2873. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இரு தடவைகள் மட்டும் பால் குடிப்பது" "இரு தடவைகள் மட்டும் உறிஞ்சிப் பால் குடிப்பது" என்ற வாக்கியத்திற்கு முன் "அல்லது" )ரீணூ( என்பதற்குப் பதிலாக "மற்றும்" )ணூ( எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 17
2874. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு தடவையோ இரு தடவைகளோ மட்டும் (உறிஞ்சிப் பால் குடிக்கும் வகையில்) பாலூட்டுவது, (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவை ஏற்படுத்தாது.
இதை உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 17
2875. (நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் துணைவியார்) உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், "ஒரு தடவை மட்டும் உறிஞ்சிப் பால் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படுமா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இல்லை" என்றார்கள்.
அத்தியாயம் : 17
பாடம் : 6 ஐந்து முறை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்.
2876. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது.
பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
அத்தியாயம் : 17
2877. அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், எத்தனை முறை பால் குடித்தால் பால்குடி உறவு உண்டாகும் என்பதைப் பற்றிக் கூறுகையில் பின்வருமாறு கூறினார்கள்: குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் (பால்குடி உறவு உண்டாகும்) என்ற சட்டம் குர்ஆனில் இடம் பெற்றிருந்தது. பின்னர் குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்ற சட்டம் அருளப்பெற்றது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
பாடம் : 7 பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது தொடர்பான சட்டம்.
2878. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சாலிம் பின் மஅகில் (ரலி) அவர்கள் என் வீட்டிற்குள் வரும்போது (என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபா வின் முகத்தில் அதிருப்தியை நான் காண்கிறேன்" என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனும்) ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித்தாய் - மகன் உறவு ஏற்பட்டு விடும்)" என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள், "அவர் (சாலிம்) பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே, அவருக்கு எவ்வாறு நான் பாலூட்டுவேன்?" என்று கேட்டார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு, "அவர் பருவவயதை அடைந்த மனிதர் என்பது எனக்கும் தெரியும். (உன்னிடமிருந்து பாலைக் கறந்து அவரைக் குடிக்கச் செய்வாயாக)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அம்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர் (சாலிம்) பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புன்னகைத்தார்கள் என்பதற்குப் பதிலாக) சிரித்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 17
2879. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனுமான) சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபா மற்றும் அவருடைய மனைவியுடன் அவர்களது வீட்டில் இருந்து வந்தார். அப்போது (அபூஹுதைஃபாவின் மனைவி சஹ்லா) பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "சாலிம் ஆண்கள் அடையும் பருவவயதை அடைந்துவிட்டார். மற்ற ஆண்கள் அறிவதை அவரும் அறிகிறார். இந்நிலையில் அவர் எங்கள் வீட்டிற்குள் வருகிறார். இதனால் (அவர் என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் அதிருப்தி நிலவுகிறது என்று நான் எண்ணுகிறேன்" என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சஹ்லாவிடம், "நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. இதனால் அவருக்குச் செவிலித் தாய் ஆகிவிடுவாய். (உன்னுடைய கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் நிலவும் அதிருப்தியும் மறைந்துவிடும்" என்று கூறினார்கள்.
அவர் (திரும்பிச் சென்று) மீண்டும் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, "நான் அவருக்குப் பால் கொடுத்துவிட்டேன். இதனால் என் கணவர் அபூஹுதைஃபாவின் மனத்தில் நிலவிய அதிருப்தியும் மறைந்துவிட்டது" என்று கூறினார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2880. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சாலிம் (ரலி) அவர்கள் எங்களுடன் எங்கள் வீட்டில்தான் இருக்கிறார். -அவர் (சஹ்லாவின் கணவர்) அபூ ஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனும்) ஆவார்.- அவர் ஆண்கள் அடையும் பருவ வயதை அடைந்துவிட்டார்; மற்ற ஆண்கள் அறிகின்றவற்றை அவரும் அறிகிறார்" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. இதனால் நீ அவருக்குச் செவிலித் தாய் ஆகிவிடுவாய்" என்று கூறினார்கள்.
இதை அறிவிக்கும் அறிவிப்பாளர் இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஓர் ஆண்டு காலமாக, அல்லது சுமார் ஓராண்டு காலமாக இந்த ஹதீஸை நான் (யாரிடமும்) அறிவிக்கவில்லை. அதை அறிவிக்க நான் அஞ்சினேன். பின்னர் (ஒரு முறை) காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது நான் அவர்களிடம், "நீங்கள் என்னிடம் ஒரு ஹதீஸை அறிவித்தீர்கள். அதை இதுவரை நான் (யாரிடமும்) அறிவிக்கவில்லை" என்று கூறினேன். காசிம் (ரஹ்) அவர்கள், "அந்த ஹதீஸ் என்ன?" என்று (என்னிடம்) கேட்க, நான் அதைத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், "என்னிடமிருந்து நீங்கள் அதை (தாராளமாக) அறிவியுங்கள்; ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் அதை அறிவித்தார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2881. ஸைனப் பின்த் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு சலமா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "விரைவில் பருவ வயதை அடையவிருக்கும் அந்தச் சிறுவன் உங்களுடைய வீட்டிற்குள் வருகிறானே! ஆனால், அவன் என் வீட்டிற்குள் வருவதை நான் விரும்பமாட்டேன்" என்று கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதற்கான) முன்மாதிரி உங்களுக்குக் கிடைக்க வில்லையா?" என்று கேட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
அபூஹுதைஃபாவின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சாலிம் என் வீட்டிற்குள் வருகிறார்; அவர் பருவ வயதையடைந்த மனிதர். இதனால் (அவர் என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் அதிருப்தி நிலவுகிறது" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ சாலிமுக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித் தாய் - மகன் உறவு ஏற்பட்டு) அவர் உனது வீட்டிற்குள் வரலாமே!" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 17
2882. ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் மீதாணையாக! (பால்குடிப் பருவத்தைக் கடந்துவிட்ட) பால் குடிக்கும் அவசியமில்லாத நிலையில் உள்ள சிறுவன் (திரையின்றி) என்னைப் பார்ப்பதை என் மனம் விரும்பவில்லை" என்று சொன்னார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "எதற்காக (நீங்கள் அவ்வாறு கூற வேண்டும்)?" என்று கேட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சாலிம் (என்) வீட்டிற்குள் வருவதால் (அவர் என்னைத் திரையின்றிப் பார்க்க நேரிடுகிறது. அதனால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியைக் காண்கிறேன்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ சாலிமுக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித் தாய் - மகன் என்ற உறவு ஏற்பட்டுவிடும்)" என்று கூறினார்கள்.
அதற்கு சஹ்லா (ரலி) அவர்கள், "அவர் (சாலிம்) தாடி உள்ளவராயிற்றே (அவருக்கு எப்படி பாலூட்ட முடியும்)?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்), "நீ அவருக்குப் பாலூட்டிவிடு. அதனால், அபூஹுதைஃபாவின் முகத்திலுள்ள அதிருப்தி மறைந்துவிடும்" என்று கூறினார்கள்.
பின்னர் சஹ்லா (ரலி) அவர்கள், "(நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்று நான் செய்தேன்.) அல்லாஹ்வின் மீதாணையாக! (அதற்குப் பின்) அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் அறியவில்லை" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2883. ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறுவார்கள்: (ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர) நபி (ஸல்) அவர்களுடைய மற்றத் துணைவியர் எவரும் பால்குடிப் பருவத்தைக் கடந்த ஒருவருக்குப் பால் கொடுத்து ("செவிலித் தாய் - மகன்" என்ற) உறவை ஏற்படுத்தி, அவரைத் தங்களது வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
மேலும், நபி (ஸல்) அவர்களுடைய மற்றத் துணைவியர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாலிம் (ரலி) அவர்களுக்கு மட்டுமே இந்த முறையை அனுமதித்தார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். (பால்குடிப் பருவத்தைக் கடந்த பின்) பால்குடி உறவை ஏற்படுத்தும் இந்த முறைப்படி யாரும் எங்களது வீட்டிற்குள் வந்ததுமில்லை; எங்களை(த்திரையின்றி)ப் பார்த்துமில்லை" என்று கூறினர்.
அத்தியாயம் : 17
பாடம் : 8 பால்குடி உறவு என்பதெல்லாம், பசிக்காகப் பால் அருந்(தும் பருவத்தில் அருந்)தினால்தான் ஏற்படும்.
2884. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது ஒரு மனிதர் என்னிடம் அமர்ந்திருந்தார். அ(ந்த மனிதர் என் வீட்டிற்குள் அமர்ந்திருந்த)து நபி (ஸல்) அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்திவிட்டது. கோபத்தை அவர்களது முகத்தில் கண்ட நான், "அல்லாஹ்வின் தூதரே! அவர் என் பால்குடிச் சகோதரர் ஆவார்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "(ஆயிஷா!) உங்கள் பால்குடிச் சகோதரர்கள் யார் என ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில், பசியால் (பால் அருந்தினால்)தான் பால்குடி உறவு ஏற்படும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
பாடம் : 9 கருச்சோதனை நடத்திய பின், பெண் போர்க்கைதியுடன் தாம்பத்திய உறவு கொள்ளலாம். அவளுக்கு (ஏற்கெனவே) கணவன் இருந்தாலும், (போரில்) சிறை பிடிக்கப்பட்டதால் அத்திருமணம் முறிந்துவிடும்.
2885. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரின்போது (ஹவாஸின் குலத்தார் வசிக்கும்) "அவ்தாஸ்" என்ற பகுதிக்கு ஒரு படையை அனுப்பினார்கள். அவர்கள் எதிரிகளை எதிர்கொண்டு, போரிட்டு அவர்களை வெற்றி கொண்டனர். (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) அவர்களின் சில பெண்களையும் அவர்கள் சிறை பிடித்தனர். (போரில் சிறை பிடிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட) அப்பெண்களுக்கு இணைவைப்பாளர்களான கணவர்கள் இருக்கிறார்கள் என்பதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் அப்பெண்களுடன் தாம்பத்திய உறவு கொள்வதைத் தவறாகக் கருதினர். இது தொடர்பாகவே பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்:
மேலும், கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், போரில்) உங்களுக்கு உடைமையாகிவிட்ட பெண்களைத் தவிர. (இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டமாகும். (4:24)
அதாவது, (போரில் சிறை பிடிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட) அப்பெண்களின் காத்திருப்பு (இத்தா)க் காலம் முடிந்துவிட்டால்,அவர்கள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவர். (அவர்களுடன் நீங்கள் தாம்பத்திய உறவு கொள்ளலாம்.)
அத்தியாயம் : 17
2886. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும், அவற்றில் "அப்பெண்களின் காத்திருப்பு (இத்தா)க் காலம் முடிந்துவிட்டால்" என்ற குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2887. அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அவ்தாஸ்" போர் நாளில் அவர்கள் சில பெண்களைச் சிறை பிடித்தனர். அப்பெண்களுக்கு (ஏற்கெனவே) கணவர்கள் இருந்த காரணத்தால் (மற்றொருவரின் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள)அஞ்சினர். இது தொடர்பாகவே "மேலும், கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், போரில்) உங்களுக்கு உடைமையாகி விட்ட பெண்களைத் தவிர. (இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டமாகும்" எனும் (4:24ஆவது) வசனம் அருளப்பெற்றது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
பாடம் : 10 பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியது. (இருப்பினும், சாயலை வைத்து) சந்தேகங்களைத் தவிர்க்க வேண்டும்.
2888. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்களும் ஓர் இளைஞன் விஷயத்தில் (நபி (ஸல்) அவர்களிடம்) வழக்காடினர்.
சஅத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த இளைஞன் என் சகோதரர் உத்பா பின் அபீவக்காஸின் மகன் ஆவான். என் சகோதரர் (தமது இறப்பின்போது) இந்த இளைஞன் தம்முடைய மகன் என்று என்னிடம் வலியுறுத்திக் கூறினார். இந்த இளைஞன் அவரது சாயலில் இருப்பதை நீங்கள் கவனியுங்கள்" என்று கூறினார்கள்.
அதற்கு அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த இளைஞன் என் சகோதரன் ஆவான். என் தந்தைக்குச் சொந்தமான அடிமைப் பெண்ணுக்கு இவன் பிறந்தான்" எனக் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்விளைஞனிடம் உத்பாவின் தெளிவான சாயலைக் கண்ட பிறகும் (அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்களிடம்), "அப்தே! அவன் உமக்குரியவனே. (ஒரு பெண் பெற்றெடுத்த) குழந்தை, (அப்)பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே உரியது. விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் ஏற்படும்" எனக் கூறினார்கள்.
பிறகு (தம் மனைவி சவ்தா (ரலி) அவர்களிடம்), "சவ்தாவே! இந்த இளைஞனிடத்தில் பர்தாவைப் பேணிக்கொள்" என்று கூறினார்கள். "அதற்குப் பிறகு சவ்தா (ரலி) அவர்களை அந்த இளைஞன் ஒருபோதும் கண்டதில்லை" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நபி (ஸல்) அவர்கள் (அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்களை) "அப்தே!" என்று அழைத்தது இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் மஅமர் மற்றும் இப்னு உயைனா (ரஹ்) ஆகியோரது அறிவிப்புகளில் "விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் ஏற்படும்" என்ற குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 17
2889. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஒரு பெண் பெற்றெடுத்த) குழந்தை, (அப்)பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே உரியது. விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் ஏற்படும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
பாடம் : 11 அங்க அடையாளங்களை வைத்து உறவு முறையைக் கண்டறியும் நிபுணர், ஒரு குழந்தை யாருக்குரியதென்று தீர்மானிக்கிறாரோ அதன்படி செயல்படுதல்.
2890. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் நெற்றிக்கோடுகள் ஒளிர்ந்த வண்ணம் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்தார்கள். அப்போது "உனக்குத் தெரியுமா? சற்று முன் (அங்க அடையாளங்களைக் கொண்டு தந்தை பிள்ளையைக் கண்டறியும்) முஜஸ்ஸிஸ் என்பார், ஸைத் பின் ஹாரிஸாவையும் (அவருடைய புதல்வர்) உசாமா பின் ஸைதையும் (அவர்கள் படுத்திருந்தபோது) அவர்களின் பாதங்களைப் பார்த்தார். மேலும், "இந்தப் பாதங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானது"என்று சொன்னார்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2891. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்தார்கள். அப்போது "ஆயிஷா! "பனூ முத்லிஜ்"குலத்தைச் சேர்ந்த முஜஸ்ஸிஸ் என்பவர், என்னிடம் வந்தார். அப்போது உசாமாவும் (அவருடைய தந்தை) ஸைதும் ஒரு துணியைப் போர்த்தி(க்கொண்டு படுத்து) இருப்பதைக் கண்டார். அவர்களிருவரும் தம் தலைகளை மூடியிருந்தனர்; (ஆனால்) அவர்களின் பாதங்கள் வெளியே தெரிந்தன. அப்போது முஜஸ்ஸிஸ் "இந்தப் பாதங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானது என்று சொன்னார்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2892. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, அங்க அடையாளங்களைக் கொண்டு உறவு முறையைக் கண்டறியும் நிபுணர் ஒருவர் (என் வீட்டிற்கு) வந்தார். உசாமா பின் ஸைத் அவர்களும், ஸைத் பின் ஹாரிஸா அவர்களும் அப்போது ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அந்த நிபுணர் (இருவரின் பாதங்களையும் பார்த்து), "இந்தப் பாதங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானது" என்று சொன்னார். அதனால் நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சி யடைந்து, அவரைக் கண்டு வியந்தார்கள். மேலும், அதை எனக்குத் தெரிவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "முஜஸ்ஸிஸ், அங்க அடையாளங்களைக் கொண்டு உறவு முறையைக் கண்டறியும் நிபுணராக இருந்தார்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 17