பாடம் : 39 குர்ஆனை நன்கு அறிந்தவர்கள் மற்றும் மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது விரும்பத்தக்கதாகும்; யாரிடம் ஓதப்படுகிறதோ அவரைவிட ஓதுகின்றவர் சிறப்பில் மேலானவராயிருப்பினும் சரியே!
1463. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், "உங்களுக்கு (குர்ஆன் அத்தியாயத்தை) ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்" என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், "என் பெயரை அல்லாஹ் தங்களிடம் குறிப்பிட்டானா?" என (பெருமிதத்துடன்) கேட்டார்கள். "(ஆம்) அல்லாஹ், உங்கள் பெயரை என்னிடம் குறிப்பிட்டான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். இதைக் கேட்டு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள்.
அத்தியாயம் : 6
1464. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் "உங்களுக்கு "லம் யகுனில்லதீன கஃபரூ..." (என்று தொடங்கும் 98ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்" என்று கூறினார்கள். "அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?" என்று உபை (ரலி) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று பதிலளிக்க, (ஆனந்த மிகுதியால்) அப்போது உபை (ரலி) அவர்கள் அழுதார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 40 குர்ஆனை (பிறர் ஓதும்போது) செவி தாழ்த்திக் கேட்பதன் சிறப்பும், குர்ஆனை மனனம் செய்திருப்பவரிடம் ஓதிக் காட்டச் சொல்லி செவியேற்பதும், ஓதும்போது அழுவதும் ஆழ்ந்து சிந்திப்பதும்.
1465. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "எனக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுங்கள்" என்று சொன்னார்கள். நான், "தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்" என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு "அந்நிசா" எனும் (நான்காவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். "ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டு வரும்போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டு வரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?" எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது "தலையை உயர்த்தினேன்" அல்லது "எனக்குப் பக்கத்திலிருந்த ஒருவர் என்னைத் தொட்டுணர்த்தியபோது நான் தலையை உயர்த்தினேன்". அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹன்னாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி என்னிடம் "எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்" என்று கூறினார்கள்" என (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1466. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்!" என்று சொன்னார்கள். நான், "தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்" என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு "அந்நிசா" எனும் (நான்காவது) அத்தியாயத்தை ஆரம்பம் முதல் "ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?" (4:41) என்பதுவரை ஓதிக் காட்டினேன். அதைக் கேட்டு அவர்கள் அழுதார்கள். இதை இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மிஸ்அர் (ரஹ்) அவர்கள் வழியாக மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது:
நபி (ஸல்) அவர்கள் "நான் அவர்களிடையே (உயிருடன்) இருந்தவரையில் அவர்களை நான் கண்காணித்துக்கொண்டிருந்தேன்"என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1467. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (சிரியா நாட்டின் பிரபல நகரமான) ஹிம்ஸில் இருந்தேன். அப்போது மக்களில் ஒருவர், "எங்களுக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்!" என்று சொன்னார். நான் "யூசுஃப்" எனும் (12ஆவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். அப்போது ஒரு மனிதர் (அதை ஆட்சேபிக்கும் விதமாக) "அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு இந்த அத்தியாயம் அருளப்படவில்லை" என்று கூறினார். நான், "உமக்கு நாசம் உண்டாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வாறுதான்) நான் இந்த அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஓதினேன். அவர்களும், "மிகச் சரியாக ஓதினாய்" என்று கூறினார்கள்"என்று பதிலளித்தேன். (ஆட்சேபிக்க வந்த) அந்த மனிதருடன் நான் பேசிக் கொண்டிருந்தபோது அவரது வாயிலிருந்து மதுவின் வாடை வருவதைக் கண்டேன். "மதுவையும் அருந்திக்கொண்டு அல்லாஹ்வின் வேதத்தை மறுக்கவும் முனைகிறாயா? (மது அருந்திய குற்றத்திற்காக) நீ சாட்டையடி பெறாமல் இந்த இடத்திலிருந்து நகர முடியாது" என்று கூறிவிட்டு, அவருக்குச் சாட்டையடி தண்டனையை நிறைவேற்றினேன்.
இதை அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இன்னும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "மிகச் சரியாக ஓதினாய்" என்று கூறினார்கள்" எனும் தகவல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 6
பாடம் : 41 தொழுகையில் குர்ஆன் ஓதுவதன் சிறப்பும், குர்ஆனைக் கற்பதன் சிறப்பும்.
1468. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் தம் வீட்டாரிடம் செல்கையில் வீட்டில் மூன்று பெரிய கொழுத்த சினை ஒட்டகங்கள் காணப்படுவதை விரும்புகிறாரா?" என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்" என்று பதிலளித்தோம். அப்போது அவர்கள், "உங்களில் ஒருவர் தமது தொழுகையில் மூன்று வசனங்களை ஓதுவது மூன்று பெரிய கொழுத்த சினை ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1469. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலின்) திண்ணையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். அப்போது "உங்களில் எவர் ஒவ்வொரு நாள் காலையிலும் "புத்ஹான்" அல்லது "அகீக்" (சந்தைக்குச்) சென்று பாவம் புரியாமலும் உறவைத் துண்டிக்காமலும் பருத்த திமில்கள் கொண்ட இரு ஒட்டகங்களுடன் திரும்பி வருவதை விரும்புவார்?" என்று கேட்டார்கள். "நாங்கள் (அனைவருமே) அதை விரும்புவோம்" என்று நாங்கள் பதிலளித்தோம். அதற்கு அவர்கள், "உங்களில் ஒருவர் காலையில் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரு வசனங்களைக் "கற்றுக்கொள்வது" அல்லது "ஓதுவது" இரு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் மூன்று ஒட்டகங்களைவிடவும்,நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களைவிடவும் சிறந்ததாகும். இவ்வாறு எத்தனை வசனங்கள் ஓதுகின்றாரோ அந்த அளவு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாக அமையும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
பாடம் : 42 குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் (குறிப்பாக) அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும்.
1470. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான "அல்பகரா" மற்றும் "ஆலு இம்ரான்" ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். "அல்பகரா" அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்துபோவார்கள்.
இதை அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஆவியா பின் சல்லாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
)இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) "அல் பத்தலா" எனும் சொல்லுக்கு "சூனியக்காரர்கள்" என்று பொருள் என எனக்குத் தகவல் கிட்டியது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் (அவை மேகங்களைப் போன்று அல்லது பறவைக் கூட்டங்களைப் போன்று என்பதற்கு பதிலாக) "அவை மேகங்களைப் போன்றும் பறவைக் கூட்டங்களைப் போன்றும் வந்து வாதாடும்" என்று இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் முஆவியா பின் சல்லாம் (ரஹ்) அவர்கள் தமக்குக் கிட்டியதாகக் கூறிய சொற்பொருள் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 6
1471. நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "மறுமை நாளில் குர்ஆனும் அதன்படி செயலாற்றியவர்களும் அழைத்து வரப்படுவர். அப்போது "அல்பகரா"அத்தியாயமும் "ஆலு இம்ரான்" அத்தியாயமும் முன்னே வரும்" என்று கூறிவிட்டு, இ(வ்விரு அத்தியாயங்களும் முன்னே வருவ)தற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வரும்) மூன்று உவமைகளைக் கூறினார்கள். அவற்றை நான் இதுவரை மறந்திடவில்லை. அவ்விரு அத்தியாயங்களும் (நிழல் தரும்) மேகங்களைப் போன்று, அல்லது நடுவே ஒளியுள்ள இரு கரும் நிழல்களைப் போன்று, அல்லது அணி அணியாகப் பறக்கும் இரு பறவைக் கூட்டங்களைப் போன்று (முன்னே வந்து) தம்மைக் கையாண்டவருக்காக (இறைவனிடம்) வாதாடும்.
அத்தியாயம் : 6
பாடம் : 43 "அல்ஃபாத்திஹா" அத்தியாயம் மற்றும் "அல்பகரா" அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் ஆகியவற்றின் சிறப்பும், "அல்பகரா"அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களை ஓதுமாறு வந்துள்ள ஆர்வமூட்டலும்.
1472. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)" என்று கூறினார்கள்.
அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் "இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லை" என்று கூறினார்கள்.
அவ்வானவர் சலாம் கூறிவிட்டு, "உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். "அல்ஃபாத்திஹா" அத்தியாயமும் "அல்பகரா" அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை"என்று கூறினார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1473. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூமஸ்ஊத் (உக்பா பின் ஆமிர் - ரலி) அவர்களை இறையில்லம் (கஅபா) அருகில் சந்தித்தேன். அவர்களிடம் "அல்பகரா அத்தியாயத்தின் இரு வசனங்கள் குறித்துத் தாங்கள் அறிவித்த ஹதீஸ் எனக்கு எட்டியது" என்று கூறினேன். அதற்கு அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "எவர் அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதுகிறாரோ அவருக்கு அந்த இரண்டுமே போதும்" எனக் கூறினார்கள்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1474. அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "எவர் "அல்பகரா" அத்தியாயத்தின் இறுதி இவ்விரு
(285, 286ஆவது) வசனங்களை இரவில் ஓதுகிறாரோ அவருக்கு அவ்விரண்டுமே போதும்" என்று கூறினார்கள் என அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இதை அல்கமா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்த போது அன்னாரை நான் சந்தித்தேன். அவர்களிடம் இந்த ஹதீஸ் குறித்து வினவினேன். அப்போது அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இந்த நபிமொழியை எனக்கு அறிவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 44 "அல்கஹ்ஃப்" எனும் (18ஆவது) அத்தியாயம் மற்றும் "ஆயத்துல் குர்சீ" எனும் (2:255ஆவது) வசனம் ஆகியவற்றின் சிறப்பு.
1475. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்கஹ்ஃப்" எனும் (18ஆவது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார்.
இதை அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்கஹ்ப் அத்தியாயத்தின் இறுதிப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர்" என்று இடம்பெற்றுள்ளது.
ஹம்மாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை..." என்று இடம்பெற்றுள்ளது. ஹிஷாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலும் இவ்வாறே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1476. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அபுல்முன்திர், இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?" எனக் கேட்டார்கள். நான் "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று கூறினேன். அவர்கள் "அபுல்முன்திர், இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?" என (மீண்டும்) கேட்டார்கள். நான் "அல்லாஹு லாயிலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்... எனத் தொடங்கும் (2:255 ஆவது) வசனம்" என்று விடையளித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மகிழ்ச்சியோடு) எனது நெஞ்சில் (ஓர் அடி) அடித்துவிட்டு "அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் (வாழ்த்துகள்), அபுல்முன்திரே!" என்றார்கள்.
அத்தியாயம் : 6
பாடம் : 45 "குல் ஹுவல்லாஹு அஹத்" (எனத் தொடங்கும் 112ஆவது அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு.
1477. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), "ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?" என்று கேட்டார்கள். "(ஒரே இரவில்) எவ்வாறு குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை ஓத இயலும்?" என்று மக்கள் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் "குல் ஹுவல்லாஹு அஹத் (என்று தொடங்கும் 112ஆவது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பங்கிற்கு ஈடானதாகும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1478. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ் குர்ஆனை மூன்று பகுதிகளாகப் பிரித்தான். அவற்றில் "குல் ஹுவல்லாஹு அஹத்" (எனத் தொடங்கும்112ஆவது அத்தியாயத்)தை குர்ஆனின் ஒரு பகுதியாக ஆக்கினான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1479. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம், "மக்களே!) ஒன்று கூடுங்கள்; நான் உங்களுக்குக் குர்ஆனின் முன்றிலொரு பகுதியை ஓதிக் காட்டப் போகிறேன்" என்று கூறினார்கள். அப்போது மக்கள் ஒன்றுகூடினர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடையே) புறப்பட்டு வந்து "குல் ஹுவல்லாஹு அஹத்" (எனத் தொடங்கும் 112ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டினார்கள். பிறகு (தமது இல்லத்திற்குள்) சென்றுவிட்டார்கள். அப்போது எங்களில் சிலர் சிலரிடம், "அவர்களுக்கு வானிலிருந்து ஏதேனும் செய்தி வந்திருக்கிறது போலும். அதன் காரணமாகவே அவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள் என்று கருதுகிறேன்" என்றனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே வந்து "நான் (சற்று முன்) உங்களிடம் குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை ஓதிக் காட்டுவேன் எனக் குறிப்பிட்டேன். அறிக: அந்த (112ஆவது) அத்தியாயம் குர்ஆனின் மூன்றிலொரு பகுதிக்கு ஈடானதேயாகும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1480. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடையே) புறப்பட்டு வந்து "நான் உங்களுக்குக் குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை ஓதிக் காட்டுகிறேன்" என்று கூறிவிட்டு "அல்லாஹ் ஒருவனே. அவன் எந்தத் தேவையுமற்றவன்" என்று தொடங்கும் (112ஆவது) அத்தியாயத்தை இறுதிவரை ஓதிக் காட்டினார்கள்.
அத்தியாயம் : 6
1481. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப் பிரிவொன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர் தமது தொழுகையில் தம் தோழர்களுக்கு (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுவித்து)வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும்போது "குல் ஹுவல்லாஹு அஹத்" எனும் (112ஆவது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பிவந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது குறித்துத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எதற்காக இப்படிச் செய்கிறார் என அவரிடமே கேளுங்கள்" என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர். அவர், "ஏனெனில், அந்த அத்தியாயம் பேரருளாளனின் (ஏகத்துவப்) பண்புகளை எடுத்தியம்புகிறது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகிறேன்"என்று சொன்னார். (இதைக் கேள்விப்பட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அவரை நேசிக்கிறான் என அவருக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினார்கள்.
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களால் வளர்க்கப்பட்ட அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
பாடம்: 46 "அல்முஅவ்விதத்தைன்" (குல் அஊது பி ரப்பில் ஃபலக், குல் அஊது பி ரப்பின்னாஸ் ஆகிய) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு.
1482. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உமக்குத் தெரியாதா? இன்றிரவு (எனக்கு) சில வசனங்கள் அருளப்பெற்றுள்ளன. அவையொத்த வசனங்கள் முன்னெப்போதும் காணப்பட்டதில்லை. அவை: குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ்" (113, 114ஆகிய) அத்தியாயங்களாகும்.
இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6