5480. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகத்தில் இறைமறுப்பாளனின் இரு தோள்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாக வாகனத்தில் பயணிப்பவர் மூன்று நாட்கள் கடக்கும் தூரமாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அஹ்மத் பின் உமர் அல்வகீஈ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நரகத்தில்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 51
5481. ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை பின்வருமாறு) கூறியதைக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா? மக்கள், "ஆம் (தெரிவியுங்கள்)" என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், "(மக்களின் பார்வையில்) அவர்கள் பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்" என்று சொன்னார்கள்.
பிறகு "நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "ஆம்" என்றார்கள்."அவர்கள் இரக்கமற்றவர்கள்; உண்டு கொழுத்தவர்கள்; பெருமையடிப்பவர்கள் ஆவர்" என்று நபியவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், ("உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா" (அலா உக்பிருக்கும்) என்பதற்குப் பகரமாக) "உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?" (அலா அதுல்லுக்கும்) என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5482. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றி வைப்பான். நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; ஒரு வமிசத்தில் பிறந்ததாகப் பொய்யாக வாதிடுபவர்கள்; பெருமை அடிப்பவர்கள். - இதை ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5483. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பரட்டைத் தலையுடைய, வீட்டுவாசல்களுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்படக்கூடிய எத்தனையோ பேர், (அல்லாஹ்விடம் தகுதியால் உயர்ந்தவர்களாய் இருப்பர்.) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) உண்மையாக்குவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5484. அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது (இறைத்தூதர் ஸாலிஹ் (அலை) அவர்களின் தூதுவத்திற்குச் சான்றாகப் பாறையிலிருந்து வெளிப்பட்ட) ஒட்டகத்தையும் அத(ன் கால் நரம்பி)னைத் துண்டித்துக் கொன்றவனையும் நினைவு கூர்ந்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்களில் நற்பேறற்ற ஒருவன் முன் வந்தான்" (91:12) எனும் இறைவசனத்தைக் கூறிவிட்டு, "அபூஸம்ஆவைப் போன்று ஸாலிஹ் (அலை) அவர்களின் (ஸமூத்) சமுதாயத்தில் மதிப்புமிக்கவனும் ஆதிக்கவாதியும் பலசாலியுமான ஒருவன் அந்த ஒட்டகத்(தைக் கொல்வ)துக்காக முன்வந்தான்" என்று சொன்னார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்க(ளின் உரிமைக)ள் குறித்து அறிவுறுத்தினார்கள்; பிறகு "உங்களில் ஒருவர் தம் மனைவியை (அடிமையை அடிப்பதைப் போன்று) அடிக்க முற்படுகிறார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக் காக)படுக்க நேரலாம். (இது முறையா?)" என்று கூறினார்கள்.
பிறகு (உடலிலிருந்து பிரியும்) நாற்ற வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, "(அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செயலுக்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) ஏன் சிரிக்கிறார்?" என்று கேட்டு உபதேசித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அடிமைப் பெண்ணை அடிப்பதைப் போன்று" எனக் காணப்படுகிறது. அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆண் அடிமையை அடிப்பதைப் போன்று" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5485. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இதோ இந்த பனூ கஅப் குலத்தாரின் தந்தையான "அம்ர் பின் லுஹை பின் கம்ஆ பின் கிந்திஃப்" தனது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்றுகொண்டிருப்பதை நான் கண்டேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5486. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(5:103ஆவது இறைவசனத்திலுள்ள) "பஹீரா" என்பது, (அறியாமைக் கால) சிலைகளுக்காக (அவற்றின் பெயரால்) பால் கறக்கக்கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுவந்த ஒட்டகமாகும்; மக்களில் யாரும் அதன் பாலைக் கறக்கமாட்டார்கள்.
"சாயிபா" என்பது, (அறியாமைக் காலத்தில் நோய் நிவாரணம் போன்ற தேவைகள் நிறைவேற வேண்டும் என்ற வேண்டுதலில்) சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிடப்பட்டு வந்த ஒட்டகமாகும். அதன் மீது எந்தச் சுமையும் ஏற்றப்படாது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகப் பின்வருமாறு சொன்னார்கள்: "அம்ர் பின் ஆமிர் அல்குஸாஈ" தமது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்று கொண்டிருப்பதை நான் கண்டேன். முதன் முதலாக "சாயிபா" (ஒட்டகத்தைச் சிலைகளுக்காக நேர்ச்சை செய்து) திரியவிட்டவர் அவர்தான்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5487. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அவ்விரு பிரிவினரை நான் பார்த்ததில்லை. (முதலாம் பிரிவினர் யாரெனில்,) பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு மக்களை அடி(த்து இம்சி)க்கும் கூட்டத்தார்.
(இரண்டாம் பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்தபடி (தளுக்கி குலுக்கி கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தம் பக்கம் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களின் தலை(முடி) சரிந்து நடக்கக்கூடிய கழுத்து நீண்ட ஒட்டகத்தைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) அதன் வாடையைக்கூட நுகரமாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு தொலைவிலிருந்து வீசிக்கொண்டிருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5488. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ நீண்டநாள் வாழ்ந்தால் ஒரு சமுதாயத்தைப் பார்க்கக்கூடும். அவர்களின் கைகளில் மாட்டின் வாலைப்போன்று (நீளமான சாட்டைகள்) இருக்கும். அவர்கள் அல்லாஹ்வின் கோபத்துடனேயே காலையில் புறப்படுவார்கள். அல்லாஹ்வின் கடுங்கோபத்துடனேயே மாலையில் திரும்புவார்கள்.
அத்தியாயம் : 51
5489. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
(என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் நீண்ட நாள் வாழ்ந்தால் ஒரு சமுதாயத்தைப் பார்க்கக்கூடும். அவர்கள் அல்லாஹ்வின் கடுங்கோபத்துடனேயே காலையில் புறப்படுவார்கள். அவனுடைய சாபத்துடனேயே மாலையில் திரும்புவார்கள். அவர்களின் கைகளில் மாட்டின் வாலைப் போன்றவை (நீளமான சாட்டைகள்) இருக்கும்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
பாடம் : 15 உலக அழிவும் மறுமை நாளில் (மக்கள் அனைவரும்) ஒன்றுதிரட்டப்படுவதும்.
5490. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது இந்த -அதாவது சுட்டு- விரலை (அறிவிப்பாளர் யஹ்யா சுட்டு விரலால் சைகை செய்கிறார்) கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (அந்த அளவு குறைவானதேயாகும்.)
இதை பனூ ஃபிஹ்ர் குலத்தாரில் ஒருவரான முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அறிவிப்பாளர் இஸ்மாயீல் பின் அபீ காலித் (ரஹ்) அவர்கள் தமது பெருவிரலால் (கடலில் நுழைப்பதைப் போன்று) சைகை செய்தார்கள்" என்று காணப்படுகிறது.
யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களைத் தவிர மற்ற அனைவரது அறிவிப்பிலும், "(இவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்" என முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5491. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மக்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்றுதிரட்டப்படுவார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! (நிர்வாணமான) பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் ஒருவரையொருவர் பார்ப்பார்களே?" என்று கேட்டேன்.
"ஆயிஷா! அவர்களில் சிலர் வேறு சிலரைப் பார்க்கும் எண்ணம் ஏற்படாத அளவுக்கு (அப்போதைய) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.அவற்றில் ஹாத்திம் பின் அபீஸஃகீரா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 51
5492. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உரையாற்றியபோது, "நீங்கள் செருப்பணியாமல் வெறுங்காலால் நடந்தவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள்" என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உரையாற்றிய போது" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 51
5493. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று (எங்களுக்கு) அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்:
மக்களே! (மறுமை நாளில்) நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக அல்லாஹ்விடம் ஒன்றுதிரட்டிக்கொண்டு வரப்படுவீர்கள். அல்லாஹ் கூறுகின்றான்: முதன் முதலாக அவர்களை நாம் படைத்ததைப் போன்றே (அந்நாளில்) அவர்களை நாம் மீண்டும் படைப்போம். இது நம்மீது (பொறுப்பாகிவிட்ட) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயமாகச் செய்வோம் (21:104).
கவனத்தில் வையுங்கள்! மறுமை நாளில் படைப்பினங்களிலேயே முதன் முதலாக ஆடையணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள்.
கவனத்தில் வையுங்கள்! என் சமுதாயத்தாரில் சிலர் இடப் பக்கமாக (நரகம் நோக்கி)க் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான் "என் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்" என்பேன். அப்போது "(இவர்கள்) உம(து இறப்பு)க்குப்பின் (மார்க்கத்தில்) என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்பது உமக்குத் தெரியாது" என்று கூறப்படும்.
அப்போது நான், நல்லடியார் (நபி ஈசா (அலை) அவர்கள்) சொன்னதைப் போன்று, "(இறைவா!)" நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கண்காணிப்பவனாகவே இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது, நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்தையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உன் அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்" (5:117,118) என்று சொல்வேன்.
அப்போது என்னிடம், "நீர் இவர்களைவிட்டுப் பிரிந்ததிலிருந்து இவர்கள் தம் குதிகால் (சுவடு)களின் வழியே மார்க்கத்திலிருந்து வெளியேறிக்கொண்டேயிருந்தார்கள்" என்று கூறப்படும்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் வகீஉ மற்றும் முஆத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பிலேயே "அப்போது, இவர்கள் உம(து இறப்பு)க்குப் பின் (மார்க்கத்தில்) என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்பது உமக்குத் தெரியாது" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5494. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாள் வருவதற்குச் சற்றுமுன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்றுதிரட்டப்படுவார்கள். (அவற்றில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர் வாகனப் பற்றாக்குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் பேராகச் செல்வார்கள்.
அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவர். அவர்)களைப் பூமியில் ஏற்படும் (ஒரு பெரும்) "தீ" ஒன்றுதிரட்டும். அவர்கள் இரவில் ஓய்வெடுக்கும்போதும், மதிய ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அடையும்போதும், மாலை நேரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீ அவர்களுடனேயே இருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
பாடம் : 16 மறுமை நாளின் நிலை. அதன் அமளிகளிலிருந்து தப்பிக்க நமக்கு அல்லாஹ் உதவி புரிவானாக!
5495. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்" (83:6) எனும் இறைவசனத்தை ஓதிவிட்டு, "(அன்று) தம் காதுகளில் பாதிவரை தேங்கி நிற்கும் தமது வியர்வையில் அவர்களில் ஒருவர் நின்றுகொண்டிருப்பார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மக்கள் நிற்பார்கள்" என்றே வசனத்தொடர் ஆரம்பமாகிறது. "அந்நாளில்" என்று அவர்கள் அறிவிக்க வில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் எட்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மூசா பின் உக்பா மற்றும் ஸாலிஹ் பின் கைசான் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "எந்த அளவுக்கு (அவர்கள் நிற்பார்கள்) என்றால், தம் காதுகளில் பாதிவரை தேங்கி நிற்கும் தமது வியர்வையில் அவர்களில் ஒருவர் மறைந்துபோய்விடுவார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5496. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் (மனிதர்களின் தலைக்கருகில் நெருங்கிவரும் சூரியனால்) ஏற்படும் வியர்வை, தரையினுள் இரு கை நீட்டளவில் எழுபது முழம்வரை சென்று, (தரைக்குமேல்) "அவர்களின் வாயை" அல்லது "அவர்களது காதை" எட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
("அவர்களின் வாயை" அல்லது "அவர்களின் காதை" ஆகிய) இவற்றில் அறிவிப்பாளர் அபுல் ஃகைஸ் (ரஹ்) அவர்கள் எதைக் கூறினார்கள் என்பதில் ஸவ்ர் (ரஹ்) அவர்களே ஐயப்பாட்டை வெளியிட்டுள்ளார்கள்.
அத்தியாயம் : 51
5497. மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு அருகில் கொண்டுவரப்படும். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கும் அதற்கும் இடையில் ஒரு மைல் தொலைதூரமே இருக்கும். அப்போது மக்கள் தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் மூழ்குவார்கள். சிலரது வியர்வை அவர்களின் கணுக்கால்கள்வரையிலும், சிலரது வியர்வை முழங்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை இடுப்பு வரையிலும், சிலரது வியர்வை வாய் வரையிலும் எட்டிவிடும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
இதைக் கூறியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் வாயை நோக்கி சைகை செய்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான சுலைம் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! "மைல்" என்று பூமியின் தொலைதூர அளவைக் குறிப்பிட்டார்களா? அல்லது கண்ணில் தீட்டப் பயன்படும் அஞ்சனக்கோலின் அளவைக் குறிப்பிட்டார்களா என்பது எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 51
பாடம் : 17 சொர்க்கவாசிகளையும் நரகவாசிகளையும் இவ்வுலகிலேயே அடையாளம் கண்டு கொள்ளத்தக்க பண்புகள்.
5498. இயாள் பின் ஹிமார் அல்முஜாஷிஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றியபோது பின்வருமாறு கூறினார்கள்:
அறிந்துகொள்ளுங்கள்: என் இறைவன் இன்றைய தினம் எனக்குக் கற்றுத் தந்தவற்றிலிருந்து நீங்கள் அறியாதவற்றை உங்களுக்குக் கற்றுத்தருமாறு எனக்குக் கட்டளையிட்டான்.
(இறைவன் கூறினான்:) நான் ஓர் அடியானுக்கு வெகுமதியாக வழங்கியுள்ள அனைத்துப் பொருட்களும் அவனுக்கு அனுமதிக்கப்பட்டவையே ஆகும். நான் என் அடியார்கள் அனைவரையும் (இயற்கையிலேயே) உண்மை வழி நின்றவர்களாகவே படைத்தேன். (ஆயினும்) அவர்களிடம் ஷைத்தான் வந்து அவர்களது இயற்கை நெறியிலிருந்து அவர்களைப் பிறழச்செய்துவிட்டான். நான் அவர்களுக்கு அனுமதித்துள்ளவற்றைத் தடைசெய்யப் பட்டவையாக ஆக்கிவிட்டான்; நான் எனக்கு இணை கற்பிப்பதற்கு எந்தச் சான்றையும் இறக்காத நிலையில் எனக்கு இணை கற்பிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டான்.
அல்லாஹ் பூமியில் வசித்துக்கொண்டிருப்போரைப் பார்த்து, அவர்களில் அரபியர், அரபியரல்லாதோர் அனைவர்மீதும் (அவர்கள் இணை கற்பித்துக்கொண்டிருந்ததால்) கடுங்கோபம் கொண்டான்; வேதக்காரர்களில் (இணைவைக்காமல்) எஞ்சியிருந்தோரைத் தவிர! மேலும் (என்னிடம்) இறைவன், நான் உம்மைச் சோதிப்பதற்கும் உம்மைக் கொண்டு (பிறரைச்) சோதிப்பதற்குமே உம்மை நான் அனுப்பினேன். (வெள்ள)நீரில் அழிந்துபோய்விடாத வேதத்தையும் உமக்கு நான் அருளினேன். அதை உறங்கும்போதும் விழித்திருக்கும் நிலையிலும் நீர் ஓதுகின்றீர்" என்று கூறினான்.
மேலும், என் இறைவன் குறைஷியரை எரித்துவிடுமாறு எனக்குக் கட்டளையிட்டான். அப்போது நான் "என் இறைவா! அவர்கள் என் தலையை நொறுக்கி ஒரு ரொட்டியைப் போன்று ஆக்கிவிடுவார்களே?" என்று கூறினேன். இறைவன், "உம்மை (உமது பிறந்தகத்திலிருந்து) அவர்கள் வெளியேற்றியதைப் போன்று அவர்களை நீர் வெளியேற்றிவிடும். அவர்களிடம் அறப்போர் புரியும். உமக்கு நாம் உதவுவோம். (நல்வழியில்) நீர் செலவிடும். உமக்கு நாம் செலவிடுவோம். (அவர்களை நோக்கி) ஒரு படையை அனுப்பும். அதைப் போன்று ஐந்து மடங்கு படையை நாம் அனுப்புவோம். உமக்குக் கீழ்ப்படிபவர்களுடன் சேர்ந்து உமக்கு மாறுசெய்வோருடன் நீர் போரிடும்" என்று கூறினான்.
மேலும், சொர்க்கவாசிகள் மூவர் ஆவர். ஒருவர், நீதிநெறி வழுவாமல் வாரி வழங்கி நல்லறம் புரிய வாய்ப்பளிக்கப்படும் அரசர். இரண்டாமவர், உறவினர்களிடமும் மற்ற முஸ்லிம்களிடமும் அன்புடனும் இரக்கத்துடனும் நடந்துகொள்பவர். மூன்றாமவர், குழந்தை குட்டிகள் இருந்தும் (தவறான வழியில் பொருளீட்டிவிடாமல்) தன் மானத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்கின்ற மனிதர்.
நரகவாசிகள் ஐவர் ஆவர். முதலாமவர், புத்தி சாதுர்யம் இல்லாத பலவீனர். அவர் (சுயகாலில் நிற்காமல்) உங்களையே பின்தொடர்வார். தமக்கென குடும்பத்தையோ செல்வத்தையோ தேடிக்கொள்ளமாட்டார். இரண்டாமவர்,எந்த ஆசையையும் விட்டுவைக்காத மோசடிக்காரர். அற்பமானதே ஆனாலும் மோசடி செய்(தாவது அதை அடை)யாமல் விடமாட்டார். மூன்றாமவர், காலையிலும் மாலையிலும் உம்முடைய வீட்டார் விஷயத்திலும் உமது செல்வம் விஷயத்திலும் உமக்குத் துரோகமிழைப்பவர்.
(நரகவாசிகளின் குணங்களில் நான்காவதாக) கருமித்தனத்தை அல்லது பொய்யைக் கூறினார்கள். ஐந்தாமவன், "அதிகமாக அருவருப்பாகப் பேசுகின்ற ஒழுங்கீனன்" என்று குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூஃகஸ்ஸான் அல்மிஸ்மஈ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நல்வழியில் செலவிடுவீராக! உமக்கு நாம் செலவிடுவோம்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ், இயாள் பின் ஹிமார் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் ஓர் அடியானுக்கு வெகுமதியாக வழங்கியுள்ள அனைத்துப் பொருட்களுமே (அவனுக்கு) அனுமதிக்கப்பட்டவையாகும்" எனும் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் இயாள் பின் ஹிமார் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 51
5499. மேற்கண்ட ஹதீஸ் முஜாஷிஉ குலத்தாரான இயாள் பின் ஹிமார் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று உரையாற்றினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பில், "பணிவாக நடந்துகொள்ளுங்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் பெருமையடிக்க வேண்டாம். ஒருவர் மற்றவரிடம் எல்லை மீற வேண்டாம்" என்று இறைவன் எனக்கு அறிவித்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
மேலும், (நரகவாசிகளில் முதலாமவர் குறித்து) "அவர்கள் உங்களையே பின் தொடர்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் தமக்கெனக் குடும்பத்தையோ செல்வத்தையோ தேடிக்கொள்ள மாட்டார்கள்" என்று (சிறு வேறுபாட்டுடன்) இடம்பெற்றுள்ளது. அதில் கத்தாதா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாகவும் காணப்படுகிறது:
நான் முதர்ரிஃப் (ரஹ்) அவர்களிடம், "அபூஅப்தில்லாஹ்! இப்படியும் நடக்குமா? (தமக்கென குடும்பத்தையோ செல்வத்தையோ தேடிக்கொள்ளாதவர்களும் உண்டா?)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! இ(த்தகைய)வர்களை நான் அறியாமைக் காலத்தில் (இருந்ததாக அவர்களுடைய வரலாறுகளில்) கண்டிருக்கிறேன். ஒரு மனிதர் ஒரு குலத்தாருக்காகக் கால்நடைகளை மேய்ப்பார். (அதற்காகக் கூலி எதையும் பெறமாட்டார்.) அவரது தாம்பத்திய உறவுக்காக அக்குலத்தாரின் அடிமைப் பெண் மட்டும் அவருக்குக் கிடைப்பாள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 51