பாடம் : 13 (அரசியல்) குழப்பங்கள் தோன்றும்போதும் மற்ற சமயங்களிலும் முஸ்லிம்களின் கூட்டமைப்போடு (ஜமாஅத்) சேர்ந்திருப்பது கடமையாகும்; தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பதும் கூட்டமைப்பிலிருந்து விலகுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும்.
3764. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சியதே காரணம்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும் தீமையிலும் மூழ்கிக்கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம் (இருக்கிறது)" என்று பதிலளித்தார்கள்.
நான், "அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும்" என்று பதிலளித்தார்கள். நான், "அந்தக் கலங்கலான நிலை என்ன?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "ஒரு கூட்டத்தார் எனது வழிமுறை (சுன்னா) அல்லாததைக் கடைப்பிடிப்பார்கள். எனது நேர்வழியல்லாததைக் கொண்டு வழிகாட்டுவார்கள். அவர்களில் நீ நன்மையையும் காண்பாய்; தீமையையும் காண்பாய்" என்று பதிலளித்தார்கள்.
நான், "அந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம். நரகத்தின் வாசல்களில் நின்றுகொண்டு (அங்கு வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவரை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! அவர்க(ளுடைய அடையாளங்)களை எங்களுக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்க,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் நம் (அரபு) இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். நம் மொழிகளையே பேசுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! இத்தகைய கால கட்டத்தை நான் அடைந்தால் என்ன செய்ய வேண்டும் என எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அதன் ஆட்சியாளரையும் பற்றிக்கொள்" என்று பதிலளித்தார்கள்.
அதற்கு நான், "அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஆட்சியாளரோ இல்லை (என்ற நிலையில் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால் (என்ன செய்வது)?" என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கிவிடு. (ஒதுங்கி வாழும் சூழலுக்கு முட்டுக்கட்டையாகப் பல்வேறு சிரமங்கள் நேர்ந்தாலும்) ஒரு மரத்தின் வேர் பாகத்தைப் பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, இறுதியில் அதே நிலையில் நீ இருக்கவே இறப்பு உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் நீ சேர்ந்துவிடாதே)" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 33
3765. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (மாச்சரியங்கள் நிறைந்த அறியாமைக் காலத்) தீமையில் மூழ்கிக்கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். அதில் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம். இந்த நன்மைக்கு அப்பால் தீமை (அரசியல் குழப்பம்) ஏதும் உண்டா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
நான், "அந்தத் தீமைக்கு அப்பால் நன்மை (நல்லாட்சி) ஏதும் உண்டா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்" என்று விடையளித்தார்கள். நான், "அந்த நன்மைக்கு அப்பால் தீமை (அரசியல் குழப்பம்) ஏதும் உண்டா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள். நான், "அது எப்படி?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "எனக்குப் பிறகு சில தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்கள் எனது நேர்வழி அல்லாத வழியில் நடப்பார்கள். எனது வழிமுறையை (சுன்னா) கடைப் பிடிக்கமாட்டார்கள். அவர்களிடையே சிலர் தோன்றுவார்கள். அவர்கள் மனித உடலில் ஷைத்தான்களின் உள்ளம் படைத்தவர்களாய் இருப்பார்கள்" என்று கூறினார்கள்.
நான், "அந்தக் கால கட்டத்தை அடைந்தால் நான் என்ன செய்ய வேண்டும், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு "அந்த ஆட்சியாளரின் கட்டளையைச் செவியுற்று அவருக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள். நீ முதுகில் தாக்கப்பட்டாலும் சரியே! உன் செல்வங்கள் பறிக்கப்பட்டாலும் சரியே! (அந்த ஆட்சித்தலைவரின் கட்டளையைச்) செவியுற்றுக் கட்டுப்பட்டு நடந்துகொள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 33
3766. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார். ஒருவர் (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌடீகத்தின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இன மாச்சரியத்திற்காகக் கோபப்படுகிறார். அல்லது இன மாச்சரியத்துக்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன மாச்சரியத்திற்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும்.
யார் என் சமுதாயத்தாருக்கெதிராகப் புறப்பட்டு, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை. நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3767. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் (ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல் (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, பின்னர் (அதே நிலையில்) இறந்துபோகிறாரோ அவர் அறியாமைக்கால மரணத்தையே சந்திப்பார். (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌடீகக் கொடிக்குக் கீழே நின்று ஒருவர் போரிட்டு இன மாச்சரியத்திற்காகக் கோபப்படுகிறார்; அல்லது இன மாச்சரியத்திற்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன மாச்சரியத்திற்காகப் போரிடுகிறார் எனில், அவர் என் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அல்லர்.
யார் என் சமுதாயத்திலிருந்து என் சமுதாயத்திற்கெதிராகப் புறப்பட்டு அவர்களில் இறை நம்பிக்கையாளர்கள் என்றுகூடப் பார்க்காமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, அவர்களில் ஒப்பந்தம் செய்தவர்களிடம் அவர்களது ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லையோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" எனும் குறிப்பு இல்லை. முஹம்மத் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3768. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தம் (ஆட்சித்) தலைவரிடம் (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் கண்டு அதை வெறுப்பவர், பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர் (ஒன்றுபட்டக்) கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக்குப் பிரிந்து இறந்துபோனாலும் அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுகிறார்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3769. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர், பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து யார் ஒரு சாண் அளவு வெளியேறி, அதே நிலையில் இறந்துபோகிறாரோ, அவர் அறியாமைக் கால மரணத்தையே எய்துவார்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3770. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மௌடீகத்தின் கொடிக்குக் கீழே இன மாச்சரியத்திற்கு அழைப்பு விடுக்கவோ, இன மாச்சரியத்திற்காக ஒத்துழைக்கவோ செய்து அதற்காகக் கொல்லப்படுபவர் அறியாமைக் கால மரணத்தையே சந்திப்பார்.
இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3771. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யஸீத் பின் முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் நடந்த "அல்ஹர்ரா"ப் போரினால் பிரச்சினை ஏற்பட்டபோது, (யஸீத் பின் முஆவியாவின் ஆட்சிக்கெதிராக மக்களைத் திரட்டியிருந்த) அப்துல்லாஹ் பின் முதீஉ அல்குறஷீ (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சென்றார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் முதீஉ (ரலி) அவர்கள் "அபூஅப்திர் ரஹ்மானுக்குத் தலையணையை எடுத்துப் போடுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நான் உட்காருவதற்காக உங்களிடம் வரவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு ஹதீஸை உங்களுக்கு அறிவிப்பதற்காகவே உங்களிடம் நான் வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(தலைமைக்குக்) கட்டுப்படுகின்ற செயலிலிருந்து கையை விலக்கிக்கொண்டவர், தம(து செயல்பாடுகளு)க்கு(ம் அதற்கான சாக்குப் போக்குகளுக்கும்) எந்தச் சான்றும் இல்லாமலேயே மறுமை நாளில் இறைவனைச் சந்திப்பார். தமது கழுத்தில் (தம் ஆட்சியாளரிடம் அளித்திருந்த) உறுதிமொழிப் பிரமாணம் இல்லாத நிலையில் யார் இறக்கிறாரோ, அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுவார்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
- இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ஸல்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 14 முஸ்லிம்களின் (அரசியல்) நிலை (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும் போது, அவர்களிடையே பிளவை ஏற்படுத்துகின்றவருக்குரிய சட்டம்.
3772. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(எனக்குப் பிறகு) விரைவில் குழப்பங்களும் பிரச்சினைகளும் தோன்றும். இந்தச் சமுதாயத்தின் (அரசியல்) நிலை (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது, அவர்களிடையே பிளவை ஏற்படுத்த விரும்புகின்றவரை வாளால் வெட்டிக் கொல்லுங்கள். அவர் யாராக இருந்தாலும் சரியே!
இதை அர்ஃபஜா பின் ஷுரைஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அர்ஃபஜா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஆயினும், இந்த அறிவிப்புகள் அனைத்திலும், "அவரைக் கொல்லுங்கள்" என்றே இடம் பெற்றுள்ளது. (வாளால் வெட்டிக் கொல்லுங்கள்" என்று இடம்பெறவில்லை.)
அத்தியாயம் : 33
3773. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதரின் (தலைமையின்) கீழ் உங்கள் (அரசியல்) நிலை ஒன்றுபட்டிருக்கும்போது, உங்கள் ஐக்கியத்தை உடைக்கும் அல்லது உங்கள் கட்டமைப்பைக் குலைக்கும் நோக்கத்தோடு உங்களிடம் யாரேனும் வந்தால் அவரைக் கொன்றுவிடுங்கள்.
இதை அர்ஃபஜா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 15 (அடுத்தடுத்து) இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) அளிக்கப்பட்டால்...
3774. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒருவர் பின் ஒருவராக) இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) அளிக்கப்பட்டால், அவர்களில் இறுதியானவரைக் கொன்றுவிடுங்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது, எதிர்ப்புத் தெரிவிப்பது கடமையாகும். தொழுகை உள்ளிட்ட கடமைகளை அவர்கள் நிறைவேற்றும் வரை அவர்களுடன் போரிடலாகாது.
3775. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(எனக்குப் பின்) சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். யார் (தீமையைத் தெளிவாக) அறிந்துகொண்டாரோ அவர் பிழைத்தார். யார் வெறுத்தாரோ அவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணைபோனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)" என்று கூறினார்கள்.
மக்கள், "அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை; அவர்கள் தொழுகையை நிறைவேற்றும்வரை (வேண்டாம்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 33
3776. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸ) அவர்கள், "உங்களுக்குச் சில ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். தீமையை (மனதால்) வெறுத்தவர் பிழைத்தார்; (மனதால்) மறுத்தவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)" என்று கூறினார்கள்.
மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை. அவர்கள் தொழுகையை நிறைவேற்றும் வரை (வேண்டாம்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3777. மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(தீமையை மனதால்) மறுத்தவர் பிழைத்தார்; வெறுத்தவர் தப்பித்தார்" என்று இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "(இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33
பாடம் : 17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும்.
3778. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள். உங்களை அவர்கள் நேசிப்பார்கள். உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள்: உங்களை அவர்கள் வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள். அவர்கள் உங்களைச் சபிப்பார்கள்" என்று கூறினார்கள்.
அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கெதிராக நாங்கள் வாள் ஏந்தலாமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேண்டாம்; உங்களிடையே அவர்கள் தொழுகையை நிலைநாட்டும்வரை (வேண்டாம்). உங்கள் ஆட்சியாளர்களிடம் நீங்கள் வெறுக்கும் (மார்க்கத்திற்கு முரணாண செயல்கள்) எதையேனும் கண்டால், அந்த ஆட்சியாளரின் செயல்பாட்டை வெறுப்பீர்களாக! கட்டுப்படுதலில் இருந்து உங்கள் கையை விலக்கிவிடாதீர்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 33
3779. அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள். அவர்களும் உங்களை நேசிப்பார்கள். நீங்கள் அவர்களுக்காகப் பிரார்த்திப்பீர்கள். அவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள். அவர்களும் உங்களை வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள் அவர்களும் உங்களைச் சபிப்பார்கள்" என்று கூறினார்கள்.
மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அத்தகைய சூழலில் அ(ந்தத் தலை)வர்களுடன் நாங்கள் போரிடலாமா?" என்று கேட்டார்கள். அதற்கு, "வேண்டாம். உங்களிடையே அவர்கள் தொழுகையை நிலைநாட்டும்வரை (வேண்டாம்). அறிந்துகொள்ளுங்கள். ஒருவர், தம்மை நிர்வாகம் செய்கின்ற ஆட்சியாளரிடம் இறைவனுக்கு மாறுசெய்யும் செயல் எதையேனும் கண்டால், அவர் செயல்படுத்தும் அந்தப் பாவச்செயலை அவர் வெறுக்கட்டும். ஆனால், கட்டுப்படுவதிலிருந்து (தமது) கையை விலக்கிக்கொள்ள வேண்டாம்" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை ருஸைக் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தபோது அவர்களிடம் நான், "அபுல்மிக்தாமே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைத் தாம் கேட்டதாக அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் என முஸ்லிம் பின் கறழா (ரஹ்) அவர்கள் உங்களுக்கு அறிவித்தார்களா?" என்று கேட்டேன்.
உடனே ருஸைக் (ரஹ்) அவர்கள், முழந்தாளிட்டு நின்று கிப்லாத் திசையை முன்னோக்கி, "ஆம், எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஏக இறை)வன் மீதாணை! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைத் தாம் கேட்டதாக அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் சொல்ல நான் செவியுற்றேன்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "பனூ ஃபஸாரா குலத்தாரால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான ருஸைக் (ரஹ்) அவர்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் முஸ்லிம் பின் கறழா (ரஹ்) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 18 ஆட்சித் தலைவர் போருக்குச் செல்ல உத்தேசிக்கும்போது படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது விரும்பத்தக்கதாகும் என்பதும், (நபி (ஸல்) அவர்கள் காலத்தில்) அந்த மரத்தின் கீழ் நடந்த "பைஅத்துர் ரிள்வான்" உறுதிப் பிரமாண நிகழ்ச்சி பற்றிய விவரமும்.
3780. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹுதைபியா உடன்படிக்கை நாளில் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அப்போது அங்கிருந்த ஒரு மரத்தின் கீழ் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபியவர்களின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அது ஒரு கருவேல மரமாகும். நாங்கள் (எந்தச் சூழ்நிலையிலும்) புறமுதுகிட்டு ஓடமாட்டோம் என அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். மரணத்திற்கு (தயாராயிருப்பதாக) நாங்கள் அவர்களிடம் உறுதிமொழி அளிக்கவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3781. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹுதைபியா நாளில்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மரணத்திற்கு(த் தயாராயிருப்பதாக) உறுதிமொழி அளிக்கவில்லை; (எந்த நிலையிலும்) புறமுதுகிட்டு ஓடமாட்டோம் என்றே அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3782. அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் (ரலி) அவர்களிடம், "ஹுதைபியா தினத்தன்று நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "(அன்று) நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அங்கிருந்த ஒரு மரத்தின் கீழ் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். அது ஒரு கருவேல மரமாகும். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது ஜத்து பின் கைஸ் அல்அன்சாரீ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நபியவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். ஜத்து பின் கைஸ் அவர்கள் தமது ஒட்டகத்தின் வயிற்றுக்குக் கீழே ஒளிந்துகொண்டார்.
அத்தியாயம் : 33
3783. அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் உறுதிமொழி வாங்கினார்களா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், "இல்லை. ஆனால், அந்த இடத்தில் தொழுதார்கள். ஹுதைபியாவிலுள்ள மரத்தைத் தவிர வேறெந்த மரத்திற்கு அருகிலும் அவர்கள் உறுதிமொழி வாங்கவில்லை" என்று விடையளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் ஹுதைபியா கிணற்றருகில் (நீர் வளத்துக்காகப்) பிரார்த்தித்தார்கள்" என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
அத்தியாயம் : 33