2593. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ர் (எனும் வளைந்த சுவரைப்) பற்றிக் கேட்டேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் அதில், "ஏணி வைக்காமல் ஏற முடியாத அளவிற்குக் கஅபாவின் தலைவாயில் உயரமாக இருக்கக் காரணம் என்ன என்று கேட்டேன்" என்றும் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 71 உடல் ஊனம், முதுமை உள்ளிட்ட காரணங்களால் இயலாதவருக்காகவோ, இறந்து போனவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல்.
2594. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸ், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் இருந்தபோது, "கஸ்அம்" குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்க வந்தார். ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார்; அப்பெண்ணும் ஃபள்லைப் பார்த்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபள்லின் முகத்தை வேறு பக்கம் திருப்பி விடலானார்கள். அப்பெண், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்களுக்கு விதியாக்கிய ஹஜ் கடமை, முதியவரான என் தந்தைக்கு ஏற்பட்டுள்ளது. அவரால் வாகனத்தில் அமர்ந்து செல்ல இயலாது. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்றார்கள். இது "விடைபெறும்" ஹஜ்ஜின் போது நடைபெற்றது.
அத்தியாயம் : 15
2595. ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"கஸ்அம்" குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை முதியவராக உள்ளார். இந்நிலையில், அவருக்கு அல்லாஹ் விதியாக்கிய ஹஜ் கடமை ஏற்பட்டுள்ளது. அவரால் தமது ஒட்டகத்தின் முதுகில் அமர இயலாது" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர் சார்பாக நீ ஹஜ் செய்யலாம்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 72 சிறுவனின் ஹஜ் செல்லும் என்பதும் அவனை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு என்பதும்.
2596. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "அர்ரவ்ஹா" எனும் இடத்தில் ஒரு பயணக் குழுவினரைச் சந்தித்தார்கள். அப்போது "இக்கூட்டத்தினர் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "முஸ்லிம்கள்" என்றார்கள். அப்போது அக்குழுவினர், "நீங்கள் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர்" என்றார்கள். அப்போது (அக்குழுவிலிருந்த) ஒரு பெண், தன் குழந்தையைத் தூக்கி, "இவனுக்கும் ஹஜ் உண்டா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு" என விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2597. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி தம் குழந்தையை உயர்த்திக்காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! இவனுக்கும் ஹஜ் உண்டா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2598. (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை) குறைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி (தம்) குழந்தையை உயர்த்திக்காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! இவனுக்கும் ஹஜ் உண்டா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு" என விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 73 ஆயுளில் ஒரு முறையே ஹஜ் கடமையாகும்.
2599. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே, ஹஜ் செய்யுங்கள்" என்றார்கள். அப்போது ஒரு மனிதர், "ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் "ஆம்" என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடமையாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும்" என்று கூறிவிட்டு, "நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம், அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(ச் செய்யாமல்) விட்டுவிடுங்கள்!" என்றார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 74 ஒரு பெண் (மணமுடிக்கத்தகாத) தன் நெருங்கிய உறவினருடன் ஹஜ் முதலான பயணம் மேற்கொள்ளல்.
2600. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தப் பெண்ணும் (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூன்று நாட்களுக்கு மேல் (பயணம் மேற்கொள்ளக் கூடாது)" என்று இடம்பெற்றுள்ளது. அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்" என்றே இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2601. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட ஒரு பெண், (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று இரவுகள் தொலைவிற்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2602. கஸஆ பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸைச் செவியுற்றேன். அது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. நான், "இதைத் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் கேட்காததையா அவர்கள் கூறியதாகச் சொல்வேன்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர மற்ற இடங்களுக்கு (நன்மையை நாடிப் புனிதப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்" என்று கூறியதையும், "எந்தப் பெண்ணும் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன், அல்லது கணவருடன் தவிர இரண்டு நாள் (தொலைவிற்குப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்" என்று கூறியதையும் நான் கேட்டேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2603. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னை வியப்படையச் செய்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "எந்தப் பெண்ணும் கணவன், அல்லது (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர இரண்டு நாள் பயணத் தொலைவிற்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனத் தடை விதித்தார்கள். தொடர்ந்து எஞ்சிய ஹதீஸையும் கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2604. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தப் பெண்ணும் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2605. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தப் பெண்ணும் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று இரவுகளுக்கு மேல் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(மணமுடிக்கத்தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்களுக்கு அதிகமாக (பயணம் மேற்கொள்ள வேண்டாம்)" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2606. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிமான எந்தப் பெண்ணும் (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் தன்னுடன் இருந்தே தவிர, ஓரிரவு பயணத் தொலைவிற்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2607. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கைகொண்ட எந்தப் பெண்ணும் (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர ஒரு நாள் பயணத் தொலைவிற்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2608. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒரு பெண், (மணமுடிக்கத் தகாத) தன் நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர ஒரு பகல் ஓர் இரவு பயணத் தொலைவிற்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2609. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தப் பெண்ணும் (மணமுடிக்கத் தகாத) தன் நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2610. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒரு பெண், அவளுடைய தந்தை, அல்லது மகன், அல்லது கணவன்,அல்லது சகோதரன், அல்லது (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்களோ, அதற்கு மேலாகவோ பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி இல்லை.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2611. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்கவேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும்போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்" என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்யப் புறப்பட்டுவிட்டாள். இன்னின்ன போரில் என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்நிலையில் நான் என்ன செய்வது?)" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "நீர் சென்று உம்முடைய மனைவியுடன் ஹஜ் செய்வீராக!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர" எனும் (ஆரம்பக்) குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
பாடம் : 75 ஹஜ் முதலான பயணத்திற்காக வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய பிரார்த்தனை.
2612. அலீ பின் அப்தில்லாஹ் அல்அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (பின்வரும் பிரார்த்தனையை)க் கற்றுத் தந்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேனும் பயணம் புறப்பட்டால், தமது ஒட்டகத்தில் ஏறி அமர்ந்தவுடன் மூன்று முறை தக்பீர் ("அல்லாஹு அக்பர்") கூறுவார்கள். பிறகு "சுப்ஹானல்லதீ சக்கர லனா ஹாதா, வ மா குன்னா லஹு முக்ரினீன, வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன். அல்லாஹும்ம, இன்னா நஸ்அலுக ஃபீ சஃபரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா, வ மினல் அமலி மா தர்ளா. அல்லாஹும்ம, ஹவ்வின் அலைனா சஃபரனா ஹாதா. வத்வி அன்னா புஅதஹ். அல்லா ஹும்ம அன்த்தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி, வல்ஃகலீஃபத்து ஃபில்அஹ்ல். அல்லாஹும்ம, இன்னீ அஊது பிக்க மின் வஉஸாயிஸ் ஸஃபரி, வ கஆபத்தில் மன்ழரி, வ சூயில் முன்கலபி ஃபில்மாலி வல்அஹ்ல்" என்று கூறுவார்கள்.
(பொருள்: நாங்கள் இ(ந்த வாகனத்)தைக் கையாளும் திறன் பெற்றிராத நிலையில், எங்களுக்கு இதைப் பணியவைத்த (இறை)வன் தூயவன். நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாய் உள்ளோம். இறைவா, இப்பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ திருப்தியடையக்கூடிய (நற்)செயல்களையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா,இப்பயணத்தை எங்களுக்கு எளிதாக்குவாயாக! இப்பயணத்தின் தூரத்தைச் சுருக்குவாயாக! இறைவா, நீயே என் பயணத் தோழனாகவும் என் குடும்பத்தின் பிரதிநிதியாகவும் இருப்பாயாக! இறைவா, பயணத்தின் சிரமங்களிலிருந்தும், நிலைகுலையச் செய்யும் துயரக் காட்சியிலிருந்தும், செல்வத்திலும் குடும்பத்திலும் நிகழ்ந்துவிடும் தீய மாற்றங்களிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
திரும்பி வரும்போதும் இவ்வாறே பிரார்த்திப்பார்கள். ஆனால், அவற்றுடன் பின்வரும் வரிகளையும் கூடுதலாக ஓதுவார்கள்: "ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன லி ரப்பினா ஹாமிதூன்" (பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும் அவனையே போற்றிப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம்).
அத்தியாயம் : 15