருந்துவருவாள். பின்னர் (முதுமை போன்ற காரணத்தால்) அவளை அவர் விவாகரத்துச் செய்து(விட்டு மற்றொருத்தியை மணந்து) கொள்ள விரும்புவார்.
இந்நிலையில் அவள், "என்னை மணவிலக்குச் செய்யாதீர்கள். என்னை (உங்கள் மனைவியாகவே) இருக்க விடுங்கள். என் (தாம்பத்திய உரிமைகள்) விஷயத்தில் நான் விட்டுக் கொடுத்து விடுகிறேன்" என்று கூறுவாள். அப்போதுதான் இந்த வசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 54
5751. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
"ஒரு பெண் தன் கணவனிடமிருந்து ஏற்படும் பிணக்கை, அல்லது புறக்கணிப்பைப் பற்றி அஞ்சினால்..." (4:128) எனும் இறை வசனம், ஒரு பெண் தொடர்பாக அருளப்பெற்றது. அவள் ஒருவரின் துணைவியாக இருந்துவருவாள். அவளிடம் உறவும் (தனது) குழந்தையும் இருந்துவரும்.- இந்நிலையில் (முதுமை நோய் போன்ற காரணங்களால்) அவளிடம் கணவர் (தாம்பத்திய உறவுக்காக) அதிகமாக வந்துபோகாமல் இருக்கலாம்.
இந்நிலையில், அவர் தன்னை மண விலக்குச் செய்துவிடுவதை விரும்பாமல் அவள், "என் (தாம்பத்திய உரிமைகள்) விஷயத்தில் உங்களுக்கு விட்டுக் கொடுத்துவிடுகிறேன்" என்று கூறிவிடுவாள். (இவ்வாறு விட்டுக் கொடுத்து சமரசம் செய்துகொள்வதில் தவறில்லை என இவ்வசனம் கூறுகின்றது.)
அத்தியாயம் : 54
5752. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், "என் சகோதரி(அஸ்மாவின்) மகனே! நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி (இறைவனால் 59:10ஆவது வசனத்தில்) கட்டளையிடப்பட்டது. ஆனால்,மக்களோ அவர்களை ஏசிக் கொண்டிருக்கின்றனர்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 54
5753. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"ஓர் இறைநம்பிக்கையாளரைத் திட்டமிட்டே கொலை செய்தவனுக்கு நரகம்தான் தண்டனை" (4:93) எனும் இறைவசனம் தொடர்பாக (அதன் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதா, இல்லையா எனும் விஷயத்தில்) கூஃபாவாசிகள் கருத்து வேறுபாடு கொண்டனர்.
எனவே, நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் பயணம் சென்று அது குறித்துக் கேட்டேன். அவர்கள், "இதுதான் (இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) அருளப்பெற்ற இறுதி வசனமாகும். பிறகு இதை வேறு (வசனம்) எதுவும் மாற்றி விடவில்லை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 54
5754. மேற்கண்ட ஹதீஸ் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("இதுதான் அருளப்பெற்ற இறுதி வசனமாகும் என்பதைக் குறிக்க") "நஸலத் ஃபீ ஆகிரி மா உன்ஸில" என்று இடம்பெற்றுள்ளது. நள்ர் பின் ஷுமைல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இது இறுதியாக அருளப்பெற்ற வசனங்களில் உள்ளதாகும்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 54
5755. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள், "ஓர் இறைநம்பிக்கையாளரைத் திட்டமிட்டே கொலை செய்தவனுக்கு நரகம் தான் தண்டனை. அதில் அவன் நிரந்தரமாக இருப்பான்" (4:93) என்று தொடங்கும் இறைவசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்கும்படி எனக்கு உத்தரவிட்டார்கள். அவ்வாறே நான் கேட்டேன். அதற்கு அவர்கள், "இ(ந்த 4:93ஆவது வசனத்தின் சட்டத்)தை வேறெந்த வசனமும் மாற்றவில்லை" என்று பதிலளித்தார்கள்.
"அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்களிடம் பிரார்த்திக்கமாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் (சட்டரீதியான) தக்க காரணமின்றி கொல்லமாட்டார்கள்" (25:68) என்று தொடங்கும் இந்த வசனம் குறித்துக் கேட்கும்படியும் உத்தரவிட்டிருந்தார்கள். அது குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இது இணைவைப்போர் தொடர்பாக அருளப்பெற்றது" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 54