3734. ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபித்தோழர்) மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர்களை(ச் சந்தித்து) உடல்நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியாளர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார்.
அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட (ஹதீஸ்) செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நான் இன்னும் சில நாட்கள் உயிர் வாழ்வேன் என அறிந்திருந்தால் அதை உமக்கு அறிவிக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்துபோனால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்யாமல் இருப்பதில்லை" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் உடல் நலிவுற்றிருந்தபோது (அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக) இப்னு ஸியாத் சென்றார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மேலும், இப்னு ஸியாத் "இதற்கு முன்பு இதை நீங்கள் எனக்கு அறிவிக்கவில்லையே?" என்று கேட்க, மஅகில் (ரலி) அவர்கள் "நான் உமக்கு (காரணத்தோடுதான்) அறிவிக்க வில்லை" அல்லது "உம்மிடம் நான் (காரணத்தோடுதான்) அறிவித்திருக்கவில்லை" என்று பதிலளித்தார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3735. அபுல்மலீஹ் ஆமிர் பின் உசாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர் மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் (இறப்பதற்கு முன்) நோய்வாய்ப்பட்டிருந்த போது, (அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள், "உமக்கு நான் ஒரு ஹதீஸை அறிவிக்கப்போகிறேன். நான் மரணத்தருவாயில் இருந்திராவிட்டால் அதை உமக்கு நான் அறிவிக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஓர் ஆட்சியாளர் முஸ்லிம்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர், அவர்களுக்காக உழைக்காமலும் (அவர்கள்மீது) அக்கறைகாட்டாமலும் இருந்தால், அவர்களுடன் அவர் சொர்க்கத்துக்குச் செல்லவே மாட்டார்" என்று சொல்ல நான் கேட்டேன் எனக் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
அதில், "மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 33
3736. ஹசன் பின் அபில்ஹசன் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் (அன்றைய பஸ்ராவின் ஆட்சியராயிருந்த) உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் சென்று, "அன்புக் குழந்தாய்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிர்வாகிகளில் மிகவும் மோசமானவர், இரக்கமற்ற கல்நெஞ்சக்காரர்தாம்" என்று கூறியதை நான் கேட்டேன். அவர்களில் ஒருவராக நீ ஆகிவிட வேண்டாம் என உன்னை நான் எச்சரிக்கிறேன்" என்று கூறினார்கள்.
அதற்கு உபைதுல்லாஹ், "(நீர் போய்) உட்காரும். நீர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களில் மட்டமான ஒருவர்தாம்" என்று கூறினார். அதற்கு ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள், "(நபியின் தோழர்களான) அவர்களில் மட்டமானவர்களும் இருந்தார்களா? அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களிலும் மற்றவர்களிலும்தாம் மட்டமானவர்கள் தோன்றினர்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 6 (போர்ச்செல்வங்கள் உள்ளிட்ட) பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
3737. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று (போர்ச் செல்வங்கள் உள்ளிட்ட) பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் தண்டனை கொடியது என்பதையும் எடுத்துரைத்தார்கள்.
பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.
இவ்வாறே, மறுமை நாளில் கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையைத் தமது கழுத்தில் சுமந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய இயலாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.
இவ்வாறே, மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஆட்டைத் தமது கழுத்தில் சுமந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லி விட்டேன்" என்று கூறிவிடுவேன்.
இவ்வாறே, மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஓர் உயிரினத்தைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்யமுடியாது; உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.
இவ்வாறே, மறுமை நாளில் (காற்றில்) அசையும் துணிகளைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கூறி (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம்.ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய இயலாது. உனக்கு (சொல்ல வேண்டியதை உலகி லேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.
இவ்வாறே, மறுமை நாளில் பொன்னையும் வெள்ளியையும் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கூறி (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம்.ஏனெனில், அப்போது நான் "என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3738. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போர்ச் செல்வங்கள் உள்ளிட்ட) பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அதன் தண்டனை கொடியது என்பதையும் எடுத்துரைத்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்கு வந்துள்ள தடை.
3739. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்அஸ்த்" குலத்தாரில் ஒருவரை (பனூ சுலைம் குலத்தாரின்) "ஸகாத்"களை வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என அழைக்கப்பட்டார். அவர் ("ஸகாத்"களை வசூலித்துவிட்டு) வந்து (கணக்கு ஒப்படைத்தபோது), "இது உங்களுக்குரியது. இது எனக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது" என்று கூறினார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்துத் திரும்பிவந்து) "இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது" என்று கூறுகிறார். அவர் (மட்டும்) தம் தந்தையின் வீட்டிலோ அல்லது தாயின் வீட்டிலோ உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக! உங்களில் யாரேனும் அ(ந்தப் பொதுச் சொத்)திலிருந்து (முறைகேடாக) எதையேனும் பெற்றால் மறுமை நாளில் அதைத் தமது கழுத்தில் சுமந்துகொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக்கொண்டிருக்கும். மாடாகவோ ஆடாகவோ இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும்" என்று கூறினார்கள்.
பிறகு அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்திவிட்டு, "இறைவா! (உன் கட்டளையை) எடுத்துரைத்துவிட்டேனா?" என்று இரண்டு முறை கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நபி (ஸல்) அவர்கள் "அல்அஸ்த்" குலத்தைச் சேர்ந்த இப்னுல் லுத்பிய்யா என்பவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்து விட்டுத் திரும்பி)வந்து, "இது உங்களுக்குரிய செல்வம். இது எனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு" என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "நீர் உம்முடைய தாய் தந்தையின் வீட்டில் உட்கார்ந்திரும்! உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்ப்போம்" என்று கூறினார்கள். பிறகு எழுந்து நின்று (எங்களுக்கு) உரையாற்றினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. பிறகு மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3740. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் "ஸகாத்"களை வசூலிக்கும் அதிகாரியாக "இப்னுல் உத்பிய்யா" எனப்படும் ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்துக்கொண்டு) வந்தபோது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அவர், "இது உங்களுக்குரிய செல்வம். இது (எனக்கு வந்த) அன்பளிப்பு" என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உண்மையாளராக இருந்தால், உம்முடைய தந்தை வீட்டில் அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திரும்! உம்மிடம் அன்பளிப்புகள் வருகின்றனவா பார்ப்போம்" என்று கூறினார்கள்.
பிறகு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக்கிய ஒரு பணிக்காக உங்களில் ஒருவரை நான் அதிகாரியாக்கினேன். அவர் (சென்றுவிட்டு) வந்து, "இது உங்களுக்குரிய செல்வம். இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது" என்று சொல்கிறார். அவர் சொல்வது உண்மையாயிருந்தால், அவர் தம் தந்தை வீட்டிலோ அல்லது தாய் வீட்டிலோ உட்கார்ந்திருக்கலாமே! அன்பளிப்புகள் வருகின்றனவா என்று பார்ப்போம்.
அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் எவரும் உரிமையின்றி (முறைகேடாக) எந்த ஒன்றை அடைந்துகொண்டாலும் மறுமை நாளில் அதை (தமது தோளில்) சுமந்தவண்ணமே அல்லாஹ்வை அவர் சந்திப்பார். இந்த வகையில் கனைத்துக்கொண்டிருக்கும் ஒட்டகத்தையோ, அல்லது கத்திக்கொண்டிக்கும் மாட்டையோ ஆட்டையோ (தமது தோளில்) சுமந்துகொண்டு அல்லாஹ்வைச் சந்திக்கும் எவரையும் நான் உறுதியாக அறிவேன்"என்று கூறினார்கள்.
பிறகு, தம் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவுக்குத் தம் இரு கைகளையும் உயர்த்தி, "இறைவா! (உன் கட்டளையை) நான் எடுத்துரைத்துவிட்டேன் அல்லவா?" என்று அவர்கள் கூறியதை என் கண் கண்டது; காது கேட்டது.
அத்தியாயம் : 33
3741. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்தா பின் சுலைமான் மற்றும் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "அவர் (ஸகாத் வசூலித்துவிட்டுத் திரும்பி) வந்தபோது, அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள்" என இடம்பெற்றுள்ளது. அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் மீதாணையாக! என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நிச்சயம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அ(ந்தப் பொதுச்சொத்)திலிருந்து எவரேனும் எதையாவது (முறைகேடாகப்) பெற்றால்..." என்று இடம்பெற்றுள்ளது.
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "என் கண் கண்டது. காதுகள் கேட்டன. வேண்டுமானால் நீங்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். ஏனெனில், அப்போது அவர்களும் என்னுடன் இருந்தார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3742. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஸகாத்"களை வசூலிக்கும் அதிகாரியாக ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத்களை வசூலித்துவிட்டு) ஏராளமான செல்வங்களுடன் வந்து, "இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பெற்றது" என்று கூறலானார். பிறகு மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களிடம், "இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாயிலிருந்து என் காதுகள் (நேரடியாகக்) கேட்டன" என்றார்கள்.
அத்தியாயம் : 33
3743. அதீ பின் அமீரா அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்திருந்து, பின்னர் அவர் ஓர் ஊசியையோ அதை விடச் சிறியதையோ நம்மிடம் (கணக்குக் காட்டாமல்) மறைத்துவிட்டால் அது மோசடியாகவே அமையும். அவர் மறுமை நாளில் அந்தப் பொருளுடன் வருவார்" என்று கூறியதை நான் கேட்டேன்.
அப்போது அன்சாரிகளில் ஒரு கறுப்பு நிற மனிதர் எழுந்து, -அவரை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது- "அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தாங்கள் ஒப்படைத்திருந்த பணியை நீங்கள் (திரும்ப) ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். அவர், "தாங்கள் இன்னின்னவாறு கூறியதை நான் கேட்டேன்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இப்போதும் அவ்வாறே கூறுகிறேன். நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்தால், அவர் அதில் கிடைக்கும் சிறியதையும் அதிகத்தையும் (நம்மிடம்) கொண்டுவந்து சேர்க்கட்டும். பிறகு எது அவருக்கு வழங்கப்படுகிறதோ அதை அவர் பெற்றுக்கொள்ளட்டும். எது அவருக்கு மறுக்கப்படுகிறதோ அதிலிருந்து அவர் விலகிக்கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் அமீரா அல்கிந்தீ (ரலி) அவர்களிடமிருந்து மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் அமீரா அல்கிந்தீ (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 8 பாவமற்ற விஷயங்களில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமான செயலில் கட்டுப்படுவது தடை செய்யப்பட்டதாகும்.
3744. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள்; அவனுடைய தூதருக்கும் உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கீழ்ப்படியுங்கள்" (4:59) எனும் இறைவசனம், நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்களை (தளபதியாக்கி) ஒரு படைப்பிரிவினருடன் அனுப்பியபோது அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்து யஅலா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவித்தார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3745. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். எனக்கு மாறுசெய்தவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவர் ஆவார். (என்னால் நியமிக்கப்பட்ட) தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார்; தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறு செய்தவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறுசெய்தவர் ஆவார்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33
3746. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். எனக்கு மாறுசெய்தவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவர் ஆவார். என்னால் நியமிக்கப்பெற்ற தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். என்னால் நியமிக்கப்பெற்ற தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறுசெய்தவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3747. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர்" என்றே இடம்பெற்றுள்ளது. "என்னால் நியமிக்கப்பெற்ற தலைவருக்கு" என்று இடம்பெறவில்லை. இச்சொல் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலும் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33
3748. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் உம்மைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போதும் (கட்டளையைச்) செவியுற்று (தலைமைக்குக்) கீழ்ப்படிந்து நடப்பீராக!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3749. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் உற்ற தோழர் (நபி -ஸல்) அவர்கள், "தலைவரின் சொல்லைச் செவியுற்றுக் கீழ்ப் படிந்து நடப்பாயாக! அவர் உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே!" என எனக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அவர் உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அபிசீனிய (கறுப்பு நிற) அடிமையாக இருந்தாலும் சரியே!" என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அவர் உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3750. உம்முல் ஹுஸைன் பின்த் இஸ்ஹாக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது ஆற்றிய உரையில், "அல்லாஹ்வின் வேதப்படி உங்களை வழி நடத்துகின்ற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக்கப் பட்டாலும் அவரது சொல்லையேற்று அவருக்குக் கீழ்ப்படியுங்கள்" என்று கூறியதை நான் கேட்டேன்.
- மேற்கண்ட ஹதீஸ் உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அபிசீனிய அடிமையொருவர் (உங்களுக்குத் தலைவராக்கப்பட்டாலும்)" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அபிசீனிய அடிமையொருவர்" என்று காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அபிசீனியர்" எனும் குறிப்பு இல்லை. ("அடிமை" என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது.) மேலும், "மினாவில் அல்லது அரஃபாத்தில் உரையாற்றும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டேன்" எனக் கூடுதல் குறிப்புடன் இடம்பெற்றுள்ளது.
- உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
விடைபெறும் ஹஜ்ஜுக்காக நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்றேன். அவர்கள் ஏராளமான அறிவுரைகளைக் கூறினார்கள். பிறகு "அல்லாஹ்வின் வேதப்படி உங்களை வழி நடத்துகின்ற, உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட கறுப்பு நிற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக்கப்பட்டாலும் அவரது சொல்லையேற்று அவருக்குக் கீழ்ப்படிந்து நடங்கள்" என்று கூறியதை நான் கேட்டேன்.
அத்தியாயம் : 33
3751. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்படாதவரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்ட ளையைச்) செவியுறுவதும் (அதற்குக்) கீழ்ப்படிவதும் கடமையாகும். இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியுறுவதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3752. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி, அவர்களுக்கு ஒரு மனிதரைத் தளபதியாக்கினார்கள். (ஒரு கட்டத்தில் அவர் படைவீரர்கள் மீது கோபம் கொண்டு) நெருப்பை மூட்டி, அதில் குதிக்கச் சொன்னார். சிலர் அதில் குதிக்க முன்வந்தனர். வேறுசிலர் "(நரக) நெருப்பிலிருந்து (தப்பிக்கத்)தானே நாம் வெருண்டோடி (நபிகளாரிடம்) வந்தோம்" என்றனர்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டபோது, நெருப்பில் குதிக்க முற்பட்டவர்களிடம் "அதில் மட்டும் நீங்கள் குதித்திருந்தால் மறுமை நாள் வரை அதிலேயே நீங்கள் கிடந்திருப்பீர்கள்" என்றும், மற்றவர்களிடம் நல்லபடியாகவும் பேசினார்கள். மேலும் "அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் விஷயத்தில் கீழ்ப்படிதல் கிடையாது. கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3753. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி, அவர்களுக்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி, அவரது கட்டளையைச் செவியுற்றுக் கட்டுப்பட்டு நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஒரு கட்டத்தில்) ஏதோ ஒரு விஷயத்தில் படைவீரர்கள் அவரைக் கோபப்படுத்திவிட்டனர். அப்போது அவர், "விறகைச் சேகரியுங்கள்" என்று கூறினார். அவ்வாறே அவர்கள் விறகைச் சேகரித்ததும் "நெருப்பை மூட்டுங்கள்" என்று உத்தரவிட்டார்.
அவ்வாறே அவர்கள் நெருப்பை மூட்டிய பின், "நீங்கள் எனது சொல்லைச் செவியுற்று, அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குக் கட்டளையிடவில்லையா?" என்று கேட்டார். படைவீரர்கள், "ஆம்" என்றனர். "அவ்வாறாயின் நெருப்பில் குதியுங்கள்" என்று அவர் உத்தரவிட்டார்.
அப்போது படைவீரர்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி, "(நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத் தானே நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வெருண்டோடி வந்தோம்!" என்று கூறினர். அவ்வாறே அவர்கள் (சிறிது நேரம்) இருந்துகொண்டிருக்க, அவருடைய கோபம் தணிந்தது; நெருப்பும் அணைந்தது.
பிறகு (மதீனா திரும்பியதும்) நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தனர். நபி (ஸல்) அவர்கள், "அதில் (மட்டும்) அவர்கள் குதித்திருந்தால் அதிலிருந்து அவர்கள் (ஒருபோதும்) வெளியேறியிருக்கமாட்டார்கள். கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33