923. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத்தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 5
924. ஆயிஷா (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி) அவர்களும் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோய் அதிகமாகி) இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் தமது கறுப்புக் கம்பளி ஆடையைத் தமது முகத்தின் மீது போட்டுக் கொள்ளலானார்கள். அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்போது தமது முகத்திலிருந்து அதை அகற்றிவிடுவார்கள். அவர்கள் அதே நிலையில் இருந்துகொண்டே, "யூதர்கள்மீதும் கிறிஸ்தவர்கள்மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்" என்று அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்துவிடக் கூடாது என அதை)க் குறித்து எச்சரித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
925. ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் "உங்களில் ஒருவர் என் (தேவைகளுக்காக நான் அணுகும்) உற்ற தோழராக இருப்பதிலிருந்து (விலகி) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறேன். ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை (தன்) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டதைப் போன்று என்னையும் (தன்) உற்ற தோழனாக ஆக்கிக்கொண்டான். நான் என் சமுதாயத்தாரில் ஒருவரை என் உற்ற தோழராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால் அபூபக்ர் அவர்களையே நான் என் உற்ற தோழராக ஆக்கிக்கொண்டிருப்பேன். அறிந்துகொள்ளுங்கள்: உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத்தலங்களாக ஆக்கிவிடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்" என்று கூறுவதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 5 பள்ளிவாசல் எழுப்புவதன் சிறப்பும் அது குறித்து வந்துள்ள ஆர்வமூட்டலும்.
926. பைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க் கட்ட எண்ணியபோது அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்), "நீங்கள் மிக அதிகமாகவே பேசிவிட்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ (புகைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் திருப்தியை நாடி (பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ...)" என்று இடம்பெற்றுள்ளது) அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்” என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அஹ்மத் பின் ஈசா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அதைப் போன்ற ஒன்றைச் சொர்க்கத்தில் (அல்லாஹ் அவருக்காகக் கட்டுகிறான்)" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
927. மஹ்மூத் பின் லபீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க் கட்டத் திட்டமிட்டபோது அதை மக்கள் வெறுத்தனர்; அதை முன்பிருந்த அமைப்பிலேயே விட்டுவிட வேண்டும் என்று மக்கள் விரும்பினர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் அதைப் போன்ற ஒன்றைக் கட்டுகிறான்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளளது.
அத்தியாயம் : 5
பாடம் : 6 (தொழுகையில்) ருகூஉவில் முழங்கால்கள் மீது கைகளை வைக்குமாறு வந்துள்ள வலியுறுத்தலும், உள்ளங்கைகளை இணைத்து இருதொடைகளுக்கு இடையே வைக்கும் முறை மாற்றப்பட்டுவிட்டதும்.
928. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) மற்றும் அல்கமா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைச் சந்திக்க அவர்களது இல்லத்திற்குச் சென்றோம். அப்போது அவர்கள், "(இமாம்களான) உங்களுக்குப் பின்னால் (ஆட்சியாளர்களான) இவர்கள் (உரிய நேரத்தில்) தொழுகின்றனரா?" என்று கேட்டார்கள். நாங்கள் "இல்லை” என்று சொன்னோம். (அப்போது தொழுகை நேரம் வந்தும் அவர்களிருவரும் தொழாமலிருந்த காரணத்தால்) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "நீங்கள் (இருவரும்) எழுந்து (என்னைப் பின்பற்றித்) தொழுங்கள்!" என்று கூறினார்கள்- அப்போது (பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்பட்டுவிட்டதால்) அவர்கள் பாங்கு சொல்லும்படியோ இகாமத் சொல்லும்படியோ எங்களிடம் கூறவில்லை- நாங்கள் (இருவரும்) அவர்களுக்குப் பின்னால் நிற்கப்போனோம். உடனே அவர்கள் எங்கள் கைகளைப் பிடித்து எங்களில் ஒருவரை தமது வலப் பக்கத்திலும் மற்றொருவரை இடப் பக்கத்திலும் நிறுத்தினார்கள்.
அவர்கள் ருகூஉச் செய்தபோது நாங்கள் எங்கள் கைகளை முழங்கால்கள்மீது வைத்(துக்கொண்டு ருகூஉச் செய்)தோம். உடனே அவர்கள் எங்கள் கைகள்மீது அடித்துவிட்டு, தம்மிரு உள்ளங்கைகளையும் இணைத்துத் தம் தொடைகளின் நடுவே இடுக்கிக்கொண்டார்கள்.
அவர்கள் தொழுது முடித்ததும், "விரைவில் உங்களுக்குத் தலைவர்களாக சிலர் வருவார்கள். அவர்கள் தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதப்படுத்தி, நெருக்கடியில் நிறைவேற்றுவார்கள். அவர்கள் இவ்வாறு செய்வதை நீங்கள் கண்டால் உரிய நேரத்தில் நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிடுங்கள். கூடுதலான (நஃபில்) தொழுகை என்ற முறையில் அவர்களுடனும் சேர்ந்து (மீண்டும்) தொழுதுகொள்ளுங்கள். நீங்கள் மூன்று பேர் இருந்தால் (ஒரே அணியில்) இணைந்து தொழுங்கள். அதைவிட அதிகம் பேர் இருந்தால் உங்களில் ஒருவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். உங்களில் ஒருவர் ருகூஉச் செய்யும்போது தம் முன்கைகளை தொடைமீது சாத்திக்கொண்டு குனிந்து நிற்கட்டும். அவர் தம் உள்ளங்கைகளை இணைத்து இரு தொடைகளுக்கு இடையே வைத்துக் கொள்ளட்டும். ஏனெனில், (இவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழும்போது ருகூஉவில்) தம் விரல்களைக் கோத்துக்கொண்டிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது" என்று கூறிவிட்டு, அவ்வாறு தம் கைகளைக் கோத்துக் காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
929. மேற்கண்ட ஹதீஸ் மேலும் பல அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், இப்னு முஸ்ஹிர் (ரஹ்) மற்றும் ஜரீர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்துகொண்டிருந்தபோது அவர்களுடைய விரல்கள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
930. அல்கமா (ரஹ்) மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
நாங்கள் இருவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் (எங்களிடம்), "உங்களுக்குப் பின்னால் உள்ள மக்கள் தொழுதுவிட்டனரா?" என்று கேட்டார்கள். நாங்கள் இருவரும், "ஆம்” என்றோம். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்கள் இருவருக்குமிடையே (தொழுவதற்காக) நின்றார்கள். எங்களில் ஒருவரைத் தமது வலப் பக்கத்திலும் மற்றொருவரை இடப் பக்கதிலும் நிறுத்தலானார்கள். பிறகு நாங்கள் ருகூஉச் செய்தபோது எங்கள் (உள்ளங்)கைகளை எங்களுடைய முழங்கால்கள் மீது நாங்கள் வைத்தோம். உடனே அவர்கள் எங்கள் கைகளில் அடித்தார்கள். பிறகு தம்மிரு கைகளைக் கோத்துக்கொண்டு அவ்விரண்டையும் தம் தொடைகளுக்கிடையே இடுக்கிக்கொண்டார்கள். தொழுது முடித்ததும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படித்தான் செய்தார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
931. முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் தங்தை (சஅத் பின் அபீவக்காஸ் -ரலி) அவர்களின் விலாப் புறத்தில் (நின்று) தொழுதேன். அப்போது நான் (ருகூஉவில்) என்னிரு கைகளையும் (கோத்து) என் இரு முழங்கால்களுக்கு நடுவே இடுக்கிக்கொள்ளலானேன். உடனே என் தந்தை, "உன் உள்ளங் கைகளை முழங்கால்கள்மீது வை!" என்று சொன்னார்கள். நான் (அவ்வாறு செய்யாமல்) மீண்டும் அவ்வாறே (முன்பு போன்றே) செய்தேன். உடனே அவர்கள் என் கைகள்மீது அடித்துவிட்டு, "இவ்வாறு செய்ய வேண்டாம் என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது. உள்ளங்கைகளை முழங்கால்கள் மீது வைக்கும்படி எங்களுக்கு உத்தரவிடப்பட்டது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "இவ்வாறு செய்ய வேண்டாம் என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது" என்பதுவரை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பிறகுள்ள குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 5
932. முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (தொழுகையில்) இவ்வாறு (கைகளைக் கோத்து என் தொடைகளுக்கிடையே வைத்துக் கொண்டு) ருகூஉச் செய்தபோது என் தந்தை, "நாங்கள் இவ்வாறுதான் செய்து கொண்டிருந்தோம். பின்னர் கைகளை முழங்கால்கள் மீது வைத்துக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டோம்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 5
933. முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ் -ரலி) அவர்களின் விலாப் புறத்தில் தொழுதேன். நான் ருகூஉச் செய்தபோது என் விரல்களைக் கோத்து அவ்விரண்டையும் என் முழங்கால் களுக்கிடையே வைத்துக்கொண்டேன். உடனே அவர்கள் என் கைகள்மீது அடித்தார்கள். தொழுது முடித்ததும், "நாங்கள் இவ்வாறுதான் செய்துகொண்டிருந்தோம். பின்னர் முழங்கால் களுக்கு மேல் கைகளைத் தூக்கிவைக்குமாறு உத்தரவிடப்பட்டடோம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 5
பாடம் : 7 (இரு சஜ்தாக்களுக்கு இடையேயான அமர்வில்) குதிகால்கள்மீது அமரலாம்.
934. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (இரு சஜ்தாக்களுக்கு நடுவே) பாதங்கள்மீது (அவற்றை நட்டுவைத்து) அமர்வது பற்றிக் கேட்டோம். அவர்கள், "அது நபிவழிதான்" என்று சொன்னார்கள். நாங்கள், "இவ்வாறு அமர்வது அந்த மனிதரின் அசட்டையான (பொடுபோக்கான) செயல் என்றே நாங்கள் கருதுகிறோம்" என்றோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இல்லை; அது உங்கள் நபியின் வழிமுறைதான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 8 தொழும்போது பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (ஆரம்பக் காலத்தில்) அதற்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி மாற்றப்பட்டுவிட்டது.
935. முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது (தொழுதுகொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் "யர்ஹமுக் கல்லாஹ்” (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன். உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் "என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?" என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. (மாறாக,) அவர்கள், "இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்" என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். அல்லாஹ் இந்த இஸ்லாத்தை வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்களே?" என்றேன். அதற்கு அவர்கள் "சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்" என்றார்கள். நான் "எங்களில் இன்னும் சிலர் பறவையை வைத்துக் குறி பார்க்கிறார்களே?" என்றேன். அதற்கு நபியவர்கள் "இது, மக்கள் தம் உள்ளங்களில் காணும் (ஐதீகம் சார்ந்த) விஷயமாகும். ஆனால், இது "அவர்களை" அல்லது "உங்களை" (செயலாற்றுவதிலிருந்து) தடுத்திட வேண்டாம்" என்று கூறினார்கள். நான், "எங்களில் இன்னும் சிலர் (நற்குறி அறிய மணலில்) கோடு வரை(யும் பழங்கால கணிப்பு முறையை மேற்கொள்)கின்றனர்" என்றேன். அதற்கு அவர்கள், "நபிமார்களில் ஒருவர் இவ்வாறு கோடு வரைந்துவந்தார். யார் அவரைப் போன்று கோடு வரைகிறாரோ அது (சாத்தியம்)தான்" என்றார்கள்.
அடுத்து என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை (மதீனாவிற்கு அருகிலுள்ள) உஹுத் மலை மற்றும் (அதையொட்டி அமைந்துள்ள) ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்துவந்தாள். ஒரு நாள் நான் சென்று பார்த்தபோது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு சென்றுவிட்டது. (சராசரி) மனிதன் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்பட்டேன். ஆயினும், அவளை நான் அறைந்துவிட்டேன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது அது குறித்து அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்துவிடட்டுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்துவாருங்கள்!" என்று சொன்னார்கள். நான் அவளை அழைத்துச் சென்றபோது அவளிடம், "அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?" என்று நபியவர்கள் கேட்டார்கள். அவள், "வானத்தில்” என்று பதிலளித்தாள். அவர்கள், "நான் யார்?" என்று கேட்டார்கள். அவள், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர்" என்றாள். அவர்கள் (என்னிடம்), "அவளை விடுதலை செய்துவிடுங்கள்! ஏனெனில், அவள் இறைநம்பிக்கையுடைய (முஃமினான) பெண் ஆவாள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
936. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கையில் நாங்கள் அவர்களுக்கு சலாம் (முகமன்) சொல்வோம். உடனே அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் சொல்வார்கள்.
ஆனால், நாங்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷியிடமிருந்து திரும்பிவந்த சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது) சலாம் சொன்னோம். அப்போது அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் சொல்லவில்லை. பின்னர் நாங்கள் "அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் தொழும்போது) நாங்கள் உங்களுக்கு சலாம் சொல்ல, நீங்களும் அதற்கு பதில் சலாம் சொல்லி வந்தீர்களே?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "நிச்சயமாக தொழுகைக்கென தனிக்கவனம் தேவைப்படுகின்றது" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
937. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஆரம்பக் காலத்தில்) நாங்கள் தொழுகையில் பேசிக்கொண்டிருந்தோம். ஒருவர் (தொழுது கொண்டிருக்கும்போது) தம் அருகிலிருக்கும் தோழரிடம் (சொந்தத் தேவைகள் குறித்து) பேசிக் கொண்டிருப்பார். "மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வணங்குங்கள்" எனும் (2:238ஆவது) வசனத் தொடர் அருளப்பெறும்வரை (நாங்கள் இவ்வாறே தொழுகையில் பேசிவந்தோம்). இந்த வசனம் அருளப்பெற்றவுடன் அமைதியாக இருக்கும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது; பேசக்கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
938. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஓர் அலுவல் நிமித்தம் அனுப்பினார்கள். பிறகு அவர்கள் (தமது வாகனத்தில் கூடுதலான தொழுகை) தொழுதவாறு சென்று கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் போய்ச்சேர்ந்தேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். உடனே அவர்கள் (பதிலுக்கு) என்னை நோக்கி சைகை செய்தார்கள் (பதில் சலாம் சொல்லவில்லை). அவர்கள் தொழுது முடித்ததும் என்னை அழைத்து, "சற்று முன்னர் எனக்கு நீங்கள் சலாம் சொன்னீர்கள். அப்போது நான் தொழுதுகொண்டிருந்தேன் (அதனால்தான் பதில் சலாம் சொல்லவில்லை)" என்று கூறினார்கள். அப்போது அவர்களுடைய முகம் கிழக்குத் திசையை முன்னோக்கி இருந்தது (கிப்லாவை முன்னோக்கியிருக்கவில்லை).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
939. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனுல் முஸ்தலிக் குலத்தாரை நோக்கிப் பயணம் செய்தபோது என்னை (ஓர் அலுவல் நிமித்தம் ஓரிடத்திற்கு) அனுப்பினார்கள். நான் (அலுவலை முடித்துவிட்டு) அவர்களிடம் வந்தபோது அவர்கள் தமது ஒட்டகத்தில் அமர்ந்தவாறு குர்ஆன் ஓதித் தமது தலையால் சைகை செய்து தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். உடனே அவர்கள் தமது கரத்தால் இவ்வாறு சைகை செய்தார்கள் -இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹைர் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது தமது கரத்தால் (இவ்வாறு என) சைகை செய்து காட்டினார்கள்- பிறகு மீண்டும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். அப்போதும் அவர்கள் இவ்வாறு சைகை செய்தார்கள் -அறிவிப்பாளர் ஸுஹைர் (ரஹ்) அவர்கள் மீண்டும் (இவ்வாறு என) பூமியை நோக்கித் தமது கரத்தால் சைகை செய்து காட்டினார்கள்.- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், "நான் உங்களை அனுப்பிவைத்த காரியம் என்ன ஆயிற்று?" என்று கேட்டுவிட்டு, "நான் தொழுதுகொண்டிருந்ததால்தான் (நீங்கள் பேசியபோது) உங்களிடம் நான் பேசவில்லை" என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் ஸுஹைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அபுஸ்ஸுஹைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும்போது இறையில்லம் கஅபாவை முன்னோக்கி அமர்ந்திருந்தார்கள். அப்போது பனுல் முஸ்தலிக் குலத்தாரின் வசிப்பிடத்தை நோக்கி சைகை செய்து காட்டினார்கள்;அப்போது கஅபா அல்லாத வேறொரு திசையை நோக்கியே தமது கரத்தால் சைகை செய்தார்கள்.
அத்தியாயம் : 5
940. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (பனுல் முஸ்தலிக் பயணத்தின்போது) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் என்னை ஓர் அலுவல் விஷயமாக அனுப்பினார்கள். நான் (அந்த அலுவலை முடித்துத்) திரும்பி வந்தபோது அவர்கள் தமது வாகன(ஒட்டக)த்தில் இறையில்லம் கஅபா அல்லாத வேறொரு திசையை நோக்கி அமர்ந்தவாறு (கூடுதலான தொழுகையைத்) தொழுதுகொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். ஆனால் அவர்கள் எனக்கு பதில் சலாம் சொல்லவில்லை. அவர்கள் தொழுது முடித்ததும் "நான் தொழுதுகொண்டிருந்ததால்தான் உங்களுக்கு பதில் சலாம் கூறவில்லை" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸின் கருத்திலமைந்த ஒரு ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 9 தொழுகைக்கு இடையில் ஷைத்தானைச் சபிக்கலாம்; அவனிடமிருந்து காக்குமாறு (இறைவனை) வேண்டலாம். தொழுகையில் குறைந்த அளவிலான புறச்செயல்களைச் செய்யலாம்.
941. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் பின்வருமாறு) கூறினார்கள்:
நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று எனது தொழுகையைக் கெடுக்க சதி செய்தது. அல்லாஹ் அதன் மீது எனக்குச் சக்தியை வழங்கினான். அதன் குரல்வளையை நான் பிடித்துவிட்டேன். காலையில் "எல்லாரும்" அல்லது "நீங்கள் அனைவரும்"வந்து அதைக் காணும்வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நான் நினைத்தேன். பிறகு என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள், "இறைவா! என்னை மன்னித்துவிடுவாயாக! மேலும்,எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் ஆளுமையை எனக்கு நீ வழங்குவாயாக" (38:35) என்று வேண்டியது என் நினைவுக்கு வந்தது. ஆகவே, (அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். பின்னர்) அல்லாஹ் அந்த ஜின்னை இழிந்த நிலையில் விரட்டியடித்துவிட்டான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நான் அதன் குரல்வளையைப் பிடித்துவிட்டேன்"எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நான் அதை பலமாகப் பிடித்துத் தள்ளிவிட்டேன்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
942. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தொழும்போது "நான் உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்றும், "அல்லாஹ்வின் சாபத்தால் உன்னை நான் சபிக்கிறேன்"என்றும் மூன்று முறை கூறியதை நாங்கள் செவியுற்றோம். மேலும், அவர்கள் தமது கரத்தை விரித்து எதையோ பிடிப்பதைப் போன்று சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும் நாங்கள் "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் தொழும்போது ஒன்றைக் கூறினீர்கள். இதற்கு முன் தாங்கள் அவ்வாறு கூறியதை நாங்கள் கேட்டதில்லையே? மேலும், நீங்கள் உங்கள் கரத்தை விரித்ததையும் நாங்கள் கண்டோமே (ஏன்)?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள் "அல்லாஹ்வின் எதிரி இப்லீஸ் ஒரு தீப்பந்தத்தை ஏந்திக்கொண்டு அதை என் முகத்தில் வைக்க (என்னிடம்) வந்தான். உடனே நான் "உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று மூன்று முறையும் "அல்லாஹ்வின் முழு சாபத்தால் உன்னை நான் சபிக்கிறேன்” என மூன்று முறையும் கூறினேன். ஆனால், அவன் பின்வாங்கிச் செல்லவில்லை. பிறகு நான் அவனைப் பிடிக்க விரும்பினேன். அல்லாஹ்வின் மீதாணையாக! எம் சகோதரர் சுலைமான் (அலை) அவர்களின் வேண்டுதல் மட்டும் இல்லையாயின், காலையில் மதீனா நகரச் சிறுவர்கள் அவனுடன் விளையாடும் வகையில் (இந்தப் பள்ளிவாசலில்) அவன் கட்டிவைக்கப் பட்டிருப்பான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 5