2016. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொடர்நோன்பு நோற்கலாகாது என நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தடைவிதித்தார்கள். மக்கள்மீது கொண்ட கருணையே இதற்குக் காரணம். அப்போது "தாங்கள் (மட்டும்) தொடர் நோன்பு நோற்கிறீர்களே!" என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் (இவ்விஷயத்தில்) உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் வழங்குகின்றான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 12 பாலுணர்வைத் தூண்டாது எனில் நோன்பாளி (தம் மனைவியை) முத்தமிடுவது தடைசெய்யப்பட்டதன்று.
2017. (ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரியின் புதல்வர்) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் தம் துணைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்" எனக் கூறிவிட்டு ஆயிஷா (ரலி) அவர்கள் சிரிப்பார்கள்.
அத்தியாயம் : 13
2018. சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் (ரஹ்) அவர்களிடம், "நீங்கள் உங்கள் தந்தை (காசிம் பின் முஹம்மத் - ரஹ்) அவர்கள் வாயிலாக "நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு என்னை முத்தமிடுவார்கள்" என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸைச் செவியுற்றீரா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பதிலளிக்காமல் சிறிது நேரம்) அமைதியாக இருந்துவிட்டுப் பிறகு "ஆம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2019. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் என்னை முத்தமிடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டதைப் போன்று உங்களில் எவரால் தம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியும்?
இதைக் காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2020. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியை) முத்தமிடுவார்கள்; நோன்பு நோற்றிருந்த நிலையில் கட்டியணைப்பார்கள். ஆயினும், அவர்கள் தம் உணர்ச்சிகளை, உங்களையெல்லாம்விட அதிகமாகக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தார்கள்.
இதை மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2021. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியை) முத்தமிடுவார்கள்; (அதே நேரத்தில்) அவர்கள் தம் உணர்ச்சிகளை, உங்களையெல்லாம்விட அதிகமாகக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தார்கள்.
இதை அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2022. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியைக்) கட்டியணைப்பார்கள்.
இதை அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2023. அஸ்வத் பின் யஸீத் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் துணைவியரைக்) கட்டியணைப்பார்களா?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "ஆம். ஆயினும், "அவர்கள் தம் உணர்ச்சிகளை, உங்களையெல்லாம்விட அதிகமாகக் கட்டுப்படுத்திக்கொள்பவர்களாக இருந்தார்கள்””. அல்லது "அவர்கள் உங்களில் தம் உணர்ச்சிகளை அதிகமாகக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களில் ஒருவராக இருந்தார்கள்" " என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நாங்கள் இருவரும் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் (நோன்பு நோற்றுக் கொண்டு முத்தமிடுவது பற்றிக்) கேட்பதற்காகச் சென்றோம்" என்று அஸ்வத் (ரஹ்), மஸ்ரூக் (ரஹ்) ஆகியோர் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 13
2024. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் என்னை முத்தமிடுவார்கள்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2025. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு மாதத்தில் (நோன்பு நோற்றிருந்த நிலையில் தம் துணைவியரை) முத்தமிடுவார்கள்.
இதை அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2026. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியரை) முத்தமிடுவார்கள்.
இதை அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2027. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியரை) முத்தமிடுவார்கள்.
இதை அலீ பின் அல்ஹுசைன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2028. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியரை) முத்தமிடுவார்கள்.
இதை ஷுதைர் பின் ஷகல் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2029. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "நோன்பாளி (மனைவியை) முத்தமிடலாமா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது பற்றி நீ (உன் தாயார்) உம்மு சலமாவிடம் கேள்!" என்றார்கள். (அவ்வாறே நான் கேட்டபோது, என் தாயார்), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்வார்கள்" என்று என்னிடம் தெரிவித்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் இவ்வாறு செய்தால் குற்றமில்லை. ஏனெனில்) அல்லாஹ், தங்கள் முன்பின் பாவங்களை மன்னித்து (விட்டதாக அறிவித்து)விட்டான்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கவனி! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களையெல்லாம்விட நான் அதிகமாக அல்லாஹ்விற்கு அஞ்சி (பாவங்களிலிருந்து விலகி) வாழ்கிறேன்; அவனு(டைய தண்டனை)க்குப் பயந்து வாழ்கிறேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 13 பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும்.
2030. அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் "பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவருக்கு நோன்பு இல்லை (அது செல்லாது)" என்று அறிவிப்பதை நான் செவியுற்றேன். இதை நான் (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களிடம் சொன்னேன். அதை அவர்கள் மறுத்தார்கள். பின்னர் ஆயிஷா (ரலி) மற்றும் உம்மு சலமா (ரலி) ஆகியோரை நோக்கி நடந்தார்கள். அவர்களுடன் நானும் நடந்தேன். அவ்விருவரிடம் நாங்கள் போய்ச் சேர்ந்தோம். அதைப் பற்றி அவர்களிடம் என் தந்தை கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், "நபி (ஸல்) அவர்கள் (இரவில் தாம்பத்திய உறவு கொண்டு) குளிப்புக் கடமையான நிலையில் -உறக்க ஸ்கலிதத்தினால் அல்ல- வைகறைப் பொழுதை அடைவார்கள். பிறகு நோன்பு நோற்பார்கள்" என்று கூறினர்.
எனவே, நாங்கள் இருவரும் (மதீனாவின் ஆட்சியராயிருந்த) மர்வான் பின் அல்ஹகமை நோக்கிச் சென்றோம். (என் தந்தை) அப்துர் ரஹ்மான் அவர்கள் (அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவந்த விஷயத்தையும் அதற்கு மாறாக ஆயிஷா (ரலி) மற்றும் உம்மு சலமா (ரலி) ஆகியோர் கூறியதையும்) மர்வான் பின் அல்ஹகமிடம் எடுத்துரைத்தார்கள். உடனே மர்வான், "நீங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் சென்று, அவர்கள் அறிவித்து வருவதற்கு மறுப்புத் தெரிவித்துத் தான் ஆகவேண்டும்" என்று கூறினார். அவ்வாறே நாங்கள் இருவரும் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் சென்றோம். இந்த நிகழ்ச்சி முழுவதிலும் நானும் அங்கிருந்தேன். நடந்தவற்றை அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இதைக்கேட்ட அபூஹுரைரா (ரலி) அவர்கள், "(ஆயிஷா (ரலி) மற்றும் உம்மு சலமா (ரலி) ஆகிய) அவ்விருவருமா உம்மிடம் இவ்வாறு கூறினார்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு (என் தந்தை) அப்துர் ரஹ்மான் அவர்கள், "ஆம் (அவர்கள் இருவருமே கூறினர்)"என்றார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், "(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) அவர்கள் இருவரும் (இதுகுறித்து) நன்கறிந்தவர்கள்" என்று சொன்னார்கள்.
பின்னர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் தாம் இதுவரை ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதையே அறிவித்து வந்ததாகக் கூறிவிட்டு, "இதை நான் ஃபள்லிடமிருந்தே செவியுற்றேன்; (நேரடியாக) நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறவில்லை" என்று சொன்னார்கள். பின்னர் இது தொடர்பாகத் தாம் கூறிவந்த கருத்தை அபூஹுரைரா (ரலி) அவர்கள் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அப்துல் மலிக் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்களிடம், "ரமளான் மாதத்தில் (நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ததாக) ஆயிஷாவும் உம்மு சலமாவும் கூறினார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(ஆம்) அவ்வாறுதான். நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் -உறக்க ஸ்கலிதத்தினால் அல்ல- வைகறைப் பொழுதை அடைவார்கள். பிறகு நோன்பைத் தொடருவார்கள் என்று கூறினர்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2031. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பெருந்துடக்குடையவர்களாக வைகறை (ஃபஜ்ர்) நேரத்தை அடைவார்கள்; ஸ்கலிதம் ஏற்பட்டதால் அல்ல (தாம்பத்திய உறவில் ஈடுபட்டதால்தான்). பின்னர் குளித்துவிட்டு நோன்பைத் தொடருவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2032. அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மர்வான் பின் அல்ஹகம், "பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்த மனிதர் நோன்பு நோற்கலாமா?" என்பது குறித்துக் கேட்பதற்காக என்னை உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அனுப்பினார். (அவ்வாறே நான் கேட்டதற்கு) "நபி (ஸல்) அவர்கள் (இரவில்) தாம்பத்திய உறவில் ஈடுபட்டுப் பெருந்துடக்குடன் -உறக்க ஸ்கலிதத்தால் அல்ல- வைகறைப் பொழுதை அடைவார்கள். பிறகு நோன்பை(த் தொடர்வார்களே தவிர) விட்டுவிடமாட்டார்கள்; (பின்னாளில் "களா" வாகத்) திரும்ப நோற்கவுமாட்டார்கள்" என உம்மு சலமா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 13
2033. நபி (ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா (ரலி) மற்றும் உம்மு சலமா (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாத்தில் (இரவில்) தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, பெருந்துடக்குடையவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள். ஸ்கலிதம் ஏற்பட்டதால் அல்ல. பின்னர் நோன்பைத் தொடருவார்கள்.
அத்தியாயம் : 13
2034. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது::
ஒரு மனிதர் (ஒரு விஷயத்தில்) தீர்ப்புக் கேட்பதற்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நான் கதவுக்குப் பின்னாலிருந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அவர், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் (ஃபஜ்ர்) தொழுகையின் நேரம் என்னை வந்தடைந்தால், அப்போதும் நான் நோன்பு நோற்கவேண்டுமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்ட நிலையில் (ஃபஜ்ர்) தொழுகைநேரம் என்னை வந்தடைகிறது. அப்போதும் நான் நோன்பைத் தொடரவே செய்கிறேன்" என்று விடையளித்தார்கள். அதற்கு அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எங்களைப் போன்றவர்கள் அல்லர். அல்லாஹ் தங்களின் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டானே?" என்று சொன்னார். அதற்கு, "அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவும், எவற்றிலிருந்து நான் தவிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை உங்களைவிட அதிகமாக அறிந்தவனாகவும் இருக்கவே நான் ஆசிக்கிறேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2035. சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் "பெருந்துடக்குடன் காலை (சுப்ஹு) நேரத்தை அடைந்த ஒரு மனிதர் நோன்பைத் தொடரலாமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு), பெருந்துடக்குடையவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள்; ஸ்கலிதம் ஏற்பட்டதால் அல்ல. பின்னர் நோன்பைத் தொடருவார்கள்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 13