பாடம் : 17 இரவுத் தொழுகையும், இரவில் நபி(ஸல்) அவர்கள் தொழுத ரக்அத்களின் எண்ணிக்கையும், வித்ர் தொழுகை (குறைந்தது) ஒரு ரக்அத்தாகும்; ஒரு ரக்அத்தும் ஒரு முழுமையான தொழுகையே என்பதும்.
1339. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் (நஃபில்) தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும்வரை வலப் பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர் வந்ததும் எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.
இதை உர்வா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1340. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ("அல்அத்தமா" என மக்கள் அழைக்கும்) இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து ஃபஜ்ர் வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள்; ஒவ்வோர் இரண்டு ரக்அத்களுக்கும் இடையில் சலாம் கொடுப்பார்கள்; ஒரு ரக்அத் வித்ர் தொழுவார்கள். தொழுகை அறிவிப்பாளர் ஃபஜ்ர் தொழுகைக்கு அறிவிப்புச் செய்து முடித்து,வைகறை வெளிச்சம் பளிச்சிட்டிருக்க, (தம்மைத் தொழுகைக்கு அழைப்பதற்காக) அறிவிப்பாளர் வரும் போது எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்; பிறகு ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றுவதற்காக (தம்மை அழைக்க) அறிவிப்பாளர் வரும்வரை வலப் பக்கத்தின் மீது சாய்ந்து படுத்திருப்பார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஹர்மலா (ரஹ்) அவர்களது அந்த அறிவிப்பில் "வைகறை வெளிச்சம் பளிச்சிட்டிருக்க, அறிவிப்பாளர் வரும்போது" என்பதும், "தொழுகையை நிறைவேற்றுவதற்காக" எனும் குறிப்பும் இடம்பெறவில்லை. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
அத்தியாயம் : 6
1341. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள்; அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1342. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் உள்பட பதிமூன்று ரக்அத்கள் (இரவில்) தொழுவார்கள்.
அத்தியாயம் : 6
1343. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை எவ்வாறு இருந்தது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினோரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள்; (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்க வேண்டியதில்லை! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்க வேண்டியதில்லை! பிறகு மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்" என்று விடையளித்தார்கள்.
)தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் தொழுவதற்கு முன் உறங்குவீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் கண்கள்தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை" என விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 6
1344. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) விடையளித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள்; (முதலில்) எட்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு (மூன்று ரக்அத்) வித்ர் தொழுவார்கள்; பிறகு உட்கார்ந்த நிலையில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்; ருகூஉச் செய்ய எண்ணும்போது எழுந்து நின்று, நிலையிலிருந்து ருகூஉச் செய்வார்கள். பிறகு சுப்ஹுத் தொழுகையின் பாங்குக்கும் இகாமத்துக்குமிடையே இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வநதுள்ளது.
அவற்றில், "ஒன்பது ரக்அத்கள் நின்ற நிலையில் தொழுவார்கள். அவற்றில் (மூன்று ரக்அத்) வித்ராகத் தொழுவார்கள்" என்று (ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக) இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1345. அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "அம்மா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இரவுத் தொழுகை ரமளானிலும் ரமளான் அல்லாத மற்ற மாதங்களிலும் பதிமூன்று ரக்அத்களாகவே இருந்தன; அவற்றில் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களும் அடங்கும்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 6
1346. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பத்து ரக்அத்கள் தொழுவார்கள்; ஒரு ரக்அத் வித்ர் தொழுவார்கள்; ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ஆக, இவை பதிமூன்று ரக்அத்களாகும்.
இதைக் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1347. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் ஆரம்பப் பகுதியில் உறங்கிவிட்டு அதன் இறுதிப் பகுதியில் விழித்திருப்பார்கள். பிறகு தம் வீட்டாரிடம் தமக்கு ஏதேனும் தேவையிருப்பின் (அவர்களிடம் சென்று) தமது தேவையை நிறைவேற்றுவார்கள்; பிறகு உறங்குவார்கள். முதல் பாங்கின் சப்தம் கேட்டதும் துள்ளி எழுந்து - அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறுதான் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்களே தவிர, (சாதாரணமாக) "எழுந்து" என்று கூறவில்லை- தம்மீது தண்ணீர் ஊற்றுவார்கள். -அல்லாஹ்வின் மீதாணையாக! "இவ்வாறுதான் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்களே தவிர, (சாதாரணமாகக்) "குளித்தார்கள்" என்று கூறவில்லை. அவர்கள் என்ன நோக்கத்தில் கூறினார்கள் என்பதை நான் அறிவேன்- பெருந்துடக்கு ஏற்பட்டிருக்காவிட்டால் தொழுகைக்காக அங்கத்தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத்தூய்மை செய்வார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1348. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தொழும் தொழுகையில் இறுதித் தொழுகை வித்ராகவே இருக்கும்.
இதை அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1349. மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (விருப்பத்திற்குரிய) நற்செயல் குறித்துக் கேட்டேன். அதற்கு, "அவர்கள் நிரந்தரமாகச் செய்யப்படும் நற்செயலை விரும்புவார்கள்" என ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகையை) எந்த நேரத்தில் தொழுவார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "சேவல் கூவும் சப்தத்தைக் கேட்கும்போது (இரவின் இறுதிப்பகுதியில்) எழுந்து தொழுவார்கள்" என விடையளித்தார்கள்
அத்தியாயம் : 6
1350. நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "எனது வீட்டில்" அல்லது "என்னிடம்" தங்கியிருக்கும் நாளில் அவர்கள் உறங்கிய நிலையில் தவிர, பின்னிரவு நேரம் அவர்களை அடைந்ததில்லை.
இதை அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1351. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக்கொண்டிருப்பார்கள்; இல்லாவிடில் (ஃபர்ள் தொழுகைக்கு அழைக்கும்வரை) சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.
இதை அபூசலமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1352. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுவார்கள்; (அப்போது நான் உறங்கிக்கொண்டிருப்பேன்.) அவர்கள் வித்ருத் தொழ எண்ணும்போது, "ஆயிஷா! எழுந்து வித்ரு தொழு!" என்று கூறுவார்கள்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1353. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுதுகொண்டிருக்கும் போது நான் அவர்களுக்கு முன்னால் குறுக்கே படுத்துக்கொண்டிருப்பேன். அவர்கள் (தஹஜ்ஜுத் தொழுகையை முடித்துவிட்டு) வித்ர் மட்டும் எஞ்சி இருக்கும்போது என்னை எழுப்பிவிடுவார்கள்; நான் (எழுந்து) வித்ர் தொழுவேன்.
இதைக் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1354. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் எல்லாப் பகுதியிலும் வித்ர் தொழுகை தொழுதிருக்கிறார்கள்; (சில சமயம்) அவர்களின் வித்ர் தொழுகை சஹர் (அதிகாலை முந்)நேரம் வரை சென்றுவிடும்.
இதை மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1355. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் - ஆரம்பப் பகுதி, நடுப் பகுதி, இறுதிப் பகுதி என - எல்லாப் பகுதிகளிலும் வித்ர் தொழுகை தொழுதிருக்கிறார்கள்; (சில சமயம்) அவர்களின் வித்ர் தொழுகை சஹர் (அதிகாலை முந்)நேரம் வரை சென்றுவிடும்.
இதை மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1356. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரவின் அனைத்துப் பகுதியிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வித்ர் தொழுதிருக்கிறார்கள்; (சில சமயங்களில்) அவர்களின் வித்ர் தொழுகை இரவின் இறுதிப் பகுதிவரை சென்றுவிடும்.- இதை மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
பாடம் : 18 இரவுத் தொழுகையின் முழு விவரமும், இரவில் தொழாமல் உறங்கிவிடுதல் அல்லது நோயுற்றுவிடுதல் பற்றியும்.
1357. ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் ஹிஷாம் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய விரும்பினார். இதையொட்டி மதீனாவுக்குச் சென்று, மதீனாவிலிருந்த தம் அசையாச் சொத்துகளை விற்றுவிட்டு அ(ந்தப் பணத்)தை (போருக்குத் தேவையான) ஆயுதங்கள், குதிரைகள் ஆகியவற்றில் போட்டு, ரோம பைஸாந்தியர்களுடன் இறக்கும்வரை போரிட விரும்பினார். இதற்காக அவர் மதீனா வந்த போது மதீனாவாசிகளில் சிலரைச் சந்தித்தார். அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் உயிருடனிருந்த காலத்தில் ஆறு பேர் கொண்ட ஒரு குழுவினர் இவ்வாறு (முற்றும் துறந்து இறைவழியில் உயிர்த் தியாகம்) செய்ய விரும்பிய போது, அவர்களை அவ்வாறு செய்யக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததுடன் "என்னிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இல்லையா? (நான் என்ன இறைவழிப் போராட்டத்திற்காக முற்றும் துறந்துவிட்டா செல்கிறேன்?)" என்றும் நபியவர்கள் கேட்டார்கள்" என்று கூறினர். மக்கள் இவ்வாறு கூறியதும் சஅத் (ரஹ்) அவர்கள் மணவிலக்குச் செய்துவிட்டிருந்த தம் மனைவியை மீட்டுக்கொண்டார். மனைவியை மீட்டுக்கொண்டதற்கு (சிலரை)ச் சாட்சியாக்கினார்.
பிறகு சஅத் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ர் தொழுகை குறித்து வினவினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நான் உமக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ர் தொழுகை பற்றி பூமியிலுள்ளவர்களிலேயே நன்கு அறிந்த ஒருவரை அறிவிக்கட்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரஹ்) "அவர் யார்?" என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "ஆயிஷா (ரலி) அவர்கள்தாம் அவர்; அவர்களிடம் நீர் சென்று இது பற்றிக் கேட்பீராக! பிறகு அவர்கள் கூறும் பதிலை என்னிடம் வந்து தெரிவிப்பீராக!" என்றார்கள்.
சஅத் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி நடந்தேன். (அதற்கு முன்) ஹகீம் பின் அஃப்லஹ் (ரஹ்) அவர்களிடம் சென்று, ஆயிஷா (ரலி) அவர்களிடம் செல்ல என்னுடன் வருமாறு அன்னாரை அழைத்தேன். அதற்கு ஹகீம் பின் அஃப்லஹ் (ரஹ்) அவர்கள், "நான் ஆயிஷா (ரலி) அவர்களை நெருங்கும் நிலையில் இல்லை. ஏனெனில், (மக்கள் அரசியல் குழப்பங்களால் இரு வேறு பிரிவினராகப் பிரிந்துள்ள இந்நிலையில்) இவ்விரு பிரிவினருக்கிடையே நீங்கள் எதுவும் கூற வேண்டாமென அவர்களை நான் தடுத்தேன். ஆனால், அவர்கள் உறுதியாக மறுத்து விட்டார்கள்" என்றார்கள்.
நான் ஹகீம் (ரஹ்) அவர்களை அறுதியிட்டு அழைத்ததன் பேரில் அன்னார் வந்தார்கள். நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி நடந்தோம். அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்டோம். அவர்கள் அனுமதியளித்தவுடன் நாங்கள் உள்ளே நுழைந்தோம். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் ஹகீம் பின் அஃப்லஹ் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு "ஹகீம்தானே?" என்று கேட்டார்கள். ஹகீம் அவர்கள், "ஆம்" என்றார்கள். "உம்முடன் இருப்பவர் யார்?" எனக் கேட்டார்கள். அதற்கு ஹகீம் அவர்கள் "ஹிஷாமின் புதல்வர் சஅத்" என்று பதிலளித்தார்கள். "எந்த ஹிஷாம்?" என்று கேட்டார்கள் ஆயிஷா (ரலி). "ஆமிர் (ரலி) அவர்களின் புதல்வர்" என்றார் ஹகீம். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் ஆமிருக்கு அல்லாஹ் கருணை புரிவானாக எனப் பிரார்த்தித்துவிட்டு, அவர் குறித்து நல்லவற்றைக் கூறினார்கள்.
-அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஆமிர் (ரலி) அவர்கள் உஹுதுப் போரில் உயிர் நீத்தவர் ஆவார்-
நான் (சஅத்) "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்!" எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "நீர் குர்ஆனை ஓதவில்லையா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (ஓதியிருக்கி றேன்)" என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள்,
"நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது" என்று கூறினார்கள். இதைச் செவியேற்ற நான் எழுந்துவிடலாம் எனவும், இனிமேல் நான் இறக்கும்வரை எவரிடமும் எது குறித்தும் கேட்க வேண்டியதில்லை என்றும் எண்ணினேன். பின்னர் எனக்கு ஏதோ தோன்ற, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றிக் கூறுங்கள்" என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "நீர் யா அய்யுஹல் முஸ்ஸம்மில்..." (எனத் தொடங்கும் 73ஆவது) அத்தியாயத்தை ஓதியதில்லையா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (ஓதியிருக்கிறேன்)" என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள், "வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களின் மூலம் இரவுத் தொழுகையைக் கடமையாக்கினான். எனவே, நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் ஒரு வருடகாலம் நின்று தொழுதனர். அந்த அத்தியாயத்தின் இறுதித் தொடரை அல்லாஹ் பன்னிரண்டு மாதங்கள் வானிலேயே நிறுத்தி வைத்துக்கொண்டான். பின்னர் அந்த அத்தியாயத்தின் இறுதித் தொடரில் அல்லாஹ் சலுகையை அறிவித்தான். எனவே, கடமையாக இருந்த இரவுத் தொழுகை பின்னர் கூடுதல் தொழுகையாக மாறிற்று" என்று கூறினார்கள்.
நான், "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ர் தொழுகை பற்றிக் கூறுங்கள்?"என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் "நாங்கள் (இரவில் உறங்கச் செல்வதற்கு முன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக அவர்களது பல் துலக்கும் குச்சி, தண்ணீர் ஆகியவற்றைத் தயாராக எடுத்து வைப்போம். இரவில் அவர்களை அல்லாஹ் தான் நாடிய நேரத்தில் எழுப்புவான். அவர்கள் எழுந்து பல்துலக்கி, அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் எட்டாவது ரக்அத்தி(ன் இறுதியி)ல்தான் அவர்கள் அமர்வார்கள். பின்னர் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிரார்த்திப்பார்கள். பிறகு சலாம் கொடுக்காமல் எழுந்து ஒன்பதாவது ரக்அத் தொழுவார்கள். (ஒன்பதாவது ரக்அத்தில்) உட்கார்ந்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிரார்த்திப்பார்கள். பிறகு எங்களுக்குக் கேட்கும் விதத்தில் சலாம் கொடுப்பார்கள். சலாம் கொடுத்த பின் உட்கார்ந்தவாறே இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். அருமை மகனே! ஆக, இவை பதினோரு ரக்அத்கள் ஆகும்.
பின்னர் நபி (ஸல்) அவர்கள் முதுமையடைந்து உடலில் சதை போட்ட நேரத்தில் ஒற்றைப்படையாக ஏழு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்களில் முன்பு செய்ததைப் போன்றே செய்வார்கள். அருமை மகனே! இவை ஒன்பது ரக்அத்கள் ஆகும்.
)பொதுவாக) நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதால் அதை நிரந்தரமாகக் கடைப்பிடிப்பதையே விரும்புவார்கள். இரவுத் தொழுகைக்கு எழ முடியாதபடி உறக்கமோ நோயோ மிகைத்துவிட்டால் பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழு(து அதை ஈடு செய்)வார்கள். நபி (ஸல்) அவர்கள் முழுக் குர்ஆனையும் ஒரே இரவில் ஓதியதாகவோ, காலைவரை இரவு முழுக்கத் தொழுததாகவோ, ரமளான் அல்லாத மாதங்களில் ஒரு மாதம் முழுக்க நோன்பு நோற்றதாகவோ நான் அறியேன்" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
பிறகு நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதை அவர்களிடம் அறிவித்தேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியது உண்மையே. நான் "அவர்களை நெருங்குபவனாயிருப்பின்" அல்லது "அவர்களிடம் செல்பவனாயிருப்பின்" அவர்களிடம் சென்று இந்த ஹதீஸை நேரடியாக அவர்களிடமே கேட்டிருப்பேன்" என்றார்கள். (அப்போதைய அரசியல் குழப்பமே அன்னார் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்திக்காமல் இருந்ததற்குக் காரணம்.) நான், "நீங்கள் அவர்களிடம் செல்லமாட்டீர்கள் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் அவர்களைப் பற்றி உங்களிடம் அறிவித்திருக்கமாட்டேன்" என்றேன்.
- மேற்கண்ட ஹதீஸ் ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "சஅத் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டுப் பிறகு தம் அசையாச் சொத்துகளை விற்பதற்காக மதீனா நோக்கி வந்தார்கள்" என ஹதீஸ் தொடங்குகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கிச் சென்று அவர்களிடம் வித்ர் தொழுகை பற்றி வினவினேன்" என்று இடம்பெற்றுள்ளது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த அறிவிப்பில், "ஹிஷாம் யார்?" என ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் "ஆமிரின் புதல்வர்" என்றேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் "ஆமிர் ஒரு நல்ல மனிதராய்த் திகழ்ந்தார்; உஹுதுப் போரில் உயிர் நீத்தார்" என்று குறிப்பிட்டதாகவும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்கள் அறிவித்திருப்பதாவது: சஅத் பின் ஹிஷாம் என் அண்டை வீட்டாராய் இருந்தார். அவர் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டார். மேலும், "ஆயிஷா (ரலி) அவர்கள், "ஹிஷாம் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு சஅத் அவர்கள், "ஆமிர் (ரலி) அவர்களின் புதல்வர்" என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அவர் நல்ல மனிதராய்த் திகழ்ந்தார்; உஹுதுப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பங்கேற்று கொல்லப்பட்டார்" என்று கூறினார்கள். "ஹகீம் பின் அஃப்லஹ் (ரஹ்) அவர்கள் (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம்) "நீங்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் செல்லமாட்டீர்கள் என நான் அறிந்திருந்தால் அவர்களைப் பற்றி உங்களிடம் நான் அறிவித்திருக்கமாட்டேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1358. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நோய் முதலியவற்றால் இரவுத் தொழுகை தவறிவிட்டால் (அதற்கு ஈடாகப்) பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
இதை சஅத் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6