பாடம் : 6 அடிமையை விடுதலை செய்வதன் சிறப்பு.
3025. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையுள்ள (முஃமினான) ஓர் அடிமையை யார் விடுதலை செய்கிறாரோ (விடுதலை செய்யப்பட்ட) அந்த அடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) ஓர் உறுப்பை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்வான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 20
3026. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடிமையை யார் விடுதலை செய்கிறாரோ (விடுதலை செய்யப்பட்ட) அந்த அடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) உறுப்புகளில் ஒன்றை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்வான்;அவருடைய மர்ம உறுப்புக்குப் பதிலாக இவருடைய மர்ம உறுப்பையும் (விடுதலை செய்வான்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 20
3027. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையுள்ள (முஃமினான) ஓர் அடிமையை யார் விடுதலை செய்கிறாரோ (விடுதலை செய்யப்பட்ட) அந்த அடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) உறுப்புக்களில் ஒன்றை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்வான்; அவருடைய மர்ம உறுப்புக்குப் பகரமாக இவருடைய மர்ம உறுப்பையும் விடுதலை செய்வான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 20
3028. அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்களின் தோழரான சயீத் பின் அப்தில்லாஹ் இப்னு மர்ஜானா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"ஒரு முஸ்லிமான மனிதர் மற்றொரு முஸ்லிமான (அடிமை) மனிதரை விடுதலை செய்தால், (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து காப்பாற்றுவான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்ற நான், அதை அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். இதைக் கேட்ட அலீ (ரஹ்) அவர்கள், உடனே தம் அடிமை ஒருவரை விடுதலை செய்துவிட்டார்கள். அந்த அடிமைக்கு (விலையாக) அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் பத்தாயிரம் திர்ஹம்களை, அல்லது ஆயிரம் தீனாரை அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்களிடம் கொடுத்திருந்தார்கள். (ஆயினும், அந்த விலைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு அந்த அடிமையை விடுதலை செய்துவிட்டார்கள்.)
அத்தியாயம் : 20
பாடம் : 7 (அடிமையாக இருக்கும்) தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு.
3029. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தன்) தந்தை அடிமையாக இருப்பதைக் கண்ட தனயன், அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்யாத வரை தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றியவனாக ஆகமாட்டான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீ ஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "தன் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையை" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் "தன் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையை" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 20

பாடம் : 1 "முலாமசா" மற்றும் "முனாபதா" ஆகிய வியாபாரங்கள் செல்லாது.
3030. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடுமுறை வியாபாரம் ("முலாமசா"), எறிமுறை வியாபாரம் ("முனாபதா")ஆகியவற்றைத் தடை செய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3031. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"முலாமசா" மற்றும் "முனாபதா" ஆகிய வியாபார முறைகள் இரண்டுக்கும் தடைவிதிக்கப் பட்டது."முலாமசா" என்பது, (விற்பவர் வாங்குபவர் ஆகிய இருவரில்) ஒவ்வொருவரும் மற்றவரின் (விற்பனைக்கான) துணியை யோசிக்காமல் தொட்டு(விட்டாலே வியாபார ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக ஆகி)விடுவதாகும். "முனாபதா" என்பது, இருவரில் ஒவ்வொருவரும் மற்றவரை நோக்கித் தமது துணியை எறிய, அவர்களில் எவரும் மற்றவரின் துணியை(ப் பிரித்து)ப் பார்க்காமலேயே (வியாபாரத்தை முடித்து) விடுவதாகும்.
அத்தியாயம் : 21
3032. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வியாபார முறைகள் இரண்டையும் ஆடை அணியும் முறைகள் இரண்டையும் எங்களுக்குத் தடை செய்தார்கள்.
வியாபாரத்தில் தொடுமுறை வியாபாரம் (முலாமசா), எறிமுறை வியாபாரம் (முனாபதா) ஆகிய இரண்டையும் தடை செய்தார்கள். தொடுமுறை வியாபாரம் ("முலாமசா") என்பது, இரவிலோ பகலிலோ (துணி வாங்கும்) ஒருவர் (விற்கும்) மற்றொருவரின் துணியைத் தமது கரத்தால் தொடுவதாகும். விரித்துப் பார்க்காமலேயே தொட்டதோடு வியாபாரத்தை முடித்துக் கொள்வதாகும். எறிமுறை வியாபாரம் (முனாபதா) என்பது, ஒருவர் மற்றொருவரை நோக்கித் தமது துணியை எறிய, மற்றவர் இவரை நோக்கித் தமது துணியை எறிய (துணியைப் பிரித்துப்) பார்க்காமலும் பரஸ்பர திருப்தி இல்லாமலும் இருவருக்குமிடையிலான வியாபார (ஒப்பந்த)மாக அதுவே ஆகிவிடுவதாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
பாடம் : 2 கல்லெறி வியாபாரம் ("பைஉல் ஹஸாத்") மற்றும் மோசடி வியாபாரம் ("பைஉல் ஃகரர்") ஆகியவை செல்லாது.
3033. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறி வியாபாரத்திற்கும் மோசடி வியாபாரத்திற்கும் தடைவிதித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
பாடம் : 3 சினை ஒட்டகத்தின் வயிற்றிலுள்ள (குட்டியை, அல்லது சினை ஒட்டகத்தின் வயிற்றிலுள்ள) குட்டி ஈனும் குட்டியை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
3034. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சினை ஒட்டகத்தின் வயிற்றிலுள்ள குட்டி ஈனும் குட்டியை விற்பதற்குத் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3035. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் கால மக்கள் ஹபலுல் ஹபலாவுக்காக - சினை ஒட்டகம் குட்டி ஈன்று, அந்தக் குட்டி சினையாகிப் பெறவிருக்கும் குட்டிக்காக - ஒட்டகத்தின் இறைச்சிகளை விற்கவும் வாங்கவும் செய்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்தகைய வியாபாரம் செய்யக் கூடாது என மக்களுக்குத் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
பாடம் : 4 ஒருவர் தம் சகோதரர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டு வியாபாரம் செய்வதும், அவர் விலை பேசும் அதே பொருளைத் தாமும் விலை பேசுவதும், வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றிவிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளன; கால்நடைகளின் (பாலைக் கறக்காமல் அவற்றின்) மடியைக் கனக்கச் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
3036. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 21
3037. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம்; தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டுப் பெண் பேசவேண்டாம். அந்தச் சகோதரர் இவருக்கு அனுமதியளித்தால் தவிர!
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3038. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தம் (முஸ்லிம்) சகோதரர் விலை பேசும்போது, அதே பொருளைத் தாமும் விலை பேச வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3039. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் விலைபேசும் அதே பொருளைத் தாமும் விலை பேசுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3040. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(சரக்குகளை ஏற்றிக்கொண்டு) வாகனத்தில் வருபவர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து சரக்குகளை) வாங்கலாகாது. ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றிவிட வேண்டாம். கிராமத்திலிருந்து சரக்குகளைக் கொண்டுவருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம். ஒட்டகங்கள் மற்றும் ஆடுகளின் (பாலைக் கறக்காமல் அவற்றின்) மடியை கனக்கச் செய்ய வேண்டாம். அவ்வாறு ஒருவர் அவற்றை வாங்கிப் பால் கறந்து திருப்தியடைந்தால் தம்மிடமே வைத்துக் கொள்ளலாம். திருப்தியடையாவிட்டால் அவற்றை ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழத்துடன் திருப்பிக் கொடுத்து விடலாம். இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க அவருக்கு உரிமை உண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 21
3041. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(சரக்குகளை ஏற்றிக்கொண்டு) வாகனத்தில் வருபவர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து சரக்குகளை) வாங்குவதற்கும், கிராமத்திலிருந்து (சரக்குகளைக் கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசிகள் விற்றுக் கொடுப்பதற்கும், ஒரு பெண் தன் சகக்கிழத்தியை மணவிலக்குச் செய்யுமாறு (தன் கணவரிடம்) கோருவதற்கும்,வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றிவிடுவதற்கும், கால்நடைகளின் (பாலைக் கறக்காமல் கூடுதல் விலைக்கு விற்பதற்காக) மடி கனக்கச் செய்வதற்கும், தம் (முஸ்லிம்) சகோதரர் விலை பேசும் அதே பொருளை மற்றவர் விலை பேசுவதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஃகுன்தர் மற்றும் வஹ்ப் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "(மேற்கண்டவற்றுக்கு) தடை விதிக்கப்பட்டது"என இடம்பெற்றுள்ளது. அப்துஸ் ஸமத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 21
3042. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வாங்கும் நோக்கமின்றி (ஒரு பொருளை அதிக விலைக்குக் கேட்டு) விலையை ஏற்றிவிடுவதற்குத் தடை விதித்தார்கள்.
அத்தியாயம் : 21
பாடம் : 5 வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டுவரும் வியாபாரியை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து அப்பொருட்களை) வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
3043. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வியாபாரப் பொருட்கள் சந்தைக்கு வந்து சேருவதற்கு முன் வழியிலேயே வியாபாரிகளைச் சந்தித்துச் சரக்குகளை வாங்குவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டுமே "சந்தைக்கு வந்து சேர்வதற்கு முன்" எனும் குறிப்பு காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3044. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (சந்தைக்கு வரும்) வியாபாரிகளை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து) சரக்குகளை வாங்குவதற்குத் தடை விதித்தார்கள்.
அத்தியாயம் : 21