5758. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "குர்ஆனில் இறுதியாக அருளப்பெற்ற முழு அத்தியாயம் எதுவென உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நான், "ஆம்; "அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்..."என்று தொடங்கும் (110ஆவது) அத்தியாயமே அது" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், "உண்மைதான்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எந்த அத்தியாயம் (குர்ஆனில் முழுமையாக) அருளப்பெற்றது என உங்களுக்குத் தெரியுமா?" என இடம் பெற்றுள்ளது. "இறுதியாக" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "இறுதியாக அருளப்பெற்ற அத்தியாயம்" என இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 54
5759. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தமது சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக்கொண்டு அதன்) உடன் இருந்தார். அப்போது (ஒரு படைப்பிரிவில் வந்த) முஸ்லிம்கள் அவரை (வழியில்) சந்தித்தனர். அவர், "அஸ்ஸலாமு அலைக்கும்" (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று (இஸ்லாமிய முகமன்) கூறி, (தம்மை முஸ்லிம் என இனம் காட்டி)னார். ஆனால், அவரைப் பிடித்து அவர்கள் கொன்றுவிட்டனர்; அந்த ஆட்டு மந்தையையும் எடுத்துக்கொண்டனர்.
அப்போதுதான், "உங்களுக்கு முகமன் (சலாம்) கூறியவரிடம் "நீ இறைநம்பிக்கையாளன் அல்லன்" என்று இவ்வுலக வாழ்க்கையின் (அற்பப்) பொருளைப் பெறுவதற்காகக் கூறி (அவரைக் கொன்று)விடாதீர்கள்" (4:94) எனும் வசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இந்த (4:94ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள "அஸ்ஸலம்" எனும் சொல்லை, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "அஸ்ஸலாம்" என்று ஓதினார்கள். (பொருள் ஒன்றே.)
அத்தியாயம் : 54
5760. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அறியாமைக் காலத்தில்) அன்சாரிகள் "ஹஜ்" செய்(ய "இஹ்ராம்" கட்டி முடித்)துவிட்டு, மீண்டும் (வீட்டுக்கு) வருவதானால், வீடுகளில் அதன் (முன்பக்க வாசல் வழியாக நுழையாமல்) பின்பக்க வாசல் வழியேதான் நுழைவார்கள்.இந்நிலையில் அன்சாரிகளில் ஒருவர் தமது (வீட்டின்) முன்வாசல் வழியாகவே நுழைந்துவிட்டார். இது குறித்து அவரிடம் (ஆட்சேபணை) கூறப்பட்டது. அப்போதுதான், "நீங்கள் வீடுகளுக்குள் அவற்றின் பின்புற வழியாக வருவது புண்ணியமன்று" (2:189) எனும் இறைவசனத்தொடர் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 54
பாடம் : 1 "இறைநம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் பணியும் நேரம் அவர்களுக்கு வரவில்லையா?" (57:16) எனும் இறை வசனத் தொடர்.
5761. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கும், அல்லாஹ் "இறைநம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் பணியும் நேரம் அவர்களுக்கு வரவில்லையா?" (57:16) என்று இந்த வசனத்தின் மூலம் எங்களைக் கண்டிப்பதற்கும் இடையே நான்கு ஆண்டுகள் மட்டுமே இடைவெளி இருந்தது.
அத்தியாயம் : 54
பாடம் : 2 "நீங்கள் தொழுமிடங்கள் ஒவ்வொன்றிலும் உங்களது அலங்காரத்தை மேற்கொள்ளுங்கள்" (7:31) எனும் வசனத் தொடர்.
5762. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அறியாமைக் காலப்) பெண்கள் இறையில்லம் கஅபாவை நிர்வாணமாகச் சுற்றி (தவாஃப்) வருவார்கள். அப்போது அவர்கள், "தவாஃப் ஆடையை இரவல் தருபவர் யார்?" என்று கூறி, (அதைப் பெற்று) தமது இன உறுப்பின் மீது வைத்துக்கொண்டு, பின்வருமாறு பாடுவார்கள்:
"இன உறுப்பில்
சிறிதளவோ முழுவதுமோ
வெளிப்படுகிறது
இந்நாள்.
இதை
எவரும் பார்க்க
அனுமதிக்க முடியாது
என்னால்".
எனவேதான், "நீங்கள் தொழுமிடங்கள் ஒவ்வொன்றிலும் உங்களது அலங்காரத்தை மேற்கொள்ளுங்கள்" (7:31) எனும் வசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 54
பாடம் : 3 "உங்கள் பெண்களை விபசாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள்" (24:33) எனும் வசனத்தொடர்.
5763. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல் லாஹ் பின் உபை பின் சலூல், தன் அடிமைப் பெண்ணிடம், "நீ சென்று விபசாரத்தில் ஈடுபட்டு எதையேனும் ஈட்டி வா" என்று சொன்னான். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் சாதனங்களைப் பெறுவதற்காக விபசாரத்துக்கு நிர்பந்திக்காதீர்கள். யாரேனும் அவர்களை நிர்பந்தித்தால் நிர்பந்திக்கப்பட்ட அப்பெண்களை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்" (24:33) எனும் வசனத்தை அருளினான். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 54
5764. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலிடம் "முசைக்கா", "உமைமா" எனப்படும் இரு அடிமைப் பெண்கள் இருந்தனர். அவன் அவ்விருவரையும் நிர்பந்தித்து விபசாரத்தில் ஈடுபடுத்திவந்தான். அவ்விரு (அடிமைப்) பெண்களும் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) அதைப் பற்றி முறையிட்டனர். அப்போதுதான், "உங்கள் பெண்களை விபசாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள்" என்று தொடங்கி, "மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்" (24:33)என்பது வரை அல்லாஹ் அருளினான்.
அத்தியாயம் : 54
பாடம் : 4 "இந்த இணைவைப்பாளர்கள் யாரை(த் தெய்வங்களாக) அழைக்கிறார்களோ அவர்களேகூட தம்முடைய (உண்மையான) இறைவனின் நெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்" (17:57) எனும் வசனத் தொடர்.
5765. அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "இந்த இணைவைப்பாளர்கள் யாரை(த் தெய்வங்களாக) அழைக்கிறார்களோ அவர்களேகூட தம்முடைய (உண்மையான) இறைவனின் நெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்" (17:57) எனும் வசனம் தொடர்பாக(ப் பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்:
(அன்றைய இணைவைப்பாளர்களால்) வழிபாடு செய்யப்பட்டுவந்த "ஜின்" இனத்தாரில் சிலர், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர். அவர்களை வழிபட்டுவந்த மக்கள் அவ்வழிபாட்டிலேயே நீடித்துக்கொண்டிருக்க, அந்த "ஜின்" இனத்தாரில் சிலர் இஸ்லாத்தை தழுவிவிட்டனர்.
அத்தியாயம் : 54
5766. அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"இந்த இணைவைப்பாளர்கள் யாரை(த் தெய்வங்களாக) அழைக்கிறார்களோ அவர்களேகூட தம்முடைய (உண்மையான) இறைவனின் நெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்" (17:57) எனும் வசனம் தொடர்பாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்:
மக்களில் சிலர் "ஜின்" இனத்தாரில் சிலரை வழிபட்டுவந்தனர். அப்போது அந்த "ஜின்"கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். மனிதர்கள் தங்களது (ஜின்) வழிபாட்டையே பலமாகப் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இந்த 17:57ஆவது வசனம் அருளப்பெற்றது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள் ளது.
அத்தியாயம் : 54
5767. அப்துல்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"இந்த இணைவைப்பாளர்கள் யாரை(த் தெய்வங்களாக) அழைக்கிறார்களோ அவர்களேகூட தம்முடைய (உண்மையான) இறைவனின் நெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்" (17:57) எனும் வசனம் தொடர்பாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:
இந்த வசனம் அரபியரில் சிலர் தொடர்பாக அருளப்பெற்றது. அவர்கள் "ஜின்" இனத்தாரில் சிலரை வழிபட்டுக்கொண்டிருந் தனர். ஆனால், அந்த "ஜின்"கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர். இதை உணராமல் அந்த (அரபு) மக்கள் அந்த "ஜின்"களையே வழிபட்டுக்கொண்டிருந்தனர். அப்போதுதான் இந்த வசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 54
பாடம் : 5 பராஅத் (அத்தவ்பா), அல்அன்ஃபால், அல்ஹஷ்ர் (9,8,59) ஆகிய அத்தியாயங்கள்.
5768. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "அத்தவ்பா" எனும் (9ஆவது) அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள் "தவ்பா அத்தியாயமா? அது (நயவஞ்சகர்களை) அம்பலப்படுத்தக்கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர் என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், தம்மில் ஒருவரைக்கூட விட்டுவைக்காமல் அனைவர் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுவிட்டது என நயவஞ்சகர்கள் எண்ணினார்கள்" என்று கூறினார்கள்.
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் "அல்அன்ஃபால்" எனும் (8ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள் "அது பத்ருப்போர் (பற்றிப்பேசும்) அத்தியாயமாகும்" என்றார்கள்.
நான் "அல்ஹஷ்ர்" எனும் (59ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், "அது பனூநளீர் (யூதக்) குலத்தார் குறித்து அருளப் பட்டதாகும்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 54
பாடம் : 6 மதுவிலக்குச் சட்டம் அருளப்பட்ட விவரம்.
5769. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை, கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி உரை நிகழ்த்தினார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
இறைவாழ்த்துக்குப்பின்! கவனத்தில் கொள்ளுங்கள்! மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுபானத் தடை(ச் சட்டம் நடைமுறைக்கு) வந்தது. தொலி நீக்கப்பட்ட கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை,பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, தேன் ஆகியவையே அந்தப் பொருட்கள் ஆகும். (ஆயினும்,) அறிவுக்குத் திரையிடக்கூடிய அனைத்தும் மதுவாகும்.
மக்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்துவிட்டு நம்மைப் பிரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பியதுண்டு:
1. ஒருவரின் சொத்தில் (அவருக்குப் பெற்றோரோ மக்களோ இல்லாமல் சகோதரன் இருக்கும் போது) அவருடைய பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்?
2. "கலாலா" என்றால் என்ன?
3. வட்டியின் சில வகைகள் குறித்த சட்டம்.
அத்தியாயம் : 54
5770. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
(என் தந்தை, கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதிருந்தபடி பின்வருமாறு கூறியதை நான் கேட்டேன்:
இறைவாழ்த்துக்குப்பின்! மக்களே! மது ஐந்துவகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் மதுபானத் தடை(ச் சட்டம் நடைமுறைக்கு) வந்தது. திராட்சைப் பழம், பேரீச்சம் பழம், தேன், தொலி நீக்கப்பட்ட கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை ஆகியவையே அப்பொருட்களாகும். (ஆயினும்) அறிவுக்குத் திரையிடக்கூடிய அனைத்தும் மதுவாகும்.
மக்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்திருந்தால், நாம் தெளிவு பெற்றிருப்போம் என்று நான் விரும்பியதுண்டு.
1. பாட்டனார். (அதாவது ஒருவருடைய சொத்தில் அவருக்குப் பெற்றோரோ மக்களோ இல்லாமல் சகோதரன் இருக்கும்போது பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு?)
2. "கலாலா" (என்றால் என்ன?)
3. வட்டியின் சில வகைகள் குறித்த சட்டம்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (மது தயாரிக்கப்படும் பொருட்களில் ஒன்றாக) "திராட்சை" என்பது இடம்பெற்றுள்ளது; மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று.
ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மற்றொரு ஹதீஸில் இடம் பெற்றுள்ளதைப் போன்று "உலர்ந்த திராட்சை" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 54
பாடம் : 7 "இவர்கள் தம் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக்கொண்ட இரு பிரிவினர் ஆவர்" (22:19) எனும் வசனத்தொடர்.
5771. கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"இவர்கள் தம் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக்கொண்ட இரு பிரிவினர் ஆவர்" (22:19) எனும் வசனம், பத்ருப் போரன்று (பொதுச்சண்டை நடைபெறுவதற்குமுன்) தனித்து நின்று போராடிய, ஹம்ஸா, அலீ, உபைதா பின் அல்ஹாரிஸ் (ரலி) ஆகியோர் தொடர்பாகவும், மற்றும் (இணைவைப்பாளர்களான) ரபீஆவின் புதல்வர்களான உத்பா, ஷைபா மற்றும் வலீத் பின் உத்பா ஆகியோர் தொடர்பாகவும் அருளப்பட்டது" என்று அபூதர் (ரலி) அவர்கள் சத்தியமிட்டுக் கூறியதை நான் செவியுற்றேன்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 54