5025. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளரைத் தைக்கும் ஒரு முள்ளாயினும் அதைவிட அற்பமானதாயினும் அதற்குப் பதிலாக அவருக்கு ஓர் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்துகிறான்; அல்லது அவருடைய தவறு ஒன்றை அவரைவிட்டுத் துடைத்துவிடுகிறான்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5026. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளரைத் தைக்கும் ஒரு முள்ளாயினும் அதைவிட அற்பமானதாயினும் அதற்குப் பதிலாக அல்லாஹ் அவருடைய தவறுகளில் சிலவற்றைக் கழித்துவிடுகிறான்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5027. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட எத்துன்பமாயினும் அதற்குப் பதிலாக அவரது பாவம் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5028. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளரைத் தைக்கும் முள் உள்பட எத்துன்பமாயினும் அதற்குப் பதிலாக "அவருடைய தவறுகளில் சில கழிக்கப்படாமல்" அல்லது "அவருடைய தவறுகளில் சில மன்னிக்கப்படாமல்" இருப்பதில்லை. (அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் இவ்விரண்டில் எதைக் கூறினார் என்பது அறிவிப்பாளர் யஸீத் பின் குஸைஃபா (ரஹ்) அவர்களுக்குத் தெரியவில்லை.)
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5029. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளரைத் தைக்கும் முள் உள்பட (துன்பங்கள்) எதுவாயினும் அதற்குப் பதிலாக அல்லாஹ் அவருக்கு ஓர் நன்மையைப் பதிவு செய்யாமல், அல்லது அதற்குப் பதிலாக அவருடைய தவறுகளில் ஒன்று மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5030. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அபூ ஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"தீமை செய்பவர் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவார்" (4:123) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது, அது முஸ்லிம்களுக்குக் கடுமையான கவலையை ஏற்படுத்தியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நற்செயல்களில்) நடுநிலையாகச் செயல்படுங்கள்; சரியானதைச் செய்யுங்கள். (நாம் மிகப்பெரிய அளவில் வழிபாடுகள் செய்யவில்லையே என வருந்தாதீர்கள்.) ஏனெனில், கால் இடறி (காயமடைவது), அல்லது முள் தைப்பது உள்பட ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் ஒவ்வொரு துன்பமும் அவருக்குப் பாவப் பரிகாரமாகவே அமையும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகிறேன்:
(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ள) இப்னு முஹைஸின் என்பவர், மக்காவாசியான உமர் பின் அப்திர் ரஹ்மான் பின் முஹைஸின் என்பவர் ஆவார்.
அத்தியாயம் : 45
5031. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உடல் நலிவுற்றிருந்த) உம்முஸ் ஸாயிப் அல்லது உம்முல் முசய்யப் எனும் பெண்மணியிடம் (உடல்நலம் விசாரிக்கச்) சென்றார்கள். அப்போது "உம்முஸ் ஸாயிபே! அல்லது உம்முல் முசய்யபே! உமக்கு என்ன நேர்ந்தது? ஏன் நடுங்கிக்கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அப்பெண், "காய்ச்சல். அதில் அல்லாஹ் வளம் சேர்க்காமல் இருக்கட்டும்!" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "காய்ச்சலை ஏசாதே! ஏனெனில் அது, கொல்லனின் உலை இரும்பின் துருவை அகற்றிவிடுவதைப் போன்று, ஆதமின் மக்களின் (மனிதர்களின்) தவறுகளை அகற்றி விடுகிறது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 45
5032. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், "சொர்க்கவாசிகளில் ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?" என்று கேட்டார்கள். நான் "சரி! (காட்டுங்கள்)" என்று சொன்னேன். அவர்கள், "(இதோ) இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதான் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன். அப்போது (என் உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கிறது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்றார்.
நபி (ஸல்) அவர்கள், "நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் வேண்டுகிறேன்" என்று சொன்னார்கள். இப்பெண்மணி "நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆயினும், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறக்காமலிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 15 அநீதியிழைப்பது தடை செய்யப்பட்டதாகும்.
5033. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்:
என் அடியார்களே!
அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்துகொண்டேன். அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள்.
என் அடியார்களே!
உங்களில் யாரை நான் நல்வழியில் செலுத்தினேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் வழி தவறியவர்களே. ஆகவே, என்னிடமே நல்வழியில் செலுத்துமாறு கேளுங்கள். உங்களை நான் நல்வழியில் செலுத்துவேன்.
என் அடியார்களே!
உங்களில் யாருக்கு நான் உணவளித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் பசித்திருப்பவர்களே. ஆகவே, என்னிடமே உணவாதாரத்தைக் கேளுங்கள். நான் உங்களுக்கு உணவளிக்கிறேன்.
என் அடியார்களே!
உங்களில் யாருக்கு நான் ஆடையணிவித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நிர்வாணமானவர்களே. ஆகவே, என்னிடமே ஆடை கேளுங்கள். நான் உங்களுக்கு ஆடையணிவிக்கிறேன்.
என் அடியார்களே!
நீங்கள் இரவிலும் பகலிலும் பாவம் செய்கிறீர்கள். நான் அனைத்துப் பாவங்களையும் மறைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே, என்னிடமே பாவமன்னிப்புக் கோருங்கள். நான் உங்கள் பாவங்களை மன்னிக்கிறேன்.
என் அடியார்களே!
உங்களால் எனக்கு எவ்விதத் தீங்கும் அளிக்க முடியாது; மேலும், உங்களால் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாது.
என் அடியார்களே!
உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் உங்களில் மிகவும் இறையச்சமுடைய ஒரு மனிதரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் அதிகமாக்கி விடுவதில்லை.
என் அடியார்களே!
உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் மிகவும் தீய மனிதர் ஒருவரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் குறைத்துவிடப்போவதில்லை.
என் அடியார்களே!
உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து ஒரே திறந்த வெளியில் நின்று என்னிடத்தில் (தத்தம் தேவைகளைக்) கோரினாலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர் கேட்பதை நான் கொடுப்பேன். அது என்னிடத்தில் இருப்பவற்றில் எதையும் குறைத்துவிடுவதில்லை; கடலில் நுழை(த்து எடு)க்கப்பட்ட ஊசி (தண்ணீரைக்) குறைப்பதைப் போன்றே தவிர (குறைக்காது)!
என் அடியார்களே!
நீங்கள் செய்துவரும் நல்லறங்களை நான் உங்களுக்காக எண்ணிக் கணக்கிடுகிறேன். பிறகு அதன் நற்பலனை நான் முழுமையாக வழங்குவேன். நல்லதைக் கண்டவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழட்டும். அல்லதைக் கண்டவர் தம்மையே நொந்துகொள்ளட்டும்!
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சயீத் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் குத்சியை அறிவிக்கும்போது, (இந்த இறைச்செய்தியைக் கண்ணியப்படுத்துவதற்காக) முழந்தாளிட்டு நின்றுகொள்வார்கள்.
- அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் அபூமுஸ்ஹிர் (ரஹ்) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், மர்வான் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களே அபூமுஸ்ஹிர் (ரஹ்) அவர்களைவிட ஹதீஸ் அறிவிப்பில் முழுமையானவர் ஆவார்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் அநீதியிழைப்பதை என்மீதும் தடை செய்துகொண்டேன். என் அடியார்கள் மீதும் தடைசெய்துவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதி இழைக்காதீர்கள்" என்று வளமும் உயர்வும் மிக்க தம் இறைவனிடமிருந்து கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் அறிவித்த மேற்கண்ட ஹதீஸே இதைவிட முழுமையானதாகும்.
அத்தியாயம் : 45
5034. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். கருமித்தனத்திலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் கருமித்தனமானது, உங்களுக்கு முன்னிருந்தவர்களை அழித்தது; இரத்தங்களைச் சிந்துவதற்கும் இறைவனால் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றை அனுமதிக்கப் பட்டவையாக ஆக்கிக் கொள்வதற்கும் தூண்டுகோலாக இருந்தது.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5035. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5036. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவுமாட்டார்; (பிறரது அநீதிக்கு அவன் ஆளாகும்படி) அவனைக் கைவிட்டு விடவுமாட்டார். யார் தம் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். யார் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ அதற்குப் பகரமாக அவரைவிட்டு அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5037. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), "திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்" என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்;இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5038. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள். எந்த அளவுக்கென்றால்,கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5039. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் (இவ்வுலகில்) அநீதி இழைப்பவனுக்கு (விட்டுக்கொடுத்து) அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால், அவனைத் தப்பவிடமாட்டான்" என்று கூறிவிட்டு, "அநீதி இழைத்த ஊர்(க்காரர்)களைப் பிடிக்கும்போது இவ்வாறே உம்முடைய இறைவன் பிடிக்கிறான். அவனது பிடி வதைக்கக்கூடியது; கடுமையானது" (11:102) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 16 அநீதியிழைத்த சகோதரனுக்கும் அநீதிக்குள்ளான சகோதரனுக்கும் உதவுதல்.
5040. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு போரின்போது) முஹாஜிர்களில் ஓர் இளைஞரும் அன்சாரிகளில் ஓர் இளைஞரும் சண்டையிட்டுக்கொண்டனர். அப்போது "அந்த முஹாஜிர்" அல்லது "முஹாஜிர்கள்", "முஹாஜிர்களே (உதவிக்கு வாருங்கள்)" என்று அழைத்தார். அந்த அன்சாரி, "அன்சாரிகளே! (உதவிக்கு வாருங்கள்)!" என்று அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, "என்ன இது, அறியாமைக் காலத்தவரின் கூப்பாடு?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "இல்லை; அல்லாஹ்வின் தூதரே! இளைஞர்கள் இருவர் சண்டையிட்டுக்கொண்டனர். அவர்களில் ஒருவர் மற்றவரின் புட்டத்தில் அடித்துவிட்டார்" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பிரச்சினை இல்லை. ஒருவர் தம் சகோதரர் அநீதியிழைப்பவராக இருக்கும் நிலையிலும் அநீதிக்குள்ளானவராக இருக்கும் நிலையிலும் அவருக்கு உதவட்டும். (அது எவ்வாறெனில்) அவர் அநீதியிழைப்பவராக இருந்தால், (அநீதியிழைக்கவிடாமல்) அவரைத் தடுக்கட்டும்! அதுவே அவருக்குச் செய்யும் உதவியாகும். அவர் அநீதியிழைக்கப்பட்டவராக இருந்தால், அவருக்கு உதவி செய்யட்டும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 45
5041. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ("பனூ முஸ்தலிக்" எனும்) ஓர் அறப்போரில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரை (விளையாட்டாக)ப் புட்டத்தில் அடித்துவிட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி, "அன்சாரிகளே! (உதவிக்கு வாருங்கள்)" என்று அழைத்தார். அந்த முஹாஜிர், "முஹாஜிர்களே! (உதவிக்கு வாருங்கள்)" என்று அழைத்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து), "இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (இனமாச்சரியங்களைத் தூண்டுகின்ற) இக்கூப்பாடுகள் நாற்றம் வீசக்கூடியவை" என்று கூறினார்கள்.
அப்போது (மதீனாவாசியான நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இதைக் கேட்டுவிட்டு "அப்படியா அவர்கள் (முஹாஜிர்கள்) செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச்சென்றால் (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை நிச்சயமாக அங்கிருந்து வெளியேற்றி விடுவர்" என்று (அன்சாரிகளுக்காகப்) பேசினார்.
(இச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் தோழர்களுக்கும் எட்டியபோது) உமர் (ரலி) அவர்கள் எழுந்து, "என்னை விடுங்கள். இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை விட்டுவிடுங்கள். முஹம்மத் தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5042. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார். அந்த அன்சாரி நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவரைப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமெனக் கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இத்தகைய (இன மாச்சரியங்களைத் தூண்டும்) கூப்பாடுகளை விடுங்கள். இவை நாற்றம் வீசக்கூடியவை" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 17 இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதும் பரிவு காட்டுவதும் தோள் கொடுத்து ஒத்துழைப்பதும்.
5043. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (ஒத்துழைக்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். கட்டடத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுசேர்க்கிறது.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5044. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதிலும் கருணை புரிவதிலும் பரிவு காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்களின் நிலையானது, ஓர் உடலின் நிலையைப் போன்றதாகும். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால், அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கின்றன. அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சலும் கண்டுவிடுகிறது.
இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45