3045. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டுவரும் வியாபாரிகளைச் சந்தித்து சரக்குகள் வாங்கப்படுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
அத்தியாயம் : 21
3046. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டு வரும் வியாபாரிகளைச் சந்தித்து, சரக்குகளை வாங்காதீர்கள். அவ்வாறு எவரேனும் அவர்களைச் சந்தித்து, சரக்குகளை விலைக்கு வாங்கிய பின் அந்தச் சரக்குகளின் உரிமையாளர் சந்தைக்கு வந்தால், அவருக்கு (அந்த பேரத்திலிருந்து விலகிக்கொள்ள) உரிமை உண்டு.
அத்தியாயம் : 21
பாடம் : 6 கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
3047. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக் கொடுக்கவேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக்கொடுப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 21
3048. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடை மறித்து வாங்குவதற்கும், கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக்கொடுப்பதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக்கொடுக்கக் கூடாது என்பதன் பொருள் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இடைத் தரகராக ஆகக் கூடாது (என்பதுதான் அதன் பொருள்)" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3049. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக்கொடுக்க வேண்டாம். மக்களில் சிலருக்குச் சிலர் மூலம் அல்லாஹ் வாழ்வாதாரம் அளிக்கும் நிலையில் மக்களை விட்டுவிடுங்கள்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் யஹ்யா பின் யஹ்யா அத்தமீமீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மக்களில் சிலருக்குச் சிலர் மூலம் வாழ்வாதாரம் வழங்கப்படும் நிலையில்" என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3050. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக்கொடுக்கக் கூடாதென நாங்கள் தடைவிதிக்கப் பெற்றிருந்தோம்; இவருக்கு அவர் சகோதரராய் இருந்தாலும் சரி; தந்தையாக இருந்தாலும் சரி.
அத்தியாயம் : 21
3051. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக்கொடுக்கக் கூடாதென நாங்கள் தடை விதிக்கப் பெற்றோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
பாடம் : 7 மடி கனக்கச் செய்யப்பட்ட (ஒட்டகம், ஆடு ஆகிய)வற்றை விற்பனை செய்வது பற்றிய சட்டம்.
3052. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை விலைக்கு வாங்கியவர், அதை ஓட்டிச் சென்று பால் கற(ந்து பார்)க்கட்டும்! அதன் பால் (அளவு) திருப்தியளித்தால், அதை அவர் தம்மிடமே வைத்துக்கொள்ளட்டும்! திருப்தியளிக்காவிட்டால், ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழத்துடன் அதை (வாங்கியவரிடமே) திருப்பிக் கொடுத்துவிடட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 21
3053. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை வாங்கியவர் மூன்று நாட்கள் விருப்ப உரிமை பெறுவார். அவர் நாடினால், அதைத் தம்மிடமே வைத்துக்கொள்ளலாம்; நாடினால் அதைத் திருப்பிக் கொடுத்து விடலாம். ஆனால், ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழத்துடன் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 21
3054. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை வாங்கியவருக்கு மூன்று நாட்கள் விருப்ப உரிமை உண்டு. அதைத் திருப்பிக் கொடுப்பதானால், ஒரு "ஸாஉ" உணவுப் பொருளுடன் அதைத் திருப்பிக் கொடுக்கட்டும். (உணவு என்பது) கோதுமையாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. (பேரீச்சம் பழமாகக் கூட இருக்கலாம்.)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 21
3055. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை வாங்கியவர் (பின்வரும்) இரண்டில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்க உரிமை பெறுவார். நாடினால் அதைத் தம்மிடம் அவர் வைத்துக் கொள்ளலாம். நாடினால் அந்த ஆட்டை ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழத்துடன் திருப்பிக் கொடுத்து விடலாம். கோதுமையைத்தான் கொடுக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 21
3056. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஆட்டை வாங்கியவருக்கு விருப்ப உரிமை உண்டு" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 21
3057. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இந்த ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மடி கனக்கச் செய்யப்பட்ட ஒட்டகத்தையோ அல்லது ஆட்டையோ வாங்கிய பின் பால்கறந்து பார்க்கும்போது, (பின்வரும்) இரண்டில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்க உரிமை பெறுவார். ஒன்று அதைத் தம்மிடம் வைத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழத்துடன் அதைத் திருப்பிக் கொடுத்துவிடலாம்.
அத்தியாயம் : 21
பாடம் : 8 விற்கப்பட்ட பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன் அதை (மற்றவருக்கு) விற்பனை செய்வது கூடாது.
3058. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு வந்து சேர்வதற்கு முன் (மற்றவருக்கு) அதை விற்க வேண்டாம்.
இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
உணவுப் பொருளைப் போன்றே எல்லாப் பொருட்களையும் நான் கருதுகிறேன். (கைக்கு வந்து சேர்வதற்கு முன் எதையும் விற்கலாகாது.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3059. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு வந்து சேர்வதற்கு முன் (மற்றவருக்கு) அதை விற்க வேண்டாம்.
இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
உணவுப் பொருளைப் போன்றே எல்லாப் பொருட்களையும் நான் கருதுகிறேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3060. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அதை அளந்து பார்ப்பதற்கு முன் விற்க வேண்டாம்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "ஏன்?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "உணவுப்பொருள் இன்னும் வந்து சேராத நிலையில், அவர்கள் தங்கத்துக்குத் தங்கத்தை (ஏற்றத்தாழ்வாக) விற்கிறார்கள் என்பதை நீர் கவனிக்கவில்லையா?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூகுரைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "வந்து சேராத நிலையில்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 21
3061. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு வந்து சேர்வதற்கு முன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3062. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் உணவுப் பொருட்களை விலைக்கு வாங்குவோம். அப்போது அவர்கள் எங்களிடம் ஆளனுப்பி, அதை (மற்றவருக்கு) விற்பதற்கு முன் வாங்கிய இடத்திலிருந்து வேறு இடத்திற்குக் கொண்டு சென்றுவிடுமாறு எங்களுக்கு உத்தரவிடுவார்கள்.
அத்தியாயம் : 21
3063. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு வந்து சேர்வதற்கு முன் (மற்றவருக்கு) அதை விற்க வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் வணிகர்களிடமிருந்து உணவுப் பொருட்களைக் குத்துமதிப்பாக விலைக்கு வாங்கி வந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அதை அங்கிருந்து வேறு இடத்திற்குக் கொண்டுசெல்வதற்கு முன் விற்க வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்.
அத்தியாயம் : 21
3064. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு வந்து சேர்ந்து, அதைக் கைப்பற்றிக்கொள்வதற்கு முன் (மற்றவருக்கு) அதை விற்க வேண்டாம்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 21