3634. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ குறைழா மற்றும் பனூ நளீர் குலத்தார் வெற்றி கொள்ளப்படும்வரை (இரவலாகப் பயன்படுத்திக்கொள்ளும்படி) தமது நிலத்திலிருந்து பேரீச்ச மரங்களில் சிலவற்றை ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்து வைத்திருந்தார். (பனூ குறைழா, பனூ நளீர் குலத்தாரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெற்றி கொண்ட) பின்னர் அவரிடமே அம்மரங்களை அவர்கள் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.
இந்நிலையில், என் குடும்பத்தார் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதருக்குத் தாங்கள் கொடுத்திருந்த மரங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் சிலவற்றை (திரும்பத் தரும்படி) கேட்குமாறு என்னைப் பணித்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மரங்களை(ப் பராமரித்து பயன்பெற்றுக்கொள்ளுமாறு தம் வளர்ப்புத்தாய்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் (இரவலாகக்) கொடுத்திருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது, அவர்கள் அம்மரங்களை என்னிடம் திரும்பத் தந்துவிட்டதாகக் கூறினார்கள்.
அப்போது அங்கு உம்மு அய்மன் (ரலி) அவர்கள் வந்து, எனது கழுத்தில் துணியைப் போட்டுப் பிடித்து "அல்லாஹ்வின் மீதாணையாக! (முடியாது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குத் தந்துவிட்டவற்றை உன்னிடம் நான் கொடுக்கமாட்டேன்" என்று கூறலானார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்மு அய்மன்! அவரை விட்டு விடுங்கள். இன்னின்ன பொருட்களை உங்களுக்கு நான் தருகிறேன்" என்று கூறினார்கள். அவர் "இல்லை (முடியாது). எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஏக இறை)வன் மீதாணையாக! (அவற்றைத் தர முடியாது)" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னின்னதைத் தருகிறேன் என்று கூறிக்கொண்டே வந்து, இறுதியில் அதைப் போன்று பத்து மடங்கு அல்லது ஏறக்குறைய அதைப் போன்ற அளவு கொடுத்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 25 போர்ச் செல்வமாகக் கிடைத்த உணவுப் பொருட்களை (நாடு திரும்புவதற்கு முன்) பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம்.
3635. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் தினத்தன்று கொழுப்பு இருந்த தோல் பை ஒன்றை நான் பெற்றேன். அதை நான் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு "இன்று இதிலிருந்து ஒரு சிறிதளவைக்கூட யாருக்கும் நான் கொடுக்கமாட்டேன்" என்று கூறினேன். பிறகு திரும்பிப் பார்த்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்த வண்ணம் இருந்தார்கள்.
அத்தியாயம் : 32
3636. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் தினத்தன்று எங்களை நோக்கி ஒரு தோல் பை வீசப்பட்டது. அதில் உணவுப் பொருளும் கொழுப்பும் இருந்தன. அதை எடுப்பதற்காக நான் குதித்தோடினேன். பிறகு திரும்பிப் பார்த்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்களைக் கண்டு நான் வெட்கமடைந்தேன்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "கொழுப்பு அடங்கிய தோல் பை ஒன்று" என இடம்பெற்றுள்ளது. "உணவுப் பொருள்" பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 32
பாடம் : 26 இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதம்.
3637. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் என்னிடம் நேரடியாகக் கூறினார்கள்: (குறைஷியரின் தலைவனாயிருந்த) எனக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையே (ஹுதைபியா) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் (குறைஷியரின் வணிகக் குழுவில்) சென்று ஷாம் (சிரியா) நாட்டில் நான் இருந்தேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ரோமப் பைஸாந்திய மன்னர் ஹெராக்ளியஸுக்குக் கடிதம் வந்தது. அக்கடிதத்தை (நபித்தோழர்) திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்கள் கொண்டுவந்து, புஸ்ரா (ஹூரான்) சிற்றரசரிடம் கொடுக்க, அவர் அதை ஹெராக்ளியஸிடம் ஒப்படைத்திருந்தார்.
அப்போது ஹெராக்ளியஸ் "தம்மை இறைத்தூதர் எனக் கூறும் அந்த மனிதரின் குலத்தாரில் யாரேனும் இங்கு (நம் நாட்டில்) உள்ளனரா?" என்று கேட்டார். அ(வையிலிருந்த)வர்கள் "ஆம்" என விடையளித்தனர்.
குறைஷி (வணிக)க் குழுவினருடன் இருந்த என்னை அழைத்து வரும்படி ஆளனுப்பப்பட்டது. நாங்கள் அனைவரும் ஹெராக்ளியஸிடம் சென்றோம். எங்கள் அனைவரையும் தமக்கு முன்னால் உட்காரச் சொன்னார் ஹெராக்ளியஸ். பிறகு, "தம்மை இறைத்தூதர் எனச் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த (முஹம்மத் எனும்) மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்?" என்று கேட்டார்.
நான் "நானே (அவருக்கு நெருங்கிய உறவினர் ஆவேன்)" என்று பதிலளித்தேன். எனவே, என்னை அவருக்கு எதிரில் (நெருக்கமாக) உட்காரவைத்தனர். என் நண்பர்களை எனக்குப் பின்னால் உட்காரவைத்தனர்.
பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழி பெயர்ப்பாளரை அழைத்து, "தம்மை இறைத்தூதர் எனச் சொல்லிக்கொண்டிருக்கும் அந்த (முஹம்மத் எனும்) மனிதரைப் பற்றி நான் இவரிடம் கேட்பேன். இவர் பொய் (ஏதும்) சொன்னால் உடனே "அவர் பொய் சொல்கிறார்" என்று கூறிவிட வேண்டும்" என அவருடைய நண்பர்களிடம் (மொழிபெயர்த்துச்) சொல் என்றார்.
"நான் பொய் பேசினேன்" என என்னைப் பற்றி என் நண்பர்கள் (ஊரில் வந்து) பேசுவார்களே என்ற அச்சம் மட்டும் எனக்கு இல்லாதிருந்தால், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (நபியவர்களைப் பற்றி) பொய்யான தகவல்களைச் சொல்லியிருப்பேன்.
பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரிடம், "இவரிடம் "அந்த (முஹம்மத் எனும்) மனிதரின் குலம் எப்படிப்பட்டது?" எனக் கேள்" என்றார். நான் "அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சேர்ந்தவர்" என்றேன். "அடுத்து அந்த மனிதருடைய முன்னோரில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றனரா?" என்று கேட்டார். நான் "இல்லை" என்றேன்.
அவர், "அந்த மனிதர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன் அவர் மக்களிடம் பொய்(யேதும்) சொன்னார் என நீங்கள் அவரைக் குற்றம் சாட்டியதுண்டா?" என்று கேட்டார். நான் "இல்லை" என்றேன். "அந்த மனிதரை யார் பின்பற்றுகின்றனர்? மேட்டுக்குடி மக்களா, அல்லது நலிந்த பிரிவினரா?" என்று கேட்டார். நான் "அல்ல. நலிந்த பிரிவினரே (அவரைப் பின்பற்றுகின்றனர்)" என்றேன்.
"அவரைப் பின்பற்றுவோர் கூடிக்கொண்டே செல்கின்றனரா, அல்லது குறைந்துவருகின்ற னரா?" என்று கேட்டார். நான் "குறைவதில்லை. (நாளுக்கு நாள்) அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்" என்றேன்.
"அவரது மார்க்கத்தில் இணைந்த பிறகு அதன் மீது அதிருப்தியடைந்து எவரேனும் அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?" என்று கேட்டார். நான் "இல்லை (யாரும் பழைய மதத்திற்குத் திரும்புவதில்லை)" என்றேன்.
"அந்த மனிதருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?" என்று கேட்டார். நான் "ஆம்" என்றேன். "அவருடன் நீங்கள் நடத்திய போர்(களின் முடிவு)கள் எவ்வாறு அமைந்தன?" என்று கேட்டார். நான் "எங்களுக்கிடையேயான போர், (வெற்றியும் தோல்வியும் சுழல் முறையில் வரும்) கிணற்று வாளியாக உள்ளது. ஒரு முறை அவர் எங்களை வெல்கிறார்;மறுமுறை நாங்கள் அவரை வெல்கிறோம்" என்றேன்.
"அந்த மனிதர் ஒப்பந்த மீறல் செய்கின்றாரா?" என்று கேட்டார். நான் "இல்லை (தற்போது நடைமுறையிலுள்ள இந்த ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக் கால கட்டத்தில் நாங்களும் அவரும் இருந்துவருகிறோம். இதில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்று எங்களுக்குத் தெரியாது" என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இதைத் தவிர (நபியவர்களைக் குறை சொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் திணிக்க எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
தொடர்ந்து அவர், "(உங்களில்) எவரேனும் இவருக்கு முன் இப்படி(த் தம்மை இறைத்தூதர் என) எப்போதாவது வாதித்ததுண்டா?" என்று கேட்டார். நான் "இல்லை" என்று கூறினேன்.
பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரிடம் பின்வருமாறு கூறினார்:
அவரிடம் (அபூசுஃப்யானிடம்) கூறிவிடு: நான் உம்மிடம் அந்த மனிதருடைய குலத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு நீர் "அவர் எங்களில் சிறந்த குலத்தை உடையவர்" என்று கூறினீர். இவ்வாறே இறைத்தூதர்கள் ஒரு சமுதாயத்தின் நற்குடியில்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
நான் உம்மிடம் "அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றனரா?" என்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லை" என்று விடையளித்தீர். அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்(ததாக நீர் கூறியிருந்)தால், "தம் முன்னோரின் ஆட்சியதிகாரத்தை(த் தாமும்) அடைய விரும்பும் ஒரு (சராசரி) மனிதர்தாம் இவர்" என்று நான் கூறியிருப்பேன்.
நான் உம்மிடம் அவரைப் பின்பற்றுவோர் பற்றி, "மக்களில் மேட்டுக்குடியினர் அவரைப் பின்பற்றுகின்றனரா, அல்லது நலிந்த பிரிவினரா?" என்று கேட்டேன். அதற்கு நீர் "நலிந்த பிரிவினரே அவரைப் பின்பற்றுகின்றனர்" என்று பதிலளித்தீர். (பெரும்பாலும்) நலிந்த பிரிவினர்தாம் இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர்.
நான் உம்மிடம் "அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன்பு, (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என நீங்கள் குற்றம் சாட்டியதுண்டா" என்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லை" என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேச(த் துணிய)ôத அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்லமாட்டார் என்று நான் புரிந்துகொண்டேன்.
நான் உம்மிடம் "அவரது மார்க்கத்தில் இணைந்த பின் எவரேனும் அதன் மீது அதிருப்தி கொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?" என்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லை" என்று விடையளித்தீர். இறைநம்பிக்கை (ஈமான்) இத்தகையதே; அதன் மலர்ச்சி மனங்களில் கலந்துவிடும்போது (அதைக் குறித்து எவருமே அதிருப்தியடையமாட்டார்).
நான் உம்மிடம் "அவ(ரைப் பின்பற்றுபவ)ர்கள் (நாளுக்கு நாள்) அதிகரித்துவருகின்றனரா, அல்லது குறைந்துவருகின்றனரா" என்று கேட்டேன். அதற்கு நீர் "அவர்கள் அதிகரித்தே வருகின்றனர்" என்று பதிலளித்தீர். இறைநம்பிக்கை என்பது, அது முழுமையடையும்வரை அவ்வாறுதான் (வளர்ச்சியை நோக்கியே செல்லும்).
நான் உம்மிடம் "அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?" என்று கேட்டேன். அதற்கு நீர் "அவருடன் நீங்கள் போர் செய்துள்ளதாகவும் உங்களுக்கும் அவருக்கும் இடையே நடைபெறும் போரில் (வெற்றியும் தோல்வியும்) கிணற்று வாளிகள் போன்று சுழல் (முறையில் அமை)கின்றன. ஒரு முறை உங்களை அவர் வெல்வார். மறுமுறை அவரை நீங்கள் வெல்கிறீர்கள்" என்று கூறினீர். இறைத்தூதர்கள் இத்தகையோரே. முதலில் அவர்கள் சோதிக்கப்படுவார்கள். பிறகு இறுதி முடிவு அவர்களுக்கே (சாதகமாக) அமையும்.
நான் உம்மிடம் "அவர் ஒப்பந்த மீறல் செய்கிறாரா?" என்று கேட்டேன். அதற்கு நீர் "அவர் ஒப்பந்த மீறல் செய்வதில்லை" என்று பதிலளித்தீர். இறைத்தூதர்கள் இத்தகையோரே. அவர்கள் வாக்கு மீறமாட்டார்கள்.
நான் உம்மிடம் "இவருக்கு முன்னர் (உங்களில்) எவரேனும் இவ்வாதத்தை முன்வைத்த துண்டா?" என்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லை" என்று பதிலளித்தீர். இவருக்கு முன்னர் எவரேனும் இவ்வாதத்தை முன்வைத்திருந்(ததாக நீர் கூறியிருந்)தால், "தமக்கு முன்னர் (சிலரால்) முன்வைக்கப்பட்ட ஒரு வாதத்தைப் பின் பற்றிச் செல்கின்ற ஒரு (சராசரி) மனிதரே இவர்" என்று நான் சொல்லியிருப்பேன்.
பிறகு ஹெராக்ளியஸ், "அந்த மனிதர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்?" என்று கேட்டார். "தொழுகையை நிறைவேற்றுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் உறவுகளைப் பேணுமாறும் சுயக்கட்டுப்பாட்டுடன் வாழுமாறும் எங்களுக்குக் கட்டளையிடுகிறார்" என்று நான் கூறினேன்.
அதற்கு ஹெராக்ளியஸ், "நீர் சொல்வது உண்மையாயிருப்பின், நிச்சயமாக அவர் ஓர் இறைத்தூதர்தாம். (இறைத்தூதரான) அவர் வரவிருப்பதாக நான் அறிந்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷியரான) உங்களிலிருந்து வருவார் என்று நான் நினைத்திருக்க வில்லை. நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தால், அவரைச் சந்திப்பதில் எனக்கு விருப்பம் உண்டு. நான் அவருக்கு அருகில் இருந்திருந்தால் அவருடைய பாதங்களைக் கழுவியிருப்பேன். அவரது ஆட்சி(யின் எல்லை) என் பாதங்களுக்குக் கீழ்வரை வந்து சேரும்" என்று கூறினார்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தைக் கொண்டுவந்து வாசிக்கச் சொன்னார் ஹெராக்ளியஸ். அக்கடிதத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்): நேர்வழியைப் பின்பற்றியவர்மீது சாந்தி (சலாம்) நிலவட்டும். இறை வாழ்த்துக்குப் பின்!
இஸ்லாத்தின் (ஏகத்துவ) அழைப்பை ஏற்குமாறு உங்களை நான் அழைக்கிறேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்க. (ஏற்றுக்கொண்டால் ஈருலகிலும்) பாதுகாப்புப் பெறுவீர். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அல்லாஹ் உங்களுக்குச் சேர வேண்டிய நற்பலனை இரு மடங்காகத் தருவான்.
நீங்கள் புறக்கணித்தால் குடி(யானவர்)களின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் போனதற்கான குற்றமும்) உங்களையே சேரும். "வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பொதுவானதொரு கொள்கையின்பால் நீங்கள் வாருங்கள். (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வழிபடக் கூடாது; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது; அல்லாஹ்வை விடுத்து நம்மில் சிலர் வேறு சிலரைக் கடவுள்களாக ஆக்கிக்கொள்ளக் கூடாது என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதற்குப் பிறகும்) அவர்கள் புறக்கணித்தால், நாங்கள் (அல்லாஹ்வுக்கு அடிபணிந்த) முஸ்லிம்கள்தாம் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள் என்று சொல்லிவிடுங்கள். (3:64)
ஹெராக்ளியஸ் அந்தக் கடிதத்தைப் படித்து முடித்தபோது, அவர் அருகிலிருந்த (மதகுருமார்கள் மற்றும் ரோம பைஸாந்திய ஆட்சியாளர்களின்) குரல்கள் உயர்ந்தன. கூச்சல் அதிகரித்தது. ஹெராக்ளியஸின் உத்தரவின்பேரில் நாங்கள் (அவையிலிருந்து) வெளியேற்றப்பட்டோம்.
நாங்கள் வெளியே வந்தபோது நான் என் நண்பர்களிடம் "இப்னு அபீகப்ஷா (முஹம்மது)வின் விவகாரம் (மார்க்கம்) வலிமை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரான (ரோமானிய) மன்னரே அவருக்கு (முஹம்மதுக்கு) அஞ்சுகிறாரே!"என்று சொன்னேன்.
அன்று தொட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விவகாரம் (மார்க்கம்) விரைவில் வெற்றிபெறும் என உறுதிபூண்டவனாக நான் இருக்கலானேன். முடிவில் அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தைப் புகுத்தினான்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "பாரசீகப் படையை (ரோமாபுரி மன்னர்) கைஸர் (சீசர்) மூலம் அல்லாஹ் விரட்டியடித்தபோது, தமக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக "ஹிம்ஸி"லிருந்து பைத்துல் மக்திஸுக்கு (ஈலியா) கைஸர் (ஹெராக்ளியஸ்) வந்தார்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
இந்த அறிவிப்புகளில் "அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமான (முஹம்மத் எழுதிய கடிதம்)" என்று காணப்படுகிறது. "குடி(யானவர்)கள்" என்பதைக் குறிக்க ("அரீசிய்யீன்" என்பதற்குப் பதிலாக) "யரீசிய்யீன" என்ற சொல்லும் "இஸ்லாத்தின் அழைப்பு" என்பதைக் குறிக்க ("திஆயத்துல் இஸ்லாம்" என்பதற்குப் பகரமாக) "தாஇயத்துல் இஸ்லாம்" எனும் சொற்றொடரும் ஆளப்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 32
பாடம் : 27 (ஏக இறை) அல்லாஹ்வை ஏற்குமாறு இறைமறுப்பாளர்களான அரசர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதங்கள்.
3638. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர்) கிஸ்ரா (குஸ்ரூ), (ரோம பைஸாந்திய மன்னர்) கைசர் (சீசர்), (அபிசீனிய அரசர்) நஜாஷீ (நீகஸ்) மற்றும் ஒவ்வொரு சர்வாதிகார ஆட்சியாளருக்கும் (ஏக இறை) அல்லாஹ்வை ஏற்குமாறு அழைப்பு விடுத்துக் கடிதம் எழுதினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்த நஜாஷீ இவரல்லர்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்த நஜாஷீ இவரல்லர்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் "நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்த நஜாஷீ இவரல்லர்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 32
பாடம் : 28 ஹுனைன் போர்.
3639. அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுனைன் போரில் கலந்துகொண்டேன். (போர் உக்கிரமாக நடந்தபோது) நானும் அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களும் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே இருந்தோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குரிய வெள்ளைக் கோவேறு கழுதையின் மீதிருந்தார்கள். அந்தக் கழுதையை ஃபர்வா பின் நுஃபாஸா அல்ஜுதாமீ என்பார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
இறைமறுப்பாளர்களும் முஸ்லிம்களும் மோதிக்கொண்டபோது முஸ்லிம்கள் புறமுதுகிட்டு ஓடினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ (நிலைகுலையாமல்) தமது கோவேறு கழுதையை இறைமறுப்பாளர்களை நோக்கி விரட்டினார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கழுதையின் கடிவாளத்தைப் பிடித்து, அது விரைவாகச் சென்று விடக் கூடாது என்பதற்காக அதைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தேன்.
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாகனத்தின் சேணத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்பாஸ்! கருவேல மரத்தின் (கீழ் "ரிள்வான்" உடன்படிக்கை செய்த) தோழர்களை அழையுங்கள்" என்று கூறினார்கள். நான் உரத்த குரலில் "கருவேல மரத்தின் (கீழ் "ரிள்வான்" ஒப்பந்தம் செய்த) நண்பர்கள் எங்கே?" என்று அழைத்தேன். (அப்பாஸ் (ரலி) அவர்கள் உரத்த குரலுடையவராக இருந்தார்கள்.)
அல்லாஹ்வின் மீதாணையாக! (பிரிந்தோடிய) முஸ்லிம்கள், எனது குரலைக் கேட்டவுடன் பசு தன் கன்றுகளை நோக்கித் தாவிவருவதைப் போன்று "இதோ வந்துவிட்டோம்; இதோ வந்துவிட்டோம்" என்று கூறியவாறு தாவிவந்து இறைமறுப்பாளர்களுடன் போரிட்டனர்.
அன்சாரிகளிடையே "அன்சாரிகளே! அன்சாரிகளே!" என்று அழைப்பு விடுக்கப்பட்டது. பிறகு பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாருக்கு மட்டுமே அழைப்பு விடுக்க வேண்டியிருந்தது. அப்போது அவர்கள், "பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரே! பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரே!" என்று அழைத்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கோவேறுகழுதையில் அமர்ந்தவாறு தலையை உயர்த்தி சண்டையைக் கவனித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கல் அடுப்பு கனன்றுகொண்டிருக்கும் நேரமிது" என்று கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கைப்பிடி சிறு கற்களை அள்ளி இறைமறுப்பாளர்களின் முகத்தில் எறிந்தார்கள். பிறகு "முஹம்மதின் இறைவன் மீதாணையாக! அவர்கள் தோற்றனர்" என்று கூறினார்கள்.
நான் பார்த்துக்கொண்டே போனேன். அப்போது போர் தனது போக்கில் (உக்கிரமாக) நடந்துகொண்டிருந்தது. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிந்ததுதான் தாமதம்; இறைமறுப்பாளர்களின் பலம் குன்றிக்கொண்டே செல்வதையும் அவர்களின் கதை முடிவுக்கு வருவதையுமே நான் காணலானேன்.
அத்தியாயம் : 32
3640. மேற்கண்ட ஹதீஸ் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "(அக்கழுதையை அன்பளிப்பாக அளித்தவரின் பெயர்) ஃபர்வா பின் நுஆமா அல்ஜுதாமீ" என்று இடம்பெற்றுள்ளது. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறு கற்களை அள்ளி எறிந்துவிட்டு) "அவர்கள் தோற்றனர்;கஅபாவின் அதிபதி மீதாணையாக! அவர்கள் தோற்றனர்; கஅபாவின் அதிபதி மீதாணையாக என்று கூறினார்கள்"என்றும் காணப்படுகிறது.
மேலும் "முடிவில் அல்லாஹ் இறைமறுப்பாளர்களைத் தோற்கடித்தான்" என்று கூடுதலாகவும் இடம்பெற்றுள்ளது.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குப் பின்னால் தமது கோவேறு கழுதையிலிருந்தவாறு விரட்டிக்கொண்டிருந்ததை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது" என்றும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்து.
அதில் "நான் ஹுனைன் போரில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், மேற்கண்ட ஹதீஸே இந்த அறிவிப்பைவிட அதிகத் தகவல் உள்ளதும் முழுமையானதும் ஆகும்.
அத்தியாயம் : 32
3641. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், "அபூஉமாரா! நீங்கள் ஹுனைன் போர் நாளில் வெருண்டு ஓடினீர்களா?" என்று கேட்டார். அதற்கு பராஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்: இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்களுடைய தோழர்களில் சில இளைஞர்கள் ஆயுதமின்றி, அல்லது அதிகமான ஆயுதமின்றி அவசரப்பட்டு நிராயுதபாணிகளாக (போருக்கு)ப் புறப்பட்டு வந்துவிட்டார்கள்.
அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் குலத்தாரில் அம்பெய்யும் வீரர்களைச் சந்தித்தனர். அந்தக் குலத்தாரின் ஒரு அம்பு கூட குறி தவறாது. அவர்கள் கூட்டாகச் சேர்ந்து குறி தவறாமல் ஒரே நேரத்தில் அம்பெய்தார்கள். எனவே, அங்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிவந்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளைக் கோவேறுகழுதையில் அமர்ந்துகொண்டிருக்க, அதை அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் ஓட்டிக்கொண்டு வந்தார்கள். (நபித்தோழர்களின் நிலையைக் கண்டதும் தமது கழுதையிலிருந்து) இறங்கி (அல்லாஹ்விடம்) உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள்.
மேலும், "நான் இறைத்தூதர்தாம்; (இதில்) பொய் இல்லை. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்" என்று கூறினார்கள். பிறகு தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.
அத்தியாயம் : 32
3642. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் வந்து, "நீங்கள் (அனைவரும்) ஹுனைன் போர் நாளில் பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்தீர்களா, அபூஉமாரா?" என்று கேட்டார்.
அதற்கு பராஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் அறுதியிட்டுச் சொல்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும். மக்களில் அவசரப்பட்டு வந்த சில நிராயுதபாணிகள் (எதிரிகளான) இந்த ஹவாஸின் குலத்தாரை நோக்கிச் சென்றனர். அவர்களோ வில்வீரர்களாய் இருந்தனர். அவர்கள் கூட்டமாகச் சேர்ந்து ஒரே நேரத்தில் அம்புக் கூட்டிலிருந்து அம்புகளை எடுத்து எய்தனர்.
அந்த அம்புகள் வெட்டுக்கிளி கூட்டங்களைப் போன்று (பறந்துவந்தன). இதனால், (முஸ்லிம்கள்) சிதறி ஓடினர். பிறகு மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். அப்போது அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோவேறுகழுதையை ஓட்டிக்கொண்டு (நடந்து) வந்தார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கழுதையிலிருந்து) இறங்கி அல்லாஹ்விடம் உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இறைத்தூதர்தாம்; (இதில்) பொய் இல்லை;நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்" என்றும், "இறைவா! உன் உதவியை இறக்குவாயாக!" என்றும் கூறிக்கொண்டிருந்தார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! போர் (உச்சகட்டமடைந்து) சிவந்து (கனன்று) கொண்டிருந்த போது நபியவர்களையே கேடயமாக்கி நாங்கள் தப்பித்துக்கொண்டிருந்தோம். எங்களில் வீரர்கள்கூட நபியவர்களுக்கு நேராக (அவர்களுக்குப் பின்னாலேயே) நின்று கொண்டிருந்தனர்.
அத்தியாயம் : 32
3643. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கைஸ் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம், "ஹுனைன் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டுவிட்டு நீங்கள் வெருண்டு ஓடினீர்களா?" என்று கேட்டார். அதற்கு பராஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெருண்டோடவில்லை. ஹவாஸின் குலத்தார் அன்றைய தினம் வில்வீரர்களாய் இருந்தனர்.
(முதலில்) நாங்கள் அவர்கள்மீது தாக்குதல் நடத்தியபோது அவர்கள் சிதறியோடினர். எனவே, நாங்கள் குனிந்து போர்ச் செல்வங்களைச் சேகரிப்பதில் மும்முரமாய் ஈடுபட்டோம். அப்போது (சிதறியோடிய) எதிரிகள் எங்களை முன்னோக்கி அம்புகளை (கூட்டமாக நின்று) எய்தனர். (எனவே, நிலைகுலைய வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டது.)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வெருண்டோடாமல்) தமது வெள்ளைக் கோவேறுகழுதையில் அமர்ந்திருந்ததை நான் பார்த்தேன். அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இறைத்தூதர்தாம். (இதில்) பொய் இல்லை. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்" என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "பராஉ (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் அபூஉமாரா!" என்று அழைத்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி கேட்டதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மேற்கண்ட ஹதீஸில் குறைந்த தகவல்களே இடம்பெற்றுள்ளன. இவர்களின் அறிவிப்பில் முழுமையான தகவல்கள் காணப்படுகின்றன.
அத்தியாயம் : 32
3644. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்த்து ஹுனைன் போரில் கலந்து கொண்டோம். நாங்கள் எதிரிகளை எதிர்கொண்டபோது, நான் முன்னேறிச் சென்றேன். அப்போது நான் ஒரு மலைக் கணவாய்மீது ஏறினேன்;எதிரிகளில் ஒருவன் என்னை எதிர்கொண்டான். உடனே நான் ஓர் அம்பை எடுத்து அவன்மீது எய்தேன். அவன் என்னைவிட்டு மறைந்து (தப்பித்துக்)கொண்டான். பிறகு அவன் என்ன ஆனான் என்று எனக்குத் தெரியவில்லை.
அப்போது எதிரிகளை நான் பார்த்தேன். அவர்கள் மற்றொரு கணவாய்மீது ஏறி விட்டிருந்தார்கள். அவர்களும் நபித்தோழர்களும் மோதிக்கொண்டனர். பிறகு நபித்தோழர்கள் பின்வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாயினர். நானும் தோல்வி கண்டு திரும்பினேன். அப்போது என்மீது இரு போர்வைகள் இருந்தன. ஒன்றை நான் கீழங்கியாகவும் மற்றொன்றை மேலங்கியாகவும் போர்த்திக்கொண்டிருந்தேன்.
(நான் திரும்பிக்கொண்டிருந்தபோது) எனது கீழங்கி அவிழ்ந்துவிட்டது. உடனே நான் மேலங்கியையும் கீழங்கியையும் சேர்த்து (சுருட்டிப்) பிடித்துக்கொண்டேன். அப்போது நான் தோற்றுப்போனவனாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள் தமது வெள்ளைக் கோவேறுகழுதையில் (நிலைகுலையாமல்) இருந்தார்கள்.
அப்போது அவர்கள், "இப்னுல் அக்வஉ, திடுக்கிடும் நிகழ்வெதையோ கண்டுள்ளார்" என்று கூறினார்கள். எதிரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டதும் அவர்கள் தமது கோவேறுகழுதையிலிருந்து இறங்கி,பூமியிலிருந்து ஒரு கைப்பிடி மண் அள்ளி, அவர்களது முகங்களை நோக்கி எறிந்தார்கள்.
அப்போது "இம்முகங்கள் இழிவடைந்தன" என்று கூறினார்கள். எதிரிகளில் ஒருவரது முகம் கூட விடுபடாமல் அனைவருடைய கண்களையும் அந்த ஒரு பிடி மண்ணால் அல்லாஹ் நிரப்பாமல் விடவில்லை. பிறகு அவர்கள் புறமுதுகிட்டு ஓடினர்.
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் எதிரிகளைத் தோற்கடித்தான். அவர்கள் விட்டுச் சென்ற போர்ச்செல்வங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கிடையே பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 29 தாயிஃப் போர்.
3645. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்தாரை முற்றுகையிட்டபோது அவர்களால் அந்நகரத்தாரை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, "இறைவன் நாடினால், நாம் (நாளை மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்"என்று கூறினார்கள். நபித்தோழர்கள், "இ(ந்நகரத்)தை வெல்லாமல் நாம் திரும்புவதா?" என்று கேட்டார்கள்.
(தோழர்களின் தயக்கத்தைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "காலையில் போருக்குப் புறப்படுங்கள்"என்றார்கள். அவ்வாறே அவர்கள் (மறு நாள்) காலை போருக்குச் சென்று பலத்த காயங்களுக்கு ஆளானார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னது நபித் தோழர்களுக்கு (இப்போது) மகிழ்ச்சி (தரும் செய்தி)யாக அமைந்தது. (அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 30 பத்ருப் போர்.
3646. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூசுஃப்யான் (தலைமையில் வணிகக் குழு) வரும் தகவல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (தம் தோழர்களிடம்) ஆலோசனை கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது கருத்தைச்) சொன்னபோது, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தமது கருத்தைச்) சொன்னபோதும் கண்டுகொள்ளவில்லை.
அப்போது (அன்சாரிகளில் கஸ்ரஜ் கூட்டத்தாரின்) தலைவர் சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் எழுந்து, "எங்(கள் அன்சாரிகளின் கருத்து)களையா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! எங்கள் குதிரைகளைக் கடலுக்குள் செலுத்துமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நிச்சயமாக நாங்கள் செலுத்துவோம். எங்கள் குதிரைகளின் பிடரிகளில் அடித்து (தொலைவில் உள்ள) "பர்குல் ஃகிமாத்" நோக்கி (விரட்டிச்) செல்லுமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நாங்கள் அவ்வாறே செய்வோம்" என்று கூறினார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களைப் புறப்படச்செய்தார்கள். மக்கள் புறப்பட்டுச் சென்று பத்ர் எனும் இடத்தில் தங்கினர். அப்போது அவர்களிடம் குறைஷியரின் தண்ணீர் சுமக்கும் ஒட்டகக்குழாம் ஒன்று வந்தது. அவர்களில் பனுல் ஹஜ்ஜாஜ் குலத்தாரின் கறுப்பு அடிமை ஒருவனும் இருந்தான்.
நபித்தோழர்கள், அவனைப் பிடித்துக்கொண்டனர். அவனிடம் அபூசுஃப்யானைப் பற்றியும் அவருடைய சக பயணிகள் பற்றியும் விசாரித்தனர். அவன் "அபூசுஃப்யானைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இதோ அபூஜஹ்ல், உத்பா,ஷைபா, உமய்யா பின் கலஃப் (ஆகியோர் உங்களை நோக்கிப் படைதிரட்டி வந்துகொண்டிருக்கின்றனர்)" என்று சொன்னான். அவன் இவ்வாறு சொன்னதும் (அவன் பொய் சொல்வதாக எண்ணிக்கொண்டு) அவனை நபித் தோழர்களை அடித்தனர். அப்போது அவன் "ஆம் (எனக்குத் தெரியும்); நான் சொல்கிறேன். இதோ அபூசுஃப்யான் வந்துகொண்டிருக்கிறார்" என்று (பொய்) சொன்னான்.
அடிப்பதை நிறுத்திவிட்டு அவனிடம் கேட்டால் "அபூசுஃப்யான் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இதோ அபூஜஹ்ல், உத்பா, ஷைபா, உமய்யா பின் கலஃப் மக்களுடன் (வந்துகொண்டிருக்கின்றனர்)" என்று சொன்னான். மீண்டும் அவன் இவ்வாறு சொன்னதும் அவனை நபித்தோழர்கள் அடித்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) நின்று தொழுது கொண்டிருந்தார்கள். இ(வ்வாறு அவர்கள் நடந்து கொள்வ)தை அவர்கள் கண்டதும் தொழுகையை (சுருக்கமாக) முடித்துத் திரும்பினார்கள். மேலும், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவன் உண்மையைச் சொல்லும்போது அடிக்கிறீர்கள். பொய் சொல்லும்போது அடிப்பதை நிறுத்து விடுகிறீர்களே!" என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இது இன்ன மனிதர் மாண்டு விழும் இடம்" என்று கூறி, பூமியில் தமது கையை வைத்து "இவ்விடத்தில் இவ்விடத்தில்" என்று காட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கை வைத்துக் காட்டிய இடத்தைவிட்டு அவர்களில் எவரும் தள்ளி விழவில்லை. (சரியாக அதே இடத்தில் போரில் மாண்டு கிடந்தனர்).
அத்தியாயம் : 32
பாடம் : 31 மக்கா வெற்றி .
3647. அப்துல்லாஹ் பின் ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு ரமளான் மாதத்தில் (சிரியா நாட்டிலிருந்த) முஆவியா (ரலி) அவர்களைச் சந்திக்க சில தூதுக் குழுக்கள் சென்றன. (அத்தூதுக் குழுவில் நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் இருந்தோம்.) அப்போது எங்களில் சிலர் வேறுசிலருக்கு (முறைவைத்து) உணவு சமைத்(து விருந்தளித்)தனர். அபூஹுரைரா (ரலி) அவர்கள் தமது கூடாரத்திற்கு மக்களை அதிகமாக (விருந்திற்கு) அழைப்பவராக இருந்தார்கள்.
அப்போது நான், "நான் உணவு சமைத்து மக்களை என் கூடாரத்திற்கு அழைக்கக்கூடாதா?" என்று கூறிவிட்டு, உணவு தயாரிக்க உத்தரவிட்டேன். பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்களை மாலையில் சந்தித்து, "இன்றிரவு என்னிடம்தான் விருந்து" என்றேன். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், "நீ என்னை முந்திக்கொண்டாய்" என்று கூறினார்கள். நான் "ஆம்" என்று கூறிவிட்டு, மக்களை (எனது கூடாரத்திற்கு) அழைத்தேன்.
அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் (நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க) "அன்சாரிக் கூட்டத்தாரே! உங்கள் செய்திகளில் ஒன்றைக் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?" என்று கேட்டார்கள். பிறகு மக்கா வெற்றியைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவுக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களை, (தமது படையின்) இரு பக்கவாட்டுப் படைகளில் ஒன்றுக்குத் தளபதியாக நியமித்தார்கள்.
காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை மற்றொரு பக்கவாட்டுப் படைக்குத் தளபதியாக நியமித்தார்கள். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை நிராயுதபாணி(களான காலாட் படை)யினருக்குத் தளபதியாக நியமித்தார்கள்.
அவர்கள் அனைவரும் பள்ளத்தாக்கின் மையப்பகுதிக்கு வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படையின் முக்கியப்பகுதியில் இருந்தார்கள். அப்போது அவர்களது பார்வையில் நான் பட்டபோது, "அபூஹுரைரா நீயா?" என்று கேட்டார்கள். நான், "(ஆம்) இதோ, வந்தேன் அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். அப்போது அவர்கள், "ஓர் அன்சாரித் தோழரே (இப்போது) என்னிடம் வருவார் (என்றே நான் எதிர்பார்த்தேன்)" என்றார்கள்.
ஷைபான் பின் ஃபர்ரூக் (ரஹ்) அல்லாதோரின் அறிவிப்பில், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,எனக்காக அன்சாரிகளைச் சப்தமிட்டு அழைப்பீராக! என்றார்கள். உடனே அன்சாரிகள் வந்து குழுமினர்" என இடம்பெற்றுள்ளது.
(எதிரிகளான) குறைஷியர் தம்முடைய பல்வேறு குலத்தாரையும் ஆதரவாளர்களையும் ஒன்றுகூட்டி, "இவர்களை நாம் (முதலில் போருக்கு) அனுப்பிவைப்போம். இவர்களுக்கு (வெற்றி) ஏதேனும் கிடைத்தால், (குறைஷியரான) நாமும் இவர்களுடன் சேர்ந்துகொள்வோம். இவர்களுக்குத் தோல்வி ஏற்பட்டால், நம்மிடம் (முஸ்லிம்களால்) கோரப்படுவதை நாம் வழங்கிவிடுவோம்" என்று கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் (ஒற்றுமையாக உள்ள) குறைஷியரின் பல்வேறு குலத்தாரையும் ஆதரவாளர்களையும் காண்கிறீர்கள் (அல்லவா?)" என்று கூறிவிட்டு, தம்முடைய ஒரு கையின் மீது மற்றொரு கையை வைத்து (அவர்களது ஒற்றுமையை) சைகை செய்து காட்டினார்கள்.
பிறகு "நீங்கள் (வெற்றி அடைந்த பின்) என்னை "ஸஃபா" மலைக்கருகில் வந்து சந்தியுங்கள்" என்று கூறி(விட்டுப் போ)னார்கள்.
அவ்வாறே நாங்கள் நடந்து சென்றோம். எங்களில் ஒருவர் எதிரிகளில் ஒருவரைத் தாக்கி வீழ்த்த நினைத்தால், (தடையின்றித்) தாக்கி வீழ்த்தினார். ஆனால், எதிரிகளில் யாரும் எங்களை நோக்கி எதையும் வீச இயலவில்லை.
அப்போது (இஸ்லாத்தைத் தழுவியிருந்த) அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிக் குலமே அடியோடு அழிக்கப்படுகிறது. இன்றைக்குப் பிறகு குறைஷியரே இருக்கமாட்டார்கள்" என்று கூறினார்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அபூசுஃப்யானின் இல்லத்தினுள் நுழைந்துகொள்கிறாரோ, அவர் அபயம் பெற்றவராவார்" என்று அறிவித்தார்கள்.
அப்போது அன்சாரிகள் ஒருவருக்கொருவர் "இந்த மனிதருக்கு (நபியவர்களுக்கு) தமது ஊர்மீது பற்றும், தம் குலத்தார்மீது பரிவும் ஏற்பட்டுவிட்டது" என்று பேசிக்கொண்டனர்.
அப்போது இறைவனிடமிருந்து செய்தி (வஹீ) வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு "வஹீ" வந்தால், அது எங்களுக்குத் தெரியாமல் போகாது. அப்போது "வஹீ" முடிவடையும் வரை எங்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் பார்வையைச் செலுத்தமாட்டார்.
அவ்வாறே "வஹீ" வந்து முடிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்சாரி சமுதாயமே!" என்று அழைத்தார்கள். அம்மக்கள் "இதோ வந்தோம், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினர். "இம்மனிதருக்குத் தமது ஊர்மீது பற்று ஏற்பட்டுவிட்டது என்று நீங்கள் சொன்னீர்கள்(தானே)?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "ஆம்;அவ்வாறு கூறவே செய்தோம்" என்று (உண்மை) சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறன்று; நான் அல்லாஹ்வின் அடிமையும் தூதரும் ஆவேன். நான் அல்லாஹ்வை நோக்கியும் உங்களிடமும் (நாடு துறந்து) ஹிஜ்ரத் வந்தேன். என் வாழ்வு உங்கள் வாழ்வோடுதான்; என் இறப்பு உங்கள் இறப்போடுதான்" என்று கூறினார்கள்.
அப்போது அன்சாரிகள் அழுதுகொண்டே வந்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் கொண்ட பேராசையின் காரணத்தாலேயே அவ்வாறு நாங்கள் கூறினோம்" என்று சொன்னார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களது சொல்லை உண்மை என ஏற்று, நீங்கள் கூறிய காரணத்தையும் ஏற்கின்றனர்" என்று சொன்னார்கள்.
அப்போது மக்களில் சிலர், அபூசுஃப்யானின் வீட்டை நோக்கிச் சென்றனர். வேறுசிலர் தங்கள் (வீட்டுக்) கதவுகளைப் பூட்டிக்கொண்டனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹஜருல் அஸ்வத்" எனும் கல் இருக்குமிடத்தை நோக்கி வந்து, அதைத் தமது கையால் தொட்டு முத்தமிட்டார்கள். பிறகு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்.
அப்போது இறையில்லம் கஅபாவுக்கு அருகிலிருந்த ஒரு சிலையை நோக்கி வந்தார்கள். அதை மக்கள் வழிபட்டுவந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் வில்லொன்று இருந்தது. அவர்கள் அந்த வில்லின் வளைவுப் பகுதியை பிடித்திருந்தார்கள். அந்தச் சிலைக்கு அருகில் வந்ததும், அந்த வில்லால் அதன் கண்ணில் குத்திக்கொண்டே "உண்மை வந்துவிட்டது. பொய்மை அழிந்துவிட்டது" என்று கூறலானார்கள்.
இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்ததும் "ஸஃபா" குன்றுக்கு வந்து, அதன் மீது ஏறி, இறையில்லம் கஅபாவைப் பார்த்தார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழவும், அவன் நாடிய சிலவற்றை வேண்டிப் பிரார்த்திக்கவும் ஆரம்பித்தார்கள்.
அத்தியாயம் : 32
3648. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய ஒரு கையை மற்றொரு கைமீது வைத்து இரு கைகளையும் இணைத்துக் காட்டியபடி "அவர்களை அறுவடை செய்துவிடுங்கள்" என்று கூறினார்கள்" என இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த அறிவிப்பில், "அன்சாரிகள் அவ்வாறு நாங்கள் கூறத்தான் செய்தோம், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவ்வாறாயின் (முஹம்மத் - புகழப்பட்டவர் எனும்) என் பெயருக்கு என்ன அர்த்தம்? அவ்வாறன்று; நான் அல்லாஹ்வின் அடிமையும் தூதரும் ஆவேன்" என்று கூறினார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3649. அப்துல்லாஹ் பின் ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (சிரியாவிலிருந்த) முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களைச் சந்திக்க ஒரு தூதுக் குழுவில் சென்றோம். எங்களிடையே அபூஹுரைரா (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
எங்களில் ஒவ்வொருவரும் தம் சக பயணிகளுக்கு ஒரு நாளைக்கு ஒருவர் என்ற முறையில் உணவு தயாரித்தோம். என்னுடைய முறைநாள் வந்தபோது நான், "அபூஹுரைரா (ரலி) அவர்களே! இன்று எனது முறைநாள். மக்கள் (எனது) இருப்பிடத்திற்கு வந்துவிட்டனர். ஆனால், உணவு இன்னும் வந்து சேரவில்லை. உணவு வரும்வரை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி(ய ஹதீஸ்) கூறினால் நன்றாயிருக்குமே!" என்று கூறினேன். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
மக்கா வெற்றி நாளில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை வலப் பக்க அணியினருக்குத் தளபதியாக நியமித்தார்கள்; ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களை இடப் பக்க அணியினருக்கும் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை (நிராயுதபாணிகளாயிருந்த) காலாட்படையினர் மற்றும் பள்ளத்தாக்கின் மையப் பகுதியில் இருந்தோர் ஆகியோருக்கும் தளபதியாக நியமித்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஹுரைரா! அன்சாரிகளை எனக்காக அழையுங்கள்!" என்று கூறினார்கள். அவ்வாறே நான் அவர்களை அழைத்தேன். அப்போது அன்சாரிகள் விரைந்து வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்சாரி சமுதாயத்தாரே! (எதிரிக்) குறைஷியரின் பல்வேறு குலத்தாரை நீங்கள் காண்கிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "ஆம்" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது கையை வெளியிலெடுத்து வலக் கையை இடக் கையின் மீது வைத்து சைகை செய்து காட்டியபடி, "நாளைய தினம் (களத்தில்) அவர்களை நீங்கள் சந்தித்தால் அவர்களை அறுவடை செய்துவிடுங்கள்" என்று கூறினார்கள். பிறகு, "ஸஃபாவில் சந்திப்போம்" என்று கூறி(விட்டுச் செல்லலா)னார்கள். அவ்வாறே முஸ்லிம்கள் கண்ணில் தென்பட்ட (எதிரிகள்) எவரையும் (ஒரேயடியாகத்) தூங்க வைக்காமல் விடவில்லை.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸஃபா மலைமீது ஏறினார்கள். அன்சாரிகள் வந்து ஸஃபா மலையைச் சுற்றி நின்றுகொண்டனர். அப்போது அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிக் கூட்டத்தார் முற்றாகத் துடைத்தெறியப் படுகின்றனர். இன்றைய தினத்திற்குப் பிறகு குறைஷியர் எவரும் இருக்கமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அபூசுஃப்யானின் இல்லத்தினுள் நுழைந்துகொள்கிறாரோ அவர் அபயம் பெற்றவராவார். யார் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டாரோ அவரும் அபயம் பெற்றவராவார். யார் தமது வீட்டுக் கதவை பூட்டிக்கொண்டாரோ அவரும் அபயம் பெற்றவராவார்"என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகள், "இம்மனிதரை (நபி (ஸல்) அவர்களை) குலப் பாசமும் ஊர்ப் பற்றும் பற்றிக்கொண்டுவிட்டன" என்று கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி (வஹீ) வந்தது. (அன்சாரிகள் தம்மைப் பற்றிப் பேசிக் கொண்டதை நபியவர்கள் அறிந்துகொண்டார்கள்). பிறகு "இம்மனிதரை குலப்பாசமும் ஊர்ப்பற்றும் பற்றிக்கொண்டுவிட்டன" என்று கூறினீர்களா? நன்றாக அறிந்துகொள்ளுங்கள்: அப்படியானால் எனது (முஹம்மத் - புகழப்பட்டவர் எனும்) பெயருக்கு என்ன அர்த்தமிருக்க முடியும்?" என்று (மூன்று முறை) கூறிவிட்டு, "நான் அல்லாஹ்வின் அடிமையும் அவனுடைய தூதருமான முஹம்மத் ஆவேன். நான் அல்லாஹ்வின் பக்கமும் உங்களிடமும் (நாடு துறந்து) ஹிஜ்ரத் வந்தேன். இனி என் வாழ்வு உங்கள் வாழ்வோடுதான்; என் இறப்பு உங்கள் இறப்போடுதான்" என்று கூறினார்கள்.
அதற்கு அன்சாரிகள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் கொண்ட பேராசையின் காரணத்தாலேயே நாங்கள் அவ்வாறு சொன்னோம்" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களது சொல்லை ஏற்று, நீங்கள் கூறிய காரணத்தையும் ஏற்கின்றனர்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 32 கஅபாவைச் சுற்றியிருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது.
3650. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முன்னூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தமது கையிலிருந்த குச்சியால் அவற்றைக் குத்தி (அடிக்கத் தொடங்கி)னார்கள். மேலும் "உண்மை வந்துவிட்டது. பொய் அழிந்துவிட்டது. பொய் அழியக்கூடியதாகவே உள்ளது" (17:81) என்றும் "உண்மை வந்துவிட்டது. பொய் புதிதாக ஒன்றும் செய்துவிடவில்லை; இனியும் செய்யப்போவதில்லை" (34:49) என்றும் கூறிக் கொண்டிருந்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் மக்காவினுள் நுழைந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அழியக்கூடியதாகவே உள்ளது" என்பது வரையில்தான் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது வசனம் இடம்பெறவில்லை. மேலும் (சிலைகள் என்பதைக் குறிக்க "நுஸுப்" என்பதற்குப் பகரமாக) "ஸனம்" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 33 மக்கா வெற்றிக்குப் பின் எந்தக் குறைஷியும் கட்டிவைத்துத் தாக்கப்படும் நிலை வராது.
3651. முதீஉ பின் அல்அஸ்வத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில், "இன்றைய தினத்துக்குப் பிறகு மறுமை நாள்வரை குறைஷியர் எவரும் கட்டிவைத்துத் தாக்கப்படும் நிலை ஏற்படாது" என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3652. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அன்றைய தினம் குறைஷியரில் "அல்ஆஸ்" எனும் பெயர் பெற்றிருந்தவர்களில் முதீஉ (ரலி) அவர்களைத் தவிர வேறெவரும் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.
அப்போது முதீஉ அவர்களுடைய பெயர் "அல்ஆஸீ" (மாறு செய்பவர்) என்றிருந்தது. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே "முதீஉ" (கீழ்ப்படிந்தவர்) என்று பெயர் சூட்டினார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 34 "ஹுதைபியா" எனுமிடத்தில் நடந்த "ஹுதைபியா சமாதான ஒப்பந்தம்".
3653. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கும் (குறைஷி) இணைவைப்பாளர்களுக்கும் இடையே ஹுதைபியா நாளில் நடைபெற்ற சமாதான ஒப்பந்தப் பத்திரத்தை அலீ (ரலி) அவர்களே எழுதினார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், "இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் எழுதிக்கொண்டது" என எழுத, இணைவைப்பாளர்கள் "அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்" என எழுதாதீர்கள்" (என்று கூறிவிட்டு நபியவர்களை நோக்கி), "நீர் அல்லாஹ்வின் தூதர்தாம் என நாங்கள் அறிந்திருந்தால் உம்முடன் போரிட்டிருக்கவே மாட்டோம்" என்று கூறினர்.
ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (அலீ (ரலி) அவர்களிடம்), "அ(ந்த வாசகத்)தை அழித்துவிடுங்கள்" என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், "நான் அதை (ஒரு போதும்) அழிக்கப்போவதில்லை" என்று கூறிவிட்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களே தமது கரத்தால் அதை அழித்தார்கள்.
"முஸ்லிம்கள் (அடுத்த ஆண்டு) மக்கா நகருக்குள் நுழைந்து மூன்று நாட்கள் மட்டும் தங்கியிருக்கலாம். நகருக்குள் எந்த ஆயுதத்தையும் உறையிலிட்டுத்தான் ("ஜுலுப்பானுஸ் ஸிலாஹ்") எடுத்துவர வேண்டும்" என இணைவைப்பாளர்கள் நிபந்தனை விதித்திருந்தனர்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்களிடம் "ஜுலுப் பானுஸ் ஸிலாஹ் என்றால் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் "உறையும் அதிலுள்ள ஆயுதமும்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 32