1483. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "எனக்குச் சில வசனங்கள் அருளப் பெற்றுள்ளன. அவையொத்த வசனங்கள் முன்னெப்போதும் காணப்பட்டதில்லை. அவை "அல்முஅவ்விதத்தைன்" (113, 114ஆகிய) அத்தியாயங்களாகும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 47 குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பும், மார்க்கச் சட்டம் முதலான ஞானத்தைத் தாமும் கற்று அதன்படி செயல்பட்டுப் பிறருக்கும் அதைப் போதிப்பவரின் சிறப்பும்.
1484. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொறாமை என்பது இரண்டில் தவிர வேறெதிலும் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருள, அவர் அதன்படி அல்லும் பகலும் செயல்பட்டு வருகிறார். 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்க, அவர் அதை அல்லும் பகலும் தானம் செய்கிறார். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1485. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொறாமை என்பது இரண்டில் தவிர வேறெதிலும் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் இந்த வேத(ஞான)த்தை அருள, அவர் அதன்படி அல்லும் பகலும் செயல்பட்டு வருகிறார். 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்க, அவர் அதை அல்லும் பகலும் தானம் செய்கிறார். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1486. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக்கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கி,அதை அறவழியில் செலவழிக்க அவரைத் தூண்டினான்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி,அதற்கேற்ப அவர் (செயல்பட்டு) தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக்கொடுப்பவராகவும் இருக்கிறார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1487. ஆமிர் பின் வாஸிலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் (ரலி) அவர்கள், (கலீஃபா) உமர் (ரலி) அவர்களை உஸ்ஃபான் எனுமிடத்தில் சந்தித்தார்கள். (இக்காலகட்டத்தில்) உமர் (ரலி) அவர்கள் நாஃபிஉ (ரலி) அவர்களை மக்காவின் ஆளுநராக நியமித்திருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் (நாஃபிஉ (ரலி) அவர்களிடம்) "நீங்கள் இந்தப் பள்ளத்தாக்கு (மக்கா)வாசிகளுக்கு எவரை ஆளுநராக ஆக்கினீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு நாஃபிஉ (ரலி) அவர்கள், "(அப்துர் ரஹ்மான்) இப்னு அப்ஸா (ரலி) அவர்களை" என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "இப்னு அப்ஸா யார்?" எனக் கேட்டார்கள். நாஃபிஉ (ரலி) அவர்கள், "எங்களால் விடுதலை செய்யப்பட்ட எங்கள் (முன்னாள்) அடிமைகளில் ஒருவர்" என பதிலளித்தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அவர்களுக்கு ஒரு முன்னாள் அடிமையையா ஆட்சித் தலைவராக்கினீர்?" என்று கேட்டார்கள். அதற்கு நாஃபிஉ (ரலி) அவர்கள், "அவர் (இப்னு அப்ஸா) இறை வேதத்தை அறிநதவர்; பாகப் பிரிவினைச் சட்டங்களை அறிந்தவர்" என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உமர் (ரலி) அவர்கள் "அறிந்துகொள்க: அல்லாஹ் இந்த வேதத்தின் மூலம் சிலரை உயர்த்துகிறான்; வேறு சிலரைத் தாழ்த்துகிறான்" என்று உங்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு அப்ஸா வேத அறிவினால் மேன்மை பெற்றார்)" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நாஃபிஉ பின் அல்ஹாரிஸ் அல்குஸாஈ (ரலி) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களை உஸ்ஃபான் என்னுமிடத்தில் சந்தித்தார்கள்" என ஹதீஸ் தொடங்குகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 6
பாடம் : 48 குர்ஆன் ஏழு (வட்டார) மொழிவழக்கில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம்.
1488. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் (குர்ஆனின் 25ஆவது) அத்தியாயம் அல்ஃபுர்கானை நான் ஓதுகின்ற முறைக்கு மாற்றமாக ஓதுவதைச் செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏற்கெனவே அந்த அத்தியாயத்தை எனக்கு ஓதிக் காட்டியிருந்தார்கள். நான் உடனே ஹிஷாம் (ரலி) அவர்களைக் கண்டிக்க முற்பட்டேன். பிறகு (சற்று யோசித்து) அவர் தொழுகையை முடிக்கும்வரை அவருக்கு அவகாசம் அளித்(துக் காத்திருந்)தேன். (அவர் தொழுது முடித்த) பிறகு அவருடைய மேலாடையை கழுத்தில் போட்டு இழுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, "அல்லாஹ்வின் தூதரே,நீங்கள் எனக்கு ஓதிக்கொடுத்ததற்கு மாறாக இவர் அல்ஃபுர்கான் அத்தியாயத்தை ஓதுவதை நான் செவியுற்றேன்" என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை விடுங்கள்" என (என்னிடம்) கூறிவிட்டு, (ஹிஷாம் அவர்களிடம்) "நீங்கள் ஓதுங்கள்" என்று கூறினார்கள். அவர் என்னிடம் ஓதியதைப் போன்றே ஓத, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது" என்று கூறினார்கள். பின்னர் என்னிடம் "நீங்கள் ஓதுங்கள்" என்றார்கள். நான் ஓதினேன். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது. இந்தக் குர்ஆன் (ஓதுவதற்கான) ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கின்றது. ஆகவே, உங்களுக்கு சுலபமானது எதுவோ அதை ஓதிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
இதை அப்துர் ரஹ்மான் பின் அப்தில் காரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1489. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாழ்நாளில் ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) அவர்கள் அல்ஃபுர்கான் எனும் (25ஆவது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதைச் செவியுற்றேன்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. "தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும் வரை சிரமப்பட்டுப் பொறுத்துக்கொண்டேன்" என்று அதிகப்படியாகவும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1490. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப்படி (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார்கள். அதை இன்னும் பல (வட்டார) மொழிவழக்குகளின்படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்கக் கேட்க) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஏழு (வட்டார) மொழிவழக்குகள் அளவிற்கு வந்து நின்றது.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அந்த ஏழு (வட்டார) மொழிவழக்குகள் ஒரே கருத்தை பிரதிபலிப்பவையே ஆகும்; அனுமதிக்கப் பெற்றவை (ஹலால்) தடை செய்யப்பெற்றவை (ஹராம்) விஷயத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்தைத் தருபவை அல்ல.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1491. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஒரு முறை) நான் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர் (பள்ளிவாசலுக்குள்) வந்து தொழலானார்; (தொழுகையில் குர்ஆன் வசனங்களை) ஒரு விதமாக ஓதினார். அதை நான் அறிந்திருக்கவில்லை. பிறகு மற்றொருவர் வந்து (அதே வசனங்களை) முதலாமவர் ஓதியதற்கு மாற்றமாக ஓதித் தொழலானார். தொழுகை முடிந்ததும் நாங்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான் "இவர் குர்ஆனை நான் அறிந்திராத (ஓதல்) முறையில் ஓதினார். பின்னர் மற்றவர் வந்து முதலாமவர் ஓதியதற்கு மாறாக (அதையே) வேறு முறையில் ஓதினார்"
என்றேன். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் ஓதிக் காட்டும்படி பணித்தார்கள். அவ்விருவரும் ஓதினர். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரும் சரியாகவே ஓதினர் எனக் கூறினார்கள். (இதைக் கேட்டவுடன்) என் உள்ளத்தில் நபியவர்கள் பொய்யுரைக்கிறார்கள் என்ற எண்ணம் விழுந்தது. அறியாமைக் காலத்தில்கூட இத்தகைய எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை. என்னை ஆட்கொண்டிருந்த (அந்த எண்ணத்)தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டபோது என் நெஞ்சில் ஓர் அடி அடித்தார்கள். (அடி விழுந்ததும்) எனக்கு வியர்த்துக் கொட்டியது. அச்சத்தால் எனக்கு அல்லாஹ்வே காட்சியளிப்பதைப் போன்றிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "உபை, "குர்ஆனை ஓர் ஓதல் முறைப்படி ஓதுவீராக" என எனக்கு (இறைவனிடமிருந்து) செய்தியறிவிக்கப்பட்டது. உடனே நான் என் சமுதாயத்தாருக்கு இன்னும் சுலபமாக்கும்படி (இறைவனிடம்) கோரினேன். அப்போது "குர்ஆனை இரண்டு ஓதல் முறைப்படி ஓதுவீராக!" என எனக்கு இரண்டாவது முறையாக இறைவன் அறிவித்தான். உடனே நான் இன்னும் என் சமுதாயத்தாருக்கு சுலபமாக்கும்படி கோரினேன். மூன்றாவது முறையில் குர்ஆனை ஏழு ஓதல் முறைகளின் படி ஓதும்படி எனக்கு இறைவன் அறிவித்தான். மேலும், "நீர் கோரிய (மூன்று கோரிக்கைகளில்) ஒவ்வொரு கோரிக்கைக்கும் பகரமாக என்னிடம் உமக்கு ஓர் (அங்கீகரிக்கப்பட்ட) பிரார்த்தனை உண்டு" என்றும் (இறைவன்) கூறினான். எனவே நான் "இறைவா! என் சமுதாயத்தாரை மன்னிப்பாயாக! இறைவா! என் சமுதாயத்தாரின் குற்றங்குறைகளை மறைப்பாயாக!" என (இரண்டு) பிரார்த்தனை செய்தேன். (இவ்விரு பிரார்த்தனைகள் அல்லாமல்) மூன்றாவது பிரார்த்தனையை நான் ஒரு நாளைக்காகத் தாமதப்படுத்தி (பத்திரப்படுத்தி) வைத்துள்ளேன். அந்நாளில் படைப்பினங்கள் அனைத்தும் என்னிடம் (பரிந்துரைக்கும்படி) ஆவலுடன் வருவார்கள்; இப்ராஹீம் (அலை) அவர்கள் உட்பட" எனக் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர் (பள்ளிவாசலுக்குள்) நுழைந்து குர்ஆனை ஓர் ஓதல் முறைப்படி ஓதித் தொழுதார்..." என்று உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 6
1492. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் பனூ ஃகிஃபார் குலத்தாரின் நீர்நிலை அருகே இருந்தார்கள். அப்போது அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து "குர்ஆனை உங்கள் சமுதாயத்தார் ஒரேயொரு ஓதல் முறைப்படி ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்" என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், "நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பையும் பிழை பொறுத்தலையும் வேண்டுகிறேன். (பல்வேறு மொழிவழக்குகள் கொண்ட) என் சமுதாயத்தார் இதற்குச் சக்தி பெறமாட்டார்கள்"என்று கூறினார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் (இறைவனிடம் சென்றுவிட்டுத் திரும்பி) நபியவர்களிடம் வந்து, "குர்ஆனை உங்கள் சமுதாயத்தார் இரண்டு ஓதல் முறைகளின்படி ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்" என்று கூறினார்கள். (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள் "நான் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பையும் பிழை பொறுத்தலையும் வேண்டுகிறேன். என் சமுதாயத்தார் இ(வ்வாறு ஓதல் முறையை இரு முறைகளுக்குள் அடக்குவ)தற்குச் சக்தி பெறமாட்டார்கள்" என்று கூறினார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூன்றாவது முறை (இறைவனிடம் சென்று விட்டுத் திரும்பி)வந்து, "உங்கள் சமுதாயத்தார் குர்ஆனை மூன்று ஓதல் முறைகளின்படி ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்" என்று கூறினார்கள். (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், "நான் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பையும் பிழை பொறுத்தலையும் வேண்டுகிறேன். இ(வ்வாறு ஓதல் முறையை மூன்று முறைகளுக்குள் அடக்குவ)தற்கு என் சமுதாயத்தார் சக்தி பெறமாட்டார்கள்" என்று கூறினார்கள். பிறகு நான்காவது முறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் (இறைவனிடம் சென்றுவிட்டுத் திரும்பி)வந்து, "குர்ஆனை உங்கள் சமுதாயத்தார் ஏழு ஓதல் முறைகளின்படி ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். அவர்கள் (இந்த ஏழு முறைகளில்) எந்த முறைப்படி ஓதினாலும் அவர்கள் சரியாகவே ஓதினார்கள்" என்று கூறினார்கள்.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1493. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நஹீக் பின் சினான் எனப்படும் ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, "அபூஅப்திர் ரஹ்மான்,குர்ஆனில் (47ஆவது அத்தியாயத்திலுள்ள) இந்த எழுத்தை எப்படி ஓதுகிறீர்?: "மிம்மாயின் ஃகைரி ஆசினின்" என்று அலிஃபுடன் ஓதுகின்றீரா, அல்லாது "மிம்மாயின் ஃகைரி யாசினின்" என்று "யா"வுடன் ஓதுகின்றீரா?" எனக் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "இதைத் தவிர குர்ஆன் முழுவதையும் சரியாக மனனமிட்டு விட்டாயோ?" என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "நான் முஃபஸ்ஸல் எனும் (ஹுஜுராத் முதல் அந்நாஸ் (49-114) வரையிலான) அத்தியாயங்களை ஒரே ரக்அத்தில் ஓதுகின்றேன்" என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரோ? மக்களில் சிலர் குர்ஆனை ஓதுவார்கள். அது அவர்களது தொண்டைக் குழியைக் கடந்து செல்லாது. அது மட்டும் அவர்களது உள்ளத்திற்குள் சென்று பதிந்துவிட்டால் நிச்சயம் பயன் தரும். தொழுகையில் மிகச் சிறந்த நிலை ருகூஉவும் சஜ்தாவுமாகும். நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டாகச் சேர்த்து ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் அறிவேன்" என்று கூறினார்கள். (இதைக் கூறிய) பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (தமது இல்லத்தினுள்) சென்றார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து அல்கமா (ரஹ்) அவர்களும் உள்ளே சென்றார்கள். (சிறிது நேரம் கழித்து) அல்கமா (ரஹ்) அவர்கள் வெளியே வந்து "அந்த (சரிநிகர்) அத்தியாயங்கள் (எவை என்பது) பற்றி எனக்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பனூ பஜீலா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்தார்" என்றே இடம்பெற்றுள்ளது. "நஹீக் பின் சினான் எனப்படும் ஒரு மனிதர்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 6
1494. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அபூவாயில் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது:
பிறகு அல்கமா (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்தினுள்ளே) செல்லப் போனார்கள். அப்போது நாங்கள், "நீங்கள் அவர்களிடம் (சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரே ரக்அத்தில் ஓதிவந்த அந்த சரிநிகர் அத்தியாயங்கள் (எவை என்பது) குறித்துக் கேளுங்கள்!" என்றோம். அல்கமா (ரஹ்) அவர்கள் உள்ளே சென்று,இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வினவினார்கள். பின்னர் எங்களிடம் வந்து, "(அவை:) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் தொகுத்துவைத்துள்ள குர்ஆன் பிரதியின்படி (ஆரம்ப) இருபது முஃபஸ்ஸல் அத்தியாயங்களாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1495. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு அத்தியாயங்கள் வீதம் பத்து ரக்அத்களில் இருபது அத்தியாயங்களாக ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் அறிவேன்" என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1496. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள்) காலையில் வைகறை (சுப்ஹு)த் தொழுகைக்குப் பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றோம். வாசலில் (நின்று) சலாம் சொன்னோம். அவர்கள் எங்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். ஆனால், நாங்கள் சிறிது நேரம் வாசலிலேயே (தயங்கியவாறு) நின்றுகொண்டிருந்தோம். அப்போது பணிப் பெண் வெளியே வந்து, "நீங்கள் உள்ளே வரக் கூடாதா?" என்று கேட்டாள். நாங்கள் உள்ளே சென்றோம். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்;
)எங்களைக் கண்டதும்) "உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட பின்பும் ஏன் நீங்கள் உள்ளே வரவில்லை?" என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் "(அப்படியொன்றும்) இல்லை; (தங்கள்) வீட்டாரில் எவரேனும் உறங்கிக்கொண்டிருப்பார்கள் என்று நாங்கள் எண்ணினோம்" என்று சொன்னோம். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "இப்னு உம்மி அப்தின் குடும்பத்தார் (தொழுகையில்) அலட்சியமாக இருப்பார்கள் என எண்ணிக்கொண்டீர்களா?" என்று கூறி விட்டு (மீண்டும்) இறைவனைத் துதிப்பதில் ஈடுபடலானார்கள். பின்னர் சூரியன் உதயமாகியிருக்கலாம் என எண்ணிய அவர்கள் (தம் பணிப்பெண்ணிடம்) "பெண்ணே! சூரியன் உதயமாகிவிட்டதா, பார்?" என்றார்கள். அந்தப் பெண் பார்த்தபோது சூரியன் உதயமாகியிருக்கவில்லை. எனவே, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் மீண்டும் இறைவனைத் துதிப்பதில் ஈடுபடலானார்கள். பின்னர் சூரியன் உதயமாகி விட்டதாக எண்ணியபோது (மறுபடியும்) "பெண்ணே, சூரியன் உதயமாகிவிட்டதா, பார்!" என்றார்கள். அவள் பார்த்தபோது சூரியன் உதயமாகிவிட்டிருந்தது. அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "இன்றைய நாளை நமக்கு மீட்டுத்தந்த இறைவனுக்கே புகழ் யாவும்; அவன் நம்மை நம் பாவங்களால் அழித்துவிடவில்லை" என்று கூறினார்கள்.
அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவர், "நேற்றிரவு நான் "முஃபஸ்ஸல்" அத்தியாயங்கள் முழுவதையும் ஓதி முடித்தேன்" என்று கூறினார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக (குர்ஆனை) ஓதினீரோ? நாங்கள் ஒரே அளவிலமைந்த அத்தியாயங்களை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதும்போது) செவியுற்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வழக்கமாக) ஓதிவந்த ஒரே அளவிலமைந்த "முஃபஸ்ஸல்" அத்தியாயங்கள் பதினெட்டையும் "ஹாமீம்" (எனத் தொடங்கும் அத்தியாயங்களின்) குடும்பத்தில் இரண்டு அத்தியாயங்களையும் நான் மனனமிட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 6
1497. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பனூ பஜீலா குடும்பத்தைச் சேர்ந்த நஹீக் பின் சினான் என்று கூறப்படும் ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து "நான் ஒரே ரக்அத்தில் முஃபஸ்ஸல் அத்தியாயங்கள் அனைத்தையும் ஓதுகிறேன்" என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரோ! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு அத்தியாயங்கள் வீதம் ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் அறிந்து வைத்துள்ளேன்" என்று கூறினார்கள்.
- அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து "நான் இன்றிரவு ஒரே ரக்அத்தில் முஃபஸ்ஸல் அத்தியாயங்கள் முழுவதையும் ஓதி முடித்தேன்" என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரோ! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தொழுகையில்) ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு அத்தியாயங்களாகச் சேர்த்து ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் அறிந்துள்ளேன்" எனக் கூறிவிட்டு, முஃபஸ்ஸல் அத்தியாயங்களில் இருபது அத்தியாயங்களைக் குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 50 சில ஓதும் முறைகள் பற்றிய குறிப்பு.
1498. அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் பள்ளிவாசலில் குர்ஆன் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் "நீங்கள் இந்த (54:32ஆவது) வசனத்தை எப்படி ஓதுகிறீர்கள்? ஃபஹல் மின்(ம்) முத்தகிர் என "தால்" எனும் எழுத்துடன் ஓத வேண்டுமா? அல்லது (ஃபஹல் மின்(ம்) முஸ்ஸகிர் என) "ஃதால்" எனும் எழுத்துடன் ஓத வேண்டுமா?" என்று கேட்டார். அதற்கு "தால்" (எனும் எழுத்து) கொண்டே (ஓத வேண்டும்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முத்தகிர்" என "தால்" (எனும் எழுத்து) கொண்டே ஓதியதை நான் கேட்டேன் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று அஸ்வத் (ரஹ்) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 6
1499. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (54:32ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) "ஃபஹல் மின்(ம்) முத்தகிர்" என்றே ஓதினார்கள்.
இதை அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1500. அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மாணவர்களான) நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றிருந்தோம். (நாங்கள் வந்துள்ள செய்தியறிந்து) எங்களிடம் அபுத்தர்தா (ரலி) அவர்கள் வந்து, "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி ஓதத் தெரிந்தவர் எவரேனும் உங்களிடையே உண்டா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்; நான் (இருக்கிறேன்)" என்று பதிலளித்தேன். அபுத் தர்தா (ரலி) அவர்கள், "வல்லைலி இஃதா யஃக்ஷா" எனும் இந்த (92:3ஆவது) வசனத்தை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எவ்வாறு ஓதக் கேட்டீர்கள்?" என்று வினவினார்கள். நான் "வல்லைலி இஃதா யஃக்ஷா வத்தகரி வல் உன்ஸா" என்றே ஓதினார்கள் என்று பதிலளித்தேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே நான் கேட்டுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்) "வமா கலக்கஃத் தகர வல்உன்ஸா" என்றே நான் ஓத வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால், இவர்களை நான் பின்பற்றமாட்டேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1501. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியிருப்பதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்கு பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதேன். பின்னர் எழுந்து ஒரு சபைக்குச் சென்று அதில் அமர்ந்தேன். அப்போது ஒருவர் (அபுத்தர்தா-ரலி) வந்து என் அருகே அமர்ந்தார். அவரிடம் (அக்கால) மக்களின் எளிமையையும் தோற்றத்தையும் கண்டேன். அவர் (என்னிடம்), "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதுகின்ற முறையை நீங்கள் மனனமிட்டுள்ளீர்களா?" என்று வினவினார்.
அத்தியாயம் : 6
1502. அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் "நீங்கள் எந்த நாட்டவர்?" என்று கேட்க, "இராக்கியர்" என்று நான் பதிலளித்தேன். "இராக்கியரில் நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்?" என்று அன்னார் வினவ, "கூஃபாவாசி" என நான் விடையளித்தேன். "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதிய முறையில் நீங்கள் ஓதுவீர்களா?" என அவர்கள் கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "அப்படியானால், "வல்லைலி இதா யஃக்ஷா" எனும் (92ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டுங்கள்" என்றார்கள். நான் "வல்லைலி இதா யஃக்ஷா" என ஓதத் தொடங்கி "வத்தகரி வல்உன்ஸா" என ஓதினேன். உடனே அபுத்தர்தா (ரலி) அவர்கள் சிரித்துவிட்டு "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓத நான் செவியேற்றேன்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அல்கமா (ரஹ்) அவர்கள் "நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்கு அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன்" என்று கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 6