3320. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தான் கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்பவன் நாயைப் போன்றவன் ஆவான். வாந்தியெடுத்த பிறகு எடுத்த வாந்தியைத் தின்கிறது நாய்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
பாடம் : 3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது விரும்பத்தகாத செயலாகும்.
3321. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நான் சிறுவனாக இருந்தபோது) என்னை என் தந்தை (பஷீர் பின் சஅத் - ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, "நான் என்னுடைய இந்த மகனுக்கு என்னிடமிருந்த ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கியுள்ளேன்" என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் இதைப் போன்றே அன்பளிப்பு வழங்கியுள்ளீரா?" என்று கேட்டார்கள். என் தந்தை "இல்லை" என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின், அதை (உங்கள் அன்பளிப்பை)த் திரும்பப் பெற்றுக்கொள்க" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
3322. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நான் சிறுவனாக இருந்தபோது) என்னை என் தந்தை (பஷீர் பின் சஅத் - ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, "நான் என்னுடைய இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கியுள்ளேன்" என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் மகன்கள் அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கினீர்களா?" என்று கேட்டார்கள். என் தந்தை "இல்லை" என்று பதிலளித்தார்கள். "அப்படியானால், அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
3323. மேற்கண்ட ஹதீஸ் மேலும் எட்டு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், யூனுஸ் மற்றும் மஅமர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "உங்கள் மகன்கள் அனைவருக்கும்" என்று இடம்பெற்றுள்ளது. லைஸ் மற்றும் இப்னு உயைனா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும்" என இடம்பெற்றுள்ளது.
முஹம்மத் பின் நுஅமான் (ரஹ்) மற்றும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) ஆகியோரிடமிருந்து லைஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் "பஷீர் பின் சஅத் (ரலி) அவர்கள் (தம் புதல்வர்) நுஅமான் (ரலி) அவர்களுடன் வந்தார்கள்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 24
3324. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (பஷீர் பின் சஅத் - ரலி)) அவர்கள் (சிறுவனாக இருந்த) எனக்கு ஓர் அடிமையை (அன்பளிப்பாக) வழங்கியிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், "இது என்ன அடிமை?" என்று கேட்டார்கள். அதற்கு நான் "என் தந்தை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்" என்றேன். நபி (ஸல்) அவர்கள், (என் தந்தையிடம்) "இவருடைய சகோதரர்கள் அனைவருக்கும் இவருக்கு வழங்கியதைப் போன்று வழங்கினீரா?" என்று கேட்டார்கள். என் தந்தை "இல்லை" என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் "அவ்வாறாயின், அந்த அடிமையைத் திரும்பப் பெற்றுக்கொள்வீராக!" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 24
3325. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நான் சிறுவனாக இருந்தபோது) என் தந்தை தமது செல்வத்தில் ஒன்றை எனக்குத் தானமாக வழங்கினார்கள். அப்போது என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் "நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக ஆக்காத வரை நான் இதை ஒப்புக்கொள்ளமாட்டேன்" என்று கூறினார். ஆகவே, என் தந்தை எனக்குத் தானமாக வழங்கியதற்கு நபி (ஸல்) அவர்களைச் சாட்சியாக்குவற்காக அவர்களிடம் சென்றார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், "உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் இதைச் செய்தீர்களா?" என்று கேட்டார்கள். என் தந்தை, "இல்லை" என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்கள் பிள்ளைகளிடையே நீதியாக நடந்துகொள்ளுங்கள்" என்று கூறினார்கள். உடனே என் தந்தை (வீட்டுக்குத்) திரும்பிவந்து, அந்தத் தானத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
3326. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயார் (அம்ரா) பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் அவரது செல்வத்திலிருந்து சில அன்பளிப்புகளை எனக்கு வழங்குமாறு கேட்டார். என் தந்தை ஒரு வருடம் இழுத்தடித்தார். பிறகு (எனக்கு அன்பளிப்பு வழங்க வேண்டும் என்று) அவருக்குத் தோன்றியது. (ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கினார்.) அப்போது என் தாயார் "என் மகனுக்கு அன்பளிப்பாக (இந்த அடிமையை) வழங்கியதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நீங்கள் சாட்சியாக்காத வரை இதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்" என்று கூறினார்.
ஆகவே, என் தந்தை சிறுவனாயிருந்த எனது கையைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! இவனுடைய தாயாரான (அம்ரா) பின்த் ரவாஹா, தன் மகனுக்கு நான் அன்பளிப்பாக வழங்கிய ஒன்றுக்குத் தங்களைச் சாட்சியாக்க வேண்டும் என விரும்புகிறார்" என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பஷீர்! இவரைத் தவிர வேறு குழந்தை உமக்கு உண்டா?" என்று கேட்டார்கள். என் தந்தை "ஆம்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் அனைவருக்கும் இதைப் போன்ற அன்பளிப்பை வழங்கினீரா?" என்று கேட்டார்கள். என் தந்தை "இல்லை" என்று சொன்னார்கள். "அப்படியானால் என்னை (இதற்குச்) சாட்சியாக்காதீர். ஏனெனில், நான் அநீதிக்குச் சாட்சியாக இருக்கமாட்டேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
3327. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தையிடம்) "உமக்கு இவரைத் தவிர வேறு மகன்கள் உண்டா?" என்று கேட்டார்கள். என் தந்தை "ஆம்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் அனைவருக்கும் இதைப் போன்று (அன்பளிப்பு) கொடுத்தீரா?" என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை "இல்லை" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால், நான் அநீதிக்குச் சாட்சியாக இருக்கமாட்டேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 24
3328. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், "என்னை அநீதிக்குச் சாட்சியாக்காதீர்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 24
3329. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (பஷீர் பின் சஅத் - ரலி) அவர்கள் (சிறுவனாயிருந்த) என்னைத் தூக்கிக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! நான் (என் மகன்) நுஅமானுக்கு என் செல்வத்திலிருந்து இன்னின்ன பொருட்களை அன்பளிப்பாக வழங்கிவிட்டேன் என்பதற்குத் தங்களைச் சாட்சியாக்குகிறேன்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நுஅமானுக்கு அன்பளிப்பாக வழங்கியதைப் போன்று உங்கள் மகன்கள் அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கிவிட்டீர்களா?" என்று கேட்டார்கள். என் தந்தை "இல்லை" என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின், இதற்கு வேறு யாரையாவது சாட்சியாக்கிக்கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு, "அவர்கள் அனைவரும் உங்களுக்குச் சம அளவில் நன்மை செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா?" என்று கேட்டார்கள். என் தந்தை "ஆம்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால் இப்படிச் செய்யாதீர்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
3330. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை எனக்கு ஓர் அன்பளிப்புப் பொருளை வழங்கினார்கள். பிறகு அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக்குவதற்காக என்னை அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்முடைய பிள்ளைகள் அனைவருக்கும் இதை வழங்கினீரா?" என்று கேட்டார்கள். என் தந்தை "இல்லை" என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரிடமிருந்து நீர் நன்மையை எதிர்பார்ப்பதைப் போன்று அவர்கள் அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்க வில்லையா?"’ என்று கேட்டார்கள். என் தந்தை "ஆம்" (எதிர் பார்க்கிறேன்) என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின், நான் (இதற்குச்) சாட்சியாக இருக்க மாட்டேன்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இதை நான் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது, "உங்கள் பிள்ளைகளை (இயன்றவரை)ச் சமமாக நடத்துங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றே நாம் அறிவித்துவருகிறோம் என்றார்கள்.
அத்தியாயம் : 24
3331. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பஷீர் பின் சஅத் (ரலி) அவர்களின் துணைவியார் பஷீர் (ரலி) அவர்களிடம் "என்னுடைய இந்த மகனுக்கு (நுஅமான் பின் பஷீருக்கு) உங்களுடைய அடிமையை அன்பளிப்பாக வழங்கிவிடுங்கள்" என்று கூறிவிட்டு, அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக்குங்கள்" என்றார். அவ்வாறே பஷீர் பின் சஅத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, இன்ன மனிதரின் புதல்வி(யும், என் மனைவியுமான அம்ரா பின்த் ரவாஹா) தன் புதல்வருக்கு என்னுடைய அடிமையை அன்பளிப்பாக வழங்குமாறு என்னிடம் கேட்டுவிட்டு, அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக்கும்படி கூறுகிறாள்" என்றார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அ(வளுடைய புதல்)வருக்குச் சகோதரர்கள் இருக்கிறார்களா?" என்று கேட்டார்கள். பஷீர் "ஆம்" என்றார்கள். "அவருக்கு அன்பளிப்புச் செய்ததைப் போன்று அவர்கள் அனைவருக்கும் அன்பளிப்புச் செய்தீரா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். பஷீர் "இல்லை" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது தகாத செயலாகும். நான் நியாயத்திற்கு மட்டுமே சாட்சியாக இருப்பேன்"என்று கூறிவிட்டார்கள்.
அத்தியாயம் : 24
பாடம் : 4 ஆயுட்கால அன்பளிப்பு (உம்றா).
3332. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இது உமக்கும் உம்முடைய சந்ததியினருக்கும் உரியது என ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு பொருள் (உம்றா), எவருக்கு (அன்பளிப்பாக) வழங்கப்பட்டதோ அவருக்கே உரியதாகும். (அவரது ஆயுட்காலத்திற்குப் பின்) வழங்கியவரிடம் அது திரும்பப் போய்ச்சேராது. ஏனெனில், (அன்பளிப்பு வழங்கப்பட்டவரின்) வாரிசுகளுக்குப் போய்ச்சேரும் வகையிலேயே அவர் நன்கொடை வழங்கியுள்ளார்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
3333. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இது, உனக்கும் உன் சந்ததிகளுக்கும் உரியது என ஒரு பொருளை ஒருவர் ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கினால்,அவரது சொல்லே (அந்தப் பொருளில்) அவருக்குரிய உரிமையை நிறுத்திவிடுகிறது. அது யாருக்கு ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கும் அவருடைய சந்ததிகளுக்குமே உரியதாகும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஒரு பொருளை ஒருவருக்கு ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப்பட்டால், அது அந்த மனிதருக்கும் அவருடைய சந்ததிகளுக்குமே உரியதாகும்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 24
3334. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் மற்றொருவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு வழங்கினால், அது அன்பளிப்பு வழங்கப்பட்ட மனிதருக்கும் அவருடைய சந்ததிகளுக்குமே உரியதாகும். அவர், "நான் இ(ந்தச் சொத்)தை உமக்கும் உம்முடைய சந்ததிகளுக்கும்,உங்களில் ஒருவர் உயிரோடிருக்கும்வரை வழங்கிவிட்டேன்" என்று கூறி அன்பளிப்பாக வழங்கினாலும் அது அன்பளிப்பு வழங்கப் பட்டவருக்கே உரியதாகும். அது (அவரது ஆயுட் காலத்திற்குப் பின்), அன்பளிப்பு வழங்கியவரிடம் திரும்பாது. காரணம், (அன்பளிப்பு வழங்கப்பட்டவரின்) வாரிசுகளுக்குப் போய்ச் சேரும் வகையிலேயே அவர் நன்கொடை வழங்கியுள்ளார்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
3335. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இது உனக்கும் உன் சந்ததிக்கும் உரியதாகும்" என்று கூறி வழங்கப்படும் ஆயுட்கால அன்பளிப்புக்கே அனுமதியளித்தார்கள். "உன் ஆயுள் முழுவதும் இது உனக்குரியதாகும்" என்று (மட்டும்) கூறினால், அது (அன்பளிப்பு பெற்றவரின் ஆயுட்காலத்திற்குப் பின்) அன்பளிப்பு வழங்கியவருக்கே திரும்பிவிடும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அறிவிப்பாளர்களில் ஒருவரான மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள், "இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களும் இவ்வாறே தீர்ப்பளித்துவந்தார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 24
3336. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இது உனக்கும் உன் சந்ததிக்கும் ஆயுட்கால அன்பளிப்பாகும்" என்று கூறி அன்பளிப்பு வழங்கப்பட்ட ஒரு செல்வத்தின் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது அன்பளிப்பு வழங்கப்பட்டவருக்கே உரியதாகிவிடும். அதில் நிபந்தனை விதிப்பதற்கோ விதிவிலக்குப் பெறுவதற்கோ அன்பளிப்பு வழங்கியவருக்கு அனுமதி கிடையாது"என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள், "ஏனெனில், அவர் (அன்பளிப்பு வழங்கப்பட்டவரின்) வாரிசுகளுக்குப் போய்ச்சேரும் வகையிலேயே நன்கொடை வழங்கியுள்ளார். அந்த வாரிசுரிமை அவரது நிபந்தனையைத் துண்டித்துவிட்டது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 24
3337. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப் பட்ட ஒரு பொருள், அன்பளிப்பாக வழங்கப்பட்டவருக்கே உரியதாகும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
3338. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஆயுட்கால அன்பளிப்பு வழங்கப்படும் பொருள் திரும்பக் கிடைக்காது என்பதை உணர்ந்து) உங்கள் செல்வங்களை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள்; அவற்றை வீணாக்கி விடாதீர்கள். ஒருவர் ஆயுட்கால அன்பளிப்பு (உம்றா) வழங்கினால் அது யாருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியதாகும்; அவர் உயிரோடிருந்தாலும் சரி,இறந்துவிட்டாலும் சரி. பிறகு அவருடைய சந்ததிகளுக்கு உரியதாகும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
3339. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், பின்வரும் தகவல் கூடுதலாக இடம்பெற்றுள்ளது: அன்சாரிகள் முஹாஜிர்களுக்கு ஆயுட்கால அன்பளிப்பு (உம்றா) வழங்கலாயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உஙகள் செல்வங்களை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள். (அவசரப்பட்டு ஆயுட்கால அன்பளிப்பு வழங்கி விடாதீர்கள்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 24