பாடம் : 15 (அடுத்தடுத்து) இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) அளிக்கப்பட்டால்...
3774. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒருவர் பின் ஒருவராக) இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) அளிக்கப்பட்டால், அவர்களில் இறுதியானவரைக் கொன்றுவிடுங்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது, எதிர்ப்புத் தெரிவிப்பது கடமையாகும். தொழுகை உள்ளிட்ட கடமைகளை அவர்கள் நிறைவேற்றும் வரை அவர்களுடன் போரிடலாகாது.
3775. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(எனக்குப் பின்) சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். யார் (தீமையைத் தெளிவாக) அறிந்துகொண்டாரோ அவர் பிழைத்தார். யார் வெறுத்தாரோ அவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணைபோனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)" என்று கூறினார்கள்.
மக்கள், "அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை; அவர்கள் தொழுகையை நிறைவேற்றும்வரை (வேண்டாம்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 33
3776. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸ) அவர்கள், "உங்களுக்குச் சில ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். தீமையை (மனதால்) வெறுத்தவர் பிழைத்தார்; (மனதால்) மறுத்தவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)" என்று கூறினார்கள்.
மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை. அவர்கள் தொழுகையை நிறைவேற்றும் வரை (வேண்டாம்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3777. மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(தீமையை மனதால்) மறுத்தவர் பிழைத்தார்; வெறுத்தவர் தப்பித்தார்" என்று இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "(இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33
பாடம் : 17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும்.
3778. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள். உங்களை அவர்கள் நேசிப்பார்கள். உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள்: உங்களை அவர்கள் வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள். அவர்கள் உங்களைச் சபிப்பார்கள்" என்று கூறினார்கள்.
அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கெதிராக நாங்கள் வாள் ஏந்தலாமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேண்டாம்; உங்களிடையே அவர்கள் தொழுகையை நிலைநாட்டும்வரை (வேண்டாம்). உங்கள் ஆட்சியாளர்களிடம் நீங்கள் வெறுக்கும் (மார்க்கத்திற்கு முரணாண செயல்கள்) எதையேனும் கண்டால், அந்த ஆட்சியாளரின் செயல்பாட்டை வெறுப்பீர்களாக! கட்டுப்படுதலில் இருந்து உங்கள் கையை விலக்கிவிடாதீர்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 33
3779. அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள். அவர்களும் உங்களை நேசிப்பார்கள். நீங்கள் அவர்களுக்காகப் பிரார்த்திப்பீர்கள். அவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள். அவர்களும் உங்களை வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள் அவர்களும் உங்களைச் சபிப்பார்கள்" என்று கூறினார்கள்.
மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அத்தகைய சூழலில் அ(ந்தத் தலை)வர்களுடன் நாங்கள் போரிடலாமா?" என்று கேட்டார்கள். அதற்கு, "வேண்டாம். உங்களிடையே அவர்கள் தொழுகையை நிலைநாட்டும்வரை (வேண்டாம்). அறிந்துகொள்ளுங்கள். ஒருவர், தம்மை நிர்வாகம் செய்கின்ற ஆட்சியாளரிடம் இறைவனுக்கு மாறுசெய்யும் செயல் எதையேனும் கண்டால், அவர் செயல்படுத்தும் அந்தப் பாவச்செயலை அவர் வெறுக்கட்டும். ஆனால், கட்டுப்படுவதிலிருந்து (தமது) கையை விலக்கிக்கொள்ள வேண்டாம்" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை ருஸைக் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தபோது அவர்களிடம் நான், "அபுல்மிக்தாமே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைத் தாம் கேட்டதாக அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் என முஸ்லிம் பின் கறழா (ரஹ்) அவர்கள் உங்களுக்கு அறிவித்தார்களா?" என்று கேட்டேன்.
உடனே ருஸைக் (ரஹ்) அவர்கள், முழந்தாளிட்டு நின்று கிப்லாத் திசையை முன்னோக்கி, "ஆம், எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஏக இறை)வன் மீதாணை! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைத் தாம் கேட்டதாக அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் சொல்ல நான் செவியுற்றேன்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "பனூ ஃபஸாரா குலத்தாரால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான ருஸைக் (ரஹ்) அவர்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் முஸ்லிம் பின் கறழா (ரஹ்) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 18 ஆட்சித் தலைவர் போருக்குச் செல்ல உத்தேசிக்கும்போது படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது விரும்பத்தக்கதாகும் என்பதும், (நபி (ஸல்) அவர்கள் காலத்தில்) அந்த மரத்தின் கீழ் நடந்த "பைஅத்துர் ரிள்வான்" உறுதிப் பிரமாண நிகழ்ச்சி பற்றிய விவரமும்.
3780. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹுதைபியா உடன்படிக்கை நாளில் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அப்போது அங்கிருந்த ஒரு மரத்தின் கீழ் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபியவர்களின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அது ஒரு கருவேல மரமாகும். நாங்கள் (எந்தச் சூழ்நிலையிலும்) புறமுதுகிட்டு ஓடமாட்டோம் என அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். மரணத்திற்கு (தயாராயிருப்பதாக) நாங்கள் அவர்களிடம் உறுதிமொழி அளிக்கவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3781. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹுதைபியா நாளில்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மரணத்திற்கு(த் தயாராயிருப்பதாக) உறுதிமொழி அளிக்கவில்லை; (எந்த நிலையிலும்) புறமுதுகிட்டு ஓடமாட்டோம் என்றே அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3782. அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் (ரலி) அவர்களிடம், "ஹுதைபியா தினத்தன்று நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "(அன்று) நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அங்கிருந்த ஒரு மரத்தின் கீழ் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். அது ஒரு கருவேல மரமாகும். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது ஜத்து பின் கைஸ் அல்அன்சாரீ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நபியவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். ஜத்து பின் கைஸ் அவர்கள் தமது ஒட்டகத்தின் வயிற்றுக்குக் கீழே ஒளிந்துகொண்டார்.
அத்தியாயம் : 33
3783. அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் உறுதிமொழி வாங்கினார்களா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், "இல்லை. ஆனால், அந்த இடத்தில் தொழுதார்கள். ஹுதைபியாவிலுள்ள மரத்தைத் தவிர வேறெந்த மரத்திற்கு அருகிலும் அவர்கள் உறுதிமொழி வாங்கவில்லை" என்று விடையளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் ஹுதைபியா கிணற்றருகில் (நீர் வளத்துக்காகப்) பிரார்த்தித்தார்கள்" என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
அத்தியாயம் : 33
3784. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது
நாங்கள் ஹுதைபியா தினத்தன்று ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், "பூமியிலிருப்பவர்களில் நீங்களே சிறந்தவர்கள்" என்று கூறினார்கள். இப்போது (மட்டும்) எனக்குக் கண்பார்வை தெரியுமானால் அந்த (ரிள்வான் உறுதிப்பிரமாணம் நடைபெற்ற) மரத்தின் இடத்தைக் காண்பித்திருப்பேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3785. சாலிம் பின் அபில்ஜஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் அந்த மரத்தின் கீழ் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவர்களைப் பற்றி (அவர்கள் எத்தனை பேர் என்று) கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருந்தாலும்கூட (நபியவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து பொங்கிவந்த நீர்) எங்களுக்குப் போதுமானதாயிருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐநூறு பேர்தாம் இருந்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3786. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றிலும் "நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருந்தாலும் அ(ந்த நீரான)து எங்களுக்குப் போதுமானதாயிருந்திருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐநூறு பேர்தாம் இருந்தோம்" என்றே இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3787. சாலிம் பின் அபில்ஜஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், "அன்றைய தினத்தில் நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்?" என்று கேட்டேன். அவர்கள், "ஆயிரத்து நானூறு பேர்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3788. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அந்த மரத்தின் கீழ் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவர்கள் (சுமார்) ஆயிரத்து முன்னூறு பேர் ஆவர். (இதில்) அஸ்லம் குலத்தார் (மட்டும்) முஹாஜிர்களில் எட்டில் ஒரு பகுதியினராக இருந்தனர்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3789. மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அந்த மரத்தின் கீழ் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிப் பிரமாணம் நடைபெற்ற நாளில் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்களது தலைக்கு மேலிருந்த ஒரு மரக்கிளையை நான் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அவர்களிடம் நாங்கள் மரணத்திற்கு(த் தயாராயிருப்பதாக) உறுதிமொழி அளிக்கவில்லை. மாறாக, (எந்தச் சூழ்நிலையிலும்) நாங்கள் புறமுதுகிட்டு ஓடமாட்டோம்" என்றே உறுதிமொழி அளித்தோம்.
- மேற்கண்ட ஹதீஸ் மஅகில் பின் யசார் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3790. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (முசய்யப் பின் ஹஸன் - ரலி) அவர்கள் அந்த மரத்தின் கீழ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தவர்களில் ஒருவர் ஆவார். என் தந்தை கூறினார்கள்: (உறுதிப் பிரமாணம் நடந்து முடிந்த) மறு ஆண்டு நாங்கள் ஹஜ்ஜுக்குச் சென்றோம். அப்போது அந்த (மரம் இருந்த) இடம் எங்களுக்கு (அடையாளம்) தெரியாமல் போய்விட்டது. அப்படியிருக்க, உங்களுக்கு அந்த இடம் (தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு உங்களுக்குத்) தெளிவாகத் தெரிந்தால் நீங்களே மெத்தவும் அறிந்தவர்கள்.
அத்தியாயம் : 33
3791. முசய்யப் பின் ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அந்த மரத்தின் (கீழ் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். (உறுதிப் பிரமாணம் நடந்து முடிந்த) மறு ஆண்டில் அந்த இடத்தை நாங்கள் மறந்து விட்டோம்.
அத்தியாயம் : 33
3792. முசய்யப் பின் ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பைஅத்துர் ரிள்வான் எனும் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) அந்த மரத்தை நான் பார்த்திருந்தேன். பின்பு (ஒரு முறை) அங்கு நான் சென்றேன். அப்போது என்னால் அதை அறிய முடியவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3793. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சலமா (ரலி) அவர்களிடம், "ஹுதைபியா தினத்தன்று (நபித்தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(வீர) மரணத்திற்கு(த் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதி மொழியளித்தோம்)" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33