5578. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்கள் உடைய ஒரு மனிதன் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் இல்லத்தை (கஅபாவை இடித்து)ப் பாழாக்குவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5579. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கஹ்தான்" குலத்திலிருந்து ஒரு மனிதர் தோன்றி, தமது கைத்தடியால் மக்களை வழி நடத்தாத வரை யுக முடிவு நாள் வராது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5580. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஜஹ்ஜாஹ்" எனப்படும் ஒரு மனிதர் அரசாளாத வரை இரவு பகல் (மாற்றம் நின்று, உலகம் அழிந்து) போகாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகிறேன்: ஷரீக், உபைதுல்லாஹ், உமைர், (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல் கபீர் ஆகிய நால்வரும் சகோதர்கள் ஆவர். அப்துல் மஜீத் என்பவரே இந்நால்வரின் தந்தை ஆவார்.
அத்தியாயம் : 52
5581. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போர் புரியாதவரை யுக முடிவு நாள் வராது. முடியாலான காலணிகளை அணியும் ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் புரியாதவரை யுக முடிவுநாள் வராது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5582. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முடியாலான காலணிகளை அணியும் ஒரு சமுதாயத்தார் உங்களுடன் போர் செய்யாதவரை யுக முடிவுநாள் வராது. அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்றிருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5583. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முடியாலான காலணிகளை அணியும் ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் புரியாதவரை யுக முடிவுநாள் வராது. சிறிய கண்களும் சப்பை மூக்குகளும் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போரிடாத வரை யுக முடிவுநாள் வராது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5584. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முடியை (உடையாக) அணிந்து, முடியில் (காலணி தயாரித்து) நடக்கின்ற, தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட சமுதாயத்தாரான துருக்கியருடன் முஸ்லிம்கள் போரிடாத வரை யுக முடிவுநாள் வராது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5585. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யுக முடிவு நாளுக்கு முன், முடியாலான காலணிகளை அணிகின்ற சிவந்த முகமும் சிறிய கண்களும் கொண்ட ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் செய்வீர்கள். அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று (அகன்று) இருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5586. அபூநள்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், "இராக்வாசிகளிடம் (அவர்களின் அளவையான) கஃபீஸோ (அவர்களின் நாணயமான) திர்ஹமோ கொண்டுவரப்படாத நாள் விரைவில் வரப்போகிறது" என்று கூறினார்கள். நாங்கள், "எங்கிருந்து கொண்டுவரப்படாது?" என்று கேட்டோம்.
"அரபியல்லாத பிறமொழி பேசுபவர்கள் அவற்றைத் தர மறுப்பார்கள்" என்று கூறிவிட்டுப் பிறகு "ஷாம் (சிரியா)வாசிகளிடம் தீனாரோ (அவர்களின் அளவையான) "முத்யோ" கொண்டு வரப்படாத நாள் விரைவில் வரப்போகிறது" என்று கூறினார்கள். நாங்கள், "எங்கிருந்து கொண்டு வரப்படாது?" என்று கேட்டோம். அதற்கு "ரோம(பைஸாந்திய)ர்களிடமிருந்து கொண்டு வரப்படாது" என்று கூறிவிட்டு, சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள்; பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் இறுதிச் சமுதாயத்தில் ஓர் ஆட்சியாளர் (கலீஃபா) இருப்பார். அவர் எண்ணிப் பார்க்காமல் வாரி வாரி வழங்குவார் என்று கூறினார்கள்" என்றார்கள்.
இதன் அறிவிப்பாளரான ஜுரைரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான், அபூநள்ரா மற்றும் அபுல்அலா (ரஹ்) ஆகியோரிடம், "அந்த ஆட்சியாளர் உமர் பின் அப்தில் அஸீஸ் அவர்கள்தான் என நீங்கள் இருவரும் கருதுகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இருவரும் "இல்லை" எனப் பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5587. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் கலீஃபாக்களில் ஒருவர் வருவார். அவர் செல்வத்தை வாரி வாரி வழங்குவார். எண்ணிக் கணக்குப் பார்க்கமாட்டார்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அலீ பின் ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("செல்வத்தை வாரி வழங்குவார்" என்பதைக் குறிக்க "யஹ்ஸூ" என்பதற்குப் பகரமாக) "யஹ்ஸில் மால" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
5588. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறுதிக் காலத்தில் ஒரு கலீஃபா வருவார். அவர் செல்வத்தை (மக்களிடையே) பங்கிட்டுக் கொடுப்பார்; எண்ணிக் கணக்குப் பார்க்க மாட்டார்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களும் அறிவிக்கின்றனர்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வழியாக மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5589. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அம்மார் (ரலி) அவர்கள் அகழ் தோண்டிக்கொண்டும் தமது தலையில் படிந்திருந்த மண்ணைத் துடைத்துக்கொண்டும் இருக்கலானார்கள். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அம்மார் (ரலி) அவர்களிடம் "சுமய்யாவின் மகனுக்கு ஏற்படவுள்ள துன்பமே! (புஃஸ இப்னி சுமய்யா) உம்மை ஒரு கலகக்கூட்டத்தார் கொன்று விடுவார்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5590. மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், காலித் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("புஃஸ இப்னி சுமய்யா" என்பதற்குப் பகரமாக) "வய்ஸ இப்னி சுமய்யா (பாவம்! சுமைய்யாவின் மகன்)" அல்லது "யா வய்ஸ இப்னி சுமய்யா" (சுமய்யாவின் மகன் அப்பாவியே!) என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 52
5591. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்மார் (ரலி) அவர்களிடம், "உம்மைக் கலகக்கார கூட்டத்தார் கொன்றுவிடுவார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்து.
- மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5592. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அம்மார் (ரலி) அவர்களைப் பற்றி), "அம்மாரை ஒரு கலகக்கார கூட்டத்தார் கொன்றுவிடுவர்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52
5593. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், "இக்குறைஷிக் குலத்தவர்(களில் சிலர்) என் சமுதாயத்தாரை அழிப்பார்கள்" என்று சொன்னார்கள். மக்கள் "(அப்படி ஒரு நிலைவந்தால்) நாங்கள் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அவர்களிடமிருந்து மக்கள் விலகி வாழ்ந்தால் நன்றாயிருக்கும்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5594. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பாரசீக மன்னர்) "கிஸ்ரா" (குஸ்ரூ) இறந்துவிட்டார். அவருக்குப் பிறகு வேறொரு "கிஸ்ரா" வரமாட்டார். (ரோம பைஸாந்திய மன்னர்) கைசர் (சீசர்) இறந்துவிட்டால், அவருக்குப்பின் வேறொரு கைசர் வரமாட்டார். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவர்கள் இருவரின் கருவூலங்களும் நிச்சயமாக இறைவழியில் செலவிடப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5595. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(தற்போதுள்ள) "கிஸ்ரா" அழிந்துவிட்டார். இவருக்குப் பிறகு வேறொரு "கிஸ்ரா" வரமாட்டார். (தற்போதைய) கைஸரும் அழிந்துவிடுவார். அவருக்குப் பின் வேறொரு கைஸர் வரமாட்டார். அவர்கள் இருவரின் கருவூலங்களும் இறைவழியில் பங்கிடப்படும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 52
5596. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(தற்போதுள்ள) கிஸ்ரா அழிந்துவிட்டால் அவருக்குப் பிறகு வேறொரு கிஸ்ரா வரமாட்டார்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 52
5597. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முஸ்லிம்களில் அல்லது இறை நம்பிக்கையாளர்களில் ஒரு குழுவினர்,வெள்ளை மாளிகையில் இருக்கும் "கிஸ்ரா" மன்னருடைய குடும்பத்தாரின் கருவூலத்தை வெற்றி கொள்வார்கள்"என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "முஸ்லிம்களில் (ஒரு குழுவினர்)" என்றே ஐயப்பாடின்றி இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "ஒரு பகுதி கரையிலும் மற்றொரு பகுதி கடலிலும் அமைந்துள்ள ஒரு நகரத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். மக்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் எழுபதாயிரம் பேர் அந்நகரத்தின் மீது போர் தொடுக்காத வரை யுக முடிவுநாள் வராது. அவர்கள் வந்து (அந்நகரத்தில்) இறங்கும்போது அவர்கள் எந்த ஆயுதத்தைக் கொண்டும் சண்டையிட மாட்டார்கள்; அம்பெய்யவுமாட்டார்கள். அவர்கள் "லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றே கூறுவார்கள். உடனே அந்நகரத்தில் கடலிலுள்ள ஒரு பகுதி வீழ்ந்துவிடும்.
பிறகு அவர்கள் இரண்டாவது முறை "லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்" என்று கூறுவார்கள். உடனே அதன் மறுபகுதி வீழ்ந்துவிடும். பிறகு அவர்கள் மூன்றாவது முறை "லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்" என்று கூறுவார்கள். உடனே அவர்களுக்கு வழி திறக்கும். அதில் நுழைந்து போர்ச்செல்வங்களைத் திரட்டுவார்கள். அவர்கள் போர்ச் செல்வங்களைப் பங்கிட்டுக்கொண்டிருக்கும்போது ஒருவர் வந்து உரத்த குரலில், "தஜ்ஜால் புறப்பட்டுவிட்டான்" என்று அறிவிப்பார். உடனே அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு (தஜ்ஜாலை நோக்கி) திரும்பிச் செல்வார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52