4152. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களுக்குரிய) பேரீச்சம் பழங்கள் கொண்டு வரப்பட்டன. (அவை கிடைத்தவுடன் சரியாக உட்காராமல்கூட) அவற்றை அவர்கள் விரைவாகப் பங்கிட்டுக் கொடுக்கவும் அவற்றை விரைவாக உண்ணவும் ஆரம்பித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 25 பலருடன் சேர்ந்து உண்பவர், மற்றவர்கள் அனுமதித்தால் தவிர, ஒரே தடவையில் இரண்டு பேரீச்சம் பழங்களைச் சேர்த்து உண்ணக்கூடாது.
4153. ஜபலா பின் சுஹைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஹிஜாஸ் பகுதியில்) மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டிருந்த நாளில் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம் பழங்களை வழங்கிவந்தார்கள். அவற்றை நாங்கள் உண்ணும்போது, அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் எங்களைக் கடந்து செல்வார்கள்.
அப்போது அவர்கள், "பேரீச்சம் பழங்களை இரண்டிரண்டாக எடுக்காதீர்கள். ஏனெனில், ஒரே தடவையில் இரண்டு பழங்களை எடுத்து உண்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்; ஒருவர் தம் சகோதரரிடம் (அவ்வாறு சேர்த்து எடுக்க) அனுமதி பெற்றிருந்தால் தவிர" என்று சொல்வார்கள்.
இதன் அறிவிப்பாளரான ஷுஅபா (ரஹ்) அவர்கள், "அனுமதி பெறுதல் தொடர்பான இக்கூற்று, இப்னு உமர் (ரலி) அவர்களின் சொந்தக் கருத்து என்றே நான் கருதுகிறேன்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜபலா பின் சுஹைம் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஷுஅபா (ரஹ்) அவர்களின் (இறுதிக்) கூற்றோ, "அன்றைய நாளில் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டிருந்தது" எனும் விளக்கமோ இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 36
4154. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பலர் கூடியுள்ள ஓர் அவையில்) ஒருவர், தம் சகாக்களிடம் அனுமதி பெறாதவரை இரு பேரீச்சம் பழங்களைச் சேர்த்து உண்ணுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.- இதை ஜபலா பின் சுஹைம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 26 குடும்பத்தாருக்காகப் பேரீச்சம் பழங்கள் உள்ளிட்ட உணவுகளைச் சேமித்து வைத்தல்.
4155. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தக் குடும்பத்தாரிடம் பேரீச்சம் பழங்கள் (சேமித்துவைக்கப்பட்டு) உள்ளனவோ அவர்கள் பசித்திருக்கமாட்டார்கள்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4156. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "ஆயிஷா! பேரீச்சம்பழம் இல்லாத வீட்டாரே பட்டினி கிடக்கும் வீட்டார். ஆயிஷா! பேரீச்சம் இல்லாத வீட்டாரே "பட்டினி கிடக்கும் வீட்டார்" அல்லது "பட்டினிக்குள்ளாகும் வீட்டார்" என்று இரண்டு அல்லது மூன்று தடவை கூறினார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 27 மதீனா பேரீச்சம் பழங்களின் சிறப்பு
4157. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் காலையில் இந்த (மதீனாவின்) இரு மலைகளுக்கிடையே உள்ள பழங்களில் ஏழு பேரீச்சம் பழங்களை உண்கிறாரோ அவருக்கு (அன்று) மாலைவரை எந்த விஷமும் தீங்களிக்காது.- இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4158. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் காலையில் ஏழு "அஜ்வா" (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்கிறாரோ அவருக்கு அன்றைய தினத்தில் (மாலைவரை) எந்த விஷமும் சூனியமும் இடையூறு செய்யாது.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4159. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மதீனாவின்) மேட்டுப் பகுதியில் விளையும் "அஜ்வா" (ரகப்) பேரீச்சம் பழத்தை அதிகாலை உண்பதில் "நிவாரணம்" அல்லது "விஷமுறிவு" உள்ளது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 28 சமையல் காளானின் சிறப்பும் அதைக் கொண்டு கண்ணுக்கு மருந்திடுவதும்.
4160. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4161. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சயீத் பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்: இந்த ஹதீஸை ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தபோது, அப்துல் மலிக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் வழியாக எனக்கு வந்த (முந்தைய) அறிவிப்பை நான் மறுக்கவில்லை.
அத்தியாயம் : 36
4162. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாருக்கு அல்லாஹ் இறக்கிவைத்த "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4163. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான், மூசா (அலை) அவர்களு(டைய சமுதாயத்தாரு)க்கு அல்லாஹ் இறக்கி வைத்த "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4164. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாருக்கு அல்லாஹ் இறக்கிவைத்த "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4165. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.- இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 29 "அல்கபாஸ்" எனும் (மிஸ்வாக்) மரத்தின் கறுப்பு நிற பழத்துடைய சிறப்பு.
4166. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "மர்ருழ் ழஹ்ரான்" எனுமிடத்தில் "அல்கபாஸ்" மரத்தின் பழத்தைப் பறித்துக்கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இதில் கறுப்பு நிறத்தைப் பறியுங்கள்" என்று சொன்னார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஆடு மேய்த்துள்ளீர்கள் போலிருக்கிறதே?" என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம், ஆடு மேய்க்காத இறைத்தூதரும் உண்டா?" என்றோ அது போன்றோ (திருப்பிக்) கேட்டார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 30 சமையல் காடியின் சிறப்பும் அதைக் குழம்பாகப் பயன்படுத்துவதும்.
4167. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"குழம்புகளில்" அல்லது "குழம்பில்" அருமையானது (சமையல்) காடியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 36
4168. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "குழம்புகளில் அருமையானது" என ஐயப்பாடின்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 36
4169. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரிடம் குழம்பு கேட்டார்கள். அதற்கு வீட்டார், "நம்மிடம் காடி மட்டுமே உள்ளது" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள் காடியைக் கொண்டுவரச் சொல்லி அதை(த் தொட்டு)க்கொண்டு உண்ணலானார்கள். மேலும், "குழம்புகளில் அருமையானது காடியாகும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 36
4170. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம், (அங்குள்ள ஒருவர்) ரொட்டித் துண்டைக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள், "குழம்பேதும் இல்லையா?" என்று கேட்டார்கள். வீட்டார், "இல்லை, சிறிது காடியைத் தவிர வேறெதுவுமில்லை" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "காடிதான் குழம்புகளில் அருமையானது" என்று கூறினார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள், "இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதைக் கேட்டதிலிருந்து நான் காடியை விரும்பி(ச் சாப்பிட்டு)க்கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் தல்ஹா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஜாபிர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டதிலிருந்து நானும் காடியை விரும்பி(ச் சாப்பிட்டு)க்கொண்டிருக்கிறேன்.
அத்தியாயம் : 36
4171. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து "குழம்புகளில் அருமையானது காடியாகும்" என்பதுவரை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின் உள்ளவை இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 36