பாடம் : 17 இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஸைனப் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4847. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியரான எங்களிடம்), "(என் மரணத்திற்குப்பின்) உங்களில் கை நீளமானவரே என்னிடம் முதலில் வந்து சேருவார்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியர் (ஒரு குச்சியை எடுத்து), தங்களில் கை நீளமானவர் யார் என்று அளந்துபார்க்கலாயினர். (உண்மையில்) எங்களில் ஸைனப் (ரலி) அவர்களே கை நீளமானவராய் இருந்தார். ஏனெனில், அவர்தான் கைத்தொழில் செய்து, (அதிகமாக) தர்மம் செய்யக்கூடியவராக இருந்தார்.
அத்தியாயம் : 44
பாடம் : 18 உம்மு அய்மன் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4848. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்.
உம்மு அய்மன் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்தார்கள். அதில் ஏதோ குடிபானம் இருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருப்பதைக் கண்டார்களோ, அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அ(ந்தப் பானத்)தை விரும்பவில்லையோ தெரியவில்லை. (அதை அவர்கள் பருக மறுத்துவிட்டார்கள்.)
அதற்காக உம்மு அய்மன் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உரத்த குரலில் கோபமாகக் கடிந்துகொண்டார்கள்.
அத்தியாயம் : 44
4849. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், "நம்மை (அம்மையார்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்துவந்ததைப் போன்று நாமும் சந்தித்துவருவோம்" என்று கூறினார்கள்.
அவ்வாறே உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், "ஏன் அழுகிறீர்கள்? (நம்மிடம் இருப்பதைவிட) அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?" என்று கேட்டார்கள்.
அதற்கு உம்மு அய்மன் (ரலி) அவர்கள், "அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக, (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்றுவிட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)" என்று கூறி, அவர்கள் இருவரையும் அழச்செய்துவிட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர்.
அத்தியாயம் : 44
பாடம் : 19 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் தாயார் உம்மு சுலைம் (ரலி), பிலால் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்.
4850. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களைத் தவிர, தம் துணைவியரல்லாத வேறெந்த (அந்நியப்) பெண்களிடமும் (அவர்களது இல்லங்களுக்குச்) செல்லமாட்டார்கள். என் தாயாரின் இல்லத்திற்கு மட்டுமே செல்வார்கள்.
நபியவர்களிடம் இது குறித்துக் கேட்கப்பட்டபோது, "நான் உம்மு சுலைமிடம் பரிவு காட்டுகிறேன். அவருடைய சகோதரர் (ஹராம் பின் மில்ஹான் - ரலி) என்னு(டைய பிரசாரப் படையினரு)டன் இருந்தபோது, (பிஃரு மஊனா எனுமிடத்தில்) கொல்லப்பட்டார்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 44
4851. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (கனவில்) சொர்க்கத்தில் நுழைந்தேன். அங்கு ஒரு காலடிச் சப்தத்தைக் கேட்டேன். அப்போது "இது யார்?" என்று கேட்டேன். அ(ங்கிருந்த வான)வர்கள், "இவர்தான் அனஸ் பின் மாலிக் அவர்களின் தாயார் ஃகுமைஸா பின்த் மில்ஹான்" என்று பதிலளித்தனர்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 44
4852. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு (கனவில்) சொர்க்கம் காட்டப்பட்டது. அங்கு நான் அபூதல்ஹா அவர்களின் துணைவியாரை (உம்மு சுலைமை)க் கண்டேன். பிறகு எனக்கு முன்னால் மெல்லிய காலடியோசையைச் செவியுற்றேன். அங்கு (யார் என்று பார்த்தபோது) பிலால் அவர்கள் இருந்தார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 20 அபூதல்ஹா அல்அன்சாரீ (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4853. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்கு (அவர்களின் இரண்டாவது கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் மூலம் பிறந்த மகனொருவர் இறந்துவிட்டார். அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தம் குடும்பத்தாரிடம், "(என் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், அவருடைய மகன் (இறந்ததைப்) பற்றி நானாகச் சொல்லாத வரையில் நீங்கள் சொல்ல வேண்டாம்" என்று கூறினார்கள். (வெளியூர் சென்றிருந்த) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (வீட்டுக்கு) வந்தபோது, அவருக்கு அருகில் என் தாயார் இரவு உணவை வைத்தார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள் உணவை உண்டார்கள்; பருகினார்கள்.
பிறகு உம்மு சுலைம் (ரலி) அவர்கள் (துயரத்தை மறைத்துக்கொண்டு) முன்பு எப்போதும் அலங்கரித்துக் கொள்வதைவிட அழகாகத் தம் கணவருக்காகத் தம்மை அலங்காரம் செய்துகொண்டார்கள். பிறகு இருவரும் தாம்பத்திய உறவில் ஈடுபட்டனர்.
கணவரின் பசி அடங்கி, தம்மிடம் (தேவையானதை) அனுபவித்துக்கொண்டதைக் கண்ட போது, "அபூதல்ஹா அவர்களே! ஒரு கூட்டத்தார் தம் பொருட்களை ஒரு வீட்டாரிடம் இரவலாகக் கொடுத்திருந்து, பிறகு அவர்கள் தாம் இரவலாகக் கொடுத்துவைத்திருந்த பொருட்களைத் திரும்பத்தருமாறு கேட்கும்போது அவர்களிடம் (திருப்பித் தரமுடியாது என) மறுக்கும் உரிமை அவ்வீட்டாருக்கு உண்டா?" என்று கேட்டார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள், "இல்லை" என்று கூறினார்கள்.
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் (அபூதல்ஹா (ரலி) அவர்களிடம்), "அவ்வாறாயின், தங்கள் மகனுக்காக (அல்லாஹ்விடம்) நன்மையை எதிர்பாருங்கள்" என்று கூறினார்கள். (தம்முடைய மகன் இறந்துவிட்டதைப் புரிந்துகொண்ட) அபூதல்ஹா (ரலி) அவர்கள் கோபப்பட்டார்கள். "நான் (இன்பத்தில்) தோய்ந்திருக்கும்வரை (இதைப் பற்றி என்னிடம் சொல்லாமல்) விட்டுவிட்டு, இப்போது என் மகனைப் பற்றிச் சொல்கிறாயே!" என்று கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, நடந்ததை அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கடந்த இரவில் (நிகழ்ந்த உறவில்) அல்லாஹ் உங்கள் இருவருக்கும் வளம் புரிவானாக!" என்று சொன்னார்கள். பின்னர் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கர்ப்பமுற்றார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அவர்களுடன் உம்மு சுலைம் (ரலி) அவர்களும் இருந்தார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தை முடித்துக்கொண்டு மதீனாவுக்கு வந்தால் இரவு நேரத்தில் தமது வீட்டுக்குச் செல்ல மாட்டார்கள்) அவ்வழக்கப்படியே அவர்கள் மதீனாவை நெருங்கியபோது உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குப் பிரசவ வலி வந்துவிட்டது. இதனால் ஊருக்குள் செல்ல முடியாமல் அபூ தல்ஹா (ரலி) அவர்கள் தடுக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனா) சென்றார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள், "என் இறைவா! உன் தூதர் (ஸல்) அவர்கள் (ஊரிலிருந்து) புறப்பட்டுச் செல்லும்போது அவர்களுடன் நானும் புறப்பட்டுச் செல்வதும், அவர்கள் திரும்பி (ஊருக்குள்) நுழையும்போது அவர்களுடன் நானும் நுழைவதும்தான் எனக்கு விருப்பமானது என்பதை நீ அறிவாய். ஆனால், (இப்போது) நான் ஊருக்குள் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுவிட்டேன். இதை நீயே பார்க்கிறாய்" என்று பிரார்த்தித்தார்கள்.
அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "அபூதல்ஹா அவர்களே! நான் உணர்ந்துவந்த (வலி) எதையும் (இப்போது) நான் உணரவில்லை" என்று கூறிவிட்டு, "நீங்கள் செல்லுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் சென்றோம்.
அவ்விருவரும் ஊருக்குள் நுழைந்தபோது என் தாயாருக்கு (மீண்டும்) பிரசவ வலி ஏற்பட்டு, அவர் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தார். அப்போது என்னிடம் என் தாயார், "அனஸே! இந்தக் குழந்தையை நீ காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசெல்லும் வரையில் அவனுக்கு யாரும் பாலூட்டிவிட வேண்டாம்" என்று கூறினார்கள்.
அவ்வாறே காலை நேரமானதும், நான் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடையாளமிடும் கருவியுடன் (தமது ஒட்டகத்திற்கு அடையாளமிட்டுக்கொண்டு) இருப்பதை நான் கண்டேன்.
என்னை அவர்கள் கண்டதும், "உம்மு சுலைமுக்குக் குழந்தை பிறந்துவிட்டது போலும்!" என்றார்கள். நான் "ஆம்" என்றேன். உடனே அவர்கள் அடையாளமிடும் கருவியை (கீழே) வைத்து விட்டார்கள். நான் குழந்தையைக் கொண்டுபோய் அவர்களது மடியில் வைத்தேன்.
அப்போது அவர்கள் மதீனாவின் (உயர் ரகப் பேரீச்சம் பழமான) "அஜ்வா"க்களில் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி,அதைத் தமது வாயிலிட்டு நன்றாக மென்று கூழாக்கி, குழந்தையின் வாயில் இட்டார்கள். குழந்தை நாக்கைச் சுழற்றி அதைச் சுவைக்கலாயிற்று.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்சாரிகளுக்குப் பேரீச்சம் பழத்தின் மீதுள்ள விருப்பத்தைப் பாருங்கள்" என்று கூறிவிட்டு, குழந்தையின் முகத்தைத் தடவி அதற்கு "அப்துல்லாஹ்" எனப் பெயர் சூட்டினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அபூதல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் இறந்துவிட்டார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
பாடம் : 21 பிலால் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4854. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அதிகாலைத் தொழுகையின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், "பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாக நீர் கருதிச் செய்துவரும் நற்செயல் ஒன்றைப் பற்றிக் கூறுவீராக. ஏனெனில், சொர்க்கத்தில் உமது காலணி ஓசையை எனக்கு முன்னால் நான் செவியுற்றேன்" என்று சொன்னார்கள்.
அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "நான் இஸ்லாத்தில் இணைந்தபிறகு பயனுள்ளதாகக் கருதி அப்படி (பிரமாதமாக) எந்த நற்செயலையும் செய்யவில்லை. ஆயினும், நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் முழுமையாக அங்கத் தூய்மை (உளூ) செய்தாலும், அந்த அங்கத் தூய்மை மூலம் நான் தொழ வேண்டும் என அல்லாஹ் என் விஷயத்தில் விதித்துள்ள அளவுக்கு (கூடுதல் தொழுகையை)த் தொழாமல் இருந்ததில்லை. (இதுவே இஸ்லாத்தில் நான் செய்த பயனுள்ள நற்செயலாகக் கருதுகிறேன்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 22 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) மற்றும் அவர்களுடைய தாயார் ஆகியோரின் சிறப்புகள்.
4855. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"யார் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்கள் (தடை செய்யப் பட்டதை முன்பு) உட்கொண்டதால் அவர்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. ஆனால், அவர்கள் (இறைவனை) அஞ்சி, (முழுமையாக) இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து, பின்னரும் (இறைவனை) அஞ்சி இறைநம்பிக்கை(யில் நிலையாக இருந்து)கொண்டு, பின்னரும் (இறைவனை) அஞ்சி நன்மை செய்திருக்க வேண்டும். (இவ்வாறு) நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான்" (5:93) எனும் இந்த இறைவசனம் முழுமையாக அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "நீங்களும் அவர்களில் ஒருவர்தான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4856. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் என் சகோதரர் ஒருவரும் யமன் (ஏமன்) நாட்டிலிருந்து வந்து (மதீனாவில்) சிறிது காலம் (தங்கி) இருந்தோம். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் அவருடைய தாயாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய வீட்டினுள்) அதிகமாகச் சென்றுவருவதையும் அவர்களுடனேயே எப்போதும் இருப்பதையும் கண்டு, அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றே நாங்கள் கருதினோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நானும் என் சகோதரர் ஒருவரும் யமன் நாட்டிலிருந்து (மதீனாவுக்கு) வந்தோம்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
4857. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூமூசா (ரலி) அவர்கள், "நான் (யமன் நாட்டிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரில் ஒருவர் என்றே கருதினேன்" என்றோ அல்லது இதைப் போன்றோ கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4858. அபுல்அஹ்வஸ் (அவ்ஃப் பின் மாலிக் - ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் இறந்த போது நான் அபூமூசா (ரலி), அபூமஸ்ஊத் (ரலி) ஆகியோருடன் இருந்தேன். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம், "இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தமக்குப்பின் தம்மைப் போன்ற ஒருவரை விட்டுச்சென்றுள்ளார்கள் என நீங்கள் கருதுகிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு மற்றவர், "அவ்வாறு (யாரையும் அவர் விட்டுச்செல்லவில்லை என்று) நீங்கள் சொன்னால், (அது தவறாகாது. ஏனெனில்,) நாம் திரையிடப்பட்டு (நபியவர்களின் இல்லத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு) இருந்தபோது, அவர் (மட்டுமே) உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்தார். நாம் வெளியூரிலிருந்தபோது அவர் (உள்ளூரில் நபியவர்களுக்கு) அருகில் இருந்தார்" என்று சொன்னார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4859. அபுல் அஹ்வஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் ஒரு நாள்) நாங்கள் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மாணவர்கள் சிலருடன் அபூமூசா (ரலி) அவர்களுடைய இல்லத்தில் இருந்தோம். அப்போது அம்மாணவர்கள் (இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிமிருந்து கேட்டு எழுதிவைத்திருந்த) குர்ஆன் பிரதியொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பிறகு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் எழுந்தார்கள். அப்போது அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்குப்பின் இதோ நிற்கிறாரே இவரைவிட, அல்லாஹ் இறக்கிய (வேதத்)தை நன்கு அறிந்த ஒருவரை விட்டுச்செல்ல வில்லை" என்று கூறினார்கள்.
உடனே அபூமூசா (ரலி) அவர்கள், "நீங்கள் இவ்வாறு கூறினால், அது சரிதான். (ஏனெனில்,) நாம் (நபியவர்களுடன்) இல்லாதபோது இவர் (நபியவர்களுடன்) இருந்துவந்தார். நாம் திரையிடப்பட்டு (நபியின் இல்லத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டு) இருந்தபோது இவர் உள்ளே அனுமதிக்கப்பட்டுவந்தார்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஓர் அறிவிப்பில் "நான் அபூ மூசா (ரலி) அவர்களிடம் சென்றேன். அங்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),அபூமூசா (ரலி) ஆகிய இருவரையும் கண்டேன்..." என்று காணப்படுகிறது.
மற்ற அறிவிப்புகளில், "நான் ஹுதைஃபா (ரலி), அபூமூசா (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன்" என்று ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆனால், முந்தைய ஹதீஸே முழுமையானதும் கூடுதல் தகவல் உள்ளதும் ஆகும்.
அத்தியாயம் : 44
4860. ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "யார் மோசடி செய்கிறாரோ அவர், தாம் மோசடி செய்தவற்றுடன் மறுமை நாளில் வருவார்" (3:161) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டி விட்டு, "யாருடைய ஓதல் முறைப்படி நான் ஓத வேண்டுமெனக் கூறுகிறீர்கள்? நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களை ஓதிக்காட்டியுள்ளேன்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள்,அவர்களிலேயே நான்தான் இறைவேதத்தை நன்கு கற்றவன் என்பதை அறிந்துள்ளார்கள். என்னைவிட (இறைவேதத்தை) நன்கு அறிந்த ஒருவர் இருக்கிறார் என நான் அறிந்தால், (அவர் எங்கு இருந்தாலும் சரி) அவரை நோக்கி நான் பயணம் மேற்கொள்வேன்" என்று கூறினார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் கூடியிருந்த (அந்த) அவையில் வீற்றிருந்தேன். அவர்களில் எவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை; அதற்காக அவரைக் குறை கூறவுமில்லை.
அத்தியாயம் : 44
4861. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஏக இறை)வன் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்திலுள்ள ஒவ்வோர் அத்தியாயமும் அது எங்கே அருளப்பெற்றது என்பதை நான் நன்கு அறிவேன்; ஒவ்வொரு வசனமும் எது தொடர்பாக அருளப்பெற்றது என்பதையும் நான் நன்கு அறிவேன்.
என்னைவிட அல்லாஹ்வின் வேதத்தை நன்கறிந்தவர் யாரேனும், ஒட்டகம் சென்றடையும் தூரத்தில் இருந்தால், நான் (அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொள்வதற்காக) அவரை நோக்கி நிச்சயம் பயணம் புறப்பட்டுவிடுவேன்.
இதை மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 44
4862. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சென்று "அவர்களுடன்" அல்லது "அவர்களுக்கு அருகில்" (இப்னு நுமைரின் அறிவிப்பிலுள்ள ஐயம்) பேசிக்கொண்டிருப்போம்.
ஒரு நாள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைப் பற்றிப் பேசினோம். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "நீங்கள் ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். (அவர் எத்தகைய மனிதரென்றால்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (1) "உம்மு அப்தின் புதல்வர் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்), (2) முஆத் பின் ஜபல், (3)உபை பின் கஅப், (4) அபூஹுதைஃபாவின் முன்னாள் அடிமையான சாலிம் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளுங்கள்" என்று சொல்லி, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களையே முதலாவதாகக் குறிப்பிட்டர்கள். நான் அதைக் கேட்ட பிறகு அவரை என்றென்றும் நேசித்துக்கொண்டிருக்கிறேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4863. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள்) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைப் பற்றி ஏதோ பேசிக்கொண்டோம்.
அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "அந்த மனிதர் எத்தகையவரென்றால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு அப்தின் புதல்வர் (இப்னு மஸ்ஊத்), உபை பின் கஅப், ஹுதைஃபாவின் முன்னாள் அடிமையான சாலிம், முஆத் பின் ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளுங்கள்" என்று சொல்லி, இப்னு மஸ்ஊத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதை நான் கேட்டேன். அப்போதிருந்து அவரை என்றென்றும் நேசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், உபை பின் கஅபுக்குமுன் முஆத் பின் ஜபல் அவர்களது பெயர் இடம்பெற்றுள்ளது. அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் முஆத் பின் ஜபல் அவர்களுக்குமுன் உபை பின் கஅப் அவர்களது பெயர் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீ அதீ (ரஹ்), முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்புகளில் ஷுஅபா (ரஹ்) அவர்கள் அந்நால்வரை வரிசைப்படுத்திக் கூறியது தொடர்பாக வித்தியாசமாக அறிவித்துள்ளனர்.
அத்தியாயம் : 44
4864. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுக்கு அருகில் மக்கள் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களைப் பற்றிப் பேசினர். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "அவர் எத்தகைய மனிதரென்றால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இப்னு மஸ்ஊத், ஹுதைஃபாவின் முன்னாள் அடிமையான சாலிம், உபை பின் கஅப், முஆத் பின் ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அதைக் கேட்டதிலிருந்து என்றென்றும் அவரை நேசிக்கலானேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் (இறுதியில் சொல்லப்பட்ட) இவ்விருவரையுமே முதலில் அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்கள். "அவ்விருவரில் முதலில் யாரைச் சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை" என்று ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 23 உபை பின் கஅப் (ரலி) மற்றும் அன்சாரிகளில் ஒரு குழுவினரின் சிறப்புகள்.
4865. கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. முஆத் பின் ஜபல் 2. உபை பின் கஅப் 3. ஸைத் பின் ஸாபித் 4. அபூஸைத் (ரலி) ஆகியோர்தான் அவர்கள்" என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "அபூஸைத் என்பவர் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 44
4866. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆனை (மனனம் செய்து) திரட்டியவர்கள் யார்?" என்று கேட்டேன்.
"அவர்கள், நால்வர்: 1. உபை பின் கஅப். 2. முஆத் பின் ஜபல். 3. ஸைத் பின் ஸாபித். 4. அன்சாரிகளில் ஸைத் எனப்படும் ஒரு மனிதர்" என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 44