4384. லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்ஹம்வு" என்பது கணவருடைய சகோதரர், கணவருடைய தந்தையின் சகோதரரின் புதல்வர் போன்ற உறவினர்களைக் குறிக்கும்.
அத்தியாயம் : 39
4385. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த (ஆண்கள்) சிலர் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) (அவர்கள் தனிமையில் இருந்தபோது) அவர்களிடம் வந்தனர். அப்போது அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் வீட்டினுள் நுழைந்தார்கள். அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (தனிமையிலிருந்த தம் துணைவியாரிடம்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் வெறுப்படைந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தெரிவித்துவிட்டு, "(ஆயினும்) நான் (என் துணைவி விஷயத்தில்) நல்லதையே கருதுகிறேன்" என்று அபூபக்ர் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை அல்லாஹ் நிரபராதியாக்கிவிட்டான்" என்று கூறிவிட்டு, பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று, "இன்றைய தினத்திற்குப்பின் எந்த ஆணும் தனிமையில் இருக்கும் எந்தப் பெண்ணிடமும் செல்ல வேண்டாம்;அவனுடன் மற்ற ஓர் ஆணோ, இரு ஆண்களோ இருந்தால் தவிர" என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 9 ஒருவர் தம் மனைவியுடனோ அல்லது மணமுடிக்கத் தகாத நெருங்கிய பெண் உறவினர் ஒருவருடனோ தனிமையில் இருப்பதை யாரேனும் பார்த்தால் "இவர் (எனக்கு) இன்ன (உறவுடைய) பெண்" என்று கூறி, கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும்.
4386. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருடன் இருந்தார்கள். அப்போது அவர்களைக் கடந்து ஒரு மனிதர் சென்றார். நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரை அழைத்தார்கள். அவர் வந்ததும், "இன்ன மனிதரே! இவர் என்னுடைய இன்ன துணைவி ஆவார்" என்று கூறினார்கள். அப்போது அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் யாரைச் சந்தேகித்தாலும் தங்களைச் சந்தேகிக்கப்போவதில்லை" என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 39
4387. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ரமளானின் இறுதிப் பத்து நாட்களில்) "இஃதிகாஃபி"ல் இருந்தபோது, அவர்களைச் சந்திப்பதற்காக இரவு நேரத்தில் நான் சென்றேன். அவர்களிடம் பேசிவிட்டு நான் திரும்பிச் செல்வதற்காக எழுந்தபோது, என்னை வீட்டுக்கு அனுப்புவதற்காக நபி (ஸல்) அவர்களும் எழுந்தார்கள். அப்போது உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களது இல்லத்திலேயே என் வசிப்பிடம் இருந்தது.
அப்போது அன்சாரிகளில் இருவர் (எங்களைக்) கடந்து சென்றனர். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களைக் கண்டதும் விரைவாக நடந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "சற்று நில்லுங்கள். இவர் (என் துணைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை ஆவார்" என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் இருவரும், "அல்லாஹ் தூயவன்! அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்!)" என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான். அவன் உங்கள் உள்ளங்களில் தீய எண்ணத்தைப் போட்டுவிடுவானோ என்று நான் அஞ்சினேன்" என்றோ, அல்லது "எதையேனும் போட்டுவிடுவான்" என்றோ சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4388. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் இறுதிப்பத்து நாட்களில் பள்ளிவாசலில் "இஃதிகாஃப்" இருந்தபோது,அவர்களைச் சந்திப்பதற்காக நான் (பள்ளிவாசலுக்குச்) சென்றேன். (அந்த இரவில்) சிறிது நேரம் பேசிவிட்டு நான் திரும்பிச் செல்வதற்காக எழுந்தேன். என்னை வீட்டுக்கு அனுப்புவதற்காக நபி (ஸல்) அவர்களும் எழுந்தார்கள்... பிறகு மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளது.
ஆயினும், அதில் "ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களை எல்லாம் சென்றடைகிறான்" என்று இடம்பெற்றுள்ளது. "ஓடுகிறான்" எனும் வாசகம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 39
பாடம் : 10 ஓர் அவைக்குச் செல்பவர், அங்கு இடைவெளி ஏதேனும் இருக்கக் கண்டால் அதில் அமர்ந்துகொள்ளலாம். இல்லாவிட்டால், பின்வரிசையிலேயே அமர வேண்டும்.
4389. அபூவாகித் அவ்ஃப் பின் அல்ஹாரிஸ் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். மற்றொருவர் (கண்டுகொள்ளாமல்) சென்றுவிட்டார்.
(உள்ளே வந்த) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீற்றிருந்த அவைக்கு) முன்னால் வந்து நின்றார்கள். அவர்களில் ஒருவர் வட்டமான அந்த அவையில் இடைவெளி இருப்பதைக் கண்டு அதில் அமர்ந்துகொண்டார். மற்றொருவர் பின்வரிசையில் அமர்ந்துகொண்டார். மூன்றாமவரோ திரும்பிப் போய்க்கொண்டிருந்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம் பேசி) முடித்ததும், "இம்மூவரைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவரோ, அல்லாஹ்விடம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ (மக்களைத் தாண்டிச் செல்ல) வெட்கப்பட்டார். அல்லாஹ்வும் அவர் விஷயத்தில் (அவரைத் தண்டிக்க) வெட்கப் பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்தினார். எனவே, அல்லாஹ்வும் அவரை அலட்சியப் படுத்தினான்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூவாகித் அல்லைஸீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 11 ஒரு மனிதர் முந்திச் சென்று தமக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருக்கும் போது, அவ்விடத்திலிருந்து அவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும்.
4390. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டுப் பிறகு அந்த இடத்தில் அமரவேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4391. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுப்பிவிட்டு, பிறகு அந்த இடத்தில் அமரவேண்டாம். மாறாக, நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கு இடமளியுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "மாறாக, நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கு இடமளியுங்கள்" என்பது இடம் பெறவில்லை. அவற்றில் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் (நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம்) வெள்ளிக்கிழமை அன்றா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "வெள்ளிக்கிழமை அன்றும் அது அல்லாத மற்ற சமயங்களிலும்தான் என்று விடையளித்தார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4392. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரை எழுப்பிவிட்டு, அவர் அமர்ந்திருக்கும் இடத்தில் அமர வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) இப்னு உமர் (ரலி) அவர்கள் தமக்காக யாரேனும் அவரது இடத்திலிருந்து எழுந்(து இடமளித்)தால் அங்கு அவர்கள் அமரமாட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4393. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை அன்று உங்களில் ஒருவர், தம் சகோதரர் அமர்ந்த இடத்தில் தாம் அமர்வதற்காக அவரை எழுப்பிவிட்டு அங்கு அமர வேண்டாம். மாறாக, "(நகர்ந்து) இடமளியுங்கள்" என்று கூறட்டும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 12 ஒருவர் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டுத் திரும்பி வந்தால், அவரே அந்த இடத்திற்கு உரியவர் ஆவார்.
4394. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டுத் திரும்பி வந்தால், அவரே அந்த இடத்திற்கு உரியவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூஅவானா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஒருவர் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டு..." என்று இடம்பெற்றுள்ளது. (அதில் "உங்களில் ஒருவர்" எனும் குறிப்பு இல்லை.)
அத்தியாயம் : 39
பாடம் : 13 அந்நியப் பெண்கள் உள்ள இடத்திற்கு அலிகள் செல்ல வந்துள்ள தடை.
4395. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஆணோ பெண்ணோ அல்லாத) அலி ஒருவர் என் அருகில் இருந்துகொண்டிருந்தார். அப்போது வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இருந்தார்கள். அப்போது அந்த அலி என் சகோதரரிடம், "அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவே! நாளை உங்களுக்கு "தாயிஃப்" நகரத்தின் மீது அல்லாஹ் வெற்றியளித்தால், ஃகைலானின் மகளை உனக்கு நான் காட்டுகிறேன். (அவளை மணந்துகொள்.) ஏனெனில், அவள் முன்பக்கம் நாலு (சதை மடிப்புகளு)டனும் பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்" என்று சொன்னார்.
அதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அலிகளான) இவர்கள் (அந்நியப் பெண்களான) உங்களிடம் வர வேண்டாம்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4396. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) அலி ஒருவர் வருவார். அவர் பாலுறவு வேட்கையில்லாதவர்களில் ஒருவர் என்றே கருதிவந்தார்கள். ஒரு நாள் அவர் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஒருவரிடம் இருந்தபோது, அங்கு நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அந்த அலி ஒரு பெண்ணைப் பற்றி வர்ணித்துக் கொண்டிருந்தார். "அவள் வந்தால் நாலு (சதை மடிப்புகளு)டன் வருவாள். போனால் எட்டு (சதை மடிப்புகளு)டன் போவாள்" என்று அவர் சொன்னார்.
நபி (ஸல்) அவர்கள், "இவர் இங்குள்ள (பெண்களின்) நிலைமை பற்றியும் அறிவார் என்று நான் ஏன் கருதக்கூடாது? (அலிகளான) இவர்கள் உங்களிடம் ஒருபோதும் வர வேண்டாம்" என்று கூறினார்கள். எனவே, அவரை(ப் பெண்களைவிட்டு)த் தடுத்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 14 சாலையில் களைப்புற்றுவிட்ட அந்நியப் பெண்ணை, ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்வது செல்லும்.
4397. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் (மக்காவிலிருந்தபோதே) மணந்துகொண்டார். இந்தப் பூமியில் அவருக்கு அவரது குதிரையை(யும் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும்) தவிர வேறு எந்தச் சொத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை.
அந்தக் குதிரைக்கு நான் தீனி போடுவேன்; அதைப் பராமரிக்கும் பொறுப்புகளை நானே கவனித்துக்கொள்வேன்; (அதற்குத்) தண்ணீர் புகட்டுவேன்; அதை ஓட்டிச் செல்வேன்; தண்ணீர் இரைக்கும் அவரது ஒட்டகத்துக்காகப் பேரீச்சங் கொட்டைகளை இடித்து, அதற்கு ஊட்டுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரது தோல் கமலையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத்தெரியாது. என் அண்டை வீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத்தருவார்கள். அப்பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாக ஒதுக்கிய நிலத்திலிருந்து நானே பேரீச்சங் கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலைமீது வைத்துச் சுமந்து வருவேன். அந்த நிலம் (என் வீட்டிலிருந்து) இரண்டு மைல் (3.5 கி.மீ) தொலைவில் இருந்தது.
ஒரு நாள் நான் பேரீச்சங் கொட்டைகளை என் தலைமீது சுமந்து வந்துகொண்டிருந்தேன். (வழியில்) நான், (என் சகோதரி ஆயிஷாவின் கணவரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களுடன் அவர்களுடைய தோழர்கள் சிலரும் இருந்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். என்னைத் தமக்குப் பின்னால் (வாகனத்தில்) அமர்த்திக்கொள்வதற்காக "இஃக், இஃக்" என்று சொல்லித் தமது ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால், நான் அவர்களது ஒட்டகத்தில் ஏறிக்கொள்ளவில்லை.)
(நான் வீட்டுக்கு வந்து என் கணவர் ஸுபைர் (ரலி) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்துவிட்டு) "நான் வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தை நான் அறிந்துள்ளேன்" என்று கூறினேன். அதற்கு என் கணவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதைவிடப் பேரீச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்ததுதான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது" என்று கூறினார்.
(இவ்வாறாக வீட்டுப் பணிகளில் பெரும்பகுதியை நானே மேற்கொண்டுவந்தேன்.) இறுதியாக (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு ஓர் (அடிமைப் பெண்) ஊழியரை அனுப்பிவைத்தார்கள். அந்த ஊழியர் குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். என்னவோ எனக்கு விடுதலை கிடைத்தது போல் இருந்தது.
அத்தியாயம் : 39
4398. அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களின் வீட்டுப் பணிகளைக் கவனித்துவந்தேன். என் கணவரிடம் குதிரையொன்று இருந்தது. அந்தக் குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பைப் போன்று வேறெந்தப் பணியும் எனக்குக் கடினமானதாக இருக்கவில்லை. அதற்காக நானே புற்பூண்டுகள் திரட்டுவேன்; அதைப் பராமரிப்பேன்; அதை நானே மேய்ப்பேன்.
பிறகு எனக்கு (என் தந்தை அபூபக்ர் மூலம், பெண்) ஊழியர் ஒருவர் கிடைத்தார். நபி (ஸல்) அவர்களிடம் போர்க் கைதிகள் சிலர் வந்தபோது, அவர்களில் (பெண்) ஊழியர் ஒருவரை எனக்கு (என் தந்தை வழியாகக்) கொடுத்தார்கள். அந்தப் பெண் (ஊழியர்) குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதைப் பராமரிக்கும் பொறுப்பிலிருந்து என்னை விடுவித்தார்.
(இந்நிலையில்) ஒரு மனிதர் என்னிடம் வந்து, "அப்துல்லாஹ்வின் அன்னையே! நான் ஓர் ஏழை. நான் தங்கள் வீட்டு நிழலில் வியாபாரம் செய்ய விரும்புகிறேன்" என்று கூறி (அனுமதி கோரி)னார். நான் "உங்களுக்கு அனுமதி அளித்தால் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் அதை மறுப்பார். எனவே, (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் (வீட்டில்) இருக்கும்போது நீங்கள் வந்து (இது போன்று) அனுமதி கேளுங்கள்" என்று கூறினேன்.
அவ்வாறே அம்மனிதர் வந்து, "அப்துல்லாஹ்வின் அன்னையே! நான் ஓர் ஏழை. நான் தங்கள் வீட்டு நிழலில் வியாபாரம் செய்ய விரும்புகிறேன்" என்று கேட்டார். உடனே நான் (அவருக்கு மறுப்புத் தெரிவிப்பது போல்) மதீனாவில் உமக்கு என் வீட்டைத் தவிர வேறிடம் கிடைக்கவில்லையா?" என்று கேட்டேன்.
அப்போது (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் என்னிடம், "உனக்கு என்ன ஆயிற்று? ஓர் ஏழை வியாபாரி (நமது வீட்டு நிழலில்) வியாபாரம் செய்வதை நீ ஏன் தடுக்கிறாய்?" என்று கேட்டார். பிறகு அவர் வியாபாரம் செய்து (நல்ல) வருமானத்தைத் தேடிக் கொண்டார்.
அவருக்கே (எனது) அந்த அடிமைப் பெண்ணை நான் விற்றேன். அந்தக் காசை நான் எனது மடியில் வைத்துக்கொண்டிருந்த போது (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து, "அதை எனக்கு அன்பளிப்பாக வழங்கு" என்று கேட்டார். நான் "இதை ஏற்கெனவே தர்மமாக அளி(க்கத் தீர்மானி)த்து விட்டேன்" என்று கூறினேன்.
அத்தியாயம் : 39
பாடம் : 15 (மூவர் உள்ள இடத்தில் அவர்களில்) ஒருவரை விட்டுவிட்டு, அவரது சம்மதமின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசுவது தடை செய்யப்பட்டதாகும்.
4399. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூவர் இருக்கும்போது ஒருவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பத்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4400. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு, இரண்டுபேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்;நீங்கள் (மூவரும்) மக்களுடன் கலக்கும்வரை. (அவ்வாறு மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் பேசுவது) அ(ந்த மூன்றாம)வரை வருத்தமடையச் செய்யும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4401. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது உங்கள் நண்ப(ர் ஒருவ)ரை விட்டுவிட்டு, இரண்டுபேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம். அ(வ்வாறு பேசுவ)து அவரை வருத்தமடையச் செய்யும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 16 மருத்துவமும் நோயும் ஓதிப்பார்த்தலும்.
4402. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள், "பிஸ்மில்லாஹி யுப்ரீக்க, வ மின் குல்லி தாயின் யஷ்ஃபீக்க, வ மின் ஷர்ரி ஹாசிதின் இதா ஹசத, வ ஷர்ரி குல்லி தீ அய்னின்" என்று ஓதிப்பார்ப்பார்கள்.
(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (ஓதிப் பார்க்கிறேன்). அவன் உங்களுக்கு குணமளிப்பானாக! அனைத்து நோயிலிருந்தும் உங்களுக்குச் சுகமளிப்பானாக. பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது ஏற்படும் தீமையிலிருந்தும் கண்ணேறு உள்ள ஒவ்வொருவரின் தீமையிலிருந்தும் (காப்பானாக!).
அத்தியாயம் : 39
4403. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்(கள் உடல் நலிவுற்றிருந்தபோது அவர்)களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, "முஹம்மதே! உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள். அப்போது, "பிஸ்மில்லாஹி அர்கீக்க, மின் குல்லி ஷைஇன் யுஃதீக்க, மின் ஷர்ரி குல்லி நஃப்சின் அவ் அய்னின் ஹாசிதின், அல்லாஹு யஷ்ஃபீக்க, பிஸ்மில்லாஹி அர்கீக்க" என்று ஓதிப்பார்த்தார்கள்.
(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஒதிப்பார்க்கிறேன். உமக்குத் தொல்லை தரும் அனைத்து அம்சங்களிலிருந்தும், பொறாமை கொள்ளக்கூடிய அனைவரின் அல்லது கண்களின் தீமையிலிருந்தும் உமக்கு அல்லாஹ் நிவாரணமளிப்பானாக. அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதிப்பார்க்கிறேன்.)
அத்தியாயம் : 39