572. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தண்ணீர் (விந்து) வெளிப்பட்டால்தான் தண்ணீர் (குளியல்) கடமையாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 3
573. அபுல்அலா யஸீத் பின் அப்தில்லாஹ் பின் ஷிக்கீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
குர்ஆனின் ஒரு வசனம் மற்றொரு வசனத்(தின் சட்டத்)தை மாற்றுவதைப் போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ் (பொன்மொழி)களில் ஒன்று மற்றொன்றை மாற்றி (காலாவதியாக்கி) வந்தது.
அத்தியாயம் : 3
574. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றபோது அவரை அழைத்து வருமாறு ஒருவரை அனுப்பினார்கள். உடனே அந்த அன்சாரி (அவசர அவசரமாகக் குளித்துவிட்டுத்) தமது தலையிலிருந்து தண்ணீர் வழியும் நிலையில் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாம் உங்களை அவசரப்படுத்திவிட்டோம் போலும் என்றார்கள். அதற்கு அவர், ஆம், அல்லாஹ்வின் தூதரே! என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் (தாம்பத்திய உறவு கொள்ளும்போது) அவசரப்பட்டு எழ நேர்ந்தால் அல்லது விந்தை வெளியேற்றாமலிருந்தால் நீங்கள் குளிக்க வேண்டியதில்லை; அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் சொல் வித்தியாசம் காணப்படுகிறது.
அத்தியாயம் : 3
575. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஒருவர் தம் மனைவியுடன் சிறிது நேரம் தாம்பத்திய உறவு கொண்டு,விந்தை வெளியேற்ற முடியாமற்போவது பற்றிக் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,மனைவியிடமிருந்து தம்மீது பட்டதை அவர் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டு தொழலாம் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
576. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் தம் துணைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார். ஆனால் விந்தை வெளியேற்றவில்லை (இந்நிலையில் அவர்மீது குளியல் கடமையாகுமா?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் தமது பிறவி உறுப்பைக் கழுவிக்கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 3
577. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம், ஒருவர் தம் துணைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார். ஆனால், விந்தை வெளியேற்றவில்லை. (இந்நிலையில் அவர்மீது குளியல் கடமையாகுமா?) என்று கேட்டேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், அவர் பிறவி உறுப்பைக் கழுவிவிட்டுத் தொழுகைக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்ள வேண்டும். இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்களும் செவியேற்றதாக அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 22 நீர் (விந்து) வெளிப்பட்டால்தான் நீர் (குளியல்) கடமையாகும் எனும் சட்டம் மாற்றப்பட்டுவிட்டது; ஆண்-பெண் குறிகள் சந்தித்துவிட்டாலே குளியல் கடமையாகிவிடும்.
578. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து, பின்னர் அவள்மீது தனது வலிமையைக் காட்டினாலே அவர்மீது குளியல் கடமையாகிவிடும். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ம(த்)தர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் விந்து வெளியாகாவிட்டாலும் சரியே! எனும் வாசகமும் (அதிகப் படியாக) இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்னர் அவர் முயற்சி செய்தால் என்று இடம்பெற்றுள்ளது. ஆனால், விந்து வெளியாகாவிட்டாலும் சரியே! எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 3
579. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹாஜிர்களிலும் அன்சாரிகளிலும் ஒரு குழுவினர் இ(ரு குறிகளும் சந்தித்துக்கொண்டால் குளியல் கடமையாகுமா,அல்லது விந்து வெளிப்பட்டால் தான் குளியல் கடமையாகுமா என்ப)து குறித்துக் கருத்து வேறுபாடு (கொண்டு விவாதித்துக்) கொண்டனர். அன்சாரிகள், விந்து வெளியானால் தான் அல்லது துள்ளல் இருந்தால்தான் குளியல் கடமையாகும் என்று கூறினர். முஹாஜிர்கள், இல்லை, (இரு குறிகளும்) கலந்துவிட்டாலே குளியல் கடமையாகிவிடும். (விந்து வெளிப்படாவிட்டாலும் சரியே!) என்று கூறினர்.
உடனே நான், இப்பிரச்சினைக்கு நான் முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்று கூறிவிட்டு எழுந்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினேன். எனக்கு அனுமதி கிடைத்தது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், அன்னையே! அல்லது இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! நான் தங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன். ஆனால், தங்களிடம் கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், உங்களைப் பெற்றெடுத்த தாயிடம் நீங்கள் எதைப் பற்றிக் கேட்பீர்களோ அதைப் பற்றி என்னிடம் கேட்க நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. நானும் உங்கள் தாயார்தாம் என்றார்கள். நான், குளியல் எதனால் கடமையாகும்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: சரியான ஆளிடம்தான் நீர் வந்திருக்கிறீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து (ஆண்)குறி (பெண்)குறியைத் தொட்டு (சந்தித்து)விட்டாலே (இருவர்மீதும்) குளியல் கடமையாகிவிடும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
580. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் தம் துணைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார். விந்தை வெளியாக்காமல் எழுந்துவிட்டார். இந்நிலையில் அவர்கள் இருவர்மீதும் குளியல் கடமையாகுமா என்று ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அப்போது நானும் அங்கு அமர்ந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இதோ இவளும் நானும் அவ்வாறு செய்வோம். பின்னர் நாங்கள் குளிப்போம் என்றார்கள்.
இதை உம்மு குல்ஸூம் பின்த் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
பாடம் : 23 சமைக்கப்பட்ட பொருளைச் சாப்பிட்ட பின் அங்கத் தூய்மை செய்வது.
581. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நெருப்புத் தீண்டிய பொருளை (சமைத்த உணவை) உண்ட பின் (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வேண்டும்.
இதை ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் பின் காரிழ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் பள்ளிவாசலில் உளூச் செய்துகொண்டிருப்பதை நான் கண்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: (சமைக்கப்பட்ட) பாலாடைக் கட்டிகளை நான் சாப்பிட்டதால்தான் (இப்போது) உளூச் செய்து கொண்டிருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நெருப்புத் தீண்டிய பொருளை (சமைத்த உணவை) சாப்பிட்டால் (புதிதாக) உளூச் செய்துகொள்ளுங்கள் என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன்.
- இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சயீத் பின் காலித் பின் அம்ர் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் மேற்கண்ட ஹதீஸை அறிவித்துக்கொண்டிருந்தேன். அப்போது சயீத் பின் காலித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம், சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட பின் உளூச் செய்ய வேண்டுமா?என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நெருப்புத் தீண்டிய பொருளை (சமைத்த உணவை)ச் சாப்பிட்டால் (புதிதாக) உளூச் செய்து கொள்ளுங்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 24 சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட பின் உளூச் செய்ய வேண்டும் எனும் சட்டம் மாற்றப்பட்டுவிட்டது.
582. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஆட்டின் சப்பை இறைச்சியைச் சாப்பிட்ட பின் (புதிதாக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்.
- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) இறைச்சி அல்லது இறைச்சியுள்ள எலும்பைச் சாப்பிட்ட பின் தொழுதார்கள். (புதிதாக)உளூச் செய்யவுமில்லை; தண்ணீரைத் தொடவுமில்லை.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
583. அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கரத்திலிருந்த) ஆட்டுச் சப்பையை (க் கத்தியால்) துண்டுபோட்டுச் சாப்பிடுவதை நான் பார்த்தேன். பிறகு (புதிதாக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்.
அத்தியாயம் : 3
584. அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்டின் சப்பையை(க் கத்தியால்) துண்டு போட்டுச் சாப்பிடுவதை நான் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே அவர்கள் கத்தியைப் போட்டுவிட்டு எழுந்து தொழுதார்கள்; அவர்கள் (புதிதாக) உளூச் செய்யவில்லை.
இந்த ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப் பெற்றுள்ளது.
- நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் (வந்து) (ஆட்டுச்) சப்பையை சாப்பிட்டுவிட்டுத் தொழுதார்கள். ஆனால், அவர்கள் (புதிதாக) உளூச் செய்ய வில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மைமூனா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
585. அபூராஃபிஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக ஆட்டு ஈரலையும் அதையொட்டி உள்ள பகுதியையும் பொரித்துக்கொடுத்துள்ளேன் என்று உறுதி கூறுகிறேன். (அவர்கள் அதை உண்டுவிட்டுத்) தொழுதார்கள்.(புதிதாக) உளூச் செய்யவில்லை.
அத்தியாயம் : 3
586. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பால் அருந்திய பின்னர் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வாய் கொப்புளித்தார்கள். பிறகு இதில் கொழுப்பு இருக்கிறது (ஆகவேதான், வாய் கொப்புளித்தேன்) என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
587. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு தொழுகைக்குப் புறப்பட்டார்கள். அப்போது அவர்களிடம் ரொட்டியும் இறைச்சியும் அன்பளிப்பாகக் கொண்டுவரப்பட்டன. அவர்கள் அதிலிருந்து மூன்று கவளம் சாப்பிட்டு விட்டுப் பின்னர் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அவர்கள் தண்ணீரைத் தொடக்கூட இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அப்போது நபி (ஸல்) அவர்களுடன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இருந்தார்கள் என்று காணப்படுகிறது. மேலும், தொழுதார்கள் என்று இடம்பெற்றுள்ளதே தவிர, மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள் என்று இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 3
பாடம் : 25 ஒட்டக இறைச்சி சாப்பிட்ட பிறகு அங்கத் தூய்மை (உளூ) செய்வது.
588. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஆட்டிறைச்சி சாப்பிட்டால் நான் (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீர் விரும்பினால் உளூச் செய்துகொள்க! விரும்பா விட்டால் உளூச் செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள். அந்த மனிதர், ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் நான் (புதிதாக) அங்கத் தூய்மை செய்ய வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் உளூச் செய்துகொள்க! என்றார்கள். அவர், ஆட்டுத் தொழுவத்தில் நான் தொழலாமா? என்று கேட்டார். அதற்கு ஆம் (தொழலாம்) என்றார்கள். அவர், ஒட்டகத் தொழுவத்தில் தொழலாமா?என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இல்லை (தொழ வேண்டாம்) என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
பாடம் : 26 தாம் (அங்கத்) தூய்மையோடு இருப்பதாக நம்பும் ஒருவருக்கு, பின்னர் துடக்கு ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்தால், அவர் (பழைய) தூய்மையோடே தொழலாம் என்பதற்கான சான்று.
589. அப்பாத் பின் தமீம் (ரஹ்) அவர்கள் தம் தந்தையின் சகோதரர் (அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம்-ரலி) இடமிருந்து கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், ஒருவருக்குத் தொழும்போது வாயு பிரிவதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாக முறையிடப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், (வாயு பிரிந்ததன்) சப்தத்தைக் கேட்காதவரை, அல்லது நாற்றத்தை உணராதவரை அவர் (தொழுகையிலிருந்து) திரும்ப வேண்டியதில்லை என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்), மற்றும் ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் அப்பாத் பின் தமீம் (ரஹ்) அவர்களுடைய தந்தையின் சகோதரர் பெயர் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
590. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமது வயிற்றில் ஏதோ ஏற்படுவதைப் போன்று உணர்ந்து, அதிலிருந்து ஏதேனும் வெளியேறிவிட்டதா இல்லையா என்று சந்தேகப்பட்டால், அவர் (வாயு பிரிவதன்) சப்தத்தைக் கேட்காதவரை, அல்லது நாற்றத்தை உணராதவரை (உளூ முறிந்துவிட்டதென எண்ணி) பள்ளிவாசலில் இருந்து வெளியேறிவிட வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 27 செத்த பிராணியின் தோல் பதனிடப்படுவதால் தூய்மை அடையும்.
591. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண் ஒருவருக்கு தர்மமாக வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துவிட்டது. அந்த வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்துசென்றார்கள். அப்போது, நீங்கள் இதன் தோலை எடுத்துப் பதனிட்டுப் பயனடையக் கூடாதா? என்று கேட்டார்கள். மக்கள், இது செத்துப்போனதாயிற்றே! என்று கேட்க, அதற்கு அவர்கள், இதை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்), இப்னு அபீஉமர் (ரஹ்) ஆகியோர் இந்த ஹதீஸை மைமூனா (ரலி) அவர்களே அறிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அத்தியாயம் : 3