பாடம் : 18 இறந்தவருக்குச் சொர்க்கத்திலுள்ள அல்லது நரகத்திலுள்ள அவரது இருப்பிடம் எடுத்துக்காட்டப்படுவதும்,மண்ணறையில் (கப்று) வேதனை உண்டு என்பதற்கான சான்றும், அதன் வேதனையிலிருந்து (காக்குமாறு இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதும்.
5500. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமையில்) அவர் (தங்கப்போகும்) இருப்பிடம் காலையிலும் மாலையிலும் அவருக்கு எடுத்துக்காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால், சொர்க்கத்தில் இருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக்காட்டப்படும்). அப்போது "இதுதான் உமது இருப்பிடம்; மறுமை நாளில் இதை நோக்கியே அல்லாஹ் உம்மை எழுப்புவான்" என்று கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5501. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் இறந்துவிட்டால் (மறுமையில்) அவர் (தங்கப்போகும்) இருப்பிடம் காலையிலும் மாலையிலும் அவருக்கு எடுத்துக்காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் (எடுத்துக் காட்டப்படும் இடமும்) சொர்க்கமாக இருக்கும். அவர் நரகவாசியாக இருந்தால் (எடுத்துக் காட்டப்படும் இடமும்) நரகமாக இருக்கும். பிறகு "இதுவே உமது இருப்பிடம். மறுமை நாளில் இதை நோக்கியே நீர் எழுப்பப்படுவீர்" என்று கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5502. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் பனுந் நஜ்ஜார் குலத்தாருக்குச் சொந்தமான தோட்டமொன்றில் தமது கோவேறு கழுதையின் மீதிருந்தார்கள். அப்போது அவர்களுடன் நாங்களும் இருந்தோம். அப்போது அவர்களது கோவேறு கழுதை அவர்களைத் தூக்கியெறியும் அளவுக்கு வெருண்டோடியது.
அங்கு ஆறு அல்லது ஐந்து அல்லது நான்கு மண்ணறைகள் இருந்தன. (இவ்வாறுதான் சயீத் அல்ஜுரைரீ (ரஹ்) அவர்கள் அறிவித்துவந்ததாக இப்னு உலய்யா (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், "இந்த மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களைப் பற்றி யார் அறிவார்?" என்று கேட்டார்கள். ஒரு மனிதர், "நான் (அறிவேன்)" என்றார்.
நபி (ஸல்) அவர்கள், "இவர்கள் எப்போது இறந்தார்கள்?" என்று கேட்டார்கள். அவர், "இணைவைப்பு (கோலோச்சியிருந்த அறியாமை)க் காலத்தில் இறந்தனர்" என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இந்தச் சமுதாயம் மண்ணறைகளில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் (இறந்தவர்களைப்) புதைக்காமல் விட்டுவிடுவீர்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கில்லையாயின், நான் செவியுறும் மண்ணறையின் வேதனையை உங்களுக்கும் கேட்கச் செய்யும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்து இருப்பேன்" என்று கூறினார்கள்.
பிறகு எங்களை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, "நரக நெருப்பின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்" என்றார்கள். மக்கள், "நரக நெருப்பின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்" என்று கூறினர்.
பிறகு "மண்ணறையின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்" என்றார்கள். மக்கள், "மண்ணறையின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்" என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "குழப்பங்களில் வெளிப்படையானவை மறைமுகமானவை அனைத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "குழப்பங்களில் வெளிப்படையானவை மறைமுகமானவை அனைத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்" என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்" என்றார்கள். மக்கள், "தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்" என்று கூறினர்.
இதன் அறிவிப்பாளரான அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், "இதை நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்கவில்லை. மாறாக, ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களே எனக்கு இதை அறிவித்தார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5503. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின், மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருப்பேன்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5504. அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்தபின் வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு "யூதர்கள், அவர்களின் கல்லறைகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5505. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டு அவருடைய நண்பர்கள் திரும்பிச் செல்லும்போது, அவர்களது காலணியின் ஓசையை இறந்தவர் செவியேற்பார். அப்போது அவரிடம் இரு வானவர்கள் வந்து அவரை எழுப்பி உட்காரவைத்து, "இந்த மனிதரைப் பற்றி என்ன சொல்லிக்கொண்டிருந்தாய்?" என்று (என்னைப் பற்றிக்) கேட்பார்கள். இறை நம்பிக்கையாளரோ, "இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்று நான் உறுதிமொழிகிறேன்" என்று கூறுவார்.
அப்போது அவரிடம் "(நீ இறைநம்பிக்கையற்றவராக இருந்திருந்தால்) நரகத்தில் நீ தங்கப்போகும் இடத்தைப் பார். (நீ நம்பிக்கையாளனும் நல்லவனுமாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பகரமாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்" என்று கூறப்படும். அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் பார்ப்பார்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அப்போது இறைநம்பிக்கையாளருக்கு எழுபது முழம் அளவுக்கு மண்ணறை விசாலமாக்கப் படும். அவர்கள் எழுப்பப்படும் (மறுமை) நாள்வரை அது மகிழ்ச்சியூட்டும் இன்பங்களால் நிரப்பப்படும்" என்றும் எங்களிடம் கூறப்பட்டது.
அத்தியாயம் : 51
5506. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தவரை மண்ணறைக்குள் வைத்து (அடக்கம் செய்து)விட்டு மக்கள் திரும்பிச் செல்லும் போது, அவர்களின் காலணி ஓசையை இறந்தவர் செவியேற்பார்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5507. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "ஓர் அடியார் மண்ணறையில் வைத்து அடக்கம் செய்யப்பட்டு அவருடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற் றுள்ளன.
அத்தியாயம் : 51
5508. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இறைநம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்க்கையிலும் மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்துகின்றான்" (14:27) எனும் இறைவசனம் மண்ணறை(யில் நடைபெறும்) வேதனை தொடர்பாகவே அருளப்பெற்றது.
அ(டக்கம் செய்யப்பட்ட)வரிடம், "உன் இறைவன் யார்?" என்று கேட்கப்படும். அதற்கு அவர், "என் இறைவன் அல்லாஹ். என்னுடைய நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவார்கள்" என்று பதிலளிப்பார். இதையே மேற்கண்ட (14:27ஆவது) வசனம் குறிப்பிடுகிறது.
இதை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5509. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இறைநம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்க்கையிலும் மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்துகின்றான்" (14:27) எனும் இறைவசனம் மண்ணறை வேதனை தொடர்பாகவே அருளப்பெற்றது.
இதை கைஸமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த அறிவிப்பு மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5510. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) இறைநம்பிக்கையாளரின் உயிர் பிரியும்போது அதை இரு வானவர்கள் எடுத்துக்கொண்டு (வானுலகிற்கு) ஏறிச் செல்கிறார்கள்.
-புதைல் பின் மைசரா (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது, அந்த உயிரிலிருந்து வரும் நறுமணம் குறித்தும் அதில் கஸ்தூரி மணம் கமழும் என்பது குறித்தும் குறிப்பிட்டார்கள் என அறிவிப்பாளர் ஹம்மாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.-
அப்போது வானுலகவாசிகள் (வானவர்கள்), "ஒரு நல்ல ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது. அல்லாஹ் உனக்குப் பேரருள் புரிவானாக. நீ குடியிருந்துவந்த உடலுக்கும் பேரருள் புரிவானாக!" என்று பிரார்த்திப்பார்கள். பிறகு அந்த உயிர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் கொண்டுசெல்லப்படுகிறது. பிறகு அல்லாஹ், "இதை இறுதித் தவணைவரை (மறுமை நாள்வரை தங்கவைக்கப்பதற்காகக்) கொண்டுசெல்லுங்கள்" என்று கூறுவான்.
ஓர் இறைமறுப்பாளர் உயிர் பிரியும்போது -அந்த உயிரிலிருந்து துர்வாடை கிளம்புவது பற்றியும் வானிலுள்ளோர் அதைச் சபிப்பார்கள் என்பது பற்றியும் புதைல் (ரஹ்) அவர்கள் தெரிவித்ததாக ஹம்மாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் -வானுலகவாசிகள், "ஒரு தீய ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது" என்று கூறுகின்றனர். அப்போது "இதை இறுதித் தவணைவரை கொண்டு செல்லுங்கள்" என்று கூறப்படுகிறது.
இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகையில், தம்மிடமிருந்த மிருதுவான துணியைத் தமது மூக்குவரை "இப்படி" கொண்டுசென்றார்கள் என்றும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் (சைகை செய்து) கூறினார்கள்.
அத்தியாயம் : 51
5511. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில்) நாங்கள் உமர் (ரலி) அவர்களுடன் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையே (ஓரிடத்தில்) இருந்தோம். அப்போது (வானில்) பிறை தென்படுகிறதா என நாங்கள் பார்த்தோம். நான் கூர்மையான பார்வையுடைய மனிதனாக இருந்தேன். எனவே, நான் பிறையைப் பார்த்துவிட்டேன். என்னைத் தவிர பிறையைப் பார்த்ததாகக் கூற வேறெவரும் இருக்கவில்லை. அப்போது நான் உமர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அதைப் பார்க்கவில்லையா?" என்று கேட்டேன். அதைத் தாம் பார்க்கவில்லை என அவர்கள் கூறலானார்கள். "நான் எனது படுக்கையில் இருக்கும் போது அதைப் பார்ப்பேன்" என்றும் கூறலானார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்துகொண்டவர்களைப் பற்றி எங்களிடம் கூறலானார்கள்.
பத்ருப் போருக்கு முந்தைய நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் பத்ருப் போரில் எதிரிகள் மாண்டு கிடக்கவிருக்கும் இடங்களைக் காட்டலானார்கள். "அல்லாஹ் நாடினால் இதுதான் நாளை இன்ன மனிதன் மாண்டு கிடக்கும் இடம்" என்று குறிப்பிட்டார்கள். சத்திய (மார்க்க)த்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அனுப்பியவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் பிசகாமல் சரியாக அவர்கள் மாண்டு கிடந்தனர்.
பிறகு அவர்கள் அனைவரும் ஒரு கிணற்றில் ஒருவர்பின் ஒருவராகப் போடப்படலாயினர். பிறகு அவர்க(ளின் சடலங்க)ளை நோக்கிச் சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அவற்றைப் பார்த்து), "இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுக்கு வாக்களித்ததை நீங்கள் உண்மையானதாகக் கண்டீர்களா? ஏனெனில், அல்லாஹ் எனக்கு வாக்களித்ததை நான் உண்மையானதாகக் கண்டேன்" என்று கூறினார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடம் எப்படிப் பேசுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் கூறுவதை இவர்களைவிட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை. எனினும், அவர்களால் எனக்குப் பதிலேதும் கூற முடியாது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5512. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டவர்க(ளின் உடல்)களை மூன்று நாட்கள் (அப்படியே) விட்டுவிட்டார்கள். பிறகு அவர்கள் அருகில் சென்று நின்றுகொண்டு, "அபூஜஹ்ல் பின் ஹிஷாமே! உமய்யா பின் கலஃபே! உத்பா பின் ரபீஆவே! ஷைபா பின் ரபீஆவே! உங்கள் இறைவன் வாக்களித்ததை நீங்கள் உண்மையானதாகக் காணவில்லையா? ஏனெனில், எனக்கு என் இறைவன் வாக்களித்ததை நான் உண்மையானதாகக் கண்டேன்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர்களால் எப்படிக் கேட்க முடியும்? எவ்வாறு அவர்களால் பதிலளிக்க இயலும்? அவர்கள் முடைநாற்றம் வீசும் பிணங்களாகிவிட்டார்களே?" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீதாணையாக! நான் கூறுவதை இவர்களைவிட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை. எனினும், அவர்களால் பதிலளிக்க இயலாது" என்று கூறினார்கள். பிறகு அவர்களை இழுத்துச் சென்று கற்சுவர் எழுப்பப்பட்டிருந்த கிணற்றில் போடுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்கள் பத்ரிலிருந்த ஒரு பாழுங்கிணற்றில் போடப்பட்டனர்.
அத்தியாயம் : 51
5513. மேற்கண்ட ஹதீஸ் அபூதல்ஹா (ரலி) அவர்களிடமிருந்து இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "பத்ருப்போர் நாளன்று எதிரிகளைத் தோற்கடித்த பின்னர் இருபதுக்கும் அதிகமான, அல்லது இருபத்து நான்கு குறைஷித் தலைவர்களின் சடலங்களைப் பத்ரிலிருந்த உள்சுவர் எழுப்பப்பட்ட கிணறு ஒன்றில் தூக்கிப்போடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 51
பாடம் : 19 (மறுமை நாளில்) விசாரணை நடைபெறும் என்பதற்கான சான்று.
5514. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(மறுமை நாளில்) விசாரணை செய்யப்படுபவர் வேதனை செய்யப்படுவார்"என்று சொன்னார்கள். நான், "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "எவரது வினைப் பதிவேடு அவரது வலக்கரத்தில் வழங்கப்படுமோ அவரிடம் எளிதான முறையில் விசாரிக்கப்படும்" (84:8) என்றல்லவா கூறுகின்றான்?" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இ(ந்த வசனமான)து, (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக மனிதர்கள் புரிந்த நன்மை தீமைகளின் பதிவேட்டை) அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுவது பற்றியதாகும்;கேள்வி கணக்கின்போது யார் துருவித் துருவி விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார்" என்று கூறினார்கள். -இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5515. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "(மறுமை நாளில்) விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தே போய் விடுவார்" என்று சொன்னார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! "எவரது வினைப் பதிவேடு அவரது வலக்கரத்தில் வழங்கப்படுமோ அவரிடம் எளிதான முறையில் விசாரிக்கப்படும்" (84:8) என்றல்லவா அல்லாஹ் கூறுகின்றான்?" என்று கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள், "இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்கள் புரிந்த நன்மை தீமைகளின் பதிவேடு) அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுவது பற்றியதாகும்; எனினும், கேள்வி கணக்கின் போது யார் துருவித்துருவி விசாரிக்கப்படுவாரோ அவர் அழிந்தார்" என்று சொன் னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் "கேள்விகணக்கின்போது யார் துருவித்துருவி விசாரிக்கப்படுவாரோ அவர் அழிந்தார்" என்று கூறினார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 51
பாடம் : 40 பலவீனமானோர் மற்றும் அடக்கத்தோடு வாழ்வோரின் சிறப்பு
5516. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால், "உங்களில் ஒருவர் அல்லாஹ் குறித்து நல்லெண்ணம் கொள்ளாமல் மரணிக்க வேண்டாம்" என்று கூறியதை நான் கேட்டேன்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிட மிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5517. ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால், "உங்களில் ஒருவர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் குறித்து நல்லெண்ணம் கொண்டிருக்கும் நிலையில் அல்லாமல் மரணிக்க வேண்டாம்"என்று கூறியதை நான் கேட்டேன்.
அத்தியாயம் : 51
5518. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "ஒவ்வோர் அடியாரும், தாம் இறக்கும்போதிருந்த (மன)நிலையிலேயே எழுப்பப்படுவார்" என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.அதில், "நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்" என்ற குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 51
5519. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு சமுதாயத்தின் மீது வேதனையை இறக்க அல்லாஹ் நாடிவிட்டால்,அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும். பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்" என்று கூறியதை நான் கேட்டேன்.
அத்தியாயம் : 51