1430. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். "அல்பகரா" எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1431. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) பாயினால் ஒரு சிறிய அறையை அமைத்துக்கொண்டு அதில் தொழுவதற்காகப் புறப்பட்டார்கள். அந்த இடத்தைத் தேடி (நபித் தோழர்களில்) சிலரும் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். பிறகு அடுத்த நாள் இரவும் வந்து கூடினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களிடம் வராமல் தாமதப்படுத்தினார்கள். எனவே, தோழர்கள் தங்களது குரலை உயர்த்தினர். (நபியவர்களுக்கு நினைவூட்ட அவர்களது வீட்டுக்) கதவின் மீது சிறு கற்களை எறிந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபத்துடன் அவர்களை நோக்கி வெளியே வந்து, "(இத்தொழுகையில் கலந்துகொள்ளும்) உங்களுடைய இச்செயல் தொடர்ந்துகொண்டே போகிறது. (இத்தொழுகை) உங்கள்மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் எண்ணி (அஞ்சி)னேன். (ஆகவே தான் இன்று நான் உங்களிடம் வரவில்லை.) எனவே, உங்கள் இல்லங்களிலேயே (கூடுதலான - நஃபில்) தொழுகையைத் தொழுதுவாருங்கள். கடமையாக்கப்பட்ட தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தமது வீட்டிலேயே நிறைவேற்றுவதுதான் சிறந்ததாகும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 6
1432. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) பாயினால் ஓர் அறையைப் பள்ளிவாசலில் அமைத்துக் கொண்டு, சில இரவுகள் (அதைத் தடுப்பாக வைத்துக்கொண்டு) அதனுள் தொழுதார்கள். அவ்வாறு தொழும்போது மக்களில் சிலர் அவர்களிடம் திரண்டு வந்தனர்...
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பில் ("கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் எண்ணினேன்" என்பதற்குப் பின்) "இத்தொழுகை உங்கள்மீது கடமையாக்கப்பட்டுவிட்டால் உங்களால் அதை நிறைவேற்ற முடியாது" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 30 இரவுத் தொழுகை உள்ளிட்ட நற்செயல்களை நிரந்தரமாகத் தொடர்ந்து செய்வதன் சிறப்பு.
1433. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது. அதை அவர்கள் இரவில் ஓர் அறை போன்று அமைத்துக்கொண்டு அதனுள் தொழுவார்கள். (அதில் அவர்கள் தொழும்போது) அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழலாயினர். பகலில் அந்தப் பாயை விரிப்பாக பயன்படுத்துவார்கள். ஓர் இரவில் மக்கள் கூடிவிட்டனர். அப்போது அவர்கள் "மக்களே! உங்களால் (நிரந்தரமாகச் செய்ய) முடிந்த நற்செயல்களையே கடைப்பிடித்து வாருங்கள். ஏனெனில், நீங்கள் சடையாதவரை அல்லாஹ்வும் சடைவதில்லை. நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்" என்று கூறினார்கள்.
முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் ஒரு நற்செயலைச் செய்தால் அதை நிலையாக(த் தொடர்ந்து) செய்வார்கள்.
அத்தியாயம் : 6
1434. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே"என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 6
1435. அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் "இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிபாடு எவ்வாறிருந்தது? (வழிபாட்டுக்காக என்று) குறிப்பிட்ட நாட்கள் எதையும் அவர்கள் ஒதுக்கியிருந்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "இல்லை. அவர்களின் (எந்த) வணக்க(வழிபாடு)ம் நிரந்தரமானதாகவே இருந்தது" என்று கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் செய்ய முடிந்ததைப் போன்று உங்களில் எவரால் செய்ய முடியும்?" என்று கேட்டார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1436. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். அது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் சரியே.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நற்செயலைச் செய்தால் அதை விடாமல் (தொடர்ந்து) செய்துவருவார்கள்.
அத்தியாயம் : 6
பாடம் : 31 தொழும்போது தூக்கம் மேலிட்டால், அல்லது குர்ஆன் ஓதுவதோ இறைவனைத் துதிப்பதோ தடைபட்டால் தூக்கக் கலக்கம் விலகும்வரை அவர் உட்கார்ந்துவிட வேண்டும்; அல்லது உறங்கிவிட வேண்டும்.
1437. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் வந்தபோது இரு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று காணப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் "ஸைனப் (ரலி) அவர்களுக்கு உரியதாகும்; அவர் தொழும்போது சோர்வடைந்தால் இந்தக் கயிற்றைப் பிடித்துக்கொள்வார்" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இதை அவிழ்த்துவிடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகமாக இருக்கும்போது தொழட்டும்; சோர்வடைந்தால் உட்கார்ந்துகொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1438. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹவ்லா பின்த் துவைத் பின் ஹபீப் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா எனும் பெண்மணி என்னைக் கடந்து சென்றார். அப்போது என் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். நான் "இவர் ஹவ்லா பின்த் துவைத் ஆவார்; இவர் இரவெல்லாம் உறங்க மாட்டார் (விடிய விடிய தொழுது கொண்டிருப்பார்) என மக்கள் கூறுகின்றனர்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இரவில் உறங்குவதில்லையா? உங்களால் இயன்ற நற்செயலையே செய்துவாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ்வும் சலிப்படைவதில்லை" என்று கூறினார்கள்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1439. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ஒரு பெண்மணி இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்கு) வந்து, "இவர் யார்?" என்று கேட்டார்கள். நான் "இவர் (இன்னார்;) இவர் (இரவெல்லாம்) உறங்காமல் தொழுதுகொண்டே இருப்பார்" என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நற்செயல்களில் உங்களால் இயன்றதையே செய்துவாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சடைவடையாதவரை அல்லாஹ்வும் சடைவடையமாட்டான்" என்று கூறினார்கள்.
ஒருவர் நிலையாகத் தொடர்ந்து செய்து வரும் நற்செயலே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அந்தப் பெண்மணி பனூஅசத் குலத்தைச் சேர்ந்தவர் ஆவார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1440. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரேனும் தொழும்போது கண்ணயர்ந்துவிட்டால், அவர் தம்மைவிட்டுத் தூக்கம் அகலும்வரைத் தூங்கிவிடட்டும்! ஏனெனில், உங்களில் ஒருவர் உறங்கியவாறே தொழுவாரானால் அவர் (உணர்வில்லாமல்) பாவமன்னிப்புக் கோரப்போக, அவர் தம்மைத்தாமே ஏசி (சபித்து)விடக்கூடும்.- இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1441. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இந்த ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் இரவில் தொழும்போது (உறக்கம் மேலிட்டு) நாவில் குர்ஆன் வராமல் தடைபட்டு, தாம் என்ன சொல்கிறோம் என்பதை அவர் அறியாத நிலைக்குச் சென்று விடுவாரானால் அவர் படுத்து உறங்கட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
பாடம் : 32 குர்ஆனின் சிறப்புகளும் குர்ஆன் தொடர்பான குறிப்புகளும். பாடம் : 33 குர்ஆன் உடனான தொடர்பைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு வந்துள்ள கட்டளையும், "நான் இன்ன (குர்ஆன்) வசனத்தை மறந்துவிட்டேன்" என்று கூறலாகாது; (வேண்டுமானால்) "நான் இன்ன (குர்ஆன்) வசனத்தை மறக்க வைக்கப்பட்டேன்" என்று கூறலாம் என்பது பற்றியும்.
1442. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இரவு நேரத்தில் (குர்ஆன் அத்தியாயங்கள் சிலவற்றை) ஓதிக்கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். அப்போது அவர்கள், "அல்லாஹ், அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன இன்ன அத்தியாயங்களிலிருந்து எனக்கு மறந்துவிட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவூட்டிவிட்டார்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1443. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பள்ளிவாசலில் ஒரு மனிதர் (குர்ஆன்) ஓதிக்கொண்டிருப்பதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ், அவருக்குக் கருணைபுரிவானாக! (இன்ன அத்தியாயத்திலிருந்து) எனக்கு மறக்கவைக்கப்பட்டிருந்த இன்ன வசனத்தை அவர் எனக்கு நினைவூட்டிவிட்டார்" என்று சொன்னார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1444. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை ஓதிவருகின்றவரின் நிலையெல்லாம், கயிற்றால் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தின் (உரிமையாளரின்) நிலையை ஒத்திருக்கிறது. அதனை அவர் கண்காணித்து வந்தால் தன்னிடமே அதை அவர் தக்கவைத்துக்கொள்ளலாம். அதை அவிழ்த்துவிட்டு விட்டாலோ அது ஓடிப்போய்விடும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1445. மேற்கண்ட ஹதீஸ் மேலும் எட்டு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், மூசா பின் உக்பா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "குர்ஆனை மனனம் செய்திருப்பவர் இரவிலும் பகலிலும் அதை ஓதிவருவதில் ஈடுபட்டால் அதை நினைவில் வைத்திருப்பார்; அவ்வாறு ஈடுபடாவிட்டால் மறந்துவிடுவார்" என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1446. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இன்ன இன்ன (குர்ஆன்) வசனங்களை நான் மறந்துவிட்டேன்" என்று ஒருவர் கூறுவது தான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். வேண்டுமானால், "மறக்கவைக்கப்பட்டுவிட்டது" என்று அவர் கூறட்டும்! குர்ஆனைத் தொடர்ந்து (ஓதி) நினைவுபடுத்திவாருங்கள். ஏனெனில், (கயிற்றில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் ஒட்டகம் முதலான) கால்நடைகள் அதன் கயிற்றிலிருந்து தப்பி ஓடுவதைவிட மிக வேகமாகக் குர்ஆன் மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து தப்பிவிடக் கூடியதாகும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1447. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இந்தக் குர்ஆனை (ஒதி அதை)க் கவனித்துவாருங்கள். ஏனெனில், (ஒட்டகம் முதலான) கால்நடைகள் அதன் கயிற்றிலிருந்து தப்பிவிடுவதைவிட மிகவும் வேகமாகக் குர்ஆன் மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து தப்பிவிடக்கூடியதாகும். மேலும்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன் என்று கூற வேண்டாம். வேண்டுமானால், "மறக்கவைக்கப்பட்டுவிட்டது" என்று அவர் கூறட்டும்" எனக் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1448. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இன்ன இன்ன (குர்ஆன்) அத்தியாயங்களை நான் மறந்துவிட்டேன்" அல்லது "இன்ன இன்ன (குர்ஆன்) வசனங்களை நான் மறந்துவிட்டேன்" என்று ஒருவர் கூறுவதுதான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். வேண்டுமானால், "மறக்க வைக்கப்பட்டுவிட்டது" என்று அவர் கூறட்டும்!
இதை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1449. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்தக் குர்ஆனை (ஓதி அதை)க் கவனித்து வாருங்கள். ஏனெனில், முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் தப்பிவிடக் கூடியதாகும்.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6