பாடம் : 2 மூல வாரிசுகளோ கிளை வாரிசுகளோ இல்லாதவரின் ("கலாலா") சொத்துரிமை.
3300. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நோயுற்றிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நடந்தே வந்து என்னை உடல்நலம் விசாரித்தார்கள். அப்போது எனக்கு மயக்கமேற்பட்டது. பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு எஞ்சிய தண்ணீரை என்மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கம் தெளிந்(து கண் விழித்)தேன். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! என் செல்வத்தின் விஷயத்தில் நான் என்ன முடிவு செய்ய வேண்டும்?" என்று கேட்டேன். அப்போது அவர்கள் எனக்குப் பதிலேதும் கூறவில்லை. முடிவில் வாரிசுரிமை தொடர்பான "(நபியே!) உம்மிடம் ("கலாலா" குறித்து) அவர்கள் மார்க்கத் தீர்ப்புக் கேட்கின்றனர்" (4:176)என்று தொடங்கும் வாரிசுரிமை தொடர்பான இறைவசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 23
3301. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் பனூ சலிமா எனும் (என்) குலத்தாரிடையே நான் (நோயுற்றுத் தங்கி) இருந்தபோது, நடந்தே வந்து என்னை உடல்நலம் விசாரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், நான் (நோயின் கடுமையால்) சுயநினைவு இழந்தவனாக இருந்த நிலையில் என்னைக் கண்டார்கள். ஆகவே, சிறிது தண்ணீரைக் கொண்டுவரச் சொல்லி, அதிலிருந்து அங்கத் தூய்மை (உளூச்) செய்து, எஞ்சிய தண்ணீரை என்மீது தெளித்தார்கள். நான் மயக்கம் தெளிந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் என் செல்வத்தின் விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?" என்று கேட்டேன். அப்போதுதான் "ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களின் பாகத்திற்குச் சமமானது கிடைக்கும் என உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் உங்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்துகின்றான்" (4:11) என்று தொடங்கும் இறைவசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 23
3302. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நோயுற்றிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் தம்முடனிருக்க நடந்தே வந்து என்னை உடல்நலம் விசாரித்தார்கள். அப்போது நான் (நோயின் கடுமையால்) மயக்கமுற்ற நிலையில் இருப்பதைக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூச்) செய்து, எஞ்சிய தண்ணீரை என்மீது ஊற்றினார்கள். நான் மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது, என்னருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருப்பதைக் கண்டேன். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! எனது செல்வத்தின் விஷயத்தில் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?" என்று கேட்டேன். அப்போது அவர்கள் எனக்குப் பதிலேதும் கூறவில்லை. முடிவில் வாரிசுரிமை தொடர்பான (4:11ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 23
3303. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நோய்வாய்ப்பட்டு சுயநினைவில்லாமல் இருந்தபோது, (என்னை உடல்நலம் விசாரிப்பதற்காக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள். பின்னர் அங்கத் தூய்மை செய்துவிட்டு, எஞ்சிய தண்ணீரை என்மீது ஊற்றினார்கள். உடனே எனக்குச் சுயநினைவு திரும்பியது. அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! நேரடி ஆண் வாரிசுகள் அல்லாதவர்கள் ("கலாலா")தாம் எனக்கு வாரிசாகிறார்கள் (இந்நிலையில் சொத்துப் பங்கீடு எவ்வாறு அமையும்?)" என்று கேட்டேன். அப்போதுதான் வாரிசுரிமை தொடர்பான (4:11ஆவது) இறைவசனம் அருளப் பெற்றது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்களிடம், "(நபியே!) உம்மிடம் ("கலாலா" குறித்து) அவர்கள் மார்க்கத் தீர்ப்புக் கேட்கின்றனர் (4:176) எனும் இறைவசனமா (ஜாபிர் (ரலி) அவர்கள் தொடர்பாக அருளப் பெற்றது)?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இந்த விஷயத்தில்தான் அருளப்பெற்றது" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் வஹ்ப் பின் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அப்போதுதான் பாகப் பிரிவினை (ஃபராயிள்) தொடர்பான வசனம் அருளப்பெற்றது" என்றும், நள்ர் பின் ஷுமைல் மற்றும் அபூஆமிர் அல்அகதீ (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "பாகப் பிரிவினை (ஃபர்ள்) வசனம்" என்றும் இடம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்புகளில் எவற்றிலும் முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்களிடம் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கேட்டதைப் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 23
3304. மஅதான் பின் அபீதல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தன்று உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (தமது உரையில்) நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் நினைவுகூர்ந்தார்கள். பிறகு கூறினார்கள்: நான் எனக்குப் பின்னால் "கலாலா"வைவிட ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுச்செல்லவில்லை. இந்த "கலாலா" குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் விவாதித்ததைப் போன்று வேறு எதற்காகவும் விவாதித்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இது தொடர்பாக என்னிடம் கடிந்து கொண்டதைப் போன்று வேறு எதற்காகவும் என்னிடம் கடிந்துகொண்டதில்லை. எந்த அளவிற்கு (அவர்கள் என்னைக் கடிந்துகொண்டார்கள்) எனில், அவர்கள் தமது விரலால் என் நெஞ்சில் குத்தினார்கள். "உமரே! அந்நிசா அத்தியாயத்தின் இறுதியிலுள்ள கோடைக்கால(த்தில் அருளப்பெற்ற) வசனம் (4:176) உமக்குப் போதுமானதாக இல்லையா?" என்று கேட்டார்கள்.
நான் இன்னும் (சிறிது காலம்) வாழ்ந்தால் இந்த "கலாலா" தொடர்பாகக் குர்ஆனைக் கற்றோரும் கல்லாதோரும் தீர்ப்பளிக்கும் விதத்தில் தெளிவான ஒரு தீர்ப்பை வழங்குவேன்" என்றும் (உமர் (ரலி) அவர்கள் தமது உரையில்) கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 23
பாடம் : 3 "கலாலா" பற்றிய வசனமே இறுதியாக அருளப்பெற்ற வசனமாகும்.
3305. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
குர்ஆனில் இறுதியாக அருளப்பெற்ற வசனம் "(நபியே!) உம்மிடம் ("கலாலா" குறித்து) அவர்கள் மார்க்கத் தீர்ப்புக் கேட்கின்றனர்" (4:176) என்று தொடங்கும் வசனமாகும்.
அத்தியாயம் : 23
3306. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குர்ஆனில்) இறுதியாக அருளப்பெற்ற வசனம், கலாலா பற்றிய (4:176ஆவது) இறை வசனமாகும். இறுதியாக அருளப்பெற்ற அத்தியாயம் "பராஅத்" (அல்லது "அத்தவ்பா") எனும் (9ஆவது) அத்தியாயமாகும். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 23
3307. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களுக்கு) முழுமையாக அருளப்பெற்ற அத்தியாயங்களில் இறுதியானது "அத்தவ்பா" எனும் (9ஆவது) அத்தியாயமாகும். இறுதியாக அருளப்பெற்ற வசனம் "கலாலா" பற்றிய (4:176ஆவது) வசனமாகும்.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "முழுமையாக" என்பதைக் குறிக்க ("தாம்மத்தன்" என்பதற்குப் பகரமாக) "காமி லத்தன்" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 23
3308. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களுக்கு) இறுதியாக அருளப்பெற்ற இறைவசனம் "(நபியே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர்" என்று தொடங்கும் (4:176ஆவது) வசனமாகும்.
அத்தியாயம் : 23
பாடம் : 4 ஒருவர் ஒரு செல்வத்தை விட்டுச்சென்றால், அது அவருடைய வாரிசுகளுக்கே உரியதாகும்.
3309. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கடன் உள்ள நிலையில் இறந்துவிட்ட ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்படுவார். அப்போது "தம்மீதுள்ள கடனை அடைக்க ஏதேனும் அவர் ஏற்பாடு செய்துள்ளாரா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்பார்கள். அவர் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்துவிட்டுச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டால்,அவருக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிப்பார்கள். அவ்வாறில்லை எனில், (முஸ்லிம்களிடம்) "உங்கள் தோழருக்கு நீங்களே தொழுதுகொள்ளுங்கள்" என்று கூறிவிடுவார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்(து மதீனா அரசில் நிதி குவிந்)த போது, "இறைநம்பிக்கையாளர்களுக்கு, அவர்களின் உயிர்களை விட நானே நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன். ஆகவே, யார் தம்மீது கடன் இருக்கும் நிலையில் (அதை அடைப்பதற்காக ஒன்றையும் விட்டுச்செல்லாமல்) இறந்து விடுகிறாரோ, அந்தக் கடனை அடைப்பது எனது பொறுப்பாகும். யார் இறக்கும்போது செல்வத்தை விட்டுச்சென்றுள்ளாரோ, அது அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும்" என்று கூறுவார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 23
3310. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! பூமியின் மீதுள்ள எந்த இறைநம்பிக்கையாளருக்கும் மற்றெல்லா மக்களையும்விட நானே நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன். ஆகவே, உங்களில் யார் ஏதேனும் கடனையோ அல்லது திக்கற்ற மனைவி மக்களையோ விட்டுச்செல்கிறாரோ,அவருக்கு நானே பொறுப்பாளன் ஆவேன். உங்களில் யார் ஒரு செல்வத்தை விட்டுச்செல்கிறாரோ, அது அவருடைய நெருங்கிய ஆண் உறவினருக்கு உரியதாகும்; அவர் யாராக இருப்பினும் சரியே!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 23
3311. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த நபிமொழிகளாகும். அவற்றில் பின்வரும் நபிமொழியும் ஒன்றாகும்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதத்தில், நானே இறை நம்பிக்கையாளர்களுக்கு அனைத்து மக்களையும்விட நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன் (எனக் குறிப்பிடப்பட்டுள்ளது). ஆகவே, உங்களில் யார் கடனையோ திக்கற்ற மனைவி மக்களையோ விட்டுச்செல்கிறாரோ, (அவருக்காக ஆட்சித் தலைவராகிய) என்னை அழையுங்கள். நானே அவருடைய பொறுப்பாளன் ஆவேன். உங்களில் யார் செல்வத்தை விட்டுச்செல்கிறாரோ,அவருடைய நெருங்கிய ஆண் உறவினருக்கே அவரது சொத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்; அவர் யாராக இருப்பினும் சரியே!
அத்தியாயம் : 23
3312. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறந்துவிட்ட) ஒருவர் ஒரு செல்வத்தை விட்டுச்சென்றால், அது அவருடைய வாரிசுகளுக் குரியதாகும். ஒருவர் (திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச்சென்றால், அவர்களைப் பராமரிப்பது (ஆட்சித் தலைவரான) எமது பொறுப்பாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், (முஹம்மத் பின் ஜஅஃபர்) ஃகுன்தர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஒருவர் திக்கற்ற மனைவி மக்களை விட்டுச்சென்றால், அவருக்கு நானே பொறுப்பேற்றுக் கொண்டேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 23

பாடம் : 1 ஒருவர் தானமாகக் கொடுத்ததைத் தானம் பெற்றவரிடமிருந்து அவரே விலைக்கு வாங்குவது விரும்பத்தகாத செயலாகும்.
3313. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒருவரை அல்லாஹ்வின் பாதையில் (பயணம் மேற்கொள்வதற்காக) உயர்ரகக் குதிரையொன்றில் (அவருக்கே அதைத் தானமாகக் கொடுத்து) அனுப்பிவைத்தேன். அந்தக் குதிரைக்காரர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். அவர் அதை மலிவான விலைக்கு (கேட்டால்கூட) விற்றுவிடுவார் என்று நான் எண்ணினேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை விலைக்கு வாங்காதீர். உமது தானத்தைத் திரும்பப்பெறாதீர். தனது தானத்தைத் திரும்பப் பெறுபவன் நாய்க்கு நிகரானவன் ஆவான். தான் எடுத்த வாந்தியைத் தானே தின்கிறது நாய்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அதை அவர் உமக்கு ஒரு வெள்ளிக் காசுக்குக் கொடுத்தாலும் சரி, அதை விலைக்கு வாங்காதீர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 24
3314. அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (பயணம் மேற்கொள்வதற்காக ஒருவரை) குதிரையொன்றில் ஏற்றி (அதை அவருக்குத் தானமாகக் கொடுத்து) அனுப்பினார்கள். அந்தக் குதிரை அந்த மனிதரிடம் (சரியாகப் பராமரிக்கப்படாததால்) பாழாகி விட்டிருப்பதைக் கண்டார்கள். அவர் வசதி குறைந்த (ஏழை) மனிதராக இருந்தார். ஆகவே, அவரிடமிருந்து அதைத் தாமே விலைக்கு வாங்கிக்கொள்ள உமர் (ரலி) அவர்கள் விரும்பினார்கள். எனவே,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அது குறித்துக் கேட்டார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை விலைக்கு வாங்காதீர். அதை ஒரு வெள்ளிக் காசுக்கு அவர் உமக்குத் தந்தாலும் சரியே! தனது தானத்தைத் திரும்பப் பெற்றவனின் நிலை, நாயின் நிலையை ஒத்திருக்கிறது. நாய்தான், தான் எடுத்த வாந்தியைத் தானே தின்கிறது" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், மேற்கண்ட ஹதீஸ்களே முழுமையானவையும் மிகுதியானவையும் ஆகும்.
அத்தியாயம் : 24
3315. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (ஒருவரை) அல்லாஹ்வின் பாதையில் (பயணிக்க) குதிரையொன்றில் ஏற்றி (அதை அவருக்குத் தானமாகத் தந்து) அனுப்பினார்கள். பிறகு அந்தக் குதிரை விற்கப்படுவதைக் கண்டு, அதைத் தாமே வாங்கிக்கொள்ள விரும்பினார்கள். ஆகவே, இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை விலைக்கு வாங்காதீர். உமது தானத்தைத் திரும்பப்பெறாதீர்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
3316. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் (ஒருவரை) அல்லாஹ்வின் பாதையில் (பயணிக்க) ஒரு குதிரையின் மீதேற்றி (அதை அவருக்குத் தானமாக வழங்கி) அனுப்பி வைத்தார்கள். பின்னர் அந்தக் குதிரை விற்கப்படுவதைக் கண்டார்கள். அதைத் தாமே விலைக்கு வாங்கிக்கொள்ள விரும்பினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமரே, உமது தானத்தைத் திரும்பப்பெறாதீர்"என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
பாடம் : 2 கொடுத்த தானத்தையும் அன்பளிப்பையும் அது (உரியவரின்) கைக்குப் போய்ச் சேர்ந்த பின் திரும்பப்பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஒருவர் தம் மகன், மகனின் மகன் ஆகியோருக்கு அன்பளிப்பாக வழங்கியதைத் தவிர!
3317. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தான் கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்பவனின் நிலையானது, நாயின் நிலையை ஒத்திருக்கிறது. வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் தான் எடுத்த வாந்தியை நோக்கிச் சென்று அதைத் தின்கிறது நாய்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அறிவிப்பாளர் முஹம்மத் பின் அலீ பின் ஹுசைன் பின் அலீ (ரஹ்) அவர்களின் பெயர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களின் புதல்வர் (அதாவது கொள்ளுப்பேரர்) முஹம்மத் (பாகிர்)" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 24
3318. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம் செய்துவிட்டுப் பின்னர் தனது தர்மத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்பவனின் நிலையானது, நாயின் நிலையை ஒத்திருக்கிறது. வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் எடுத்த வாந்தியைத் தின்கிறது நாய்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
3319. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தான் கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்பவன், தான் எடுத்த வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 24