பாடம் : 15 கடமையான தொழுகைகளுக்கு முன்பும் பின்பும் தொழ வேண்டிய வாடிக்கையான சுன்னத் தொழுகைகளின் சிறப்பும், அவற்றின் எண்ணிக்கையும்.
1319. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.
இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
அறிவிப்பாளர் அம்பசா பின் அபீசுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்பசா (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் விட்டதேயில்லை.
அறிவிப்பாளர் நுஅமான் பின் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
அத்தியாயம் : 6
1320. மேற்கண்ட ஹதீஸ் உம்முஹபீபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒவ்வொரு நாளும் கூடுதலாகப் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்காகச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.
அத்தியாயம் : 6
1321. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமான அடியார் ஒவ்வொரு நாளும் கடமையான தொழுகைகள் தவிர கூடுதலாகப் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுதால் "அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஓர் இல்லத்தை எழுப்புகிறான்" அல்லது "அவருக்காகச் சொர்க்கத்தில் ஓர் இல்லம் எழுப்பப்படுகிறது".
இதன் அறிவிப்பாளரான நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்முஹபீபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இ(தை நான் செவியுற்ற)தன் பிறகு நான் அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை (தவறாமல்) தொழுதுவருகிறேன்.
அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இ(தை நான் செவியேற்ற)தன் பிறகு அந்தப் பன்னிரண்டு ரக்அத்களைத் (தவறாமல்) தொழுதுவருகிறேன்.
இவ்வாறே அறிவிப்பாளர் நுஅமான் பின் சாலிம் (ரஹ்) அவர்களும் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உம்முஹபீபா (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "ஒரு முஸ்லிமான அடியார் செம்மையாக அங்கத் தூய்மை (உளூ) செய்து, அல்லாஹ்வுக்காக ஒவ்வொரு நாளும் (கூடுதலாகப் பன்னிரண்டு ரக்அத்கள்) தொழுதால்..." என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 6
1322. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் லுஹரு(டைய ஃபர்ளு)க்கு முன் இரண்டு ரக்அத்களும் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்களும் மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்களும் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்களும் ஜுமுஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்களும் (சுன்னத்) தொழுதேன்.
மஃக்ரிப், இஷா மற்றும் ஜுமுஆ (ஆகியவற்றின் சுன்னத்) தொழுகைகளை நபி (ஸல்) அவர்களுடன் அவர்களது இல்லத்திலேயே தொழுதேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 16 கூடுதலான (நஃபில்) தொழுகைகளை நின்றும் உட்கார்ந்தும் தொழலாம்; (ஒரே நஃபில் தொழுகையில்) சில ரக்அத்களை நின்றும் சில ரக்அத்களை உட்கார்ந்தும் நிறைவேற்றலாம்.
1323. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது வந்த (ஃபர்ள் அல்லாத) கூடுதலான தொழுகைகளைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டில் லுஹரு(டைய ஃபர்ளு)க்கு முன் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பிறகு புறப்பட்டுச் சென்று மக்களுக்கு (ஃபர்ள்) தொழுவிப்பார்கள். பிறகு வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்; மக்களுக்கு மஃக்ரிப் (உடைய ஃபர்ள்) தொழுவித்துவிட்டு (வீட்டுக்கு) வந்து இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுவார்கள்;மக்களுக்கு இஷாத் தொழுவித்துவிட்டு எனது வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்; இரவில் ஒன்பது ரக்அத்கள் (நஃபில்) தொழுவார்கள். அவற்றில் வித்ர் தொழுகையும் அடங்கும்; இரவில் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள்;இரவில் நீண்ட நேரம் அமர்ந்தபடியும் தொழுவார்கள். நின்று ஓதித் தொழும்போது நிலையிலிருந்தே ருகூஉ மற்றும் சஜ்தாவுக்குச் செல்வார்கள். உட்கார்ந்து ஓதித் தொழும்போது உட்கார்ந்தபடியே ருகூஉ மற்றும் சஜ்தாச் செய்வார்கள்; ஃபஜ்ர் நேரம் வந்து விட்டால் (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
அத்தியாயம் : 6
1324. & 1325 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் நீண்ட நேரம் (நஃபில்) தொழுவார்கள். நின்று தொழும்போது நின்ற நிலையிலிருந்தே ருகூஉச் செய்வார்கள். உட்கார்ந்து தொழும்போது உட்கார்ந்த நிலையிலேயே ருகூஉச் செய்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1326. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் பாரசீகத்தில் நோய் கண்டிருந்தபோது உட்கார்ந்தே தொழுதுகொண்டிருந்தேன். எனவே, (மதீனா வந்தபோது) அது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள்..." என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1327. அப்துல்லாஹ் பின் ஷகீக் அல்உகைலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள்; இரவில் நீண்ட நேரம் உட்கார்ந்தும் தொழுவார்கள். நின்று ஓதித் தொழும்போது நின்ற நிலையிலிருந்தே ருகூஉச் செய்வார்கள்; உட்கார்ந்து ஓதித் தொழும்போது உட்கார்ந்த நிலையிலேயே ருகூஉச் செய்வார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1328. அப்துல்லாஹ் பின் ஷகீக் அல்உகைலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றிக் கேட்டோம். அதற்கவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமாக நின்றும் தொழுதிருக்கிறார்கள்; உட்கார்ந்தும் தொழுதிருக்கிறார்கள். நின்று தொழ ஆரம்பித்தால் நின்ற நிலையிலிருந்தே ருகூஉக்குச் செல்வார்கள். உட்கார்ந்து தொழ ஆரம்பித்தால் உட்கார்ந்த நிலையிலேயே ருகூஉச் செய்வார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1329. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமை அடையும்வரை) இரவுத் தொழுகையில் ஒருபோதும் உட்கார்ந்து ஓதித் தொழுததை நான் பார்த்ததில்லை; முதுமையடைந்த பின்னர் உட்கார்ந்தவாறே ஓதித் தொழுதார்கள்; ஓத வேண்டிய அத்தியாயத்தில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அவற்றை ஓதுவார்கள். பிறகு (நிலையிலிருந்து) ருகூஉச் செய்வார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1330. யிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது முதுமைக் காலத்தில்) உட்கார்ந்தபடியே தொழுவார்கள்; அப்போது உட்கார்ந்த நிலையிலேயே ஓதுவார்கள்; ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் அளவுக்கு எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அவற்றை ஓதுவார்கள்; பிறகு ருகூஉம் சஜ்தாவும் செய்வார்கள்; இவ்வாறே இரண்டாவது ரக்அத்திலும் செய்வார்கள்.
இதை அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1331. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமையில் நஃபில்) தொழும்போது உட்கார்ந்த நிலையிலேயே ஓதுவார்கள்; ருகூஉச் செய்ய எண்ணும்போது எழுந்து நின்று (சாதாரணமாக) ஒருவர் நாற்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு ஓதுவார்கள் (பிறகு ருகூஉச் செய்வார்கள்(. இதை அம்ரா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1332. அல்கமா பின் வக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்கார்ந்த நிலையில் இரண்டு ரக்அத்கள் தொழும்போது என்ன செய்வார்கள்?" என்று கேட்டேன். அதற்கு "அவ்விரு ரக்அத்களிலும் குர்ஆன் வசனங்களை (அமர்ந்தபடி) ஓதுவார்கள்; ருகூஉச் செய்ய எண்ணும்போது எழுந்து நின்று, பின்னர் ருகூஉச் செய்வார்கள்" என ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 6
1333. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதிருக்கிறார்களா?" என்று கேட்டேன். அதற்கு "ஆம். அவர்கள் முதுமை அடைந்த பிறகு" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1334. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக உட்கார்ந்தே தொழும் நிலை ஏற்பட்ட பிறகே இறந்தார்கள்.
இதை அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1335. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதுமையடைந்து அவர்களது உடல் சதை போட்ட பிறகு அதிகமாக உட்கார்ந்தே தொழுதார்கள்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1336. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூடுதலான தொழுகைகளை உட்கார்ந்து தொழுததை நான் பார்த்ததில்லை; அவர்கள் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்புவரை இந்நிலையே நீடித்தது. பிறகு அவர்கள் கூடுதலான தொழுகைகளை உட்கார்ந்து தொழலானார்கள்; அப்போது ஓர் அத்தியாயத்தை (ஓதினால் வேக வேகமாக ஓதாமல்) நிறுத்தி நிதானமாக ஓதுவார்கள். எந்த அளவிற்கென்றால் (அவர்கள் ஓதும் சிறிய அத்தியாயம்கூட குர்ஆனிலுள்ள) நீளமான அத்தியாயங்களில் ஒன்றைப் போன்றாகிவிடும்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் மற்றும் அப்து பின் ஹுமைத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "ஓராண்டுக்கு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு (முன்புவரை இந்நிலை நீடித்தது)" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1337. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழும் நிலை ஏற்பட்ட பிறகே இறந்தார்கள்.
இதை சிமாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1338. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உட்கார்ந்து தொழுபவருக்கு, (நின்று தொழுபவரின்) தொழுகையில் பாதி (நன்மை)யே உண்டு" என்று கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து (ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் உட்கார்ந்து தொழுதுகொண்டிருப்பதைக் கண்டேன். ஆகவே, நான் அவர்களது தலைமீது எனது கையை வைத்தேன். அப்போது அவர்கள், "அப்துல்லாஹ் பின் அம்ர்! உமக்கு என்ன (நேர்ந்தது)?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! "உட்கார்ந்து தொழுபவருக்கு, (நின்று தொழுபவரின்) தொழுகையில் பாதி (நன்மை)யே உண்டு" எனத் தாங்கள் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது; ஆனால் தாங்களே உட்கார்ந்து தொழுதுகொண்டிருக்கிறீர்களே?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; ஆயினும் நான் உங்களில் ஒருவரைப் போன்றவன் அல்லன்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூயஹ்யா (ரஹ்) என்பவர் "அபூயஹ்யா அல்அஃரஜ்" ஆவார் என ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படுகிறது.
அத்தியாயம் : 6