பாடம் : 18 (உணவு உண்டு முடித்ததும்) விரல்களைச் சூப்புவதும், உணவுத் தட்டை வழித்து உண்பதும், கீழே தவறிவிழுந்த உணவுக் கவளத்தில் படும் தூசைத் துடைத்துவிட்டு அதை உண்பதும் விரும்பத்தக்கவை ஆகும். விரல்களைச் சூப்புவதற்கு முன் கையைத் துடைப்பது வெறுக்கத்தக்கதாகும்.
4132. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உட்கொண்டால், அவர் தமது கையைத் தாமே உறிஞ்சாமல் அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத்தராமல் அதை அவர் துடைத்துக்கொள்ள வேண்டாம்.- இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4133. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உட்கொண்டால், அவர் தமது கையைத் தாமே உறிஞ்சாமல் அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத்தராமல் கையைத் துடைத்துக் கொள்ள வேண்டாம். - இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4134. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உணவு உண்ட பின் தம்முடைய மூன்று விரல்களை உறிஞ்சுவதை நான் பார்த்திருக்கிறேன்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "மூன்று" எனும் குறிப்பு இல்லை.
- கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் உணவு உண்பார்கள். (உண்டு முடித்த பின்) கையைத் துடைப்பதற்கு முன் கையை உறிஞ்சுவார்கள்.
அத்தியாயம் : 36
4135. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் உணவு உட்கொள்வார்கள். உண்டு முடித்ததும் அவ்விரல்களை உறிஞ்சுவார்கள்.
இதை அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள், அல்லது அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4136. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (உணவு உண்டு முடித்தவர் தம்) விரல்களை உறிஞ்சுமாறும் தட்டை வழித்து உண்ணுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும், "உணவின் எந்தப் பகுதியில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 36
4137. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரது உணவுக்கவளம் (உண்ணும்போது தவறி) விழுந்துவிட்டால் அவர் அதை எடுத்து, அதில் ஒட்டியிருப்பதை அகற்றி(ச் சுத்தம் செய்து)விட்டு அதை உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம். மேலும், (உண்ட பின்) தம் விரல்களை உறிஞ்சுவதற்கு முன் கைக்குட்டையால் கையைத் துடைத்துவிட வேண்டாம். ஏனெனில், தமது உணவில் எந்தப் பகுதியில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "தமது கையைத் தாமே உறிஞ்சாமல் அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதைக் கைக்குட்டையால் துடைத்துவிட வேண்டாம்" என்பதும் அதற்குப் பின்னுள்ள தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 36
4138. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருடைய ஒவ்வொரு அலுவலிலும் ஷைத்தான் பங்கேற்கிறான். மனிதன் உணவு உண்ணும்போதும் அவன் பங்கேற்கிறான். (உண்ணும்போது) உங்களில் ஒருவரிடமிருந்து உணவுக் கவளம் கீழே விழுந்துவிட்டால், அதில் படுவதை சுத்தப்படுத்தி விட்டு, பிறகு அதை உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம்.
உண்டு முடித்ததும் அவர் தம் விரல்களை உறிஞ்சிக்கொள்ளட்டும். ஏனெனில், அவரது எந்த உணவில் வளம் (பரக்கத்) இருக்கும் என்பதை அவர் அறியமாட்டார்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "உங்களில் ஒருவரிடமிருந்து உணவுக்கவளம் விழுந்துவிட்டால்" என்பதிலிருந்தே ஹதீஸ் ஆரம்பமாகிறது. "உங்களில் ஒருவருடைய ஒவ்வொரு அலுவலிலும் ஷைத்தான் பங்கேற்கிறான்" எனும் ஆரம்பக் குறிப்பு அவற்றில் இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "கை விரல்களை உறிஞ்சிக் கொள்வது" தொடர்பாக இடம்பெற்றுள்ளது. அபூசுஃப்யான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உணவுக் கவளம் விழுந்துவிடுவது" தொடர்பான குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4139. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதேனும் உணவை உண்டால் (இறுதியில்) மூன்று விரல்களை உறிஞ்சிக்கொள்வார்கள். மேலும், "உங்களில் ஒருவரது உணவுக்கவளம் (உண்ணும் போது) கீழே விழுந்துவிட்டால், அதில் படுவதை நீக்கி (சுத்தப்படுத்தி)விட்டு, அதை உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம்" என்றும் அவர்கள் கூறினார்கள்.
இறுதியில் உணவுத் தட்டையும் வழித்து உண்ணுமாறு எங்களுக்கு உத்தரவிட்டார்கள். "ஏனெனில் உங்களின் எந்த உணவில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்" என்றும் கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4140. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் விரல்களை உறிஞ்சிக்கொள்ளட்டும். அவற்றில் எதில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உங்களில் ஒருவர் உணவு உண்டால் (இறுதியில்) உணவுத் தட்டை வழித்து உண்ணட்டும்" என்றும், உங்களின் "எந்த உணவில் வளம் (பரகத்) உள்ளது” அல்லது "(உங்களின் எந்த உணவில்) உங்களுக்கு வளம் வழங்கப்படும்" (என்பதை அவர் அறியமாட்டார்)" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து, அழைக்கப்படாத மற்றொருவரும் வந்துவிட்டால் விருந்தாளி என்ன செய்யவேண்டும் என்பதும், அவ்வாறு பின் தொடர்ந்து வந்தவருக்கு விருந்து கொடுப்பவர் அனுமதி அளிப்பது விரும்பத்தக்கதாகும் என்பதும்.
4141. அபூமஸ்ஊத் உக்பா பின் ஆமிர் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் அபூஷுஐப் எனப்படும் ஒருவர் இருந்தார். அவரிடம் இறைச்சி விற்கும் பணியாளர் ஒருவர் இருந்தார். (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் பசி(யின் குறி)யைக் கண்ட அபூஷுஐப் (ரலி) அவர்கள் தம் பணியாளிடம், "உமக்குக் கேடுதான். ஐந்து பேருக்கு வேண்டிய உணவை நமக்காக நீ தயார் செய்(து வை). ஏனெனில், ஐவரில் ஒருவராக நபி (ஸல்) அவர்களை நான் (விருந்துக்கு) அழைக்கப் போகிறேன்" என்று கூறினார். அவ்வாறே அந்த அடிமையும் உணவு தயாரித்தார்.
பிறகு அபூஷுஐப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ஐவரில் ஒருவராக நபியவர்களையும் விருந்துண்ண அழைத்தார். அவர்களைப் பின்தொடர்ந்து மற்றொரு மனிதரும் வந்தார்.
(அபூஷுஐபின்) வீட்டுவாசலுக்கு வந்த நபி (ஸல்) அவர்கள், "இவர் எங்களைப் பின் தொடர்ந்து வந்துவிட்டார். எனவே,இவருக்கு அனுமதியளிக்க நீங்கள் விரும்பினால் (அவர் விருந்தில் கலந்துகொள்வார்; விருந்தில் கலந்துகொள்ளக்கூடாது என) நீங்கள் விரும்பினால் அவர் திரும்பிச் சென்றுவிடுவார்" என்று கூறினார்கள். அபூஷுஐப் (ரலி) அவர்கள், "இல்லை. அவருக்கு நான் அனுமதியளிக்கிறேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமஸ்ஊத் அல் அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4142. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அண்டை வீட்டுக்காரர் ஒருவர் இருந்தார். பாரசீகரான அவர் நன்கு (மணம் கமழ) குழம்பு சமைக்கக்கூடியவராக இருந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்துவிட்டு அவர்களை அழைப்பதற்காக வந்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் அருகில் பசியோடு இருந்த தம் துணைவி) ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து காட்டி "இவரும் (வரலாமா)?" என்று கேட்டார்கள், அவர் (உணவு குறைவாக இருந்ததால்), "இல்லை (வேண்டாம்)" என்று கூறிவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இல்லை (அவ்வாறாயின் நானும் வரமாட்டேன்)" என்று கூறிவிட்டார்கள்.
அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைப்பதற்காக மறுபடியும் வந்தார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரும் (வரலாமா)?" என்று (ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து) கேட்டார்கள். அப்போதும் அவர் "இல்லை (வேண்டாம்)" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் "(அவ்வாறாயின் நானும்) இல்லை" என்று கூறிவிட்டார்கள்.
அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைப்பதற்காக மறுபடியும் வந்தார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவரும் (வரலாமா)?" என்று (ஆயிஷா (ரலி) அவர்களை சைகை செய்து) கேட்டார்கள். அவர் மூன்றாவது முறை "சரி (வரலாம்)" என்றார். பின்னர் இருவரும் ஒருவரையொருவர் பின்தொடர்ந்து அவரது வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தனர்.
அத்தியாயம் : 36
பாடம் : 20 வீட்டுக்காரரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால், அதை நன்கு உறுதி செய்துகொண்டு மற்றொருவரையும் அழைத்துச் செல்லலாம் என்பதும், பலர் சேர்ந்து உணவு உண்பது விரும்பத்தக்கதாகும் என்பதும்.
4143. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "ஒரு பகல்" அல்லது "ஓர் இரவு" (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்கு, "பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!" என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது" என்று கூறிவிட்டு, "எழுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.
அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், "வாழ்த்துகள்! வருக" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், "அவர் எங்கே?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், "எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்" என்று பதிலளித்தார்.
அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை" என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், "இதை உண்ணுங்கள்" என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்"என்று கூறினார்கள்.
அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அபூபக்ர் (ரலி) அவர்களுடன் உமர் (ரலி) அவர்கள் (ஓரிடத்தில்) அமர்ந்திருந்தபோது, அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, "இங்கு நீங்கள் இருவரும் அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்கு அவ்விருவரும், "தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! பசிதான் எங்களை எங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது" என்று கூறினர்" என ஹதீஸ் துவங்குகிறது. மற்ற நிகழ்வுகள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 36
4144. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ் (போருக்காகக் குழி) தோண்டப்பட்டுக்கொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வயிறு (பசியால்) ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் என் மனைவியிடம் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டியிருந்ததை நான் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உணவு) இருக்கிறதா?" என்று கேட்டேன்.
உடனே என் மனைவி என்னிடம் ஒரு பையைக் கொண்டுவந்தார். அதில் ஒரு "ஸாஉ" அளவு தொலி நீக்கப்படாத கோதுமை இருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக் குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தார். நான் (அறுத்து) முடித்தபோது அவரும் (அரைத்து) முடித்துவிட்டார். மேலும், அதைத் துண்டுகளாக்கி அதற்கான பாத்திரத்தில் இட்டேன்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். என் மனைவி, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப்படுத்திவிட வேண்டாம் ("நம்மிடம் உணவு குறைவாகவே இருக்கிறது" என்று கூறிவிடுங்கள்)" என்று சொல்லியிருந்தார்.
எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று இரகசியமாக "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை அறுத்தோம். எங்களிடம் இருந்த ஒரு "ஸாஉ" அளவு தொலி நீக்கப்படாத கோதுமையை (என் மனைவி) அரைத்து வைத்துள்ளார். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள்" என்று அழைத்தேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரத்த குரலில், "அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "நான் வரும்வரை நீங்கள் பாத்திரத்தை (அடுப்பிலிருந்து) இறக்க வேண்டாம். குழைத்துவைத்துள்ள மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம்" என்று கூறினார்கள். நான் என் இல்லத்திற்கு வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்துக்கொண்டு முன்னால் வந்துகொண்டிருந்தார்கள்.
நான் என் மனைவியிடம் வந்துசேர்ந்தேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நூற்றுக்கணக்கான மக்களுடன் வருவதைப் பார்த்து என் மனைவி கோபமுற்று) "(எல்லாம்) உங்களால்தான்; உங்களால்தான்" என என்னைக் கடிந்துகொண்டார். உடனே நான் "நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்ன விஷயத்தை நான் அவர்களிடம் தெரிவித்துவிட்டேன்" என்று சொன்னேன்.
பிறகு என் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குழைத்த மாவைக் கொண்டு வந்து கொடுத்தார். அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இலேசாக உமிழ்ந்து, பெருக்கம் (பரக்கத்) ஏற்பட பிரார்த்தித்தார்கள். பிறகு (இறைச்சிப்) பாத்திரத்தை நோக்கிச் சென்று, அதில் இலேசாக உமிழ்ந்து பெருக்கம் (பரக்கத்) ஏற்படப் பிரார்த்தித்தார்கள்.
பிறகு (என் மனைவியிடம்), "ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழைத்துக்கொள். உன்னுடன் (சேர்ந்து) அவளும் ரொட்டி சுடட்டும்! உங்கள் (இறைச்சிப்) பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக்கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்துவிடாதே" என்று கூறினார்கள். அ(ங்கு வந்த)வர்கள் ஆயிரம் பேர் இருந்தனர்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் அனைவரும் உண்டுவிட்டு, அந்த உணவை (சிறிதும் குறையாமல்) அப்படியே விட்டுவிட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் பாத்திரம் முன்பு போலவே (சிறிதும் குறையாமல்) சப்தத்துடன் கொதித்துக்கொண்டிருந்தது. மேலும், நாங்கள் குழைத்த மாவும் (சிறிதும் குறைந்துவிடாமல்) முன்பு போலவே ரொட்டியாகச் சுடப்பட்டுக்கொண்டிருந்தது.
அத்தியாயம் : 36
4145. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம் துணைவியும் என் தாயாருமான) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது குரலைப் பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கு இருக்கும்) பசியைப் புரிந்து கொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "ஆம் (இருக்கிறது)" என்று கூறிவிட்டு, தொலி நீக்கப்படாத கோதுமை(யில் தயாரித்த) ரொட்டிகள் சிலவற்றை எடுத்தார்கள்.
பிறகு அவர்கள் தமது துப்பட்டா ஒன்றை எடுத்து, அதன் ஒரு பகுதியில் அந்த ரொட்டிகளைச் சுற்றி எனது ஆடைக்குள் திணித்துவிட்டு, அதன் மற்றொரு பகுதியை எனக்கு மேல்துண்டாகப் போர்த்திவிட்டார்கள். பிறகு என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள்.
நான் அதைக் கொண்டுசென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவர்களுடன் மக்களும் இருந்தனர். நான் (சென்று) அவர்களுக்கு முன்னால் நின்றேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "உணவு உண்ணவா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களிடம் "எழுந்திருங்கள்" என்று சொல்லிவிட்டு, (என் இல்லம் நோக்கி) நடக்கலானார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் நான் சென்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் வந்துகொண்டிருக்கும்) விவரத்தைத் தெரிவித்தேன்.
உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என் தாயாரிடம்), "உம்மு சுலைம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் வந்துவிட்டார்கள். ஆனால், அவர்களுக்கு வேண்டிய உணவு நம்மிடம் இல்லையே!" என்று சொன்னார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்" என்று கூறினார்கள்.
அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தாமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை வரவேற்பதற்காக) நடந்து சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களுடன் வீட்டுக்குள் நுழைந்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்மு சுலைம்! உம்மிடம் இருப்பதைக் கொண்டுவா" என்று சொல்ல, உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி) உத்தரவிட, அவ்வாறே அது பிய்க்கப்பட்டது.
உம்மு சுலைம் (ரலி) அவர்கள், தம்மிடமிருந்த தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை (உருக்கி)க் குழம்பு செய்தார்கள். பிறகு அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவன் நாடிய (பிராத்தனை வரிகள் சில)வற்றைச் சொன்னார்கள்.
பிறகு "பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி அளியுங்கள்" என்று (அபூதல்ஹா (ரலி) அவர்களிடம்) சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி அளித்தார்கள். அவர்கள் (பத்துப் பேர்) வந்து வயிறார உண்டுவிட்டு வெளியேறினார்கள்.
பின்னர், "இன்னும் பத்துப் பேருக்கு அனுமதி அளியுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற,அபூதல்ஹா (ரலி) அவர்களும் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறார உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு "இன்னும் பத்துப் பேருக்கு அனுமதி அளியுங்கள்" என்றார்கள். (இவ்வாறு வந்திருந்த) மக்கள் அனைவரும் வயிறார உண்டார்கள். அப்படி உண்ட மக்கள் எழுபது அல்லது எண்பது பேர் ஆவர்.
அத்தியாயம் : 36
4146. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூதல்ஹா (ரலி) அவர்கள் உணவு தயாரித்துவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைப்பதற்காக என்னை அனுப்பினார்கள். நான் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் இருந்தார்கள். அவர்கள் என்னைப் பார்த்த போது நான் கூச்சப்பட்டேன். நான், "அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தங்களை விருந்துண்ண அழைக்கிறார்கள். அந்த) அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்முடனிருந்த) மக்களிடம், "எழுந்திருங்கள்" என்று சொன்னார்கள். பிறகு (அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து சேர்ந்தபோது) "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு மட்டுமே நான் சிறிதளவு (உணவு) தயாரித்துள்ளேன்" என்று அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த உணவைத் தொட்டு, அதில் பெருக்கம் (பரக்கத்) ஏற்படப் பிரார்த்தித்தார்கள்.
பிறகு, "என் தோழர்களில் பத்துப் பேரை உள்ளே அனுப்புங்கள்" என்று கூறினார்கள். (அவர்கள் உள்ளே வந்ததும்) "உண்ணுங்கள்" என்று கூறிவிட்டு, தம் விரல்களுக்கிடையிலிருந்து எதையோ வெளியாக்கினார்கள். உள்ளே வந்தவர்கள் வயிறார உண்டுவிட்டு வெளியேறிச் சென்றனர். பிறகு "இன்னும் பத்துப் பேரை உள்ளே அனுப்புங்கள்"என்று கூறினார்கள். அவர்களும் வந்து வயிறார உண்டனர்.
இவ்வாறே பத்துப் பேர் உள்ளே வர, பத்துப் பேர் வெளியே போக அவர்களில் ஒருவர்கூட மிஞ்சாமல் அனைவரும் உள்ளே வந்து வயிறார உண்டனர். பிறகு எஞ்சியிருந்த உணவை ஒருங்கிணைத்துப் பார்த்தபோது, அவர்கள் சாப்பிட்டபோது இருந்த அதே அளவில் (சிறிதும் குறையாமல்) அது இருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன. இறுதியில் "பிறகு எஞ்சியிருந்த உணவை எடுத்து ஒன்றுசேர்த்து அதில் பெருக்கம் (பரக்கத்) ஏற்படப் பிரார்த்தித்தார்கள். அது முன்பிருந்ததைப் போன்றே மாறிவிட்டது. பிறகு "இதை வைத்துக்கொள்ளுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அபூதல்ஹா (ரலி) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுக்காக மட்டும் உணவு தயாரிக்கும் படி கூறிவிட்டு, என்னை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள்" என்று ஹதீஸ் துவங்குகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி தொடருகின்றன.
அதில், நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தை (உணவின் மீது) வைத்து அல்லாஹ்வின் பெயர் கூறினார்கள். பிறகு (அபூதல்ஹா (ரலி) அவர்களிடம்) "பத்துப் பேருக்கு அனுமதி அளியுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதியளித்ததும் அவர்கள் (இல்லத்திற்குள்) நுழைந்தனர்.
அப்போது "அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) சொல்லி உண்ணுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற, அவ்வாறே அவர்கள் உண்டனர். இவ்வாறு எண்பது பேரிடமும் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களும் (அபூதல்ஹா (ரலி) அவர்களின்) வீட்டாரும் உண்டுவிட்டு, (மீதி) உணவையும் விட்டுச்சென்றனர் என்று இடம்பெற்றுள்ளது.
- அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு விருந்தளித்த இந்த நிகழ்ச்சி அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம்) வீட்டுவாசலில் நின்றுகொண்டிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துசேர்ந்தார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! சிறிதளவே (உணவுப்) பொருள் இருக்கிறது" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதைக் கொண்டுவாருங்கள். அதில் அல்லாஹ் வளத்தை ஏற்படுத்துவான்" என்று கூறினார்கள் எனக் காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சாப்பிட்டு, வீட்டாரும் சாப்பிட்டு தங்கள் அண்டை வீட்டாருக்கும் கொடுத்தனுப்பும் அளவுக்கு மீதி வைத்தனர்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (ஒருமுறை) அபூதல்ஹா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் படுத்திருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள் புரண்டு புரண்டு படுத்தார்கள். (இதைக் கண்ட) அபூ தல்ஹா (ரலி) அவர்கள் (தம் துணைவி) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் படுத்திருப்பதை நான் கண்டேன். அவர்கள் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பசியோடு இருப்பதாக நான் எண்ணுகிறேன்" என்று கூறியதாக ஹதீஸ் துவங்குகிறது.
மேலும் அதில் "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூதல்ஹா (ரலி), உம்மு சுலைம் (ரலி) மற்றும் அனஸ் (ரலி) ஆகியோரும் உண்டனர். மீதி உணவும் இருந்தது. அதை நாங்கள் எங்கள் அண்டை வீட்டாருக்கு அன்பளிப்பாக வழங்கினோம்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் பிறிதோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது:
நான் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தம் தோழர்களுடன் பேசிக்கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டேன். அப்போது அவர்கள் தமது வயிற்றில் ஒரு துணியைக் கட்டியிருந்தார்கள்.
-அறிவிப்பாளர்களில் ஒருவரான உசாமா பின் ஸைத் (ரஹ்) அவர்கள் "கல்லை வைத்து ஒரு துணியால் கட்டியிருந்தார்கள் (என்று கூறியதாகவே) நான் சந்தேகத்துடன் கருதுகிறேன்" என்று கூறுகிறார்கள்-
உடனே நான் நபித்தோழர்கள் சிலரிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏன் தமது வயிற்றைத் துணியால் கட்டியிருக்கிறார்கள்?" என்று கேட்டேன். தோழர்கள், "பசியால்" என்று பதிலளித்தனர்.
ஆகவே, நான் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் சென்று, - அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் பின்த் மில்ஹானின் கணவர் ஆவார் - "தந்தையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வயிற்றை ஒரு துணியால் கட்டியிருப்பதை நான் கண்டேன். எனவே, அவர்களுடைய தோழர்களில் சிலரிடம் (அதைப் பற்றிக்) கேட்டேன். அதற்கு "பசியால்தான்" என்று அவர்கள் பதிலளித்தனர் என்று சொன்னேன்.
உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் என் தாயாரிடம் சென்று "(உன்னிடம் உணவு) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். என் தாயார் "ஆம். என்னிடம் சில ரொட்டித் துண்டுகளும் பேரீச்சம் பழங்களும் இருக்கின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மட்டும் நம்மிடம் வந்தால் அவர்களுக்கு நம்மால் வயிறார உணவளிக்க முடியும். அவர்களுடன் வேறு யாரேனும் வந்தால் எல்லாருக்கும் போதாது..." என்று கூறினார். மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு தொடருகின்றன.
- அபூதல்ஹா (ரலி) அவர்கள் அளித்த விருந்து தொடர்பான மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் மேற்கண்ட ஹதீஸ்களில் காணப்படும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 36
பாடம் : 21 குழம்பு சாப்பிடலாம்; சுரைக்காயை உண்பது விரும்பத்தக்கதாகும்; பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் விருந்தினராய் இருந்தாலும், விருந்தளிப்பவர் வெறுக்க மாட்டார் என்றால் அவர்களில் சிலர் வேறுசிலருக்கு முன்னுரிமை அளிக்கலாம்.
4147. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தையற்காரர் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தாம் தயாரித்த உணவி(னை உண்பத)ற்காக அழைத்தார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அந்த உணவை உண்ணச் சென்றேன். அந்தத் தையற்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகே தொலி நீக்கப்படாத (வாற்)கோதுமை ரொட்டியையும், சுரைக்காயும் உப்புக்கண்டமும் உள்ள குழம்பையும் வைத்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டைச் சுற்றிலும் சுரைக்காயைத் துழாவுவதை நான் கண்டேன். அன்றிலிருந்து சுரைக்காயை நானும் விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.
அத்தியாயம் : 36
4148. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (விருந்துக்கு) அழைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது சுரைக்காய் உள்ள குழம்பு கொண்டுவரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த சுரைக்காயை உண்ணலானார்கள். அது அவர்களுக்கு விருப்பமானதாயிருந்தது. அதன் பின்னர் சுரைக்காயை நானும் விரும்பி(ச் சாப்பிட்டு)க்கொண்டே இருக்கிறேன்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "தையற்காரர் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (விருந்துக்கு) அழைத்தார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அவற்றில் பின்வருமாறு அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது:
அதன் பின்னர் எனக்காகத் தயாரிக்கப்படும் எந்த ஓர் உணவிலும் சுரைக்காயைச் சேர்த்துக் கொள்ள என்னால் முடியுமானால் (அவ்வாறே) சேர்த்துக்கொள்ளப்படாமல் இருந்ததில்லை.
அத்தியாயம் : 36
பாடம் : 22 பேரீச்சம் பழ(ம் உள்ள பாத்திர)த்துக்கு வெளியே கொட்டையைப் போடுவதும், விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பதும் விரும்பத்தக்கவை ஆகும். நல்ல மனிதருக்கு விருந்தளிக்கும்போது அவரிடம் பிரார்த்திக்குமாறு கோருவதும் அதையேற்று அவர் பிரார்த்திப்பதும் விரும்பத்தக்கவை ஆகும்.
4149. அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தை (புஸ்ர் பின் அபீபுஸ்ர்-ரலி) அவர்களிடம் (விருந்தாளியாகத்) தங்கினார்கள். அப்போது அவர்களுக்கு அருகே உணவும் (பேரீச்சம் பழம், பாலாடை, நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட "வத்பா" எனும்) ஒரு வகைப் பலகாரமும் வைத்தோம். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள்.
பிறகு பேரீச்சம் பழங்கள் கொண்டுவரப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, அவற்றின் கொட்டைகளை (பாத்திரத்தினுள்ளே போடாமல்) தம்மிரு விரல்களுக்கிடையே வைத்திருந்(துவிட்டு பிறகு வீசியெறிந்)தார்கள்.
- இதைக் கூறியபோது அறிவிப்பாளர் தம் ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் இணைத்து சைகை செய்கிறார்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்கள் "இன்ஷா அல்லாஹ், "இரு விரல்களுக்கிடையே கொட்டையை வைத்திருந்தார்கள்" என்பது ஹதீஸிலேயே உள்ளதாகும் என்பதே என் எண்ணமாகும்" என்று (ஐயத்துடன்) கூறினார்கள்.-
பிறகு ஒரு பானம் கொண்டுவரப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதையும் அருந்தினார்கள். பிறகு மீதியிருந்ததைத் தமக்கு வலப்பக்கத்திலிருந்தவருக்குக் கொடுத்தார்கள். பிறகு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்படத் தயாரானபோது) என் தந்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு, "எங்களுக்காகப் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைவா! நீ இவர்களுக்கு வழங்கிய உணவில் அருள்வளம் (பரக்கத்) புரிவாயாக! இவர்களை மன்னித்து, இவர்களுக்குக் கருணை புரிவாயாக!" (அல்லாஹும்ம, பாரிக் லஹும் ஃபீமா ரஸக்த்தஹும்,, வஃக்ஃபிர் லஹும், வர்ஹம்ஹும்) எனப் பிரார்த்தித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "இரு விரல்களுக்கிடையே பேரீச்சம் பழக் கொட்டைகளை வைத்திருந்(துவிட்டுப் பிறகு வீசியெறிந்)தார்கள்" என்பது ஐயத்திற்கிடமின்றி (ஹதீஸில் உள்ளதாகவே) அறிவிக்கப் பட்டுள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 23 பேரீச்சச் செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது.
4150. அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பேரீச்சச் செங்காய்களுடன் (சேர்த்து) வெள்ளரிக் காய்களை உண்பதை நான் கண்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 24 உணவு உண்பவர் பணிவோடு அமர்வது விரும்பத்தக்கதாகும் என்பதும் அவர் அமரும் முறையும்.
4151. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் குத்துக் காலிட்டு அமர்ந்து பேரீச்சம் பழத்தை உண்பதை நான் கண்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36