1712. மேற்கண்ட ஹதீஸ் உம்மு அத்திய்யா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வியரில் ஒருவரை நாங்கள் நீராட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து "இவரை ஐந்து. அல்லது அதற்கும் அதிகமாக ஒற்றை எண்ணிக்கையில் நீராட்டுங்கள்" என்று கூறினார்கள் என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
மேலும், "நாங்கள் அவரது தலைமுடியை பிடரிப் பகுதியில் இரண்டும், முன்நெற்றிப் பகுதியில் ஒன்றுமாக மூன்று பின்னல்களிட்டோம்" என்று இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
1713. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வியை நீராட்டும்போது, "அவரது வலப் புறத்திலிருந்தும் அங்கத்தூய்மை (உளூ) செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் (நீராட்டலை) ஆரம்பியுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 11
1714. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய புதல்வியை நீராட்டிக் கொண்டிருந்தவர்களிடம் "அவரது வலப் புறத்திலிருந்தும் அங்கத்தூய்மை (உளூ) செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் (நீராட்டலை) ஆரம்பியுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 13 மய்யித்திற்கு "கஃபன்”” அணிவித்தல்.
1715. கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றோம். எங்களுக்கான பிரதி பலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதி பலனில் எதையும் (இவ்வுலகில்) அனுபவிக்காமலேயே (உலகைப் பிரிந்து) சென்றுவிட்டனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும் ஒருவர். அவர்கள் உஹுதுப் போரில் கொல்லப்பட்டார்கள். அவருக்கு "கஃபன்" அணிவிக்கக் கோடுபோட்ட வண்ணத் துணி ஒன்று மட்டுமே (அவருடைய உடைமைகளில்) கிடைத்தது. அதைக்கொண்டு அவரது தலைப் பகுதியை மறைத்தால் கால்கள் வெளியே தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியே தெரிந்தது. ஆகவே, அவரது தலைப் பகுதியை அந்தத் துணியால் மறைத்து விட்டு, அவருடைய கால்கள்மீது "இத்கிர்" எனும் ஒருவகை வாசனைப் புல்லை இட்டு மறைக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
எங்களில் (நாடு துறந்து சென்றதன்) பலன் கனிந்து அதைப் பறித்து (அனுபவித்து)க் கொண்டிருப்பவர்களும் உள்ளனர்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1716. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறந்தபோது) மூன்று வெண்ணிறப் பருத்தி ஆடைகளால் கஃபனிடப்பட்டார்கள்; அவற்றில் நீளங்கியோ தலைப்பாகையோ இருக்கவில்லை.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது உடலில்) போர்வை அணிவிக்கப்பட்டதாக ஒரு குழப்பம் மக்களிடையே உண்டு. (அப்படி) ஒரு போர்வை அவர்களின் கஃபனுக்காக வாங்கப்பட்டது (உண்மைதான். ஆனால்,) பின்னர் அந்தப் போர்வையை விட்டுவிட்டு மூன்று வெண்ணிறப் பருத்தி ஆடைகளால் கஃபன் அணிவிக்கப்பட்டது. அந்தப் போர்வையை (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் பெற்றுக்கொண்டு, "இதை (நான் இறந்த பிறகு) எனக்குக் கஃபன் அணிவிப்பதற்காகப் பத்திரப்படுத்துவேன்"என்று கூறினார்கள். பிறகு "அல்லாஹ் இந்தப் போர்வையை தன் தூதருக்காகத் தேர்ந்தெடுத்திருந்தால், அதில் அவர்களைக் கஃபனிடச் செய்திருப்பான். (ஆனால் அதை இறைவன் தேர்வு செய்யவில்லை.)" என்று கூறி, அதை விற்று, அந்தக் காசைத் தர்மம் செய்துவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1717. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறந்த பின்னர் என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான யமன் நாட்டுப் போர்வையில் சுற்றப்பட்டார்கள். பின்னர் அது அகற்றப்பட்டு, யமன் நாட்டின் மூன்று பருத்தி ஆடைகளால் கஃபனிடப்பட்டது. அவற்றில் தலைப் பாகையோ நீளங்கியோ இருக்கவில்லை. பிறகு அப்துல்லாஹ் பின் அபீபக்ர், அந்தப் போர்வையை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, "இதில்தான் நான் கஃபனிடப்பட வேண்டும்" என்றார். பின்னர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (உடலில்) கஃபனாக அணிவிக்கப்படாத இந்த ஆடையால் நான் கஃபனிடப்படுவதா?" என்று கூறிவிட்டு, அதைத் தர்மம் செய்துவிட்டார்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரலி) அவர்களது நிகழ்ச்சி தொடர்பான குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 11
1718. அபூசலமா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எத்தனை ஆடையில் கஃபனிடப்பட்டது?" என்று கேட்டேன். அதற்கு "மூன்று பருத்தி ஆடைகளில்" என ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 11
பாடம் : 14 மய்யித்தை மூடிவைத்தல்.
1719. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் உடல் (பருத்தியாலான) யமன் நாட்டுப் போர்வையால் போர்த்தி மூடப்பட்டது.
இதை அபூசலமா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 15 மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல்.
1720. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) உரையாற்றுகையில், தம் தோழர் ஒருவரை நினைவுகூர்ந்தார்கள். அவர் இறந்தபோது நிறைவான கஃபன் அணிவிக்கப்படாமல் (அரைகுறை கஃபனில்) இரவிலேயே அடக்கம் செய்யப்பட்டார். எனவே, நபி (ஸல்) அவர்கள் (தாம் கலந்துகொண்டு) தொழவைக்கப்படாமல் இரவிலேயே ஒருவர் அடக்கம் செய்யப்படுவதைக் கண்டித்தார்கள். ஒருவருக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டால் தவிர (அவ்வாறு செய்யவேண்டாம் எனத் தடைவிதித்தார்கள்). மேலும், "உங்களில் ஒருவர் தம் சகோதரருக்குக் கஃபனிடும்போது அழகிய முறையில் கஃபனிடட்டும்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 16 பிரேதத்தைத் துரிதமாக எடுத்துச் செல்லல்.
1721. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரேதத்தைத் துரிதமாகக் கொண்டுசெல்லுங்கள். ஏனெனில், அது (பிரேதம்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் (அதற்கான) நன்மையின் பக்கம் அதை விரைவுபடுத்துகிறீர்கள். வேறு விதமாக அது இருந்தால், ஒரு தீங்கை உங்கள் தோள்களிலிருந்து (விரைவாக) இறக்கி வைக்கிறீர்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்தே அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்றே நான் கருதுகிறேன்" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
1722. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரேதத்தைத் துரிதமாகக் கொண்டு செல்லுங்கள். ஏனெனில், அது நல்லதாயிருந்தால், நன்மையின் பக்கம் அதைக் கொண்டு சேர்க்கிறீர்கள். அது வேறுவிதமாக இருந்தால், ஒரு தீங்கை உங்கள் தோள்களிலிருந்து (விரைவாக) இறக்கிவைத்தவர்கள் ஆவீர்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 17 ஜனாஸா (பிரேத)த் தொழுகை மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்தல் ஆகியவற்றின் சிறப்பு.
1723. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"யார் ஜனாஸா (பிரேத)த் தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு "கீராத்" நன்மையுண்டு; அடக்கம் செய்யப்படும்வரை யார் கலந்துகொள்கிறாரோ அவருக்கு இரண்டு "கீராத்"கள் நன்மை உண்டு" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "இரண்டு "கீராத்கள்” என்றால் என்ன?" என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹர்மலா பின் யஹ்யா மற்றும் ஹாரூன் பின் சயீத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) இடம்பெற்றுள்ளது:
"இப்னு உமர் (ரலி) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்(து முடித்)ததும் திரும்பிச் சென்று விடுவார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களின் இந்த ஹதீஸ் அவர்களுக்கு எட்டிய போது, "நாம் ஏராளமான "கீராத்” (நன்மை)களை வீணாக்கிவிட்டோம்" என்று கூறினார்கள்" என சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்துல் அஃலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸின் முழு வடிவமும் இடம்பெற்றுள்ளது. மற்ற இரு அறிவிப்பாளர்தொடர்களில் "இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள தகவல் இடம்பெறவில்லை.
அப்துல் அஃலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அடக்கம் முடியும்வரை கலந்து கொள்பவருக்கு” என்ற வாசகமும், அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "குழியில் வைக்கப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு "கீராத்"கள் (நன்மை) உண்டு" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அடக்கப்படும்வரை அ(ந்த பிரேதத்)தைப் பின்தொடர்பவருக்கு இரண்டு "கீராத்"கள் (நன்மை) உண்டு" என இடம்பெற்றுள்ளது. இதர விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 11
1724. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஜனாஸா (பிரேத)த் தொழுகையில் பங்கேற்ற ஒருவர் (அதை அடக்கம் செய்யும்வரை) பின் தொடர்ந்து செல்லவில்லையானால், அவருக்கு ஒரு ‘கீராத்" (நன்மையே) உண்டு; அதை (அடக்கம் செய்யும்வரை) பின்தொடர்ந்தால் அவருக்கு இரண்டு "கீராத்"கள் (நன்மை) உண்டு" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "இரண்டு "கீராத்"கள் என்றால் என்ன?" என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "இரண்டு "கீராத்"களில் மிகச் சிறிய அளவு, உஹுத் மலை அளவாகும்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 11
1725. அபூஹாஸிம் சல்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"ஜனாஸா (பிரேத)த் தொழுகையில் பங்கேற்றவருக்கு ஒரு "கீராத்" (நன்மை) உண்டு. மண்ணறையில் (கப்று) வைக்கப்படும்வரை அதைப் பின்தொடர்ந்தவருக்கு இரண்டு "கீராத்"கள் (நன்மை) உண்டு" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் "அபூஹுரைரா (ரலி) அவர்களே! "கீராத்" என்றால் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "உஹுத் மலை அளவு" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 11
1726. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"யார் ஜனாஸாவைப் பின்தொடர்கிறாரோ அவருக்கு ஒரு "கீராத்" நன்மை உண்டு" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிவருகிறார்களே!" என இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு "அபூஹுரைரா நம்மிடம் அதிகப்படுத்துகிறார்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி இதைப் பற்றிக் கேட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்றை உறுதிப்படுத்தினார்கள். இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் "(அப்படியாயின்) நாம் ஏராளமான "கீராத்"களைத் தவறவிட்டுவிட்டோம்" என்றார்கள்.
அத்தியாயம் : 11
1727. ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது பெரிய வீட்டுக்காரர் கப்பாப் அல்மதனீ (ரலி) அவர்கள் அங்கு வந்து, "அப்துல்லாஹ் பின் உமர் அவர்களே! "ஒரு ஜனாஸாவின் வீட்டிலிருந்து அதனுடன் புறப்பட்டுச் சென்று, (ஜனாஸாத்தொழுகை) தொழுதுவிட்டு, அடக்கம் செய்யப்படும்வரை அதைப் பின் தொடர்கின்றவருக்கு இரண்டு "கீராத்"கள் நன்மை உண்டு; ஒவ்வொரு "கீராத்"தும் உஹுத் மலை அளவுடையதாகும்; (ஜனாஸாத்) தொழுதுவிட்டு (அடக்கம் செய்யப்படும்வரை காத்திராமல்) திரும்பிவிடுகின்றவருக்கு உஹுத் மலையளவு (ஒரு "கீராத்") நன்மை உண்டு" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிவருகின்றார்களே?" என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், கப்பாபை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அது பற்றிக் கேட்டுவிட்டு அவர்கள் அளிக்கும் பதிலைத் தம்மிடம் வந்து தெரிவிக்குமாறு அனுப்பிவைத்தார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், போனவர் திரும்பிவரும்வரை பள்ளிவாசல் தரையில் கிடந்த சிறு கற்களில் ஒரு கைப்பிடியளவு அள்ளி தமது கையில் வைத்து கிளறிக்கொண்டிருந்தார்கள்.
(கப்பாப் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று கேட்டதற்கு) ஆயிஷா (ரலி) அவர்கள் "அபூஹுரைரா சொன்னது உண்மையே" என்றார்கள். (இதைக் கேள்விப்பட்ட) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது கையிலிருந்த சிறு கற்களை கீழே எறிந்துவிட்டு, "நாம் ஏராளமான "கீராத்" (நன்மை)களை தவற விட்டுவிட்டோம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 11
1728. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜனாஸாத் தொழுகை தொழுதவருக்கு ஒரு "கீராத்" (நன்மை) உண்டு; (தொழுகையில் கலந்ததோடு) அதன் அடக்கத்திலும் கலந்துகொண்டால், அவருக்கு இரண்டு "கீராத்" (நன்மை)கள் உண்டு; "கீராத்" என்பது உஹுத் மலை அளவாகும்.
இதை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், சயீத் மற்றும் ஹிஷாம் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "நபி (ஸல்) அவர்களிடம் "கீராத்" பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் "உஹுத் மலையளவு" என்று பதிலளித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 18 யாருக்கு நூறு பேர் (இறுதித் தொழுகை) தொழுகின்றார்களோ அவருக்காக அவர்கள் செய்யும் பரிந்துரை ஏற்கப்படும்.
1729. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்த ஒருவருக்கு நூறுபேர் கொண்ட முஸ்லிம் குழுவினர் (இறுதித்) தொழுகை தொழுது, அவர்களில் ஒவ்வொருவரும் அவருக்காகப் பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரை ஏற்கப்படாமல் இருப்பதில்லை.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சல்லாம் பின் அபீமுதீஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஹதீஸை நான் ஷுஐப் பின் அல் ஹப்ஹாப் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் "இவ்வாறே எனக்கு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 11
பாடம் : 19 யாருக்கு நாற்பது பேர் (இறுதித் தொழுகை) தொழுகின்றார்களோ அவருக்காக அவர்கள் செய்யும் பரிந்துரை ஏற்கப்படும்.
1730. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய புதல்வர் ஒருவர் "குதைத்" அல்லது "உஸ்ஃபான்" எனுமிடத்தில் இறந்துவிட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "குறைப்! மக்கள் ஒன்றுகூடிவிட்டனரா எனப் பார்" என்று கூறினார்கள். நான் சென்று பார்த்தபோது அங்கு மக்களில் சிலர் குழுமியிருந்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைச் சொன்னபோது "அவர்கள் நாற்பது பேர் இருப்பார்களா, சொல்" என்றார்கள். நான் "ஆம்" என்றேன். "அதை (மய்யித்தை) எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்" என்று கூறிவிட்டு, "ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 20 இறந்தவர் குறித்துப் புகழ்ந்து பேசப்படுதல்; அல்லது இகழ்ந்து பேசப்படுதல்.
1731. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களைக் கடந்து) ஜனாஸா (பிரேதம்) ஒன்று கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து நல்ல விதமாகப் (புகழ்ந்து) பேசப்பட்டது. இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் "உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது" என்று கூறினார்கள். பின்னர் மற்றொரு பிரேதம் கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாகப் பேசப்பட்டது. அப்போதும் நபி (ஸல்) அவர்கள் "உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது" என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் "(அல்லாஹ்வின் தூதரே!) என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்ட போது அது குறித்து நல்லவிதமாகப் பேசப்பட்டது. அதற்கு நீங்கள் "உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது;" என்று கூறினீர்கள். பிறகு மற்றொரு பிரேதம் கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாகப் பேசப்பட்டது. அதற்கும் நீங்கள் "உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது;" என்று கூறினீர்கள். (இரண்டிற்குமே இவ்வாறு தாங்கள் கூறக் காரணமென்ன?)" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் யாரைப் பற்றி நல்ல விதமாகப் பேசினீர்களோ அவருக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது; நீங்கள் யாரைப் பற்றி இகழ்வாகப் பேசினீர்களோ அவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்; நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்;நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்" என்று (மும்முறை) கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நபி (ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாக பிரேதம் ஒன்று கொண்டு செல்லப்பட்டது" என்று ஹதீஸ் தொடங்குகிறது. இதர விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், மேற்கண்ட ஹதீஸே முழுமையானதாகும்.
அத்தியாயம் : 11